எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 16 Pre Final

2Ekkuthappa-6ae58a70

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?

அத்தியாயம் 16 (pre final episode)

அடுத்த நாள் சித்தார்த்திற்கு கிடைத்த தகவல், அவனுக்குள் வெறி ஏற்றியது. நிஷாந்தினி சொந்த ஊர் சென்று இருந்தாள், அதுவும் பெண் பார்க்கும் படலத்திற்காக. அவனின் ஆத்திரத்தில் அவன் அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் நொறுங்கின.

சத்தம் கேட்டு வேலை ஆட்கள் ஓடி வந்தனர். அதோடு ஓவிய பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு, பூவிழியும் குழந்தைகளும் கூட வந்தனர்.

சித்தார்த் நிலையையும் அறையின் அலங்கோலத்தையும் பார்த்து எல்லாரும் பதறி விட்டனர். சித்துவின் உள்ளங்கையில் ஏதோ கிழித்து உதிரம் கசிந்து கொண்டிருந்தது.

அந்த மாலை வேளையில், நாடு திரும்பும் தன் அப்பா, அம்மாவை அழைத்து வர, சத்யவர்த்தினியும், ராம்குமாரும் சென்றிருந்தனர்.

“சார், மேடம் வரத்துக்குள்ள, ரூமை கிளீன் பண்ணுங்க சீக்கிரம்” சாவித்திரி வேலையாட்களை துரிதப்படுத்தினாள்.

பிரபாகர் சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து பூவிழியிடம் கொடுக்க, அவள் அவனுக்கு கட்டுபோட்டு, குழந்தைகளின் அறைக்கு அழைத்து வந்தாள்.

“என்ன தான் உங்ககிட்ட நிறைய பணங்காசு இருந்தாலும் இப்படியா சார் எல்லாத்தையும் உடைச்சு வைப்பீங்க?” பூவிழி கேட்க, சித்தார்த் மௌனமாகவே உட்கார்ந்து இருந்தான்.

“எங்க சித்து சார் எப்பவும் கியூட்டா சிரிச்சுட்டே இருப்பாரு, இந்த ஃபேஸ் உங்களுக்கு செட்டே ஆகல சார்.” பூவிழி மேலும் சொல்ல,

“நிஷா என்னை விட்டு போயிட்டா…” என்றான் சித்தார்த் கசப்பாக.

“என்னது போயிட்டாளா?” பூவிழி வாயும் கண்களும் ஒன்றாய் விரிந்தன. அவன் முகம் கசங்கி ஆமென்று தலையசைத்தான்.

“சரி விடுங்க சார், நிஷா இல்லன்னா ஒரு உஷா, இதுக்கு போய் இவ்வளோ சோக ரியாக்ஷன் கொடுத்துட்டு… இதெல்லாம் உங்களுக்கு சுத்தமா செட்டே ஆகல சார்”

வழக்கம்போல தன் மனதில் பட்டதை தயவு தாட்சண்யம் இன்றி கொட்டி கவிழ்த்தாள் பூவிழி.

“உங்களுக்கு என்ன சார், கியூட்டா, ஸ்வீட்டா, ஹேன்ட்சமா சும்மா ஹீரோ மாதிரி இருக்கீங்க, செகண்ட் ஹீரோயின் வராமலயா போயிடுவாங்க? அன்னிக்கு பார்டியில டேன்ஸ் ஆடினிங்களே, அதுல யாரையவாது கரெக்ட் பண்ணிக்கோங்க சித்து சார்” பூவிழி சொல்லி கொண்டே போக, இவனுக்கு சட்டென பொறி தட்டியது.

“அப்ப, நிஷாக்கு அந்த ஃபோட்டோஸ் எல்லாம் அனுப்பனது நீதானா ஃபிளவர்?” சித்தார்த் நிமிர்ந்து கேட்க,

அவள் ஈயென்று இளித்து வைத்தாள். ‘உன் வாயால நீயே சிக்கிக்கிட்ட பூவு’ என்று தன் வாயை நொந்தவள், “சாரி சார், அச்சோ! அதால தான் நிஷா உங்கள விட்டு போயிட்டாங்களா?” என்று பதறினாள் பூவிழி.

