உள்ளத்தின் காதல் நீங்காதடி-9

காதல்-9 

வாழ்வின் ஒரு மிக முக்கிய பகுதி, காதல்.காதல் சுயநலமானது,காதலில் குறைகள் என்றும் நிறைவாகவே பார்க்கப்படுகிறது,எதையும் செய்ய தூண்டும் காதல்,உயிரையும் பொருட்படுத்தாத காதல். காதலே உன் நோக்கம் என்ன?

 மதுரை டூ சென்னை இரயில் பயணம். இரவு 11.33க்கு துவங்கிய இவர்களின் பயணம். தொடங்கியது முதலே ஒருவித இறுக்கத்தோடு இருந்தாள் மீரா. பயணம், காலை 7.55க்கு இனிதே நிறைவடைந்தது.

சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது.

அந்த வரிகளை படித்த மீராவின் உதடுகள் ஏளனமாய் வளைந்தது, ‘அன்பு இந்த பலகை பொதுவாக இங்கு வரும் அனைவருக்காகவும் வைக்கப்படும், அதுக்கு தெரியுமா என்ன, நான் எந்த நிலையில் இங்கு வந்திருக்கிறேன் என்று’ நினைத்தவளின் சிந்தனையை கலைத்தான் அவளது தமையன் மித்ரன்.

“மீரா என்னாச்சு டா?”என்றவனின் கேள்விக்கு “ஒன்னுமில்லை”என்று சமாளித்தவள். வரியாய் ஒரு புன்னகையை உதிர்த்து அமைதியாகி விட்டாள்.

புருவ முடிச்சுடன் அவளைப் பார்த்த மித்ரனோ, அவனது யோசனைக்கு தற்காலிக விடுப்பு விடுத்து “வாங்க, போகலாம்”என்றான் .

அவர்களுக்கு முதலிலே சென்னையில் ஒரு சிறிய அளவே ஆயினும் அழகிய வீடு ஒன்று இருந்தது. ஆனால், இப்போதைக்கு அதில் தங்க வேண்டாம் என்று அவர்களது தந்தையும் தாயுமாக மறுத்து விடவே, மித்ரனுக்கும் அதுவே சரியாக பட்டதால்,அவனது வங்கிக்கு அருகாமையிலே எக்மோரில் ஒரு வீட்டைப் பிடித்திருந்தான்.

இவனது பால்ய நண்பன் ஒருவனின் உதவியினால் இவர்களுக்கு முன்னே பொருட்களை வீட்டில் இறக்கியும்வைத்துவிட்டனர், போனதும் இனி அதை அடுக்கும் பணி மட்டும்தான்.

எக்மோர் ஸ்டேசனிலிருந்து ஒரு பத்தே நிமிட பயணத்தில் தான் அவர்களின் தற்காலிக வசிப்பிடும் இருப்பதால், ஆட்டோவைப் பிடித்து அதில் ஏறி தங்கள் இல்லம் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தனர்.

அந்த வீட்டின் முன் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய நம் கதாநாயகியோ, தாயையும்,மித்ரனையும் கேள்வியாய் நோக்க,அவளின் கேள்வி புரிந்தவர்கள்,

“இனி இங்க தான்டா நாம இருக்க போறோம்”என்று தாய் கூறியதும், அவர்களைத் துளைக்கும் பார்வை பார்த்து வைத்தவள் பின் அமைதியாக முன்னே நடந்தாள்.

முன்னே சென்று அந்த மரக்கதவின் முன் நின்றவளைக் கலைத்தது பக்கத்திலிருந்து வந்த சத்தம். 

அது ஒரு தனி வீடாக இருந்ததில் அவளுக்கு சற்றே நிம்மதி அளித்தது. பெரும்பாலும் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பார்ட்மென்ட்ஸ் அதிகமாகவே இருக்கும். ஆனால் அவள் நினைத்து வந்தது,அவளுடைய பழைய வீட்டில் தங்கவேண்டியது வரும், சிலரைச் சந்திக்க நேரும்,பழைய விடயங்கள் கண் முன் தோன்றும், அத்தோடு வேதனையும் அதிகரிக்கும் என்று நினைத்து அவள் பயந்தாள் என்பதே உண்மை. 

