எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 2

2Ekkuthappa-4d57c3c8

அத்தியாயம் 2

எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வானின் கருமை நிறம் பொன்னிறமாக மாற, வழக்கம் போல புத்துணர்வாய் விடியல் தொடங்கியது.

‘தட் தட்’ கதவு தட்டப்படும் சத்தத்தில், விடியற்காலையின் சுகமான உறக்கம் கலைந்து பூவிழி எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

வெளியே காலை காஃபியோடு வேலையாள் நின்றிருந்தாள். நடுத்தர வயதை ஒத்திருந்த அவள், வெளிர் நீல நிற நீண்ட சுடிதார் அணிந்து, அதற்கு மேல் தூய வெள்ளை நிற ஏப்ரால் அணிந்து இருந்தாள்.

‘அடேங்கப்பா… இங்க வேலைக்காரங்களுக்கு கூட யூனிபார்ம் கொடுத்திருக்காங்க போல… பில்டப்பூ’ என்று எண்ணிக் கொண்டவள்,

“சரியா ஆறு மணிக்கு எழுப்பி காஃபி கொடுத்தாகணுமா க்கா…?” என்று கலைந்த தூக்கத்தோடு சிணுங்கினாள் பூவிழி.

“ஆமா டீச்சர், ஆறு மணிக்கு பெட் காஃபி, எட்டு மணிக்கு ப்ரேக் பர்ஸ்ட், பதினொரு மணிக்கு ஜூஸ், ஒரு மணிக்கு லன்ச், நாலு மணிக்கு டீ, சினாக்ஸ், நைட் எட்டு மணிக்கு டின்னர், ஒன்பது மணிக்கு பால்… இங்க சாப்பாட்டுக்கு மட்டும் எப்பவும் நேரம் தவறாது.”

அவள் படபடவென ஒப்புவிக்க, பூவிழி கண்களை இறுக மூடி தலையை அசைத்து கொண்டாள்.

‘பேச்சுல என்னா வேகம் ப்பா! எது எப்படியோ நமக்கு சோறு தான முக்கியம்’ என்று தனக்குள் சொன்னபடியே காஃபியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள் பூவிழி.

சாளரம் அருகே அமர்ந்தபடி, ஒவ்வொரு மிடறையும் சுவைத்து பருகினாள்.

‘ம்ம்ம்… பல்லு விளக்காம காஃபி குடிக்கிற சுகமே தனி ம்ம்ம்… நம்ப வீட்ல ஒரு நாளாவது இப்படி பெட் காஃபி கொடுத்திருக்குமா, அந்த தில்லு பேபி…? எப்பவும் ஹாஸ்டல் வார்டன் மாதிரி மிரட்டிகிட்டு இருக்கும்… இங்க நான் என் விருப்பப்படி இருக்கலாம். யாரு கேப்பா நம்மள?’

அவள் மனம் கூடு விட்டு வான்வெளியில் பறக்கும் பறவை போல குதூகலித்தது.

பூவிழி குளித்து தயாராகவும் ஜெயலட்சுமி அவளிடம் வரவும் சரியாயிருந்தது.

ஜெயா, அந்த ஊரிலேயே குடும்பத்துடன் தங்கி இருந்தாள். இங்கு கீர்த்தி, பிரபாவிற்கு, தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்று மொழிகளையும் பேசவும் எழுதவும் கற்று தருவது இவளது வேலை.

பிள்ளைகளுக்கு ஓவியம் கற்றுத்தர அந்த துறையில் சிறந்தவர்களை தேடும் வேலை தொடங்க, இவளுக்கு சட்டென்று நினைவு வந்தது பூவிழி தான்.

பார்த்ததை தத்ரூபமாக வரையும் அவளுடைய திறமை இவள் அறிந்ததே.

“குட் பூ… எங்க இன்னும் எழாம இருக்கியோன்னு பயந்துட்டே ஓடி வந்தேன்” என்றாள் ஜெயா.

“அதெல்லாம் நான் சமத்து பொண்ணு க்கா… எனக்கு கீர்த்தி, பிரபாவ பார்க்கணும்… வா போலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் பூவிழி.

பள்ளிக்கு தயாராகி மாடிப்படிகளில் இறங்கி வந்த அந்த இளங்குறுத்துக்களை சற்று குறுகுறுப்பாக கவனித்தாள் பூவிழி.