“ப்ச் இல்ல ஃபிளவர், இது வேற விசயம், எனிவே, தேங்க்ஸ். என் காயத்துக்கு கட்டு போட்டதுக்கு” என்று நகர்ந்து விட்டான் சித்தார்த்.

‘என்னங்கடா இது, அன்னிக்கு என்னவோ ரெண்டு பேரும் கம் போட்ட மாதிரி ஓட்டிட்டு திரிஞ்சாங்க, இப்ப திடீர்னு பிச்சிகிட்டாங்க, ஒண்ணுமே புரியலயே’ என்று தோளை குலுக்கி கொண்டாள் பூவிழி.

***

 

சித்தார்த்தின் அம்மா மீனலோச்சனியும், அப்பா ஏகாம்பரமும் வந்து விட, அந்த பங்களா நிறைந்து போனது. அவன் அப்பாவை பார்க்கும் போது அப்படி ஒன்றும் நோயாளி போல தோன்றவில்லை. திடமாகவே தெரிந்தார்.

“நான் தான் முன்னவே சொன்னே இல்ல ஜெயாக்கா, பெருசுங்க ரெண்டும் செகன்ட் ஹனிமூனுக்கு தான் போயிருக்கங்கனு, நீதான் நம்பல. இப்ப நீயே பாக்கற இல்ல” ஜெயாவிடம் வாயடித்து இரண்டு கொட்டுக்களை பெற்றுக் கொண்டு வாய்மூடிக் கொண்டாள் பூவிழி.

சித்தார்த் வழக்கம் போலவே தன்னை காட்டிக் கொண்டான். சித்தார்த் உடன் சேர்ந்து அப்பா, அம்மா, அக்கா, மாமா, குழந்தைகள் அனைவரும் குடும்பமாக குலதெய்வம் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்து வந்தனர். இது மீனலோச்சனியின் வேண்டுதலாம்.

அப்போதுதான் சித்தார்த்தின் திருமண பேச்சும் ஆரம்பித்தது. “என்ன சித்து, ஏதோ பொண்ண லவ் பண்றதா சொன்னியாம், யாரது சொல்லு, அவங்க வீட்டில போய் பேசிடலாம். உனக்கு பிடிச்சிருந்தா சரி, வசதி வாய்ப்பெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்” என்று ஏகாம்பரம் சாதகமாக பேச, இவன் நொந்து போனான்.

இப்போது தன் காதல் தோற்றுவிட்டது என்று சொல்லி அழ, அவன் சுயகௌரவமும் தன்மானமும் இடமளிக்கவில்லை. எனவே, “அவள நானே உங்க முன்னாடி அழைச்சிட்டு வந்து நிறுத்தறேன் டாட், மத்தது எல்லாம் நீங்க அவகிட்டயே கேட்டுக்கோங்க” என்று ஏதோ சொல்லிவிட்டு நழுவி வந்து விட்டான் சித்தார்த்.

இப்போது தினம், ‘எப்படா என் மருமகளை எங்களுக்கு காட்ட போற?’ என்ற அப்பா, அம்மாவின் கேள்விகளை அவன் சந்திக்க வேண்டியதாக வேறு இருந்தது.

அந்த கடுப்பில் பால்கனியில் உலாவி கொண்டிருந்தவனை, அவர்கள் பேச்சு சத்தம் கலைத்தது.

“ஏய், புடி புடி புடி பூவு” ராபர்ட் கத்த, பூவிழி எகிறி பந்தை பிடித்துவிட்டு, “ஏஏய் கேட்ச், நீ அவுட் சிங்கு, தும் ஜாவோ ஜாவோ!” என்று கத்த, வாட்ச்மென் சிங் அவளின் இந்திக்கு பயந்தே கிரிகெட் மட்டையைக் கொடுத்து விட்டு பின் வாங்கி கொண்டான்.

