உருகிடும் உயிர்மெய்கள் 5

IMG-20210305-WA0007-9410f792

அத்தியாயம் – 5   

 

ப்ரீத்தியும் அவளது கசின் பிரதரான சர்வேஷூம் காவல்துறையிடம் மாட்டியதும், போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் குழந்தையைப் பற்றி எதையுமே வாய் திறக்க மறுத்தவர்கள் போலீசின் அதிரடி விசாரணையில் குழந்தையைக் கடத்தியதை ஒத்துக் கொண்டனர்.

புகழ் அறைந்த ஒரு அறையில் உதட்டோரம் கிழிந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்த சர்வேஷ் மெதுவாக நடந்ததைக் கூறிக் கொண்டிருந்தான்.

அருகே தேம்பலும் அழுகையுமாய் ப்ரீத்தி. வெளிநாட்டில் இருந்த அவளது பெற்றோருக்குத் தகவல் சொல்லப்பட்டதில், மகளின் செய்கையை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து போனவர்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தனர்.

நல்ல வசதியான குடும்பம் ப்ரீத்தியுடையது. வெளிநாட்டில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த போதும் செல்லமாய் வளர்த்த ஒற்றை மகளின் ஆசைக்காய் அவளை சென்னையில் தங்கி வேலை பார்க்க அனுமதித்திருந்தனர்.

பின்னாளில் தங்களது நிறுவனத்தை நிர்வகிக்க அவளுக்கு இது பயிற்சியாய் இருக்கும் என்பது அவர்களது எண்ணம்

ப்ரீத்தி தனது அத்தையின் வீட்டில் தங்கியிருக்க, அவளது சமவயது அத்தை மகன்தான் சர்வேஷ்.

ரவீந்தரை பயப்படச் செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு அவர்கள் அறிவின்றி செய்த ஒரு செயல் தங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கறது என்ற வேதனை அவளைத் தின்று கொண்டிருந்தது.

ரவீந்தர் ஜெகன் ப்ரீத்தி மூவருமே ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். மேலும் சில நணபர்களும் அலுவலகத்தில் அவர்களுக்கு உண்டு.

ஒன்றாய் ஊர்சுற்றுவதும், பார்ட்டிகளில் குதூகலிப்பதும் கார்ப்பரேட் கலாசாரத்தில் தவிர்க்க முடியாத அங்கமாகிப் போனதில், இவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆரம்பத்தில் நல்ல நட்போடு ரவீந்தருடன் பழகியவளுக்கு நாளடைவில் நட்பு ஈர்ப்பாகி காதலாகிப் போனது.

ஒற்றையாய் செல்லமாய் வளர்ந்தவளுக்குத் தான் திருமணமாகி குழந்தையோடு இருப்பவனைக் காதலிப்பது தவறு என்று உறைக்கவில்லை.

ஆசைப்பட்ட அனைத்தையுமே அடைந்து, மனதில் தோன்றியதுமே அனைத்தையும் செய்து பழக்கப்பட்டவளுக்கு, ரவீந்தரிடம் காதலை உரைப்பதும் அத்தனை கஷ்டமாய் இருக்கவில்லை.

எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களது அலுவலகத்திலேயே காதலர் தினத்தன்று எல்லோர் முன்னிலையிலும் கட்டியணைத்து முத்தமிட்டு காதலைச் சொல்லியிருந்தாள்.

அதற்குமுன்பே ப்ரீத்தியின் நடவடிக்கைகளில் மாறுபாடு ரவீந்தருக்குத் தெரிந்திருந்த போதும், வெளிநாட்டில் வளர்ந்த பெண் சற்று சோஷியலாக இருக்கிறாள் என்று எண்ணியிருக்க, அவள் அத்தனை பேரின் முன்பும் காதலைச் சொன்னது ரவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

நிதானமாக அவளிடம், தான் திருமணமாகி குழந்தையோடு இருப்பவன் என்பதை புரிய வைக்க முயல, அவள் புரிந்து கொள்ள மறுத்ததோடு இன்னும் தீவிரமாகத்தான் அவனை நெருங்கத் துவங்கினாள்.

நல்ல வசதியான பின்புலம் உடைய பெண், அதுவும் பேரழகி, எத்தனையோ ஆண்கள் அவள் தங்களோடு பேச மாட்டாளா என்று தவமிருக்க, வலிய வலிய வந்து தன்னிடம் காதலைச் சொன்னது மட்டுமில்லாமல், அந்தக் காதலில் பிடிவாதமாய் இருப்பது இனம்புரியாத போதையை ரவீந்தருக்குள் ஏற்படுத்தியது என்னவோ நிஜம்தான்.

