உயிரோடு விளையாடு 26

importance-of-self-defence-for-women-in-india

சி.ஒய். இன்டர்மவுண்டன் சிறப்பு பாலியல் துஷ்பிரயோக சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனர் ராபி, ‘பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, செய்ய வேண்டியது என்னவென்றால், இரவில் பொதுஇடங்களில் நடக்க கூடாது, இரவில் இருண்ட சந்துகளுக்கு போகக் கூடாது, தேகத்தை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். இப்படி செய்தால் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்ற பொய்யான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உண்மை வேறு மாதிரியானது.

பாலியல் வன்கொடுமைகள் வீட்டில் இருந்தும் தொடங்குகின்றன. இரவில் வெளியே சென்றாலும்,  செல்லா விட்டாலும், அணியும் உடை எப்படிபட்டதாக  இருந்தாலும்,  வயது என்னவாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இல்லறத்தில், கணவன் மனைவிக்கு நடுவே கூட, ‘நோ என்றால் நோ தான். ‘Marital rape’  என்பதும் பல வீடுகளில் சத்தம் இல்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாலியல் சுதந்திரம் எத்தனை மனைவிமார்களுக்கு தங்கள் இல்லத்தில் இருக்கிறது?

பாலியல் வன்கொடுமைகளில் 10 ல் ஒருவர் மட்டுமே ‘அந்நியர்களால்’ துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். மீதமுள்ளவை தப்பிப்பிழைத்தவருக்குத் தெரிந்த ஒருவரால் செய்யப்படுகின்றன

நண்பர்கள், பக்கத்து வீட்டில் இருப்போர், காதலர்கள், குடும்ப உறுப்பினர் இந்தக் கொடூரங்களில் ஈடுபடுவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. மக்கள் தங்கள் வீடுகளிலும், பணியிடங்களிலும், முன்னர் பாதுகாப்பாக உணர்ந்த பிற இடங்களிலுமே பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.)

உயிரோடு விளையாடு  26

‘தர்மம் தலை காக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்,
கொடுத்தது காத்து நிற்கும்.
வாழ்வில் நல்லவர் என்றும்
கெடுவதில்லை
இது நான்குமறை தீர்ப்பு
என்றும் தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில்
உயிர் காக்கும்…’  கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் வரிகளில் இருந்த தர்மத்தின் ஆழம், அதில் இருந்த உண்மை, அந்தக் கடற்கரையில் தன் சக்தியினை உலகத்திற்கே உரக்க சொல்லிக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Keerthi Suresh | Most beautiful indian actress, Beautiful girl indian, India beauty

‘வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தட்டும்….’ என்று சொல்லப்படும் பெருமை கொண்டது நாம் செய்யும் தர்மம்.

எல்லா மதங்களிலும் இந்தத் தானம் முன்னிறுத்தப்படுகிறது.

மனிதன் தன் வாழ்வில் பனிரெண்டு வகையான தானங்களில் எதையாவது ஒன்றை செய்வது தான் அவன் இல்லற கடமை. அதை மாலினி உயிரோடு இருந்த வரை அவரும், அவருடன் சேர்ந்தும், அவர் மறைவுக்கு பிறகும் தவறாமல் செய்து வந்தாள் சம்யுக்தா என்று தான் சொல்ல வேண்டும்.

பல குடும்பங்களுக்கு உயிர் தானம், மாங்கல்ய தானம் கொடுத்த மருத்துவர் இல்லையா?… ‘நீயும் உன் குடும்பமும், உன் பிள்ளை குட்டிகளும் நூறு வருஷம் நல்லா இருங்க மா...’ என்று நோயாளிகளின் குடும்பத்தினர் அள்ளி அள்ளிக் கொடுத்திருந்த வாழ்த்து, சம்யுக்தாவின் அரணிற்கு, கேடயமாய் நின்றது.

அரண் செயலியை உபயோகப்படுத்தி விட்டுச், சம்யுக்தா ஓட ஆரம்பித்து இருந்த சமயம், அந்தச் செயலியின் அழைப்பு, ஒருவன் மொபைலை சென்று அடைந்தபோது, அவனும் அதே கடல் முத்து ரிசார்ட்டில் தான் இருந்தான்.

New free app uses Apple's ARKit to help the blind find the way | AbilityNet

இந்தச் செயலியின் ஸ்பெஷாலிட்டிகளில் இதுவும் ஒன்று.

எங்கிருந்தோ உதவி வருவதற்கு பதில், சம்பவம் நடக்கும் இடத்தின் அருகே இருப்பவர் யாராய் இருந்தாலும், அவர்கள் அந்தச் செயலியின் அங்கத்தினராக இருந்தால், அவர்கள் அனைவர்க்கும் ஆபத்தில் இருப்பவரின் விவரம், குற்றவாளிகளின் போட்டோ, வீடியோ பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சென்று கொண்டே இருக்கும்.

ஆபத்தில் இருக்கும் பெண்ணும், தன் அருகில் தன்னை காக்க யார் இருக்கிறார் என்பது தெரிய வரும்போது, தன்னை காக்க அருகில் சிலர் உள்ளார்கள் என்ற மனத்துணிவே போராட தேவையான துணிவை கொடுத்து விடும். மன வைராக்கியத்தை முன் எந்த ஆபத்தும் தூசு தானே!.

‘உதவி வரும் வரை குற்றவாளிகளைச் சமாளித்தால் போதும்…’ என்ற நிலையில், போராட்டமானது வீரியமாகத் தானே இருக்கும். அந்த வீரியத்துடன் சம்யுக்தா ஓட ஆரம்பித்து இருக்க, அவளின், ‘ஆபத்து’ என்ற கூக்குரல் சற்று தொலைவில் இருந்த ஒருவனை சென்று அடைந்தது.

அவன் நண்பர்கள் உள்ளே இருக்க, பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என்பதெல்லாம் வேப்பங்காயாகக் கசக்கும் அவனுக்கு என்பதால், உள்ளே நடக்கும் பார்ட்டியை விட்டு, தனியாய் வந்திருந்தான்.

அவனுடன் அவனுக்குத் தனிமைக்கு உற்ற துணையாய் அவன் அழகான காதலி. 

இன்னும் சொல்லப்போனால் அவன் காதலியின் வனப்பில் மயங்கி, அவளுடன் சல்லாபித்து கொண்டிருந்தான்.

அவன் காதலியின் அழகிற்கு எதையுமே உவமையாகச் சொல்ல முடியாது. அப்படியொரு தெய்வ பிறவி அவள். மனதை மயக்குவத்தில் அவளை மிஞ்சும் மோகினி உலகில் யாருமே இல்லை.

அவன் தனிமைக்கு அவளே ஔசதம்/ மருந்து. சஞ்சீவினி அவள்.

இயற்கை என்னும் காதலியைத் தான் காதலித்து கொண்டிருந்தான்.

Night Watching Stars Sky Stock Illustrations – 465 Night Watching Stars Sky Stock Illustrations, Vectors & Clipart - Dreamstime

இயற்கையாகவே மனிதன், அழகை ருசிக்க ஆர்வமுள்ள ஒரு உயிரினம். இயற்கையை விட அழகாக வேறு எதுவும் இல்லை. மனம் சோர்வுறும்போது மடி தாங்கும் அன்னை ஆவாள். அத்தகைய காதலி அவள்.

ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு விதமாய், தன் அழகால் காண்பவரை கட்டி போடும் மந்திரக்காரி. அவளின் மாயத்தில் சிக்கும் மனம் மீள விரும்புமா என்ன! 

இயற்கையின் அழகு எப்போதுமே உலகெங்கிலும் உள்ள கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், முதல் உத்வேகமாக இருந்து வருகிறது.  இது உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்துள்ள கலை, கவிதை, இசை ஆகியவற்றின் ஏராளமான படைப்புகளுக்குச் அடிநாதமாக இருக்கிறது.

நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் கண்காட்சி, உடலைத் தழுவும் கடல் காற்று, இரவு பூச்சிகளின் சங்கீத ஒலி என்று கண்களை மூடிப் படுத்து இயற்கை காதலியோடு கைக்கோர்த்து, அவள் படைத்த தனி பிரபஞ்சத்தில் இருந்தான் அவன்.

அவன் ஈஸ்வர்.

Sharath A Haridaasan | Unni Mukundan | Unni Mukundan New Movie | Nikki Galrani - Filmibeat

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், பேராசிரியராகப் பணியாற்றி வருகிறான். நண்பர்களுடன் அந்தக், ‘கடல் முத்து’ ரிசார்ட்டிற்கு பார்ட்டிக்காக வந்திருந்தான். உள்ளே நடக்கும் பார்ட்டி, அதன் சத்தம் தலைவலியை கொடுத்து இருக்க, நண்பர்கள் கிளம்புவதற்க்காகக் காத்திருந்து, அவர்கள் கிளம்புவதாகத் தெரியவில்லை என்பதால், இயற்கை காதலியைக் கொஞ்சி கொண்டிருந்தான்.

அப்பொழுது தான் சம்யுக்தாவின் உதவி உதவி கோரிய அழைப்பு ஈஸ்வரை வந்தடைந்தது.

தினமும் வரும் நூற்றுக்கணக்கான மெசஜ், அழைப்புகளிலிருந்து தனியாகத் தெரிய வேண்டும் என்றே, ‘அரண்’ செயலியை உருவாக்கி இருந்த செல்வம்,

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே!
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!…’ என்ற பாரதிதாசன் கவிதையை, ஆபத்து அறிக்கை ஒலியாகச் செட் செய்திருந்தான்.

அந்தப் பாடல் இரவின் நிசப்தத்தில் ஒலிக்க, காதலியுடன் கொஞ்சி குழவி கொண்டிருந்த அவன் திகைத்துக் கண்களைத் திறந்தான்.

அந்த ரிசார்ட்டின் கார் பார்க்கிங்கில் இருந்த பெஞ்சு ஒன்றில் தான் சாவதானமாய் படுத்திருந்தான் ஈஸ்வர்.

பாடல் ஒலித்தவுடன் மொபைல் எடுத்துப் பார்த்தவன், அடுத்த நொடி செயலி காட்டிய திசையில் ஓட ஆரம்பித்திருந்தான். அவன் கண்கள் காண்பதை நம்ப முடியாமல் விரிந்திருக்க, அவன் மூளையோ, ‘இது எப்படி சாத்தியம்?….’  என்று அலறிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்திற்க்கு முன், உள்ளே பார்த்த பெண், இப்பொழுது ஆபத்தில் இருக்கிறாள் என்று செயலி சொல்வதை, அவனால் எப்படி நம்ப முடியும்? அதுவும் ரிசார்ட் பின்புறம் உள்ள ஒதுக்குபுறமான இடத்தில்!…

அரண் செயலி சம்யுக்தாவை சுற்றி வளைத்திருந்த  அந்த ஆறு பேரின் முகத்தை hd குவாலிட்டியுடன் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தது மட்டுமில்லாமல், அவர்கள் கேவலமாய், பேசிய அனைத்தையும் வீடியோவாக அனுப்பி இருந்தது.

அதைப் பார்த்த ஈஸ்வரின் கண்கள் கோபத்தில் சிவந்தது. கைக்கால் நரம்புகள் புடைக்க, அடுத்த நொடி செயலி காட்டிய திசையில் சம்யுக்தாவை நோக்கி ஓட ஆரம்பித்து இருந்தான்.

இப்படியொரு வீடியோ நமக்கு வருகிறது என்றால், அந்த இடத்தில் நம் வீட்டு பெண்களை வைத்துப் பார்க்கும் ஒவ்வொருவரின் ரத்தம் கொதிக்க தான் செய்யும்.  வயதானவர்களாய் இருந்தால் கூடத் தங்கள் தடியெடித்து துரத்தி வந்திருப்பார்கள்.

இது போன்ற வக்கிர மிருகங்கள் எதிரே நிற்கும் பெண்ணைத் தன் அன்னையாய், உடன் பிறந்த சகோதிரியாய், தன் மகளாய் பார்த்தால் ஏன் இது போன்ற கோராமைகள் நடக்க போகிறது!…. இந்த மிருகங்கள் தங்கள் வீட்டில் உள்ள பெண்களையே எப்படி நடத்துகிறார்களோ யாருக்கு தெரியும்.

‘காமம்’  என்ற கொடிய விஷம் தலைக்கேறி ஆட்டம் போடும் விஷ ஜந்துக்களுக்கு தானா தாய், மகள், சகோதரி என்ற பேதைமை தெரிய போகிறது!.

உடல் இச்சைக்காக ஒரு பெண்ணை அங்கே துரத்தி, அதில் ஆனந்தம் அடையும் அந்த அரக்க ஜென்மங்கள், ‘ஆண்மை என்றால் அது இது தான்….’ என்று நினைத்துக் கொண்டிருக்க, அங்கே தவித்து ஓடும் பெண்மையை காக்க உண்மையான ஆண் மகன் ஒருவன் பதைத்து ஓடிக்கொண்டிருந்தான்.

ஆண்மை! 
படுக்கையில் நிர்ணயிக்கப்படுவதில்லை!….
ஒரு பெண்ணின் உடல் சேர்வது மட்டுமே இல்லை! 
ஒரு பெண்ணிடம் வலிமை காட்டுவதில் வெளிப்படுவதில்லை!.
ஒரு பெண்ணை துகில்உரிவதில் இல்லை!…

அவள் கொண்ட நம்பிக்கையை உடைப்பதில் இல்லை.

குழந்தை பிறக்கக் காரணமாய் இருப்பதால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை.
கையை ஓங்கி விடுவதால் மட்டும் இல்லை….. ‘என்பதை இந்தச் சாக்கடைகளுக்கு யார் சொல்வது?

ஆண்மை களங்கப்படும் நேரம் இவை.

எங்கே பெண்மை தோற்கடிக்கப்படுகிறதோ, அந்த நொடி ஆண்மை என்ற வார்த்தையும், ஆண்மகனுமே தோற்று தான் விடுகிறார்கள்.

அது நான்கு சுவற்றுக்குள் குடும்பத்திற்குள்ளாக இருக்கட்டும்… இதோ ஒதுக்குப்புறத்தில் ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டு வேட்டையாட நினைக்கும் போதாகட்டும்.

இன்றைய துச்சாதனங்கள் எண்ணிக்கையும் அதிகம். அவர்கள் துகில் உரிந்த திரௌபதிகளின் எண்ணிக்கையும் அதிகம். சிதைக்க படும் எல்லா திரௌபதிகளையும் காக்க, கிருஷ்ணர் மாதிரி யாரும் வருவதில்லைதான்.

அங்கே பெண்மையை காக்க கரட்சகன் ஒருவன் விரைந்து கொண்டிருந்தான். 
ஈஸ்வரை போல் பெண்மைக்கு துணை நிற்கும் மனிதன் சொல்லிக் கொள்ளலாம் தான் ஆண்மகன் என்று.

பின்னங்கால் பிடரியில் படும் அளவுக்கு வெகுவேகமாய் ஈஸ்வர் ஓட, சம்யுக்தாவை செயலியில் குறியுடும், அவள் idயும் வெகுவேகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

நல்லவேளையாகத் தினமும் உடற்பயிற்சி, யோகா, ஜாகிங் என்று செய்வதாலும் அவன் உயரத்திற்கு ஏற்பக் கால்கள் நீளமாய் இருந்ததாலும் வேக எட்டுகள் போட்டு வெகுவேகமாய் ஈஸ்வரால் ஓட முடிந்தது.