மதிய வேளையின் ஓய்வு நேரத்தில், பூவிழி அந்த வீட்டு வேலையாட்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு பங்களாவின் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் மட்டைப்பந்து விளையாட்டைத் தொடங்கி இருந்தாள்.

இப்போது மட்டை சாவித்திரி கைக்கு வர, ஆட்டம் மீண்டும் களைக்கட்டியது.

சித்தார்த் சின்ன சிரிப்புடன் அவற்றை பார்த்து நின்றிருந்தான். சற்று நேரத்தில் அவன் பார்வை முழுவதையும் பூவிழியே ஆக்கிரமித்து இருந்தாள்.

துப்பட்டாவை தோளின் குறுக்காக கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி பந்தை பிடித்து, எடுத்து வீசிக் கொண்டிருந்தாள் அவள்.

பூவிழி இந்த வீட்டிற்கு வந்த இந்த இரண்டரை மாதங்களை அவன் மனம் அலச ஆரம்பித்தது.

அவளின் குணம், விளையாட்டுத்தனம், ஒளிவு மறைவற்ற பேச்சு, அலட்டல் இல்லாத மிதமான அழகு, அவனை முன்பே கவர்ந்து இருந்தது. ஆனால் அதை இப்போது வேறு கோணத்தில் சிந்தித்து பார்க்க தோன்றியது அவனுக்கு.

அங்கே, தன்னையே முறைத்து நின்ற மார்த்தாண்டனைப் பார்த்து விட்டு, தன் கையிலிருந்த மட்டையை ராபர்ட்டிடம் கொடுத்து விட்டு அவனிடம் ஓடி வந்தாள் பூவிழி.

“என்ன மொறப்பு?” என்று கேட்டபடியே.

“லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணிட்டேன், நான் ஊருக்கு கிளம்பறேன்” என்று அவன் நடக்க,

தன் துப்பட்டாவை சரிசெய்தபடி, அவனோடு நடந்து வந்தவள், “நாளைக்கு தான போறேன்னு சொன்ன, இப்பவே கிளம்பறேன்னு சொல்ற” அவள் முகம் சுருங்கி போனது.

“போடீ, உனக்கு என்னை விட அந்த கிரிக்கெட் தான முக்கியமா போச்சு” என்று அவன் ஆதங்கப்பட, “கோச்சுக்காத தண்டம், ம்ம் நான் வேணும்னா உனக்கு கிஸ் தரேன், ஓகேவா” என்று அவனிடம் பேரம் பேசினாள் பூவிழி.

அவள் தலையில் தட்டியவன், “எனக்கு திங்க்ஸ் எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணாம, இங்க வந்து ஆட்டம் போட்டுட்டு, லஞ்சமா ஒரு கிஸ் தந்தா மட்டும் போதுமா! ரெண்டு கிஸ் கொடு” மாரி அசராமல் கேட்கவும்,

“ஆ… ஆச தோச அப்பளம் வடை, அதுக்கு வேற ஆள பாரு” என்று அழகு காட்டினாள்.

“எக்ஸ்ரா ஒரு கிஸ்காக நான் வேற ஆள பார்க்கணுமா! ஏன் நீ தந்தா குறைஞ்சிடுவியா?” என்று அவளை சீண்டினான்.

அவள் பதில் தராமல் அமைதியாக, “போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா, வெளிய எங்காவது போய் வரலாம். ஊருக்கு போனதுக்கு அப்புறம் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் பூவிழி” என்ற மாரி அவள் கையை அழுத்தி பிடித்துக் கொண்டான்.

“இந்த சீனெல்லாம் ஒண்ணும் வேணா, அதான் தில்லு பேபி நம்ம கல்யாணத்துக்கு சரி சொல்லிடுச்சு இல்ல, சீக்கிரம் உன் வீட்ல சொல்லி, என்னை வந்து பொண்ணு கேக்கற வழிய பாரு” என்று மிரட்டலாக சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் பூவிழி.

