உயிரின் ஒலி(ளி)யே 6

நெடிது உயர்ந்த மலைத்தொடர்.

சுற்றி வீசிய காற்றில் காட்டுப்பூக்களின் சுகந்தம்.

மலைப்பாம்பாய் நெளிந்து கிடந்த சாலையில் வளைந்து கொண்டிருந்தது அந்த மகிழுந்து.

காரின் அசாத்திய வேகத்தைக் கண்டு பயந்து போன அதிதி, பதறிப் போய் சீட்பெல்டை எடுத்து மாட்டினாள்.

“இப்போ எதுக்கு காரை வெச்சு சர்க்கஸ் பண்ணி காட்டுற? ஒழுங்கா மெதுவா ஓட்டு ராஜ்” என்றாள் கோபமாக.

அவள் வார்த்தைகளை கேட்டு திரும்பி ஒரு முறை முறைத்தான். அந்த பார்வையே அவள் மீது குற்ற அம்புகளை பாய்ச்ச, இவளிடம் மௌனம்.

எப்போதும் இல்லாமல் இன்று அதிகமாய் தூங்கி தாமதமாய் எழுந்ததன் விளைவு, அவளால் இன்று அவனை எதிர்த்து பேச முடியாமல் போய்விட்டது.

காலை எட்டு மணிக்கே கிம்ஜின் நிறுவனத்தின் பங்குதாரரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு இப்போது பத்தரை மணிக்கு தள்ளிப் போய் இருக்க அவன் முகமெங்கும் கடுகடுப்பு.

‘எல்லாம் நேற்றைய அலைச்சலால் வந்தது’ ஆயாசத்துடன் நினைத்தவளது பற்கள் உதட்டை சலிப்பாக கடிக்க முயன்ற நேரம் கார் வேகமாய் கீறிச்சுட்டு நின்றது.

பற்களுக்கு மெதுவாய் கொடுத்த அழுத்தம் அவனது அந்த திடீர் ப்ரேக்கில் அதிகமாகிவிட்டதன் வீரியம், சிவந்து போன அவள் இதழ்களில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

வலியோடு திரும்பியவள், “யூ ராஜ்! உனக்கு கார் ஓட்ட தெரியுமா, தெரியாதா? எல்லாரும் எட்டு போட்டு தான் லைசென்ஸ் வாங்குவாங்க. ஆனால் நீ மட்டும் ஏழரை போட்டு வாங்குனீயோ?”
அதிதியின் பேச்சு அவனை காரமாக பார்க்க வைத்தது.

“இப்போ எதுக்கு காரை நிறுத்துன?” அவள் கோபமாய் கேட்டு கொண்டிருக்கும் போதே, “சார் ப்ளீஸ் ஹெல்ப் மீ” வெளியிலிருந்து பதற்றமான குரல்கள் ஒலிக்க வேகமாய் நிமிர்ந்துப் பார்த்தாள்.

எதிரே இரண்டு பேர் மாலையும் கையுமாக நின்றிருந்தனர்.

வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் என்று பார்க்கும் போதே துலக்கமாக தெரிந்தது.

அவர்கள் இருவரையும் கண்டு அதிதியின் முகம் கோபத்தைப் பூசி கொள்ள, “காரை எடு ராஜ்” என்றாள் வேகமாக.

ஆனால் ராஜ் நிதானமாக அதிதியை ஒரு முறை பார்த்துவிட்டு அந்த ஜோடிகளைப் பார்த்தான்.

“சாரே போலிஸாரு அனுசரிசுட்டிடாரே. நனாகே சகாயா மாடி” ஆபத்தின் விளிம்பில் ஒலித்த அவர்களது குரலைக் கேட்டு அதிதியின் முகம் சுழிந்தது.

‘காதலுக்காக இத்தனை நாள் வளர்த்தவங்களை விட்டு வந்துட்டு இப்போ யாருனே தெரியாத ஒருத்தர் கிட்டே, போலீஸ் துரத்துது ஹெல்ப் பண்ணுங்கனு கெஞ்சுறாங்களே. சே காதல் நிறைய முட்டாள்தனங்களை ஈஸியா பண்ண வைக்குது’ கசப்புடன் நினைத்தவள் ராஜ்ஜை நோக்கி திரும்பினாள்.