சத்யவர்த்தினி மகள் கீர்த்தி என்ற ரீதியில் பூவிழி தன் மனதில் வரைந்து வைத்திருந்த கற்பனை தோற்றம் இப்போது அழிந்து போனது. குண்டு கன்னங்கள், உருண்ட தேகம் என எட்டு வயது அமுல் பேபி போல கொழுக் மொழுக் என்று இருந்தாள் கீர்த்தி. எந்த வகையிலும் அவள் சத்யவர்த்தினியின் ஜாடையை கொண்டிருக்கவில்லை. ஒருவேளை அவளின் அப்பாவின் தோற்றத்தை ஒத்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

பிரபாகரன் முழுக்க சத்யவர்த்தினியின் நகலாகவே தெரிந்தான். நீள் வட்ட முகம், அந்த அதிகாரப் பார்வை, நடையில் தெரிந்த அந்த நிமிர்வு என்று அந்த ஆறு வயது சிறுவன் தன் அம்மாவின் பிரதிபலிப்பாய் தெரிந்தான்.

ஜெயா, பூவிழியை அவசரமாக அந்த பங்களாவில் இருந்து வெளியே இழுத்து வந்தாள். “பூ, அவங்க பர்மிஷன் இல்லாம அங்கெல்லாம் நாம போக கூடாது சொன்னா புரிஞ்சிக்க டீ.”

“என்னவோ போ க்கா, அவங்க வேலை தராங்க நான் செய்ய போறேன். அங்க போகாத, இங்க பேசாத ரூல்ஸ் எல்லாம் எனக்கு ஒத்து வராது.”

“பேசுவ டீ… வெறும் டிராயிங் வேலைக்கு இவ்வளோ சம்பளம், தங்க வசதி இதையெல்லாம் வேறெந்த மாக்கான் உனக்கு கொடுப்பானாம்?” ஜெயா கடுப்பாக கேட்டு வைக்க,

“இந்த மாக்கானுங்க அதிகமா சம்பளம் கொடுக்கறாங்கனு என்னால என் கெத்தை விட்டு தர முடியாது க்கா” பூவிழி சரிக்கு சமமாய் பேசினாள்.

“அச்சோ! வாய கழுவு… இவ்வளோ பெரிய மனுசங்கள கிண்டல் பண்ணிட்டு” ஜெயா பதற,

“யா…ரு நானு…!” பூவிழி கண்களைச் சுருக்கி கேட்டாள்.

ஜெயா அவளிடம் மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், அவளை உணவு கூடத்திற்கு இழுத்து வந்தாள்.

அங்கு தங்குபவர்கள் உணவு உண்பதற்காக தனி கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. பெரிய அளவில் இருந்த செவ்வக வடிவ உணவு மேசையில் இருவரும் அமர்ந்து பூரி, பொங்கல் என வெளுத்து கட்டினர்.

ஜெயா அடுக்கி அடுக்கி புத்தி சொல்லிவிட்டு விடைபெற்று சென்றாள்.

மாலைவரை அறைக்குள் முடங்கி கிடக்க பூவிழியால் ஆகாது. எனவே, நேரே நிர்வாக பெண் சாவித்திரியிடம் சென்றவள், மாலை பிள்ளைகளின் ஓவியப் பயிற்சிக்கு தேவையான பொருட்களின் பட்டியலை நீட்டினாள்.

சாவித்திரி அத்தனை கெடுபிடி இல்லை போல, டிரைவர் கோபால் உடன் பூவிழியை அனுப்பி வைத்தாள்.

காரில் ஏறிய ஐந்து நிமிடங்களில் முன் வழுக்கை கோபால் அண்ணனோடு வாயடிக்க ஆரம்பித்து விட்டாள் பூவிழி.

முதலில் பட்டும் படாமல் அவளுக்கு பதில் சொன்னவர், பின்னர் அவளின் ஓயாத பேச்சில் இவரும் கலந்து கொண்டார்.

டிரைவர் மூலம் கிடைத்த புதிய தகவல்கள், கீர்த்தி ஒரு உணவு பிரியை… எப்போதும் எதையாவது கொரித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம் அவளுக்கு.

பிரபா, குறும்புகளில் மன்னன். எப்போதும் ஏதாவது எடக்கு வேலை செய்து வைப்பானாம், எதையாவது உடைத்துவிட்டு நழுவி செல்வது, பாசாங்கு இல்லாமல் பொய்யுரைப்பது, ஏதேனும் எக்குத்தப்பாக செய்துவிட்டு மற்றவர் மேல் பழி போடுவது என்று பிரபாகரனின் சாகச பட்டியல் நீண்டு கொண்டே போனது.

கடைகளில் வரைவதற்கு தேவையானவற்றை வாங்கி கொண்டவள், தனக்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு பங்களாவிற்கு வந்து சேர்ந்தாள்.