பத்து, பதினைந்து நிமிட ஓட்டம் அவனைக் கொண்டு வந்து விட்டது அந்த ரிசார்ட்டின் காம்பௌண்ட் ஓரம். ஏழு, எட்டு அடி உயர காம்பௌண்ட் அது.

சம்யுக்தாவை காக்க காம்பௌண்டிற்கு இந்தப் பக்கம் ஈஸ்வர் ஓட, காம்பௌண்டிற்கு அந்தப் பக்கம், தன்னை காத்து கொள்ள சம்யுக்தா ஓடிக்கொண்டிருந்தாள்.

எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஈஸ்வரை பதைக்க செய்து கொண்டிருந்தது.

ஆபத்தில் இருக்கும் சம்யுக்தாவை காக்க முடியாமல், கழியும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு நரக வேதனையாக இருந்தது.

கண் முன்னே ஒரு பெண் ஆபத்தில் இருக்கிறாள். தன் மானத்திற்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாள். நாட்டின் வருங்கால தூண்களைச் செதுக்கும், உன்னத பணியில் இருக்கும் குரு ஆன அவன் முன், இதெல்லாம் நடக்கும்போது மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.

ஓடும் பெண்ணைக் காக்க அவன் உயிரைக் கொடுக்கக் கூட அவன் தயார் தான். ஏதாவது ஒரு நாள் போகப் போகும் உயிர் பெண்ணின் மானத்தை காப்பாற்றி விட்டுப் போவதில் அவனுக்குச் சந்தோஷமே!. ஆனால், அதற்கு முதலில் அவன் சம்யுக்தா அருகில் செல்ல வேண்டும் அல்லவா!

அதற்கே வழி இல்லாமல், சம்யுக்தாவை நெருங்கும் வழி தெரியாமல் காம்பௌண்ட் சுவரை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தான். அப்படியொரு பாதுக்காப்பு காம்பௌண்ட் கட்டிய மேஸ்திரி, கொத்தனார் இல்லையென்றால் அதை வடிவமைத்தவன் மட்டும் கையில் கிடைத்தால், கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் போல் தோன்றியது.

நல்லவேளையாக அந்த இடத்தைக் கட்டியவனுக்கு அறிவு நன்றாக வேலை செய்திருந்தது. கடற்கரைக்குச் செல்ல ஒரு கதவினை வைத்திருந்தான். சம்யுக்தாவின் நல்லநேரமோ என்னவோ அந்த ரிசார்ட் காவலாளிகள் அதைப் பூட்டி இருக்கவில்லை.

அந்தக் கதவைத் திறந்து கொண்டு கடற்கரைக்குள் ஓடிய ஈஸ்வர் ,ரெண்டு பக்கமும் பார்வை பதித்து, எந்தப் பக்கம் சம்யுக்தா இருக்கிறாள் என்று பதைபதைப்புடன் பார்வையை சுழல விட்டான்.

ஒரு பக்கம் காலியான கடற்கரை மட்டுமே தெரிய, இன்னொரு பக்கம் பார்வை பதித்தவாறே ஓட ஆரம்பித்திருந்தவன் அடுத்த நொடி ஸ்தம்பித்து நின்றான்.

காம்பௌண்டிற்குள் வேகமாக ஓடி வந்திருந்ததில் ஈஸ்வர் சம்யுக்தாவை ஓவர் டேக் செய்திருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். ரிசார்ட் கதவைத் திறந்து கொண்டு வந்திருந்த ஈஸ்வரை விட, வெகுவாய் பின் தங்கி இருந்தாள் சம்யுக்தா.

பின்னால் இருந்த சம்யுக்தாவை நோக்கி ஓட்டம் எடுக்க ஆரம்பித்திருந்த ஈஸ்வர் ஜெர்க் ஆகி அப்படியே நின்றான்.

அங்கே அரங்கேறி கொண்டிருந்தது பெண்மையின் ருத்திரத்தாண்டவம்.

“ஷிர்தி ஸ்திதி வினாஷம், சக்தி பூட் சனாதனே, குண ஷே, கண மே, நமஸ்துதே ”

பெண்மையை வணங்குகிறோம்…. வணங்குகிறோம். மனித உயிர்களை உருவாக்கி, நிலைநிறுத்தி, செழிக்க வைத்து, அழிக்கும் நித்திய ஆற்றல், அதாவது தத்வா, தலைமுறை, அவதானிப்புகள் மற்றும் அழிவுக்கான அனைத்து பண்புகளின் உறைவிடமான பெண்மையே உன்னை வணங்குகிறோம்!…என்ற சக்தியின் சொரூபமாய் தன்னை தொட வந்த அரக்கனை அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்தது பெண் சிங்கம் ஒன்று.

அங்குச் சிறு துளியாய் என்றாலும் எரிமலையின் வெப்பத்தோடு வெளிப்பட அந்தப் பெண்மையின் ஆற்றலைக் கண்டு ஈஸ்வர் திகைத்து விழி விரித்து நின்றிருக்கும் போதே, மீண்டும் ஓட ஆரம்பித்திருந்தாள்  சம்யுக்தா. 

தன்னை துரத்தி வருபவர்களைப் பார்த்துக் கொண்டே ஓடி வந்தவள், தான் ஓடும் பாதையில் முன்னால் நின்று கொண்டிருந்த ஈஸ்வரை கவனிக்காமல் அவன்மேல் மோதி நின்றாள்.

அதே சமயம் துரத்தி வந்தவர்களின் பின்னால் யாரும் அறியாமல் இருளோடு இருளாய் வந்து நின்றார்கள் சிலர். ஒவ்வொருத்தரின் கண்களிலும் அப்படியொரு கொலை வெறி தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

Lockdown of silhouettes of four confident men in suits holding baseball bats walking towards exit of parking lot Stock Video Footage - Storyblocks

அவர்கள் இடத்திற்கே வந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில், அவர்களுக்கு நெருங்கிய பெண்ணை அவர்கள் கண் முன்னே துரத்திக் கொண்டு சில மிருகங்கள் செல்வதை கண்டு அவர்கள் சும்மா இருப்பார்களா?

உலகின் மிகக் கொடிய மாபியா கும்பல் அது.

சட் சட்டென்று பல துப்பாக்கிகள், தங்கள் உறையை விட்டு வெளிவந்து அந்த அறுவரை குறி வைக்க, தேஜ் ஒற்றை விரல், ‘வேண்டாம்’ என்ற அசைப்பு அவர்களைக் கட்டி போட்டது.

தன் உயிரைத் தன் கண் முன்னே துரத்திக் கொண்டு வருபவர்களின் மரணம் சாதாரணமானதாகக் கொடுத்து விடுவானா என்ன?…  ஊரில் உள்ள மற்ற பெண்களுக்கு ஒன்று என்றாலே அதற்குக் காரணமானவர்களைக் கருவறுப்பவன் தேஜ்.

உக்கிர சொரூபமாய் அந்தக் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தான் .  

ஒவ்வொருத்தரையும் லட்சம் தடவையாவது கொல்லும் வெறி, தேஜ் உடலின் ஒவ்வொரு அணுவிலும் சுனாமியை சீறி பாய்ந்து கொண்டிருக்க, சம்யுக்தா என்ற ஒற்றை பெண்ணிற்காக தேங்கி நின்றான்.

ஏற்கனவே ஆறு பேர் துரத்தி வந்ததில் எந்த பெண்ணாய் இருந்தாலும் உள்ளுக்குள் பயந்து இருப்பாள்.  இதில் கொலை…. இல்லை அசுர வதம் அவள் கண் முன்னே நடந்தால் தாங்குவாளா?

இது போன்ற அரக்கர்களின் மரணம் எல்லாம் சாதாரணமாய் நடந்து விட்டால், உலகத்தை ஆட்டி படைத்து கொண்டிருக்கும் நிழல் உலக இளவரசனாய் இருப்பதில் அர்த்தமே இல்லையே!.

