உள்ளத்தின் காதல் நீங்காதடி-22

பெண்ணின் மனதில் காதல் வந்தால் அவளுக்கு இருக்கும் அத்தனை துன்பமும் மறையுமாம்,உண்மைதானோ,காதல் வந்தால் அவள் அதை மட்டும் தானே நினைப்பாள்…

காதல்-22

மீராவை இடிக்க வந்த லாரி என்ற எமனிடமிருந்து அவளை பாதுகாக்க வந்தவன் மீராவின் தேவன். 

ஆம், உதய் கண நேரத்தில் அவளை லாரியிலிருந்து காப்பாற்றி இருந்தான், அவளுக்கு அப்பொழுது தான் சுயநினைவும் வந்தது திக்பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் அவள். 

உதய் கோபத்திலிருந்தான் “ஏ அறிவில்லையா உனக்கு?” என்று கத்த துவங்கினான். 

தான் லாரியில் அடி பட இருந்ததை கூட தாங்கி கொண்டவளால் உதய்யின் கோப வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை, அத்தனை பாசம் அவனிடத்தில்,  கண்கள் கண்ணீரில் கலங்க அவள் தலை குனிய உதய்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

அவளின் தோள்களை பற்றிக்கொண்டவன், “ஹே, ஜிலேபி, அழக்கூடாது அதான் ஒன்னும் ஆகலைல பயப்படாத, நான் இருக்கேன், இனிமே இப்படி ரோட்ல நடக்க கூடாது சரியா?” என்றான் பாசத்தையும் கண்டிப்பையும் ஒரே குரலில் கொண்டுவந்து. 

உதய்யின் ஜிலேபி என்ற அழைப்பிலே மீரா அமைதியடைந்துவிட்டாள், மீரா மீது எப்பொழுது உதய்க்கு அதிக பாசம் வருமோ அப்பொழுது மட்டும் இந்த ஜிலேபி வெளியில் வரும் பெயர்க்காரணம் பெருசாலாம் ஒன்னுமில்லை மீராவிற்கு ஜிலேபி என்றாலே உயிர், ஜிலேபியை அவள் சாப்பிடும் அழகு இருக்கே, ஒரு ஜிலேபி சாப்பிடுவதற்குள் மொத்த ட்ரஸ்ஸையும் அழுக்காக்கி விடுவாள், அதில் விளையாட்டாய் அவளை கிண்டலடிக்க உதய் ஜிலேபி என்று கூப்பிட, அவன் கூப்பிட்ட அழகில் மயங்கியவள் அடிக்கடி அதை கூற கேட்பாள். 

உதய்யோ, “நீ எப்போலாம் குட் கேர்ள்லா இருப்பியோ அப்போ நான் கூப்பிடுறேன்” என்று முடித்திருந்தான். அதை இப்பொழுது நினைத்தவள் உதட்டில் சிறு முறுவல் வந்தது. அதை மறைத்தவள்.

“ஓகே ஓகே,அப்போ நானும் இனிமே உன்ன நீ நல்ல பையனா இருக்கும்போதுலாம் தரண்னு சொல்றேன் ஓகே வா”

“ஹம்…ஓகே இனிமே நீ அழவே கூடாது சரியா?”

“சரி, நான் அழலை நீ இனிமே என்னை திட்டாதே” என்றாள் அது தான் முக்கியம் என்பது போல். 

“சரி திட்டலை இப்போ சிரி” என்றான் அவனும் அவள் தலையில் தட்டி. மென்னகை புரிந்தாள் மீரா. 

பக்கத்து கடையில் அவளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்த உதய் “நீ வீட்டுக்கு போ மீரா, நான் ஸ்விமிங் கிளாஸ் முடிச்சுட்டு வந்து உன்னை பாக்குறேன்” என்றான். 

பின் ஏதோ நினைத்தவனாக “ஏய், வீட்டுக்கு போக தெரியுமா?” என்றான். 

