உயிரின் ஒலி(ளி)யே 9

சில நேரங்களில் அப்படி தான் அவசரகதியாக வெளிவரும் சில வார்த்தைகளுக்கு அணு அணுவாய் மனதை சிதைத்துப் போடும் வல்லமை உண்டு.

அப்படி தான் அதிதி சொன்ன அந்த வார்த்தை ராஜ்ஜை முற்றிலுமாய் தன்னிலை இழக்க செய்திருந்தது.

அவன் முகமெங்கும் கோப திவலைகளும் ஆற்றாமையின் ஆறாத தடங்களும்.

அவனது வலியைக் கண்டு குற்ற உணர்வு கொண்ட அதிதி, “ராஜ்” என்று பேச வாயெடுக்க வேகமாக கை நீட்டி பேசவிடாமல் தடுத்தவன் விடுவிடுவென தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

திகைத்து நின்ற அதிதியையும் கோபமாக செல்லும் ராஜ்ஜையும் திரும்பி திரும்பி பார்த்த அந்த பூனை ஒரு முடிவெடுத்ததைப் போல ராஜ் செல்லும் திசையை நோக்கி நடக்க இங்கோ அதிதி தனி தீவானாள்.

அவள் அப்படி என்ன தவறு செய்தாள்?

அந்த இருட்டு, அவள் வாழ்க்கையின் கரிய நினைவுப் பக்கங்களை திருப்புவது தாங்க முடியாமல் தானே தன்னிலை இழந்தாள்!

அவனை காயப்படுத்த அவள் அந்த வார்த்தையை பிரயோகிக்கவில்லையே. படபடப்பில் பேசிய சொற்கள் தானே அவை.

ஆனாலும் அவன் இதயத்தை அந்த சொல் சுக்கு நூறாக உடைத்துவிட்டதே!

உணர்வுகளின் வெம்மையில் நின்று கொண்டிருந்தவளின் கால்கள் பிடிமானமின்றி திணற, அருகிலிருந்த சுவற்றைப் பிடித்துக் கொண்டாள்.

அவளுக்கு இப்போதா வேண்டியது ஆசுவாசமாய் நிற்பதற்கு ஒரு துண்டு நிழல் தேவைப்பட்டது.

ஆனால் அவள் வாழ்வில் இளைப்பாறுவதற்கான மரங்கள் இருக்கிறதா என்ன?

வருத்தத்தோடு நினைத்த நேரம் அலைப்பேசி மிளிர்ந்து அடங்கியது.

தொடுதிரையில் சீமாவின் பெயர் ஒளிர அதிதியின் முகத்திலும் அந்த வெளிச்ச கதிர்கள் வீசியது.

வேகமாய் எடுத்து காதில் வைத்தவள் “அம்மா” என்றாள்.

முதல் வார்த்தையிலேயே குரல் உடைப்பட்டு இருக்க, “என்னடா ஆச்சு அதிதிமா, உடம்பு சரியில்லையா?” வாஞ்சையாய் வருடியது சீமாவின் வார்த்தைகள்.

“இல்லைமா, ஏனோ தெரியலை உங்க மடியிலே தலை வெச்சு படுத்துக்கணும் போல இருக்குமா. படுத்துக்கவா” தாய் மடியை தேடும் பிள்ளையின் பரிதவிப்பு அவள் குரலில்.

எதை எண்ணியோ மருகும் அதிதியின் மனம் உணர்ந்த சீமா, “ஏன் குரலே சோர்ந்து போய் இருக்குடா. இந்த வாரம் சென்னைக்கு வா” என்றார் கட்டளையாக.

அதை கேட்டு அதிதி மகிழ்ந்தாலும் முகத்தில் வருத்த வளைவு.

“ஒரு பெரிய ப்ராஜெக்ட் வந்து இருக்குமா. அவங்க கிட்டே ஆர்டர் சான்சங்ஷன் பண்ணி முடிக்கிற வரை பெங்களூரை விட்டு வர முடியாது” என்றாள் சோகமாக.

சீமாவின் முகத்திலும் அந்த பதில் கவலையை வர வைத்த நிமிடம் அதிதி தன் கைப்பையிலிருந்து தூங்குவதற்காக  மாத்திரையை எடுத்துப் போட்டபடி,  “அம்மா உங்க மடியிலே படுத்துக்கட்டுமா?” என்றாள் ஏக்கமாக.

மடி தேடி தவிக்கும் இளங்கன்றை தவிக்க விடுவது தாயின் குணமல்லவே!

