உலாவரும் கனா-6

உலாவரும் கனா-6

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6

 

காலையில் அமருடன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காயங்களை பரிசோதனை செய்தபின், ஜனதா, அமர் மற்றும் அர்ச்சனாவுடன் விருத்தாசலம் வந்திருந்தான் சந்துரு.

சந்துரு, வீட்டில் சற்று நேரம் இருந்துவிட்டு அமரையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.  திருமண மண்டபத்துடன் இயங்கிய அலுவலக அறைக்கு அமரை அழைத்துச் சென்றவன் அவனுடன் பேசியபடி மற்ற வேலைகளைப் பார்த்தான்.

திருமண மண்டபத்தை ஒட்டி இருந்த அவர்களது மூன்று மாடி காம்ப்ளக்ஸ்களில், கடைகளுக்காக வாடகைக்கு விட்டிருந்தான்.  முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால், வாடகை வருமானமே இரு லகரங்களுக்கு மேல் வந்தது.

தனது பத்து ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், ஒரு திருமண மண்டபம், ஒரு காம்ப்ளக்ஸ், கல்லூரியின் அருகில் துவங்கப்பட்ட எழுதுபொருட்களுக்கான கடை மற்றும் ஜெராக்ஸ், ஜாப் ஒர்க்குடன் இணைந்த ப்ரிண்டிங்க் கடையென தொழில்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியவாறு இருந்தான்.

எங்கு, எந்த இடத்தில் ஒரு தொழிலைத் துவங்கினால் இலாபகரமாக இருக்கும் என்ற சமயோசித புத்தியுடன் ஒவ்வொன்றையும் துவங்கி, துவங்கிய ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் போட்ட முதலை எடுக்கும் திறமையானவனாக இருந்தான், சந்துரு.

சமீபத்தில் துவங்கப்பட்ட, ஜன்னல் மற்றும் கதவுகளில் மரங்களுக்கு பதிலாக ஃபைபர் கண்ணாடிகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் தேவையான படங்களை அச்சடித்து தருவது, நல்ல வரவேற்போடு கூடிய வருமானத்தைப் பெற்றுத் தருவதால் அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறான். ‘சந்திரா கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டூடியோ’, அலுவலகம் மற்றும் ஃபேக்டரி என அதற்கு தேவையான பணிகளில் ஈடுபட்டிருக்கிறான்.

சொந்த பயன்பாட்டிற்கு ஒரு யமஹா, ஒரு இனோவா, சரக்குகளை ஏற்றி இறக்க இரு மினிடோர் வாகனங்கள், இரு லாரிகள் என தொழில்களின் வாயிலாக வந்த வருமானத்தை அசையும், மற்றும் அசையாச் சொத்துக்களாக மாற்றியிருந்தான்.

வரும் வருமானத்தில் கட்டிடங்களை பராமரித்தல் மற்றும் புதிய தொழில் துவங்குதல் என அவனின் செயல்பாடுகள் இருக்க, அவனின் தந்தையின் தொழிலான பழைய பொருட்களை சுற்றியிருக்கும் ஊர்களில் இருந்து வாங்கி, அதை மறுசுழற்சிக்காக அனுப்புதலையும் விட்டுவிட விரும்பவில்லை.

சத்யவாடியில் இருந்து விருத்தாசலம் வந்து ஆரம்பத்தில் தனது தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தான். தன் தங்கை, கல்லூரிப் படிப்புக்காக விருத்தாசலம் வந்து போவதை அலைச்சலாக கருதியதால், விருத்தாசலத்தில் இடம் வாங்கி வீடு கட்டியிருந்தான்.  வாரநாட்களில் அர்ச்சனாவுடன் இருக்கும் அவனது தாய் சுசீலா, வார இறுதிநாட்களில் சத்யவாடிக்கு சென்றுவிடுவார்.

