உயிரோடு விளையாடு 24

actress-keerthi-suresh-photos-6

உயிரோடு விளையாடு 24

  • anitha
  • September 19, 2020
  • 0 comments

(தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், என்.சி.ஆர்.பியின் தரவு நடத்திய ஆய்வுபடி ‘பெண்களுக்கு எதிரான 70-85% குற்றங்களில் குடிப்பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதன்படி 2014 ஆம் ஆண்டில் 2,026 சிறுமிகளும் பெண்களும் பாலியல் கொடுமைகளும், 1,423 பேர் கடத்தபட்டதும், 1,286 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் 11,206 பேர் பல வகையான வன்முறைகளுக்கு ஆளானதும் குடி போதையில் இருந்தவர்களால் தான்.

குற்ற தடுப்பின் முக்கிய குறிக்கோள் என்பது பாதிக்கப்பட்டவராவதற்கான அபாயத்தைக் குறைப்பதாகும், இது குற்றம் நடக்கும் சூழ்நிலையில் இருப்பதை அகற்றுவதன் மூலமும், அப்படிப்பட்ட இடங்களைத் தவிர்ப்பதன் மூலமும் குற்றவாளிகள் நம்மை நெருங்காதவண்ணம் ஓரளவிற்கு பாதுகாத்து கொள்ள முடியும்.)

அத்தியாயம் 24

Best Club If You Don't Have Bottle Service: Drai's Beach Club & Nightclub - Las Vegas Weekly

இசை!…

நம் ஆன்மாவுக்குத் திறவுகோல்.

மனிதனின் வாழ்வோடு ஒன்றாய் கலந்துவிட்ட உன்னத வரம்.

உலகளாவிய மொழி. இது எல்லா இடங்களிலும் மக்களுடன் பகிரப்படும் பரிசு. இசை தனித்துவமான, நீடித்த வழியில் மக்களை ஒன்றாக இணைக்கிறது

பிறக்கும்போது நம் அழுகை என்னும் இசை, பலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நம் மரணத்தின்போது, நமக்காக என்று ஓங்கி ஒலிக்கும் அழுகுரலானது சொல்லும், எத்தகைய வாழ்வை நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்பதை.

நம் தொடக்கத்திலும், முடிவிலும் உள்ள இந்த இசை, ரெண்டையும் நம்மால் அறிய முடியாது என்பது என்னவோ உண்மை. இந்த ரெண்டு எல்லைகளுக்கும் நடுவே உள்ள வாழ்க்கையில், காலை எழுந்தது முதல் இரவு உறக்கத்திலும் தொடரும் ஒன்று இந்த இசை.

புள்ளினங்கால் குரலும், உலகினை செழிக்க வைக்கும் மழையின் நாதமும், கோலமிடும் நங்கைகளின் வளை ஓசையும், பூஜையில் ஒலிக்கும் மணி சப்தமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் நம் சுவாசம், எகிறும் இதய துடிப்பின் ஓசையும், உயிர் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும் நாடி துடிப்பும், சப்தமில்லா ஒலியாய் காதலர்களின் இதழ் முத்தம் என்னும் சங்கீதத்தை படைக்கும் போதும், தம்பதிகளின் ஆலிங்கனத்தின் போது, மனைவிமார்களின் கைவளை, கால் கொலுசொலி என்று ஒவ்வொரு நொடியும் இசையானது நம்மோடு பின்னிப் பிணைந்தவை என்றால் மிகையல்ல.

கூர்ந்து கவனித்தால், நம்மைச் சுற்றி லட்சக்கணக்கான மெல்லிய,  நுண்ணிய இசை எல்லாவற்றிலும் நம்மால் ரசிக்க முடியும்.

இசை என்பது கலையின் தூய்மையான வடிவம். அழகின் மிக நேரடி வெளிப்பாடு. இசை அழகா?… எல்லா விதமான மக்களிடமிருந்தும் பல விதமான உணர்வுகளைத் தூண்டி விடுவதால் அழகாக இருக்கிறது.

இசையே வாழ்க்கை. இசை இல்லாவிட்டால், உலகம் அமைதியாகவும் மந்தமாகவும் இருக்கும், வெற்றிடமாகி விடும். தனிமை மற்றும் துக்கத்தின் தருணங்களில், உத்வேகம் அளிக்கும் வகையில் இசை, நம்மை அன்னை மடியாய் தாங்கிக் கொள்கிறது.

அழகான மழலையின் குரல்போல், கொஞ்சி மகிழ்ந்து போற்றி கொண்டாட பட வேண்டிய இசையைத் தான், அங்கே சிதைத்து கொண்டு இருந்தார்கள்.

இதுவும் ஒரு வகை கொலையே!.

தகர டப்பாவில் ஆணியை வைத்துக் கிழிக்கும்போது, எப்படி நாராசமான ஒலி எழும்புமோ, இன்றைய பல இசை,  இப்படி தான் இருக்கின்றன.’ என்று தனக்குள் புலம்பிய படி, அங்கிருந்து அகன்றாள் சம்யுக்தா.

அதற்கு மேலும் அங்கே இருந்தால், அந்தப் பாடல்களை ஒலிபரப்பும் அந்த டிஜேவை, ‘இப்படியெல்லாம் இசையைக் கொலை செய்வாயா?…’  என்று அந்தப் பாடலுக்கு வரிகளையும் எழுதி, இசை அமைத்த அரக்க ஜென்மங்களின் இல்லத்திற்கே சென்று தலையில் நங்கு நங்கென்று கொட்டி விட வேண்டும் என்று என்ற எரிச்சல் கிளம்பியது.

அப்பொழுது தான் அது நடந்தது.

காது பிளந்து கொள்ளும் அளவிற்கு ஒலித்துக் கொண்டிருந்த பாடல், அப்படியே நிற்க எங்கும் நிசப்தம் சூழ்ந்தது.

‘ஷப்பா!… அமைதி கூட இத்தனை இனிமையாக இருக்கும் என்று புலம்பும் அளவுக்குக் கொண்டு வந்துட்டானுங்களே!… திடீர் என்று இங்கே எங்கே அந்த டிஜே லூசுக்கு போதி மரம் முளைச்சது?… ஒலி வித்தியாசமாய் வருதே!…’ என்று நடந்து கொண்டிருந்தவள் நின்று, கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்தாள்.

