உருகிடும் உயிர்மெய்கள் இறுதி பதிவு

IMG-20210305-WA0007-d9685b4b

அத்தியாயம் – 7  

 

மேலும் நான்கு நாட்கள் நரகமாய் விரைந்து சென்றிருக்க, அதிகாலையிலேயே வெகு சந்தோஷமான செய்தியைத் தாங்கி புகழின் அலைபேசி அழைப்பு வந்தது ரவிக்கு.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் போது விமான நிலைய காவலர்களால் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக திருச்சி வாருங்கள் என்ற புகழின் அழைப்பைத் தொடர்ந்து அனைவருமே திருச்சிக்கு விரைந்தனர்.

ஏர்போர்ட் வளாகத்தில் இருந்த காவல் நிலையத்தில் நுழையவுமே, நேத்ராவின் பார்வை குழந்தையைத் தேடி அலைபாய ஆரம்பித்தது.

முகம் தெரியாத பெண்மணி ஒருவரின் கையில் இருந்த குழந்தையைக் கண்டதும் ஓடிச்சென்று வாரி அணைத்துக் கொண்டவள் முத்தமழை பொழிய, கிட்டத்தட்ட ஒரு வாரமாகத் தாயைக் காணாமல் ஏங்கிப் போயிருந்த குழந்தையும் “ம்மா” என்ற  கதறலோடு அவளைக் கட்டிக் கொண்டது.

“பூஜா…” பெருங்குரலெடுத்து அழுகையோடு மகளைக் கட்டிக்கொண்டு நேத்ராவும் மடிந்து தரையில் அமர்ந்து அழுகையில் கரைய, பார்த்திருந்த அனைவருக்குமே நெகிழ்ச்சியாய் இருந்தது.

குழந்தையின் தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டு, அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றப் பட்டிருக்க, ஆண்பிள்ளை போன்று உடை அணிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தையின் உடலைத் தடவித் தடவிப் பார்த்து கட்டிக் கொண்டவள், “அம்மாகிட்ட வந்துட்டியா செல்லம். அம்மாவ விட்டு எங்கடா போன?” அரற்ற…

உதட்டை பிதுக்கி, “ம்மா காணோம்…” என மழலையில் மிழற்றிய குழந்தை அனைவரின் மனதையும் பாரமாக்கினாள்.

குழந்தையைப் பார்த்த சந்தோஷமே ரவியை சற்று தெளிவாக்க, கண்ணீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்டவன், பிள்ளையை நோக்கி கைநீட்ட, தந்தையிடமும் தாவிக் கொண்டாள் பூஜா.

 தந்தையிடமும் தாத்தா பாட்டியிடமும் மாற்றி மாற்றி தாவி செல்லம் கொஞ்சிவிட்டு மீண்டும் தாயிடமே தாவிய குழந்தை, நேத்ராவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அங்கே ஓரமாய் கண்களில் கண்ணீரோடு நடப்பவைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த பெண்மணியைப் பார்க்க,

அதுவரை அந்த பெண்மணியை கவனிக்காதவர்கள் அவரைப் பார்த்தனர்.

குழந்தையை ஹைதரபாத்துக்குக் கடத்த முயன்ற குற்றத்துக்காக அந்த பெண்மணியையும் அவளது கணவனையும் கைது செய்திருந்தனர் விமான நிலைய போலீசார்.

போலி ஆவணங்களைத் தயார் செய்து குழந்தையை சட்ட விரோதமாக அவர்களுக்குத் தத்துக் கொடுத்திருந்த தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்றையும் சுற்றி வளைத்திருந்தனர்.

“திருச்சியை அடுத்த மணப்பாறையில இருந்த அந்த போலி குழந்தைகள் காப்பகத்துக்குத்தான் பூஜாவைக் கடத்தின கும்பல் அவளை பணத்துக்காக வித்திருக்காங்க ரவி. காணமப் போன அன்னைக்கு நைட்டே திருச்சிக்கு வந்திருக்கு குழந்தை.

அடுத்த ரெண்டு நாள்ல மலேஷியாவைச் சேர்ந்த இந்த தம்பதிகளுக்கு சட்ட விரோதமா போலி ஆவணங்களைத் தயார் செய்து குழந்தைய தத்துக் கொடுத்திருக்காங்க.

இவங்க குழந்தைய தத்து எடுக்கறதுக்காகவே இந்தியாவுக்கு வந்திருக்காங்க.”