அப்போதைக்கு தேஜ்ஜிற்கு முக்கியம் சம்யுக்தாவின் பாதுக்காப்பு. அந்த ஆறு பேரின் மரணம் இல்லை. எனவே அவன் தேங்கி நிற்க, அவன் கட்டளைக்கு அடி பணிந்து இருளில் மறைந்து நின்றார்கள் அவன் ஆட்கள்.

இது எதையும் அறியாத சம்யுக்தா ஒருவனை புரட்டி எடுத்து விட்டு, பின்னால் பார்த்துக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு, திடீர் என்று நெஞ்சு அடைப்பது போலவும், பாறாங்கல்லை நெஞ்சில் வைத்தது போலவும் தோன்ற, ஓட்டத்தை நிறுத்தினாள்.

சம்யுக்தாவாக ஓட்டத்தை நிறுத்தவில்லை.

சம்யுக்தாவின் ஓட்டம் நிறுத்தப்பட்டது.

தன் நெஞ்சு அடைக்கக் காரணம், பாறாங்கல்லை போல், தான் ஓடி வந்த வழியில் நின்ற ஒரு மனிதனின் மேல், தான் முழு வேகத்தில் மோதியதே காரணம் என்பதை உணர்ந்து திகைத்து விழித்தாள்.

அவள் கன்னம், எதிரே நின்ற சீன பெருஞ்சுவரின் தாடை வரை மட்டுமே இருப்பதையும், அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் நெடுநெடுவெனத் தூரத்தில் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தென்னை மரத்தின், ‘கசின் பிரதர்’ என்று சொல்லும் படி  நின்றவனை கண்டு திகைத்து நின்றாள்.

அவன் மார்பில் மோதிய வேகத்தில், சம்யு  விசையின் காரணமாய் பின் நகர்ந்தாள். அவன் ஏதோ தன் மேல் இறகு தான் மோதியது என்ற தொனியில் அசையாமல், அய்யனார் சிலைபோல் நின்றான்.

‘துரத்தி வந்தவர்களில் ஒருவனோ இவன்?… தன்னை எப்படி தாண்டிச் சென்று, முன்புறம் வந்து வழி மறிக்கிறான்?’ என்று குழம்பி, பின்னால் திரும்பிப் பார்க்க, அங்கு 5 பேர் ஓடி வந்து கொண்டு இருந்தார்கள்.

சம்யுக்தா அடித்துப் போட்டவன் தரையோடு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தான். கோயிலில் உருண்டலாவது புண்ணியம் கிடைக்கும்!… கடற்கரையில் உருண்டு பிரளுவதால் என்ன பயன்?

சம்யுக்தாவின் குழப்பத்தைக் கண்டவன், “மேடம்! நீங்கச் சம்யுக்தாவா?… பெண்கள் பாதுகாப்பு செயலியில் நீங்கத் தான், ‘panic பட்டன்’ பிரஸ் செய்ததா?” என்றான் ஈஸ்வர்.

செயலி பற்றி எதிரே புதிதாய் வந்து நின்றவன் சொன்னதும், தன் மொபைல் எடுத்து அதைச் செக் செய்தாள் சம்யுக்தா. அந்த   செயலியும்   அவன்   பெண்கள்  கேடயத்தின் உறுப்பினன் எனவும், அவன் ஒரு காலேஜ் ப்ரொபசர்   என்றும், அவன்  பெயர், ‘ஈஸ்வர்’ என்று   எல்லா விவரத்தையும் போட்டோவுடன் காட்டி  கொண்டு  இருந்தது.

ஆதார் நம்பர், கல்லூரி id, அவன் வீட்டு விலாசம் என்று எல்லாமே அரண் செயலி குழுவால் சரிபார்க்க பட்டு இருக்கிறது என்ற கூடுதல் தகவலும் டிஸ்பிலே ஆனது.

செல்வம் உருவாக்கி இருந்த செயலி அந்தக் கடற்கரையில் இருந்த தேஜ், சம்யுக்தாவை நெருங்குவதற்கு முன், ஈஸ்வரை சம்யுக்தாவின் மீட்புக்கு அனுப்பி வைத்திருந்தது.

தேஜ் என்ற ஒருவன் அங்கே இருப்பதும், தனக்கு ஒன்று என்றால் எத்தனை உயிரை வேண்டும் என்றாலும் அவன் எடுக்கத் தயங்காத மாட்டான் என்பதோ, தன் உயிரையும் கொடுக்க ஒரு கணம் கூட யோசிக்க மாட்டான் என்பதை சம்யுக்தா அறியாமல் விதி தன் வேலையைச் செவ்வனே செய்து, தேஜ்ஜின் சம்யுக்தாவை பிரித்து, ஈஸ்வரின் சம்யுக்தா ஆவதற்கான முதல் படியை அங்கே எடுத்து வைத்திருந்தது.

அந்த நொடி வரை எப்பொழுதும் தொலைவில் இருந்தே சம்யுக்தாவை காதலித்து கொண்டிருந்த தேஜ் காதல், மீண்டும் தொலைவாகவே இருக்கும் படி செய்து விட்டது விதி.

சம்யுக்தா பயத்தில் தன்னையும் அந்தக் காமுகர்களில் ஒருவன் என்று நினைத்து விடக் கூடாதே என்று ரெண்டு அடிபின் எடுத்து வைத்த ஈஸ்வர், தன் இரு கையையும் சரண்டர் என்பது போல் தூக்கி, தன்னால் அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று செயலால் உணர்த்துவது போல் பின்னடைந்தான்.

ஏற்கனவே பயத்தில் இருக்கும் பெண், கிட்டே நெருங்கி நின்றால் பயப்பட போகிறாள் என்று விலகியே நின்றான். அந்த நேரத்தில் எந்த ஆண்மகனையும் அவள் நம்புவது சிரமமே என்பது அவனுக்குப் புரிந்தே இருந்தது. எத்தனையோ மாணவிகளைத் தினம் தினம் சந்திப்பவன் ஆயிற்றே!… பெண்கள் மனநிலையை சுலபமாய் அவனால் கணிக்க முடிந்தது.

செயலி காட்டிய புகைப்படத்தை உற்று நோக்கிய சம்யுக்தா  திடுக்கிட்டாள்.

அந்த ஈஸ்வர் என்பவன் தான், பார்ட்டி நடக்கும் இடத்தில், ‘விடிய விடிய நடனம்’ என்ற பாடலைப் பாடி, ஆடிக் கொண்டு இருந்தவன் என்பது புரிபட, நிம்மதி பெருமூச்சு ஒன்று சம்யுக்தாவிடமிருந்து வெளிப்பட்டது. 

ஓடி வந்ததில் மூச்சு வாங்கிய சம்யுக்தா, தலையை மட்டும், ‘ஆம்’ என்று ஆட்ட,

“என்ன பிரச்சனை மேடம்?” என்றவனின் கேள்விக்குச் சம்யுக்தா பின்னால் துரத்தி  வந்தவர்களைக்  கைக்காட்டி,  அவன் முதுகுக்கு பின் மறைந்தாள்.

எதையோ பேச முயன்ற இருவரையும் பேச விடாமல், அங்கு எழுந்த குரல்கள் தடை செய்தது.

“டேய்!… இங்க பாருங்கடா… ஹீரோ என்ட்ரி கொடுத்துட்டார்…” என்றான் ஒருவன்.

“டேய்!…  அவ என் ஆளு… எங்களுக்குள் சின்ன மனஸ்தாபம்… நாங்க இப்படி தான் ஓடிப் பிடிச்சி விளையாடுவோம்… நீ கண்டுக்காதே!… இடத்தைக் காலி செய்.” என்றான் இன்னொருவன்.

