எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 11

2Ekkuthappa-485f4bd8

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?

அத்தியாயம் 11

“சத்யா க்கா, எனக்கு ஃபீவர் வந்திருக்கும் போல, ரொம்ப டயார்டா இருக்கு, இன்னைக்கு எனக்காக நீ மாம்ஸ் கூட ஆஃபிஸ் போறியா, ப்ளீஸ்” என்று சித்தார்த் காலையிலேயே சோர்ந்த குரலில் கேட்க, தம்பியை மேலும் கீழுமாய் நம்பாத பார்வை பார்த்துவிட்டு சத்யவர்த்தினி, ராம்குமாருடன் சென்று விட்டாள்.

அவர்கள் சென்றது தான் தாமதம், சித்து போர்வையை விலக்கிவிட்டு துள்ளி எழுந்து, இரவு பார்ட்டிக்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய ஆட்களை ஏவிக் கொண்டிருந்தான்.

அன்று முழுவதும் அந்த பங்களாவில் இருந்த வேலையாட்களுக்கு முதுகு நிமிர்ந்து விட்டது. அதன் விளைவாக மாலை மங்கும் நேரத்தில் அந்த பங்களா அரண்மனை போல அத்தனை அலங்கார ஒளிவிளக்குகளில் பிரம்மாண்ட பேரழகாய் காட்சி அளித்தது.

அதனை பார்த்தபடியே சத்யவர்த்தினியும் ராம்குமாரும் காரிலிருந்து இறங்கினர். சித்து வாசலிலேயே நின்று, “ஹேப்பி வெண்டிங் ஆன்வர்சரி க்கா, மாம்ஸ்” என்று இருவரையும் கட்டியணைத்து வாழ்த்து சொன்னான்.

“காலையில நீ அவ்வளவு ஆக்டிங் பண்ணும்போதே தெரியும் டா எனக்கு, இப்படி ஏதாவது பிளான் பண்ணி வச்சிருப்பன்னு” என்று சத்யா சொல்ல, சித்தார்த் அசராமல் சிரித்து வைத்தான்.

“அம்மா, அப்பா இங்க இல்லாத நேரத்தில இவ்வளவு பெரிய செலபிரேஷன் எல்லாம் தேவையா?” சத்யா தயக்கமாக கேட்க,

“நீ இப்படி ஏதாவது மறுப்பு சொல்லுவன்னு தெரிஞ்சு தான் உங்கிட்ட இந்த விசயத்தை நான் சொல்லாம மறைச்சேன், மாம், டேட் கிட்ட பேசிட்டேன், அவங்களுக்கும் சந்தோசம் தான், போதுமா!” சித்தார்த் புருவ தூக்கலுடன் பதில் தந்தவன், இருவருக்கும் புத்தாடை பரிசளித்து சீக்கிரம் தயாராகி வருமாறு துரிதப்படுத்தினான்.

சற்றுநேரத்தில் சத்யாவும் ராமும் தயாராகி, மிளிர்ந்த புன்னகையுடன் இறங்கி வர, அலங்காரத்திலும் வெட்க சிரிப்பிலும் புதுமண தம்பதிகளாகவே தோன்றினர்.

சித்தார்த், ராம்குமாரை கட்டியணைத்து, “யூ ஆர் கிரேட் மாம்ஸ்” என்றான். “என்ன சித்து? நான் அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்?” என்று புரியாமல் கேட்க,

“வெற்றிகரமா பத்து வருசம் சத்யா கூட வாழ்க்கையை ஓட்டி இருக்கீங்களே! இது பெரிய சாதனை இல்லயா!” சித்தார்த் கிண்டலாக சொல்லி, அக்காவிடம் இரண்டு அடிகளை வாங்கி கொண்டு தப்பித்து ஓடினான்.

விருந்தினர்கள் வருகை ஆரம்பமாக, அந்த பங்களாவில் பெரிய கூடத்தில் விழா கொண்டாட்டமாக களைக்கட்டியது.

சத்யவர்த்தினி, ராம்குமார் தம்பதிகளின் பத்து வருட திருமண நாள் நிறைவு விழா அங்கே கோலாகலமாக அரங்கேறிக் கொண்டிருக்க, விழாவின் நாயகி, நாயகனும் கூடத்தின் நடுவே பெரிய அலங்கார கேக்கை கரகோஷத்துடன் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் ஊட்டி ஆனந்த பூரிப்பில் அணைத்துக் கொண்டு தங்கள் மணவாழ்வின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கீர்த்தி, பிரபாகர், சித்துவுக்கும் கேக்கை ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வாழ்த்துக்களோடு பரிசு தந்து பாராட்ட, தம்பதிகளுக்கு தங்கள் திருமண நாள் வரவேற்பு கண்முன் வந்து வெட்கத்தை வரவழைத்தது.