புகழ் கூறவும் திக்கென்ற அதிர்ச்சியோடு அந்தப் பெண்மணியைப் பார்த்த நேத்ரா, பூஜாவை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

“குழந்தை கடத்தப்பட்ட செய்தி பெரிய அளவுல மீடியாவுல பரவவும் உடனடியா அவங்களால தமிழ்நாட்டை விட்டுப் போக முடியல.

அதனால போலீஸ் கெடுபிடி கொஞ்சம் குறையட்டும்னு ஒரு வாரம் வெயிட் பண்ணி, குழந்தையோட அடையாளத்தை மாத்தி, குழந்தையோட நல்லா பழகி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில விமானத்துல ஹைதராபாத் போயிட்டு அங்க இருந்து மலேஷியா போக திட்டம் போட்ருக்காங்க.

ஆனா குழந்தையோட தகவல்களை நாங்க இந்தியா முழுக்க எல்லா ஏர்போர்ட், ரெயில்வேனு அனுப்பியிருந்தோம். ஏர்போர்ட்ல செய்த  சோதனையில மாட்டிக்கிட்டாங்க.

கடவுள் அருளால குழந்தை எந்தவிதமான பாதிப்பும் இல்லாம மீட்கப்பட்டது.” புகழ் விபரங்களைக் கூற,

“சென்னையில கார்ல இருந்து குழந்தையை கடத்துனது யாரு?”

“அது இன்னும் தெரியல ரவி. இங்க அந்த குழந்தைகள் காப்பக நிறுவனரை கைது செய்திருக்கோம். அவங்ககிட்ட விசாரணை நடந்துகிட்டு இருக்கு.

அவங்களுக்கு குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்தது யார்னு தெரிய வந்தா அதன்மூலமா அந்த கும்பலை வளைச்சு பிடிக்க முடியும்.

இதுவரை ஏகப்பட்ட குழந்தைகள் இந்த நிறுவனம் மூலமா தத்து கொடுக்கப்பட்டிருக்கு. அதோட விபரங்கள் எல்லாமே விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க.”

குழந்தை இல்லாத கொடுமைக்கு தத்தெடுக்க நாடுவிட்டு நாடு வந்து போலீசில் மாட்டிக் கொண்ட அதிர்ச்சி ஒருபுறம், தத்து எடுத்த குழந்தையாய் இருந்தாலும் ஒரு வாரமாய் தன் குழந்தை போல பார்த்துக் கொண்ட பூஜாவைப் பிரியும் ஏக்கம் ஒருபுறம், நேரடியாய் கண்முன்னே பார்த்த பெற்ற தாய் பிள்ளையின் பாசம் தந்த நெகிழ்வு ஒருபுறம் என கலவையான மனநிலையோடு நின்றிருந்தார் அந்தப் பெண்மணி.

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு ஏக்கத்தோடு பூஜாவையேப் பார்த்திருந்தவரைக் காண்கையில் பாவமாய் இருந்தது.

“குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தைகளை தத்து எடுத்துக்க இந்த மாதிரி போலியான சோஷியல் சர்வீஸ் சென்டரை தேடி வர்றது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

முறையான ஆவணங்களோட அரசு காப்பகங்கள்ல சட்டப்படி தத்து எடுக்கறதுதான் நல்லது.

இந்த மாதிரி சட்டவிரோதமா தத்துக் கொடுக்கப்படற குழந்தைகள் எல்லாமே எங்கோ ஒரு இடத்துல பெத்த தாய்கிட்ட இருந்து பறிச்சு வரப்பட்ட குழந்தைகள்தான். இது எவ்வளவு பெரிய பாவம்.?”

புகழ் கூறவும் மௌனமாய் ஆமோதித்து தலை குனிந்தார் அந்தப் பெண்மணி.

“பிறந்த சில மணி நேரங்கள் தாண்டாத பச்சிளம் குழந்தைகள் கூட கடத்தப்படறாங்க. பெற்ற தாய் யாருங்கறதே தெரியாம எங்கயோ ஒரு இடத்துல அந்த குழந்தைகள் வளர்றது எவ்வளவு பெரிய கொடுமை?

அந்த குழந்தைகளை பறிகொடுத்த பெத்தவங்க எவ்வளவு பாவம்?

பூஜா விஷயத்துல உடனடியா காவல்துறையை அனுகியதாலயும், விரைந்து நடவடிக்கை எடுத்ததாலயும்தான் குழந்தையை எங்களால மீட்க முடிஞ்சது.

அரசு மருத்துவமனைகள்லயும் பிளாட்பாரத்தில வசிக்கிறவங்க கிட்டேயும் திருடப்படற குழந்தைகள்ல பாதிகூட மீட்கப் படறதில்ல.