“மீட்டிங்கு டைம் ஆகுறது இப்போ மட்டும் நியாபகம் வரலையாக்கும். ஒழுங்கா காரை எடு ராஜ்” இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜ் காரின் பின் கதவைத் திறந்துவிட்டான்.

அதிதி தன் குண்டு விழிகளை உருட்டிப் பார்க்க, “ஒரு குட்டி சோஷியல் சர்வீஸ்”  கண் சிமிட்டியபடி வாய் அசைத்தான்.

“இது சோஷியல் சர்வீஸா? ஒழுங்கா அந்த காதல் பி(பு)றாக்களை கீழே இறக்கிவிடு” மிளகாய் காரம் அவள் முகத்தில் மின்னியது.

ராஜ் பதில் பேச வாயெடுக்க அதற்குள் பின்னால் சீறியபடி வந்த போலீஸ் வாகனத்தின் சப்தம் அவனை அடுத்து பேசவிடாமல் வேகமாய் காரை எடுக்க வைத்தது.

கார் அவன் கையில் சீறிப் பறக்க, அதிதியோ அவன் அசாத்திய வேகத்தில் ஒவ்வொரு வளைவில் திரும்பும் போதும் முன்னே சென்று பின்னால் வந்தாள்.

“டேய் கடங்கார மெதுவா தான் ஓட்டேன்” இவள் இங்கே பயத்தில் கதறிக் கொண்டிருக்க பின்னாலிருந்தவர்களோ “ஃபாஸ்ட் ஃபாஸ்ட்” என்று பதற்றமாய் கத்தினர்.

போலீஸ் ஜீப் இவர்களது வேனை அசுர வேகத்தில் பின்தொடர்ந்து கொண்டிருக்க ராஜ் ஆக்ஸிலேட்டருக்கு இன்னும் அழுத்தம் கொடுத்தான்.

அந்த பாதை இரண்டாய் பிரியும் இடத்திற்கு முன்னே சரியாக முள் மரத்துண்டு இருக்க அதில் ஏறி இறங்கிய காரின் வேகம் மெல்ல மெல்ல குறைந்து ஒரு கட்டத்தில் நகர முடியாமல் நின்றுவிட்டது.

வேகமாய் இறங்கி வெளியே வந்த ராஜ், காற்றுப் போன டயரைக் கண்டு ஆற்றாமையோடு காரை எட்டி உதைத்தான். இப்போது வேறு டயர் மாற்றுவதற்குள் போலீஸ் நெருங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

‘என்ன செய்வது இப்போது?’ புருவங்கள் முடிச்சிட்டு கொண்ட நேரம், ஆபந்பாண்டவனாய் எதிர் பாதையில்  வந்து கொண்டிருந்தது ஒரு அரசாங்க பேருந்து.

அதைக் கண்டு மலர்ந்தவன் வேகமாக அந்த ஜோடியை பேருந்தை நிறுத்தி ஏற்றிக் கொண்டிருந்த பொழுது, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த போலீஸ் வாகனமும் அந்த முள்ளின் மேலேறி நகர முடியாமல் நின்றும் போனது.

பேருந்தில் ஏறியவர்கள் ராஜ்ஜை நோக்கி நன்றியாய் கை கூப்ப ராஜ் ஒரு புன்னகையோடு அந்த நன்றியை மறுத்தான்.

அதிதியோ ஒரு வித நொடிப்புடன் அவர்களைப் பார்த்துவிட்டு வேறுப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

கை ஆட்டி வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்த ராஜ்ஜின், கையை வேகமாக பிடித்தது ஒரு கரடுமுரடான கரம்.

திரும்பிப் பார்க்க எதிரில் விரைப்பாய் ஒரு போலீஸ் காரர்.

