Notice: Undefined index: s in /home/smtamiln/public_html/wp-content/themes/Newspaper/functions.php on line 1
Notice: Undefined index: s in /home/smtamiln/public_html/wp-content/themes/Newspaper/functions.php on line 1 எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 1 | SMTamilNovels
சற்று தயக்கத்துடன் தான் அந்த பெரிய கேட்டின் முன்னால் இறங்கினாள் பூவிழி.
அவள் கண்கள் அந்த கேட்டின் உயரத்தை அளக்க முயல, அவள் தலை வானை நோக்கி நிமிர்ந்தது.
‘அடபாவிங்களா… எதுக்குடா கோபுரம் சைஸ்ல கேட்டை வச்சிருக்கீங்க? வந்ததும் என் கழுத்து சுளுக்கி கிட்டது தான் மிச்சம்!’ அவள் மனக்குரல் புலம்ப, அதற்குள் அந்த கேட் திறந்து கொண்டது.
கேட்டின் பின்னிருந்து வந்த ஜெயலட்சுமி பூவிழியின் கைப்பிடித்து உள்ளே இழுத்தபடி, “நேரா உள்ள வராம என்னடி ஆகாசத்தை ஆராஞ்சிட்டு மரம் மாறி நிக்கிற?” சிறுகுரலில் கடிந்தபடியே நடந்தாள்.
“அச்சோ ஜெயாக்கா, கேட்டே இவ்ளோ பெருசு இருக்கே அப்ப வீஈஈடு!” அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
அவள் கண் முன்னால் காட்சி அளித்தது நிச்சயம் வீடு கிடையாது அது மாளிகை… இல்லை இல்லை, அது அரண்மனை!
பிரம்மாண்ட கூடத்திற்கு அவளை அழைத்து… இல்லை இல்லை, இழுத்துச் சென்ற ஜெயா, “இங்க வெய்ட் பண்ணு, நான் போய் மேடம்கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று மாடியேறி மறைந்து விட்டாள்.
ஆடம்பரமும் பேரழகும் நேர்த்தியும் செழுமையும் நிறைந்திருந்த அந்த கூடத்தைச் சுற்றிய இவளின் கோலிகுண்டு கண்கள், கிரிக்கெட் பந்து அளவிற்கு பெரிதாகியது.
‘எம்மாடியோய்… இந்த மாதிரி பங்களாவ நான் சினிமால தானே பாத்திருக்கேன்!’ என்று வாய் பிளந்தபடி நின்றிருந்தாள் பூவிழி.
அவள் நின்ற கோலத்தை கண்டு ஜெயா தலையில் அடித்து கொண்டு, “ஏன் இப்படி பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி நிக்கற? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று அடி குரலில் ஆதங்கப்பட்டாள்.
“நீங்க சொன்னாலும் சொல்லலன்னாலும் இந்த இடத்த பொருத்தவரை நான் பட்டிக்காட்டானாவே இருந்துட்டு போறேன் க்கா.” என்று சொன்னவளின் பார்வை அந்த பிரம்மாண்ட கூடத்தை ஆச்சரியத்துடன் அளந்து கொண்டிருந்தது.
பரந்த கூடம் பேரழகாய் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது. கூடத்தின் நடுவே பால் வெண்மை நிற சோஃபாக்கள் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு இருந்தன. சுவரில் ஆங்காங்கே மாட்டப்பட்டு இருந்த விலையுயர்ந்த ஓவியங்கள் பார்வைக்கு பெரு விருந்தாய்…
ஜெயா அவளின் பிளந்திருந்த வாயை மூடி, “இப்படி பேக்கு மாதிரி நீ நிக்கறதை யாராவது பார்த்தா உன்ன சீப்பா நினப்பாங்கடீ… அதோட உன்ன இங்க கூட்டிட்டு வந்த என்னோட கெத்தும் போயிடும்…” அவள் கெஞ்சல் குரலில் சொல்ல, பூவிழி சரி என்பதைப் போல் இமைகளை சிமிட்டி புன்னகைத்தாள்.
அவள் கைப்பிடித்து அங்கிருந்த வெண்ணிற சோஃபாவில் அமர வைத்து, தானும் அருகமர்ந்து கொண்டாள் ஜெயா.