இதை அனைத்தையும் அவளை விட அவளது குடும்பம் யோசித்திருக்கிறது என்பதிலே அவளது உள்ளத்திற்கு ஒரு சிறிய மகிழ்வை அளித்தது. அவளுடைய இறுக்கம் சிறிது மட்டுப்பட்டது.

அத்தோடு அந்த சத்தம்,அழகிய கூண்டு கிளிகள், சிறு வயதில் புங்காவிற்கு சென்று வந்த வழியில் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் சென்று ‘”அங்கிள்,இந்த கிளியை எனக்கு தர்றீங்களா?”என்று இவள் கேட்க.

அவளை விநோதமாக பார்த்தவர் “எடுத்திட்டு போய் என்ன செய்வாய்?”என்று அவர் கேட்க.

“என் பிரண்ட்  ஒரு கிளி வளர்க்கணும்னு ஆசை பட்டான்,அவனுக்கு கொடுப்பேன்”என்று அவள் கூற.

அவளது பதிலில் சிரித்தவர் கிளியை எடுத்துவிட்டு சென்றுவிட இவளுக்குத்தான் அவர் கொடுக்காமல் சென்றதில் வேதனையாக இருந்தது.

இன்னும் கொஞ்ச நாளில் அவனுடைய பிறந்தநாள் வரும் என்று தாய் கூறியிருந்த நிலையில், பிறந்தநாள் என்றால் பரிசு கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே அறிந்திருந்தவள், அவனுடன் பழகிய அந்த கொஞ்ச நாளிலே அவனின் ஆசைகள் சிலவற்றை தெரிந்து வைத்திருந்தாள், அதன்படி இப்பொழுது அவனின் கிளி ஆசையும் இருக்க, அது கிடைக்காததால் வேதனை அடைந்தது அந்த குட்டி மலர்.

அதன்பின், அவன் பிறந்த நாளைக்கு அந்த சிறு வயதிலே அவள் அவனுக்கு கொடுத்த பரிசு அனைவரையும் வியக்க அல்லவா வைத்தது.

அதன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள் அந்த கிளிகளிடமே பார்வையைப் பதித்திருக்க அங்கே இரு வாண்டுகள் 

“ஹே,டோரா,புஞ்சி ஏன் கத்துறீங்க,இப்போதானே சாப்பாடு போட்டேன்”என்று ஒரு வாண்டு கூற 

இன்னொரு வாண்டோ, “ஹேய் அது உன்னை போல் இருக்கிறது என்று தானே கூறுவாய்?”என்று அவன் கேள்வியாய் நிறுத்த.

இன்னொரு வாண்டோ,”ஆமாம், அதுக்கு என்ன இப்போ?”என்று புரியாது விழிக்க.

“இல்லை உன்னைபோல் இருந்தால் அதுக்கு அடிக்கடி பசிக்குமே,நீ தான் சோத்து மூட்டையாச்சே” என்று இதுக்கு கடுப்பான இன்னொரு வாண்டு 

“உன்னை”என்று அவனை அடிக்க துறத்த அந்த சம்பவத்தில் மேலும் இறுக்கம் குறைய,மென்மையாய் சிரித்தவளைக் கண்ட அவளது தாயிற்கு சற்றே நிம்மதி வர.

கதவைத் திறவுகோல் கொண்டு திறந்தவர் “மீரா, உள்ள வா”என்று கூறி சென்றார்.

