12
சரவணன் கார்த்திக்கின் தோளைத் தொடவும், கார்த்திக் அவனது கையைப் பிடித்துக் கொண்டு புலம்ப, சரவணன் அவனைத் தட்டிக் கொடுத்தான்..
கார்த்திக் ஆதிராவின் மேல் வைத்திருக்கும் காதலைப் பார்த்தவன், கடுப்புடன், “லூசு.. என்கிட்டே எல்லாம் அவளை என்னவோ போனா போகுதுன்னு லவ் பண்றது போல பேசிட்டு.. அவ மேல இப்படி அன்பு வச்சிருக்கியேடா.. உன்னை எல்லாம் என்ன சொல்றது? இதுல அவளோட அம்மா அப்பாவை வேற அவ்வளவு பொறுப்பா கவனிச்சுக்கிட்டு இருந்திருக்க.. ஏண்டா அப்பறம் என்கிட்டே மட்டும் அப்படி நடந்துக்கிட்ட?” என்று கேட்க, கார்த்திக் ஒரு பெருமூச்சுடன் திரும்ப, அப்பொழுது மதியின் குரலில் இருவரின் கவனமும் அங்குத் திரும்பியது..
“என்ன சார்? என்ன சொல்றீங்க?” அதிர்ச்சியுடன் கேட்ட மதியின் குரலில், இருவரும் அவனைத் திரும்பிப் பார்க்க,
“எப்படி சார்? அது தானே நமக்கு அடையாள அட்டைன்னு அரசாங்கம் சொல்லி இருக்காங்க? இவன் அதுலயே ஃபிராட் பண்ணினா என்ன தான் செய்யறது?” என்று மதி தலையை நீவிக் கொள்ள, கார்த்திக் அவன் அருகில் சென்றான்..
“என்னாச்சு?” சித்தார்த் கேட்க,
“அந்த ஃபிராட் ஆதார் அட்டையை போலியா தயார் செய்து கொடுத்திருக்கான்.. அந்த அட்ரஸ்ல ஆதவன்ங்கற பேர்ல யாருமே இல்லயாம்.. அங்க இருக்கறது ஒரு பெரியவர் போல.. அவர் பையன் வீட்டுக்கு அமெரிக்கா போயிருக்காராம்.. அந்த அக்ரீமென்ட்ல இருந்த அந்த அட்ரஸ்க்கு ஏத்தது போல அவன் அடையாள அட்டையை தயார் செய்திருக்கான்..” சித்தார்த்திடம் சொன்ன மதி,
“நல்லா திட்டம் போட்டுத் தான் வேலை செய்திருக்காங்க.. இப்போ சிசிடிவில இருந்து அவனோட போட்டோவையும், அந்த லேடியோட போட்டோவையும், மத்த எல்லா ஸ்டேஷன்க்கும் அனுப்பி ஹெல்ப் கேட்க வேண்டியது தான்.. அதே போல அவங்க காலி செய்த அப்போ கிளம்பின ட்ரக்கோட போட்டோவையும் அனுப்பி எல்லா செக் போஸ்ட்டையும் லாக் செய்து, வெஹிகல் சேர்ச் பண்ணிட வேண்டியது தான்.. அதுக்கு முன்ன கமிஷனர்க்கிட்ட விஷயத்தைக் கொண்டு போகணும்..
இது எனக்கு தனி ஆளா அவன் மட்டும் செய்யறாங்றதுல சந்தேகமா இருக்கு.. இவ்வளவு சீக்கிரம் அவங்க நடவடிக்கை எடுத்து உடனே வீட்டையே காலி செய்து இருக்காங்கன்னா.. இதுல பெரிய நெட்வர்க் இருக்கணும்.. இல்ல இவன் வேற மாதிரி தப்பான தொழில் செய்துட்டு இருக்கணும்.. பொண்ணுங்களை கடத்தி விக்கிற மாதிரி.. ஏதோ பொண்ணுங்களை வச்சு தப்பான தொழில் செய்யறான்.. எதுவா இருந்தாலும் நாம பேசிடலாம்..” என்றவன், தனது மொபைலை எடுத்துக் கொண்டு கமிஷனரைக் காண அனுமதி கேட்டான்..