செழியன் பெரும்பாலும், இங்கு தங்கி விடுவார்.  வாரநாட்களிலோ, வார இறுதியிலோ உணவிற்காக சுசீலாவை வற்புறுத்துவதில்லை.  அப்பாவும், மகனும் வெளியில் பல நேரம் உண்டு விடுவார்கள்.  சுசீலா சிக்கனத்திற்கு சிக்கனமானவர்.  ஆனால், மகள்களுக்கு தேவையான, ஆபரணங்கள், சேலைகள், வெள்ளி பாத்திரங்கள் என தனது சேமிப்புகளை மாற்றிவிடுவார்.

அவ்வப்போது அரை இலகரங்களைத் தரும் மகனுக்கு, பணத்தை செலவழித்தமைக்கு கணக்கு கூறியதில்லை, சந்துருவும் கேட்க மாட்டான்.

உணவிற்காக அதிக மெனக்கெடல் இல்லாமல் குடும்பத்தை நிர்வகித்து வந்திருந்தார் சுசீலா.

சத்தியவாடி ஒரு கிராமம் என்பதால், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து, சந்தை நாட்களில் அதை விற்பது என இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக மகளின் கல்விக்காக விருத்தாசலத்தில் இருப்பதால், அதனை திறம்படத் தொடர இயலா வருத்ததில் இருந்தார்.

மகன் அவ்வப்போது பணம் கொடுத்தாலும், அவரால் இயன்ற வேலைகளைச் செய்து பணமீட்டுவதை குறைத்துக்கொள்ளாதவர்.

கிராமத்தில் இருக்கும்போது மாட்டிலிருந்து கறக்கும் பாலை விற்று காசாக்குவாரே தவிர, ஒரு போதும் பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டார்.  வீட்டிலுள்ள கோழி இடும் முட்டைகளும் பணமாகுமே தவிர, ஒரு போதும் உணவானது இல்லை.

———————————————-

 

மதியம் அமருடன் உணவருந்த வீட்டிற்கு வர, அங்கு சமையல்கட்டில் நின்று தனது வேலையில் கவனத்துடன் இருந்த மனைவியைப் பார்த்தவன், அவனது அம்மாவைத் தேடினான், சந்துரு.

கடந்த தினம் மறுவீடு சென்றிருந்தபோது, அமரின் வீட்டில் தன்னை பார்த்து, பார்த்து, வீட்டிலிருந்த பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை கவனித்ததை யோசித்தவாறு மாடியில் இருக்கும் அர்ச்சனாவின் அறையை நோக்கி வந்தவன்

சுசீலா, அர்ச்சனாவுடன் அவளின் அறையில் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டவன், அறைவாயிலில் நின்றபடி

“அம்மா”, என அழைக்க

“என்ன சேகரு?”,என வெளியில் வந்தார் சுசீலா.

“மணி ரெண்டாகுது, சாப்பாடு ரெடியாகிருச்சானு போயி பாருங்கம்மா, மாப்பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கணுமில்ல, அர்ச்சனாவைப் போயி மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு பாக்க சொல்லுங்க, இப்போ இங்கென்ன ரெண்டு பேரும் பண்ணிட்டு இருக்கீங்க”

“அவ எதுக்கு?, அதான் சனதா சமைக்குது, சாப்பாடு ரெடியாகிட்டா அது பாக்கும்”

அதற்குள் வாசலுக்கு வந்த அர்ச்சனா, இருவரையும் பார்க்க

“போ, மாப்பிள்ளைய கவனி”, என சந்துரு அர்ச்சனாவை நோக்கிக் கூற

“அதான் அம்மா சொல்றாங்கள்ல, அண்ணி பாப்பாங்கனு”, என அர்ச்சனா கூற

“நீ தான் உன் மாப்பிள்ளைய பாக்கணும், போ அவரு அங்க ஹால்ல தான் உக்காந்திருக்கார்” , என சந்துரு அர்ச்சனாவை கடுமையுடன் விரட்ட

மனதில்லாமல் அங்கிருந்து செல்லும் அர்ச்சனாவைப் பார்த்தவாறு, தனது தாயிடம் திரும்பியவன்