டிஜேவிற்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அவனுக்குப் பதில் வேறு சிலர் ஏறி நின்று இருந்தார்கள்.

‘அய்யோ ஆண்டவா! … அடுத்த குரூப்பா?… இதுக்கு மேல் என் காது தாங்காது… சம்யு குட்டி!… உடனே போர்க்கால அவசரத்துடன், இங்கே இருந்து ஜம்ப் ஆகிடு.’ என்று சொல்லிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தவள், பின்னால் எழுந்த ஒலியால் மீண்டும் நின்றாள்.

இந்த முறை அங்கே ஒலித்தது உண்மையான இசை.

அந்த இடம் மீண்டும் பாடலால் நிறைந்தது. இந்த முறை ஆடவும் வைத்து, ரசிக்கவும் வைத்த பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியது.

மைக் பிடித்துப் பாடியவனின் குரல் வளம் அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டது.

அதுவரை இல்லாத அளவிற்கு, அங்கே ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் ஆடியவர்களிடம் புத்துணர்ச்சி தோன்றியது.

அது தான் ஞானி, இசையின் தன்னிகரற்ற ஞானி, இளையராஜாவின் ஒப்புமை கூற முடியாத மேஜிக்.

‘விடிய விடிய நடனம்…
சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும்
மண் மேலே புது யுகம்
பிறந்து… பிறந்து… எதுவும் நாளாக
வளர்ந்து… வளர்ந்து… மடியும்
மீண்டும் தான் புதிய.. புதிய … ஜனனம்
பயமென்னடா யமனிடம்?
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்!
நம் கண்களில் நாளைய காவியம்!
நாம் இட்டது இங்கொரு
சட்டமாகக்கூடும்
காலங்கள் உதயமாகட்டும்
கவலைகள் விலகி ஒடட்டும்
காட்டாறு நாமல்லவோ?
வா மனிதா !… உலகை ஆளலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து காட்டலாம்
ராஜாதி ராஜாக்கள்போல்
ஏனென்று கேள்வி கேட்கவும்
யாரும் இல்லை
எங்கேயும் கால்கள் போகலாம்
ஏது எல்லை?…
கொண்டாட்டம் கும்மாளம் தானே!
தப்பாத தாளங்கள் நாம் போட…
தக தக திமி தக தக
பாடுங்கள் புதிய கீர்த்தனம்
எழுதுங்கள் புதிய சாசனம்
மாறட்டும் சமுதாயமே!
ஆடுங்கள் புதிய தாண்டவம்
அழியட்டும் பழைய தத்துவம்
அச்சங்கள் நமக்கில்லையே!…
ஓர் நாளும் ஓய்வதில்லையே
நம் போராட்டம்!…
ஓர் நாளும் சாய்வதில்லையே
நம் தேரோட்டம்!…
ஆரம்பம்…. ஆனந்த கீதம்!
தப்பாத தாளங்கள் நாம் போட….
தக தக திமி தக தக…’ என்று அவன் பாடி முடிக்க, எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரம் ஆனது.

கூட்டத்தில் பாடிய அந்தப் புது குழு யார் என்று சரியாகத் தெரியவில்லை.

பாடியவனின் முகம் மட்டும் தெரிந்த முகம்போல் இருந்தாலும் ,அதற்கு அடுத்தும் சில பாடல்கள் ஒலிக்க, நேரம் ஆவதை உணர்ந்த சம்யுக்தா, விரைந்து எட்டு போட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்தாள்.

மணப்பெண் அங்கில்லை என்பது புரிந்து விட, தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும், அவர்களில் பாதி பேர் சுயநினைவில் இல்லை என்பதையும் கண்டு கொண்டாள்.

ரிசெப்ஷனில் உதவி கேட்டால், நிச்சயம் ஏதாவது கார் ஏற்பாடு செய்வார்கள் என்பது நினைவிற்கு வர, ரிசெப்ஷன் நோக்கிச் செல்ல முயன்றவள், தயங்கி நின்றாள். சம்யுக்தாவும், ஹேமாவும் உள்ளே வரும் போதே, கட்டிடத்திற்குள் இருந்த ரிசெப்ஷன் டெஸ்க்கில் இருந்தவர்கள் கிளம்பி கொண்டு இருந்தார்கள். அது பார்ட்டிக்கு வருபவர்களுக்கு வழி சொல்ல என்று  தற்காலிக உதவி மையமாக அமைத்திருந்தார்கள்.

அந்த ஹோட்டல் நுழைவாயிலில்,  மிகப் பெரிய ரெண்டு இரும்பு கதவுகளைக் கடக்கும்போது,  கார் உள்ளே நுழைந்த இடத்தில் செக்யூரிட்டி செக்கிங் பூத் அருகே தான்,  ரிசெப்ஷன் என்ற பெயர் பலகை தாங்கி நின்ற தனி கட்டிடம் இருந்தது.

‘எங்கும் இல்லாத விதமாய், ஹோட்டலை விட்டு எதுக்கு தனியாக இப்படியொரு அமைப்பு இருக்கிறது?…’  என்று ஹேமாவுடன் பேசியபடி வந்தது நினைவிற்கு வந்தது.

Hotel Reception: 3d Rendering | ARCHIVIZER | Archello

அதுவும் ஒரு பாதுக்காப்பு அங்கம் என்பது சம்யுக்தாவிற்கு எப்படி தெரிய போகிறது?

முதல் கட்ட அரண்.

தாக்க முயல்பவர்கள் அந்தக் கட்டிடத்தில் உள்ள  குழுவைத் தாண்டித் தான், உயிர் இருந்தால் உள்ளே வர முடியும் என்ற நிலையை அங்கு உருவாக்கி இருந்தான் தேஜ்.

கார் ஓடுபாதையில் உள்ளே வர, சுற்றிலும் தோட்டம், மசாஜ் குடிகள், ஆயிர்வேதிக் மருத்துவ கட்டிடம், குழந்தைகள் பூங்கா, உணவகம், டென்னிஸ் கோர்ட் எல்லாம் கடந்து, கடலுக்கு அருகில் இருப்பது போன்று, அந்தப் பார்ட்டி நடக்கும் இடம், வெளி வாயிலை விட்டு வெகுதூரம் இருப்பது, இப்பொழுது நினைவிற்கு வர, எந்தப் பக்கம் செல்வது என்ற தயக்கம் எழுந்தது.