அவரைக் கண்டு முகமலர்ந்த அதிதி, “பெரிய சோஷியல் சர்வீஸ் பண்றாராம். பிடிங்க சார்… பிடிச்சு ஜெயில்ல போடுங்க இவனை” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த காவல்காரர் கைவிலங்கை கையில் எடுத்தார்.

அவள் வார்த்தைகளைக் கேட்டு ராஜ், அதிதியை முறைத்து கொண்டிருக்கும் போதே அவன் ஒரு பக்க கையை கைவிலங்கால் பிணைத்தார் அந்த காவல் காரர்.

அதைக் கண்டு நக்கலை சுமந்தது அதிதியின் முகம்.

“நீ பண்ண சேவைக்கு இது உனக்கு தேவை தான்” கிண்டலாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த கைவிலங்கின் இன்னொரு பக்கம் இவள் கரத்தை சிறைபிடித்தது.

அவள் திகைத்துப் போய் காவல்காரரைப் பார்க்க இப்போது ராஜ் கேலியாக அவள் முகத்தைப் பார்த்தான்.

“சார், வொய் ஆர் யூ.அரெஸ்டிங் மீ?” அதிதி முகம் சுருக்கி கேட்க,

“நீங்க ரெண்டு பேரும் தான் அந்த ஜோடி தப்பிச்சு போக ஹெல்ப் பண்ணீங்க” என்றார் கன்னடத்தில்.

“நான் இல்லை சார் இதோ பக்கத்துலே நிற்கிற இவன் தான் எல்லாத்துக்கும் காரணம். ஐ யம் இன்னொசென்ட்” முகத்தைப் பாவமாக வைத்து சொல்ல முயன்றாள்.

ராஜ் அவளது தோளைத் தட்டி ‘அரெஸ்ட் வாரென்ட் எங்கே கேள்’ என்று எடுத்து கொடுத்தான்.

சட்டென துரிதமான அதிதி போலீஸ்காரரை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“ஏன் எங்களை அரெஸ்ட் பண்றீங்க? வீ ஆர் நாட் கல்ப்ரிட்ஸ். உங்க கிட்டே அரெஸ்ட் வாரெண்ட் கூட இல்லை, இட்ஸ் க்ரைம்” என்றாள் வேகமாக.

அந்த இன்ஸ்பெக்டரிடம் கசந்த வளைவு. “என்னோட வருங்கால மனைவி ஓடிப் போக ஹெல்ப் பண்ணது மட்டுமில்லாமல் ரூல்ஸ் வேற பேசுறீங்களா?” என்று கன்னடத்தில் கேட்க அப்பட்டமான திகைப்பு இருவரிடமும்.

அந்த காவலர் இருக்கும் கோபத்தைப் பார்த்தால் குறைந்தபட்சம் இரண்டு நாளாவது லாக்கப்பில் லாடம் கட்டாமல் விடமாட்டார் என்பது திண்ணம்.

பெருமூச்சுவிட்டபடி ராஜ் தன் இடதுகையை திருப்பி கைகடிகாரத்தைப்  பார்க்க முயன்றான். ஆனால் அதுவோ அதிதியின் வல கையில் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்க இவன் திருப்பிய வேகத்தில் அவள் முகத்தில் வலியின் ரேகைகள் படர்ந்தது.

“யூ இடியட். சொல்லிட்டு கை திருப்ப மாட்டியா?” அவள் சடைத்தபடி பார்க்க அவளை சட்டை செய்யாமல் கைகடிகாரத்தைப் பார்ப்பதிலேயே குறியாய் இருந்தான்.

கடிகார முள் ஒன்பதே முக்கால் என்று காட்ட அவன் நெற்றியில் சிந்தனை கோடுகள் எட்டிப் பார்த்தது.

இன்னும் முக்கால் மணி நேரத்திற்குள் கிம்ஜின் பங்குதாரரை சந்தித்தாக வேண்டிய கட்டாயம். மீண்டும் சந்திப்பை தள்ளிப் போட்டால் அது நன்றாய் இராதே!

யோசனையோடு நிமிர்ந்த பொழுது,  காவல்காரர் யாருடனோ அந்த ஜோடி தப்பித்து போன  திசையையும் பேருந்து எண்ணையும் சொல்லி தேடும் பணியை  முடுக்கிவிட்டு கொண்டிருந்தார்.

அதைக் கண்டு ஏதோ கணக்கு போட்டவன், மெதுவாக அதிதியின் கையை தட்டினான். அவள் திரும்பி பார்த்து புருவம் உயர்த்தவும் ‘ஓடு’ என்றான் வேகமாக.

அவள் புரியாத பாவனையை முகத்தில் சுமக்கவும், பொறுத்துப் பார்த்த ராஜ், வேகமாக ஓட துவங்கினான். முதலில் திகைத்து நின்றவளின்  கால்கள் பின்பு அவன் இழுப்பிற்கு தன்னாலேயே வளைந்து கொடுத்தது.

அலைப்பேசியில் பேசி முடித்த காவலர் வேகமாக திரும்ப அங்கே அதிதியும் ராஜ்ஜும் தொலை தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.

“ஓடபேடா” அவர் கத்திக் கொண்டே பின்னால் ஓடி வர அதிதியும் ராஜ்ஜும் சட்டென தாவி குதித்து மரங்கள் அடர்ந்த திசை நோக்கி ஓடினர்.

பின் தொடர்ந்து வந்த அந்த காவலரின் கண்கள் அவர்களைத் தேடி சுழல இவர்கள் இருவரும் மரத்தின் பின்னால் பெருமூச்சுவிட்டபடி நின்றனர்.

“ராஜ் எதுக்கு, எங்கேயோ போன ஏழரையை தூக்கி உன் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே போட்டுக்கிட்ட? உன்னாலே பாரு, இப்போ மீட்டிங்கை மிஸ் பண்ணிடுவோம் போல” அவள் வார்த்தைகளில் அவன் முகம் கடுகாய் தாளிந்தது.

“மணி இப்பவே பத்து. எப்படி டைமுக்கு அங்கே ரீச் ஆகுறது” என்றிவள் மேலும் பேச முயல ராஜ் அடுத்து பேச முடியாதபடி அவள் உதட்டை இறுக்கி பிடித்தான்.

ஏற்கெனவே பற்களால் கடிப்பட்ட உதடு இவன் கைப்பட்டு இன்னும் வலிக்க “உஸ்ஸ்ஸ்” என்றாள்.

அவளது உஸ்ஸைக் கேட்டு அவன் தலையிலடித்துக் கொண்ட நேரம், எங்கோ தூரத்தில் கேட்ட காவலரின் காலடி சப்தம் அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தவன் மெல்ல அந்த மரத்தின் இன்னொரு புறத்திற்கு செல்ல முயன்றான்.

ஆனால் ஓரடி வைக்கும் போதே இருவரின் காலடி ஓசையும் பெரியதாய் சேர்ந்து அவர்களை காட்டி கொடுக்க பார்த்தது.

இருவரும் சேர்ந்து நடந்தால் கண்டிப்பாக சருகுகள் மிதப்படும் சப்தத்தின் அளவு கூடிவிடும் என்பதை உணர்ந்தவன் வேகமாக ஒரு கையால் அவளை பின்னாலிருந்து தூக்கினான்.

அவனின் இந்த திடீர் செயலில் திடுக்கிட்ட அதிதி சட்டென ராஜ்ஜின் கால்களை ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்.

காலை உதறிக் கொண்டவன் கோபமாய் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

“எதுக்குடா இப்போ என்னை தூக்குன?” அவள் படபடப்பாய் வாயசைக்க,

“அரிசிமூட்டை மாதிரி இருக்கிற உன்னை தூக்க எனக்கு என்ன ஆசையா? இரண்டு பேரும் சேர்ந்து நடந்தா கண்டிப்பா மாட்டிப்போம்” அவன் விளக்கத்தில், அதிதி எதிர்த்து பேச முடியாமல் தோளைக் குலுக்கினாள்.

