எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 12

2Ekkuthappa-33551d70

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?

அத்தியாயம் 12

உணவு முடிந்து இருவரும் வர இப்போதும் கொண்டாட்டம் குறையாமல் இருந்தது. “இதெல்லாம் முடிய இன்னும் லேட் ஆகும் பூவிழி, நீ போய் தூங்கு” மாரி சொல்லவும், அவள் தயங்கி நின்றாள்.

“என்னாச்சு, பார்ட்டிய இன்னும் கொஞ்ச நேரம் பாக்கணுமா?” சிறு குழந்தையிடம் கேட்பது போல அவன் கேட்க, இவள் இல்லையென்று இடவலமாக தலையசைத்தாள்.

“பின்ன, தூக்கம் வரலயா?”

“அய்யோ, எனக்கு கண்ணு சொக்குது பாடிகார்ட், இப்பவே பதினொரு மணி ஆச்சு, நீ ரூம் வரைக்கும் என்கூட வா! எனக்கு தனியா போக பிடிக்கல” என்றவளை நெற்றி சுருக்கி அவன் பார்க்க, “ப்ளீஸ்…” என்று சிணுங்கினாள்.

மாரி தெறித்த இளநகையோடு அவளுடன் நடந்தான். இவனுக்கு அவளோடு கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு புதுவித அனுபவமாய் இருந்தது.

இவன் கல்லூரி தோழிகள் முதல் அங்கங்கே ஏற்பட்ட நட்பின் காரணமாக கிடைக்கப்பெற்ற பெண்களுடனும் இயல்பாகவே பேசி பழகி இருக்கிறான். ஆனால், இப்படி குழந்தைத்தனங்கள் நிறைந்த பெண்ணை அவன் கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை.

பேச்சில் மட்டும் அல்ல பார்வைக்கும் அவள் சின்ன பெண் போல தான் தெரிந்தாள். அவன் தோள்பட்டை அளவே உயரம் இருந்தாள். அவனிடம் ஒவ்வொரு முறை பேசும் போதும் தலையை உயர்த்தி உயர்த்தி அவன்முகம் பார்த்து பேசினாள்.

“உனக்கு கழுத்து வலிக்க போகுது பூவிழி, பத்து நிமிசத்துல கடக்கற தூரத்துக்கு இவ்வளோ பேசணுமா? நீ” அவன் அக்கறையாக கண்டிக்க இவள் கண்கள் மின்னின.

அவன் முன்னால் வந்து பின்னால் அடிவைத்து நடந்தபடியே, “நீ எதுக்கு என்னை பூவிழின்னு கூப்பிடுற!” அவள் உற்சாகமாய் கேட்க,

“எதுக்குன்னா! அதான உன்னோட பேரு” என்றான்.

“ம்ம் ஆனா எல்லாரும் என்னை அப்படி கூப்பிட மாட்டாங்களே! எங்க ஸ்கூல்ல அட்டர்னன்ஸ் எடுக்கும் போது மட்டும் தான் அப்படி கூப்பிடுவாங்க, மத்தவங்க எல்லாரும் என்னை பூவுன்னு தான் கூப்பிடுவாங்க, இப்ப தான் பிரபாவும், சித்து சாரும் ஃப்ளவர்னு கூப்பிடுறாங்க, அப்புறம் என் தாத்தா!”என்று இழுத்து நீட்டி சொல்லிக்கொண்டே போனவள் சட்டென நிறுத்தினாள்.

“ம்ம் அப்புறம் உன் தாத்தா உன்ன கழுதன்னு கூப்பிடுவாரு, அப்படித்தான!” மாரி சொல்ல,

“ஆமா, இது உனக்கு எப்படி தெரியும்?” அவள் குழப்பமாக கேட்டாள்.

“ம்ம் நேத்து தான் பிபிசி நியூஸ்ல சொன்னாங்க” என்றான் அவன்.

“சும்மா வாறாத தண்டம், நியூஸ்ல எல்லாம் இதை சொல்ல மாட்டாங்க” அவள் அறிவாளியாக சொல்ல, “ஏய், நான் உனக்கு தண்டமா?” என்று முறைப்பாய் கேட்டான்.

“பின்ன, அதுதான உன் பேரு” என்று சொல்லி சிரிப்பவளை என்னவென்று இவன் கடிந்து கொள்ள, இப்போது அவனுக்கு ஏதோ தோன்றிவிட அதை கேட்டும் விட்டான்.

“உன்னோட நிஜமான பேர் என்ன பூவிழி?”

அவள் முகம் வெளுத்தது. சட்டென நின்று விட்டாள். “பூவிழி தான் என் பேரு!” என்று அழுத்தமாக சொன்னாள் அவள்.

“அதுக்கும் முன்ன உனக்கு வேற பேரு வச்சிருந்தாங்க இல்ல, உன் அம்மா, அப்பா!” மாரி இதமாகவே கேட்டான்.

இதைப் பற்றி அவன் கேட்க அவசியம் இல்லை தான் இருந்தாலும் கேட்டு விட்டான். இப்போது பின்வாங்குவது சரியில்லை என்று தோன்றியது அவனுக்கு.

“எனக்கு அப்படி யாரும் கிடையாது” என்றாள் பூவிழி பிடிவாதமாய்.

“இல்லடா அவங்க உன்ன!”

“தூக்கி வீசிட்டு போயிட்டாங்க, பிறந்த சிசுவ வீசிட்டு போற காலம் போய், வளர்ந்து நின்ன என்னை வீசிட்டு போயிட்டாங்க…” அவள் கலங்கி அங்கேயே தரையில் அமர்ந்து விட்டாள்.