மாலையில் குழந்தைகளை சந்திப்பதற்காக ஆர்வமோடு காத்திருந்தாள் பூவிழி.

நான்கு மணி அளவில் அவளுக்கு அழைப்பு வர, உடன் பணிப்பெண்ணுடன் நடந்தாள்.

அந்த பங்களாவின் மாடி அறைகளில் நான்காவதாக இருந்த அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். அது குழந்தைகளின் படிப்பிற்காக முழுவதுமாக ஒதுக்கப்பட்ட அறை என்பது நன்றாகவே தெரிந்தது.

அறை எங்கும் புத்தகங்கள், எழுது பொருள்கள், பள்ளி பைகள்… என நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தன.

சுவர்களில் ஆங்காங்கே கார்டூன் கதாப்பாத்திரங்களின் உருவங்கள் வண்ண மையமாய் காட்சியளித்தன.

அங்கே அவளின், ‘தல சின்சேன்’ உருவ படத்தைப் பார்த்ததும் அவள் இதழின் புன்னகை பற்கள் தெரிய விரிந்தது.

அங்கு தான் ஆசிரியை என்பதை நினைவுபடுத்திக் கொண்டு முகத்தை சரிசெய்து கொண்டாள் பூவிழி.

அப்போது தான் சாவித்திரி, இரு குழந்தைகளுடன் அறைக்குள் நுழைந்தாள்.

சாவித்திரி, கீர்த்தி, பிரபாவை பூவிழிக்கு அறிமுகம் செய்து வைக்க, பூவிழி குழந்தைகள் முன்பு அவர்கள் உயரத்திற்கு முட்டியிட்டு அமர்ந்து,

“ஹாய் குட்டீஸ், நான் பூவிழி. இனிமே நாம மூணு பேரும் சேர்ந்து நிறைய டிராயிங் வரைய கத்துக்கலாம், ஓகே வா…?” என்று முகத்தில் சினேக பாவனை காட்டி இருவர் முன்பும் கைநீட்டி, “ஃப்ரண்ஸ்” என்று கேட்க, கீர்த்தியும் பிரபாவும் ஒருவரையொருவர் உத்தேசமாக பார்த்துக் கொண்டனர்.

“நீங்க எங்க டிராய்ங் டீச்சர்னு எங்களுக்கு முன்னையே தெரியும்” என்றாள் கீர்த்தி சின்ன இதழ் சுழிப்போடு.

“டீச்சர்ஸ் எல்லாம் எங்க கூட ஃபிரண்ட்ஸா இருக்க முடியாது, ஸோ யுவர் ஃப்ரண்ட் ரிக்வஸ்ட் ரிஜக்டட்” பிரபாகரன் பதில் கணீரென வர, பூவிழி வாயடைத்து தான் போனாள்.

‘அட! இந்த லாலிபாப்ஸ் ரெண்டும் ஏன் இம்புட்டு ஸ்பைஸியா இருக்குங்கன்னு தெரியலையே…! பூவு சமாளி’ என்று அவள் எண்ணம் ஓட,

முகத்தை அழுவது போல காட்டிக் கொண்டவள், “எனக்கு இங்க யாருமே ஃப்ரண்ஸ் இல்ல தெரியுமா? உங்க கூடவாவது ஃப்ரண்ஸ் ஆகணும்ன்னு ரொம்ம்ம்ப ஆசபட்டேன்… நீங்களும் என்கூட ஃபிரண்ஸா இருக்க மாட்டேனு சொல்லிட்டீங்க… மீ பாவம்…” என்று தேம்பினாள்.

குழந்தைகள் இப்போதும் ஒருவரை ஒருவர் பார்த்து குழப்பத்துடன் விழித்துக் கொண்டனர்.

அவர்களுக்கு இவள் புதுமையாய் தோன்றினாள். பார்வைக்கும் சின்ன பெண் போல தான் தெரிந்தாள்.

“உங்களுக்கு ஃப்ரண்ஸ் யாருமே இல்லயா?” பிரபா வருத்தமாய் கேட்க,

இவள் பாவமான முக பாவனையோடு, இடவலமாய் வேகமாக தலையசைத்து வைத்தாள்.

“அச்சோ பாவம் பிரபா இவ, நாம இவள நம்ம ஃபிரண்ட்ஸா ஏத்துக்கலாமா டா?” கீர்த்தி தம்பியுடன் பகிரங்க ஆலோசனை நடத்த,

“அது முடியாதே… இவங்க நம்மள விட ரொம்ப பெரியவங்க… இவங்களோட ஃப்ரண்ஷிப் நமக்கு செம போரீங்கா தான் இருக்கும்” பிரபாவும் எதார்த்த நிலையை அலசி ஆராய்ந்து மறுப்பு தெரிவிக்க, கீர்த்தியின் முகபாவமும் அதை ஆமோதித்தது.