கையிலிருந்த ஓலா, fast track செயலி கொண்டு கொண்டு, கார் புக் செய்ய முயன்றால், அவள் நேரம் எதுவும் கிடைக்கவில்லை. வார இறுதி நாட்கள் என்பதால், டிமாண்ட் அதிகமாய் இருந்தது .

‘எந்த லூசுடா இப்படியொரு டிசைன் செய்த கிறுக்கன்?… ஏதாவது எமென்ர்ஜெசி என்றால் ரிசெப்சன் கட்டிடத்திற்குள் தானே இருக்கணும்?… உதவினா அதுக்கே கிலோ மீட்டர் கணக்கில் ஓட விடுவானுங்க போலிருக்கே!… ‘ என்று மனதிற்குள் புலம்பிய சம்யு அறியவில்லை, அங்கே இருப்பது ஒரு கட்டிடம் மட்டும் இல்லை… பல கட்டிடங்களின் தொகுப்பு.

ஹோட்டல் பணியாளர் பேட்ஜ் அணிந்து, நீச்சல் குளத்தின் அருகே, பார்ட்டிக்காக அமைக்கப்பட்டு இருந்த பாரில், வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை நெருங்கிய சம்யுக்தா,  அவளிடம் வழி கேட்க, அந்தப் பெண் விவரித்துச் சொன்ன பிறகு  தான்,  ‘ரிசெப்ஷன் பார்ட்டி நடக்கும் இடத்தை விட்டு, வெகுதூரம் இருப்பதாக,  தான் நினைத்தது சரி’ என்பது புரிந்து போனது.

தனிமை விரும்பிகளுக்காக, பார்ட்டி நடக்கும் நீச்சல் குளம் அருகே இப்படியொரு அமைப்பு.

அந்தப் பெண் ரிசெப்சனுக்கு அழைத்துச் சம்யுவின் தேவையைச் சொல்ல, ‘ஹோட்டலுக்கு சொந்தமான கார்கள் வெளியே சென்று இருப்பதாகவும், திரும்பி வரச் சற்று தாமதம் ஆகும்’ என்றும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

“ஒகே மேடம்!…  ஒரு அரை மணி நேரம் ஆகும். அதுவரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். கார் நேராக இங்கேயே வந்து விடும்.” என்ற அந்தப் பெண், சம்யுக்தா  தயங்குவதை பார்த்து,

“என்னங்க மேடம்!… என்ன பிரச்சனை?” என்றாள்.

சம்யுக்தாவின் கண்கள் அப்பொழுது அந்தப் பார்ட்டி நடக்கும் இடத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. உள்ளே சென்ற மதுவின் உபயத்தால் எல்லா தடைகளும் தாண்டி,  அங்கிருந்தவர்களின் செயல்கள் நடந்து கொண்டிருந்தன.

பெவிகுயிக் தோற்கும் வண்ணம், ஆண்களும், பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் ஒட்டிக் கொண்டு இருந்தார்கள். பொது இடம் என்பதையும் மறந்து, அத்துமீறல்கள்,  ஒழுக்க கேடுகள், அங்கே எல்லை மீறிக் கொண்டு இருந்தது. அப்படி எல்லை மீறுபவர்களை ஹோட்டல் பணியாளர்கள், வெளியே அனுப்புவதும், அறைக்குச் செல்லும் படியும், வற்புறுத்திக் கொண்டு இருந்தார்கள்.

அங்கே இன்னும் அரை மணி நேரம் தனியே நிற்பது உசிதமாய் படவில்லை.

அதையே அந்தப் பணி பெண்ணிடமும் சம்யுக்தா தெரிவிக்க, “மேடம்!… இரவு நேரம் பார்ட்டி நடக்கும் ரிசார்ட் எல்லாம்,  இப்படி தான் மேடம். குடித்து விட்டுச் சந்தோசமாய் இருக்க வருகிறவர்கள் தான் வார இறுதி நாட்களில் அதிகம். உங்களுக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லையென்றால், ரிசெப்சன் வரை தாங்கள் நடந்து தான் போக வேண்டும். அவ்வளவு தூரம் உங்களால் நடக்க முடியுமா மேடம்?” என்றாள் அவள் தயக்கத்துடன்.

‘துணையாக வேறு யாரையாவது, அனுப்ப முடியுமா?…’ என்று கேட்க, அங்கே இன்னும் ரெண்டு, மூன்று பார்ட்டி நடப்பதால் அப்போதைக்கு, உதவிக்கு யாரும் உடனே அனுப்ப முடியாது என்ற பதிலே வந்தது.

ரிசார்ட் மேனேஜ்மென்ட் டீமிற்கு, மூன்று பார்ட்டி நடக்கும் இடத்தைக் கவனிக்கும் பொறுப்பு, ஏற்கனவே வந்து தங்கி இருப்பவர்களைக் கவனிக்கும் கடமை, வார இறுதி நாட்கள் என்பதால், அதிகளவு இருந்த மக்கள் கூட்டத்தால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் கடமை என்று எல்லாம் சேர்ந்திருக்க, சம்யுக்தவிற்காக அவர்களால் உதவ முடியாமல் போனது.

“இங்கு இருப்பதற்கு நான் மெல்ல நடந்தே ரிசெப்சனுக்கு போயிடுறேன்… கார் நம்பர், என் மொபைல் நம்பருக்கு அனுப்ப சொல்லிடுங்க… உங்க உதவிக்கு நன்றி சிஸ்டர்.” என்றவள் நடக்க ஆரம்பித்தாள்.

அதே சமயம், இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தேஜ்ஜின் வலது கை, பாட்டு போட்டுத் தேஜ்ஜை அறையில் கலாய்த்தவன், “பாஸ்!… பழம் நழுவி பாலில் விழுது பாஸ்…” என்றான் தேஜ்ஜை அழைத்து.

“முதலில் பாஸ்… பாஸ்ன்னு கூப்பிட்டு உயிரை எடுக்காதே!… என்னவோ கொள்ளை கூட்ட தலைவன் பீல் வருது… ரெண்டாவது எதையும் புரியும் படி சொல்லு… அது என்ன பழம், பால்ன்னு?….” என்றான் தேஜ்.