ஆனால் காதலித்துக் கட்டிய மனைவியும், காதலில் விளைந்த குழந்தையும், ஒழுக்கமான பெற்றோரின் வளர்ப்பும் அவனைத் தடம் மாற விடவில்லை.

அதே நேரத்தில் ப்ரீத்தி அவ்வாறு தன்னைக் காதலிப்பதாய் சொல்லிப் பின்தொடர்வதும் பிடித்திருந்தது. கர்வமாய் உணர வைத்தது.

நான் திருமணமானவன் என்னைக் காதலிப்பதோ திருமணம் செய்வதோ சாத்தியப்படாது என்று ப்ரீத்தியிடம் வாய் வார்த்தையாகக் கூறினாலும், அவளது அருகாமையை மனம் விரும்பித் தடுமாறியதும் நிஜம்.

 ஆனால் அவனுள் இருந்த சில சதவிகித நல்லவன், அவளைத் தவிர்த்துவிடுவதே உன் எதிர்கால வாழ்வுக்கு நல்லது என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டேயிருந்தான். மதில்மேல் பூனையின் நிலையில்தான் இருந்தான் ரவீந்தர்.

முன்தினமும் அத்தனை முறை அழைத்து எங்கிருக்கிறாய், என்னோடு நேரம் செலவழிக்க வா என்று ப்ரீத்தி கெஞ்சியிருக்க, அவளை அப்படி கெஞ்ச விடுவதுகூட பிடித்திருந்தது அவனுக்கு.

நண்பர்கள் முன் ஒரு பந்தா. நானாய் தேடிப் போகவில்லை அவளாய் வருகிறாள் பார் என்று காட்டிக்கொள்ள நினைக்கும் சராசரி ஆண்மனம்.

கிட்டே வராதே! எட்டி நில்! அதற்கான ஆள் நானில்லை என்பதை ரவீந்தர் அழுத்தம் திருத்தமாய் புரிய வைத்திருந்தால் ப்ரீத்தி ஒருவேளை விலகிப் போயிருக்கலாம். அதைச் செய்யாதது முழுக்க முழுக்க ரவீந்தரின் தவறு.

எதற்குமே பிடி கொடுக்காமல் அலைக்கழிக்கும் ரவீந்தரின் மீதான கோபம், அவனோடு நெருங்கிப் பழக முடியாத எரிச்சல் என்று இருந்தவள் எதிர்பாராமல் கடற்கரையில் ரவீந்தரின் மனைவியையும் தூரத்தே விளையாடிய அவனது குழந்தையையும் பார்த்ததும் விபரீத விளையாட்டை கையிலெடுத்தாள்.

தனக்கு போக்கு காட்டும் ரவீந்தரை ஒருநாள் இரவாவது குழந்தையைக் காணாமல் தவிக்க விட வேண்டும் என்று எண்ணியவள், தனது கசின் சர்வேஷை வரவைத்து அவன் மூலமாக குழந்தையைத் தூக்கி வரச்செய்தாள்.

முதலில் இதெல்லாம் தவறு என்று எடுத்துரைத்த சர்வேஷையும் பேசிப்பேசியே கரைத்திருந்தாள்.

“குழந்தைய நாம என்ன பண்ண போறோம் சர்வா? ஜஸ்ட் அஞ்சாறு மணிநேரம் வச்சிக்கப் போறோம். அந்த ரவீந்தர் குழந்தையக் காணாம தேடித்தவிக்கனும். அவ்ளோதான்.

அப்புறமா குழந்தைய நாமதான் கண்டுபிடிச்ச மாதிரி கொண்டு போய் குடுத்திடலாம். இதனால அவன் மனசுக்குள்ள நான் நுழையவும் ஒரு வாய்ப்பா இருக்கும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுடா.”

திட்டப்படி அச்சுப் பிசகாமல் குழந்தையைத் தூக்கியது வரை சரிதான். ஆனால் வீறிட்டு கதறி அழும் குழந்தையை சமாளிக்க முடியவில்லை இருவராலும்.

“என்னடா இது இந்த குழந்தை இப்படி அழுதுகிட்டே இருக்கு. என்ன செய்யறதுன்னே தெரியலயே.” கையில் தங்காமல் வீறிட்டு அழுத குழந்தையைப் பார்த்து ப்ரீத்தி கூற,

“அவங்க அம்மாவ விட்டு தூக்கிட்டு வந்தா அழாம என்ன பண்ணும்? அதுக்கு பசிக்கிதோ என்னவோ? எதாவது ஷாப்பிங் மால்ல காரை நிறுத்து பிஸ்கட் சாக்லேட் எதாச்சும் வாங்கலாம்.”