“என்னம்மா பண்றீங்க, அதுக்கு தெரியலனா சொல்லிக்கொடுங்க, அத விட்டுட்டு நீங்களும் இப்டி இருக்கீங்க…”

“என்னப்பா செய்யச் சொல்ற!, அர்ச்சனா படிச்சதால அடுப்பங்கறை பக்கமே போனதில்ல, சின்னபுள்ள அவ”

“சின்னபுள்ளயா? சின்னபுள்ளனா எதுக்கு இப்போ கல்யாணம் பண்ணீங்க? ஜனதாவும், அர்ச்சனாவை விட படிச்சிருக்கு, அது மட்டும் இப்ப எப்டி சமைக்குது!? படிக்கறதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“நீயே உன் தங்கச்சிய விட்டுக் கொடுத்து இப்டி பேசுற சேகரு, உன் பொண்டாட்டி உன்ன அதுக்குள்ள மாத்திட்டா போலயே…!”

“எதுக்கு இப்போ அவள இழுக்குறீங்க தேவையில்லாம… இது நானாதான் கேட்டேன்”

“இது வர ஒரு வார்த்த எம்புள்ளையவும், என்னயும் கேள்வி கேக்காத என் மகன வந்த ரெண்டே நாளுல கேள்வி கேக்க வச்சுட்டாளே”, என வாயில் தனது புடவையை வைத்தபடி அழுவது போல பாசாங்குடன் பேசிய தாயை பார்த்தவாறு,

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம வேற என்னன்னவோ பேசாதீங்க.. கல்யாணம் பேசி மூணு மாசமாச்சு, படிப்பு முடிஞ்சு ஆறு மாசமாச்சு, இது வர ஏன் அதுக்கு சமைக்க கத்துக்குடுக்கல நீங்க?”

“கல்யாணம் பண்ணி அடுத்த வீட்ல போயி எல்லாம் அது தான பாக்கப்போகுது, அது வர ரெஸ்டா இருக்கட்டுமேனு தான்…”, என இழுத்த சுசீலாவிடம்

“இது ஒரு பதிலா?, அப்போ அதே மாதிரி ஜனதா வீட்லயும் இருந்திருந்தா, இன்னிக்கு மதியம் யாரு சமைச்சிருப்பா? சொல்லுங்க… சரி இது வர ரெஸ்ட் எடுத்தாச்சு, இனியாது கத்துக்கணுமில்ல… அத விட்டுட்டு… நானும் நேத்து அவங்க வீட்லயும் அர்ச்சனாவை கவனிச்சுட்டு தான் இருந்தேன்…

அங்கயும் ரூமுக்குள்ளயே இருக்கு, ஒரு வேல பாக்கல, அங்க விருந்தாடியாவா போயிருக்கு? கல்யாணம் பண்ணி போன வீட்ல எப்படி நடந்துக்கணும்னு அதுக்கு நல்ல விசயங்கள சொல்லி கொடுங்க, அத விட்டுட்டு… அப்றம் ரொம்ப வருத்தப்படாதீங்க”, என்றவன் அங்கிருந்து தரைதளத்திற்கு வந்திருந்தான்.

 

அமர் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்திருக்க, கிச்சனுக்குள் நின்றபடி இருக்கும் தங்கை அர்ச்சனாவைப் பார்த்தவன், கிச்சன் வாயிலில் நின்றவாறு மனைவியை அழைத்தான், சந்துரு

“ஜனதா?”

“என்னங்க?… உக்காருங்க தண்ணி கொண்டு வாரேன்… அண்ணனுக்கு தண்ணி குடுத்தேன். நீங்க மாடிக்கு போனதா அண்ணா சொன்னாங்க”, என பேசியபடி செம்பில் தண்ணீருடன் வெளியே வந்தாள் ஜனதா.

“சமையல் ரெடியாகிருச்சா?”, நீரை வாங்கியபடி கேட்டான்.

“முடிஞ்சிருச்சுங்க… இதோ சாப்பாடு எடுத்து வைக்கிறேன், மாமா எப்ப வருவாங்க?”