Important Notice Regarding Fraudulent Calls | The Indian Telegraph

“ஹ்ம்ம்!… எனக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்… ஏதோ புள்ளை காதலை சொல்லா முடியாமல், தாடி வைக்காத தேவதாசாக அலைஞ்சிட்டு இருக்கியே!… உதவலாம் என்று வேலை எல்லாம் விட்டுட்டு, உன் ஆள் பின்னாடி காவலுக்கு இருக்கேன் பாரு!….

காதலிச்சா மட்டும் போதாது… அதை முதலில் சொல்லணும். சொல்லச் சூழ்நிலையை, நாம தான் உருவாக்கணும்… உனக்குத் தான் அதெல்லாம் தெரியாது. சரி நானாவது உன்னைச் சம்யுக்தா கிட்டே நெருங்க வைக்கலாம் என்று பார்த்தால்… விட மாட்டியே!…” என்ற வலது கை,

“இப்போ உன் கார் எடுத்துட்டு இளவரசிக்கு டிரைவர் வேலை பார்க்க வா சாமி. அப்புறம் உன் சாமர்த்தியம். இதைவிட வேற சந்தர்ப்பம், லட்டு போல் அமையாது. மீட்டிங் இப்போ போயே ஆகணுமா?… விட்டுட்டு வா… யாரை கேட்டு நீ முதலில் இங்கிருந்து போனே?…” என்றான்.

“டேய்!… இவ்வளவு நேரம், அங்கே தானேடா இருந்தேன்?…” என்றான் தேஜ்.

“இருந்தே!… அதனால் என்ன யூஸ் சொல்லு?… சம்யுக்தா கிட்டே பேசினீயா?.. இங்கே கிழிச்சது போதாது என்று சம்யுக்தா இருக்கும்போது தான் உனக்கு மீட்டிங் முக்கியமா?… என்னைக் கொலைகாரன் ஆக்காதே! … ” என்றான் அவன்.

“ஹ்ம்ம்!… சரி காரோடு பார்ட்டி நடக்கும் வாயிலில் நிற்கிறேன்…” என்றான் தேஜ்.

இங்கே இவர்கள் சம்யுக்தாவை தேஜ் சந்திக்க பிளான் போட்டுக் கொண்டிருக்க, ‘விடுவேனா?….’  என்று விதி வேறு பிளான் போட்டுக் கொண்டிருந்தது.

ரிசெப்ஷன் நோக்கி நடந்து கொண்டிருந்த சம்யுக்தா, திடீர் என்று பின்னால் இருந்து, “மேடம்!… மேடம்!… உங்களைத் தான்…” என்ற பெண்ணின் குரல் கேட்கச் சற்று நின்றாள்.

MGM Beach Resorts, Chennai, India - Booking.com

பாரில் சப்ளை செய்து கொண்டிருந்த அதே பெண் தான், சம்யுவை அழைத்தபடி வந்திருந்தாள்.

“மேடம்!… இப்படி போனீங்க என்றால், ரொம்ப தூரம். நான் சொல்லும் வழியாகப் போங்க… நாங்க வேலை செய்யறவங்க பயன்படுத்தும் குறுக்கு வழி தான்.” என்றவள் எப்படி செல்ல வேண்டும் என்று வழி சொல்ல, வெளியே காத்திருக்கும் தேஜ் காரில் ஏற வேண்டியவளை, விதி யூ டர்ன் எடுக்க வைத்தது அந்தப் பெண்மூலம்.

மீண்டும் நன்றி சொல்லிக் கிளம்பிய சம்யுக்தா, தயங்கி நின்றாள்.

“என்னங்க மேடம்?…” என்றாள் அந்தப் பணிப்பெண் சம்யுக்தாவின் தயக்கத்தை கண்டு.

“இங்கே எல்லோரும் குடி போதையில் இருக்காங்க. நீங்கத் தனியா, பார் பார்த்துட்டு இருக்கீங்க… இங்கே உங்களுடன் வேலை செய்யும் மற்றவர்களும் வேறு வேலையில், பிசியா இருக்காங்க.  நீங்கத் தனியா இருக்கீங்க. உங்க கூடத் துணைக்கு வேண்டும் என்றால் நான் இருக்கட்டுமா?… இது நீங்க வேலை செய்யும் ஹோட்டல் தான். ஆனால்…” என்று சம்யுக்தா இழுத்து நிறுத்த, கலங்கிய கண்களுடன், சம்யுவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் அந்தப் பெண்.

சம்யுவின் கைகளைக் கண்களில் ஒற்றி கொண்டவள், “ரொம்ப நன்றிங்க அக்கா. குடும்ப கஷ்டத்திற்கு தான், இப்படி ஹோட்டலில், பார்களில், உணவகத்தில் வேலைக்கு வருகிறோம். இடம் எப்படி இருந்தாலும், நேர்மையாக உழைக்கத் தான் முயல்கிறோம். ஆனால், இங்கே வேலை செய்தாலே, என்னவோ படுக்கை சர்விசும் கொடுப்போம் என்று நினைப்பவர்கள் தான் அதிகம்.

எங்களை மதித்து, எங்கள் பாதுகாப்பிற்காக இந்த ரிசார்ட் நிர்வாகிக்கு அடுத்தபடியாய் கவலைபட்ட ஆள், நீங்க தான் அக்கா. எங்களுக்கும் கெளரவம், தன்மானம் எல்லாம் இருக்கு.  நாங்களும் மனித இனம் தான் என்று ஹோட்டல், பாரில், சர்வராக வேலை செய்தால், எங்களை என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் என்ற எண்ணம் தான் இருக்கிறது அக்கா.

ஆர்டர் கொடுத்த உணவு, பில் கொண்டு வர லேட் ஆனால், அது என்னவோ கொலை குற்றம் என்ற ரேஞ்சுக்கு தான் அக்கா, எங்களை நடத்தி இருக்காங்க. நன்றி எதிர்பார்த்து வேலை செய்யலை தான். இது தான் எங்களுக்கும், எங்க குடும்பத்திற்கும் வயிற்று பிழைப்பு.