“இப்படி கதறி அழுகற குழந்தைய எங்க ஷாப்பிங் மால்க்கு கூட்டிட்டு போக முடியும். யாருக்காவது சந்தேகம் வந்துச்சி தொலைஞ்சோம்.”

“இரு அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.”

“என்னடா பண்ணப் போற?”

ப்ரீத்தி காரை ஓட்டிக் கொண்டே வினவ, தான் அருந்துவதற்காக வைத்திருந்த மதுபுட்டியில் இருந்து சிறிதளவு மதுவை கத்திக்கதறும் குழந்தைக்கு புகட்டியிருந்தான் சர்வேஷ்.

“டேய் என்னடா பண்ற? குழந்தைக்குப் போய் எதைக் குடுக்குற சனியனே? எதாவது ஆகப்போகுது.”

“ஒன்னும் ஆகாது. பாப்பா கொஞ்ச நேரத்துல தூங்கிடும். நாம கார்லயே அதை படுக்க வச்சிட்டு. வேணுங்கறதை வாங்கிட்டு வந்துடலாம்.”

அழுத சோர்வும் புகட்டிய மதுவும் குழந்தையை மயங்க வைக்க, காரில் படுக்க வைத்தவர்கள், ஷாப்பிங் மாலுக்கு சற்று தொலைவில் இருந்த ஆளரவமற்ற சாலையில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு மாலுக்குச் சென்றனர்.

குழந்தைக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு, இருவரும் உணவு உண்டுவிட்டு திரும்ப வந்து பார்க்கும்போது காரில் இருந்த குழந்தை காணாமல் போயிருந்தது.

குழந்தைக்கு காற்றோட்டம் வேண்டுமென்று கார் ஜன்னலை சற்று இறக்கி வைத்துவிட்டு சென்றிருந்தனர். ஆகவே எளிதாய் கார் கதவு திறக்கப்பட்டு குழந்தை களவு போயிருந்தது.

என்ன செய்வது என்று புரியாமல் பயந்து போனவர்கள் ஆனமட்டும் குழந்தையை அலைந்து திரிந்து தேடிப் பார்த்தனர்.

குழந்தையைத் தொலைத்த அதிர்ச்சி ஒருபுறம், வெளியே சொல்லவும் பயம் ஒருபுறம், மேற்கொண்டு என்ன செய்வது என்று கூட புரியாத பதட்ட நிலை. இரவு முழுக்க ஒவ்வொரு ரோடாய் குழந்தையைத் தேடிவிட்டு காலையில் சோர்வாய் வீடு திரும்பியிருந்தனர்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நிற்கும்போதே குழந்தை கடத்தப்பட்டது தொடர்பான செய்திகளும் சிசிடிவி காட்சிகளும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அதைப் பார்த்தவர்கள், இங்கிருந்தால் கட்டாயம் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று பயந்துபோய், ஈசிஆர் ரோட்டில் தங்களது  காரை நிறுத்திவிட்டு வேறு வாகனம் மூலம் தமிழக எல்லையைத் தாண்டிச் செல்ல முயன்றனர்.

நவீன உலகில் எந்த தவறையும் செய்துவிட்டு அவ்வளவு ஈசியாக யாரும் தப்பித்து விட முடியாது. வெகு எளிதாக  போலீசில் மாட்டிக் கொண்டனர்.

சர்வேஷ் சொல்லி முடிக்கையில் மேலும் ஒரு அறை அறைந்திருந்தான் புகழ்.

“பச்சக் கொழந்தைக்கு சாராயத்தை ஊத்தி விட்ருக்க நாயே!”

பிறந்ததிலிருந்து சொகுசாய் வளர்ந்திருந்த சர்வேஷ் புகழின் காட்டமான ஒற்றை அறையில் சுருண்டிருந்தான். ப்ரீத்தியுமே வெலவெலத்துப் போயிருந்தாள்.

“மரியாதையா குழந்தை எங்க இருக்குன்னு உண்மைய சொல்லிடு. இல்ல மிதிச்சே கொன்னுடுவேன்.” பூட்ஸ் காலால் புகழ் சர்வேஷை மிதிக்கப் போக… அலறியவன்,

“சார், சத்தியமா இதுதான் நடந்துச்சி சார். குழந்தை எப்படி காணாமப் போச்சுன்னே எங்களுக்குத் தெரியல சார்.”

இருவரது அலறலும் அவர்களது கண்களில் தெரிந்த பீதியுமே அவர்கள் உண்மைதான் சொல்கிறார்கள் என்பதைப் புரிய வைக்க, அவர்கள் காரை நிறுத்தி வைத்திருந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.

