எக்குத்தப்பா சிக்கிட்டேனோ! 5

ES pic-b81b3304

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?

அத்தியாயம் 5

கீர்த்தி, பிரபாகரன் இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் ஏகத்துக்கும் வெடித்துச் சிதறியது.

பின்னே, இந்த ஒரு வாரமும் எந்த தொந்தரவும் இன்றி எட்டு மணி வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கியவர்களை, இன்று ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி யோகா பயிற்சி செய்ய சொன்னால், வேறெப்படி இருக்குமாம்?

புல்வெளி மீது சிறு துணி விரிப்பின் மேல் அமர்ந்துகொண்டு மனமின்றி மூச்சுப்பயிற்சியை செய்து கொண்டிருந்தனர் இருவரும்.

இளங்காலையின் புத்துணர்வை சுகமாய் அனுபவித்தபடி பங்களாவின் பின்புறம் உள்ள பூங்காவில் நடந்து வந்த பூவிழியை பார்த்ததும் குழந்தைகள் இருவரும் துள்ளி எழுந்து நின்றனர்.

“ஹேய் ஃப்ளவர்… இங்க வா” பிரபா உற்சாகமாய் குரல்கொடுக்க, பூவிழி புன்னகையுடன் அவர்களின் அருகில் வந்தாள்.

“ஹே வாண்டூஸ், இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்டீங்களா? அதிசயமா இருக்கே! இங்க என்ன பண்றீ…ங்க…!” துள்ளலாக ஆரம்பித்த அவள் குரல், கடைசியில் தேய்ந்து போனது, அங்கே அமர்ந்திருந்த பாடிகார்ட் மார்த்தாண்டனைப் பார்த்தவுடன்.

“நாங்க யோகா செய்திட்டு இருக்கோம். நீயும் வா பூவு… நாம சேர்ந்து யோகா ப்ராக்டிஸ் பண்ணலாம்” கீர்த்தி அவள் கை பிடித்து இழுக்க,

பூவிழி அசட்டு சிரிப்புடன், “எனக்கு யோகா தெரியாது கீர்த்து… நீங்க செயிங்க… நான் இப்படியே போறேன்” என்று நழுவ முயன்றவளை இரண்டு வாண்டுகளும் மறித்து நின்றனர்.

“வெரி பேட் ஃப்ளவர், ஃப்ரண்ஸ் கூப்பிட்டா, இப்படி எஸ்கேப் ஆக கூடாது.” பிரபா முறைப்பாக சொல்ல,

“ஆமா, நீயும் எங்க கூட இனிமே யோகா பிராக்டிஸ் பண்ற, ஓகே?” கீர்த்தி அதிகாரமாக ஆணையிட்டாள்.

‘அச்சோ! இந்த ரெண்டு குட்டி பிசாசுங்க சேர்ந்து அந்த வேம்பயர் கிட்ட என்னை சிக்க வச்சிடுங்க போலயே…!’ அவள் திருதிருவென விழித்து நிற்க,

“கீர்த்தி, பிரபாகர், வெட்டி பேச்சு போதும், சீக்கிரம் வந்து யோகா கன்டினியூ பண்ணுங்க.” என்று மாரி இருவரையும் அழைத்தான்.

“மாரி அங்கிள், பூவிழியும் எங்களோட யோகா கத்துக்கணும்னு ஆசபடுறா, ப்ளீஸ் நீங்க சரின்னு சொல்லுங்க.” கீர்த்தி கெஞ்சலாய் கேட்க,

“ம்ம்… சீக்கிரம் வந்து மூணு பேரும் பத்மாசனத்தில உக்காருங்க” என்று சம்மதம் தெரிவித்து, அவர்களைத் துரிதப்படுத்தினான் மார்த்தாண்டன்.

“அடபாவிங்களா! நான் எப்படா யோகா கத்துக்கணும்னு சொன்னே?” பூவிழி கிசுகிசுவென்று கேட்க, “இப்ப சொன்ன இல்ல அதேதான், சும்மா புலம்பாம வா பூவு” என்று நமட்டு சிரிப்புடன் அந்த வாண்டுகள் சென்று உட்கார்ந்தனர்.

“காலங்காத்தால இந்த லேம்ப்போஸ்ட்ல தான் நான் வந்து முட்டிக்கணுமா?” என்று சிணுங்களோடு இவளும் அமர்ந்தாள்.