தாமதமா எங்களுக்கு வர்ற புகர்களை நாங்க விசாரணைக்கு எடுக்கறதுக்கு முன்னவே குழந்தைகள் நாடுகடத்தப்படறாங்க. இது ரொம்பவே வெட்கக்கேடான உண்மை.”

புகழ் சொல்லச் சொல்ல மனதில் பெரும் பாரமேறியது அனைவருக்குமே.

காவல்நிலைய நடைமுறைகள் முடிந்தபிறகு குழந்தையோடு கிளம்பியவர்களைப் பார்த்த அந்த பெண்மணி மெல்லிய குரலில், “ஒ… ஒரே ஒரு தடவை குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக்கவா?” ஏக்கத்தோடு கேட்டவரைப் பார்க்கையிலும் பாவமாய் இருந்தது.

சிறு பிஞ்சுகளைக்கூட விட்டுவைக்காமல் நாட்டில் நடக்கும் எண்ணற்ற கொடுமைகளைப் பார்க்கையில் தன் குழந்தை எங்கே எப்படி சிக்கிக் கொண்டு கஷ்டப்படுகிறதோ என்ற பதைபதைப்போடு இருந்தவர்களுக்கு, ஒரு வாரமும் இவரின்  அரவணைப்பில் பாதுகாப்பாகத்தான் இருந்தது என்ற நினைவே சிறிது ஆசுவாசத்தைக் கொடுத்திருந்தது.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவரருகே  நேத்ரா செல்லவும், அந்தப் பெண்மணி பூஜாவை நோக்கி வாவென்பது போல கைகளை நீட்ட, பெற்றவளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு ஒரு வாரம் வளர்த்த அன்னையிடம் தாவினாள் பூஜா.

கொண்டாடும் இடத்தில் மட்டுமே குழந்தை  செல்லும். அந்த பெண்மணியிடம் தயக்கமின்றி பூஜா சென்றதே, இந்த குறுகிய காலத்திலேயே அவர் எவ்வளவு தூரம் பூஜாவின்மீது பிரியத்தைக் காட்டியிருக்ககூடும் என்பதை புலனாக்கியது.

பிள்ளையை வாரியெடுத்து முத்தமிட்டு அணைத்துக் கொண்ட அந்த பெண்மணியின் கண்களிலும் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

“கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருஷமா குழந்தை இல்ல. செய்யாத வைத்தியம் இல்ல. எதுவுமே பலனளிக்கலைங்கறப்ப குழந்தை ஒன்னை தத்தெடுக்கலாம்னு முடிவு பண்ணோம்.

ஆனா வெளிநாடுகள்ல நாங்க நினைச்சதை விட அது ரொம்ப கஷ்டமான விஷயமா இருந்தது.

இந்தியாவுல ஈசியா தத்தெடுக்கலாம்னு சொன்னதால இங்க வந்தோம். உங்க குழந்தையை தாய் தந்தை இல்லாத குழந்தைனு சொல்லிதான் முதல்ல எங்களுக்கு காட்டினாங்க.

பார்த்ததுமே ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்போல அவ்வளவு பிடிச்சுப் போச்சு எங்களுக்கு. அவங்க கேட்ட பணத்தைக் கொடுத்து குழந்தையைத் தத்தெடுக்க முடிவு பண்ணோம்.

ஆனா அதுக்கு அப்புறம்தான் இது கடத்தி வரப்பட்ட குழந்தைன்னு தெரிய வந்துச்சி.

நாம செய்யறது சட்டவிரோதம்னு ஒருபக்கம் மனசு உறுத்தினாலும், குழந்தையையும் விட்டுக்கொடுக்க மனசில்ல எங்களுக்கு…

செய்யறது தப்புன்னு தெரிஞ்சேதான் குழந்தையோட நாட்டைவிட்டு போக முடிவு பண்ணோம். தப்புதான்… குழந்தை மேல இருந்த ஆசையில இப்படி பண்ணிட்டோம்.” அந்தப் பெண்மணியின் கணவர் கையெடுத்துக் கும்பிட,

“…”

“கொஞ்ச நாள் என்கூட இருந்திருந்தாலும் என்னோட தாய்மையை எனக்கு முழுசா உணர்த்தியது பூஜாதான். ஒரே ஒரு வாரம் பழகின எனக்கே குழத்தையைப் பிரிய இவ்வளவு கஷ்டமா இருக்கு… பெற்ற தாயைவிட்டு நிரந்தரமா பிரிக்க நினைச்சேனே…!