“என்னங்க!… அந்த ஆள் உங்களை அவன் ஆள் என்று சொல்றான்…” என்று தன்னை பார்த்துக் கேள்வி கேட்ட ஈஸ்வரை, என்ன செய்வது என்று சம்யுக்தாவிற்கு புரியவில்லை.

சம்யுக்தாவின் முறைப்பை பார்த்தவன், “அய்யோ!… மேடம் தப்பாய் நினைக்காதீங்க… இது ட்ரையல் ஆப். சில சமயம் கைப்பட்டு கூட, panic பட்டன் இப்படி, ஆபத்துன்னு மெசேஜ் அனுப்பிடுது. போன வாரம் இப்படி தான், ஓடிக் கொண்டிருந்த பெண் அருகே சென்று, கடைசியில் அந்தப் பெண்ணும், அவங்க காதலனும் ஓடிப் பிடிச்சி விளையாடிட்டு இருக்காங்க என்று தெரியாமல், நான் போய் நோஸ் கட் ஆனது தான் மிச்சம் மேடம்… அதான் ஒரு சேப்டிக்கு கேட்டுக்கிறேன் மேடம்…”. என்றார் ஈஸ்வர் பாவமாய்.

“இங்க பாருங்க மிஸ்டர் ஈஸ்வர்…நீங்கக் கல்லூரி ப்ரொபஸர், நிறைய பொது சேவை செய்து அவார்ட் எல்லாம் வாங்கி குவிச்சு இருக்கீங்க என்று கூடப் பார்க்கமாட்டேன்… நீங்கப் பெண்களுக்காக, உங்க கல்லூரியில் போதை மருந்து விழிப்புணர்வு பிரச்சாரம், கேம்ப், மீட்டிங் எல்லாம் செய்யறீங்க என்றெல்லாம் பார்க்கமாட்டேன் ஈஸ்வர். குரல் வளையை கடிச்சி துப்பிட்டு போயிட்டே இருப்பேன்… இப்படி லூசு மாதிரி பேசுனீங்க என்றால்…

யோவ்!… அந்த மூஞ்சியை பாரு… வத்தி போன புழுவுக்குப் பாண்ட் ஷர்ட் போட்டது போலிருக்கான். முகத்திலேயே பக்கா ரோக்ன்னு எழுதி ஒட்டி வச்சி இருக்கு… அவன் தான், ‘என் ஆளுன்னு’ சொல்றான் என்றால், நீயும் லூசு மாதிரி அவன் ஆள் நீங்களான்னு கேள்வி கேட்கிறே!… கண்ணு அவிஞ்சி போய் இருக்கா என்ன உனக்கு?” என்று சரமாரியாக அவனைக் கடித்து துப்பினாள் சம்யுக்தா.

“என்னை உங்களுக்குத் தெரியுமா என்ன?” என்றான் ஈஸ்வர் திகைப்புடன்.

“ஏன் தெரியாம!… போன வாரம் உங்க காலேஜ்ஜூக்கு தான் எங்க டீம் கேம்ப் வந்தோம். ஒட்டுமொத்த கல்லூரியும் ஈஸ்வர், ஈஸ்வர் என்று எதை யாரிடம் கேட்டாலும் ஈஸ்வர் என்று ஒரே புராணம். யார் என்று விசாரித்தால் இந்தக் கேம்ப் ஏற்பாடு செய்திருப்பது ஈஸ்வர் என்று உங்க காலேஜில் சொன்னாங்க. யாருன்னு கேட்டதற்கு அப்போ தான்’நீங்க வெளியே போனதாகச் சொன்ன உங்க ஹெட் ஒருவர், உங்க படத்தை எங்களுக்குக் காட்டினார்.

நிறைய தடவை உங்களை ஷாப்பிங் மாலில் பாத்திருக்கிறேன். உங்க கிட்டே பேச எத்தனையோ முறை ட்ரை செய்தேன்… சான்ஸ் கிடைக்கலை. இன்னைக்கு கூட நீங்கத் தான் ஸ்டேஜில் பாடினீங்க… ஒரு பாட்டோடு நிறுத்துவீங்க என்று வெயிட் செய்து பார்த்தால், நீங்க மைக் கிடைச்ச அரசியல்வாதி மாதிரி நான் ஸ்டாப்பாக ரசிச்சி பாடிட்டு இருந்தீங்களா… எனக்கும் டைம் ஆச்சுன்னு கிளம்பிட்டேன். இப்போ இந்த ஹிஸ்டரி, ஜியாக்ராபி எல்லாம் தேவையா?” என்ற சம்யுக்தா பேச்சைக் கேட்டு, ஈஸ்வர் திகைத்தவாறு நின்றான்.

“ஹலோ!…. ஹலோ!… நின்னுட்டே தூங்கறீங்களா மிஸ்டர்?” என்றாள் சம்யுக்தா ஈஸ்வர் கண் முன்னே கைகளை ஆட்டி.

“சாரி… சாரிங்க தப்பாய் எடுத்துக்காதீங்க… இந்தக் காலத்து பொண்ணுங்களுக்கு, யார் மேல் எல்லாம் லவ்ஸ் வரும் என்று கண்டு பிடிக்கவே முடியாதுங்க… அதனால் தான் கன்பார்ம் செய்துக்கலாம் என்று….” என்றவனை என்ன செய்வது என்று சம்யுக்தாவிற்கு தெரியவில்லை. 

அதே சமயம் சம்யுக்தாவின் ப்ளூடூத் அழைப்பில் இருந்த ஹேமா, “ஹே!… யார் கூடப் பேசிட்டு இருக்கே சம்யு?… இன்னும் பத்து நிமிசத்தில் வந்துடுவோம். நீ எதுக்கும் பயப்படாதேடீ…” என்றாள்.

“உதவிக்குக் காலேஜ் ப்ரொபசர் ஈஸ்வர் வந்திருக்கார் ஹேமா… அதான் உன் க்ரஷ்… ஆட்டோகிராப் வாங்கணும் என்று என்னைப் படுத்திட்டு இருந்தியே !அதே சார் தான். நீ அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதே… உங்க அப்பாவை டென்ஷன் கிளப்பாம காரை ஓட்ட விடு …” என்றாள் சம்யுக்தா.

“யாரு மா?…” என்று மங்கி ஒலித்தது பல்தேவ் குரல்.

“எனக்கும் ஹேமாவுக்கு தெரிந்தவர் தான் அப்பா…. அந்த xxx கல்லூரி ப்ரொபசர் சார். நீங்கப் பதட்டப்படாதீங்கப்பா…” என்றாள் சம்யுக்தா தன் தந்தை பயப்படுவதை கண்டு.

பல்தேவிற்கு மைல்டு ஹார்ட் அட்டாக் வந்திருக்க, டாக்டர்கள் அவருக்கு டிரீட்மென்ட் அங்கே கொடுத்துக் கொண்டிருக்க, அதைச் சம்யுக்தா அறியவில்லை. அதை அறிந்த விக்ரம், ஹேமா சம்யுக்தாவை மேலும் பதட்ட படுத்த கூடாதே என்று அதைச் சொல்லவில்லை.

அதற்கு அந்த ஐந்து பேரும் அருகில் வந்து விட்டு இருக்க, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்தான் ஈஸ்வர்.

“சார்!…  இங்கே பாருங்க சார்…  இப்படி ஒரு பெண்ணைத் துரத்தி வருவது தப்பு சார்.” என்றான் ஈஸ்வர்.

“துரத்தி வந்தா தப்பாம்டா… அப்போ கையைப் பிடிச்சி இழுத்தா சரியா?… இல்லை உம்மா கொடுத்தா சரியா?” என்று அவர்கள் கிண்டல் அடிக்க, இப்பொழுது விழிப்பது ஈஸ்வர் முறையானது.