“ஹே யூ, அப்படி இல்ல, ஒழுங்கா பத்மாசனத்தில நிமிர்ந்து உக்காரணும்” மாரி, பூவிழியை சுட்டி சொல்ல,

“டேய் பிரபா, யாருடா அது பத்மா? நான் ஏன் அவளை மாதிரி உக்காரணும்னு இந்த பாடிகார்ட் சொல்லுது?” பூவிழி அவசரமாய் கேட்டு வைக்க, கீர்த்தியும் பிரபாவும் வாயை பொத்தியபடி சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

“சட் அப், ம்ம்… உன் பாட்டி…” என்று கடுப்பாக பதில் சொன்னவன், “எங்களை மாதிரி காலை மடக்கி, முதுகை நேர்கோட்டுல நிமிர்ந்து உக்காரணும். கை ரெண்டும் உன் கால்மேல இருக்கணும், இதுக்கு பேர் தான் பத்மாசனம்… யோகால முதல் படி இதுதான் அடுத்தது மூச்சு பயிற்சி… நான் சொல்லி தரதை அப்படியே செய் போதும்.” என்று அவன் அதிகாரமாக சொல்ல, வேறுவழியின்றி அவளும் அடுத்த ஒருமணிநேரம் அவன் சொல்படியே பயிற்சி செய்தாள். மனதிற்குள் அவனை ஏகத்திற்கும் வசைபாடியபடி.

யோகா வகுப்பு முடிந்ததும் பிள்ளைகள் இருவரும் பிய்த்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

‘அட பக்கிங்களா! உங்கள அப்பறம் கவனிச்சுக்கிறேன்.’ என்று இவளும் நடக்க, “ஒரு நிமிஷம்” மார்த்தாண்டனின் குரல் அவளை நிறுத்தியது.

‘இன்னும் என்ன? ஒருவேளை யோகா சொல்லி தந்ததுக்கு ஃபீஸ் கேப்பானோ?’ என்ற யோசனையோடு அவனிடம் திரும்பி நின்றாள் பூவிழி.

“நேத்து அந்த வாயடிச்ச, இப்ப நல்ல பொண்ணு மாதிரி அமைதியா நிக்கிற?” மாரி சந்தேகமாக கேட்க,

“சாரி, நேத்து ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்.” பூவிழி அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டாள். அவளுக்கு பிடிக்காத எவரிடமும் அவள் எப்போதும் பேச்சு வளர்க்க விரும்புவதில்லை.

“ம்ம் இந்தளவுக்கு புரிஞ்சா சரிதான்” என்று அவன் அங்கிருந்து செல்ல, பற்களை நறநறவென கடித்தபடி இவளும் நடந்தாள்.

***

பழங்களின் வெவ்வேறு வரிவடிவங்களை வரைந்து வண்ணம் தீட்டும் முறையை பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாள் பூவிழி.

இன்றைய வகுப்பு தொடக்கத்தில் இருந்து பூவிழி பயிற்சியை தவிர்த்து வேறெதையும் பற்றி பேச்சு கொடுக்கவில்லை. தங்கள் தோழியின் இந்த மாற்றம் இரு பிள்ளைகளையும் சற்று சலனப்படுத்தத் தான் செய்தது.

அவளின் அமைதியான முகத்தோற்றத்தை கவனித்து, இவர்களும் அவள் சொன்னது போலவே படங்களை வரைந்தனர்.

வகுப்பு முடியும் நேரம் வழக்கம் போல கீர்த்தி எல்லா படத்தையும் நேர்த்தியாக வரைந்து இருந்தாள். பிரபாவும் ஓரளவு நன்றாக வரைய முயன்று இருந்தான்.

“குட், இன்னைக்கு கிளாஸ் ஓவர், நீங்க போகலாம்.” என்று சொல்லிவிட்டு பூவிழி தன் பொருட்களை பையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“காலையில யோகா கிளாஸ்ல உன்ன மாட்டி விட்டது தப்புதான் பூவு, சாரி… நீ எப்பவும் போல எங்ககூட பேசு ப்ளீஸ்…” என்று மன்னிப்பு கோரினர் இருவரும் ஒரே குரலாய்.

பூவிழி பதில் பேசாமல் கிளம்ப, பிள்ளைகளின் மலர்முகங்கள் வாடி போயின.

அந்த அறையின் கதவில் சாய்ந்தபடி அவர்களைப் பார்த்து நின்றிருந்த சித்தார்த்தை கண்டு, பூவிழி தேங்கி நின்றாள்.

“ம்ஹும் இங்க ஏதோ சரியில்லயே… என்னாச்சு?” சித்தார்த் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,

“சித்து மாமா, பூவு எங்க மேல கோவீச்சிகிட்டு பேச மாட்டேங்கிறா…” என்றாள் கீர்த்தி சோகமாய்.

“ஓ அப்படியா விசயம், அப்ப நம்ம ஃப்ளவரோட கோபம் தீர என்ன செய்யலாம்…?” என்று சித்தார்த் தீவிரமாக யோசிப்பது போல பாவனை செய்தான்.