ஆனால், படிச்சவங்க, பெரிய வேலையில் இருபவங்க என்று படித்த இடத்தில் ஒரு நன்றி கூடவா பழகி இருக்க மாட்டாங்க?…

நன்றி சொல்லவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எங்களையும் மனிதர்களாய் உங்களைப் போல மதிக்கட்டும் அக்கா…  நீங்கக் கேட்டதே போதும்… கிளம்புங்க… இது எல்லாம் பார்த்துப் பழகிப் போச்சு எனக்கு.

எப்பொழுதும் துணைக்கு, யாராவது இருக்க தான் செய்வார்கள். நிர்வாகம் அப்படி தான் இங்கு வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறது. இப்போ வரை துணைக்கு, இன்னொருத்தரும்  இங்கே தான் வேலை பார்த்துட்டு இருந்தார்.

லோ சுகர் ஆகிட்டு மயக்கம் வந்துடுச்சுன்னு, நான் தான் அவரை அனுப்பி வைத்தேன். மாற்று ஏற்பாடு செய்வாங்க. ஆனால், இன்னைக்கு கூட்டம் அதிகம் என்பதால் தாமதமாகுது. அழைத்தால் உடனே பௌன்சர்கள் வந்து விடுவார்கள்… நீங்க என்னைப் பற்றிக் கவலை படாமல் போங்க அக்கா. தேங்க்ஸ்.” என்றவள் கண்ணீருடன் விடை பெற, மனபாரத்துடன், அந்தப் பெண் காட்டிய வழியில், நடக்க ஆரம்பித்தாள் சம்யுக்தா.

சிலரை மக்கள், ‘taken for granted’ என்று எடுத்துக் கொள்வது மக்களிடம் வெகுசாதாரணம்.

அதுவும், ‘ப்ளூ காலர், பிங்க் காலர்’ வேலைகளைச் செய்யும், கை உழைப்பை/ manual labours அடிப்படையாகக் கொண்டவர்களும், சேவை துறை பணியாளர்கள் என்று அழைக்கப்படும் வெயிட்டர்கள், டெலிவரி ஆட்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ட்ரைவ்ர்கள், வாட்ச்மேன்கள், சேல்ஸ் பாய், பில் போடுபவர்கள், ஷாப்பிங் மால், துணி கடைகளில் வேலை செய்பவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை கொடுப்பதில்லை.

அவர்கள் செய்யும் உதவிக்கு, ‘நன்றி’ என்ற ஒற்றை வார்த்தை சொல்வதும் இல்லை.

அந்தப் பெண் மிக அழகாய் தான் கேட்டு விட்டாள். ‘யாராவது உதவி செய்தால், நன்றி என்று சொல்ல வேண்டும் என்பதை கூடவா படித்த படிப்பு சொல்லிக் கொடுக்கவில்லை?’ என்று.

‘சம்பளத்திற்கு தானே இவர்கள் வேலை செய்கிறார்கள்’ என்று நினைத்தால், ஒரு மனிதனின் கவுரவம், தன்மானம் என்பதையெல்லாம் சம்பளம் நிர்ணயிப்பதில்லை  என்பதை பலர் உணர்வதில்லை.

ஆயிரம் கதைகள், செய்திகள், etiquette பற்றிய பல விஷயங்களைப் படிக்கிறோம். சினிமாவில் பார்க்கிறோம். ஆனால், கடந்து விடுகிறோம். அந்தப் பெண் சொல்லியது நமக்கு நடக்காத வரை, நம்மை மரியாதை குறைவாக ஒருத்தர் நடத்தாத வரை, இவர்கள் வேலைகளின்போது எதிர்கொள்ளும் அவமானங்களை நாம் அறிந்து கொள்ள முடியாது தான்.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நிலை தானே!…படிக்கும் நல்லதை எல்லாம் வாழ்க்கையில் மக்கள் செயல்படுத்த ஆரம்பித்து இருந்தால், சண்டை, போட்டி, பொறாமை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் எல்லாம் ஏன் நடக்க போகிறது? நாம் படிக்கும் படிப்பு, டிகிரி வாங்கி தரும் ஒரு படிப்பாகவே பலருக்கு நின்று விடுகிறது. அது வாழ்க்கை பாடமாய் மாறுவதில்லை.

மார்க், தேர்வு, ரிசல்ட் என்று இருக்கும் பள்ளிகளும், பள்ளிகளுக்குப் பாடத்தை வகுக்கும் குழுக்களும், குழந்தைகளுக்கு basic manners, etiquette, ஒழுக்கங்கள் ,நெறிமுறைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் போன்றவற்றையும் சொல்லித் தரும் பாடங்களை வகுப்பதில்லை.

குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பதைக் குறிப்பிடுவதற்கு பதிலாக, தார்மீக சங்கடங்களைப் பற்றிய விவாதத்தை எளிதாக்குவதற்கான ஒரு காலகட்டம். கொடுக்கப்பட்ட சூழ்நிலைக்கு மாணவர்கள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள். நிஜ வாழ்க்கையைப் போலவே, கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறப் பகுதிகளைப் பற்றிப் பேசுவதற்கான நேரம், தவறான அல்லது சரியான பதில்கள் இல்லை வாழ்க்கை என்பதை எந்தக் கல்வியும் துறையும் பாடமாய் வைப்பதில்லை.

ஆரம்ப கால கல்வியானது குழந்தையின் அறிவு, கற்றலை வளர்க்கும் நேரம் அல்ல. மாறாக நல்ல பழக்கவழக்கங்களை விதைக்கும் சமயம்.  குழந்தைகள் மற்றவர்களை மதிக்கவும், விலங்குகள் மற்றும் இயற்கையிடம் மென்மையாகவும் இருக்க கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். தாராளம், இரக்க குணம், மற்றவர்கள்மேல் கருணை கொண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்குக் கட்டம், சுய கட்டுப்பாடு, நீதி, தன்னம்பிக்கை போன்றவை கற்பிக்காத வரை எந்தக் கல்வியும் முழுமையானது இல்லை.

சிறந்த மனிதனை, சிறந்த மனிதனால் ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்காத, எந்தக் கல்வியும் தோற்கிறது என்று தான் அர்த்தம்.