செய்வதறியாது கார்த்திக் நின்றுக் கொண்டிருக்கவும், “கார்த்திக்.. நீங்க வீட்டுக்கு போய் ஆதிராவோட அப்பா அம்மாவைப் பாருங்க.. அவங்க அங்க என்ன நிலைன்னு தெரியாம தவிச்சிட்டு இருப்பாங்க..” என்ற சித்தார்த், அடுத்தக்கட்ட வேலையாக அந்த வண்டியையும், ஆதவனின் புகைப்படத்தையும், அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த அந்த பெண்ணின் படத்தையும் தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டு,
“நீங்க போங்க.. நாங்க கமிஷனரைப் பார்த்துட்டு உங்களுக்கு பேசறோம்..” என்ற சித்தார்த், அங்கிருந்து மதியுடன் கிளம்ப எத்தனித்தான்..
கார்த்திக்கும், சரவணனும், அதியமானுடன் நின்றுக் கொண்டிருக்க, அங்கு அந்த ரூமையும், ஆதவனின் வீட்டையும் சீல் வைத்துவிட்டு, அங்கிருந்த தடய ஆய்வாளர்கள் செல்ல, கார்த்திக்கின் தோளைத் தட்டிக் கொடுத்த சித்தார்த்,
“எப்படியும் சீக்கிரம் கண்டுப்பிடிச்சிடலாம் கார்த்திக்.. கவலைப்படாதீங்க.. இன்னைக்கு நைட் எல்லா இடமும் எல்லா வண்டியையும் தேடி எப்படியாவதுக் கண்டுப்பிடிச்சிடலாம்..” மதி அவனை ஆறுதல்படுத்த, கார்த்திக் உதட்டைக் கடித்துக் கொண்டு தலையசைத்தான்..
அவனது முகத்தைப் பார்த்த மதி, “நாங்க என்ன ஆறுதல் சொன்னாலும் ஆதிராவைப் பார்க்கற வரை உங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியும் கார்த்திக்.. அந்த வலியை அனுபவிச்சவன் நான்.. கொஞ்சம் நீங்க தைரியமா இருந்தா தான், அவங்க அப்பா அம்மாவையும் நீங்க பார்த்துக்க முடியும்.. முதல்ல போய் சாப்பிடுங்க.. காலைல இருந்து ஒரு டீ கூட குடிக்காம சுத்திட்டு இருக்கீங்க.. ஆதிரா கிடைச்ச உடனே வாங்க வேண்டிய அடி எல்லாம் பாக்கி இருக்கு இல்ல.. அதுக்கு தெம்பு வேணும்..” மதி ஆறுதலாக கேலியாக கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு,
“சரவணன்.. நீங்க அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. முதல்ல சாப்பிட ஏதாவது கொடுத்துட்டு கூட்டிட்டு போங்க.. இன்னைக்கு தண்ணியைத் தவிர எதுவுமே உள்ள போகல.. அந்த தண்ணியே நாங்க ஃபோர்ஸ் பண்ணித் தந்தது..” என்ற மதி, சித்தார்த்திடம் திரும்ப, சித்தார்த் வித்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான். இருவருக்கும் எதுவோ வாக்குவாதம் போலத் தோன்ற, கார்த்திக் அவர்கள் அருகில் வரவும், அவனைத் திரும்பிப் பார்த்த சித்தார்த்,
“நீங்க கவலைப்படாதீங்க.. அவளைக் கண்டுப்பிடிச்சிடலாம்.. நாங்க அப்பறம் ஆதிராவோட பேரன்ட்சைப் பார்க்க வரோம்” என்று சொல்லிவிட்டு,
“போகலாமா?” என்று மதியிடம் கேட்டவன், கார்த்திக்கின் தோளைத் தட்டிவிட்டு, மதியுடன் கிளம்பிச் செல்ல,
“என்னோட பைக் உங்க ஆபிஸ்கிட்ட இருக்கற கடைக்கிட்ட இருக்கு சரவணா.. அதை போய் எடுத்துட்டு வீட்டுக்குப் போகலாம்..” என்ற கார்த்திக், அங்கு விழித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்த வித்யாவை என்னவென்று கேட்டான்..