பூவிழி வியப்போடு அந்த கொண்டாட்டங்களைப் பார்த்து கொண்டிருந்தாள். நேற்றுவரை வெறிச்சோடி இருந்த மாளிகை, இப்போது வெறும் மனித தலைகளாகவே தெரிந்தது. அவர்களின் ஆடை, அணிகலன்கள் வந்திருந்தவர்கள் எல்லோரும் பெரும் செல்வந்தர்கள் என காட்டியது.

வஞ்சனை இன்றி, ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவருக்கும் மது கோப்பைகள் பரிமாறப்பட்டன. ‘அப்படி என்ன இருக்கும் அதுல, நானும் ஒருமுறை அடிச்சு பார்த்தா என்ன?’ என்று ஆர்வமிகுதியில் அவள் மனம் வினவ, அங்கே மிதமாய் பரவிய மதுவகைகளின் நெடி அவளை முகம் சுளிக்க செய்தது. வேகமாய் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் பூவிழி.

மறுபுறம், இனிய மெல்லிசை கசிந்து கொண்டிருக்க, அதற்கேற்றாற் போல் மிதமான அசைவுகளில் சில ஜோடிகள் ஆடிக் கொண்டிருந்தனர். சத்யா, ராமின் நடனம் அங்கே பிரதானமாக அரங்கேறிக் கொண்டிருக்க, அவர்களை சுற்றிலும் மற்ற ஜோடிகள் தாளம் தப்பாமல் ஆடிக் கொண்டிருந்தனர்.

அங்கு சித்தார்த்தும் ஒருத்தியோடு உல்லாசமாக ஆடிக்கோண்டிருக்க, பூவிழியின் மனம் சுணங்கியது. ‘இவன் என்ன? நிஷாவ விட்டுட்டு கண்ட பொண்ணுங்களோட ஆடிட்டு இருக்கான்!’ என்று அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேறுபெண்ணை மாற்றி அவளுடன் கைகோர்த்து ஆட ஆரம்பித்தான் சித்தார்த்.

‘அடாபாவி! அங்க உனக்காக நிஷா ரத்த காயம்பட்டு இருக்கா, இங்க நீ நிமிசத்துக்கு ஒருத்தியோட டேன்ஸ்‌ ஆடுறியா! இது சரியில்லையே! இருங்க சித்து சார், உங்களுக்கு நான் வக்கிறேன் ஆப்பு சார்’ என்று அவன் கொண்டாட்டத்தை எல்லாம் தன் அலைப்பேசியில் நகல் எடுத்துக் கொண்டாள் பூவிழி.

“ஹேய், கியூட் பேபி கம் ஆன் லெட்ஸ்‌ டேன்ஸ்” என்று எதிரில் வந்து கேட்டவனை, “சாரி” என்று மறுத்துவிட்டு பூவிழி தன் கைப்பேசியை ஆர்வமாக ஆராய்ந்தாள்.

“ஹே, என்னை நல்லா ஒருமுறை பார்த்துட்டு சொல்லு” அவன் நகராமல் வாய் வளர்க்க, பூவிழி நிமிர்ந்து அவனை மேலும் கீழுமாக பார்த்து வைத்தாள். பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக, டிப்டாப்பாக தான் இருந்தான். ஆனாலும் நாற்பதை தொட்டிருந்த அவன் வயதை அத்தனை சுலபமாக அவனால் மறைக்க முடியவில்லை.

“சாரி, நான் வரல” என்று நகர போக, அவன் அவளை மறித்து நின்றான்.

“ஹே, இவ்வளோ பிகு பண்ற அளவுக்கு உன்கிட்ட கெபாசிட்டி கிடையாது” என்றவன் அவள் கைப்பற்றி இழுக்க, பூவிழி கடுப்பாகி போனாள்.

அவனை பார்த்து இளித்துக் கொண்டே தன் கையை உருவிக் கொண்டவள், “ஏய் சிம்பான்ஸி, நீ என்னடா என் கெபாசிட்டி பத்தி பேசறது?” அவள் முகம் மாறாமல் அவனை கிழிக்க தொடங்க, அவன் முகத்தில் சிவப்பேறியது.

“ஏய், என்னை என்ன சொன்ன!”

“உண்மைய சொன்னேன்டா, மக்கு மந்தாரம். நான் தான் வரலன்னு சொன்னே இல்ல, மூடிட்டு போக வேண்டியது தான. இங்க என்னவோ என்னை விட்டா வேற பொண்ணுங்களே இல்லாத மாதிரி, என் வாய்ல விழற? உன் வயசுக்கேத்த மரியாதைய நீ தான் டா காப்பாத்திக்கணும், இப்ப தேவையா உனக்கு இதெல்லாம்…” பூவிழி முகம் மாறாமல் குரல் உயர்த்தாமல் அவனை நார்நாராய் கிழித்து தொங்கவிட்டாள். அவனுக்கு ஏறிய போதையெல்லாம் இறங்கி விட, அவளை முறைத்தபடி நெறுங்கினான்.