எவ்வளவு பெரிய பாவம் செய்யத் தெரிஞ்சேன்னு இப்பதான் புரியுது. என்னை மன்னிச்சிடுங்க.”

கண்ணீரோடு இறைஞ்சியவரை ஆதங்கமாய் பார்த்த நேத்ரா எதுவுமே சொல்லத் தோன்றாமல் மௌனமாய் பிள்ளையை வாங்கிக் கொண்டு வெளியேறினாள்.

“நீங்க கூட வர்றீங்களா புகழ்?”

“இல்ல நீங்க பத்திரமா குழந்தையைக் கூட்டிட்டு போங்க. மீதி ஃபார்மாலிட்டி எல்லாம் நான் சென்னை வந்ததும் பார்த்துக்கலாம்.

அந்த காப்பகத்துல இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்துக் கொடுத்திருக்காங்க.

அந்தவிபரங்களை விசாரிக்கனும். முறையில்லாம தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு உரியவங்ககிட்ட ஒப்படைக்கனும்.

சட்டவிரோதமா நடத்துற அந்த காப்பகத்துல இருக்கற குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாத்தனும்.

இனிதான் எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு.”

புன்னகைத்த புகழின் கரங்களை நெகிழ்வான மனதோடு பற்றிக் கொண்ட ரவீந்தர்,

“தேங்க்ஸ் புகழ். நிச்சயமா நீங்க இல்லைனா என் குழந்தை என்கிட்ட வந்திருக்காது. உங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.”

“இது என் கடமை ரவி. குழந்தைகள் கடத்தலைத் தடுக்க எங்களால முடிஞ்ச நடவடிக்கைகளை நாங்களும் எடுத்துகிட்டுதான் இருக்கோம்.

ஆனா எங்களை மீறியும் சில விஷயங்கள் நடக்கதான் செய்யுது. பூஜாவை நல்லபடியா மீட்க முடிஞ்சதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இனியாவது குடும்பம் குழந்தைனு கவனம் முழுக்க அவங்க மேல வைங்க.” தோளில் தட்டி புகழ் விடைகொடுக்க,

மெல்லிய சிரிப்போடு ஆமோதித்தவன் புகழிடம் விடைபெற்றுக் கொண்டான்.

ஹைவேயில் சீராக ஓடிக் கொண்டிருந்த வண்டியில் ரவியின் கையணைப்பில் இருந்த நேத்ராவின் மார்பில் படுத்து சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தாள் பூஜா.

ரவீந்தரின் மீதான நேத்ராவின் அடிப்படைக் கோபம் இனி வரும் காலங்களில் அவனது நடவடிக்கைகள் மட்டுமே ஆற்றக்கூடும்.

ஆயிரம் கோபம் அவன் மீதிருந்தாலும், பிள்ளைக்கான அவனது துடிப்பையும் தவிப்பையும் நேரில் கண்டதில் இருந்தே அவன்மீதான நம்பிக்கை லேசாய் மீண்டிருந்தது அவளுக்கு.

ஒரு வாரகாலமாய் உறக்கம் தழுவாத விழிகளை மூடி மெல்ல ரவியின் தோளில் சாய்ந்து கொண்டாள் நேத்ரா.

அஜாக்ரதையால் இழக்கவிருந்த குடும்பம் மீண்டும் கைசேர்ந்ததில் மனம் நிறைந்து போயிருந்தது ரவீந்தருக்கு. மனைவியையும் மகளையும் ஒருசேர அணைத்துக் கொண்டான்.

இங்கே மீட்கப்பட்டது ஒரு பூஜா மட்டுமே…! வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பூஜாக்கள் மீட்கப்படாமல் பெற்றவர்கள் தேடித் தவிப்பதே நிதர்சனம்…!

நம் கண்முன்னே நிகழாதவரை குழந்தைகள் கடத்தல் நமக்கு நாளிதழ்களில் படிக்கும் செய்தி மட்டுமே…!  

நாள்தோறும் எங்கோ ஓரிடத்தில் தொலைந்து கொண்டிருக்கும்  உயிர்மெய்கள் இறுதிவரை தாய்முகம் காணாமல் உருகிப்போவதும் நெஞ்சை உருக்கும் உண்மையே…!

தம் சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வாழும் மனசாட்சியற்ற  மனிதர்கள் இருக்கும் வரை பூஜாக்கள் தொடர்கதையே…!

                    …………………………….முற்றும்…………………………….