பட்டு சோஃபாவில் மெத்தென்று அவள் பாதி புதைந்து போக, அவள் உடல் சுகமாய் அதிர்ந்து அடங்கியது. “ஐய்ய்… சோஃபா சும்மா பொசு பொசுன்னு இருக்குது ஜெயாக்கா…” என்று எழும்பி எழும்பி அமர்ந்து சிறு பெண்ணாய் கிளுக்கி சிரித்தாள் இவள்.
ஜெயாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது. “ஏய், சின்னத்தனமா நடந்துக்காத டீ… நானே உனக்கு இங்க வேலை கிடைக்கணும்னு வேண்டாத கடவுளுக்கு எல்லாம் அப்ளிகேஷன் போட்டுட்டு இருக்கேன்” என்று புலம்ப, பூவிழி ஈஈஈ என்று இளித்து விட்டு சமத்து பெண்ணாய் அமர்ந்து கொண்டாள்.
அவர்களுக்கு பழச்சாறு கொடுத்த சர்வர் ராபர்ட், பூவிழியை ஏற இறங்க பார்த்துவிட்டு ஏளன இதழ் சுழிப்புடன் நகர்ந்து சென்றான்.
இருவரும் பழச்சாறை சுவைக்கும் போதே மாடி படிகளில் நிமிர்வோடு இறங்கி வந்தாள் சத்யவர்த்தினி.
அவளின் கம்பீரத்தையும் அழகையும் பார்த்து, பூவிழியின் கண்களும் வாயும் ஒன்றாக விரிந்தன.
சாதாரண உயரத்தை விட சற்று அதிகமான உயரம்… பளிங்கில் குழைத்த வெண்ணெய் மேனி… ராஜகளை பொருந்திய அழகு முகம்… அவள் உடுத்தி இருந்த இரத்த சிவப்பு நிறச் சேலை அவள் அழகை மேலும் தூக்கிக் காட்டியது.
ஜெயா சட்டென எழுந்து நிற்க, பூவிழி தன் கையில் மீதமிருக்கும் ஆப்பிள் சாற்றை ஏக்கமுடன் பார்த்தாள்.
“பூ, சத்யா மேடம் அவங்க தான் எழு” ஜெயாவின் அவசர கண்டிப்பில் இவளும் எழுந்து நின்றாள்.
அவர்களை அமரும்படி கையசைத்து விட்டு சத்யவர்த்தினி எதிரில் ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.
“மேடம், இவங்க தான் பூவிழி… தங்கமான பொண்ணு மேடம்… திறமையான பொண்ணும் கூட…” ஜெயா அறிமுகம் செய்ய, சத்யவர்த்தினியின் பார்வை பூவிழி மேல் படிந்தது.
வெண்மையும் இல்லாமல் கருமையும் இல்லாமல் இடைப்பட்ட மாநிறத்தை கொண்ட மேனி… ஐந்தடிக்கு மிகாத உயரம்… நீல வண்ண காட்டன் சுடிதார் அவளின் சற்று பூசினாற் போன்ற உடலில் கச்சிதமாய் பொருந்தி இருந்தது. அவளின் படபடக்கும் பட்டாம்பூச்சி கண்கள் தன்மீது ரசனையாக படிந்திருப்பதையும் கவனிக்க தான் செய்தாள் சத்யா.
“பாக்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியுற…!” சத்யாவின் குரல் யோசனையாய் ஒலிக்க,
“நான் பாக்க எப்படி இருந்தால் என்ன மேம்? நீங்க எதிர்பாக்கற திறமை என்கிட்ட இருக்கான்றது தான முக்கியம்.” வழக்கம் போல பூவிழி வாயளக்க, ‘போச்சு போ’ ஜெயா தன் தலையில் கைவைத்து கொண்டாள்.
“ம்ம் சரிதான், உனக்கு பத்து நிமிஷம் டைம்… எங்க காட்டு உன் திறமைய நானும் பாக்கணும்…” சத்யா அலட்டாமல் சொல்ல, பூவிழியிடம் சின்ன கலவரம் ஒட்டிக் கொண்டது.