தாயைப் பின் தொடர்ந்து சென்றவள்,அந்த வீட்டை அமைதியாய் ஆராய்ந்தாள். பெரிதாகவும் இல்லாமல், சிறிதாகவும் இல்லாமல் இருந்த ஹால்,அதில் தங்கள் ஊரிலிருந்த எடுத்துவந்த பொருட்கள் யாவும் நிரம்பியிருக்க, அதன் வலது புறம் ஒரு அறை வித் பாத்ரூமோடு இருக்க, வலது புற பெட்ரூம் கதவிற்கு சற்றே தள்ளி ஒரு ஓபன் கிட்சன் இருக்க, ஹாலின் நேரெதிரே இன்னொரு அறை முதலில் பார்த்த அறையை விட சற்றே சிரியது, பின் ஹாலில் ஒரு பொது கழிவறை, வீடு அம்சமாகவே இருந்தது, பொருட்கள் ஏதும் நிரப்பபடாத நிலையில் இருந்ததால் எதை எதை எங்கு அடுக்கலாம் என்று அவளது மனம் ஆராயதுவங்கியது.

உள்ளே வந்த மித்ரன் “மீரா,இங்க ரெண்டு ரூம் தான்டா. அம்மா உன்கூட தங்கலாமா உனக்கு எதுவும் பிராப்ளம்னா சொல்லு,நான் இன்னொரு அறையை எடுத்துக்கிறேன்” என்று அவன் கேட்க.

“இல்லை அண்ணா நானும்,அம்மாவும் ஒன்றாகவே இருந்துக்கொள்வோம்” என்று அவள் முடிக்க.

“அப்போ சரி,வலது புறம் இருக்கும் அறையை நீங்க எடுத்துக்கோங்க, அம்மா இன்னைக்கு எதுவும் சமைக்க வேண்டாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டை செட் செய்வோம்,இன்னைக்கு ஹோட்டல்ல பார்த்துப்போம்”என்று அவன் முடிக்க.

அதுவும் சரியாக தோன்ற “சரிப்பா”என்று முடித்தார் அனுராதா.

சிறிது நேர ஓய்வெடுத்தவர்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

***************

ஏமாற்றம், அன்றைய பொழுதில் அவன் அடைந்த வேதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வேதனை .

இத்தனை வருடங்களுக்கு பிறகு கையில் கிடைத்த பொக்கிஷம் தவறியதேன்? விதி என்னோட மட்டும் ஏன் இப்படி விளையாடுகிறது? என் வாழ்வின் துயரங்கள் அழிக்கப்படவே மாட்டாதா? என் குற்ற உணர்ச்சியைப் போக்கவே முடியாதா? 

முடிந்தது, அனைத்தும் முடிந்தது, கனவைப் போல் கலைந்து சென்று விட்டது. நீரில் விழுந்தவனைக் காப்பற்ற வந்தவள் கைகளைக் கொடுத்தாள். ஆனால், கைகள் வழுக்க மறுபடியும் நீரில் மூழ்கினேன் தனது அறையில் பால்கெனி வெளிச்சத்தில் அன்றைய இராணி பிறை நிலாவுடன் பேசிக்கொண்டிருந்தான் உதய்.

காலத்தின் கட்டாயம் , எல்லாவற்றிருக்கும் நேரம் வரவேண்டும் அல்லவா? இந்த உலகம் பலவற்றை தன்னுள் அடக்கியே சுழல்கிறது. விரும்பியோ,விரும்பாமையோ நாம் அதற்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும்,அதற்கு உதய் மட்டும் விதிவிலக்கா என்ன?

இருண்ட வானில் தானே நிலாவும் ஒளிர்கிறது. எனில் நிலா ஒளிற இருட்டு எனும் வானம் தேவைப்படுகிறதல்லவா? அதுபோல தான் மனிதனின் வாழ்வும் இருளில் ஒரு ஒளி உண்டு,இருளுக்கு பின் ஒரு உதயம் உண்டு,இதை பலமுறை மிக முக்கியமாக நமக்கு தேவைப்படும்போது நாம் மறந்து விடுவோம்.

அன்றைய நாளில் விதி அவனுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியது அவன் நினைத்திருந்தால் அவளது இல்லத்திற்கு சென்று இருக்கலாம்,ஆனால் ஒருவருக்கு அவன் செய்து கொடுத்த சத்தியம் உள்ளதே, அந்த சத்தியத்தை மீறஅவனுக்கு மனமில்லையே!