“அவரு முடிஞ்சா வருவாரு, இப்போ மொதல்ல மாப்பிள்ளைக்கு சாப்பாடு வையி”

“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”, என்றவள் கிச்சனுக்குள் சென்றிருந்தாள்.

டைனிங் டேபிள் இல்லாததால், ஹாலில் அமருடன், சந்துரு உணவருந்த கீழே அமர,

“நீயும் போயி எங்கண்ணா கூட சாப்பிட உக்காரு அர்ச்சனா”, என ஜனதா கூற

“சரி அண்ணி”, என்றவள் சென்று கணவனருகே போய் அமர

அவளுக்கும் இலைபோட்டு பரிமாறினாள் ஜனதா.  அது வரை அங்கு வந்திராத சுசீலாவை எதிர்நோக்கியபடி சந்துரு உண்டான்.

மூவரும் உண்டு முடிக்கும்போது, “ஜமுனா, கொஞ்சம் தண்ணி கொடுமா?”, என்றபடி வீட்டினுள் செழியன் வந்திருந்தார்.

“அப்பா அண்ணிய ஜமுனான்னே கூப்டாதீங்க… ஜனதானு கூப்டுங்கனு எத்ன தடவ சொல்றேன், அவங்க பேரு ஜனதாதானப்பா”, அர்ச்சனா

“நான் எப்டி கூப்பிட்டாலும் எம்மருமக அது கிட்டதான் நான் கேக்குறேனு புரிஞ்சுகிட்டு தண்ணி வந்து குடுத்துருச்சு, அப்புறமென்ன…”, என ஜனதாவிடம் நீரை வாங்கி அருந்தினார் செழியன்.

“மாமா வாங்க சாப்பிட”, என இருவரின் பேச்சால் சிரித்தபடியே… தனது மாமனாரை உண்ண அழைத்தாள் ஜனதா

“கொஞ்ச நேரமாகட்டும்மா, பசிக்கும் உனக்கு… நீ முதல்ல சாப்பிடு”, செழியன்

“நீங்க சாப்பிடுங்க மாமா, அப்றம் நான் சாப்டுறேன்”

“உங்கத்தைய காணோம்? ஊருக்கா போயிட்டா?”

“இல்ல மாமா, மேலதான் இருக்காங்க”

“அவ வரட்டும், நானும் அவளும் சாப்டுக்கறோம், நீ முதல்ல சாப்பிடுமா”

“சரி மாமா”, என்றவள் அங்கு அமர்ந்து தானாகவே எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

உண்டு முடித்து வெளியே போன அர்ச்சனாவிடம், “மாப்பிள்ளய ரூமுக்கு கூட்டிட்டு போயி ரெஸ்ட் எடுக்க சொல்லு அர்ச்சனா”, என சந்துரு கூற

“சரிண்ணே”, என சந்தோசமாக அமருடன் மாடியேறினாள் அர்ச்சனா.

மருமகனை அங்கு எதிர்பார்க்காத சுசீலா, கீழே இறங்கினார்.

அதுவரை அமைதியாக இருந்த அமர், சுசீலாவுடன் அறைக்குள் நுழைந்தவுடன்,

“அர்ச்சனா உனக்கு இன்னும் சமைக்கத் தெரியாதா?”, எனக் கேட்க

“இனி தான் கத்துக்கணும்”

“கத்துக்கணும்னா, ஜனதா சமைக்கும்போது கிச்சன்ல இல்லாம எங்க போயிருந்த?”

“எனக்கு டயர்டா இருந்தது”

“எங்க வீட்ல காலைல என்ன வேல பார்த்த?”