‘இந்த கேடி பசங்க என்னமா யோசிக்குதுங்கயா…!’ என்று பூவிழி தன் வாய்மேல் கைவைத்து கொண்டவள்,

“இல்லல்ல… நீங்க நினைக்கிற அளவுக்கு நான் பெரிய பொண்ணு எல்லாம் இல்ல… உங்கள விட கூட ரெண்டு, மூணு வயசு தான் இருக்கும்! நம்புங்கப்பா…!” என்றாள்.

பிள்ளைகள் இருவரும் அவளை நம்பாத பார்வை பார்க்க, இதுவரை அவர்களை வேடிக்கை பார்த்து நின்று இருந்த சாவித்திரியும் வேலைகார பெண்ணும் வாயைப் பொத்தியபடி சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

“என் ஃபிரண்ட்ஸ எல்லாம் நான் வா, போன்னு தான் கூப்பிடுவேன்…” பிரபா முடிக்காமல் இழுக்க,

“அப்ப என்னையும் அப்படியே நீ கூப்பிடலாம்” பூவிழி பதில் சட்டென வந்தது.

“உனக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் இதுல எது ரொம்ப பிடிக்கும்?” கீர்த்தி கேள்வி எழுப்பினாள்.

‘பூவு… கேள்வில ஏதோ ஏடாகூடம் தெரியுது!’ என்று இளித்தபடி யோசித்தவள், “எனக்கு சாக்கினா ரொம்ப பிடிக்கும்… ஐஸ்கிரீம் அதைவிட ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று பதில் தர,

“ஐய்ய் எனக்கும்… ரெண்டும் பிடிக்குமே” என்று கீர்த்தி குதூகலித்தாள்.

பிரபா, “உனக்கு பீம் பிடிக்குமா? இல்ல சின்சான் பிடிக்குமா?” அறிவாளி தனமாய் கேட்டு வைக்க,

பூவிழியிடமிருந்து சட்டென பதில் வந்தது. “தல சின்சான் தான்… என் பெயர் தான் சின்சானே… குறும்பு செய்ய தான் பிறந்தேனே…” என்று அசைவுகளோடு பூவிழி பாட, இருவரும் குதிக்க ஆரம்பித்தனர்… இல்லை இல்லை, மூவரும் குதித்துக் கொண்டிருந்தனர்.

“ஓகே பூவிழி, இனிமே நாம ஃப்ரண்ஸ்” என்று கை கொடுத்தவுடன், வாண்டுகள் இருவரும் மாற்றி மாற்றி நட்பு உடன்படிக்கைக்கான நியதிகளைச் சொல்ல ஆரம்பித்தனர்.

“ஃப்ர்ஸ்ட் ஒன், அம்மா மாதிரி நீ அட்வைஸ் எல்லாம் பண்ண கூடாது.”

இது பிரபாவின் ஆணை. பூவிழி ஆமோதித்து தலையசைத்தாள். வேறு வழி!

“நெக்ஸ்ட், நான் சாப்பிடும்போது பங்கு கேட்க கூடாது.” என்று கீர்த்தி சொல்ல, அவள் சின்ன முக சிணுங்களோடு மேலும் கீழும் தலையாட்டி வைத்தாள்.

“நாங்க சரியா டிராயிங் வரையலனா, ஜெயா மிஸ் மாதிரி பனிஸ்மெண்ட் எல்லாம் கொடுக்க கூடாது.”

“சரி, நோ பனிஸ்மெண்ட்.”

“பேசாத, நெளியாத, எழாத, ஸ்டெடியா உக்காருன்னு சில்லி தனமா எங்கள கண்ட்ரோல் பண்ண கூடாது…” என்று அவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போக, பூவிழி தலைமேல் கைவத்தபடி எல்லாவற்றிற்கும் ஆமோதிப்பாய் தலையாட்டி வைத்தாள், தஞ்சை தலையாட்டி பொம்மை போல.

***

பூவிழியோடு சேர்ந்து இந்த ரெண்டு வால் பசங்களும் என்னென்ன சேட்டை பண்ண போறாங்கன்னு… நெக்ஸ்ட் எபிசோட்ல பார்க்கலாம் ஃபிரண்ட்ஸ். நன்றி.

மறவாமல் உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ஃபிரண்ட்ஸ்😍👍