“இல்ல.. எனக்கு இங்க தனியா இருக்க பயமா இருக்கு..” அவள் சொல்லவும்,
“உங்களுக்கு இங்க தங்க பயமா இருந்தா.. அங்க எங்க வீட்டுல வந்து இருங்க வித்யா.. உங்களுக்கும் கொஞ்சம் துணைக்கு ஆளு இருந்தா போல இருக்கும்.. அத்தை மாமாவுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..” அக்கறையாக அவன் சொல்ல,
“தேங்க்ஸ் கார்த்திக்.. என்னை இங்க இருக்க வேண்டாம்ன்னு என் ஹஸ்பன்ட் சிங்கப்பூர்க்கு கிளம்பி வரச் சொல்லி ஃப்ளைட் டிக்கெட் அனுப்பிட்டார் கார்த்திக்.. இன்னைக்கு நைட் எனக்கு ஃப்ளைட்.. நானும் ஓரளவு என் லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணிட்டேன்.. ஆனா.. சித்தார்த் சார் என்னை போகக் கூடாதுன்னு சொல்லிட்டார்.. ஆதிரா கிடைக்கிறவரை நான் இங்க தான் இருக்கணும்ன்னு சொல்லிட்டார்.. எனக்கு இங்க ஒரு மாதிரி இருக்கு..” என்று கண்ணீர் விடத் துவங்கினாள்..
“லா படி நீங்க வெளியூர் எங்கயும் போக முடியாது வித்யா.. ஏன் நானுமே எங்கயும் போக முடியாது.. அவங்களும் என்ன செய்வாங்க? நீங்க எங்க வீட்டுல வந்து இருங்க.. வேற என்ன செய்யறது? நான் வேணா உங்க ஹஸ்பண்ட் கிட்ட பேசவா?” கார்த்திக்கும் ஆறுதலாகக் கேட்க, வித்யா செய்வதறியாது நின்றாள்..
“நீங்க தான் ப்ரைம் விட்னசும் கூட.. உங்களுக்குத் தான் அந்த ரெண்டு பேரையுமே நல்லா அடையாளம் தெரியும்.. உங்களை எப்படி போக சம்மதிப்பாங்க? கொஞ்ச நாள் வித்யா.. ஆதிராவுக்காக..” கார்த்திக் எடுத்துச் சொல்ல,
“நான் வேற என்ன செய்யறது?” குழப்பத்துடன் வித்யா கேட்கவும்,
“எங்க வீட்ல ஆதிராவோட அப்பா அம்மாவோட இருங்க.. அங்க நான் மட்டும் தனியா இல்ல வித்யா..” கார்த்திக் சொல்லவும், தனது கணவரிடம் பேசிவிட்டு வந்து,
“ஆதிரா கிடைச்ச உடனே என்னை அங்க கிளம்பி வரச் சொல்றாங்க.. இங்க தனியா இருந்தது போதும்ன்னு சொல்லிட்டாங்க..” கார்த்திக்கிடம் சொன்னவள்,
“சரி.. நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல பெட்டியை எடுத்துட்டு வரேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கார்த்திக் ப்ளீஸ்.. எனக்கு பயமா இருக்கு..” என்ற வித்யாவின் பதிலில்,
“சரி.. நீங்க வாங்க.. நான் கேப்ல உங்களை அங்க அனுப்பறேன்.. அங்க போயிட்டு எனக்கு கால் பண்ணுங்க.. நான் வீட்டு நம்பர் சொல்றேன்..” கார்த்திக் சொல்லவும், மண்டையை உருட்டியவள், சிறிது தூரம் நடந்து சென்று திரும்பி அவன் அருகில் வந்து,
“நானும் அவர்கிட்ட சொன்னேன்.. இல்ல கொஞ்ச நாளைக்கு அங்க இருக்க வேண்டாம். லீவ் போட்டுட்டு வான்னு அவரு உடனே டிக்கெட் புக் பண்ணி அனுப்பிட்டார்.. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.. சாரி கார்த்திக். அது தான் ” என்று பாவமாகச் சொல்ல,
“அவருக்கு பயம் வராதா என்ன வித்யா. தொலைச்சிட்டு தேடறது எல்லாம் கொடுமை.. அந்த நிலைமை எல்லாம் அவருக்கும் வேண்டாம்.. நீங்க கிளம்புங்க.. நான் கால் டேக்ஸி புக் பண்றேன்.. ரொம்ப நேரம் பண்ணாதீங்க.. லேட் ஆகுது..” என்ற கார்த்திக்கைப் பார்த்தவள்,
“அவ யாருக்குமே கெடுதல் நினைச்சது இல்ல.. அவளுக்கு எந்த கெடுதலும் வராது..” நம்பிக்கையுடன் சொன்ன வித்யா, அவசரமாக மேலே ஓடிச் சென்று, தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தவள், கார்த்திக் அங்கு தனக்குத் தெரிந்த கால் டேக்ஸி டிரைவரை வரவழைத்து இருக்கவும், அவனிடம் அந்த வீட்டின் சாவியைக் கொடுத்துவிட்டு, அவன் புக் செய்திருந்த காரில் ஏறிப் புறப்பட, கார்த்திக் அவளை வழியனுப்பி வைத்தான்..
