எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?
அத்தியாயம் 7
இன்றைய ஞாயிறு பொழுது கழியுமா! என்று அடம் பிடிப்பது போல இருந்தது பூவிழிக்கு. பொழுதைப்போக்க யாராவது சிக்குவார்களா? என்று அறையை விட்டு வெளியே வந்தாள்.
பால்கனியில், பிரபாகர், கீர்த்தி இருவரும் வீடியோ கேம் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து, பூவிழி அவர்களுக்கு கீழிருந்து குரல் கொடுத்தாள்.
“ஹாய்… வாண்டுஸ்…”
ம்ஹும் அவர்கள் திரும்பவில்லை.
“ஏய் பிரபா… கீர்த்து… என்ன செய்றீங்க?”
இப்போதும் அவர்கள் கவனிப்பதாய் இல்லை.
‘இங்க காட்டு கத்து கத்தறேன், இந்த பக்கிங்க திரும்பி பார்க்குதா பாரு’ என்று கடுப்பாக கீழே இருந்த ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் மேல் வீசினாள் பூவிழி.
அவர்கள் இருவரின் இடையே இருந்த கண்ணாடி டீபாய் மேல் டங்கென்ற சத்தத்துடன் அந்த கல் பட்டு விழ, இருவரும் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தனர்.
“ஏ வாலுங்களா… நான் தான், கீழ பாருங்க” பூவிழி கையசைக்க, அவர்களும் அவளை கவனித்தனர்.
“என்ன பூவு?” கீர்த்தி விசாரிக்க,
“செம போர் பா, கீழ வாங்க நாம நொண்டிபட்ட விளையாடலாம்” ஆர்வமாய் அழைத்தாள் பூவிழி.
“என்னது? நொண்டி… பட்டயா, சும்மா எங்களை டிஸ்டர்ப் செய்யாம போய் எஃப் பீல மொக்க போடு, போ” பிரபாவின் பதிலில் இவள் விழிகள் தெறித்தன.
“பிரபா, அதை எப்படி விளையாடணும்னு நான் சொல்லி தரேன் வாடா, ஜாலியா இருக்கும்” இவள் கெஞ்ச,
“நான் வீடியோ கேம்ல டென்த் ஸ்டேஜ் இப்ப தான் வின் பண்ண போறேன் என்னால வர முடியாது ஃப்ளவர்” பிரபா மறுத்து விட்டான்.
“எனக்கும் கேம் இப்ப தான் இன்ட்ரெஸ்டிங்கா போயிட்டு இருக்கு, நானும் வரல பூவு” என்று கீர்த்தியும் மறுத்து விட, பூவிழியின் முகம் நெறுப்பு பந்தாய் சிவந்து, அவள் மூச்சுக்காற்று அனல் புகையாய் வெளிவந்தது.
“நான் இவ்வளோ கூப்பிடுறேன், உங்களுக்கு அந்த பாழாபோன வீடியோ கேம் தான் முக்கியமா போச்சு இல்ல. நீங்க மட்டும் இப்ப என்கூட விளையாட வரல, உங்க பேச்சு நான் கா டா, இந்த பூவு இனிமே உங்ககூட பேசமாட்டா பாத்துக்க” என்று அவள் பொறிய, இரு பிள்ளைகளும் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டனர்.
பிரபாகர் மனமே இல்லாமல் வீடியோ கேமை அணைத்து விட்டு எழுந்தான். வேறுவழி, பூவிழியின் கலகல பேச்சில் கொண்டாட்டமாய் கழியும் ஓவிய வகுப்பிற்கும், அவள் உம்மென்ற முகத்துடன் நகர்த்தும் வகுப்பிற்கும் உள்ள வித்தியாசம் தான் அவனுக்கு நன்றாகவே தெரியுமே!
கீர்த்தியும் அவனுடன் எழுந்து விட்டாள். பின்னே, பிறகு பூவை பேச வைக்க இவளின் பங்கு சாக்லேட், ஐஸ்கிரீமை இழக்க நேரிடும் அல்லவா!
இருவரும் அவள்முன் வந்து நின்றனர். “என்ன, விளையாடலாமா?” பூவிழி தெனாவெட்டாய் கேட்க,
“முதல்ல நீ விளையாடி காட்டு, அப்புறம் நாங்க விளையாடுறோம்” அதே ரீதியில் அவர்களின் பதிலும் வந்தது.
மர நிழலின் கீழ், மண் தரையில், சிறு குச்சியை எடுத்து கோடுகளை இழுத்து இரு வரிசையில் தலா மூன்று கோடுகள் என ஆறு கட்டங்களை வரைந்தாள் பூவிழி.
சிறு தட்டையான கல்லை தேடி எடுத்து அவர்களிடம் காண்பித்து, “இது தான் காய், இந்த கட்டத்துக்கு முன்ன நின்னு முதல் கட்டத்தில காயை போட்டுட்டு, மறுபக்கம் ஒவ்வொரு கட்டமா ஒத்த கால்ல நொண்டி நொண்டி வந்து அந்த காயை வெளியே தள்ளனும், அடுத்து ரெண்டாவது கட்டத்துல காயை போட்டு அப்படியே விளையாடனும் சரியா? நோண்டி வரும் போது உங்க காலு கோட்டுமேல பட்டா நீங்க அவுட்” என்று பெரிய விளக்கமாக கொடுத்துவிட்டு ஒருமுறை விளையாடியும் காட்டினாள்.