“…”

“இப்போவாது, ஜனதா, உங்க அம்மா, அப்பா மூணு பேருக்கும் போயி சாப்பாடு வையி, போ”

“அதெல்லாம் அண்ணி பாத்துப்பாங்க”

“ஜனதா பாத்துக்கும்னு தெரியும், நீ போயி பாரு”, என அங்கிருந்து விரட்ட தனது அண்ணனையும், கணவனையும் மனதில் திட்டியவாறு கீழிறங்க ஹாலில் இருந்த சந்துரு அர்ச்சனாவைப் பார்த்தவுடன்,

“ஜனதா நீ மெதுவா சாப்பிடு, அர்ச்சனா வருது, அது அம்மா, அப்பாவுக்கு சாப்பாடு போடும்” என கூற

அமர், சந்துருவின் கூட்டணியில், சுசீலா, அர்ச்சனா இருவரும் தடுமாற

இது வரை பரிமாறி இராத அர்ச்சனா பெற்றோருக்கு பரிமாற,

சுசீலாவும், செழியனும் உண்ண ஆரம்பித்து இருந்தனர்.

“அர்ச்சனா, சோறு போடும்போது இலையில நிறைவா போடணும்மா, போதுமா…? இது போதுமானு…? கேட்டுக் கேட்டு  போடக் கூடாது”, என்றவாறு சாப்பிட

“…”

“அவங்க சாப்டுற அளவுக்கு மேல வச்சா, அவங்களே போதும்னு சொல்லுவாங்க, எல்லாம் இந்த ஒருச்சாண் வயிற்றுக்காக தான, அதுக்கு வஞ்சகம் பண்றமாதிரி கேக்ககூடாது”

“…”

சுசீலாவைப் பார்த்தவர், “நீ அர்ச்சனாவுக்கு இதெல்லாம் பழக்கியிருக்கணும்!”

சுசீலா ஒன்றும் பேசாமல் உண்டார்.

“மருமக கையால முத முதல்ல அருமையான சாப்பாடு”, என்றவாறு செழியன் உண்ண, சுசீலாவிற்கு கணவனது இந்த பாராட்டு பிடிக்காததை அவரது முகம் காட்ட

இதையெல்லாம், சந்துருவும், ஜனதாவும் கவனித்திருந்தனர்.

———————————————-

சந்துரு தனது அறைக்கு செல்ல கிளம்பியவன்,

“ஜனதா நீ சாப்டுட்டு எனக்கு குடிக்க தண்ணி எடுத்துட்டு வா” என்றபடி அறையை நோக்கிக் கிளம்பியிருந்தான்.

“சரிங்க”, என்றவள் உண்டு எழுந்தவுடன், நீருடன் தங்களது அறைக்கு வந்தாள்.

 

நீரை எடுத்து வந்தவள், கட்டிலில் உட்கார்ந்திருந்த கணவனிடம்

“இந்தாங்க”, என நீட்டினாள்.

அவன் அதை வாங்கியவுடன் அறையிலிருந்து ஜனதா கிளம்ப, “எங்க போற?”, என்ற கணவனின் கேள்வியில் நின்றாள்.

“கீழ எதுவும் இன்னும் க்ளீன் பண்ணாம இருக்கு, போயி க்ளீன் பண்ண போறேன்”

“இங்க வா”, என அழைக்க

“எதுக்கு…?”, என தயங்கினாள்.

கட்டிலில் இருந்து எழுந்தவன், அவளருகே வந்திருந்தான்.

மனைவியின் முகத்தைப் பார்த்தவாறு

“காலைல நான் வெளியில போனதில இருந்து எல்லாம் வேலயும் நீ மட்டும் தான பாத்த, இப்போ இங்க இரு, அர்ச்சனாவும், அம்மாவும் பாப்பாங்க”

“இல்லங்க, அத்த பாவம்”

“யாரும் பாவமில்ல, நீ இப்போ இங்கதான் இருக்கிற”, என்றவன் அவளை ஒரு கையால் அணைத்தபடி அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான்.

காலையில் ஜனதாவை வீட்டில் விட்டுச் சென்றது முதல் நடந்தவற்றைக் கேட்டறிந்தான்.  பிறகு, தனது தாயார், தந்தை, அக்கா மற்றும் தங்கை பற்றிக் கூறினான்.  இங்கு அர்ச்சனாவின் படிப்பிற்காக தனது தாய் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தன்னுடன் இங்கு வந்திருப்பது பற்றியும் கூறினான்.

“இங்க நீ கல்யாணம் பண்ணி வந்திருக்க…, வேல மட்டும் பாக்க வரல புரியுதா?”