“அதிதி மா, என் மடியிலே படுத்துக்கோடா”  என சீமா சொல்லவும் அந்த டைனிங் டேபிளை தாயின் மடியாய் பாவித்து அதிதி தலை சாய்ந்தாள்.

“அம்மா உன் தலையை கோதிவிட்டுட்டு இருக்கேன். எந்த கவலையும் இல்லாம கண்ணை மூடுடா” சீமா மென்மையாய் சொல்ல, மாய கரம் ஒன்று தன் தலையை கோதிவிடும் சிலிர்ப்பில் மெதுவாய் விழிகள் மூட, கொஞ்சம் கொஞ்சமாய் ஆழ்ந்த நித்திரைக்கு தள்ளப்பட்டாள்.

இங்கோ அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த ராஜ்ஜின் நெற்றியில் சிந்தனை வளைவுகள்.

தன் உதட்டிலிருந்து பிரியும் வார்த்தைகளுக்கு ஓசை இல்லை என்ற உண்மை ஏனோ இன்று அவன் இதயத்தை
துண்டாடியது.

இருட்டில் தனியாய் தவித்தவளுக்கு தானிருக்கிறேன் என்ற வார்த்தையை கூட சொல்ல முடியாமல் விதி சதி செய்துவிட்டதே!

எத்தனையோ முறை எத்தனையோ நபர்கள் அவன் இயலாமையை சுட்டிக் காட்டி முதுகு புறமாய் பேசி இருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் வலிக்காத காயத்தில் இன்று ஏன் நிற்காமல் உதிரம் கசிகிறது?

குழப்ப மேகங்கள் அவன் முகத்தை சூழ,
வேகமாய் அலைப்பேசியை எடுத்தவன் மிதுராவிற்கு அழைத்தான்.

எதிர் முனையில் புன்னகை பளீரிட அலைப்பேசியில் ஒளிர்ந்தது மிதுராவின் முகம்.

எடுத்த உடனேயே, “எப்படி இருக்க ராஜ்?” என்றவள் கேட்கவும் இவன் உதடுகள் உச்சு கொட்டியது.

“உன் அக்கா கூட இருக்கும் போது நான் எப்படி நல்லா இருப்பேன்?”  பதிலுக்கு உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு வாயசைத்தான்.

அவன் வார்த்தையை கேட்டு சோகமானவள், “உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இன்னும் சரியாகலையா?” என்றாள் கவலையாக.

“அது எப்போவும் சரியாகாது” என்று விட்டேத்தியாக சொன்னவன் மிதுராவின் முகத்தை தீவிரமாகப் பார்த்துவிட்டு வேக வேகமாய் குறுஞ்செய்தியை தட்டிவிட்டு அவளை படிக்கும்படி செய்கை செய்தான்.

அவன் முகத்தைப் போலவே அந்த குறுஞ்செய்தியிலிருந்த ஒவ்வொரு வார்த்தைகளும் மிக தீவிரமாகவே அந்த எழுத்துக்களில் படர்ந்திருந்தது.

“எப்பயாவது என் கூட பேசுறது உனக்கு ரொம்ப டிஃபிகல்டா இருந்து இருக்கா? நான் ஊமையா இல்லாம இருந்து இருந்தா நல்லா இருக்கும்னு எங்கேயாவது ஃபீல் பண்ணி இருந்து இருக்கியா மிது?” என்ற வார்த்தைகளைப் படித்ததும் மிதுராவின் முகத்தில் கோபம் சுறுசுறுவென ஏறியது.

“ராஜ், நான் போனை வைக்கிறேன். இதுக்கு மேலே உன் கிட்டே பேச மாட்டேன்” என்றாள் தீர்க்கமாக.

அவளின் பதில் அவனை கவலையில் தள்ள “ஏன்?” என்றான் பரிதாபமாக.

“சொல்றதுலாம் சொல்லிட்டு ஏனாம் ஏன். ஒரு தடவையாவது உன்னை நாங்க வேறவா பார்த்து இருக்கோமா ராஜ்? எங்கே இருந்து திடீர்னு வந்தது இந்த காம்ப்ளெக்ஸ்?” என்றாள் கோபமாக.

“அது மிது…” என்றவனுக்கு பதில் பேச வார்த்தைகள் வசப்படவில்லை.

இதுவரை எதற்காகவும் கலங்காமல் நிமிர்ந்து நின்றவன் முதன் முறையாய் தன் குறையை எண்ணி தவிப்பதைப்  பார்த்தவள், “இங்கே பாரு ராஜ். இந்த உலகத்துலே யாரும் ஊமை இல்லை. சிலர் குரலாலே பேசுவாங்க சிலர் மௌனத்தாலே பேசுவாங்க புரியுதா?” அவள் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க அவனும் புரிந்தாற் போல மெதுவாக தலையாட்டினான்.