“இங்கே பாரு… பார்க்கப் பச்சை புள்ளை மாதிரி இருக்கே!… ஒரு அரை மணி நேரம், அமைதியா ஓரமா போய் நில்லு… அந்தப் பொண்ணு கூட, அதோ பாரு அந்த இடம் தெரியுது இல்லை… அங்கே தூக்கி போய், பேச்சு வார்த்தை நடத்திட்டு வரோம். அப்புறம் நீயும் கூடப் பேச்சு வார்த்தை நடத்திக்கோ…” என்றான் ஒருவன்.

“சார்!…” என்று பெண்கள் அலறுவதை விட ஈஸ்வர் அதிகமாய் அலறியவன்,

“சார்!…. நீங்கச் செய்ய நினைப்பதே தப்பு என்கிறேன்… இதில் என்னையும் தப்பு செய்யச் சொல்றீங்க…” என்று ஈஸ்வர், அழாத குறையாய் சொல்ல, சம்யுக்தா தன் நெற்றியில் தானே அடித்துக் கொண்டாள்.

‘Damsel in distress’ என்று தன்னை காக்க, எவனாவது, பிரின்ஸ் சார்மிங்/Prince charming’ வர வேண்டும் என்று சம்யுக்தா எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும், செயலியின் உபயத்தால், ஒருவன் வந்தானே என்று நினைத்திருக்க, அவனோ அவளின் ரத்த கொதிப்பை ஏற்றிக் கொண்டு இருந்தான்.

“டேய்!… ஆளைப் பாரு…. இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வருபவன் மாதிரி தெரியலையே!…” என்று ஈஸ்வரை கிண்டல் அடிக்க, விழித்துக் கொண்டு நின்ற ஈஸ்வரை பார்த்து, சம்யுக்தவிற்கு, எதிலாவது போய் மோதி கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

“இங்கே பாருங்க அண்ணன்களா… நான் எதுக்கு சரி பட்டு வரேன் மாட்டேன் என்பதெல்லாம் இப்பொழுது முக்கியம் இல்லை.  இந்தப் பொண்ணு அவங்க மொபைல் போனில்,  டிக் டாக் மாதிரி பெண்கள் பாதுக்காப்பு ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்து, நீங்க உங்க இசை கச்சேரியை ஆரம்பித்த போதே அதை ஆன் செய்துட்டாங்க.  நான் ஆபத்தில் இருக்கிறேன் என்று இவங்க சொன்னதும் அந்த ஆப் உங்க மூஞ்சை எல்லாம் போட்டோ பிடிச்சு போலீஸ் உட்பட நிறைய பேருக்கு வீடியோவையும் சேர்த்து அனுப்பிட்டே இருக்கு.

சோ,  எந்த நேரத்திலும் உங்கள் நண்பன் காவல் துறை இங்கே வந்து உங்களை எல்லாம் கோழி அமுக்குவது போல் அமுக்கி விடச் சான்ஸ் உண்டு. பெண்ணைப் பார்த்தாலும் பெரிய இடத்து பெண்போல் இருக்கு… சோ நிச்சயமா உள்ளே தூக்கி போட்டு டின் கட்டுவது உறுதி…. நம்பிக்கை இல்லை என்றால் பாருங்க…” என்றவன் அவர்கள் ஐவரையும் அந்தச் செயலி எடுத்திருந்த புகைப்படத்தை எல்லாம் காட்ட அவர்கள் ஒரு அடிபின் நகர்ந்தார்கள்.

“யோவ்!… அவனுங்களுக்கு இப்போ தான் உன்னைச் செயல் முறை விளக்கம் கொடுக்கலை என்று யார் அழுதது?  

 நீ என்ன இந்திய பிரதமர், அவனுங்க மத்த நாட்டு பிரதமர், அப்படியே G20 உச்சி மாநாட்டில் உலக நன்மைக்காகப் பேசிட்டு இருக்கீங்களா?… ஆளு பார்க்க,  சிக்ஸ் பாக் வச்சி, பாகுபலியில் வரும் அந்த எருமை மாடு மாதிரி தானே இருக்கே!… போய் அவனுங்களை அடித்துப் போடு…” என்றாள் சம்யுக்தா.

என்னவோ கொலை பண்ணு என்று சம்யுக்தா சொன்னதை போல் விழித்தவன், “மேடம்!… என்ன விளையாடுறீங்களா?… ஏதோ ஒருத்தர் என்றால் கூடச் சமாளிக்கலாம். ரெண்டு பேராய் இருந்தா, நீங்க ஒருத்தரை பார்த்துக்கும் போது, நான் ஒருத்தனை அடிக்கலாம். இங்கே ஐந்து பேர் இருக்கானுங்க.
நீங்கச் சொன்ன அந்த மாடு, நான் இல்லை. இவனுங்க தான்.

ஒவ்வொருத்தனையும் பாருங்க… ஏதோ தெலுங்கு படத்தில், பின்னால் வரும் வில்லன் அடியாளுங்க மாதிரி, ஜிம் பாடி வச்சிட்டு இருக்கானுங்க. இவனுங்க ஓங்கி அடிச்சா, பத்து டன் வெயிட் இருக்கும் போல் இருக்கு மேடம். ஐந்து பேரை ஜஸ்ட் லைக் தட் என்று அடித்துப் போட, இது சினிமாவும் இல்லை, கதையும் இல்லை மேடம்.

இதற்கெல்லாம் ஜாக்கிசான் தான் மேடம், சரி வரும்…  அவர் எங்கே இருக்காருன்னு தெரிஞ்சா, அவரை வரச் சொல்லி அதைப் பண்ண சொல்லுங்க. நான் சிக்ஸ் பாக் வைத்திருக்கிறேன் என்றால், அது தினமும் எக்ஸர்சைஸ் செய்வதால் மேடம்.  உடல் ஆரோக்கியத்திற்காக.  சிக்ஸ் பாக் வச்சவன் எல்லாம், அடி தடி செய்யறவன் இல்லை. சினிமாவில் சிக்ஸ் பாக் வச்ச ஹீரோக்கே, ஸ்டண்ட் மேன் தான் டூப்.

நிஜ வாழ்க்கையில் அவங்க கூட இப்படியெல்லாம் இத்தனை பேருடன், ஒண்டிக்கு ஒண்டி எல்லாம் சண்டை போட முடியாது.  அதுக்கு மார்சல் ஆர்ட்ஸ், தெரிஞ்சி இருக்கணும்.  அதுவும் ஆறு பேரை, ஒத்தையாளாக, மேல் தூசு கூடப் படாமல், அடித்துப் போடணும் என்றால், அதெல்லாம் நடக்கும் காரியமா மேடம்?…” என்று ஈஸ்வர் பேச, கடுப்பானாள் சம்யுக்தா.

“அப்போ நீ, அவனுங்களை அடிக்க மாட்டே!…  அப்படி தானே!…” என்றாள் சம்யுக்தா.

“மேடம்!… லூசா நீங்க?… ரியாலிட்டி என்ற ஒன்று இருக்கு… சும்மா ஹைப் செய்யச் சினிமாவில் காட்டுவதை, கதைகளில் வர்ணிப்பதை எல்லாம் பார்த்துட்டு, அதே அனல் பறக்கும் ஆக்ஷன் சீக்வென்ஸ் எல்லாம் என்னிடம் எதிர்பார்த்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும் மேடம்?… ஒண்ணு வேண்டும் என்றால் செய்ய முடியும் மேடம்…” என்றான் அவன்.

என்ன என்று சம்யுக்தா கேட்கவும் இல்லை, அவன் சொல்லவுமில்லை.

என்ன நடந்தது என்று சம்யுக்தா உணரும் முன், அவள் கையைப் பிடித்து இழுத்து கொண்டு, ஓட ஆரம்பித்து இருந்தான் ஈஸ்வர்.