ஆம். பூவிழியின் சம்மதம் கிடைத்தவுடனே அவளின் தாத்தா தில்லை நாயகத்திடம் அலைபேசி வழி பேசி, தங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான் மாரி.

பெரியவருக்கு அத்தனை சந்தோசம், தன் பேத்தியை ஒரு நல்லவன் வசம் ஒப்படைப்பதில். அத்தோடு மாரிக்கு பல அறிவுரைகளையும் வழங்கினார். “அவள உனக்கு பிடிச்சிருக்கின்ற காரணத்துக்காக, அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டி வைக்காத பா… முதல்ல இருந்தே அடக்கி வைக்க பழகு பா. இல்லனா என் பேத்தி உன் தலையல நல்லா மொளகா அறைசுடுவா.” என்று அவர் சொன்ன விதத்தை கேட்டு, சிரிப்புடனே தலை அசைத்து கொண்டான் மார்த்தாண்டன்.

அவனிடம் பேசிய அதே மகிழ்ச்சியோடு, பூவிழி எண்ணுக்கும் அழைப்பு விடுத்தார் பெரியவர், மாத கணக்கில் பேத்தியின் மேல் கொண்டிருந்த கோபத்தை எல்லாம் விட்டொழித்து.

தாத்தாவின் எண்ணை செல்போன் திரையில் பார்த்ததும் துள்ளி குதித்து எடுத்தவள், “இப்ப தான் பேத்தி ஞாபகம் வந்ததா தாத்தா உனக்கு? என்மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு” என்று எடுத்ததும் கடுகடுத்தவளை நினைத்து தலையில் அடித்துக் கொண்டவர்,

“அடி கொழுப்பெடுத்த கழுத, நீ பண்ண வேலைக்கு உன் மேல அக்கறை வேற படணுமோ…” என்று அவர் அதட்டினார்.

“போ தத்தா, நீ என்னை திட்டத்தான் போன் பண்ணி இருந்தா, ஒன்னும் பேச வேணாம் போ” பூவிழி முறுக்கிக்கொண்டு போனை வைக்க போக,

“அட அவசரகுடுக்க, போன வச்சுடாத, நான் சொல்றதை முழுசா கேளு.” என்று அதட்டியவர், “உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சும் மாரி தம்பி உன்ன கட்டிக்கிட கேட்டு இருக்கு. அவருகிட்ட நீ நல்ல பொண்ணா அடக்க ஒடுக்கமா நடந்துக்க பாரு. அவரோட அம்மா, அப்பா கிட்ட பேசி நான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன். நீ உன் சேட்டையெல்லாம் இத்தோட நிறுத்திக்க பாரு. இல்ல…” அவரின் போதனைகள் நீண்டுகொண்டே போக, பூவிழி மொபைலை பக்கத்தில் தள்ளி வைத்துவிட்டு ஜம்மென்று உறங்கி போயிருந்தாள் அன்று.

அதற்கும் சேர்த்து மறுநாள் தாத்தாவிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டாள். ஆனாலும் தங்கள் காதலுக்கு தத்தா பச்சைக்கொடி காட்டியதில் அவளுக்கு சந்தோசமோ சந்தோசம் தான்.   

அதே மகிழ்ச்சியான நினைவுடன் அவள் குளித்து, தனக்கு மாரி பரிசளித்த சேலையை வாகாய் கட்டிக் கொண்டு தயாராகவும், கதவு தட்டப்படவும் சரியாய் இருந்தது.

துள்ளி ஓடிவந்து கதவைத் திறந்தவளின் புருவங்கள் வியப்பில் உயர, அவள் கண்கள் அகல விரிந்தன. “சித்து சார், நீங்களா! இங்கயா! உள்ள வாங்க” என்று உற்சாகமாய் வரவேற்றாள்.

