உயிரின் ஒலி(ளி)யே 5b

சில நேரங்களில் அப்படி தான், இன்னதென்று தெளிவாக யோசித்து முடிக்கும் முன்பே மனம் சட்டென்று எதிர்வினை புரிந்துவிடும்.

அப்படி தான், ராஜ் யோசிக்காமல் செய்த எதிர்வினையின் பலனாக அந்த நபர் இன்று மருத்துவமனையின் படுக்கையில் விழுந்து கிடந்தார். 

பலூன் போல வீங்கியிருந்த கன்னத்தைப் பார்க்கவே ராஜ்ஜுக்கு பரிதாபமாக இருந்தது.

அருகே வந்து கன்னத்தை தொட ராஜ் முயல, அவனோ மீண்டும் தன்னை அடிக்க வருகிறானோ என எண்ணி பதற்றத்தில் கண்களை முடிக் கொண்டான்.

அவரது பயத்தைப் பார்த்த அதிதி, ராஜ்ஜை காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரிடம் திரும்பினாள்.

“சார், இவர் உங்களை அடிக்க வரலை. உங்க கிட்டே மன்னிப்பு கேட்க தான் வந்து இருக்கார்” என்றிவள் கன்னடத்தில் சொல்ல பயம் விலகி கண்களைத் திறந்தவனுக்கு ராஜ் பேசிய சைகை பாஷை புரியவில்லை.

அதை உணர்ந்த அதிதி ராஜ்ஜின் சார்பில் அவரை சமாதானப்படுத்திவிட்டு காருக்குள் வந்து அமர்ந்த போது சோர்ந்து போனாள்.

இருக்காதா பின்னே!

காலையில் வீட்டிலிருந்து துவங்கிய பயணம்,  அலுவலகம், மருத்துவமனை மீண்டும் அலுவகம் , மீண்டும் மருத்துவமனை என்று ஒரு சுற்று சுற்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கே திரும்பினால் சோர்வு இருக்க தானே செய்யும்.

அந்த சோர்வோடு கார் இருக்கையில் சாய்ந்தவளை குற்றவுணர்வோடு ராஜ் பார்த்தான்.

அதிதியிடம் எத்தனையோ முறை கோபப்பட்டு இருக்கிறான் சண்டை போட்டு இருக்கிறான் அப்போதெல்லாம் அவன் குற்றவுணர்வு கொண்டதே இல்லை.

ஆனால் இன்று குற்றவுணர்வின் அலை அவன் இதயத்தை முட்டி மோதியது.

காரை எடுத்த ராஜ் மெல்ல அதிதியின் பக்கம் திரும்பி “சாரி” என்றான்.

அதைக் கண்டு கொள்ளாதவள் ஜன்னலின் பக்கம் பார்வையைத் திருப்ப முயல ராஜ்ஜோ அவளைத் திரும்பவிடாமல் முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டு “மனசார மன்னிப்பு கேட்கிறேன் அதிதி” என்றான் அழுத்தமாக வாயசைத்து.

அதைப் படித்த அதிதியின் இதழ்களில் கசந்த முறுவல்.

“மன்னிப்பு கேட்டா எல்லாமே சரியா போயிடுமா? நீ காலையிலே என்னை பேச விட்டியா? இல்லை நான் சொன்னதை தான் கேட்டியா? முதலிலே இருந்தே ஆதினி விஷயத்திலே நீ என் கிட்டே தப்பா தான் நடந்துக்கிறே. ஐ கான்ட் அக்செப்ட் இட்” என்றாள் கோபம் மேலிட.

“அதிதி, நான் ஆதினி விஷயத்துலே ரொம்ப சென்சிட்டிவா இருக்கேன். எனக்கே தெரியுது. பட் என்னாலே கன்ட்ரோல் பண்ண முடியலை. அவளுக்கு ஒன்னுனா என்னாலே ஏனோ தாங்கிக்க முடியலை. சட்டுனு ரியாக்ட் பண்ணிடுறேன்”

“மிஸ்டர் ராஜ். உங்களுக்கு இன்னுமா புரியலை. நீங்க ஆதினியை பார்த்துக்கிறதா சொல்லி அவளை கோழையாக்குறீங்க” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்

“அதிதி நான் அவளை கோழையாக்கல. அவளை பத்திரமா பார்த்துக்கனும்னு நினைக்கிறேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு” என்றான் இவன் அழுத்தம் திருத்தமாக.

“ராஜ் நானும் அவளை நல்லா பார்த்துக்கணும்னு தான் நினைக்கிறேன். அதனாலே தான் சொல்றேன். அவளை கோழையாக்காதீங்க. உலகத்தை தனியா ஃபேஸ் பண்ண விடுங்க. இந்த உலகம் ரொம்ப பயங்கரமானதுன்ற பயத்துலே ஆதினி இருக்கா. அதை முதலிலே இல்லைனு மாத்தணும்” என்று அதிதி பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜ் காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.