தயக்கமாக ஒரு வெள்ளைத்தாளும் பென்சிலும் கையில் எடுத்து கொண்டவள், ஒரு நொடி இமைகளை அழுத்த மூடி திறந்து, கோடுகளை கிறுக்க தொடங்கினாள்.
ராபர்ட் பவ்வியமாக பரிமாறிய கிரீன் டீயை சத்யா பொறுமையாக பருகலானாள்.
இதோ பத்து நிமிடங்கள் கடந்து சென்று மேலும் நிமிடங்கள் நீண்டு போக, சத்யாவின் பொறுமை விலகும் நேரம்… தலை நிமிர்த்தி பூவிழி நீட்டிய காகிதத்தை பார்த்த சத்யாவின் பார்வையில் மெச்சுதல் தெரிந்தது.
சற்றுமுன் சத்யவர்த்தினி படிகளில் இறங்கி வந்த அவளின் தத்ரூப தோற்றம் அந்த வெள்ளைத் தாளில் வெறும் கருப்பு கோடுகளில் நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது.
வெறும் இரு நிமிடங்கள் கூட கடக்காத ஒரு காட்சியை இத்தனை நேர்த்தியாக வரைவது என்பது தனித்திறமை தான்.
நிச்சயம் இத்தனை அபார திறமையை இந்த சில்வண்டு பெண்ணிடம் சத்யா எதிர்பார்க்கவில்லை தான்.
“ம்ம் குட்… என் பசங்க கீர்த்தி, பிரபாக்கு இனிமே நீங்க தான் டிராயிங் டீச்சர்…” என்றாள் சத்யவர்த்தினி.
“என்ன? உங்க பசங்களா! மேடம் நீங்க கல்யாணம் ஆனவங்கன்னு சொன்னாலே நான் நம்பறது கஷ்டம்… இதுல பசங்க இருக்குனு சொன்னா என் லிட்டில் ஹார்ட் என்னாகும்…!” பூவிழி தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொல்ல, சத்யா அவளை ஏதோ வேற்றுகிரகவாசி போல் பார்த்து வைத்தாள்.
ஜெயா, “சாரி மேம், இவ இப்படி தான் அப்பப்ப கிறுக்கு தனமா உளறி வைப்பா… நான் புத்தி சொல்றேன் மேம்” என்றாள் தயக்கத்துடன்.
“ம்ம் பார்த்தாலே தெரியுது… வாய் கொஞ்சம் நீளம் தான்… இனிமே அடக்கி பேச பழகிக்கோங்க பூவிழி… இடத்துக்கு தகுந்த மாதிரி நீங்களும் நடந்துக்க பாருங்க” என்று சத்யவர்த்தினி ஆணையிட,
பூவிழி மொழி புரியாதவள் போல விழித்து, “சரி மேடம், தேங்க் யூ மேடம்” என்று கடுப்பான புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு ஜெயாவுடன் நடந்தாள்.
“இப்ப நான் என்னா சொல்லிட்டேன்னு இந்த பியூட்டி எனக்கு புத்தி சொல்லுது?” பூவிழி ஜெயாவுடன் முரண்டினாள்.
“என்ன பியூட்டியா!” அவள் தன்னுடன் இங்கேயே வேலையில் சேரந்துவிட்ட சந்தோசத்தில் ஜெயாவும் இயல்பாய் கேட்டாள்.
“ஏய், சத்யா மேடம் இப்படி தான்… அவங்க முன்னாடி நீ கொஞ்சம்…” என்று தன் கையால் வாயை மூடி சைகை காட்டினாள் ஜெயா.
“ம்ம், இவ்வளோ பெரிய வீட்ல இவங்க மட்டும் தான் இருக்காங்களா?” பூவிழியின் கேள்வி நேரம் ஆரம்பித்து விட்டது.
“இல்ல, சத்யா மேமோட அப்பாக்கு ஹார்ட் ஆப்ரேஷன் நடந்து இருக்கு… அவருக்கு துணையா அவங்க அம்மாவும் யுஎஸ் போயிருக்காங்க, அவங்க திரும்பி வர இன்னும் எப்படியும் ரெண்டு மாசம் ஆகும்னு நினைக்கிறேன்.”
