எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 14

Ekkuththappa-c2f55d7b

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?

அத்தியாயம் 14

இங்கு பாவம், மாரியின் கதி தான் அந்த மூன்று வாண்டுகளிடமும் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருந்தது.

மூவரும் கடலில் நனைந்து, மணலில் புரண்டு, மணல் வீடு கட்டி, அதையும் கலைத்து விட்டு அதற்கும் சண்டை இட்டு… ம்ஹூம் மாரியால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. எத்தனை முறை தான் அதட்டி கொண்டு இருப்பது.

அவர்களின் கலாட்டாவை பார்த்தபடி மணலில் அமர்ந்து விட்டான். மணிக்கு ஒருதரம் சித்தார்த்திற்கு ஃபோன் செய்து அவன் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டான்.

சித்தார்த்தை நினைத்து இப்போது மாரிக்கு சற்று பொறாமை வந்திருந்தது.

அவன் காதலியோடு வானத்திற்கும் மேகத்திற்குமாய் மிதந்து கொண்டு இருப்பான். ‘நானும் இருக்கேன், இவளும் இங்க தான் இருக்கா, என்ன பிரயோஜனம்? ஒத்த பார்வைக்கு கூட பஞ்சமா இருக்கு’ என்று மனதில் புலம்பி தீர்த்தான் மாரி.

கீர்த்தி, பிரபாவுடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்த பூவிழியை கடுப்பாக பார்த்து வைத்தவன், ‘உனக்கு தேவ தான் டா இது, உலகத்தில வேற பொண்ணே இல்லாத மாதிரி இவமேல மனச வச்சதுக்கு இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ!’ என்று தலையில் அடித்து கொண்டவன், பார்வையை திருப்பிக் கடல் அலைகளை பார்த்தான். மனதின் ஆதங்கம் சற்றேனும் அடங்கட்டும் என்று.

கைகளை காற்றில் அசைத்தபடி கண்கள் கட்டி இருக்க, குழந்தைகளை பிடிக்க வந்தவள், உட்கார்ந்து இருந்த மாரி மீது தடுக்கி, அவன்மேலே விழுந்தாள்.

‘மணல்ல கல்லு பாறை எல்லாம் இருக்காதே! பின்ன எதுமேலடா நான் தடுக்கி விழுந்தே?’ என்று கண்கட்டை அவிழ்த்து விட்டு பார்க்க, மாரியின் கடுகடுத்த முகம் அவளுக்கு வெகு அருகில் தெரிந்தது.

‘ச்சே மறுபடியும் இந்த பரங்கி மலை மேல தான் நான் விழனுமா! செத்தேன்! ஏன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முறைச்சு வக்கிறான்? தெரியிலயே!’

தன் பற்கள் முழுவதும் தெரிய, ஈ என்று இளித்தபடி அவன் மேலிருந்து எழுந்தாள் பூவிழி.

“கொஞ்சமாவது அறிவு இருக்காடீ உனக்கு? இப்ப தான் சின்ன குழந்தைன்னு நினைப்பு. ச்சே!” தன் ஆதங்கத்தை அவள் மேல் அப்படியே கொட்டி விட்டான் மாரி.

“தெரியாம தான விழுந்தேன், ஏன் இப்படி திட்ற?” அவள் முகம் சிறுத்து போனது. அதற்குள் குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர்.

“கீர்த்தி, பிரபாகர், விளையாடினது போதும், போய் குளிச்சிட்டு சாப்பிட்டு தூங்குங்க. காலையில நாம சீக்கிரம் கிளம்பணும்” மாரி உத்தரவிட, அவன் குரலில் இருந்த அழுத்தம் அவர்கள் மூவரையும் அங்கிருந்து நகர செய்தது.

வானத்தில் செம்மை நிறம் மாறி கருமை நிறம் படற ஆரம்பித்து இருந்தது. காலையில் இருந்து ஓயாமல் ஆட்டம் போட்டதால் குளித்து சாப்பிட்டுவிட்டு குழந்தைகள் இருவரும் அசதியில் உறங்கிப் போயினர்.

பூவிழி, மாரியை பார்த்துக் கொண்டு உம்மென்று கூடத்தில் அமர்ந்து இருந்தாள். மாரியின் பார்வை வாசலை நோக்கிக் கொண்டு இருந்தது. சித்தார்த் இவ்வளவு நேரமாகியும் இன்னும் திரும்பவில்லை. அவன் பொறுமை கரையும் நேரம் சித்துவும் நிஷாவும் வந்துவிட்டனர்.

அவர்கள் எதுவும் பேசவில்லை. ஏதோ மந்திரித்து விட்டது போல மாடிப்படியேறி சென்றனர். நிஷாவை தன் கையணைப்பிலேயே அழைத்து வந்த சித்தார்த் அவளை தன் அறைக்குள் அழைத்துச் சென்று கதவை தாழிட்டான்.

அதனை பார்த்திருந்த பூவிழியின் கண்கள் தெறித்துவிடும் போல விரிந்தன. அவளின் முக பாவனை பார்த்து மாரி சிரித்து விட, அவள் அவனை முறைத்து விட்டு, வெளியே கடலை நோக்கி கால்கள் புதைய புதைய மணலில் நடந்தாள்.

உண்மையில் அவள் மனம் தடதடக்கத் தான் செய்தது. எத்தனை சினிமாவில் இதையெல்லாம் பார்த்து இருக்கிறாள். அவளுக்கும் ஓரளவு புரியத் தான் செய்தது. காதல் என்பது சரிதான், ஆனால் திருமணத்திற்கு முன்பு சித்து, நிஷாவின் இந்த எல்லை மீறல் அவளுக்கு தவறாகவே பட்டது. ஆனாலும் இவளால் இதில் என்ன செய்ய முடியும்!

தேய்பிறை நிலவு, பாதி முகத்துடன் முன்னிரவு வேளையில் வானில் பாவமாக சுற்றி கொண்டிருந்தது.

எங்கும் சூழ்ந்திருந்த இருள், அதன்மேல் மெல்லிய வெண்மையை பூசி விட்டிருந்த நிலவொளி, அலையாடும் கடல், விரித்த வெண்மணல் பரப்பில் அமர்ந்திருந்த அவன் தேவதை… மார்த்தாண்டன் மனதின் இறுக்கம் களைய அமைதியாக வந்து அவளருகில் அமர்ந்து கொண்டான்.

அவனை பார்த்ததும் முறுக்கிக் கொண்டு பூவிழி எழுந்து விட, அவள் கை பிடித்து நிறுத்தியவன், “இங்க தனியா சுத்தறது சேஃப் இல்ல பூவிழி, சொன்னா கேளு” அவனின் ‘பூவிழி’ என்ற அழைப்பும், அதிராத பேச்சும் இவளை வசீகரிக்க தான் செய்தது.

இருந்தும், “அப்ப ஏன் என்னை அப்படி திட்டின?” சிடுசிடுப்பாய் கேள்வி கேட்டாள்.

இவன் அதற்கு எப்படி பதில் சொல்வான்? கடலில் ஆடியதால் ஈரம் காயாத ஆடையில், வெண்மணல் படித்திருக்க, அப்படியே வந்து அவன் மேல் விழுந்திருந்தாள். அவனோ திண்டாடி போனான். தன்னிலையை மறைத்து அவளிடம் கத்தி விட்டான்.

“சாரி, உன்ன அப்படி திட்டினது தப்பு தான்” என்று அவன் இறங்கி வர, சட்டென மலர்ந்த முகத்துடன் உட்கார்ந்து கொண்டவள், “அந்த பயம் இருக்கட்டும், இனிமே என்னை திட்ற வேலையெல்லாம் வச்சுக்காத தண்டம்” என்று எச்சரித்தாள்.

“ஏய், என்னை அப்படி கூப்பிடாதடீ, மாரின்னு கூப்பிட்டா என்னவாம் உனக்கு?”

“ஆமா, நீ பெரிய மாரி தனுஷ் பாரு! உன்ன அப்படி கூப்பிட! செஞ்சிடுவேன்”

“என் பேர ஒழுங்கா கூப்பிட சொன்னா படத்து பேரெல்லாம் இதுல ஏன் இழுக்கற?”

“நீ தண்டம் தான், நான் அப்படி தான் கூப்பிடுவேன்” என்று வீம்பு செய்தவளை இரு தோள் பற்றி தன் பக்கம் இழுத்தான் ஒரு வேகத்தில்.

அவள் அசரவேயில்லை. அவன் அருகாமையை அவள் உணரவுமில்லை. மாரி தான் திணறிப் போனான்.

“ஏய், குட்ட வாத்து மாதிரி இருந்துட்டு, என்னை என்ன பாடுபடுத்தறடீ நீ!”

அவன் குரலில் இருந்த மாற்றத்தை அவளால் உணர முடிந்தது, ஆனால் காரணம் புரியவில்லை. பூவிழி, அவன் முகத்தையே பார்த்திருக்க, அவன் பேச்சை மாற்றினான். கடல், வானம், மேகம், நிலவென அவர்கள் பேச்சு நீண்டது.

அரை நிலா மேகத்திற்குள் தஞ்சம் புகுந்து கொள்ள, சற்றும் வெளிச்சமற்று எங்கும் கவிழ்ந்த இருள் பூவிழியை மிரள செய்தது. அந்த பயத்தில் மாரியின் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

அவள் இருளை கண்டு மிரள்வதை உணர்ந்த அவனும், அவள் தோளை ஆதரவாக அணைத்தபடி பேச்சைத் தொடர்ந்தான். வழக்கம்போல அவள் தான் அதிகம் வளவளத்தாள். ஆனாலும் இவனுக்கு பிடித்திருந்தது. இந்த தனிமை! இத்தனை அண்மை!

நிலவு மெல்ல முகம் காட்டி ஒளி பாய்ச்ச, இவளும் விலகி செல்ல முயன்றாள். அவளால் முடியவில்லை. அவனது வலிய கரம் அவளிடையில் பதிந்து இருப்பதை இப்போது தான் உணர்ந்தவளின் பெண்மை விழித்துக் கொண்டது.

பூவிழி அனைவரிடமும் வாயடித்தாலும் இதுவரை யாரையும் தொட்டு பேச அனுமதித்தில்லை. இப்போது அவள் சங்கடமாக நெளிய, அவன் பிடி மேலும் இறுகியது. தவிப்போடு அவன் முகம் பார்த்தாள். அவன் பார்வையும் இவள் மீது தான் நிலைத்திருந்தது.

அவன் பார்வை வீச்சில் இவள் உலகம் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றது. இப்போது தான் அவன் அருகாமையை அவளால் உணரவும் முடிந்தது. வெட்டவெளி பரப்பில் அவள் மூச்சுக்காற்று அடைத்து கொண்டது போலாக, கத்தும் கடலும் ஊமையானது போல் அவளை சுற்றி ஒருவித நிசப்தம் பரவியது.

அவன் மறுகரம் அவள் கன்னத்தில் பதிய, “பூவிழி…” அவன் ரகசியமான அழைப்பில் இவள் திக்குமுக்காடி போனாள்‌. அவன் ஒற்றை விரல் அவளிதழை வருடிட, அத்தனை உணர்ச்சி மிகுதியை தாங்க முடியாமல் அவள் இமைகள் இறுக மூடின. இதையே அவளின் சம்மதமாக ஏற்று, அவளிதழில் தன் முதல் முத்திரையை பதித்தான் மாரி.

மலருக்கு நோகாமல் தேனெடுக்கும் வண்டை போல், இந்த முரடனும் அவன் பூவையை மிக மென்மையாய் கையாண்டான்.

அவன் விடுவிக்க அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளால் உணர முடிந்தது. ஆனால் எதுவும் தெளிவாக பிடிபடவில்லை. அவற்றை தெளிந்து கொள்ள அவளுக்கு அவசியமும் தோன்றவில்லை.

“பூவிழி, இதே மாதிரி இன்னொரு கிஸ் ஓகேவா!” அவள் காதுமடலோரம் மாரி கிசுகிசுக்க, “ம்ஹூம்” என்று தலையசைத்தாள்.

“ஏன்? என்னை பிடிக்கலையா?”

“தெரியல… என்னை பத்தின எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லணும்னு தோணுது, நீ எப்பவும் என்கிட்ட திட்டாம பேசணும்னு தோணுது, வேற சொல்ல தெரியல.”

இதைவிட பெரிதாக எந்த வார்த்தைகளாலும் அவளுக்கு தன் மேலிருக்கும் பிடித்தத்தை சொல்லிவிட முடியாது என்று தோன்றியது அவனுக்கு.

“சரி, அப்ப உன் தாத்தா கிட்ட பேசவா?”

“சீ அசிங்கம்! இன்னோரு கிஸ் வேணும்னு தாத்தா கிட்ட போய் நிப்பியா?” பூவிழி அசட்டுத்தனமாக கேட்டு வைக்க, மாரி கடுப்பாகி அவள் நெற்றியை முட்டினான்.

“ஏய் மக்கு, நம்ம கல்யாணத்தைப் பத்தி தாத்தா கிட்ட பேசவான்னு கேட்டேன்.” என்றான்.

“கல்யாணமா…! என்னை கட்டிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா?”

“ஏன் டீ? இப்படி உளர்ற!”

“அது… கல்யாணம்னா நெறைய தெரிஞ்சு வச்சிருக்கணுமே! சமைக்க தெரியணுமாம், வீட்டு வேலை எல்லாம் செய்யணுமாம், புருசன கவனிச்சிக்கணுமாம், மாமியார், மாமனார் மனசு கோணாம நடந்துக்கணுமாம்! எப்பா இன்னும் எவ்வளோ அட்வைஸு! இதெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாதே!” பூவிழி கைவிரித்தாள்.

“இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ என்னை கட்டிக்கிட்டா மட்டும் போதும்” மாரி புன்னகையோடு சொல்ல, “இந்த வேலை எல்லாம் நீயே பார்த்துக்கறதா இருந்தா, எனக்கு ஓகே பா” என்று சொல்லி சிரித்தவளை தலையில் தட்டி எழுப்பி, அழைத்து வந்தான் மாரி.

இந்த காதல் ஜோடிக்கு சுகமான பாரத்தோடு உறக்கம் தந்த இதே இரவு, அந்த காதல் ஜோடிகளுக்குள் கலவரத்தை மூட்டி இருந்தது.

சித்தார்த் அத்துமீற நிஷாந்தினி உடன்படவில்லை. அவள் வளர்ந்த முறையும், சமூகத்தின் பார்வை பற்றிய பயமும், அவளின் காதல் மயக்கத்தை சற்று தெளிய வைத்திருந்தது.

“ப்ளீஸ் நிஷா…” அவன் எத்தனை கெஞ்சியும் அவள் செவிசாய்க்கவில்லை. “தப்பு நடக்காதுன்னு சொல்லி தான, என்னை இங்க அழைச்சிட்டு வந்த, இப்ப நீயே பேச்சு மாறினா எப்படி சித்தார்த்?”

“கொஞ்சம் என் ஃபீலிங்ஸையும் புரிஞ்சிக்க நிஷா, எம்மேல உனக்கு நம்பிக்கை இல்லயா!”

“உனக்கு நான் வேணும்னா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு, அதைவிட்டு இப்படி! வேணா சித்து”

“எப்ப பாரு, கல்யாணம் கல்யாணம்னு ஷிட், உன் மிடில் கிளாஸ் புத்திய காட்ற இல்ல நீ!”

“பிளான் பண்ணி பீச் ஹவுஸ் கூட்டிட்டு வந்து, விருப்பமில்லன்னு சொல்லியும் என்னை கம்ப்பல் பண்ற நீதான் உன் ஹை கிளாஸ் புத்திய காட்டற சித்து!”

நிஷாவும் சரியாய் பதில் பேச, சித்தார்த் முகம் இருண்டு போனது. அறை கதவைத் திறந்து அவளை வெளியேறும் படி சொல்லாமல் கைகாட்ட, நிஷாவும் மறு வார்த்தையின்றி வெளியே வந்தாள்.

மறுநாள் காலை, சித்துவும் நிஷாவும் இறுகிய முகத்துடனே மற்றவர்களோடு திரும்பி சென்றனர். இப்போதும் குழந்தைகளுடன் வம்பளத்து வந்த பூவிழியை, மார்த்தாண்டன் ரசனையாய் பார்க்க, இவள் மிரட்டல் பார்வையில் அவனை சாலையில் கவனம் பதிக்க செய்தாள்.

***