“சரி கார்த்திக்.. நீ நேரத்தோட வீட்டுக்கு போ. கண்டிப்பா மதியும் சித்தார்த்தும் கண்டுப்பிடிச்சிடுவாங்க.. நானும் வீட்டுக்கு கிளம்பறேன்..” என்ற அதியமானிடம் அவன் தலையசைக்க, அவனும் விடைப்பெற்றுச் சென்றான்..
ஆதிராவின் வீட்டு சாவியை மெல்ல வருடியவன், மெல்ல ஏறி அவளது வீட்டிற்குச் செல்ல, சரவணன் அவனைப் பின்தொடர்ந்துச் சென்றான்.. வீட்டின் உள்ளே சென்றவன், நேராக ஆதிராவின் அறைக்குச் சென்று, அங்கிருந்த அவளது புகைப்படத்தை வருடியவனுக்கு, ஆதிராவின் நினைவுகள் நெஞ்சை அடைக்க,
“போகலாம் சரவணா..” என்றபடி முன்னே நடக்க, சரவணன் எதுவும் பேசாமல் அவனைப் பின்தொடர்ந்துச் சென்றான்..
“கடைக்கு போய் வண்டியை எடுத்துட்டு போகலாம்..” என்ற கார்த்திக், அதற்கு மேல் ஆதிராவின் நினைவுகளில் அமைதியாகிப் போனான்..
சரவணனுக்கு அவனது அமைதி யோசிக்க பல நிமிடங்களைத் தந்தது.. கண்ணாடியின் வழியே கார்த்திக்கின் முகத்தைப் பார்த்தவனுக்கு, அவனது தேடல் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.. அவனது கண்கள் தங்களைக் கடந்துச் செல்லும் ஒவ்வொரு வண்டியையும் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவனிடம் பேச விழைந்தான்..
“கார்த்திக்.. கார்த்திக்..” என்று சரவணன் அழைக்க, பின்னால் அமர்ந்திருந்தவன்,
“ஹான்.. சொல்லுடா.. என்னாச்சு? அந்த கார் போல ஏதாவது பார்த்தியா?” என்று கேட்க, சரவணனுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது..
“இல்ல கார்த்திக்..” என்ற சரவணனின் பதிலில், மீண்டும் அவனது பார்வை சாலையை அலச,
“ஏன் கார்த்திக்.. உனக்கு ஆதிராவை அவ்வளவு பிடிக்குமா? எங்ககிட்ட எல்லாம் சொல்லாம நேரா அவங்க வீட்ல போய் பொண்ணு எல்லாம் கேட்டு இருக்க? நம்ம வீட்டு நிலைமை எல்லாம் அவங்களுக்கு சொல்லி தான் பொண்ணு கேட்டன்னு அவங்க சொல்றாங்க.. அதுவும் ஆதிராக்கிட்ட நீ உன் லவ்வை சொல்றதுக்கு முன்ன அவங்கக்கிட்ட அவளை உனக்கு கல்யாணம் செய்துத் தருவாங்களான்னு கேட்டியாம்.. ஆதிராவும் உன்னைத் தான் கல்யாணம் செய்துப்பேன்னு அப்போவே சொல்லிட்டாளாமே.. நான் என்னவோ ஆதிரா அவங்க வீட்ல சொல்லித் தான் அவங்க அப்பா நம்ம அப்பாகிட்ட பேசினாங்கன்னு நினைச்சிட்டு இருக்கேன்.. அவ உனக்கு மேல அழுத்தக்காரியா இருக்கா.. இதை எதுவுமே அவ என்கிட்டே சொல்லவே இல்ல தெரியுமா?” என்று வியந்தவன்,
“ஏண்டா? எப்போ நான் அவளைப் பத்தி பேசினாலும்.. அவளுக்கு என்ன இப்போன்னு துச்சமா பேசுவ? ஆனா.. அவங்க சொல்றதைப் பார்த்தா அப்படி இல்ல போல இருக்கே.. அவங்க எனக்கு மகனா வந்த மருமகன்னு நிறைவா சொல்றாங்க.. அப்படியா? இதெல்லாம் என்கிட்டே ஏன் கார்த்தி சொல்லவே இல்ல.. நான் உனக்கு அந்த அளவு கூட முக்கியமானவன் இல்லையா? உன் கூடப் பிறந்த தம்பி தானே நான்.. அம்மாக்கிட்ட உனக்கு கோபம் இருக்கலாம்.. என்கிட்டே உனக்கு அப்படி என்ன கோபம்?” ஆதங்கத்துடன் சரவணன் கேட்க, கார்த்திக் அவனது தோளைத் தட்டினான்..