அந்த சிறிய அறையை அவன் பார்வை ஒருமுறை ஆராய்ந்தது. அங்கங்கு வரைப்பட தாள்களும் வண்ண கலவைகளுமாய் காட்சி தந்தன.

“என் ரூம் எப்பவும் இப்படி கலைஞ்சி, நிறைஞ்சி இருந்தா தான் எனக்கு பிடிக்கும்” என்று அவன் கேளாமலேயே பதில் தந்தாள் பூவிழி.

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவன், “ஃபிளவர், நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன், அதுக்கு நீதான் பதில் சொல்லணும்” அவன் சுற்றி வளைத்து பேச, இவளுக்கு புரியாமல் வழக்கம் போல விழித்து வைத்தாள்.

சித்தார்த் முகத்தில் இளநகை பரவ, “என்னை உனக்கு பிடிச்சு இருக்கா ஃபிளவர்?”

“உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சித்து சார்” அவள் பதில் சட்டென வந்தது.

“அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா ஃபிளவர்?” சித்தார்த் நேராக கேட்டு விட, பூவின் விழிகள் தெறித்து விடுவது போல விரிந்தன.

“என்னை பத்தி, நிஷாவ பத்தி உனக்கு நல்லாவே தெரியும், நிதானமா யோசிச்சு பதில் சொல்லு ஃபிளவர்.” என்று அவன் எழுந்து செல்ல,

“சித்து சர், யோசிக்க எல்லாம் வேணா, நான் இப்பவே பதில் சொல்லிறேன்.” என்ற பூவிழி, “எனக்கு உங்கள பாத்த உடனயே ரொம்ப பிடிச்சது… எங்க பி.டி. சார கூடத்தான் பிடிச்சது, அவரும் உங்கள் மாதிரியே சூப்பரா இருந்தாரு. அப்பறம் ஹிர்திக்ரோஷன், எங்க காலேஜ் சேர்மன் இப்படி நிறைய பேரை எனக்கு பிடிக்கும்…!” பூவிழி அடுக்கிக் கொண்டே போக, தான் கேட்டதற்கு இது பதில் இல்லையே! என்ற ரீதியில் சித்தார்த் பார்த்து நின்றான்.

“ஆனா, முதல்ல பாத்தப்போ அவன எனக்கு சுத்தமா புடிக்கல! அவனோட சிடுசிடு மூஞ்சி புடிக்கல! அவனோட முரட்டு முகம் புடிக்கல! அவனோட அதிகார பேச்சு புடிக்கல! சும்மா சும்மா ரூல்ஸ் பேசினான், அதுவும் எனக்கு சுத்தமா புடிக்கல.”

“யாரது ஃபிளவர்?” சித்தார்த் நெற்றி சுருங்க கேட்டான்.

“ஒருநாள் திடீர்னு வந்து எனக்கு ஹெல்ப் பண்ணான். மரத்தில இருந்து என்னை இறக்கி விட்டான். அன்னிக்கு என்கிட்ட சிரிச்சு வேற பேசினான். நான் இருட்ட பார்த்து பயந்தப்ப, என்னை கிண்டல் பண்ணாம, அவன் கையை பிடிச்சுக்க சொல்லி நீட்டினான். பார்ட்டில ஒரு அரை லூசு என்னை வம்பிழுத்தானா! அப்ப இவன் வந்து என்னை கூட்டிட்டு வந்தான். அன்னிக்கு நிறைய பேசினான்… சத்தமா பெருசா சிரிச்சான், நான் அழுதப்ப என்னை அவனோட தோள்ல சாச்சிக்கிட்டான்.”

பூவிழி சொல்லி கொண்டே போக, சித்தார்த்திற்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவன் குறுக்கே பேசாமல் அமைதி காத்தான்.

“அப்புறம், அப்புறம், அன்னிக்கு பீச்ல…” மேலும் அவள் சொல்ல தயங்க,

“பூவிழி!” என்ற அழைப்பு கேட்டு இருவரும் திரும்பினர். அறை வாயிலில் மார்த்தாண்டன் நின்றிருந்தான்.