கீர்த்திக்கு அந்த விளையாட்டு சட்டென பிடித்துப் போனது. பிரபா முதலில் வேண்டா வெறுப்பாய் விளையாட ஆரம்பிக்க, கொஞ்ச நேரத்தில் அவனுக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது. பிறகென்ன அந்த மூன்று வாண்டுகளும் வேர்க்க வேர்க்க நொண்டி விளையாடி கொட்டமடித்தனர்.
குழந்தைகளை வீடு முழுவதும் தேடி விட்டு பின்பக்கம் வந்து பார்த்த சித்தார்த், அப்படியே வாய் பிளந்து நின்றுவிட்டான்.
“ஏய், பூவு நீ கோட்டை மிதச்சிட்ட நீதான் அவுட்” கீர்த்தி குரலை உயர்த்த,
“இல்லல்ல நான் நம்பமாட்டேன், பிரபா நீ பார்த்தல்ல நான் மிதிக்கல தானே?” பூவிழி அவனை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.
பிரபா பதில் தரும் முன் சித்தார்த் குரல் குறுக்கிட்டது. “டேய்… நீங்க இப்படி மண்ணுல விளையாடினது மட்டும் உங்க அம்மாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்! போங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வாங்க, நாம ஷாப்பிங் போலாம்” என்று சொல்ல, குழந்தைகள் இருவரும் துள்ளி குதித்து ஓடினர்.
அங்கேயே நின்றிருந்த பூவிழியை மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு சிரித்தவன், “சின்ன குழந்தைங்க அவங்களா? இல்ல நீயான்னு எனக்கு பெரிய டவுட் வருது ஃப்ளவர். சரி நீயும் போய் ரெடியாகிட்டு வா, இப்ப நீயும் எங்கூட வர” என்று சொல்ல, பூவிழி நம்பமுடியாமல் விழி விரித்தாள்.
“நான் எதுக்கு சித்து சார்!”
சுற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தவன், “வர்ற புதன்கிழமை வீட்ல சர்பிரைஸ் பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன். அதுக்காக பர்செஸ் செய்ய தான் இப்ப போகணும். சத்யாக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு இந்த வாண்டுகளையும் கூட இழுத்துட்டு போறேன். நீ வந்தால் இவங்களை சமாளிச்சுக்குவ நானும் ஃபிரியா எல்லாத்தையும் வாங்கலாம் அதான்” சித்தார்த் சின்ன குரலில் விளக்கமாக சொல்ல, பூவிழி மறுக்க தோன்றாமல் சம்மதமாக தலையசைத்தாள்.
அடுத்த அரைமணியில் அவர்களை சுமந்தபடி அந்த மகிழுந்து சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
பின் இருக்கையில் பூவிழி, பிரபாகர், கீர்த்தி அமர்ந்து கொட்டமடித்து வர, சித்தார்த் முன் இருக்கையில் அமர்ந்து தன் கைப்பேசியை நோண்டி கொண்டிருக்க, மார்த்தாண்டன் காரை லாவகமாக இயக்கிக் கொண்டிருந்தான்.
“மாரி, லேடிஸ் ஹாஸ்டல் பக்கத்தில வண்டிய நிறுத்திக்க” சித்தார்த் சொல்ல, கார் சாலையோரம் ஒதுங்கி நின்றது.
அனைவரும் கீழே இறங்க, “இங்க ஏன் வண்டிய நிறுத்தினிங்க அங்கிள்?” கீர்த்தி கேள்வி எழுப்பினாள்.
“அது… ம்ம் நம்ம ஃபிளவரோட ஃப்ரண்ட் ஒருத்தங்க இப்ப வருவாங்க, அவங்க ஷாப்பிங் செய்யறதுல செம டேலண்டாம், அதான் அவங்களையும் நம்ம கூட அழைச்சிட்டு போலாம்னு…!” சித்தார்த் ஏதோ வாய்க்கு வந்ததை கோர்வையாக உளறிவிட்டு, இரு நொறுக்கு தீனி பொட்டலங்களை அவர்கள் கையில் திணித்து கார்க்குள்ளேயே உட்கார வைத்தான்.
“அது யாரு சார்? எனக்கே தெரியாத என்னோட ஃப்ரண்ட்டு!” பூவிழி குழப்பமாக கேட்க,
சித்தார்த் ஒரு சங்கடமான இளநகையோடு, “அது என் ஆளு ஃபிளவர், பேரு நிஷா… நிஷாந்தினி, அவளும் வரேன்னு சொன்னா, என்னால மறுக்க முடியல, இந்த பசங்க கிட்ட என்ன சொல்லி சமாளிக்கிறதுன்னு யோசிச்சிட்டே வந்தேன். நீ காட்டி கொடுக்காத” என்று அவன் பார்வையால் கெஞ்சி நின்றான்.