அதிதியின் மௌனத்தையே சம்மதமாக எடுத்து கொண்ட ராஜ், பின்னாலிருந்து அவளைத் தூக்கியபடி சப்திக்காமல் மரத்தின் இன்னொரு புறத்திற்கு செல்ல முயன்றான்.

அவனது தாடை முடிகள் அவளது தோள் வளைவில் குறுகுறுக்க இவளிடமே நதியின் நெளிவு.

‘முள்ளம்பன்றி மாதிரி முடியை வெச்சுக்கிட்டு இம்சை பண்ணாதே’ சப்தமாய் இவள் முணுமுணுக்க மீண்டும் ராஜ் அவளது உதட்டில் அழுத்தமாய் கைவைத்து வார்த்தைகளுக்கு அணைப் போட்டான்.

இம்முறையும் அவள் வலியில் “உஸ்ஸ்” என்றபடி திரும்ப அப்போது தான் அவளது வீங்கிப் போன உதட்டை கவனித்தான்.

அதுவரை அழுத்தமாய் அவள் உதடுகளில் பதிந்திருந்த விரல்களில் சட்டென்று மென்மை குடியேற, மயிலிறகாய் வருடிவிட்டான்.

அவளுக்கு இந்த மென்மையான அணுகுமுறையும் வலித்து இருக்கும் போல மீண்டும் உஸ்ஸ் என்றாள்.

ஆனால் இம்முறை மட்டும் அந்த உஸ்ஸ் சப்தம் இரண்டாய் பிரிந்து எதிரொலித்தது. சந்தேகத்துடன் ராஜ் வேகமாய் திரும்பிப் பார்த்தான்.

அந்த மரத்திற்கு வெகு அருகில் ஒரு பாம்பு உஸ்ஸ் என்று சப்திப்தபடி இருந்தது.

அதுவரை வேகமாய் மரத்தை நோக்கி வந்த அந்த காவலரின் காலடி சப்தம் பாம்பைக் கண்டு தேய்ந்து போய் நின்றது.

எச்சரிக்கையான ராஜ், அதிதியை தன் கைவளைவில் இறுக்கமாக வளைத்து பிடித்து நின்ற இடத்திலேயே சிலையாகினான்.

ஆனால் அதிதி சிலையாகவில்லை. நெளிந்து வளைந்திருந்த அந்த பாம்பு அவளை சலனமாக்கிக் கொண்டிருந்தது.

பயத்துடன் ‘பாம்பு’ என்று அவனைப் பார்த்து  வாயசைக்க தான் பார்த்துக் கொள்வதாக கண்களாலேயே நம்பிக்கை அளித்தவன் ஏற்கெனவே ஒன்றாக பிணைக்கப்பட்ட இருகைகளையும் மேலும் இறுக்கி ஆறுதல்படுத்த முயன்றான்.

இரண்டு நிமிடங்கள் வரை பொறுத்துப் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் பாம்பைக் கண்டும் பயந்து யாரும் வெளியே வராததால் மரத்தின் பின்னால் யாருமில்லையென கணித்தபடி வேகமாய் எதிர் திசை நோக்கி இவர்களைத் தேடி ஓடினார்.

அவர் அங்கிருந்து சென்றுவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட ராஜ்ஜின் பெருமூச்சு அப்போது தான் நிம்மதியாக வெளிப்பட்டது.

இறுக்கம் விலகி அதிதியைப் பார்க்க
அவள் பாம்பு பயத்தில் இன்னும் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டு மர்மமாய் புன்னகைத்தவன் “உஸ்ஸ்” என்று வேகமாய் அவள் காதருகில் கத்த அவள் உடலில் அச்ச நதி பெருக்கெடுத்து இமை அணை உடைந்தது.

கேலியாக தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜ்ஜைக் கண்டு  “கோளாறு கண்ணா” என்றாள் கோபமாக.

அவன் பதிலுக்கு இவளை  திட்ட வாயெடுக்கும் போது தான் நியாபகம் வந்து கைகடிகாரத்தைத் திருப்பி பார்த்தான்.