கனி சாறினை உருவாக்குவதற்கு பதில், நாம் சக்கைகளை தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். ‘என்று எண்ணியவாறே, அந்தப் பெண் காட்டிய திசையில் நடக்க ஆரம்பித்தாள் சம்யுக்தா.

Children cleaning their classroom

வழி காட்டிய பெண் என்னவோ, சம்யுக்தாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான், வழி சொல்லி இருந்தாள். வழி சொன்ன அவளோ, அவள் சொன்ன வழியில் நடந்த சம்யுக்தாவோ அறியவில்லை, அந்த வழி செல்வது, ‘ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது’ போன்றது என்பதை.

அங்குத் தான் விதி சம்யுக்தா, தேஜ் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது.

வழி கூறிய பெண், லெப்ட், ரைட், ரைட், லெப்ட், யு டர்ன் என்று சொல்லியிருக்க, அங்கு ஒலித்த பாடலின் சப்தத்தில், எத்தனை ரைட், எத்தனை லெப்ட், என்பதை சம்யுக்தா சரியாகக் கவனிக்க தவறினாள்.

தவிர வழி கூறிய பெண்ணும், அவளின் புறம் இருந்து, திசைகளைச் சொல்லியிருக்க, அதைத் தன் பக்க திசையிலிருந்து புரிந்து கொண்டவளின் திசைகள் மாறிப் போனது.

லெப்ட், ரைட், ரைட், லெப்ட், யு டர்ன் என்று குழம்பி, கடைசியாக ஒரு இடத்தில் வந்து நின்றவளின் முன் நின்றது ரிசெப்சன் இல்லை, வங்காள விரிகுடா.

Moonlight Poems

“அடங் கொக்கமாக்க!… ரிசெப்சனை தேடி வந்தா, இங்கே என்னடா சமுத்திரம் இருக்கு!… சரியாய் தானே லெப்ட், ரைட் எடுத்தோம்!… அரை மணி நேரம் நடந்தோமே!…” என்று வாய் விட்டே புலம்பி விட்டாள்.

‘ஹம்!… நீ வரேன்னு, கொஞ்சம் நேரம் முன்னாடி தான், பத்து பேர் சேர்ந்து, வங்காள வரிகுடாவை இங்கே கொண்டு வந்து ஊத்தி வச்சாங்களாம். கேணை!… உனக்குத் தான், திசையெல்லாம் பார்க்கத் தெரியாது தானே!… ஒண்ணு மூடிட்டு அங்கேயே, அந்தப் பொண்ணு கூட நின்னு இருக்கணும்…. இல்லையா குறுக்கு வழியெல்லாம் வேண்டாம் என்று சொல்லிட்டு, மெயின் ஏரியா வழியாகவே நடந்து போய் இருக்கணும்.  இப்போ பாரு… ஆள் அரவம் இல்லாத கடற்கரையில் நின்னிட்டு, முழிச்சுட்டு இருக்கே!… தேவையா இதெல்லாம்?…’ என்று மனசாட்சி அவளை வறுத்து எடுக்க, அசடு வழிய, ஆள் இல்லாத அந்தக் கடற்கரையில் அலைகளை வெறித்தவாறு நின்றாள்.

கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை, இரு பக்கமும் அந்த ஹோட்டல் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. தூரத்தில் புள்ளிகளாய் வெளிச்சம் தெரிந்தது.

‘இப்போ இன்னொரு பிரச்சனை. ரெண்டு பக்கத்தில் எந்தப் பக்கம் போனால் ஹோட்டல் வரும்?’

ஏதாவது ஒரு பக்கம் கரையோரமே நடந்து, போயிட வேண்டியது தான் என்றாலும், அந்தக் கரை நீண்டு கொண்டே போனது போல் ஒரு பிரமை எழுந்தது.

ஹோட்டலுக்கு அழைத்து வழி கேட்கலாம் என்றாலும், எந்த இடத்தில் தான் நிற்கிறோம் என்று சொன்னால் தானே, அவர்கள் யாரைவது அனுப்ப கூட முடியும்.

‘பின்னாடி கடல் இருக்கு. முன்னாடி இருட்டு இருக்கு. மேலே வானம், கீழே கடற்கரை மணல் இருக்கு. தூரத்தில் நிலா இருக்குன்னா சொல்ல முடியும்?… இப்படியே யோசிச்சிட்டு நின்று இருந்தால், நேரம் தான் ஆகும். நடக்க ஆரம்பி சம்யு.” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு, ஒளி தெரிந்த ஒரு கரையின் ஒரு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இருந்த குழப்பத்தில், லொகேஷன் ஷேர் செய்யலாம் என்பதே சம்யுவின் நினைவில் இல்லாமல் போனது. நினைத்தது போலவே நடக்க, நடக்க அந்தக் கடற்கரை நீண்டு கொண்டே தான் இருந்தது.எந்தக் கட்டிடமும் இருப்பதற்கான அறிகுறியும் தென்படாத அளவிற்கு, தென்னம்தோப்புகளும், முந்திரி தோப்புகளும் தான் தெரிந்தது.

‘டேக் டைவெர்சன்…டேக் டைவர்சென் என்று விவேக், ஆந்திராவில் போய் நின்னதை போல்… இப்பிடிக்கா கடல் மார்க்கமாவே நடந்தே என்றால், சில பல மாதங்களில் மேற்கு வங்கத்திற்கே போயி நிற்கப் போறே!… இல்லை இந்தியாவின் அடி முனை ராமேஸ்வரத்தில், இந்திரா பாயிண்டில் நிற்கப் போறே!…’ என்று மனசாட்சி படம் ஒட்டிக் காண்பிக்க, நொந்தவளாய் நின்றாள் சம்யுக்தா.

தனக்கு தானே பேசிக் கொண்டு நடந்தவள், சற்று தூரத்தில் இருந்த மரத்தின் அடியில், அமர்ந்திருந்த ஆறு பேரையும், அவர்கள் கையில் இருந்த மது புட்டிகளையும் கவனிக்க தவறினாள். 

அவர்களும் மரத்தின் நிழலில் இருட்டில் தான் அமர்ந்து குடித்து கொண்டிருந்தார்கள்.