“நான் பொண்ணுங்க பின்னால சுத்தி நீ பார்த்து இருக்கியா?” கார்த்திக் நேரிடையாகக் கேட்க,
“இல்ல.. நீ பொண்ணுங்கக்கிட்ட ஓரடி தள்ளி தான் நிப்ப.. காலேஜ்ல உன்கிட்ட ஒரு பொண்ணு லவ் சொன்னதுக்கு கூட அப்படி திட்டி விட்டியே..” சரவணன் இழுக்க,
“அப்படி இருந்தும் நான் ஆதிராவைப் பார்த்த அன்னிக்கு நீ ஏன் அப்படி சொன்ன? நான் ஒரு பொண்ணுனால பாதிச்சு பார்த்து இருக்கியா? அது எப்படி நான் ஆதிராவை நல்லா பார்த்துக்க மாட்டேங்கிற மாதிரி பேசின? ஆதிராவை நான் பேசியே வளச்சிருவேன்னு நீ ஏன் சொன்னா? அது தான் உன்கிட்ட அப்படி பேசினேன்.. அவளை நான் கல்யாணம் பண்ணினா அம்மாக்கிட்ட கஷ்டப்படாம எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியாதா? நான் செல்பிஷ்ஷா?” என்று கேட்டவன், கார்த்திக் மெளனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதே,
“நான் ஆதிரா பின்னால சும்மா சுத்தல.. அவளை முதல் தடவ பார்த்ததுல இருந்தே ரொம்ப மனசுக்கு பிடிச்சு இருந்தது.. வாழ்ந்தா அவ கூடத் தான் வாழணும்ன்னு முடிவு பண்ணித்தான் அவகிட்ட பேசவே தொடங்கினேன்.. அவளை நம்ம அம்மா எப்படி நடத்துவாங்கன்னு எனக்குத் தெரியும்.. அதுனால தான் கல்யாணத்துக்கு அப்பறம் அந்த ஃபிளாட்ல நாங்க வாழ எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சிருக்கேன்.. அந்த ஃபிளாட் எங்க கல்யாணத்துக்கு அப்பறம் ஆதிராவுக்கு சப்ரைஸ் பண்ணலாம்ன்னு இருந்தேன்.. அந்த ஃபிளாட் நான் வாங்கி இருக்கறது அவளுக்குத் தெரியாது.. என்னோட பேபிடால சந்தோஷமா, எந்த குறையும் இல்லாம பார்த்துக்கணும்ன்னு நினைச்சு செஞ்ச ஏற்பாடு.. ஆனா.. ஆனா…” என்றவன், கண்களில் வழிந்த தனது கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, சரவணன், வண்டியை ஓரமாக நிறுத்தினான்..