மணி பத்தேகால்.

இன்னும் கால் மணிநேரத்திற்குள் அந்த பங்குதாரரின் வீட்டில் இருக்க வேண்டும் என்பது புரிபட, வேகமாய் அதிதியை இழுத்துக் கொண்டு இருபது நிமிடத்திற்குள் அவர்கள் வீட்டிற்கு முன் வந்து நின்றான்.

இருவரின் மூக்கும் விடாமல் பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

வேகமாய் தன் கலைந்த முடியை சரிசெய்ய கையை மேலே தூக்கினான். கூடவே அவன் கரத்தோடு பிணைக்கப்பட்ட அதிதியின் கரமும் மேலெழும்பியது.

“சொல்லிட்டு கையை அசைக்க மாட்டியா ராஜ். இப்படி தான் வேகமா தூக்குவீயா?” அவளின் கோபமான கேள்வியை சட்டை செய்யாமல் தன் தலை மற்றும் முகத்தை சரி செய்து கொள்ள முயன்றான்.

அவனுக்கு வளைந்து கொடுக்காமல் இவள் முரண்டு பிடிக்க, முதலில் பொறுத்துப் பார்த்தவன் பின்பு வேகவேகமாக தன் கையை அசைத்து முடியை சரி செய்தான்.

இவள் அனுமதியில்லாமலேயே அவன் இழுத்த விசைக்கு அவள் கரம் இசைந்து கொடுத்தது.

அதிதி கையை மட்டுமே அவனிடம் கொடுத்திருந்தாளே தவிர முகத்தை கொடுத்து அவனைப் பார்க்காமல் திரும்பியிருந்தாள்.

‘இவன் செய்த சமூக சேவைக்கு தானும் அல்லவா தண்டிக்கப்பட்டுவிட்டோம்!’ அவளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது.

அதை மேலும் அதிகரிக்கும் வண்ணமாய் ஒரு கையால் அவள் இடையை இறுக்கிப் பற்றினான்.

கண்களில் அக்னி எரிய அவனைப் பார்க்க அவனோ பின்னாலிருந்த கைவிலங்கிடப்பட்ட கையை சுட்டிக் காட்டினான்.

முன்னாலிருந்து பார்ப்பவர்களுக்கு கட்டிக் கொண்டு நிற்பது போல தோன்றினாலும் இவன் இந்த கைவிலங்கிடப்பட்ட கையை மறைக்க தான் இடுப்பை சுற்றி வளைத்திருக்கின்றான் என்பது புரிய எதுவும் பேசாமல் மௌனமாய் தலையிலடித்து கொண்டு நடந்தாள்.

அங்கே முழுப்புன்னகையுடன் அந்த கிம்ஜின் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான லதா இவர்களை வரவேற்கும் பாங்கோடு நின்று கொண்டிருந்தார்.

லதாவைக் கண்டு இருவரும் புன்முறுவல் பூக்க, அவரோ நெருங்கி நின்றிருந்த இருவரையும் கண்டு “யூ போத் ஆர் கப்பிள்ஸ்?” என்றார் கேள்வியாக.

அதிதிக்கும் ராஜ்ஜுக்கும் அந்த கேள்விக்கு தலையிலடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் முடியவில்லையே.

இருவர் கையும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறதே எப்படி அப்பட்டமாக அடித்துக் கொள்ள முடியும். அதனால் அசட்டுத்தனமாய் ஒரு சிரிப்பை சிரித்து வைத்தனர்.

கட்டப்பட்ட தங்கள் கைகளை அவருக்கு காட்டாமல் பல பிரயத்தனங்கள் செய்து நாற்காலியில் அமர்ந்த பிறகு தான் அவர்களுக்கு பெருமூச்சு பெரியதாக வெளிப்பட்டது.

ஆனால் அந்த மூச்சுக்காற்றையும் தடை செய்யும்படி எதிரிலிருந்த லதா கையை நீட்டினார்.