“உண்மையிலேயே இந்த உலகம் ரொம்ப பயங்கரமானது தெரியுமா அதிதி. அதை தன்னோட இரண்டு கண்ணாலே ஆதினி பார்த்து இருக்கா” என்று வாயசைத்த ராஜ்ஜின் கண்கள் கண்ணீரில் உறைந்திருந்தது.

ஜன்னலின் வழியே தெரிந்த ஒரு கிளை சாலையை சுட்டிக்காட்டி, “இதோ இந்த இடத்துல தான் ஆதினி அந்த கொடுமையை அனுபவிச்சா” என்று ராஜ் சொல்ல அதிதியின் முகத்தில் ஏகத்துக்கும் மாற்றம்.

ராஜ் எந்த இடத்தில் காரை நிறுத்தியிருந்தானோ அதே இடத்தில் தான் இவர்கள் இருவருக்கும் இடையே முதல் மோதல் நிகழ்ந்தது.

தங்கள் இருவருக்குள்ளும் மோதல் நிகழ்ந்த இதே சாலையின் இன்னொரு கிளை சாலையில் தான் ஆதினிக்கு கொடுமை நிகழ்ந்ததா?

அதிதியின் முகத்தில் அதிர்ச்சியும் குழப்பமும்.

ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த ராஜ்ஜின் கைகள் எதை எண்ணியோ இறுகிப் போயிருந்தது. வீடு வரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

கடினமான முகத்துடன் உள்ளே நுழைந்தவர்களின் முகம் எதிரிலிருந்த பூனைக்குட்டியின் முகத்தைப் பார்த்ததும் அப்படியே மாறிப் போனது.

“மியாவ் குட்டி. இப்போ கால் பரவாயில்லையா?” என அதிதி புன்னகைத்தபடி கேட்க அதுவோ மெதுவாக நடந்து வந்து அவளின் கால்களைத் தொட்டது.

முதல் முறையாக பூனையின் ஸ்பரிசத்தை உணர்கிறாள் அதிதி. ஏற்கெனவே பூனை என்றால் பயந்து ஒடுங்குபவள் இந்த திடீர் தொடுதலில் வேகமாக பின்வாங்கினாள்.

ஆனால் அதுவோ காயம்பட்ட காலோடு அவளை நெருங்க முயன்று கொண்டிருந்தது.

“மியாவ். எனக்கு உன்னைத் தொடவும் தூக்கவும் பயமா இருக்கு. நான் கொஞ்சம் கொஞ்சமா என் பயத்துலே இருந்து வெளியே வந்து உன்னை தூக்குறனே. ப்ளீஸ் மியாவ் இப்போ என் கிட்டே வராதே” என பயந்தபடி பின்னே சென்றவளைப் பார்த்து அதுவரை கடினப்பட்டு போயிருந்த ராஜ்ஜின் இதழ்களில் புன்னகை.

வேகமாக பூனையை கைகளில் ஏந்திக் கொண்டவன் சைகையால் அதிதியை போக சொல்ல  வேக வேகமாக தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

மூடிய கதவையே சிறு புன்னகையோடு பார்த்தவன் பூனையின் தலையை வருடியபடியே தன்னறைக்குள் நுழைந்தான்.

இலகுவான உடைக்கு மாறி வெளியே வந்தவன் வெகுநேரமாக திறக்காமல் இருந்த அதிதியின் அறையை பார்த்து சிரித்தவாறே சமைத்து முடித்துவிட்டு அவள் அறை கதவைத் தட்டினான்.

கதவை கொஞ்சமாக திறந்து வெளியே தலையை நீட்டியவள் “பூனை இருக்கா?” என சுற்றிமுற்றிப் பார்த்தபடி கேட்க அவனோ இல்லை என்று தலையசைத்தான்.

“நம்பலாம் தானே. பழைய பகையை மனசுலே வெச்சுக்கிட்டு பழி வாங்க மாட்டே இல்லை?” என கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.

“ஓகே ஓகே உன்னை நம்பி வெளியே வரேன். ஆமாம் என்ன டின்னர் செஞ்சு இருக்க?” என்று கேட்டபடி சோபாவில் அமர்ந்தவளின் அருகே காஃபியை வைத்தான்.

அதைப் பார்த்து அதிதியின் விழிகள் கேள்வியாய்  உயர்ந்தது.

அவள் எப்போதும் சாப்பிடுவதற்கு முன்பு காஃபி குடித்துவிடுவது வழக்கம். இந்த பழக்கம் எப்படி இவனுக்கு தெரியும்?

“மிதுரா சொன்னாளோ?” என இவள் தலைசரித்துக் கேட்க அவன் ஆமாமென்று தலையாட்டினான்.

