உழவனும் பொங்கலும்

உழவனும் பொங்கலும்

-யுவகார்த்திகா 

வீட்டின் முன் வாசலில் புது மண் அடுப்பு எடுத்து, அதில் புது பாத்திரம் வைத்து, அதிலிட்ட பசும் பால் பொங்கி வர “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” வாயாற கூவி மனதார கைகூப்பி வணங்கி நின்றது அந்த எளிய குடும்பம்.

பொங்கி வழியும் பாலில் அளவாய் தண்ணீர் விட்டு உலை கொதித்து வர அதில் பச்சரிசி இட்ட சௌந்தரி, “தேனு அச்சு வெல்லத்தை தட்டி, ஏலக்காயை இடிச்சு எடுத்துட்டு வா” மகளிடம் கூற தேனு, “சரி மா” என்று புது தாவணி சரசரக்க உள்ளே ஓடினாள்.

“பூசைக்கு எல்லா எடுத்து வையி புள்ள, நான் போயி மஞ்ச கொத்தும் கரும்பும் எடுத்து வாரன்” என்று கிளம்பினார் சுடலைசாமி.

“விரசா வந்துடுயா!!” சௌந்தரியின் குரல் அவர் பின்னோடு மோதியது.

“ஏலே கனகு, வேந்தனை பாத்தியால” புதுப்பானையில் பொங்கல் கிண்டிய படி வழியில் நடந்த கனகராஜனை நிறுத்தி குரல் கொடுத்தாள் சௌந்தரி.

“என்னை கேட்டா எனக்கெப்படி தெரியுமக்கா, உன்ற புள்ள உச்சி பொழுதுக்கு தானே உறக்கத்தை விட்டு வருவான், உள்ளார தான் உருண்டு கிடப்பான் போய் பாத்துக்கோ” கனகு இடக்காய் பதில் தர,

“இன்னைக்கு வருச ஒரு நாளா, பயபுள்ள கருக்கல்லயே எழுந்து வெளியே கிளம்பிட்டான்லே, பொங்க பானை வைக்கறதுக்குள்ள வந்துடுயானு சொல்லி தான் விட்டேன் இன்னும் காணோமே” அவள் பார்வை வழியை பார்த்து ஏமாந்து கைவேலையை கவனித்தது.

“அட, அவனில்லனா பொங்க பானை பொங்காம போயிடுமா, பச்சரிசி வேகாம போயிடுமா இல்ல அச்சு வெல்லம் தான் ருசிக்காம போயிடுமா? நீ பொங்கலை வைக்கா. பூசை நேரத்துக்கு சரியா வந்துடுவான் உன் மகன், விசனபடாம வேலைய பாரு” அவளின் கவலை தோய்ந்த முகத்தை கவனித்து தேறுதல் சொல்லி நடையைக் கட்டினான்.

“நீ பாத்தா நாஞ்சொன்னேனு வர சொல்லுயா” சௌந்தரி குரல் பின்னோடு ஒலித்தது.

முழுவதும் விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிராமம் அது. தங்கள் உழைப்பால் வளர்ந்த புது நெல்லை அடித்தெடுத்து தோல் நீக்கி, புதுப்பானையில் வேகவைத்து வெல்லமிட்டு, நிலத்தில் விளைந்த காய்கறி, கிழங்கு, கீரை அனைத்தையும் செய்து, உணவெனும் அமுதை ஈந்த சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறி படைக்கும் நிறைவை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

அத்தகைய திருநாளை கொண்டாட அந்த ஊரே புத்தாடை உடுத்தி அணிமணிகள் அலங்கரித்து வந்த புதுப்பெண் போல காட்சியளித்தது. தெருவெல்லாம் வண்ண கோலங்கள், வீடெல்லாம் ‘பொங்கலோ பொங்கல்’ வாழ்த்தொலிகள், புத்தாடை அணிந்து விளையாடி களிக்கும் குழந்தைகள், கரும்பு, மஞ்சள் கொத்து, மாவிலை தோரணங்கள் ஆடும் வீட்டு வாசல்கள் என எங்கும் விழா கோலத்தின் கோலாகலம்.

அத்தனை இனிமையான நாளில் அவன் முகம் மட்டும் இறுகி கிடந்தது. வெறிச்சோடி கிடந்த தென்னந்தோப்பின் நடுவே இருந்த கன்னி கோயிலின் பின்புறம் பொறுமை கரைய காத்து நின்றிருந்தான் வேந்தன்.

கொலுசொலி சலசலக்க வேக நடை போட்டு வந்து அவன் முன் மூச்சு வாங்க நின்றாள் மீனாட்சி. புது புடவை உடுத்தி புது பொலிவாய் வந்து நின்றவளை பார்த்து தன்னை நொந்து கொண்டான் வேந்தன்.