அவள் உதட்டை பிதுக்கிய அழகிலே தெரிந்தது, அவளுக்கு தெரியாது என்பது அவனுக்கு ஸ்விமிங் கிளாஸிற்கு லேட் ஆகிவிட்டிருந்தது, சரி மெயின் ரோட்டை கடந்து வீடு உள்ள தெருவில் விட்டுவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்தவன் அவளை அழைத்து சென்று சொன்னது போலவே அவர்கள் வீடு இருக்கும் தெருவில் விட்டவன் “பாத்து வீட்டுக்கு போ” என்று கூறி சென்றுவிட்டான். 

மீனாவிடம் செல்வதற்கு மீராவிற்கு பயமாக இருந்தது அவர் திட்டுவாரோ என்று, அத்தை வீடு வேண்டாம் அத்தையும் திட்டுவாங்க, அதனால் வேறு வழியே இல்லாமல் தன் வீட்டிற்கு சென்றாள். 

வீடு பூட்டியிருந்தது, சாவி எப்பொழுதும் ஜன்னலிலே இருக்கும் அதை எடுத்து சிரமப்பட்டு கதவை திறந்து உள்ளே சென்றவளை வரவேற்றது மீனாவின் சங்கிலி. அதை அவள் கையில் எடுத்து பார்த்தாள் மீனாட்சியின் கழுத்தில் அவள் இதை பார்த்திருக்கிறாள். 

“அத்தை செயின் நம்ம வீட்டுக்கு எப்படி வந்தது” என்று அவள் வாய்விட்டே புலம்பிய அந்த நேரம் பார்த்து. 

“பாத்தீங்களா அக்கா? இப்போ நம்புறீங்களா என்னை, எத்தனை தடவை சொன்னேன் கொஞ்சம் ஆச்சும் கேட்டீங்களா?” ராகினிதான் பெருங்குரலெடுத்து கத்தினாள். 

மீரா பயந்தேவிட்டாள்,  முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை அவள் முழிக்கையிலே ராகினி அவள் கையிலிருந்த சங்கிலியை பற்றியிருந்தார். 

“சின்ன பிள்ளைன்னு பார்த்தா இது இத்தனை கேவலமாய் இருக்கிறது, அம்மா புத்தி கொஞ்சமாச்சும் இருக்கும்ல” என்று ராகினி வசைப்பாட துவங்க மீராவின் கண்கள் நன்றாகவே கலங்கதுவங்கியது. 

அவளுக்கு அவள் அத்தை திட்டியது பற்றி கவலை இல்லை ஆனால் மீனாட்சி தன் மேல் அத்தனை பாசம் காட்டியவர் ஆகிற்றே இப்பொழுது அவர் ஒன்றும் பேசாமல் மீராவை பார்த்த பார்வை அவளுக்கு அழுகையை தந்தது. 

மீனாவிற்கு ஒன்றும் புரியாத நிலை மீரா இப்படி செய்யமாட்டாள் ஆனால் சாட்சியுடன் பிடித்தாயிற்று இவ்வாறு அவரது மனம் மாற்றி மாற்றி யோசித்துக்கொண்டிருந்தது. 

அவருக்கு இதை எப்படி கையாளுவது என்றே புரியவில்லை, அவரின் குழப்பமான மனநிலையை அவரின் தோற்றம் வைத்தே கண்டுக்கொண்ட ராகினி அவரை மேலும் குழப்பினாள். 

“என்னக்கா சும்மா இருக்கீங்க இப்போ கூட நீங்க நம்பாட்டி இந்த உலகத்துல உங்கள மாதிரி முட்டாள் இருக்க மாட்டாங்க அக்கா, நான் அப்பவே சொன்னேன் நீங்க என்னை தான் நம்பல இப்போ நீங்களே பாத்தீங்கல்ல இப்போ என்ன சொல்ல போறீங்க” என்று விஷத்தை ஏற்ற. 