அந்த சத்தியம் எந்த மாதிரியான சத்தியம் அது? ஆனால் ஒன்று அன்று அவன் அந்த சத்தியத்தை சற்றே மீற துடித்தான்தான் ஆனால் விதி விடவில்லை, இவன் மீற நினைத்தான் ஆனால்,விதி விடவில்லை அவன் தான் அவளை சந்திக்கவில்லையே!

சந்திக்கவில்லை என்பதை காட்டிலும், சந்திக்கவிடவில்லை என்பதே சரி.

இரவு உணவு உண்ண வராது இருந்த தன் மகனின் உடல்நலத்தில் அக்கறைக்கொண்ட அவனது தாய் தன் செல்ல மகளை தாஜா செய்து அவனை அழைத்து வர பணிந்தார்.

சற்றே கடுப்பில் மேலே சென்றவளும் அண்ணண் ஜன்னலை வெறிப்பதை கண்டு மனம் இறங்கி 

“மகாராஜா உதய் அவர்கள் உணவுன்ன வரவில்லை என்று தங்களது தாய்கிழவி ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்,ஆகையால் தாம் மனமிறங்கும்படி அரச குடும்பத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது”என்று அவள் முடிக்க.

திரும்பியே பாராது அவளது தங்கையை உணர்ந்தவன் அவளது சேட்டையில் சற்றே முறுவலித்தான்.

“இன்னும் மனம் இறங்கவில்லையா தாங்கள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அரசே,முரசு கொட்ட வேண்டுமா? பூமழை தூவவேண்டுமா? அல்லது தங்களைப் பற்றி புகழ்ந்து பாட வேண்டுமா? கூறுங்கள் அரசே கூறுங்கள்”என்று அவள் அவன் முன் வந்து நிற்க.

அவளை அவன் முறைக்க ,’எதுக்கு இப்போ அண்ணாத்த முறைக்குறாரு,என்னாவா இருக்கும்’என்று மனதோடு நினைத்தவள் ‘சரி சமாளிப்போம்’ என்று தைரியத்தில் “பிடிச்சுட்டேன்” எனறு கத்திவிட்டு “அம்மா களி செய்யலனு தானே கோவம் இப்போவே போய் செய்ய செல்றேன்”என்று அவள் முடிக்க .

அவன் சரியாக குச்சியை எடுக்க “ஆத்தி வன்முறை “என்று கத்தியவள் “இங்கபாருண்ணா நீ சாப்பிட்டா சாப்பிடு சாப்டாட்டி போ,அம்மாவும் இன்னும் சாப்பிடலை இனி உன் இஷ்டம்”என்று முடித்துவிட இம்முறை அந்த பலமான ஆயுதம் அவனைத் தாக்கியதில், மனமிறங்கியவன் கீழே சென்றான்.

“அப்பாடி தப்பித்தோம்,இதை முன்னமே சொல்லியிருக்கலாம்” என்று கூறியவள் கீழே சென்றுவிட்டாள்.

“ஏன்மா நீங்க இன்னும் சாப்பிடாம இருக்கீங்க?”என்று அவன் பரிவுடன் கேட்க.

“அதையே நானும் கேட்கலாமே பா”என்று அவர் அவனை பார்க்க.

“அது…எனக்கு பசியில்லை” என்றான் எங்கோ பார்த்தப்படி.

“உன் வயசுக்கே பசியில்லைன்னா, எனக்கு என்னப்பா எனக்கும் பசியில்லை”என்று அவர் அவனை முறைக்க.

அமைதியாக உணவுன்ன அமர்ந்து விட்டான்.பேருக்கு கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டான்.

அவன் மதுரையிலிருந்த வந்த நாள்முதல் அவன் படும் வேதனையை கண்டவர் மனம் கலங்கவே செய்தது. ஏற்கனவே ஒரு மகனை பிரிந்து துன்பத்தில் வாடுபவருக்கு இது மேலும் வேதனையையே தந்தது.