“…”, தலையை ஆட்டியவள்

“ஒரு வீடுனா… வீட்டில இருக்குற எல்லாரும் சேர்ந்து அந்த வேலய பாக்கணும்”

“…”, தலையை மீண்டும் ஆட்ட

“தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையா நீ? ஒரு தன்மையா தலய ஆட்டிட்டே இருக்க…!”

“…”, பதிலேதும் பேசாமல் திருதிருவென விழித்தாள், ஜனதா.

“உங்க வீடு மாதிரி அவங்களுக்கு மூனு வேளைக்கும் சமச்சு பழக்கமில்ல… ஒரு வேள சமையல் தான், இப்டி எல்லாம் என்னைக்கும் வகை, தொகையா சமைச்சதில்ல”

“அப்படி என்ன ஒரு வேளைலயே சமப்பாங்க?”

“சாதம், ஒரு குழம்பு எப்போவும், அத்தி பூத்தாப்ல எதாவது காய்கறி வப்பாங்க”

“அப்ப அதையே மூனு வேளைக்கும் சாப்பிட்டுக்குவீங்களா?”

“காலைல எழுந்து வெளியில போனா, எப்போ வீட்டுக்கு வருவேன்னு எனக்கு தெரியாது.  அப்டி வரும்போது அம்மா இருந்தா சாப்பாடு போட்டு தருவாங்க, அவங்க இல்லனா நானே போட்டு சாப்பிட்டுக்குவேன், சாப்பாடு இல்லனா நான் வெளியில போயி சாப்பிட்டுக்குவேன்”

“…”, கணவன் கூறுவதை ஆச்சர்யமாக பார்த்திருந்தாள் ஜனதா.

“அதனால் நீ தான் வீட்ல பாத்து நடந்துக்கணும்.  நான் இல்லனாலும் வேளைக்கு சாப்பிட்டிரு, நான் வருவேன்னு எதிர்பார்க்காத”

“நீங்க இனி மதியம் இங்க வந்து சாப்பிட்டுக்கங்க”

“இங்க ஊருக்குள்ள இருந்தா வந்திருவேன்,  வரமுடியலனா நீ எனக்காக வயிட் பண்ணாத”

“இப்போ டீ போட போகவா?”

“நாலு மணி தான் ஆக போகுது, பேசாம கொஞ்ச நேரம் படு, அஞ்சு மணிக்கு போயி பாரு”, என்றவன் படுத்துவிட்டான்.

—————————————-

 

மாலையில் அமர்நாத், சந்துருவிடம் வீட்டிற்கு கிளம்ப இருப்பதாகக் கூற… இன்று ஒரு நாள் தங்கிச் செல்லுமாறு சந்துரு கூறினான்.  ஆனால், தன்னுடன் அர்ச்சனாவை அழைத்துச் செல்ல வேண்டிய பணிகளைப் பார்க்க இருப்பதைக் கூறினான்.  ஆகையால், நாளை காலை அது சார்ந்த வேலைகள் இருப்பதால் தற்போது கிளம்புவதாகக் கூறினான்.

அர்ச்சனாவுடன், அமர் அவர்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க, சந்துரு வெளியில் சென்றிருந்தான்.

—————————————-

ஜனதா இரவு உணவுக்கான வேலையில் இருக்க,

“எல்லாத்துக்கும் ஒரு முக ராசி வேணும் போல, ஒரு சிலர் ராசிக்கு என்ன சொன்னாலும் கேக்குறாங்க, அந்தளவுக்கு நான் பெத்த புள்ளைக்கு முகராசி இல்ல, இத நான் யாருக்கிட்ட போயி சொல்ல முடியும்”, என தனக்குத் தானே பேசியபடி சுசீலா செல்வதைப் பார்த்த ஜனதாவிற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என முதலில் புரியவில்லை.