ஓடியவர்களின் பின்னால், ‘அய்யோ!… அம்மா!…” என்று பலத்த அலறல் எழும்ப, என்ன, ஏது என்று பார்க்க முயன்ற சம்யுக்தாவை விடாமல் இருளில் இழுத்து ஓடினான்.

‘இவன் என்ன செய்தான், அவர்கள் எதற்கு அலறினார்கள்?…’ என்று ஒன்றும் புரியாமல், ஈஸ்வர் இழுத்த இழுப்பிற்கு ஓடிக் கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் அந்தப் பிராந்தியத்தில் அவர்கள் ஓடும் சப்தம் மட்டுமே கேட்க, பத்து நிமிடத்தில் அந்த ஹோட்டலின் கார் பார்க்கிங் வந்திருந்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இருவரும் கார் பார்க்கிங்கில் நின்று இருக்க, “நீங்க என்ன செய்தீங்க?… அவனுங்க எதுக்கு அப்படி அலறினாங்க?…” என்றாள் சம்யுக்தா என்ன நடந்தது என்று எவ்வளவு யோசித்தும் சம்யுக்தாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

அடுத்த நொடி ஈஸ்வர் சம்யுக்தாவின் கையைப் பிடித்து விசையோடு இழுத்திருக்க, மீண்டும் அவன் மார்பில் மோதி நின்ற சம்யுக்தா, அடுத்த நொடி ஈஸ்வரால், அவன் முதுகுப்புறமாய்  சுழற்றப்பட்டாள்.

சிறு வயதில் இருந்தே யோகா, நடனம் பயிற்சி இருந்ததால், ஈஸ்வரால் சுழற்றப்பட்டும், தன்னை சமாளித்து நின்றவள், ‘ அய்யோ!… அம்மா!… இவனுக்கு நம்மைப் பஞ்சர் செய்யறதே வேலையா போச்சே!…  யம்மா என்னமா வலிக்குது…  கற்பாறை மாதிரி உடம்பை வச்சிட்டு ஆவூன்னா நம்ம மேல் இடிச்சி நம்மை ஒரு வழி ஆக்குறானே!…’ என்று மனதிற்குள் சம்யுக்தா புலம்ப, அவள் கத்துவதற்கு பதில், பின்னால் இருவர் அலறும் சப்தம் கேட்டுத் திரும்பியவள், கண்கள் காண்பதை நம்ப முடியாமல் அகல விரிந்தது.

இருவர் தரையில் மயங்கிக் கிடந்தனர்.

அதற்குள் ஈஸ்வரின் நண்பர்கள் சிலர் ஓடி வர,  அவர்களுடன் அந்த ரிசார்ட் காவலாளிகளும் ஓடி வந்தனர்.

“ஈஸ்வரா!… என்னடா ஆச்சு?…” என்றான் வந்தவன்.

“ஒரு செயலி உருவாக்கினால் மட்டும் போதாது எருமை… அதை உருவாக்கிய உனக்கும் தானே மெசேஜ் வந்திருக்கும். உருவாக்கிய நீயே அதை கவனிக்காமல் விட்டால், இவங்களை போல் ஆபத்தில் சிக்குபவர்களை யார் தான் காப்பாற்றுவாங்க?” என்று எரிந்து விழுந்தான் ஈஸ்வர்.

“இல்லைடா… உள்ளே சத்தத்தில் எதுவும் கேக்கலை… அதான் உடனே உதவிக்கு வர முடியவில்லை.” என்றான் அவன்.

“ஹ்ம்ம்!…” என்று தன் மறுப்பை பதிவு செய்த ஈஸ்வர், இன்னமும் என்ன நடந்தது என்று விழித்து கொண்டு நின்ற சம்யுக்தாவை நெருங்கினான்.

“ஆர் யு ஆல்ரைட் மிஸ். சம்யுக்தா?” என்றான் ஈஸ்வர்.

தலையை மட்டும் அசைத்த சம்யுக்தா, மீண்டும் குழப்பத்துடன் ஈஸ்வரை நோக்க அவன் முகத்தில் புன்முறுவல் விரிந்தது.

“டாக்டர் மேடம்!… தற்காப்பு காலையில் முதல் பாடம் எது?” என்றான் சம்யுக்தாவின் குழப்பத்தை கண்டு கைகளை மார்பின் குறுக்கே கட்டி, கால்களை அகல விரித்து.

“எதிராளியை எப்பொழுதும் குறைவாய் எடை போடக் கூடாது.” என்றாள் சம்யுக்தா.

“ரெண்டாம் பாடம்?…” என்றான் ஈஸ்வர்

“தற்காப்பு என்பது பறந்து பறந்து சண்டை போடுவது இல்லை. ஆபத்தான சூழ்நிலையிவ் இருந்து நம்மை காத்து கொள்வது மட்டுமே .”என்றாள் சம்யுக்தா.

“மூன்றாம் பாடம்?” என்றான் ஈஸ்வர்.

“சும்மா நான்கு டெமோ கிளாஸ் போய்ட்டு, ப்ரூஸ் லிக்கு அக்கா, மிச்செல் யோக்கு தங்கச்சின்னு நினைச்சி சண்டை போடுறேன் என்று கிளம்ப கூடாது. அதிக சமயம் ஆபத்தில் இருந்து தப்பிப்பதே குறிக்கோளாய்  இருக்க வேண்டும்.” என்றாள் சம்யுக்தா மெல்லிய புன்னகையுடன் .

“நீங்க இதில் எதை சரியாக செய்தீர்கள் என்று பார்க்கலாமா?…”என்றான் ஈஸ்வர்.

“முதல் விஷயம் கண்ட செயலிகள் குப்பை மாதிரி போனில் வைத்திருப்பதை விட,  பெண்கள் பாதுக்காப்பு செயலியை வைத்திருந்தது நல்ல விஷயம். இங்கே நீங்க செய்த தவறு வெளியே வரும் போது கைப்பையோ அதில் ஸ்டன் கன், பேப்பர் ஸ்பிரே, குண்டூசி, ஹேர் கிளா, மிளகாய் பொடி வைத்திருக்காதது.

அடுத்து முன் பின் தெரியாதவங்க கிட்டே வந்தாங்க என்றதும் பதறாமல் செயலியை இயக்கி விட்டு,  உதவி வரும் வரை அந்த இடத்தில் இல்லமால் ஓட ஆரம்பித்தது. பீச் மணலில் துரத்தி வந்தவங்க ஸ்ட்ரெஸ் அதிகம் கொடுத்து ஓடி வர, ஈர மணலில் சுலபமாய் ஓடி வந்தது சரி.  இதுவே ரோட்டில் ஓடும் நிலை வந்தால்?…” என்றான் ஈஸ்வர்.

“எந்த வண்டியின் அருகேயும் ஓடக் கூடாது. யார் எந்த வண்டியில் இருப்பாங்க என்று தெரியாது. எனவே முடிந்த அளவு ரோட்டில் நிற்கும் எந்த வண்டியின் அருகேயும் செல்லக் கூடாது.” என்றாள் சம்யுக்தா.

“குட்… ஓநாய் ஆடுகளைப் பிரித்து அடிப்பது போல் துரத்தி வந்த ஆறுபேரில், ஒருவன் மட்டும் அருகே வந்ததும் அவனை அடித்து வீழ்த்தியது சரி. அப்போ எது இதில் நீங்கச் செய்த இன்னொரு தவறு?” என்றான் ஈஸ்வர்.

“உங்களை அவனுங்க கூடச் சண்டை போடச் சொன்னது?”என்றாள் சம்யுக்தா.

“ஏன் அது தப்பு?” என்றான் ஈஸ்வர்.