“இனி ஊமைனு ஆரம்பிச்சு பாரு, அடுத்த செகண்டே ஃபளைட் பிடிச்சு பெங்களூர் வந்து அடிப்போம்” என்றாள் மிரட்டலாக.

அந்த கோபத்தில் அவள் கொண்ட அன்பு அப்பட்டமாய் தெரிய தன்னிச்சையாய் தலையாட்டினான்.

“எதுவும் யோசிக்காம படு ராஜ்” ஆதூரமாய் சொன்னவளின் வார்த்தையில் தாயன்பு கசிந்தது.

புன்னகையுடன் ஆமோதித்து தலையசைத்தவனின் முகத்தில் முன்பிருந்த கவலைத் தடங்கள் இல்லை.

ஒருவித தெளிவு பிறந்திருக்க வேகமாய் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டான். அங்கே அதிதி டைனிங் டேபிளில் படுத்தபடியே உறங்கிக் கொண்டிருக்கவும் அவன் புருவங்கள் உயர்ந்தது.

சமையலறை சென்று பார்க்க அங்கே சமைத்ததற்கான அறிகுறியும் இல்லை. சாப்பிட்டதற்கான தடயங்களும் காணவில்லை.

‘உண்ணாமலேயே உறங்கியிருக்காளா?’ என்ற கேள்வியோடே பூனை குட்டியை தூக்கி டைனிங் டேபிளின் மீது விட்டான்.

அது மேலே ஏறிய அடுத்த நொடியே அதிதியின் தோளை வேகமாய் சென்று தொட்டது. ஆனால் அதிதியிடம் அசைவு தென்படாது போகவே திரும்பி ராஜ்ஜை பார்த்தது.

அவன் வேகமாய் வந்து மேஜையில் சாய்ந்து கிடந்த அவள் சிரத்தை தூக்கி நாற்காலியில் அமர வைத்தான்.

ஆனால் அமர வைத்த அடுத்த கணமே அவன் மீது சரிந்து விழவும் அவன் புருவங்கள் மேலும் வளைந்து ஆச்சர்யத்தை காட்டியது.

‘அதற்குள் இப்படி தன்னை மறந்து உறங்கிவிடும் அளவிற்கு கும்பகர்ணியா இவள்’ யோசித்தபடியே அவளை மீண்டும் நாற்காலியில் சாய்த்துவிட்டு நிமிரும் போது தான் பக்கத்தில் கிடந்த மாத்திரை டப்பா தென்பட்டது.

எடுத்துப் பார்த்தவனுக்கு அது ஸ்லீப்பிங் பில்ஸ் என்பது தெரிய வரவும் அதிர்ச்சியாய் திரும்பி அதிதியைப் பார்த்தான்.

‘சரியாக தூக்கம் வராத அளவிற்கு அப்படி என்ன கவலை இவளுக்கு?’ தனக்குள் தானே கேட்டு கொண்டவனுக்கோ அவள் தற்போதைக்கு எழுந்து கொள்ள மாட்டாள் என்பது தெள்ளத் தெளிவாய் விளங்கியது.

ஆனாலும்  அவளை அப்படியே நாற்காலியில் விட்டு விட்டு போகவும் மனது இடம் கொடுக்காமல் போகவே
வேகமாய் திரும்பியவன் அவளை நாற்காலியிலிருந்து எழுந்து நிற்க வைத்தான்.

ஆனால் நிற்க வைத்த அடுத்த கணமே மீண்டும் நாற்காலியில் சரிந்து அமர்ந்தாள்.

கவலையாய் தாடையில் கைவைத்தவன், ஒரு முடிவோடு அதிதியை திரும்பிப் பார்த்தான்.

தன் வலிய கரங்களை அவள் இடை மீது கொடியாய் படர விட்டவன் அவளை ரோஜா குவியலாய் தூக்கிய கொண்டான்.

ஆனால் தூக்கிய மறு கணமே அவன் முகம் சுணங்கி கொள்ள அப்போது தான் அவன் மனதிற்கு ஒரு உண்மை புரிந்தது.

‘அவள் ரோஜா குவியல் அல்ல. அரிசி மூட்டை’ என்று.

“பாவி எம்புட்டு கனம் கனக்குறா?” என்ற புலம்பலோடு தூக்கிக் கொண்டு நடந்தவன், அவள் அறையிலிருந்த கட்டிலின் மீது வேகமாய் சென்று போட்டுவிட்டு கை கால்களை வலியில் உதறி கொண்டான்.