பூவிழி, சித்தார்த்தை திரும்பி பார்த்து, தன் பேச்சை தொடர்ந்தாள்.

“அவன் இப்பவும் சிடுசிடு மூஞ்சி தான், ஆனா என் பக்கத்தில வந்தா மட்டும் சிரிச்சிட்டே இருப்பான். அவன் இப்பகூட முரட்டு பீஸ் தான், ஆனா என்கிட்ட மட்டும் சாஃப்ட்டா நடந்துப்பான். அவனுக்கு என்னை பிடிச்சிருக்கா? இல்லையான்னு எனக்கு தெரியல. ஆனா, அவன் என்னை முழுசா புரிஞ்சிட்டு இருக்கான்! நான் எதுக்கு அழுவேன், எப்ப சிரிப்பேன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். என்னை ஆளவும், எங்கிட்ட அடங்கி போகவும் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.”

இரு ஆண்களும் எதுவும் குறுக்கே பேசவில்லை. உணர்வுகள் நிரம்பி வழிந்த அவள் முகத்தையே பார்த்து நின்றிருந்தனர்.

“இப்ப கூட அவன எனக்கு பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்னு எனக்கு சொல்ல தெரியல! லைஃப் லாங் அவன் கைய புடிச்சிட்டு அவன் கூடவே போகணும்னு மட்டும் தான் தோணுது! அவன என்னால விட முடியாது சித்து சார்… நான் முன்ன சொன்ன மாதிரி நீங்க வேற ஃபிகர கரெக்ட் பண்ணிக்கோங்க சார்”

பூவிழி கடைசியாக சொன்ன விதத்தில் சித்தார்த் சிரித்து விட்டான். “உனக்கு இவ்வளவு சீரியசா பேச வரும்னு நான் சத்தியமா எதிர் பார்க்கவே இல்ல ஃபிளவர்” என்றவன்,

இன்னும் அறை வாயிலில் நின்றிருந்த மாரியிடம், “ஃபிளவர் சொன்னதுல எனக்கு ஒண்ணு மட்டும் தான் புரிஞ்சது, நீ அவளை இம்ப்ரஸ் பண்ண டிரை பண்ணல. அவளோட அவளுக்கான உணர்வுகளை புரிஞ்சிட்டு நடந்துட்டு இருக்க, வாழ்த்துக்கள் மாரி… சாரி பாஸ், உன் ஆளுன்னு தெரியாம ஏதோ கேட்டுட்டேன்” என்று மன்னிப்பும் கேட்டுவிட்டு வெளியேறினான் சித்தார்த்.

தான் நிஷாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள தவறியதை இப்போது அவன் மனசாட்சி சித்தார்த்திடம் கடிந்து கூறியது. அதை பற்றிய யோசனையிலேயே அவன் தன் அறைக்கு நடந்தான்.

மார்த்தாண்டன் பூவிழியை விழியெடுக்காமல் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான்.

அவன் பார்வையில் தெரிவது என்ன? உச்சக்கட்ட சந்தோசமா! உச்சக்கட்ட பெருமிதமா! உச்சக்கட்ட பிரம்மிப்பா! அவனாலேயே உணர்ந்துகொள்ள இயலாத ஒரு நிறைவான உணர்வை அவனுள் நுழைத்து விட்டிருந்தாள் அவனின் காதலி.

நிறைந்த குடம் தளும்பாததைப் போல அவனின் நிறைந்த மனமும் தளும்பாமல் தன்னவளை பார்வையால் நிறைத்துக் கொண்டு இருந்தது.