‘தன் மகன்களின் நிலை என்று சரி ஆகுமோ’என்று நினைத்துக்கொண்டவர் அனைத்தையும் எடுத்து வைக்க சென்றுவிட்டார்.

*********

இரண்டாம் நாள் காலை. 

இன்றே வங்கியில் சேர சொன்னதால் பரபரப்பாய் கிளம்பிக்கொண்டிருந்தான் மித்ரன்.

நேற்றைய வேலைகளை இரவு இரண்டு மணிவரை பார்த்துவிட்டு தாமதமாகவே உறங்க சென்றனர். .எனினும் முதல் நாளே விடுப்பு எடுக்க மனமின்றி கிளம்பிக்கொண்டிருந்தான்.

அந்த காலையிலும் அவனுக்கு உணவைச் செய்துக்கொண்டிருந்த தாயைக் கண்டவன் “ஏன்மா தூங்கியிருக்கலாமே”என்றான்.

“ஏன்,நீ தூங்கவில்லை? அது உன் பொறுப்பு,இது என் பொறுப்பு”என்று அழகாய் உணர்த்தியவர்.

அவனுக்கு உணவை பரிமாறினார், நேற்றைய பொழுதில் சரியாக உறங்காமல்,வெளியே பேச்சு சத்தம் கேட்க வெளியே வந்தவளைக் கண்ட மித்ரன்.

“குட் மாரினிங் மீரா” என்றான் பதிலுக்கு குட் மார்னிங் சொன்னவள்.

“அம்மா காபி “என்றாள்.

“மீரா,இங்க உனக்கு காலேஜ்ல எல்லாம் பேசிட்டேன் டா,நீ ஜஸ்ட் போய்,டீ.சி,ஒரிஜினல்ஸ் மட்டும் கொடுத்தா போதும்,இன்னைக்கு நீ ரெஸ்ட் எடுத்துக்கோ,நாளைக்கு நாம போய் கொடுத்துட்டு வந்திடலாம்” என்று அவன் முடிக்க.

“இல்லண்ணா,நான் இன்னைக்கே போய் கொடுத்திடுறேன்”என்றாள்.

“அண்ணணால இன்னைக்கு லீவ் போட முடியாது டா” என்று அவன் கெஞ்ச.

“உன்னை யாரு மேன் கூப்பிட்ட?” என்றாள்.

“ஏதேய்? அப்போ தனியா போகபோறியா?” என்று அவன் அவளை முறைக்க.

“அண்ணா,என்னலாம் எந்த காக்காவும் தூக்கிட்டு போய்டாது,நீ பயத்தை குறை” என்றாள்.

“என்ன நக்கலா?”என்றான்.

“பின்ன என்ன,நான் அம்மாவை கூட்டிக்கிட்டு போறேன்,மிட் ஆப் தி செமஸ்டர்,ஒன் டே கூட மிஸ் பண்ணக்கூடாது ,அதான் சொல்றேன்,புரிஞ்சுக்கோ”என்றாள்.

சற்று யோசித்தவன்”சரி பாத்து போய்ட்டு வாங்க,ஆட்டோல போய்ட்டு,ஆட்டோலையே வாங்க” என்று கட்டளையாய் (அதில் அன்பே மேலோங்கியது)இட்டவன் பத்திரம் என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

தாயைக் கிளம்பசொல்லிவிட்டு தானும் கிளம்பச்சென்றாள்.

இவளை பார்க்க விதி அன்று அவனை மதுரை அனுப்பியது,இன்று அவனை பார்க்க இவளை சென்னை அனுப்பி உள்ளது.

இந்த விதியின் கண்ணாமூச்சி ஆட்டம் விசித்திரமாகவே உள்ளது,இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்று விடைப்பெறும்? விளையாட்டு வினையாகுமா? 

…வருவாள் மீரா…