“காலையிலே திட்டுனதை காஃபி கொடுத்து காம்பென்சேட் பண்ணிடலாம்னு நினைச்சுட்டியா ராஜ்? ஒரு காஃபிக்கெல்லாம் மடங்குற ஆள் இல்லை நான். உன் மேலே கோபமா தான் இருக்கேன்” என சொன்னபடி காஃபியை ஒரு மிடறு விழுங்கினாள். அமிர்தமாக இறங்கியது தொண்டைக்குள்.

அடுத்த மிடறை ஆசையாக பருக வரும் போது “அதான் காஃபி குடிச்சா கோபம் போகதுனு சொன்னல. அப்போ அதை கொடு” என வாயசைத்தபடி காஃபியை வாங்க முயற்சித்தான்.

“நீ போட்ட காஃபி மேலே எனக்கு கோபமில்லை ராஜ். உன் மேலே தான் கோபம்.என்னை நீ ரொம்ப பேசிட்டே. என்னாலே உன்னை மன்னிக்க முடியாது” என சொல்லியபடி அடுத்த மிடறை
உறிஞ்சியவளை வருத்தமாக பார்த்தான்.

அவள் சொல்வது உண்மை தானே! அதிகமாக இன்று வார்த்தையை விட்டு விட்டானே.

“காலையிலே நான் பேசுனது ரொம்ப தப்பு அதிதி. நீ மன்னிக்கிறதுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்” என்றவனை புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

“அப்போ நான் என்ன சொன்னாலும் செய்வ ரைட்?” என்றிவள் கேட்க அவன் வேகமாக தலையசைத்தான்.

“இப்போ ஓகே சொல்லிட்டு அப்புறம் மறுக்கக்கூடாது” என்றாள் இவள் கறாராக.

“நீ எப்படினாலும் எடக்கு மடக்கா தான் கேட்பனு தெரியும். சோ கேளு. மறுக்கமாட்டேன்.”

“நீ ஒரு வாரத்துக்கு ஆதினி விஷயத்திலே தலையிடக்கூடாது. அதிகமா செல்லம் கொடுத்து அவளை கெடுக்கக்கூடாது. அவளோட பிரச்சனைகளை அவளையே தனியா சமாளிக்கவிடனும். முக்கியமா எனக்கும் ஆதினிக்கும் இடையிலே நீ வரவே கூடாது. ஓகே வா” என்றிவள் கேட்க அவனோ அவளை முறைத்துப் பார்த்தான்.

“என்னா லுக்கு. நான் சொன்னதை நீ இந்த ஒரு வாரத்துக்கு செய்யலைனா நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன். அப்புறம். உன் இஷ்டம்” என்றிவள் கையை விரிக்க அவனோ ஒரு முடிவுக்கு வந்தான்.

“ஓகே நான் உன் கன்டிஷன்க்கு ஒத்துக்கிறேன். ஆனால் ஆதினியாலே சமாளிக்க முடியாத நிலைமை வந்தா நான் இடையிலே தலையிடுவேன். அதுல உனக்கு சம்மதமா?” என்றிவன் வாயசைக்க அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரியென்று தலையாட்டினாள்.

இருவரும் ஒரு வழியாக பேசி முடிவெடுத்தபோது அவர்களது அலைப்பேசி ஒரு சேர ஒளிர்ந்து அடங்கியது.

வேகமாக திறந்துப் பார்க்க, “கிம்ஜின்” என்னும் கார் நிறுவனத்திடமிருந்து நாளை சந்திக்க வருமாறு  மெயில் வந்திருந்தது.

அதைக் கண்டு அதிதியின் விழிகளில் வியப்பின் விரிவு.

கிம்ஜின் நிறுவனத்திடம் ப்ராஜெக்ட் வாங்குவதற்காக ஏராளமான இன்சூரன்ஸ் கம்பெனிகள் வரிசையில் காத்து கிடக்க, அந்த பொன்னான வாய்ப்போ இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

“ரியலி நாளைக்கு மீட் பண்ண வர சொல்லி இருக்காங்களா?” என அதிதி ஆச்சர்யமாய் கேட்க புன்னகையுடன் ராஜ் ஆமோதித்தான்.

“யெஸ் அதிதி. அவங்க கூப்பிடுவாங்கனு தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் கூப்பிடுவாங்கனு நான் எதிர்பார்க்கலை. நாளைக்கு நீயும் என் கூட வரணும். நீ தான் எனக்கு பதிலா பேசப் போற. சோ கெட் ரெடி ஃபார் டுமோரோ.” என்றிவன் வாயசைக்க “ஐ யம் வெயிட்டிங் ஃபார் டுமோரோ” என்றாள் ஆவலோடு.