“சித்து மாமா, ப்ளவர்க்கு சாக்லேட் அப்புறம் ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும், அதை வாங்கி தரலாம்.” பிரபாகர் அவசர ஆலோசனை வழங்க,

“சூப்பர் ஐடியா, டிரை பண்ணி பாக்கலாமே, ம்ம் சீக்கிரம்” என்று சித்தார்த் துரிதப்படுத்த, இரண்டு பிள்ளைகளும் வெளியே ஓடினர், அவளுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் எடுத்து வர.

அவர்கள் தலை மறையும் வரை உம்மென்று இருந்தவள், அவர்கள் சென்றதும் பக்கென சிரித்து விட்டாள்.

சித்தார்த் நெற்றி சுருங்க, “அப்ப இதெல்லாம் நடிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம்காக எங்க வீட்டு பசங்கள ஏமாத்தற இல்ல நீ” என்று குற்றம் சாட்ட,

“பின்ன என்ன சித்து சார், இதுங்க ரெண்டும் சேர்ந்து காலையில என்னை ஒரு மணிநேரம் ஒரே இடத்தில உக்கார வச்சுடுச்சுங்க. எனக்கு எப்படி இருந்திருக்கும்! அதான் வச்சு செஞ்சேன், யார்கிட்ட?” என்று அவள் இல்லாத காலரை தூக்கி தோரணை காட்ட, சித்தார்த் வாய்விட்டு சிரித்து விட்டான்.

“சித்து சார், அமைதியா இருங்க, பசங்க வராங்க.” என்றவள் மறுபடி முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டாள்.

பிரபாகர் இரு கைநிறைய விதவிதமான பெரிய சாக்லேட்களை எடுத்து வந்து பூவிழி முன்பு நீட்ட, கீர்த்தி தன் ஒரு கையில் இரண்டு கோன் ஐஸ்கிரீம் வீதம் இரு கைகளிலும் நான்கு ஐஸ்கிரீமை அவளிடம் நீட்டினாள்.

பூவிழி எத்தனை முயற்சி செய்தும் அவள் கண்களில் மின்னிய ஆசையை மறைக்க முடியவில்லை. இருந்தும் அமைதியாக நின்றிருந்தாள்.

“இது எல்லாமே உனக்கு மட்டும் தான் பூவு… எங்க கிட்ட பேசு” கீர்த்தி கெஞ்ச,

“நாளையில இருந்து யோகா கிளாஸ்க்கு நீ வரவேணா சரியா… பேசு ஃபிளவர்.” என்று பிரபாகர் வாக்கு தர,

பூவிழி, “நிஜமா தான் சொல்றிகளா? உங்கள நம்பலாமா!” என்றாள் கண்களை சுருக்கி சந்தேகமாய்.

“நிஜம்மா… எங்க ஷீலா மிஸ் ப்ராமிஸ்” என்றாள் கீர்த்தி.

“ம்ம் நானும் மீனு மிஸ் மேல ப்ராமிஸ்” என்றான் பிரபாகர்.

அவர்கள் சத்தியம் வைத்த தினுசில், சித்தார்த்தின் கண்கள் விரிந்தன.

“அதென்ன, ஷிலா மிஸ், மீனு மிஸ் மேல ப்ராமிஸ் வக்கிறீங்க, உங்களுக்கு உங்க மிஸ்ஸ அவ்வளவு பிடிக்குமா?” சித்தார்த் பெருமையாக கேட்டான்.

“அச்சோ! அப்படியில்ல சித்து சார், ஷீலா இவளோட மேத்ஸ் மிஸ், மீனு இவனோட இந்தி மிஸ். அதான் அவங்க மேல இவ்வளோ தைரியமா பிராமிஸ் பண்ணுதுங்க ரெண்டு வாலுங்களும்.” என்று பூவிழி விளக்கம் தர, “நல்லா வருவீங்க டா நீங்கெல்லாம்…” சித்தார்த் சொன்ன விதத்தில் அங்கு சிரிப்பலை பரவியது.

பூவிழி எப்போதும் போல வாயடிக்க ஆரம்பிக்க, கீர்த்தி, பிரபா ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

நால்வரும் நான்கு ஐஸ்கிரீமை பகிர்ந்து ருசிக்க தொடங்க, சித்தார்த் பூவிழியை வினோதமாக பார்த்தான்.

“ஹே ஃபிளவர், நீ எங்க வீட்டுக்கு வந்து வெறும் நாலு நாள் தான் ஆச்சுன்னு நம்பவே முடியில… கீர்த்து, பிரபா உன்கிட்ட இவ்வளோ அட்டாச் ஆகிட்டாங்க…” சித்தார்த் வியந்து சொல்ல, ஐஸ்கிரீமை ருசித்தபடி பூவிழி தோளைக் குலுக்கினாள்.