ராஜ் எந்த தடையுமின்றி கை கொடுத்தாலும் அதிதியால் கை கொடுக்க முடியவில்லை. அவளுடைய வலக்கை தான் சிறைப்பட்டிருக்கிறதே.

இடது கையை மட்டும் அவள் தட்டு தடுமாறி வணக்கம் போல குவிக்க முயல ராஜ் சட்டென்று தனது வலக்கையை அவள் இடக்கையோடு சேர்த்தான்.

அவர்களிருவரின் ஒத்ததிர்வைக் கண்டு அதிசயித்துப் போனார் லதா.

முதற்கட்ட உபசரிப்பை முடித்தவரின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை நோக்கி பயணிக்க, லதாவின் ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் ராஜ்ஜின் கண்ணசைவை வைத்தே அதிதி சொல்லி முடித்தாள்.

இறுதியாக அவருக்கு இந்த ப்ராஜெக்ட்டில் விருப்பமிருப்பதாகவும் இன்னும் இரண்டு பங்குதாரர்களிடம் பேசிவிட்டு முடிவை சொல்வதாக சொல்லவும் இருவரும் மலர்ந்த முகத்துடன் வெளியே வந்தனர்.

சந்தோஷம் ததும்பிய அவன் முகத்தைப் பார்த்து அதிதி முகத்தை வெட்டிக் கொண்டாள்.

“ரொம்பலாம் சந்தோஷப்பட வேண்டாம். இன்னும் அந்த போலீஸ் நம்மளை தான் தேடிட்டு இருப்பாரு. ஒழுங்கா போலீஸ் ஸ்டேஷன் போய் நடந்ததை சொல்லிட்டு இந்த கைவிலங்கை அங்கேயே அவுத்துட்டு வந்துடலாம்” என்றபடி அவள் நடக்க முயன்றாள். ஆனால் இரண்டடிக்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை.

தன் கைவிலங்கை ஒரு தரம் முறைத்துவிட்டு அசையாமல் நின்றிருந்த ராஜ்ஜை மறுதரம் முறைத்தாள்.

“அங்கேயே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்? ஒழுங்கா போலீஸ் ஸ்டேஷன் வா” என்றவளின் வார்த்தைகளுக்கு வேகமாய் மறுத்து தலையசைத்து எதிர் திசையை காட்டினான். அவளோ அவன் காட்டிய திசையில் செல்ல பிடிக்காமல் வேறு திசையை சுட்டிக் காட்டினாள்.

இருவரும் நகராமல் அங்கேயே தகராறு செய்தபடி நின்று கொண்டிருக்க ஒருகட்டத்தில் அதிதி அவனை சட்டை செய்யாமல் நடக்க முயல, பட்டென்று அவளோடு பிணைக்கப்பட்டிருந்த கையை வெகுவேகமாக இழுத்தான் கார்த்திக் ராஜ்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் சுழன்று திரும்பிய அதிதி நிலைத்தடுமாறி அவன் திசை நோக்கி வளைய இருவரது இதழும் ஒன்றுடன் ஒன்று மோதி நின்றது.

எதிரெதிர் திசையில் இனிப்பை சுமந்து செல்லும் இரண்டு எறும்புகள் முட்டிக் கொள்வது போல அவனது தடித்த இதழில் முட்டி நின்றது இவளின் மென்மையான இதழ்கள்.

கண்கள் உருள திகைப்பாய் பார்த்துக் கொண்ட இருவரும் வேகமாக விலகி நின்றனர்.

அதிர்ச்சியில் ஊறிய முகத்துடன் ஒருவர் முகத்தை மற்றவர் அழுத்தமாய் பார்த்தவர்கள், பின்பு வேகமாக ஏதோ நினைவு வந்து தங்கள் முத்தக்கறையை உதட்டிலிருந்து அழிக்க முற்பட்டு கொண்டிருந்தனர்.

கறையும் அழகு தானென்று அவர்களுக்கு புரியும் நாள் வெகு அருகில் இருக்கிறதோ இல்லை தொலைவிலோ?