அடித்து போட்டாற் போல உறங்கி கொண்டிருந்த அவள் மீது போர்வையை போர்த்திவிட்டு நிமிர எத்தனிக்கும் போது அதிதி எதையோ கண்டு பயந்தவள் போல, உறக்கத்திலேயே ராஜ்ஜின் சட்டை காலரை வேகமாய் பிடித்துக் கொண்டாள்.

அவள் விரலைப் போல அவள் வார்த்தைகளும் நடுங்கியபடி வந்தது.

‘நான் உன்னை நம்புனேன்டா. ஆனால் நீ…’ அவள் குரலில் வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் ஓலம்.

அவளது குரலில் ஒரு நிராசை இருந்தது. ஒரு நீதி கேட்டல் இருந்தது.

அவள் கண்களிலோ துரோகத்தின் வாளால் வழிந்த வெள்ளை குருதியின் மிச்ச துளிகள்.

விழிகளை திறக்காமலேயே ஆழ்ந்த தூக்கத்தில் பிதற்றி கொண்டிருந்தவளைக் கண்டு கார்த்திக் ராஜ்ஜிற்கு ஏதோ ஒன்று புரிந்தது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வலியின் சுவடுகள் தான் நிகழ் காலத்தில் அவளை இப்படி கண்ணீர் சிந்த வைக்கிறது என்பதை உணர்ந்தவன் அவள் தலைமூடியை ஆதரவாய் கோதிவிட்டான்.

அந்த தலை கோதலுக்காக ஏங்கி கிடந்த அதிதியின் ஆழ் மனதும் மெதுவாய் அந்த வருடலுக்கு இசைந்து கொடுத்தது.

ஆனால் கண்களில் வழிந்த கண்ணீர் அடங்கினாலும் உதடுகளிலிருந்த மடிப்பில் துடிப்பு மட்டும் குறையாமல்.

“நான் உன்னை நம்புனேன்” என்று திரும்ப திரும்ப அந்த ஒரே வார்த்தையை பிதற்றி கொண்டிருந்தவளைப் பார்த்ததும் அவன் முகத்தில் இரக்கம் சுரந்தது.

நம்பி ஏமாந்த வேதனை அவனுக்கும் தெரியும் தானே!

அவன் முன்னாள் காதலி, கயல் முதுகில் குத்தியதன் வலி இன்னும் ஆறாமல் வதை செய்வதைப் போலவே இவளையும் ஏதோ ஒரு காயம் கீறுகின்றது என்பது அவனுக்கு புரிகின்றது.  ஆனால் அந்த காயத்தின் ஆதி மூலம்  என்ன என்பது தான் அவனுக்கு பிடிபடவில்லை.

அவள் தலையை ஆதூரமாய் கோதி கொண்டிருந்தவனுக்குள் என்ன செய்து அவள் துயர் துடைப்பது என்று புரியாமல் பார்வையை சுழற்றினான்.

அங்கிருந்த ஹெட்போன் கண்ணில் பட்டதும் அவன் நெற்றியில் சுருக்கங்கள்.

வேகமாய் ஹெட்போனை எடுத்து வந்தவன், தன் அலைப்பேசியிலிருக்கும் ரேடியோவை இயக்கினான்.

உயிர்ப்பித்த அடுத்த கணமே அவன் காதுகளை நிறைத்தது ஆதனின் குரல்.

அந்த குரல் காதில் விழவும் வேகமாய் பல்லை கடித்துக் கொண்டவன் தன் உணர்வுகளை அடக்கியபடி அதிதியின் செவிகளில் ஹெஸ்செட்டை மாட்டினான்.

அதுவரை எதை எண்ணியோ கவலை மின்னல்கள் வெட்டி கொண்டிருந்த அதிதியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிந்த வானமாகி கொண்டிருந்தது.

உறக்கத்தில் இறைவனைக் கண்ட குழந்தை எப்படி இதழ் சுழித்து கண்களை திறவாமல் புன்னகைக்குமோ அதே போல அதிதியின் இதழ்களில்  புன்னகை கசிந்து வழிந்தது.

இத்தனை நேரம் சோகத்தில் ததும்பி கொண்டிருந்தவளின் முகம், என் குரலை கேட்டு எப்படி தன்னை ஆற்றுப்படுத்தி கொண்டது?

மகுடிக்கு மயங்கும் பாம்பாய் இவள் ஏன் என் குரலுக்கு மயங்குகிறாள்?

எதனால்?

கேள்விகள் இதயத்தை தாக்க அவனிடம் அசாத்திய ஸ்தம்பிப்பு.