ராகினியை பார்த்த மீனா அவளை முறைத்து விட்டு மீராவை பார்த்து திரும்பியவர் அவள் உயரத்திற்கு குனிந்து “மீரா, பயப்படாத டா, நான் உன்னை ஒன்னும் சொல்லலை நீ இதை செஞ்சியோ, செய்யலையோ அது எனக்கு தேவையில்லை, ஆனால் இது ரொம்பவும் தவறான விஷயம் இது என்னைக்கும் நீ பண்ணவே கூடாது சரியா” என்றார் அன்பாக. ( மீனாட்சியின் குழப்பமான மனநிலையில் அவருக்கு இப்படித்தான் பேச தோன்றியது அவரின் நிலையோ அவள் செய்திருக்கமாட்டாள் என்று மொத்தமாய் நம்பி அவளுக்கு வக்காளத்து வாங்க முடியாத நிலை அதோடு அவள் ஒரு வேலை செய்திருந்தாள் அதை திருத்தும் உரிமை தனக்கிருக்கிறதாய் அவருக்கு தோன்றியது)

மீராவிற்கு அவரின் இறுதி வாக்கியமே மனதில் பதிந்தது, ‘அப்படினா அத்தை என்னை நம்பலை, அவ்ளோ தான் எல்லாம் முடிந்தது, இனி யாரும் என்னோட பேச மாட்டாங்க, என்னை யாரும் நம்ப மாட்டாங்களா?’ அந்த குழந்தையின் மனம் வேதனையில் உழன்றது. 

தன் அன்னையுடன் வந்திருந்த சஞ்சயோ, “ச்சீ, பேட் கேர்ள் நீ இவ்ளோ பேட் ஆ? இது தெரியாம உன்கூட பழகியிருக்கேன், இனிமே நீ என் ஃபிரண்ட் கிடையாது, ஐ ஹேட் யூ, உன்கூட இனி பேசவே மாட்டேன், உதய்யையும் பேச வேண்டாம் சொல்லிடுறேன்” என்று சொல்லிவிட. 

நொறுங்கிவிட்டாள் மீரா, இத்தனை நாள் அவ்ளோ அழகாய் பழகியவன் இன்று இப்படி கூறுகிறானே, இதே மாதிரி உதய் கூறிவிட்டால் அவ்ளோ தான் அதை தாங்கி கொள்கிற சக்தி அவளிடத்தில் இல்லை . 

“என்னக்கா நீங்க இவ்ளோ அமைதியா பேசிட்டு இருக்கீங்க நானா இருந்தா கண்ணத்துலையே ஒன்னு வெச்சிருப்பேன்” என்று அவர் மீராவை நெறுங்க அவரின் கையை தடுத்தது ஒரு கை. 

அது ராதாவின் கை “என்னாச்சு அண்ணி” என்றார் அவர் கடுமையுடன். 

தாயை கண்டதும் மீராவிற்கு சற்றே நிம்மதி இருந்தும் ஒரு பயம் எங்கே தாயும் நம்மை அடித்துவிடுவாரோ என்று. ஏனென்றால் அனுராதா அவளிடம் கண்டிப்பை காட்டி வளர்த்ததே அதிகம். 

அவரின் கடுமையில் ராகினிக்கு கோபம் வந்துவிட்டது “என்ன ஓவரா கோபப்படுறீங்க, என்ன நினச்சுட்டு இருக்கீங்க, பெண் பிள்ளையை ஒழுங்கா வளர்க்க தெரியலை என்னை சொல்ல வந்துட்டா” என்றார் கத்தி. 

அனுராதாவிற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை, அதை விட யார் பிள்ளை வளரப்பை பற்றி பேசுவது என்றில்லை  “ம்ப்ச் என்ன சொல்றீங்க?” என்றார் வெறுப்புடன். 

“உன் பொண்ணை கேளு, திருடீட்டு வந்து நிக்குறா, என் மானமே போச்சு” என்றாள் ராகினி. 