“அவளை அப்படிச் சொன்னா நீ கடுப்பாகறதைப் பார்க்கறதுல எனக்கு ஒரு சின்ன அல்ப சந்தோசம்.. அவ மேல என்னைத் தவிர அதிக அக்கறையா யாரும் இருக்கக் கூடாதுன்னு ஒரு சின்ன பொசசிவ்னஸ்.. அதுக்குத் தான் நான் உன்கிட்ட அவளை அப்படிச் சொல்லுவேன்.. மத்தப்படி அவ தான் என் உயிரு.. நான் நானா இருக்கறது அவக்கிட்ட மட்டும் தான்.. என்னை நல்லா புரிஞ்சவளும் அவ தான்..” என்றவன்,
“நேரமாகுது.. வா வண்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகலாம்.. அங்க அவங்க அம்மா அப்பா தனியா தவிச்சிக்கிட்டு இருப்பாங்க.. இப்போவே மணி பத்தாக போகுது..” எனவும், வித்யாவின் கால் வர,
அதை எடுத்தவன், “ஆமா வித்யா.. லிப்ட்ல தர்ட் ப்ளோர் போங்க.. அதுல ரைட் சைட் மூணாவது வீடு.. நீங்க வீட்டுக்குப் போய் சேரும் வரை லைன்ல இருங்க..” கார்த்திக் சொல்லவும், வித்யாவும் அப்படியே செய்தாள்..
இரண்டு நிமிடத்திற்குப் பிறகு, “வித்யா..” என்ற சுதாவின் குரல் கேட்க,
“நான் வந்துட்டேன் கார்த்திக்..” என்று வித்யா சொல்லவும்,
“பத்திரம்.. நான் கொஞ்ச நேரத்துல வரேன்.. அவங்கள பார்த்துக்கோங்க..” என்றபடி போனை வைத்தவன்,
“அதோ அந்தக் கடை தான்டா..” என்று கார்த்திக் அந்தக் கடையை அடையாளம் காட்ட, சரவணன் அந்த கடையின் முன்பு வண்டியை நிறுத்தினான்..
அவனைப் பார்த்ததும், அவனது அருகில் வந்த கடைக்காரர், “சார்.. அந்தப் பொண்ணு கிடைச்சிட்டாங்களா? நிஜமாவே கடத்திட்டாங்களா சார்?” என்று ஒரு மாதிரி இழுக்க,
“இன்னும் கிடைக்கல சார்.. அவளை கடத்திட்டு போனவன் என் கையில கிடைச்சான்.. அவ்வளவு தான்..” கார்த்திக் கோபமாக சொல்ல, அவனது இறுகிய முகத்தைப் பார்த்த சரவணன், எதுவோ சரி இல்லை என்று உணர்ந்து,
“வா கார்த்திக் நேரமாச்சு..” என்று அவனை அழைக்க,
“உங்க ஹெல்ப்புக்கு தேங்க்ஸ்..” என்ற கார்த்திக், தனது கோபத்தை வண்டியை உதைத்துக் கிளப்புவதில் காட்ட, சரவணன் புரியாமல் குழம்பினான்..
கார்த்திக்கின் கையில் வண்டி நத்தையை விட மெதுவாக ஊர்ந்துச் செல்ல, சரவணனும் அவனோடு மெல்ல வண்டியில் சென்றான்.. ஒருவழியாக ஃப்ளாட்டின் வாயிலில் கார்த்திக் வண்டியைக் கொண்டு நிறுத்த,
“கார்த்திக்.. அந்தக் கடைக்காரன் ஏன் ஒரு மாதிரியா இழுக்கறான்? உடனே நீ ஏன் டென்ஷன் ஆன?” என்று சரணவன் கேட்க,
“அந்த ஃபுட்டேஜ்ல ஆதிரா அந்த ஆளு தோளுல சாஞ்சி இருக்கா போல இருந்தது.. அந்த இதுல அவ முகம் தான் தெரிஞ்சது.. அந்த ஆளு முகம் தெரியாதபடி மாஸ்க், கேப் எல்லாம் போட்டு இருந்தான்.. அவனோட சட்டையை வச்சு தான் அது ஒரு ஆளுன்னு தெரிஞ்சது. அதோட முன்னால ரெண்டு லேடீஸ் இருந்தாங்க.. அந்த லேடியை நம்பித் தான் அவ வண்டியில ஏறி இருக்கா..” என்றவன், தன்னை நொந்துக் கொண்டே லிப்ட்டின் அருகில் சென்றான்..
“நேத்திக்கு நான் பார்ட்டில இருக்கேன்னு அவளுக்குத் தெரியும். என் கூட வேலை செய்யறவங்க இருந்தா.. அதுவும் பார்ட்டி போல இடத்துல இருந்தா நான் போனை எடுக்க மாட்டேன்னு அவளுக்குத் தெரியும்.. இது போல எல்லாம் நடக்கும்ன்னு நான் கனவா கண்டேன்.. ஏதோ என்கிட்டே பேச போன் பண்றான்னு தான் நினைச்சேன்.. இதை நான் கனவுல கூட நினைக்கலையே..