இது போன்ற பேச்சுக்களை அவள் கேட்டதில்லை.  ஆனாலும் யோசித்து பார்த்தாள்.  ஆனாலும் ‘ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.  அப்படி இங்கு என்ன நடக்க கூடாத விசயம் நடந்தது’ என எண்ணியபடி அவளது வேலைகளை முடித்தவள், அவளது அறைக்குள் சென்று அங்கங்கு சிதறியிருந்த, இடமாறிய பொருட்களை சீராக மாற்றி வைத்தாள். கணவன் வரும்வரை தங்களது அறையிலேயே இருந்துவிட்டாள், ஜனதா.

——————————————–

இரவு வேலைகளை முடித்துவிட்டு, படுக்க வந்த மனைவியை பார்த்த சந்துருவின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவள்,

மனதில் எழுந்த படபடப்போடு அறைக்கதவைத் தாளிட்டு படுக்கைக்கு சேலையுடன் வந்திருந்தாள்.

“நைட்டி மாத்தலயா?”

“இல்ல எங்கிட்ட”

“என்ன சொல்ற!”, என ஆச்சர்யமாகக் கேட்டான்.

“இதுல என்ன ஆச்சர்யம்?!”

“இல்ல… இப்போ எல்லாரும் நைட்டி போட்டுட்டு தான வீட்டில இருக்காங்க, நீ மட்டும் ஏன் போட மாட்டிங்கற?”

“எங்க வீட்ல அம்மா நைட்டிக்கு தடா போட்டுட்டாங்க, சுடி, ஃபுல் ஸ்கர்ட் இது தான் வீட்ல அலோவ் பண்ணுவாங்க”

“ஏன் அப்படி சொன்னாங்க?”

“அப்பா, அண்ணன்கள் வீட்ல இருக்கும் போது வெளியில நைட்டியோட வரக்கூடாது, தூங்கும்போது வேணும்னா போட்டுக்கலாம், ஆனா நான் அது எதுக்குனு நைட்டியே வாங்கனதில்ல”

“அப்போ இந்த சேலையோட தான் இன்னிக்கு தூங்கப்போறியா?”

“ஆமா”

“இந்த சேலை வேணாம், ஆனா அத உடுத்தின பொம்மா மட்டும் வேணும்”, என சிரித்தவாறு தன்னோடு ஜனதாவை இழுத்து அணைத்திருந்தான்.

 

இதழ் தீண்டலோடு துவங்கிய முதல் சங்கமத்தில், தாபம் தீர தடைகளாய் இருந்தவற்றை நீக்கும்போது உண்டான கூச்சத்தில் தனது மார்பில் ஒடுங்கியவளின், ஒடுங்கியிருந்த உணர்வுகளை உதடுகள் கொண்டு மீட்டினான்.  மீட்டலினால் உண்டான ஸ்வரம் அவளது உடம்பில் பரவ கள்ளுண்டதுபோல மயங்கியிருந்தாள்.

பாவையவள் மனது புதுவித உணர்வில், திளைத்திருக்க… ஸ்ருதி கூட்ட அவன் யாசிக்க, அவனின் மீட்டல்களில் அவனது வேகத்திற்கு ஈடுதந்து… இருவரின் புது முயற்சியில்… தடுமாற்றம் கலந்த பயணத்தில்… போகும் பாதையை கண்டறிந்து புது உலகம் சென்றடைந்திருந்தனர்.

என்னவோ என எண்ணியிருந்த ஏகாந்தம் தன்வசமான நிகழ்வை ஆயாசத்துடன், நினைத்திருந்தாள் பெண்ணவள்.  இன்னும் தாகம் முற்றிலும் தணியாத உணர்வாதலால், தாகம் தீர மறுவழி யோசித்திருந்தான் மன்மதன்(சந்துரு).  விடியல் வரை இருவரின் அறியா வினாக்களுக்கு ஒருவருக்கொருவர் விடையாகி, விடியலில் அயர்ந்து… உறங்கியிருந்தனர்.

எதிர்பார்ப்புகளை எண்ணங்களாக

உள்ளங்களில் விதைப்பதால்…

விளையும் ஆழ்மனதின் அறுவடை!

கனா!!!

———————————–

 

 

 

error: Content is protected !!