 

அந்த வார்த்தை அனுராதாவை சென்றடைய சிறிது நேரம் தேவைப்பட்டது “என்ன சொன்னீங்க?” என்றார் நம்பாத பாவனையில். 

“ஏன் அவ்ளோ நல்லா இருக்கா இதை கேட்க, உன் பொண்ணு மீனாட்சிக்கா சங்கிலியை திருடிட்டு வந்து உன் வீட்டுல வச்சிருக்கா நாங்க கையும் களவுமா பிடிச்சோம்” என்று அவர் முடிக்கவில்லை. 

“அண்ணி” என்று கத்தியவர் “யாரு பிள்ளை மேல யாரு பழி போடுறது, என் பொண்ணு அப்படி செய்யுறவ கிடையவே கிடையாது அவளை பத்தி எனக்கு தெரியும்” என்றார் அந்த பாசக்கார தாய். 

“இதோ பார்ரா, ஆமா நான் பொழுது போகாம பழி போடுறேன், இங்க பாரு உன் மக திருடிட்டு வந்த சங்கிலி,  கண் முன்னையே பார்த்தோம் இவ கையில இதை வெச்சிருந்ததை” என்றார் இரக்கமே இல்லாமல். 

அனுராதாவிற்கு ஒன்னுமே புரியவில்லை எங்கோ தவறு நடந்திருக்கிறது ஆனால் எங்கே? தாயின் யோசனையை கண்டவள் ‘போச்சு, அம்மாவும் நம்மலை திட்ட போறாங்க யாருமே என்னை நம்பமாட்டாங்களா?’ என்று அவள் மனம் துடித்தது. 

ராதாவின் யோசனை தவறாய் புரிந்துக்கொண்ட ராகினி “என்ன அமைதி, அவ எதையும் சுயமா செஞ்சிருக்க மாட்டா, அத்தனை அறிவில்லை அவளுக்கு, இது யாரோ சொல்லிக்கொடுத்து நடந்திருக்கு” என்று அவள் நரம்பில்லாமல் பேச. 

அவளை தீப்பார்வை பார்த்த ராதா “மீரா” என்று தன் மகளை அழைக்க. 

தாயின் குரலை கேட்டு பயந்தவள் பின்னால் நகர்ந்தாள் அது தான் ராதாவிற்கு கோபத்தை வரவழைத்தது. 

“மீரா, அம்மா கூப்பிடுறேன், பக்கத்துல வா” என்றார். 

“இல்ல இல்ல நான் வரமாட்டேன் எங்கையும் வரமாட்டேன் நான் எதுவும் பண்ணலை” என்று கதறியவள் வாசலை நோக்கி ஓடினாள். 

அவளை பிடிக்க பின்னே சென்றவரை தடுத்த ராகினி “என்ன பிடிப்பட்டதும் இப்படி ஒரு டிராமாவா?” என்றார் மனசாட்சியே இல்லாமல். 

வெளியே ஓடிய மீரா இடித்தது உதய் மீது அவளின் அழுத முகம் இவனை வாட்ட அவன் அடுத்து ஏதோ கேட்கவரும்முன். அவனை விட்டு வெகு தூரம் அவள் ஓடியிருந்தாள் இருந்தும் அவனும் அவள் ஓடிய திசையிலே அவளை பின்தொடர்ந்தான். 

மீரா முதலில் சென்று பாதி மட்டுமே திறந்திருந்த மெக்கானிக் ஷெட்டிற்குள் பதுங்கிவிட்டிருந்தாள். அவளை தொடர்ந்து வந்த உதய்க்கு அவள் எங்கே சென்றாள் என்பதே தெரியவில்லை. ஷெட்டை பாதி மூடிவிட்டு ஒரு பைக் டெலிவரி கொடுக்க சென்றிருந்த ஓனர் வந்துவிடவே. 