இதுவரை அவளிடம் யாரும் இப்படி கேட்டது இல்லை. கேட்டவர்களிடமும் இவள் நின்று பதில் சொன்னது கிடையாது. இதுவரை அவர்களைப் பற்றிய கேள்விகளுக்கு இவள் பதில் ஒன்றே தான், ‘அவங்க செத்து போயிட்டாங்க’ எந்த கலக்கமும் இன்றி தெளிவாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள்.

இவனிடமும் அதே பதிலைத் தான் சொல்ல வாயெடுத்தாள், ஆனால் அவளின் ஆழ்மனக் குமுறல் எப்படியோ வெளியே வந்து விட்டது.

மாரி, “சாரி பூவிழி, நான் எதார்த்தமா கேக்க போய் தப்பாயிடுச்சு போல, எழுந்து வா போலாம்” என்றான்.

இடவலமாய் தலையசைத்து மறுத்தவள், “யாரோ ஒருத்தரோட பொண்டாட்டிய நான் எப்படி அம்மான்னு சொல்ல முடியும்? யாரோ ஒருத்தியோட புருசனை எந்த முறையில நான் அப்பான்னு சொல்ல முடியும்? நான் கேக்கறது கரெக்ட் தானே பாடிகார்ட்!” கீழே சம்மணமிட்டு அமர்ந்தபடியே தலையை நிமிர்த்தி, அவன் முகத்தை ஏறிட்டு பார்த்து கேட்டாள் பூவிழி.

அவன் அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அவளை நோக்கி தன் வலக்கரத்தை நீட்ட, அதை பிடித்துக் கொண்டு எழுந்து நடந்தாள் அவனுடன்.

ஏனோ பிடித்துக் கொண்ட அவன் முரட்டு கரத்தை இவள் இன்னும் விடவில்லை. மாரி அவளின் தோள் பற்றி ஆதரவாக அணைத்தபடி நடந்தான்.

“அவங்க எனக்கு வச்ச பேர்ல யாராவது என்னை கூப்பிட்டா, அது அவங்க கூப்பிடுற மாதிரியே இருக்கும்… அதான் தாத்தா கிட்ட என் பேரை மாத்த சொல்லி அடம்பிடிச்சேன்” என்றவள் அவன் மார்பில் தலைசாய்த்து கொண்டாள். அவள் உயரத்திற்கு சாய்ந்து கொள்ள அவன் தோள் இவளுக்கு எட்டவில்லை.

“தில்லு பேபி இல்ல, எப்ப பாத்தாலும் இவங்கள பத்தியே புலம்பிட்டு கிடக்கும், எனக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது” என்று அவள் மேலும் சொல்ல, “சரி, இனி எப்பவுமே நான் அவங்கள பத்தி பேச மாட்டேன் ப்ராமிஸ், போதுமா!” என்று மாரி உறுதி தர, பூவிழி அவன் மார்பிலிருந்து எழாமலே சம்மதமாக தலையசைத்தாள்.

இப்போதுதான் அவன் சொன்னதின் அர்த்தம் அவனுக்கே புரிந்தது. அதோடு அவள் தன் கைகளுக்குள் அடைக்கலமாகி இருப்பதையும் இப்போதுதான் முழுமையாக உணர்ந்து கொண்டான் மாரி.

தனக்குள் அவள்மீது ஏற்பட்ட மாற்றத்தை அவனால் இப்போது தெளிவாக உணர முடிந்தது. அதோடு வேறொன்றும் புரிந்தது அவனுக்கு. இந்த நெருக்கத்தை நிச்சயம் பூவிழியால் உணர்ந்து கொண்டிருக்க முடியாது என்று.

தனக்கு தானே சிரித்துக் கொண்டவன், “பூவிழி, நீ எப்ப பெரிய பொண்ணா வளருவ?” என்று கேட்டு வைக்க, அவள் சட்டென்று விலகி நின்று, “நான் இப்பவும் பெரிய பொண்ணு தான். எனக்கு இருபத்தி ரெண்டு வயசு முடிய போகுது தெரியுமா!” என்றாள் ரோஷமாய்.

இவன் வாய்விட்டு நன்றாகவே சிரித்து விட்டான். “சரிங்க மேடம், உங்க ரூம் வந்துடுச்சு, போய் நல்லா குறட்டை விட்டு தூங்குங்க போங்க” என்று சொன்னான்.

தன் வாயை அவனுக்கு கோணிக்காட்டி விட்டு, அறை வாசல் வரை சென்றவள், திரும்பி அவனிடம் ஓடிவந்து, “ரேஷ்மி” என்றாள்.

“ஆ!”

“அவங்க எனக்கு வச்ச பேரு இதுதான். ஆனா இந்த பேர் சொல்லி என்னை நீ எப்பவும் கூப்பிட கூடாது சரியா!” என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள் பூவிழி.

‘கூப்பிட கூடாதுன்னு ஒரு பேரை சொல்லிட்டு போறாளே! கடவுளே! இருபத்தேழு வருசமா எவகிட்டையும் சிக்காம தப்பிச்சு வந்தனே! கடைசில போயும் போயும் இவகிட்ட என்னை சிக்க வச்சிட்டியே!’ என்று வானத்தை பார்த்து மனதிற்குள் ஆதங்கப்பட்டான் மார்த்தாண்டன்.

***