எப்படியும் வேலையை முடிச்சிட்டு பஸ்ல கிளம்பிருவேன்னு தான் சொன்னா.. முன்னாலேயே லேட் ஆனா ஆகும்ன்னு சொல்லி இருந்தா நான் பார்ட்டிக்கு போயே இருக்க மாட்டேன்.. அவனுங்க எல்லாம் போன இங்கயே பேசுன்னு கிண்டல் செய்யவும் நான் பேசாம போன வச்சிட்டு உட்கார்ந்துட்டேன்.. என் தப்பு தான்.. போங்கடான்னு எழுந்து போய் பேசி இருக்கணும்.. இப்போ தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன்..” தலையில் அடித்துக் கொள்ள, சரவணன் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்..
“நீ இப்படி உடைஞ்சு போனா.. அவங்களும் ரொம்ப பதறிடுவாங்க.. கொஞ்சம் முகத்தைத் துடைச்சிட்டு வா..” என்று சொன்ன சரவணன், அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்..
வீட்டின் காலிங் பெல்லை கார்த்திக் அடிக்கவும், கதவைத் திறந்தது அவனது தந்தை சதாசிவம், “உள்ள வா..” என்று அழைக்க, கார்த்திக் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்..
அவனைப் பார்த்ததும் அவனது அருகில் வந்த பாலகிருஷ்ணன், “மாப்பிள்ளை.. ஆதிராவைப் பத்தி ஏதாவது தெரிஞ்சதா?” என்று கேட்க, காலையில் இருந்து நடந்த அனைத்தையும் கார்த்திக் கடகடவென்று சொல்லி முடித்தான்..
“அவங்க வீட்டு மாடியிலையே தான் அவளை ஒரு பெட்டியில போட்டு வச்சிருந்திருக்காங்க.. எனக்கு ஏதோ தோணவும் நான் அந்த இடம் வரை போனேனே.. ஆனா.. அந்த ஆளு பேசவும் டைவர்ட் ஆகி வந்துட்டேன்.. நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்..” என்று நொந்துக் கொண்டவனின் தலையை சதாசிவம் வருடிக் கொடுக்க, கார்த்திக் அவரை அதிசயமாகப் பார்த்தான்..
“என்ன பார்க்கற? நான் உன்னைப் பெத்தவன்டா.. எனக்கு உன் மேல பாசமே இல்லன்னு நினைச்சிட்டையா?” என்று கேட்க, அவர் வெளிப்படையாக காட்டிய அன்பில், கார்த்திக், சரவணன் இருவருமே அவரை அதிசயமாகப் பார்த்தனர்..
“சரவணன் தம்பி இங்க இருந்து கிளம்பின கொஞ்ச நேரத்துல எல்லாம் சம்பந்தி இங்க வந்துட்டார்.. எங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு இங்க தான் இருக்கார்.. ராத்திரி கூட கட்டாயப்படுத்தி எங்களை சாப்பிட வச்சார்..” கண்ணீருடன் சொன்ன பாலகிருஷ்ணன்,
“யாரு மாப்பிள்ளை அவளுக்கு இப்படி ஒரு கெடுதல் செஞ்சு இருப்பாங்க? அவர் யாரோட வம்புக்கும் தும்புக்கும் போக மாட்டாளே. அந்த பொண்ணை நம்பி அவ ஏறினதுக்கு தண்டனையா?” என்று கேவ, கார்த்திக் அவரைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டான்..
“கவலைப்படாதீங்க மாமா.. கண்டிப்பா கண்டுப்பிடிச்சிடலாம்.. மதியும் சித்தார்த்தும் ரொம்ப நல்ல ஆபிசர்ஸ்.. சித்தார்த்தோட வைஃப் ஆதிராவோட டீம் லீடர். அதுனால இன்னும் கொஞ்சம் அவங்க பெர்சனல் இண்டரஸ்ட் எடுத்து தேடறாங்க மாமா.. இப்போ போய் கமிஷனர்கிட்ட பேசிட்டு, இன்னும் கொஞ்சம் விகரசா தேடப் போறாங்க.. ஏற்கனவே எல்லா இடங்கள்ளையும் வண்டிகளை எல்லாம் தேடப் போறாங்க.. கண்டிப்பா கண்டுப்பிடிச்சிருவாங்க.. நாளைக்கு காலையில உங்களைப் பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க.” கார்த்திக் ஆறுதல் சொல்லிவிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கையைப் பற்றிச் சொல்ல, சுதா தேம்பிக் கொண்டே, அங்கிருந்த பூஜை அறைக்குள் புகுந்துக் கொண்டார்..