“ம்ஹூம், உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு… ம்ம் யூ ஆர் லைக் எ ஏன்ஜல்” அவன் விளையாட்டாகவே பாராட்ட, இப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது.

தன் பையில் இருந்த வரைப்படத்தாளை எடுத்து அவனிடம் நீட்டியவள், “இது உங்களுக்காக சித்து சார், பிரிச்சு பார்த்து பிடிச்சிருக்கா சொல்லுங்க” என்றாள்.

தன் கைகளை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு அதை வாங்கி பிரித்து பார்த்தவன், ஒரு நொடி பிரமித்து நின்றுவிட்டான்.

நேற்று கீர்த்தி, பிரபாவை பின்னிருந்து கத்தி சித்தார்த் பயமுறுத்தும் காட்சி, அப்படியே தத்ரூபமாய் அந்த ஓவியத்தில் வரையப்பட்டு இருந்தது.

அந்த ஓவியத்தில் இருந்த அவனின் முகத்தோற்றம் அத்தனை தத்ரூபமாய் அவனை வியக்க வைத்தது. செல்ஃபி பிரியனான சித்தார்திற்கு அவன் முகபாவங்கள் அனைத்தும் அத்துப்படி தான்.

அவன் முகத்தில் குழந்தைகளை பயமுறுத்தும் ஆவல், அதையும் தாண்டிய குதூகலம், அவன் கண்கள் விரிந்திருக்க, புருவங்கள் உயர்ந்திருக்க, பாதி அமர்ந்த நிலையில் கைகள் விரித்த நிலையில், அத்தனை நேர்த்தியாக அதில் அவன் உருவம் வரையப்பட்டு இருந்தது.

கூடவே அதிர்ந்து திரும்பிய இரு குழந்தைகளின் பக்கவாட்டு தோற்றமும், அவர்களின் முகபாவனைகளும் அதில் அத்தனை அழகாய் தெரிந்தது. பிரபாகர் முகம் முதல்கட்ட அதிர்விலிருந்து மீண்டு சித்தார்த்தை கண்டு விட்ட உற்சாகத்தைக் காட்ட,

சட்டென திரும்பி பார்க்க தாமதப்படுத்திய கீர்த்தி, அந்த முதற்கட்ட அதிர்விலிருந்து விலகாமல் குண்டு கண்கள் விரிந்து இருக்க, மூச்சை இழுத்துப் பிடித்தபடி தலையைத் திருப்புவது போன்ற அவளின் முகபாவம், அத்தனை தெளிவாய் வரையப்பட்டு இருந்தது.

மொத்தத்தில் ஐந்து நொடிகள் கூட கடக்காத நேற்றைய தருணத்தை அப்படியே அழகு வண்ண ஓவியமாக சிறைப்பிடித்து இருந்தாள் பூவிழி.

“ஹே! சான்சே இல்ல… மார்வ்லஸ்!” என்ற சித்தார்த்தின் கைகள் அதீத ஆர்வத்தில் அவளை நோக்கி நீள, பூவிழி திகைத்து இரண்டடி பின்வாங்கி கொண்டாள்.

அவள் விலகலில் கண்களைச் சுருக்கியவன், “சாரி சாரி ஃபிளவர், தப்பா எடுத்துக்காத… எனக்கு உன்ன எப்படி பாராட்டறதுன்னே தெரியல… அதான் ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன்.” என்று விளக்கம் தர,

“பரவாயில்ல சார், நான் வரைஞ்சது உங்களுக்கு பிடிச்சிருக்கா?” பூவிழி ஆர்வமாக கேட்டாள்.

“பிடிச்சிருக்காவா! சத்யா சொல்லும்போது கூட நான் நம்பல… ச்சே, என்ன டேலண்ட் உனக்கு… நீ கிரேட் ஃபிளவர்.”

“தேங்க் யூ சார்” என்று புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்து விட்டாள் பூவிழி. சித்தார்த் திடீரென அவளை அணைக்க முயன்றது அவளை கலவரப்படுத்தி இருந்தது. விட்டால் போதுமென அங்கிருந்து ஓடி வந்து விட்டாள்.

சித்தார்த் பார்வையும் கவனமும் கையிலிருந்த ஓவியத்தின் மீதே பதிந்து இருந்தது. பார்க்க பார்க்க வியப்பையும் ரசனையையும் அவனுள் தூண்டிக் கொண்டே இருந்தது அந்த ஓவியம்.

***

இங்க யாருகிட்ட யாரு எப்படி சிக்கப்போறாங்கன்னு… நெக்ஸ்ட் எபிசொட்ல பார்க்கலாம் ஃபிரண்ட்ஸ். 

தொடர்ந்து படித்து, லைக்ஸ், கமண்ட்ஸ் தந்து ஊக்கப்படுத்தும் தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்…