“ராம் குமார் சார்… சத்யவர்த்தினி மேடமை லவ் மேரேஜ் பண்ணிகிட்டு வீட்டோட மாப்பிள்ளையா இங்கேயே செட்டில் ஆகிட்டாரு… பிஸ்னஸ், கம்பெனி தவிர வீட்டு விசயத்தில அவ்வளவா அவர் தலையிடறது இல்ல.”
“ம்ம் கீர்த்தி, பிரபா அவங்களோட பசங்க… அப்ப, எனக்கு செட்டாகுற மாதிரி யாரும் இங்க இல்லயா! சோ சேட்” என்று முகம் சுருக்கியவளின் தலையில் தட்டி, “வாயாடி, உன்னோட டைம் பாஸ் கூட இருக்கு… சத்யா மேமோட தம்பி… இந்த வீட்டோட ஏக வாரிசு… சித்தார்த் சர்” ஜெயா சொன்னவுடன்,
“ஆள் எப்படி க்கா… தேறுவானா…?” பூவிழி கண்சிமிட்டி கேட்டாள்.
ஜெயா விளையாட்டை கைவிட்டு அவளை ஏகத்திற்கும் முறைத்து, “இது பெரிய இடம் பூவிழி, நீ வெகுளிதனமா ஏதாவது சொல்ல போய் அது தப்பான விளைவை உண்டாக்க நிறைய வாய்ப்பு இருக்கு, புத்திசாலி பொண்ணு பார்த்து நடந்துக்க சரியா…” பெரியவளாய் அறிவுரை தந்தாள்.
சின்னவளின் முகம் யோசனையில் சுருங்க, “அப்ப சித்தார்த் மொக்க பீஸ்னு சொல்றீயா க்கா… தேறமாட்டானா?” என்று கேட்டு வைக்க, பெரியவளின் கைகளால் நான்கு அடிகளை வாங்கிக் கொண்டாள்.
அந்த பங்களாவின் பின்புறம் வேலை ஆட்கள் தங்குவதற்கான வீடுகள் அமைந்து இருந்தன. அதில் ஒற்றை அறை பூவிழிக்கு ஒதுக்கப்பட்டது.
அறை ஓரளவு பெரிதாக வசதியாகத் தான் இருந்தது. கட்டில், மெத்தை, இரு நாற்காலிகள், மேசை, அறையோடு இணைந்திருந்த குளியலறை, கழிவறை என்று, ஒருவர் தங்க இந்த வசதிகள் போதுமானது தான் என்று தோன்றியது அவளுக்கு.
‘அப்பாடா! இடம் செட்டில் ஆயிடுச்சு, அடுத்து நம்ம வேலைய கவனிக்க வேண்டியது தான்…’ என்று எண்ணியவளுக்கு அந்த பங்களாவின் நிர்வாகப் பெண் சாவித்திரி, நாளை மாலை கீர்த்தி, பிரபாவிற்கு ஓவியப் பயிற்சி தர வேண்டும் என பூவிழிக்கு சொன்னது அவள் நினைவில் வந்து போனது.
‘ம்ம் வசதி, வாய்ப்பா வாழறது கூட செமையா இருக்கும் போல… இதெல்லாம் இல்லாமையே நம்ம லைஃப் செம்மையா தான இருக்கு. விடு பூவிழி…’ என்று தன்னோடு பேசிக் கொண்டவள்,
இந்த புது சூழலில் நாளைய நாள் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் உறங்க முயன்றாள்.
சட்டென முகத்தில் இருந்து போர்வையை விலக்கியவள், “ஜெயாக்கா கடைசி வரைக்கும் அந்த சித்தார்த் பயபுள்ள தேறுமா? தேறாதானு? சொல்லவே இல்லையே…” என்று வாய்விட்டு யோசித்தவள், “சரி விடு நம்ம கிட்ட சிக்காமயா போயிடுவான்…” என்று மறுபடி போர்வைக்குள் புதைந்து போனாள்.
***
யாரு கிட்ட யாரு சிக்க போறாங்கன்னு நாளை பார்க்கலாம் ப்ரண்ட்ஸ்…
(இந்த பதிவை என் குரல் வழி கேட்க Yuva karthika audio novels – youtube chennal follow பண்ணுங்க ப்ரண்ட்ஸ்😍)
*நன்றி*
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss