எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 15

2Ekkuthappa-bf6d0887

அத்தியாயம் 15

இந்த இரண்டு வாரத்தில் நிஷாந்தினி கலங்கி தவித்து விட்டாள். அன்றைய பேச்சுக்கு பிறகு சித்தார்த் இவளை மறுபடி பார்க்கவும் வரவில்லை, கைப்பேசியில் கூட பேசவில்லை. இவளின் குறுஞ்செய்திகள் எதற்கும் பதிலில்லை.

இந்த இரண்டு வருட காதலில் அவனிடம் பேசாமல் இவள் ஒருநாள் கூட உறங்கியது இல்லை. அவனின்றி இவளின் உணவு, உறக்கம், படிப்பு, தினப்படி வேலைகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்று விட்டிருந்தன.

தன்னவனை இவள் மனம் தேட, அவன் எதற்கும் அசைந்து கொடுப்பவனாக இல்லை. இதற்கிடையில் நிஷாவின் அப்பா அவளுக்கு வரன் வந்திருப்பதாக கூற, இவள் மேலும் நொந்து போனாள்.

வேறு வழியின்றி அவனை காண, அவன் அலுவலகத்திற்கு சென்றாள். நிஷா தன்னை தேடி இங்கு வந்ததில் சித்துவிற்கு வியப்பு தான். இந்த பிரிவு அவனுக்கும் வேதனை தந்து இருந்தாலும், அவளின் அன்றைய அலைகழிப்பு, ஒரு ஆணாய் அவனை ரணப்படுத்தி இருந்தது. இப்போதும் அதே கோபத்தோடு தான் அவளை எதிர் கொண்டான்.

அவன் அலுவலக அறையில், இருவரும் எதிரெதிராக பேச்சை தொடங்காமல் அமர்ந்து இருந்தனர்.

“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, நீ வந்த விசயத்தை சொல்லிட்டு கிளம்பு” அவன் உதாசீனம் இவள் மனதில் அடிவாங்கிய வலியை ஏற்படுத்த துவண்டு போனாள்.

“ஏன் சித்து, யாரோ மாதிரி பேசுற? நான் வேண்டாதவளா போயிட்டேனா உனக்கு?”

“வேற எப்படி உங்கிட்ட பேசணும்னு நீ எதிர்பார்க்கிற, சொல்லு அப்படி பேச டிரை பண்றேன்.”

“வேணா சித்து, நீ காரணமே இல்லாம என் மனசை காயப்படுத்துற.”

“உப்பு பெறாத காரணத்துக்காக என் ஃபீலிங்க்ஸ நீ கொச்ச படுத்தல!”

“அச்சோ! ஏன் என் நிலைமைய புரிஞ்சிக்க மாட்டேங்கிற, நீ ஆம்பள உனக்கு எல்லாமே சுலபமா தெரியும். ஒரு பொண்ணா என்னால அப்படி இருக்க முடியாது. எங்களுக்கான கட்டுதிட்டங்கள் அதிகம், புரிஞ்சிக்க, ப்ளீஸ்…”

“சரி விடு, இப்ப வந்த விசயத்தை சொல்லு?”

“அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காரு, விசயம் கைமீறி போறத்துக்குள்ள, அவர்கிட்ட பேசணும்.”

“ஓ… அம்மா கிட்ட உன்ன பத்தி சொல்லி இருக்கேன். அப்பாக்கு உடம்பு தேறின அப்புறம் தான் இதைப்பத்தி பேச முடியும்.” சித்தார்த் யோசனையாக சொல்ல,

“அதுக்குள்ள அப்பா இந்த சம்மந்தத்தை முடிவு பண்ணிட்டாங்கன்னா!” நிஷா பதற்றமாய் கேட்டாள்.

“ம்ம் கல்யாணம் பண்ணிக்கோ, இந்த ஹை கிளாஸ் மென்டாலிட்டி தான் உனக்கு பிடிக்கல இல்ல, உன் அப்பா உன் ரேஞ்சுக்கு தானே மாப்பிள்ளை பார்த்து இருப்பாரு, ஒருவேளை அவன் கூட உன் மென்டாலிட்டி ஒத்து போகலாம்” சித்தார்த் யோசிக்காமல் வார்த்தைகளை விட, நிஷாந்தினி பதிலின்றி சட்டென்று எழுந்து விட்டாள்.

அவள் இதயம் அழுத்த, அவள் கண்களில் நீர் கலங்கியது. இதழ் மடித்து தன்னை கட்டுப்படுத்த போராடியவாறு அங்கிருந்து சென்று விட்டாள் நிஷாந்தினி.

சித்தார்த் தன்மீது வைத்திருந்த நேசம் இவ்வளவே தானா? அவள் பேதை மனம் கதறியது.

***

அன்று மறுநாள்,

“ஜனார்த்தனனோட ஆட்டம் க்ளோஸ் க்கா” சித்தார்த் தோரணையாக சொல்லிவிட்டு அவர்கள் எதிரில் அமர, சத்யாவும் ராமும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.

“என்ன சித்து சொல்ற! நிஜமா!” சத்யவர்த்தினி நம்பாமல் கேட்க,

“நிஜமே நிஜம், மாரிக்கு தான் நன்றி சொல்லணும், சும்மாவே வச்சு செஞ்சிட்டான் இல்ல” சித்தார்த் சிலாகிக்க, இருவரும் மாரியை பார்த்தனர். தெளியாத முகத்துடன் அவன் நின்றிருந்தான்.

“என்னாச்சு மாரி, புரியற மாதிரி சொல்லுங்க” சத்யவர்த்தினி இவனிடம் கேட்க,

“மேடம், ஜனாவ டார்கெட் பண்ண ஏதாவது வழி கிடைக்குமான்னு அலசி பார்த்தேன், எதுவுமே சரியா அமையல. நரேன் கொலை வழக்குலயும் முன்னமே ரெண்டு பேர் நாங்க தான் செஞ்சோம்னு சரண்டர் ஆனதால அங்கயும் மேல மூவ் பண்ண முடியல, அதால…”

“என்ன பண்ணீங்க அவனை மாரி?”

“எப்படி ஜனாவ சிக்க வைக்கலாம்னு தேடினப்ப தான், அவன் இல்லீகலா சேர்த்து வைச்சிருக்க சொத்து, பினாமி பத்தின விவரம் ஓரளவு எங்களுக்கு கிடைச்சது, அந்த ஆதாரத்தை இன்கம்டேக்ஸ் டிபார்ட்மென்ட் மூலமா மூவ் பண்ண டிரை பண்ணோம்.”

“குட், நல்ல மூவ் தான்.”

“இதனால ஜனாவ கொஞ்ச நாள் செயலிழக்க வைக்க முடியும், அதுக்குள்ள வேற ஏதாவது செய்யணும்னு தான் ப்ளான் மேடம், பட்!” மாரி மறுபடியும் பேச்சை பாதியில் நிறுத்தினான்.

“ஏன் ப்ளான் வொர்க் அவுட் ஆகலயா?” சத்யா ஏமாற்றமாக கேட்க, “அக்கா, ப்ளான் டபுளா வொர்க் அவுட் ஆகிடுச்சு” என்று மர்ம புன்னகையாய் சித்தார்த் சொன்னான்.

அப்போது ராமின் கைப்பேசி சிணுங்க அதை எடுத்து பேசியவன்,

“என்ன?”

“…”

“ நிஜமா! எப்ப?”

“…”

“சரி” என்று வைத்து விட்டு, சத்யாவிடம் திரும்பி, “ஜனார்த்தனன் இறந்துட்டாராம், சிவியர் அட்டாக். காப்பாத்த முடியலயாம், இப்ப தான் விசயம் கன்பார்ம் ஆச்சு” என்று தகவல் சொன்னான்.

சத்யவர்த்தினிக்கு இதை கேட்டு சந்தோசம் வந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் அவள் மனதில் ஒரு நிம்மதி பரவியது. இனி தன் தம்பிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிம்மதி.

“இதை முதல்ல சொல்லி இருக்க வேண்டாமா மாரி” ராம்குமார் கேட்க, “இல்ல சார், இப்படி ஆகும்னு எதிர்பாக்கல, அதான்” அவனுக்குள் ஏனோ நெருடியது.

“புரியுது மாரி, பட் இதுல நீங்க கில்டியா ஃபீல் பண்ண வேண்டாம், இதுல உங்க தப்பு எதுவும் இல்ல” சத்யவர்த்தினி சமாதானமாக பேச, அவனும் தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

“எப்பா, இனிமே நான் ஃபிரீ பேட், என் விருப்பம் போல சுத்தலாம், எங்க என்ன ஆபத்து வரும்னு நடுங்க வேண்டியது இல்ல” சித்தார்த் உற்சாக குரலில் கைகளை உயர்த்திச் சொன்னான்.

“ஜனா இறந்தத பார்ட்டி வச்சு கொண்டாடுவ போல சித்து” ராம் கிண்டலாக கேட்க,

“ச்சே ச்சே அவ்வளவு கொடூர புத்தி எல்லாம் எனக்கு இல்ல மாம்ஸ், அதோட நான் வருத்தமும் படல, நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் அந்த ஜனா கடைசி வரைக்கும் கேட்கவே இல்ல, அத்தனை பிடிவாதம். அவனுக்கு தேவையான முடிவு தான் இது” சித்து சொல்ல மற்ற இருவருக்கும் கூட அதில் மாற்று கருத்து இல்லை.

***

பூவிழி வயிற்றை பிடித்துக்கொண்டு வாய்விட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தாள். “உனக்கு தண்டம்னு சரியான பேர் தான் வச்சிருக்கேன் பாத்தியா! பாராங்கல்லு மாதிரி உடம்ப வச்சுகிட்டு, நோகாம ஒரு ஃபோன் கால்ல வில்லனோட கதைய முடிச்சிட்டியே! செம்ம போ” அவள் தன்னை பாராட்டுகிறாளா? அல்லது நக்கல் செய்கின்றாளா? என்பது மாரிக்கு புரியவில்லை.

“எனக்கே ஏதோ கில்டி ஃபீலிங்கா இருக்கு சுண்டக்கா, நீ வேற அதையே பேசாத” என்றவன், எதிர் நின்றவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளின் அருகாமை தன் மனதை அமைதிபடுத்தும் என்று.

பூவிழி அவன் இடையில் வாட்டமாய் பிடித்து கிள்ளி விட, “ஆஅஅ” என்று துள்ளி விலகினான்.

“ஏன்டீ இப்ப என்னை கிள்ளி வச்ச” மாரி காட்டமாக முறைத்து நிற்க,

“கொஞ்சமாவது அறிவு இருக்கா பாடிகார்ட் உனக்கு?” இவள் அவனுக்கு மேல் துள்ளினாள்.

“அறிவிருந்தா ஏன்டீ, உன்ன லவ் பண்ணி தொலைக்க போறேன்?” அவன் தலையில் அடித்துக்கொள்ள,

“வெவ்வ வெவ்வ, ரொம்ப தான், இங்க வந்து பொசுக்குனு ஹக் பண்ற, யாராவது பார்த்தா என்ன ஆகும்!” பின்புற தோட்டத்தில் அவள் சுற்றி பார்வையை சுழற்றினாள்.

“பரவால்லயே என் சுண்டக்கா மூளை கூட, இதையெல்லாம் யோசிக்கிது!” என்று மெலிதாய் சிரித்து வைத்தான் மாரி.

“என்ன பாத்தா உனக்கு சுண்டக்கா மாதிரி தெரியுதா?”

“நீ மட்டும் என்னவாம், என்னை பார்த்தா உனக்கு பரங்கி மலை மாதிரி தெரியுதா?”

“பின்ன இம்புட்டு வளர்ந்து நிக்கிறியே!”

“நீ இன்னும் வளராமையே நிக்கிறியேடீ!”

அவன் பதிலுக்கு பதில் பேச, இவள் கோபத்தில் பொசுபொசுவென்று மூச்சு வாங்கினாள். அவன் விரிந்த புன்னகையோடு தன்னவளை ரசித்து நின்றான். சற்றுமுன் இருந்த அவனின் மன குழப்பம் எல்லாம் தடம் தெரியாமல் எங்கோ போயிருந்தது.

“போ போடா, நீ என்கூட சண்ட போட்டுட்டே இருக்க, உன்ன நான் கட்டிக்கிட மாட்டேன், வேற எவளாவது வளர்ந்து நிக்கறவளா பார்த்து நீ கரெக்ட் பண்ணிக்கோ” என்று முறுக்கி திருப்பிக் கொண்டு பூவிழி போக, மாரி வாய்விட்டு சிரித்து விட்டான். அவளின் சிறுபிள்ளை தனமான ஊடல் கூட இவனுக்குள் காதலை ஊற்றெடுக்க வைத்துக் கொண்டிருந்தது.

***