எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 13

2Ekkuthappa-edf88309

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?

அத்தியாயம் 13

நிஷாந்தினி, சித்தார்த்தை பிழிந்து எடுத்துக் கொண்டு இருந்தாள். வழக்கம்போல அவர்கள் சந்திப்பிற்காக பூங்காவிற்கு வந்திருந்தனர்.

நான்கு நாட்கள் கழித்து அவளை பார்க்கும் ஆர்வத்தில் வந்தவனுக்கு நிஷாவின் கடுகடுத்த முகம் தான் தரிசனம் தந்தது.

அவன் பார்ட்டியில் ஜோடியாக ஆட்டம் போட்ட நிழற்படங்கள் மற்றும் வீடியோவை அவன் முன் காட்டி ஏகத்துக்கும் தன்னவனை முறைத்து வைத்தாள் நிஷாந்தினி.

எல்லாம் அந்த பூவிழியின் வேலை தான்!

“அப்படி முறைக்காத நிஷா, இதெல்லாம் ஜஸ்ட் ஜாலிக்காக தான். பார்ட்டினா டேன்ஸ் இல்லாம எப்படி?” சித்து தன்னிலை விளக்கம் தர, நிஷாவின் முகம் சற்று தெளிந்தது.

“இப்பவாவது புரிஞ்சுதே! தேங்க் காட்” என்றவன் அவள் கை காயத்தை தொட்டு பார்த்து, “இப்ப வலி குறைஞ்சு இருக்கா?” என்று விசாரித்தான்.

“ம்ம் முன்னவிட இப்ப பரவாயில்ல” என்றவள், “காலேஜ்ல டூ டேஸ் லீவ் கிடைச்சிருக்கு, ஃப்ரண்ஸ் எல்லாம் மகாபலிபுரம் வரைக்கும் பிக்னிக் ப்ளான் பண்ணி இருக்காங்க, நானும் போகவா?” ஆர்வமாய் கேட்டாள்.

“ப்ச், கை வலியோட எப்படி போவ?”

“இல்ல, காயம் ஆறிடுச்சு, கொஞ்ச வலியும் சீக்கிரம் போயிடும்” அவள் கெஞ்சலாக சொல்ல, அவளின் முகபாவனையில் சொக்கிப் போனான் சித்தார்த்.

அவள் உள்ளங்கையில் மென்மையாய் இதழ் பதித்தவன், “உன்ன தனியா அனுப்பிட்டு, எனக்கு கஷ்டமா இருக்கும்டீ. உனக்கு பீச்ல தான விளையாடணும் நாம ரெண்டு பேரும் போகலாம்” என்றான் காதலாய்.

“என்ன? எங்க வீட்ல தெரிஞ்சா பிச்சு பிச்சு போட்டுடுவாங்க என்னை!” என்றாள் நிஷாந்தினி பதட்டமாய்.

“ம்ம்… நீ உன் வீட்ல ஃப்ரண்ஸ் ஓட பிக்னிக் போறதா பர்மிஷன் வாங்கு, அப்படியே என்கூட வந்திடு. உன் வீட்ல யாருக்கும் டவுட் வராதில்ல” சித்தார்த் யோசனை சொல்ல, நிஷா தயங்கியபடியே யோசித்தாள்.

இந்த இரண்டு வருட காதல் சந்திப்புகளில் அவனுடன் தனியாக எங்கும் சென்றதில்லை. பொது இடங்களில் இதுபோல் சந்தித்து பேசுவதோடு சரி.

“எங்க போலாம், அதை முதல்ல சொல்லு?”

“பீச் ஹவுஸ்க்கு போலாம், அங்க ஜாலியா விளையாடலாம் ரெஸ்டும் எடுக்கலாம். எந்த தொந்தரவும் இருக்காது” சித்தார்த் குதூகலமாக சொல்ல, நிஷாவிற்கு ஏதோ நெருடியது.

“நீயும் நானும் மட்டும் தனியா பீச் ஹவுஸ்ல…! சரிபட்டு வராது சித்து” அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“அதான் மாரி நம்ம கூட வரான் இல்ல, வேறென்ன?”

“எனக்கு என்னமோ தப்பா படுது!” நிஷா மேலும் மறுக்க, இவனுக்கு கோபம் வந்து விட்டது.

“தப்பா படுதுன்னா, என்ன அர்த்தம்? நான் உங்கிட்ட தப்பா நடந்துக்குவன்னு பயப்படுறியா? என்னை இவ்வளோ சீப்பா எடை போட்டு வச்சிருக்கியா நீ?” அவன் ஆத்திரமாக பேச,

“அச்சோ! நான் உன்ன சொல்லல, நாம தனியா அங்க போனா பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க? உங்க பீச் ஹவுஸ்ல என்ன நடந்தாலும் அது சத்யாக்கா காதுக்கு போயிடும், அப்புறம்…” நிஷா சொன்ன பிறகு தான், இந்த விதத்தில் சித்தார்த் யோசிக்க ஆரம்பித்தான்.

“ஏய் ஐடியா, அன்னைக்கு மாதிரி, கீர்த்தி, பிரபாவ அழைச்சிட்டு வரேன். அவங்கள பாத்துக்க ஃபிளவரையும் அழைச்சிட்டு வரேன். நீ அவளோட ஃப்ரண்ட், இப்ப எந்த பிரச்சனையும் வராது” அவன் விளக்கி சொல்ல, நிஷாந்தினி அரை மனதாய் தலையசைத்தாள்.