அவரிடத்தில் அவன் மீராவை பற்றி கேட்க ‘அப்படி யாரையும் தான் பார்க்கவில்லை’ என்றுக்கூறி கொண்டே ஷெட்டை மூடி பூட்டுபோட்டுவிட்டார். 

அழுதழுது வீங்கிய முகத்துடன் பயத்தில் அமர்ந்திருந்த மீராவிற்கு ‘ஷட்டர் அடைத்ததும் மகிழ்ச்சியாய் இருந்தது, யாரும் தன்னை கண்டுபிடிக்கமுடியாது’ என்று. 

உதய் அவளை காணாது நேராக மீரா வீட்டிற்கு சென்றவன் “ஆன்ட்டி மீராவை எங்கையும் காணோம்” என்றான். 

அதில் கலவரம் அடைந்த ராதா “இங்க பாருங்க இப்பவும் சொல்றேன் என் பொண்ணு அப்படி செய்ய வாய்ப்பேயில்லை, அவளை நான் அப்படி வளக்கலை” என்று உறுதியுடன் கூறியவர். விறுவிறுவென்று சென்றிருந்தார் தன் மகளை தேடி. 

எங்கெங்கோ தேடினார் இரு குடும்பமும் முதலில் குழப்பத்திலிருந்த மீனாட்சியும் ராதாவின் பேச்சிற்கு பின் தெளிவடைந்தவர் கணவருக்கு அழைத்து மீராவை தேடச்சொன்னார். 

எங்கு தேடியும் மீரா கிடைக்கவே இல்லை மொத்த குடும்பமும் அழுகையில் கரைந்தது. 

இங்கு மீரா அழுதழுது உறங்கி  போனாள் அவள் கண் விழிக்கும்பொழுது இருட்டிவிட்டிருந்தது. வெளியில் இடியும், மின்னலும் வேறு கோர தாண்டவம் புரிந்துக்கொண்டிருந்தது. 

பயத்தில் நடுங்கினாள் மீரா, சுற்றி இருந்த தோற்றம் கிலியை கொடுக்க எழுந்து ஷட்டர் பக்கம் சென்றவள் அதை ஓங்கி தட்டினாள் “அம்மா” என்ற அலறலுடன் ஆனால் கதவு திறக்கவேயில்லை பயத்தில் கால்கள் நடுங்க குரல் தந்தியடிக்க அந்த இடத்தில் கைகளால் துளாவியவளுக்கு கிடைத்தது மேட்ச் பாக்ஸ். 

இதை வைத்து என்ன செய்ய ரொம்ப இருட்டா இருக்கு ஸ்விட்ச் இருக்கா பாக்கலாம் என்று நினைத்தவள் அதை பற்ற வைக்க கை நடுங்கியதால் அவள் பற்றிய வேகத்தில் தீக்குச்சி நெருப்பு பிலம்புடன் கீழே விழுந்தது ஷெட்டில் ஆங்காங்கே ஆயிள் சிந்தியிருக்கவே அது சரியாக அதில் விழுந்துவிட நெறுப்பு அந்த இடத்தை சூழ்ந்தது. 

பயத்தில் அலறிவிட்டவள் பின்னே நகர்ந்தாள் சுவற்றில் முட்டிக்கொண்டவளின் பின்தலையில் அடிபட்டது,இரத்த கசிவும் ஏற்பட்டது அதில் அவள் சுயநினைவை இழந்திருந்தாள்.

இரண்டு நாள் கழித்து அவள் கண் விழித்த பொழுது அவள் ஹாஸ்பிட்டலில் இருந்தாள் பக்கத்தில் தாயின் அழுதமுகமும், தந்தையின் பயம் படிந்த முகமும்,அண்ணனின் துடிப்பும் அவளை வரவேற்றது. 

அவள் கண் விழித்ததை பார்த்த ராதா “மீரா குட்டி” என்று அவளை அணைத்துக்கொண்டவர் அவள் முகமெங்கும் முத்தமிட, தந்தையும் அவளை மறுபக்கம் வந்து அணைத்துக்கொண்டார். 

“ஏன்டி இப்படி செஞ்ச” என்று அவர் அழுகையின் ஊடே கேட்க, அவள் அமைதியாய் இருந்தாள். 

ராதாவை அமைதி படுத்திய குணசேகரன் “மீரா, ரெஸ்ட் எடு டா கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போகலாம்” என்றார். 

இப்பொழுது மீரா ஒன்றும் பேசாமல் இருக்க பெற்றோருக்கு பயம் பிடித்துக்கொண்டது.

“மீரா” என்று தாயும் தந்தை ஒன்றாய் பதற. 

“என்னாச்சு எனக்கு?” என்று அவள் கேட்க. 

ராதா தலையில் அடித்துக்கொண்டு அழ குணசேகரன் தான் அவரை சமாதனம் செய்தார் “ராதா இரு நான் கேட்கிறேன், அவ பயந்து போய் இருக்கா, நீ இப்படி பண்ணக்கூடாது” என்றார். 

குணசேகரன் மீராவிடம் சென்றவர் “மீரா, ஒன்னுமில்லடா உன்ன நாங்க காப்பாத்திட்டோம்”என்றார்

அவள் புரியாது விழிக்க அவளது தலையை கோதியவர் “தங்கம்,நீ ஷெட்ல அங்க ஃபையர்”என்று அவர் துவங்கும்போது. மீராவின் முகம் வெளிரி,கை ,கால்கள் நெடுங்க,உடல் முழுவதும் வேர்த்து “காப்பாத்துங்க,ஹெல்ப் ஹெல்ப்”என்று கத்தயவளை சமாதானம் செய்ய வெகு நேரம் பிடித்தது.

சாவின் விளிம்பை தொட்டுவிட்டு வந்திருக்கும் மகள் துடிப்பதை கண் முன்னே பார்த்தவருக்கு ஈரகுழயே நடுங்கியது,மீரா அத்தனை  ஆர்ப்பாட்டம் செய்தாள்.

அவளது அளறல் கேட்டு ஓடிவந்த நர்ஸ் அவளுக்கு மயக்கமருந்தை போட்டு படுக்கவைத்தார்.

அவள் மயங்கியதும் அவளை பரிசோதித்த டாக்டர் “நடந்த சம்பவங்கள் அவளை வெகுவாய் பாதித்திருக்கிறது,பழசை நீங்க ஞியாபக படுத்துற மாதிரி எதையும் சொல்லாதீங்க,காட்டாதீங்க”என்று எச்சிரித்து சென்றனர்.

 

மீராவை கவலை தேய்ந்த முகத்துடன் அவர்கள் மூவரும் பார்த்துக்கொண்டிருக்க,மருந்தின் வீரியத்தின் இடையிலும் அவள் கதறல்,அழுகை,அளறல்,என்று பல முறை கதறிதுடிக்க அவளை விட அதிகம் துடித்தது அவளது குடும்பம்.

மீராவின் இதே நிலை அடுத்த இரண்டு நாட்ஙளுக்கும் நீடித்தது.அந்த குடும்பம் மொத்தமும் சோகத்தில் ஆழ்ந்தது, நன்றாக யோசித்து அவர்கள் எடுத்த முடிவோ ஊரை காலி செய்வது.

இரண்டாம் நாளின் முடிவில் கண் விழித்தவளை ராதா அன்னையாய் தாங்கியவர் அவளை எந்நேரமும் அணலப்பிலே வைத்திருந்தார்.மறுநாளில் அவளை டிஸ்ஜார்ஜ் செய்ய அனுமதிவழங்க, என்ன செய்வது என்று ராதா கேட்க குணசேகரன் அதற்கான தீர்வை கூறினார்.

“ராதா, நீ இப்போதைக்கு பாப்பாவை கூட்டிட்டு உன் அம்மா வீட்டுக்கு போ, நான் என்ன பண்ண முடியும்னு பாத்திட்டு வரேன்” என்றார். 

“இல்லைங்க அது வந்து” என்று அவர் மறுபடியும் ஆரம்பிக்க. 

“சொன்னதை செய் ராதா, நான் இவங்க ரெண்டு பேரோட டீசி, அப்றம் நம்மளோட திங்க்ஸ், அதோட எந்த ஊருனு டிசைட் பண்ணிட்டு எல்லாமே செட் பண்ணிட்டு உங்களை வந்து கூப்பிட்டுகிறேன்” என்றார் திட்டவட்டமாக. 

அதன்படி அவர் தேர்ந்தெடுத்த ஊரே மதுரை தன் நெருங்கிய நண்பன் மதுரையில் இருந்ததால் அவரின் மூலம் அங்கு ஒரு வீட்டை பிடித்தவர். பொருட்களை எடுக்க தன் வீடு வந்தபோதும் அவரை எதிர்க்கொண்டான் உதய். 

அவன் மீராவின் உடல்நிலையை பற்றி தெரிந்துக்கொண்டவன் அவர்களை ஊரை காலி பண்ணும் செய்திக்கேட்டு அவனுக்குள் ஏதோ ஒரு ஏமாற்றம் அது என்ன? எதனால் அவனுக்கே தெரியவில்லை. 

“அவரிடம் எங்கே செல்கிறீர்கள்?” என்று அவன் கேட்க “இன்னும் முடிவாகலப்பா” என்று அவர் முடித்துவிட்டிருந்தார். அதனால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது அவனுக்கு தெரியாமல் போயிற்று. 

ஆனால் அவளின் நலனில் ஒரு நிம்மதி ஏற்பட்டது, அதன் பின் ஒரே மாதத்தில் வீட்டில் பொருளை அடுக்கிவைத்து, பிள்ளைகள் இருவரையும் ஸ்கூல் சேர்த்து மதுரையில் செட்டில் ஆகி அவர்கள் வாழ்வு நடந்தது. 

கடந்த காலத்திலிருந்து வெளியே வந்தவளாக உதய்யை பார்த்தாள் மீரா. 

அவளின் பார்வை உணர்ந்து உதய் அவளை பார்த்தவன் புன்முருவல் பூத்தான். அவள் அவனை முறைக்க. 

“எல்லாம் சரி எதுக்கு ஊரை விட்டு போன?” என்றான் உதய் அதற்கும் அவள் முறைக்க. 

மீராவிற்கு, உதய் மீது கோபம் இருந்தது அன்று அவள் சாவை தொட்டுவிட்டு வந்திருந்த பொழுதில் கூட உதய் மீராவை ஹாஸ்பிட்டலில் பார்க்கவில்லை எனில் அவன் தன்னை திருடியாக எண்ணிவிட்டதாகவே அவள் நினைத்தாள். 

அதனால் தான் இனி அங்கு செல்லவே வேண்டாம் என்று முடிவெடுத்தவளாக அவள் தடாலடியாக மறுத்தாள் ஆனால் நடந்த கதையே வேறு அவள் கண்விழிப்பதற்கு சரியாக ஐந்து நிமிடத்திற்கு முன் தான் உதய் ஹாஸ்பிட்டல் விட்டு சென்றிருந்தான். 

“சரி உன்னோட பாச பார்வை போதும், நான் சொல்றதை இப்போ கேக்குறியா?” என்றான் உதய். 

அவள் அவனை என்ன என்பது போல் பார்க்க…

_காதல் தொடரும்_

(மறுபடியும் கொசுவத்தி சுருளே…ஹி…ஹி…உதய் சில தகவல் சொல்ல போறான், அதுக்கு அப்றம் இன்னும் ஒரு கொசுவத்தி சுருள் அதோடு எல்லாம் சுபம்…அதுவரை அட்ஜஸ்ட் கரோ செல்லம்ஸ்…ஹி…ஹி)