பூவிழியின் கண்களில் ஒரு மின்னல் வெட்டிட அவள் முகம் முழுவதும் பரவசம் பரவியது. “முன்னையே நினச்சேன் சார், சாக்லேட் பாய் மாதிரி சும்மா செமயா இருக்கீங்க, இதுவரைக்கும் எந்த பொண்ணும் உங்கள சிங்களா விட்டிருக்க மாட்டாங்கன்னு” என்று துள்ளலாய் சொல்ல, சித்தார்த் அழகாய் வெட்க சிரிப்பை உதிர்த்தான்.
“சார் என்னமா வெட்கப்படுறீங்க, வெட்கப்படறதுல பொண்ணுங்கள மிஞ்சிடுவிங்க போலவே சித்து சார்” என்று பூவிழி கிண்டல் செய்ய, சித்தார்த்தின் பார்வை சற்று தூரமாய் நகர்ந்தது.
அங்கே, சுடிதார் அணிந்து உயிர் பெற்ற தந்த சிலையாய் நிஷாந்தினி நடந்து வந்தாள். அவளை பார்த்து சித்துவை விட, பூவிழி தான் அதிகம் வழிந்தாள் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது.
தன்மீது வைத்த பார்வையை விலக்காமல், கண்கள் விரிய நின்றிருந்தவளிடம் நிஷாவின் கவனம் திரும்பியது.
“ஹேய்… நீ தான பூவிழி, சித்துவ அப்படியே செமயா வரைஞ்சிருக்க தெரியுமா!” என்று குதூகலமாய் அவளை அணைத்து பாராட்ட, பூவிழிக்கு சந்தோசம் தாளவில்லை.
“அச்சோ! நிஷா மேடம், என்னமா இருக்கீங்க! அதான் சித்து சார் உங்க பேர சொல்ல கூட அவ்வளோ வெட்கப்பட்டாரு போல.”
“மேடம் எல்லா வேணாம் நம்மள ஃப்ரண்ட்ஸ்னு தானே சித்து சொன்னான். நாம நடிக்க வேணாம் நிஜமாவே ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்” நிஷா எந்தவித மேல் பூச்சும் இல்லாமல் இயல்பாக பேசி, பூவிழியின் மனதை வசீகரித்தாள்.
இப்போது குழந்தைகள் முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, பூவிழி, நிஷாந்தினி, சித்தார்த் பின் இருக்கையில் அமர்ந்து வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்தனர்.
பேச்சின் சாரம் இதுதான், நிஷாந்தினி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். அவளின் பேரழகில் மிளிர்ந்த சுட்டித் தனங்களால் சித்தார்த் மனதை கொய்து கொண்டாள் மொத்தமாக. பணத்தை மட்டுமே கொண்டு மனிதர்களை எடைபோடும் தன் அக்கா, மாமாவிடம் அவனின் காதலை வெளிப்படுத்த சித்தார்த் விரும்பவில்லை. சிகிச்சை முடிந்து அப்பா, அம்மா இங்கே வந்து அவரின் உடல்நிலை நன்கு தேறிய பின்னர் தங்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் பெற வேண்டும் என்பது அவனது திட்டம்.
அதுவரை திருட்டு தனமாய் தித்திப்பான சந்திப்புகளால் இவர்கள் காதலை வளர்த்து கொண்டிருக்கின்றனர். பூவிழி அவர்கள் காதல் கதையை திகட்ட திகட்ட கேட்டுக் கொண்டிருந்தாள்.
பின்பு, பூவிழியை பிள்ளைகளோடு போராட விட்டுவிட்டு, சித்து, நிஷா தேவையான பொருட்களை எல்லாம் தேடி தேடி வாங்கி குவித்தனர்.
மார்த்தாண்டன் நாலாபுறமும் அலசும் பார்வையோடு எச்சரிக்கையாக இருக்க, அவனின் கூர் பார்வையில் மறுபடியும் அவர் சிக்கிக் கொண்டார்.
வழுக்கை தலை, வெண்பஞ்சாய் நரைத்த கேசம், தூய வெளிர் நிற மேல் சட்டையும் கீழ் சட்டையும் (பேண்ட்) அணிந்து இருந்தார். பார்வைக்கு தவறாக தோன்றவில்லை எனினும் இந்த பேரங்காடிக்கு தாங்கள் வந்தது முதலே தங்களை பின்தொடர்ந்தபடி அங்கங்கே மறைந்து நின்று பார்த்துக் கொண்டே இருந்தார்.
இப்போதும் அவர் பார்வை குழந்தைகளிடம் வளவளத்து கொண்டிருந்த பூவிழி மீது இருக்க, மாரி சந்தேகமாக அவரிடம் சென்றான்.
“யார் சார் நீங்க? எங்களை எதுக்கு ஃபாலோ பண்ணிட்டு வரீங்க?” மாரியின் கேள்வியில் சற்றே திகைத்து நிமிர்ந்தார் அவர்.
***
(லைக்ஸ், கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்… அடுத்த அத்தியாயம் நாளை காலை…)