சம்யு அவர்களைக் கவனிக்கவில்லை. ஆனால், போதையில் இருந்த அவர்கள், சம்யுவை கவனித்து விட்டுத் தட்டு தடுமாறி எழுந்து, அவளைப் பின் தொடர ஆரம்பித்தார்கள்.

இரவு, போதை, தனிமை, அழகான இளம் பெண் எப்பொழுதுமே மிக மிக ஆபத்தான காக்டெய்ல். இரவின் அந்தகாரம்,  மனதில் உள்ள பல விகாரங்களை வெளியே கொண்டு வரும். அதிலும் போதையில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன?

துரதிர்ஷ்டவசமாக, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்களுக்கு நள்ளிரவு உச்ச நேரமாக இருக்கிறது.

அப்படியொரு நேரத்தில், தென்னம்தோப்புகளும், இருள் சூழ்ந்த கடற்கரையும், ஒதுக்குபுறமான அந்த இடத்தில் சம்யுக்தா செல்ல நேர்ந்தது விதி என்று தான் சொல்லா வேண்டும்.

‘ஒஹ்ஹஹ்!
பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஒஹ்ஹஹ்!
பியூட்டியினா பியூட்டி தான்.
பின்னழகை காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டிச் செல்லும்
செல்லும் மஞ்சள் நிலா
நெஞ்சை கிள்ளாதே!…’ என்று கர்ண கொடூரமாய் ஒரு குரல் பின்னாலிருந்து கேட்க, அதிர்ந்து திரும்பினாள் சம்யுக்தா.

‘பள்ளியறைப் பாடம் சொல்ல
நாங்க ரெடி…
பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி
அடியே!…
ஆடைகளாலே அழகைப் பூட்டாதே!
இடையை ஆடவிட்டே தான்
அனலை மூட்டாதே!
இளமீசை வெச்ச ஆம்பளைங்க
ஆச வச்சோம் வா… வா…” என்று ஆறு பேரும் ஒவ்வொரு வரியாகப் பாடிய படி சம்யுக்தாவை நெருங்கினார்கள்.

அவர்கள் குடி போதையில் இருப்பதை புரிந்து கொண்ட சம்யு, அவர்களுக்கும் தனக்கும் உள்ள இடைவெளி குறையாமல் பார்த்துக் கொண்டாள்.

இவள் வேக வேகமாய் நடந்தால், பின்னால் வந்த ஆறு பேரும் வேகமாய் நடந்தார்கள். இவள் நின்று திரும்பி முறைக்கும்போது, முப்பத்திரண்டு பல்லையும் காட்டினார்கள்.

வழக்கமாய் சம்யுக்தா கொண்டு வரும் பையில், பெப்பர் ஸ்ப்ரே, மினி கத்தி, பெரிய ஊக்குகள், மிளகாய் பொடி பாக்கெட்டுகள் இருக்கும். இன்று வெறும் மொபைல் மட்டும் கொண்டு வந்த, தன் மடத்தனத்தை, நினைத்துத் தன்னையே நொந்து கொள்ள மட்டுமே சம்யுக்தாவால் முடிந்தது.

‘எங்குப் போனாலும் மொபைலை, கர்ணனின் கவச குண்டலம் மாதிரி, தூக்கிட்டு அலைய முடியுது இல்லை!… பாதுகாப்பிற்கு வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணின் கையிலும் கைப்பை அவசியம்.

அந்தக் கைப்பையில், மேக் அப்சாதனத்திற்கு பதில், அதி முக்கியமாய் இருக்க வேண்டியது பெப்பர் ஸ்பிரே, பூக்குத்தும் நீளமான ஸ்லைட், பெரிய ஊக்குகள், சிறிய கத்தி, மிளகாய் பொடி..’ என்று காலேஜ் பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுத்தது யாரு கண்ணு!… வெளியே போய்ச் சொல்லிடாதே!… கிளாஸ் எடுத்த பைத்தியக்காரியான நீயே, அதைப் பின்பற்றவில்லை என்பதை.’ என்று மனசாட்சி காறி துப்பியது.

‘ஹேமா கிளம்பும் போதே, அவளுடன் சென்று இறங்கி இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தனக்கு வண்டி வரும் வரை ஹேமாவையும், அவள் பெற்றோர்களையும் நிறுத்தியாவது வைத்திருக்க வேண்டும்’ என்று காலம் கடந்து ஞானோதயம் வந்தது அவளுக்கு.

ரிசெப்சனுக்கு அழைக்க, ரிங் போனதே தவிர, யாரும் எடுக்கவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் அறுவரும் அவளை வட்டம் கட்டி நின்று, சினிமாவில் ஹீரோவை, வில்லன் குரூப் சுற்றுவது போல் சுற்றினார்கள்.

“கோயிலில் போய்ச் சுத்துங்க அண்ணன்களா… நல்ல புத்தியாவது கிடைக்கும். என்னைச் சுற்றுவதால் எந்தப் பலனும் இல்லை.” என்றாள் சம்யுக்தா.

“அண்ணன்னா… என்ன மச்சான் பட்சி டக்குன்னு அண்ணன்னு சொல்லிடுச்சு.” என்றான் ஒருவன்.

“கொஞ்ச நேரத்திற்கு நீ அண்ணனாய் இரு…  உன் தங்கச்சி கூட நான் ஜாலியா இருந்துட்டு வரேன்…” என்றது ஒரு மிருகம்.

ஒரே தாயின் கருவறையில் ஜனித்த, உடன் பிறப்பு, சகோதர சகோதரி என்ற பந்தம், எத்துணை தூய்மையானது!

‘தங்கைக்கு அண்ணன் என்பவன் இன்னொரு தந்தைக்கு சமமானவன்’ என்ற அடிப்படை கூட புரியாத, மிருக ஜாதியாக நின்றார்கள் அவர்கள்.

‘என் தங்கச்சி கூட நீ போ. உன் தங்கச்சி கூட நான் போறேன்…’ என்ற உயர்ந்த தத்துவ கருத்துக்களை, சினிமாவில் கொண்டு வந்து, அந்தப் புனித உறவிற்கு உரிய மரியாதையை கெடுத்தது யார் குற்றம்?