“நீங்க உதவிக்கு ஆட்கள் வரும் வரை அவங்களை பேசி டைவேர்ட் செய்ய ட்ரை செய்துட்டு இருந்தீங்க. அந்த ஆப் பற்றி அவங்களுக்கு சொன்னதும் அவங்க கிட்டே பயத்தை உருவாக்க தான். பயம் மனதில் வந்து விட்டால் சரியாக யோசிக்க மாட்டாங்க. தங்களுக்குள் விவாதம் செய்ய ஆரம்பிச்சாங்க…” என்றாள் சம்யுக்தா.

“ஏன் நீங்கச் சொன்னது போல் அவங்க ஐந்து பேரை நான் அடித்துப் போடவில்லை.?” என்றான் ஈஸ்வர்

“ஒருத்தன் கிட்டே கத்தி இருந்தது. இன்னொருத்தன் கிட்டே துப்பாக்கி இருந்தது. துப்பாக்கி வைத்திருப்பவனிடம் சண்டைக்கு, வெறும் கையில் போவது நல்லது இல்லை. துப்பாக்கியால் உங்களைச் சுட்டுட்டு,  உதவி வருவதற்குள் என்னை எது வேண்டும் என்றாலும் செய்திருக்க முடியும்.” என்றாள் சம்யுக்தா நடந்ததை மூன்றாவது ஆளின் மனநிலையிலிருந்து யோசித்து.

“இப்போ ஏன் ஓடி வந்தோம்?…” என்றான் ஈஸ்வர்.

“ஆயுதம் வைத்திருந்தவங்களை மட்டும் நீங்க என்னவோ செய்து அவங்களை அங்கேயே அலற வச்சுட்டு,  என்னைக் கூட்டிட்டு ஓடி வந்தீங்க… மீதம் உள்ள ரெண்டு பேர் நம்மைத் துரத்தி வந்தவங்களை இங்கே அடிச்சு போட்டுடீங்க ” என்றாள் சம்யுக்தா.

“நீங்கக் கடை பிடித்த அதே ஆடு, ஓநாய் டெக்னிக்  தான். நீங்க ஆறினை ஐந்து ஆக்கினீங்க. நான் ஐந்தை ரெண்டாக்கி விட்டேன். இப்போ சொல்லுங்க நான் பாகுபலியில் வரும் மலை மாடு தானா?…  இல்லை என்னையும் நீங்க ஹீரோவா ஏத்துக்க கன்சிடர் செய்வீங்க தானே டாக்டர் மேடம்?” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன் .

சம்யுக்தாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

ஈஸ்வர் செய்த ஒவ்வொன்றிற்கும் காரணம் பிடிபட, அவள் முகத்தில் மெச்சுதலாய் ஒரு புன்னகை விரிந்தது. அவன் சமயோஜித புத்தி மேல் மரியாதை தானாய் பிறக்க, அதை ஈஸ்வர் கண்கள் கண்டு கொண்டது. 

பேசி மற்ற ஐவரின் கவனத்தை திசை திருப்பி, அதில் மூவரை பீச்சில் வீழ்த்தி, தன்னை இழுத்து கொண்டு ஓடி வந்தவன், மீதம் இருந்த இருவரை, ‘Muay Thai’ என்ற தற்காப்பு கலை கொண்டு வீழ்த்தி இருந்தான்.

“முய் தாய்… முழங்கை மற்றும் முழங்கால் குறி வைத்துத் தாக்கும் முறை. தாய்லாந்தின் புகழ்பெற்ற ‘ஆர்ட் ஆஃப் எட்டு மூட்டுகள்/Art of Eight Limbs’ வகையைச் சார்ந்தது. முழு தொடர்பு தற்காப்புக்கான இந்த மிருகத்தனமான வடிவம் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொன்பாங் வம்சத்தின் பர்மியருக்கும் சியாமுக்கும் இடையிலான போர்களில் உருவாக்கப்பட்டது.” என்று  விளக்கம் ஈஸ்வர் கொடுக்கச் சம்யுக்தாவின் விழிகள் விரிந்தது.

இது தான் வெளித்தோற்றத்தை கண்டு ஒருவரை எடை போடக் கூடாது என்பது.

ஈஸ்வர் சொன்னதும் அதே தான்.

ஒருவர் செய்யும் காரியத்தில் ஆயிரம் உள் அர்த்தம் இருக்கும் என்பது.

“ஹீரோ தான் ப்ரொபசர் சார் நீங்க…” என்றாள் சம்யுக்தா புன்னகையுடன்.

“சோ நோ மலை மாடு… அழகான தேவதை மாதிரி ஒரு பொண்ணு என்னை அத்தனை பேருக்கு முன்னாடி அப்படி சொன்னதும்… என் லிட்டில் ஹார்ட்… சின்ன இதயம் உடைஞ்சி போச்சு…” என்றான் ஈஸ்வர் போலி பெருமூச்சுடன்.

“ஆணழகன் என்று பட்டம் வேண்டும் என்றால் கொடுக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யட்டுமா ப்ரொபசர்?” என்றாள் சம்யுக்தா அடக்கப்பட்ட புன்னகையுடன்.

“அதெல்லாம் எதுக்குங்க?… வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல், உங்க அழகான உதடு என்னை ஆண் அழகன் என்று சொன்னதே போதும்… வேறு என்ன வேண்டும்?” என்றான் ஈஸ்வர் உதட்டைக் கடித்து.

‘அய்யோ!… எல்லா பாலிலும் சிக்ஸர் அடிக்கிறானே… ‘ என்று சம்யுக்தாவின் கண்களில் மின்னல் வர, அதைக் கண்டு கொண்ட ஈஸ்வர் கண்கள் பதிலுக்கு மின்னியது.

இது எல்லாவற்றையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது. 

ஆட்டம் தொடரும்.

Written by

அன்புள்ள சகோதர/ சகோதரி, உங்கள் நட்பு கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள். என் பெயர் அனிதா ராஜ்குமார்.கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழ் கதாசிரியராக இருக்கிறேன். அமேசான் கிண்டல், sm tamilnovels தளத்தில் என் எழுத்துக்களை நீங்கள் படிக்கலாம். எனக்குத் திருமணம் ஆகி விட்டது.கணவர் MR. B. ARUN KUMAR BALAKRISHNAN superintendent, INTELLIGENCE WING, MINISTRY OF FINANCE/ uniformed officer ஆக மத்திய சர்காரில் பணி புரிகிறார். அதங்கோ மத்திய அரசாங்கத்தின் காவல் துறை என்று கூடச் சொல்லலாம். சொந்த ஊர் காஞ்சிபுரம். என் முதல் நாவல் 'என்ன தவம் செய்தேன் ' ஹியூமன் டிராபிக் பற்றியது, என் நான்காவது நாவல், ஆசிட் அட்டாக் victim பற்றியது 'சமர்ப்பணம்' ரெண்டிற்கும் சிறந்த தமிழ் நாவல் ஆசிரியர் என்ற விருதாய், துருவ நட்சத்திரம் என்ற விருது ஆன்லைன்னில் வழங்கப் பட்டது. இது வரை ஐந்து நாவல்கள் எழுதி உள்ளேன். 1.என்ன தவம் செய்தேன் 2. காஞ்சி தலைவன் 3.ஊரு விட்டு ஊரு வந்து 4.சமர்ப்பணம் 5.உயிரோடு விளையாடு -முத்த பாகம் 6.உயிரோடு சதிராடு - விரைவில் ஆரம்பிக்கப் படும். இதுவரை அமேசானில் 3 நாவல் ebook வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் மூன்று நாவல் விரைவில் வெளியிடப்படும். நீங்கள் நீட்டிய நட்புக்கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதர/ சகோதரி. https://www.amazon.in/ANITHA-RAJKUMAR/e/B082S9C6Y5?ref=sr_ntt_srch_lnk_1&qid=1634620509&sr=8-1 அன்புடன் உங்கள் சகோதரி Mrs.அனிதா ராஜ்குமார். (tamil novelist-amazon kindle and smtamilnovels.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!