“எவ்வளவு நேரம்டீ காத்து கிடக்கிறது?” அவளிடம் எரிந்து விழ,

“ஆமா, நீங்க ஆம்பள காலங்காத்தால வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு வந்துருவீய, நான் பொம்பள ஆச்சே, பொங்க பானை வைக்கற வேளையில ‘வா புள்ள’னு கூப்படவும் அப்படியே விட்டு வர முடியுமா? அம்மாவ திசைதிருப்பி, அப்பனை சமாளிச்சி, அப்பத்தா கண்ணுல படாம நழுவி வர வேணாமா?” அவளின் வழக்கமான படபட பேச்சில் பொரிந்து தள்ள, வேந்தனின் இறுகிய முகம் இளகியது.

“போதும்டீ ஏன் தாமதம்னு கேட்டதுக்கு இப்படியாடீ பக்கம் பக்கமா வாயடிப்ப” அவன் அலுத்துக்கொள்ள,

“பேச்சு வளக்காத மாமோய், எதுக்கு வர சொன்ன சீக்கிரம் சொல்லு, உன்ன பாக்க வந்தேன்னு வூட்டுக்கு தெரிஞ்சா என் மானம் போகும்” அவள் படபடப்பு குறையவில்லை.

தான் சொல்வதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று இவன் மனம் தயங்கியது.

அவன் அமைதி இவளுக்கு பதட்டத்தை தர, “இப்ப சொல்ல போறீயா நான் கிளம்பவா” அழுத்திக் கேட்டாள்.

“நம்ம கல்யாணத்தை இன்னும் மூனு மாசம் தள்ளி வைக்க வீட்ல பேசலாம்னு முடிவெடுத்திருக்கேன் மீனும்மா, அதான் உன்கிட்ட சொல்லலாம்னு” அவளின் அதிர்ந்த முகம் பார்த்து அவன் நிறுத்த,

“எண்ணி ரெண்டு வாரத்தில கல்யாணத்தை வச்சிகிட்டு இப்ப தள்ளி போட சொன்ன என்ன அர்த்தம் மாமா?” அவள் குரல் உடைந்தது.

அவளுக்கு பதிலாக அவன் பார்வை தென்னங்கீற்றுகள் இழந்து மொட்டையாய் நின்றிருந்த தென்னமரங்கள் மீது பதிந்து மீண்டது.

“உனக்கே தெரியும் மீனு, இப்ப நம்மூரு நிலைம, முதலுக்கே மோசமாகி நிக்கிறோம், கஷ்டத்திலயும் கடன்லயும் நம்ம வாழ்க்கை தொடங்க வேணா புள்ள” வேந்தன் கூற,

“எங்களுக்கும் கூட தான் நட்டமாகிடுச்சு அதுக்காக அப்பா இந்த கல்யாணத்த தள்ள சொல்லலியே நகைநட்டு வாங்க கடன் கேட்டு அலைஞ்சுட்டு தானே இருக்காரு” அவள் மனம் பிசைய சொன்னாள்.

“அதான் நானும் சொல்றேன், நம்ம ரெண்டு வீடும் கஷ்டப்பட்டு நம்ம கல்யாணம் நடக்க வேணாம், கொஞ்ச நாள் நாம பொறுத்திருந்தா நிறைவா கட்டிக்கலாம்” தன் முடிவை உறுதியாக சொல்ல,

“முடிவெடுத்துட்டு என்கிட்ட சொல்றீரு, அதையும் வருச ஒருநாளு இன்னைக்கு தான் சொல்லனுமா, எப்படியோ செய்யி, நான் உனக்காக காத்திருக்கேன் மறந்துடாதீரு” என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள். அவன் சொல்லும் நிலையும் புரிந்தாலும் கண்கள் கலங்கவே செய்தது.

“ஏய் புள்ள, அப்ப இந்த மாமன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” வேந்தன் குரல் பின்னோடு மோத, நின்று திரும்பி அவனை முறைத்து விட்டு வேகநடையோடு சென்று விட்டாள்.

அவனைதேடி வந்த கனகராஜ், “ஏலே மாப்புள அங்கன அக்கா வழிய வழிய பாத்துட்டு கிடக்கு நீ இங்க என்னல செய்றே?”

“பெருசா ஒன்னுல்ல மாமா” என்றவன் வீட்டை நோக்கி நடந்தபடி தான் எடுத்த முடிவை சொல்ல, “நாள் குறிச்ச கண்ணாலத்தை தள்ளி வைக்கிறது சரியில்ல வேந்தா, மீனாட்சி மனசொடஞ்சி போயிருக்குமேல” அவன் வருந்தி சொல்ல, வேந்தன் முகமும் வருத்தத்தை காட்டியது.

“இப்ப வேறவழி இல்லையே மாமா?