‘பிரதர்!… ‘ என்று காதலனை அழைத்து, முன் பின் தெரியாதவர்களை, மரியாதையாக, பிரதர் என்று அழைத்தாலும், ‘அப்போ நீ என்ன லவ் செய்யறீயா?..’ என்று கேவலமாய் கேட்கும் நிலையை உருவாக்கியதை தடுக்காதது யார் குற்றம்?

இன்று இந்தச் சம்யுக்தா இப்படியொரு நிர்க்கதியான நிலையில் நிற்கிறாள் என்றால், இதே போல் அண்ணா, பிரதர் என்று விளித்துக் கையெடுத்து கும்பிட்டும், காலில் விழுந்து கெஞ்சி கதறியும் மானத்திற்கு போராடும் சம்யுக்தாகள் உலகில் எத்தனையோ!.

கதைகள், திரைப்படங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொல்பவர்கள் அறிவார்களா, ‘அண்ணா!… பிரதர்!…’ என்று அழைத்தும், அந்த உறவுக்குரிய புனிதத்தை சிதைத்து இருக்கிறார்கள் என்பதை

“அண்ணா!…” என்று ஒரு பெண் அழைத்தபிறகும் கூட, அந்த அழைப்பை எள்ளி நகையாடும் நிலை, இப்படி சமூக சீர்கேட்டுக்கு வழி வகுத்தவர்களை தான், அந்தக் கணம் மனமார திட்டினாள் சம்யுக்தா.

தங்கைகளைக் காக்க முன் பின் தெரியாத சகோதரர்கள், வீச்சரிவாளை தூக்கியதும் இங்கே தான் நடந்திருக்கிறது. இன்று அதே மண்ணில் தான், ‘என் தங்கையுடன் நீ போ…  உன் தங்கையுடன் நான் போகிறேன்…’ என்று பேரம் பேசுவதும் நடக்கிறது.

“இன்னைக்கு நைட்டுக்கு வசமா சிக்கிக்குச்சு…..” என்றவனின் பேச்சு பச்சையாக மாறியது.

“அட!… ஆமாம் பாருடா…. கோடி ரூபாய் கொடுத்தாலும், இது மாதிரி பொண்ணுங்க எல்லாம் நமக்கு எங்கேயிருந்து கிடைக்கும் சொல்லு?…”

“ஆமா, நீங்க எல்லாம் எங்கடீ இருக்கீங்க?… நாங்க பார்க்கும்போது வத்தலும், தொத்தலுமாய் தான் இருக்காளுங்க….”

“சும்மா சொல்லக் கூடாது கும்முன்னு….” என்று இன்னொருவனும் கேவலமாகப் பேச,

“ஆமாம் மச்சான்… பாரேன்… அப்படியே கையை வச்சி…” என்று அவர்கள் பேசிக் கொண்டே போக, எந்த ரியாக்ஷன் காட்டாமல் அமைதியாக நின்ற சம்யுக்தா, தன்னை சுற்றி நின்றவர்களைப் பார்த்தாள்.

பேச்சு சுவாரஸ்யத்தில், ரவுண்டு கட்டி வளைத்து நின்றவர்கள் நகர்ந்திருக்க, நின்றவர்களுக்கு நடுவே இடைவெளி இருக்க, அந்த இடைவெளியை ஒரே ஓட்டத்தில் கடந்தவளின் கால்கள் அதன் பின் நிற்கவில்லை.

சம்யுக்தாவின் உடலை வர்ணித்து, பச்சையாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள், அவளின் இந்தத் திடீர் ஓட்டத்தை எதிர்பார்க்காதவர்களாய், “ஏய்!… நில்லுடீ!…” என்று கத்தி கொண்டே துரத்த ஆரம்பித்தார்கள்.

இருள் சூழ்ந்த இரவு வேளையில், தன்னை காத்து கொள்ள சம்யுக்தா ஓட, அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறியில் துரத்தி வந்தார்கள் அவர்கள்.

Whispers in the Dark | Dark aesthetic, Horror, Aesthetic gif

‘கோபுர அழகும், கொடிமர பொலிவும், குங்குமம், மஞ்சளும், நம்மையே படைக்கும் இறைவனின் புனிதம் சேர்த்து செய்தது பெண்ணுருவம்…’ என்று முன்னோர்கள் சொல்லிய வார்த்தைகள் அங்கே, தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்தாய் மாறி இருந்தது.

போற்றி பாதுகாக்க வேண்டிய பெண்மையினை தங்கள் இச்சை தீர்த்துக் கொள்ள பயன்படும் வஸ்துவாக, நினைத்துத் துரத்தி வந்து கொண்டு இருந்தார்கள் அந்தக் காமுகர்கள்.

அதே பெண்மைக்கு, காவலாய் நின்று, தங்கள் உயிரையே கொடுக்கவும், தேவைப்பட்டால் எடுக்கவும் தயங்காத தந்தைமார்கள், சகோதரர்கள், கணவர்கள் இருக்கும் இதே திருநாட்டில் தான், ஒரு பெண்ணை, அந்த இரவு வேளையில், யாரும் அற்ற கடற்கரையில் ஓட வைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

அப்பொழுதைக்கு தேவை அந்த உடல்.

அது யாரின் மகளாய் இருந்தால் என்ன!… எந்த வயதில் இருந்தால் என்ன? உடல் முழுவதும் உடையால் மறைந்திருந்தாலும் என்ன!

அவர்களுக்கு அந்தச் சமயம் தேவை ஒரு பெண்ணின் உடல்.

அது சம்யுக்தாவாகி போனது துரதிஷ்டமே!.

காதலை சொல்லாமல், தூரத்தில் இருந்தே வழிபட்டுக் கொண்டிருப்பவன் சம்யுக்தா வர ஹோட்டல் முன் பக்கம் காத்திருக்க, காவலுக்கு இருக்கும் பல்தேவ், விக்ரம் ஆட்கள் இன்னும் தொலைவில் இருக்க, தேஜ் ஆட்கள் சம்யுக்தா எந்தப் பக்கம் சென்றால் என்று புரியாமல் முன் பக்கம் தேடி கொண்டிருக்க, ஆள் ஆரவாரம் அற்ற கடற்கரையில் தன் மானத்தை காத்து கொள்ள ஓடிக்கொண்டிருந்தாள் சம்யுக்தா.

ஆ(ஓ )ட்டம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!