காதலியின் ஒற்றை தலையசைப்பே போதுமானதாக இருந்தது சித்தார்த்திற்கு, மளமளவென அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானான்.

குழந்தைகளை அழைத்து போவதாக கூற, சத்யவர்த்தினி மறுப்பு சொல்லவில்லை. ஆனால், உடன் பூவிழியையும் அழைத்து போவதாக சொன்னது தான் அவளுக்கு எங்கோ நெருடியது.

பூவிழியை அழைத்து போக மறுப்பு தெரிவிக்க, குழந்தைகள் பெரிதாய் போர்க்கொடி தூக்கினர். வேறுவழியின்றி சம்மதம் தர வேண்டியதாயிற்று.

பீச் ஹவுஸ் போவது பற்றி சித்தார்த் சொல்ல, முதலில் பூவிழி மலங்க மலங்க விழித்தாள். பின்னர் நிஷாவும் உடன் வருவதை எடுத்து சொன்னதும் இவளும் துள்ளலாக தலையசைத்தாள்.

மாரி இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தங்க போகும் கடற்கரை பக்கம் அமைந்திருக்கும் பங்களாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலானான்.

அடுத்த இரண்டு நாட்களில் இந்த பட்டாளம் அட்டகாசமாய் பீச் ஹவுஸை முற்றுகையிட்டது. காலையில் சென்றவர்கள் மாலை வரை கடற்கரை மணலில், கடலலைகளின் ஆர்ப்பரிப்போடு போட்டியிட்டு கும்மாளம் அடித்தனர்.

அந்த பங்களா எல்லா வசதிகளுடன் சொகுசாக அமைந்திருந்தது. எல்லாருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டன. குழந்தைகள் இருவர் மட்டும் ஒரே அறையை பகிர்ந்து கொண்டனர்.

பூவிழிக்கு அந்த கடற்கரை, கடலலை, வானம், தன்னையே சுற்றி வந்த வாண்டுகள், இதைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை. அந்த இரு குழந்தைகளோடு இவளும் சேர்ந்து மூவராகி போனாள்.

நிஷாந்தினி இங்கு வர முதலில் தயங்கினாலும் சித்தார்த் உடன் அவர்களுக்கான தனிப்பட்ட பொழுதுகள் தந்த மகிழ்ச்சியை நிறைவோடு அனுபவித்தாள்.

சித்தார்த் சொல்லவே வேண்டாம், அவனுக்கு நிஷாவை தவிர எல்லாமே மறந்து போனது. குழந்தைகளை பூவிழி பார்த்துக்கொள்ள, பங்களா மேற்பார்வையை மார்த்தாண்டன் பார்த்துக்கொள்ள, இவனுக்கு தன் காதலில் தித்திக்க திளைப்பது மட்டுமே வேலையாகிப் போனது.

முதல் நாள் சந்தோசமாக கழிய, அனைவரும் உறங்க சென்று விட்டனர். சித்து மட்டும் நிஷா கையை விடாமல் பிடித்தபடி அறை வாசலில் நின்றிருந்தான். அவன் பார்வை அவளிடம் என்னென்னவோ யாசித்தது.

“நாளைக்கு சீக்கிரம் எழணும் இல்ல, இப்பவே லேட் ஆச்சு சித்து” நிஷா சின்ன குரலாய் சொல்ல, தன்னவளை சேர்த்தணைத்து இதழ் தடம் பதித்துவிட்டு, மனமே இல்லாமல் உறங்கச் சென்றான் அவன்.

மறுநாளும் அழகாய் விடிந்தது. அந்த காலைநேர இதமான சூழலை அவர்கள் நால்வரும் நினைவுக்குள் பூட்டி வைக்க மறக்கவில்லை.

சித்தார்த் இன்றைய பொழுது முழுவதும் நிஷாந்தினியோடு தனிமையில் இருக்க நினைத்தான். நாளை விடிந்ததும் கிளம்ப வேண்டும், இந்த நாளை இழக்க அவனுக்கு மனமில்லை. குழந்தைகளையும் பூவிழியையும் மாரியின் கவனத்தில் விட்டுவிட்டு, தன்னவளோடு தனிமையான இடம் நோக்கி சென்றான்.

“நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல சித்து, உன் பார்வை, நடவடிக்கை எதுவுமே எனக்கு சரியாபடல” நிஷா கண்டிக்க, “உன்கூட தனியா இருக்கணும்னு ஆசப்பட்டது தப்பா, இதுக்கு அப்புறம் இந்த சான்ஸ் நமக்கு கிடைக்கவே கிடைக்காது நிஷா” என்று முகம் சிறுத்து கூறினான்.

இவளுக்கும் புரிந்தது தான், ஆனாலும் பெண்மையின் பாதுகாப்பு உணர்வு அவன் நெருங்கும் போதெல்லாம் அவளை எச்சரித்து கொண்டிருந்தது.

இவளும் தன்னவன் மீது அளவற்ற காதல் மயக்கத்தில் தானே சிக்கி தவிக்கிறாள்.

நிஷா மெல்லிய புன்னகையுடன், சித்துவின் கேசம் கலைத்து கன்னத்தில் முத்தமிட, அவன் இவளை கையிலேந்தி கொண்டு கடலலையில் பாய்ந்தான்.

இதைதான் இளங்கோவடிகள் கடலாடுகாதையில் சொல்லிச் சென்றார் போலும்.

***