பூவிழி தயங்கி பின்னால் நகர, அவன் தோளை யாரோ பிடித்து பின்னால் இழுக்கவும், கோபமாக திரும்பியவன் முகம் சட்டென புன்னகை பூசிக் கொண்டது.

“ஹே மாரி, எப்படி இருக்க மேன், உன்ன பார்த்து ரொம்ப நாளாச்சு” அவன் இயல்பாய் பேச்சு கொடுக்க, மாரியும் சின்ன சிரிப்போடு, “குட் சர், நான் எப்பவும் போல தான் இருக்கேன், நீங்க தான் ரொம்ப பிசி போல” என்றவன், “உங்க வொய்ப் ரொம்ப நேரமா உங்கள தேடிட்டு இருக்காங்க” மேலும் தகவல் சொன்னான்.

“ஓ ஓகே, பட் இந்த பொண்ணு யாரு கொஞ்சம் கூட டீசன்ஸியே தெரியில” அவன் பூவிழியை பார்த்து கேட்க, “நான் பார்த்துக்கிறேன் சார்” என்று அவன் செல்லும்படி கைகாட்டி விட்டு, இவள் அருகே வந்தான் மாரி.

அவள் முகம் புசுபுசுவென்று ஊதிக் கொண்டிருந்தது. “எனக்கு டீஸன்ஸி தெரியலன்னு, அந்த கேடுகெட்ட நாய் உளறிட்டு போகுது, நீ என்னன்னா அது கிட்ட இளிச்சுட்டு நிக்கற?” இவள் காட்டமாக குரலை உயர்த்த, தன் வாய்மேல் விரல் வைத்து “ஷு” என்றவன், அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“டென்ஷன் ஆகாத பூவிழி, இங்க இதெல்லாம் சகஜம்” மாரி சொல்ல, இவள், “மண்ணாங்கட்டி” என்று சிடுசிடுத்தாள்.

“எப்பா, அம்மணி கொதிநிலையில இருக்கீங்க போல, ஏதாவது சாப்பிட்டீங்களா? இல்லையா?” என்று கேட்டு பேச்சை மாற்றினான்.

“இல்ல, எல்லாரும் பிசியாவே இருக்காங்க, ஜெயாக்கா கூட இன்னிக்கு வரல. இந்த கீர்த்து, பிரபா அவங்க கேங் வந்ததும் என்னை கண்டுக்கவே இல்ல, செம போர் பா இன்னிக்கு” என்று பட்டியல் வாசித்தபடி சிணுங்கினாள் பூவிழி.

மாரியின் முகம் புன்னகையில் தவழ, “சரி, என்கூட சாப்பிட வரையா?” கேட்க, அவள் உற்சாகமாய் தலையசைத்தாள்.

பங்களா முன்புற கார்டனில் புல்வெளி தரைப்பரப்பில், வண்ண விளக்குகளின் பேரொளியில், பஃவே முறையில் விருந்து நடைபெற்று கொண்டிருந்தது.

இருவரும் தங்களுக்கான உணவை எடுத்துக் கொண்டு, இருவர் அமரக்கூடிய நாற்காலி, மேசையில் அமர்ந்தனர்.

மார்த்தாண்டன் அசைவ பிரியன், அவன் தட்டில் அசைவ உணவு நிறைந்து இருக்க, பூவிழி தட்டில் சைவம் மட்டுமே இருந்தது.

“பூவிழி நான்வெஜ் எடுத்துக்கல?”

“இல்ல, எனக்கு பிடிக்காது, நான் எப்பவும் வெஜ் தான்”

“ஏன்?”

“ஏன்னா! ருசிக்காக ஒரு உயிரை கொன்னு சாப்பிடறதுல, எனக்கு உடன்பாடில்ல” என்றவளை நம்பாத பார்வை பார்த்து வைத்தான் மாரி.

“அது வந்து, நான் சிக்கன் சாப்பிட்டா, நைட்ல அந்த கோழி குஞ்சு என் கனவுல வந்திடும், நான் பயந்துடுவேன், அதான்…” அவள் இழுக்க, இவன் வாய்விட்டு சத்தமாகவே சிரித்து விட்டான்.

“இளிச்சது போதும், ஒழுங்கா சாப்பிடு” என்று இவள் உணவில் கவனமானாள்.

சாப்பிட்டு முடியும்வரை மாரியின் புன்னகை வாடவே இல்லை. எப்போதும் கடுகடுத்த அவன் முகம் இப்போது புன்னகை மாறாமல் இருப்பது அவளுக்கும் பிடித்திருந்தது.

ஒவ்வொரு வாய் உணவுக்கும் ஒன்பது கதைகள் பேசினாள் அவள். இவனும் அவள் பேச்சில் கலந்து கொள்ள முயன்றான். ஆம், முயன்றான் தான் அவள் தான் இவனை பேசவே விடவில்லையே!

***