“எப்படி டா உனக்கு இந்த எண்ணம் வந்துச்சு”

“எல்லாம் என் மாமன் மக என்னை தவிர யாரையும் கட்டிக்கிட மாட்டாங்கிற தைரியம் தான்” வேந்தன் மீசையை முறுக்கி சிரித்து சொல்ல, “என்னவோல எனக்கு சரிய படல, பூசைக்கு நேரமாவுது பாரு நீ கிளம்பு” என்ற கனகராஜ் விடைப்பெற்றுக் கொண்டான்.

பூஜைக்கு எல்லாம் தயாராய் இருக்க வேந்தன் வந்ததும் பூசணி இலையில் சக்கரை பொங்கல், உணவு வகைகள் படையலிட்டு கற்பூர ஆராதனை காட்டி சூரியனுக்கு நன்றி சொல்லி வணங்கினர்.

சற்று பொறுத்து வேந்தன் தன் முடிவை வீட்டில் சொல்ல, சுடலைசாமி, “அட போடா கூறுக்கெட்ட பயலே, இதுக்காகவா கண்ணாலத்தை தள்ளி போடுவ” என்று ஆதங்கப்பட்டார்.

“போனமாசம் அடிச்ச அடுத்தடுத்த புயல்லயும் விடாம பேஞ்ச மழையிலயும் அறுவடைக்கு தயாராகி இருந்த நெல்லு மொத்தமா வீணா போயி, போட்ட முதலுக்கு கூட வெள்ளாமை வீடு வந்து சேரல, முதலுக்கு வாங்கின கடனே அடைக்க முடியல, அதுக்கும் மேல கடன் வாங்கி என் கல்யாணம் நடக்கனுமா பா?” வேந்தனும் ஆதங்கமாகவே கேட்டான்.

“வருசா வருசம் புயல், மழை வரது புதுசா என்ன? நாம உழைப்பு வீணா போனது கஷ்டந்தான் வேந்தா, அதுக்காக வூட்டு சுப காரியத்த தள்ளி வைக்கிறது நல்லதில்ல” சௌந்தரியும் எடுத்து சொன்னார்.

“எண்ணி மூனு மாசம் தான ம்மா, அடுத்த வெள்ளாமைக்கு, ஊருக்கே கறி விருந்து வச்சிடலாம்” வேந்தன் நம்பிக்கை கூற,

“கஷ்டமில்லாம கல்லாணத்த முடிக்கனும்னு நீ நினைக்கிறது நல்லது தான் வேந்தா, அதுக்காக முடிவு பண்ண முகூர்த்தத்தை இம்புட்டு கிட்டக்க வந்து மாத்தறது சரியில்ல”

“பார்த்து பார்த்து பக்குவமா வளர்த்த பயிறு ஒன்னுமில்லாம போச்சு மனசு கிடந்து அடிக்கிறப்ப கல்யாணந்தா அவசியமா போங்க பா” வேந்தன் பதில் நொந்தபடி வந்தது. அவன் படிப்பை முடித்து விவசாயத்தை கையிலெடுத்த பிறகு சந்திக்கும் நட்டம், அதனால உள்ளுக்குள் நொறுங்கி போயிருந்தான்.

“லாபம், நட்டம் பாக்கறதுக்கு விவசாயம் தொழில் மட்டும் கிடையாதுல, அது நம்ம பசியை தீர்க்கற சோறு! நம்ம ஊரு மொத்தமா தான் நட்டமாச்சு, அதுக்காக யாராவது பொங்கல் கொண்டாடாம இருக்கோமா? இல்லல, புயலடிச்சாலும் வெள்ளம் வந்தாலும் வெயிலடிச்சாலும் லாபமானாலும் நட்டமானாலும் நாம விதைச்சு வளர்த்துட்டு தான்ல இருப்போம். ஏனா நாம தொட்ட அரிசி தான் உலகத்தோட பசியை ஆத்துது” மண்ணில் ஊறிய விவசாயியாக சுடலைசாமி அழுத்தம் திருத்தமாக பேச, நிதர்சனம் உணர்ந்து வேந்தன் மனமும் சற்று தெளிவது போலிருந்தது.

“குறிச்ச தேதில என் மகன் கண்ணாலத்தை நடத்தி வைக்கிறது என் பொறுப்புல, நீ வீணா மனச உலப்பிக்காம, நாளைக்கு ஐல்லிக்கட்டுக்கு நம்ம கருப்பனை தயார் பண்ணு கிளம்பு” வீட்டு தலைவனாக அவர் உத்தரவாக சொல்ல, வேந்தனும் தலையாட்டி நகர்ந்தான். விவசாயத்தின் புது அர்த்தத்தை உணர்ந்து கொண்டதில், ‘நானும் விவசாயி’ என்ற பெருமையில் அவன் நடையில் நிமிர்வு கூடியிருந்தது.