அது சற்று ஆள் அரவமற்ற குறுகிய கிளைச்சாலை. சாலையின் இருபுறமும் பெரிய நிறுவனம் ஒன்றின் பின் பக்கச் சுவர்களே இருக்க, கடைகளோ வீடுகளோ அருகே இல்லை.

அந்த சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை நடத்தியும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தும் சந்தேகப்படும்படி எதுவுமே சிக்காததில் திரும்பவும் ஆரம்பித்த புள்ளிக்கே வந்து நின்ற ஆயாசம் வந்து சேர்ந்தது புகழுக்கு.

இதற்குள் குழந்தை காணாமல் போய் முழுதாய் ஒரு நாள் முடிந்திருந்தது.

ஆனால் கேஸ் எங்கேயும் நகராமல் முட்டுச்சந்தில் முட்டிய நிலை.

நேற்றிரவு காணாமல் போன குழந்தை இந்நேரம் வரை கிடைக்காதது எல்லோரையுமே சோர்வாக்கியிருந்தது.

ப்ரீத்தியையும் சர்வேஷையும் ரிமாண்ட் செய்தவர்கள், ரவீந்தரை விடுவித்திருந்தனர்.

நடப்பவை அத்தனைக்கும் மூலகாரணம் தான்தான் என்பதே ரவீந்தரை முடக்கிப் போட்டிருந்தது.

எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை இல்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டில் வாழ்வதே வாழ்க்கை.

அந்தக் கோட்பாட்டிலிருந்து சிறிது விலக நினைத்தால் கூட அது நமக்கு கெடுதலை மட்டுமே விளைவிக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டான்.

ப்ரீத்தியை ஆரம்பத்திலேயே நல்லவிதமாய் பேசித் தவிர்த்திருந்தால் இதெல்லாம் நடந்தே இருக்காது. அவளது செயல்களை மறைமுகமாய் ரசித்துத் தடுமாறியதே இன்று தன் குழந்தையை தொலைத்து நிற்க காரணம் என்று அவனது மனசாட்சி கூறுபோட்டது அவனை.

நேத்ராவின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கக் கூட முடியவில்லை அவனால்.

“டேய் ரவி, என்னடா இதெல்லாம்? அழகுபோல பொண்டாட்டி புள்ள இருக்கறப்ப உனக்கு எதுக்குடா இந்த கருமாந்திரமெல்லாம்.

நீ செஞ்ச தப்பு நம்ம புள்ளய பழிவாங்குதே! ஐயோ! எம்பேத்தி எங்க எப்படி கஷ்டப்படறாளோ?”

அவனது சட்டையைப் பிடித்து உலுக்கி அழுத தாயைச் சமாளிக்க முடியவில்லை அவனால்.

ஒரு வார்த்தை கூட ரவியோடு பேசாது, அவன் முகத்தைக்கூட ஏறெடுத்துப் பார்க்காது படுக்கையில் சுருண்டிருந்தாள் நேத்ரா.

அவளது உள்ளம் முழுக்க குழந்தையின் நினைவுகள் மட்டுமே.

 “அம்மாகிட்ட வந்துடு செல்லம்.” உதடுகள் விடாமல் ஜெபித்தபடி இருக்க, ஒரு சொட்டு நீர்கூட அருந்த மறுத்துப் படுத்திருந்தாள்.

வேறு வழியின்றி அவளுக்கு வீட்டிலேயே நர்ஸ் ஒருவரை வரவைத்து சலைன் ஏற்ற ஏற்பாடு செய்து அவளது மன அமைதிக்காய் தூங்கவும் ஊசி ஒன்றை போட்டு தூங்க வைத்திருந்தனர்.

மகனோடு பேசக்கூட பிடிக்கவில்லை சொர்ணத்துக்கு. மருமகளை கவனிப்பதுதான் தற்போது முக்கியம் என்று புரிந்து கொண்டவர் நேத்ராவைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேசி அவளைத் தேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்.

செய்தியறிந்த நேத்ராவின் அண்ணனும் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தான்.

ஆயிரம் கோபம் ரவீந்தர் மீது இருந்தாலும் அதைக் காட்டும் நேரம் இதுவல்ல என்பது புரிந்ததால் ரவீந்தரோடு இணைந்து குழந்தையைப் பற்றிய செய்தி ஏதேனும் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்தான்.

அவரவர்கள் தங்களால் ஆன முயற்சிகளை செய்த போதும் குழந்தை கிடைக்காமல் நாட்கள் நகர்ந்தது.

வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியா மூலமாகவும் காணமல் போன குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளும்படி வேணடுகோள் விடுத்திருந்தனர்.

என்னதான் நாகரீகவளர்ச்சியே மனமுதிர்ச்சி என்று நாம் பீற்றிக் கொண்டாலும் அது அப்படியல்ல என்றும் புரிய வைத்தது அவர்களுக்கு நிகழ்ந்த சில நிகழ்வுகள்.

சோஷியல் மீடியாவில் குழந்தை பற்றிய தகவல்களை பகிர்ந்த பிறகு, குழந்தை இங்கே இருக்கிறது அங்கே இருக்கிறது என்று பொய்யான தகவல்களைக் கூறி பலர் அலைக்கழித்தனர்.

அற்ப சந்தோஷத்துக்காக தாம் செய்யும் இச்செயல் குழந்தையை இழந்து தவிக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்பேர்ப்பட்ட மனவலியைக் கொடுக்கும் என்பதை அறியாத மனித நேயமற்ற பலரைக் காண நேரிட்டது.

 இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களிடையே பணம் பறிக்க முயன்ற மனவக்கிரம் மிகுந்த மனிதர்களையும் சந்திக்க நேரிட்டது.

குழந்தையைப் பார்த்தேன் என்று யார் தகவல் கொடுத்தாலும் அங்கே ஓடிச்சென்று பார்த்து ஏமாந்து வருவது ரவீந்தருக்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுத்திருந்தது.

அதிலும் கடைசியாய் ஒரு அநாதை இல்லத்தில் குழந்தை இருப்பதாக முகமறியா நபர் மூலம் தகவல் வர, ஓடிச்சென்று பார்த்து ஏமாந்தவன் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனான்.

தாய்தந்தை முகமறியாத அப்பிஞ்சுகளைப் பார்க்கையில் தன் குழந்தையும் எங்கோ ஓரிடத்தில் இப்படிதானே அநாதையாய் வாழ்கிறது என்ன நினைவே அவனைக் கொல்லாமல் கொன்றது.

‘என்ன தவறு செய்தார்கள் இக்குழந்தைகள்? எதற்கு இவர்களுக்கு இந்த தண்டனை?’ என்று மனது ஒருபுறம் ஓலமிட,

நாம் செய்யும் தவறு சிறிதோ பெரிதோ, காலம் உடனுக்குடன் நமக்குத் தீர்ப்பெழுதும் என்பதை அவன் மனசாட்சியே ஓங்கியடித்து அவனுக்குப் புரியவைத்ததில், வெடித்து அழுதவனை யாராலும் சமாளிக்க முடியவில்லை.

“ஹைய்யோ கடவுளே! நான் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச தப்பை மன்னிச்சி எம்புள்ளய என்கிட்ட சேர்த்துடு” அங்கேயே மடிந்து அமர்ந்து கதறியவனை ஜெகன்தான் தாங்கிக் கொண்டான்.

“டேய், என்னடா? நீயே இப்படி தைரியத்தை விட்டா எப்படி? பாப்பா கண்டிப்பா கிடைச்சிருவாடா? தைரியமா இரு ரவி.” தேற்றிய ஜெகன் கண்களுமே நீரால் நிறைந்திருந்தது.

குழந்தை காணாமல் போய் முழுதாய் நான்கு நாட்கள் முடிந்த நிலையில் குற்றுயிராய் போன மனைவியைத் தேற்ற தன்னால் ஆனவற்றை செய்த போதும், அவன் முகம்கூட பார்க்க மறுத்தாள் நேத்ரா.

ஏதோ ஒரு புள்ளியில் சிறு நம்பிக்கை. தன் பிள்ளை தன்னிடம் வந்துவிடும் என்ற நூலளவு நம்பிக்கையே அவள் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.

ஐந்தாம் நாள் காலையில் புகழேந்தியிடம் இருந்து ரவீந்தருக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

உடனடியாக அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்க சார். பாப்பா பத்தி எதாவது தகவல் கிடைச்சுதா?” படபடத்தான்.

“நீங்க உடனே கிளம்பி நீலாங்கரை வாங்க. கிட்ட வந்ததும் சொல்லுங்க லொகேஷன் சொல்றேன்.”

“நீ… நீலாங்கரையா? எ… எதுக்கு சார்? பாப்பா அங்க இருக்காளா?”

“நீங்க கிளம்பி வாங்க ரவி. சொல்றேன்.” பட்டென அலைபேசியை அணைத்த புகழின் குரலில் இருந்த மாறுபாடு இனம்புரியாத அவஸ்தையை ரவியினுள் ஏற்படுத்தியது.

 

—- தொடரும்…