அவன் செயலற்ற மௌனம் பூவிழியை கடுபேற்ற செய்ய, “உனக்கெல்லாம் யாருடா ஹீரோ சான்ஸ் கொடுத்தது? ரூல்ஸ் படி இந்நேரம் நீ ஓடிவந்து என்னை இறுக்கமா ஹக் பண்ணி இருக்கணும், ச்சே இதை கூட உனக்கு நான் சொல்ல வேண்டியதா இருக்கு தண்டம்?” என்று தலையில் அடித்து கொண்டவள், விரிந்த புன்னகையோடு தன் இருகைகளையும் விரித்து நின்றாள்.

மாரியின் முகத்திலும் மென்மையான இளநகை அழகாய் விரிய, அவளை நோக்கி வந்தவன், அவளின் விரிந்திருந்த கைகளை கீழே இறக்கி விட்டு அவள் முகத்தை தன்னிரு கைகளில் பொக்கிஷமாய் ஏந்தி கொண்டான்.

“ஆசை, காமம் தாண்டியும் வேற ஏதோ அளக்க முடியாத ஆழமான ஒண்ணு… காதல்ல இருக்குன்னு நீ இப்ப என்னை உணர வச்சுட்டடீ, ஐ லவ் யூ டீ சுண்டக்கா, வேற என்ன… எப்படி சொல்றதுன்னு எனக்கு சத்தியமா தெரியலடீ” என்றவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் ஒற்றி எடுத்தான்.

தாளாத நேசத்தில் அந்த முரட்டு சிங்கத்தின் விழியோரம் கசிந்த கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டவள், “என்னை சுண்டக்கான்னு கூப்பிடாதன்னு சொல்லி இருக்கேன் இல்ல” தன் வாயை கோணி காட்டி அவனை முறைத்து வைத்தாள்.

அவன் பார்வை அவள் முகத்தை ரசனை மாறாமல் வருடிக் கொண்டிருந்தது.

“நான் அப்படி தான் கூப்பிடுவேன் சுண்டக்கா, சும்மா பேச்சு வளர்க்காத வா கிளம்பலாம்” என்றான் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி.

அவள் சிணுங்கலாய் பார்க்க, அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “சீக்கிரம் அம்மாகிட்ட பேசி உடனே நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யணும் பூவிழி. இனிமேலும் தள்ளி போடறது எனக்கு சரியா படல” என்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி தந்து விலகி நடந்தான் மார்த்தாண்டன்.

அறை கதவை அவன் அடையும்போது, “அப்ப கட்டிபுடி வைத்தியம் இப்ப இல்லயா?” வெறுமையாய் அவள் குரல் ஒலிக்க, அவன் நடை நின்றது.

திறந்திருந்த கதவை அடைத்தவன், அதே வேகத்தில் அவளை இழுத்து அணைத்து கொண்டான்.

ஒவ்வொரு நொடிக்கும் அவன் கைகளின் இறுக்கம் கூடிக் கொண்டே போக, பூமகளின் மென் தேகம் வலிக்கச் செய்தது. வலியிலும் இதம் கண்டவளாய் தன்னவனுக்குள் சுகமாய் அமிழ்ந்து போனாள் பூவிழி.

***

மாரி அங்கிருந்து சென்ற மறுநாள் மாலை, கோவில் பிரகாரத்தை ஒன்பது சுற்று சுற்றி விட்டு, பணிந்து வணங்கி எழுந்து நடந்தாள் பூவிழி.

இப்போதைய பூவிழியின் திடீர் பக்திக்கு காரணம் மாரியின் அம்மா, அப்பா எப்படியும் தங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமே.

மாரியை பிரிந்து ஒருநாள் முழுதாக ஆகவில்லை. ஆனாலும், இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மனம் காரணமே இல்லாமல் தடதடத்துக் கொண்டிருந்தது. அதனாலேயே கோவிலுக்கு வந்திருந்தாள் பூவிழி.

அதே சிந்தனையோடு, சாலையில் கைகாட்டி ஆட்டோவை அழைக்க, நின்ற ஆட்டோவில் ஏறியவள், அடுத்த நிமிடத்தில் சுயநினைவை இழந்திருந்தாள்.

***