பாலகிருஷ்ணன் அவனைப் பார்க்க, “இதுக்கும் மேல என்ன செய்யறதுன்னு தெரியல..” என்று கையை விரிக்க, அவனது கையைப் பற்றிக் கொண்டவர்,
“சுதா..” என்று அழைக்க, கண்களைத் துடைத்துக் கொண்டு பூஜை அறையில் இருந்து சுதா வெளியில் வந்தார்..
“போய் முகத்தை கழுவிக்கிட்டு வாங்க மாப்பிள்ளை.. வந்து சாப்பிடுங்க.. முகமே வாடிக் கிடக்கு..” என்றவர், சாதாசிவம் வாங்கி வந்திருந்த உணவை பிரித்து வைத்தார்..
“நீங்க போய் படுங்க மாமா.. நான் பார்த்துக்கறேன்..” என்ற கார்த்திக் அவனது அறைக்குச் செல்லவும், அவனது பின்னோடு வந்த சதாசிவம், அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தபடி,
“கார்த்தி.. இதுல உன்னோட துணி எல்லாம் கொஞ்சம் கொண்டு வந்திருக்கேன்.. நீ இவங்களுக்குத் துணையா இங்கயே இரு.. முகம் எல்லாம் வாடிக்கிடக்கு.. காலையில நான் கொஞ்சம் சமையல் சாமான் எல்லாம் வாங்கிட்டு வரேன்.. ஆதிரா கிடைச்ச உடனே அடுத்த முஹுர்த்தத்துல உங்க கல்யாணம் நடத்திடனும்.. போதும் ரெண்டு பேரும் தனியா இருந்தது.. எனக்கு என் மருமகளைப் பார்க்க ஆசையா இருக்கு.. அன்னிக்கு சம்பந்தி பேசின உடனே சந்தோஷத்துல சரின்னு சொல்லிட்டேன்.. ஆனா.. அவளைப் பார்க்கணும்ன்னு எனக்கு கேட்கத் தோணவே இல்ல பாரேன்.. இப்போவாவது தோணிச்சே.. எங்க போட்டோ காட்டு..” என்று சதாசிவம் கேட்கவும், அவரது மடியில் தலை சாய்த்தவன்,
“எனக்கு பயமா இருக்கு.. அவனுங்க ரொம்ப பிளான் பண்ணி அவளை கடத்தி இருக்காங்க.. வீட்டு மாடியிலேயே வச்சிட்டு நாங்க கண்டுப்பிடிச்சிடுவோம்ன்னு கொஞ்ச நேரத்துல வீட்டையே காலி செய்துட்டு போயிருக்காங்க.. இப்போ எங்க போயிருக்காங்கன்னு கூட தெரியலையே.. அவ இதெல்லாம் தாங்க மாட்டாப்பா.. அவ பாவம்..” என்று கதறத் துவங்கினான்.
காலையில் இருந்து அடைத்துக்கிடந்தது வெளியே வரட்டும் என்று அவன் அழுது ஓயும் வரை அவனது தலையை வருடிக் கொடுத்தவர், அவன் எழுந்து கண்களைத் துடைத்துக் கொள்ளவும், “முகத்தைக் கழுவிட்டு வந்து சாப்பிடு.. அப்போ தான் என் மருமகளைத் தெம்பா தேட முடியும்.. சம்பந்திங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.. பொண்ணை கண்டிப்பா நல்லா வளர்த்து இருப்பாங்க.. எங்க எனக்கு காட்டு பார்ப்போம்.. போட்டோ கேட்டேனே” என்று கேட்க, கார்த்திக் தனது செல்லை எடுத்து கொடுத்துவிட்டு,
“இதுல பாருங்க..” என்றுவிட்டு, அவன் முகம் கழுவிக் கொண்டு வந்தவன், அந்த அலமாரியில் இருந்து ஒரு துண்டை எடுத்து முகத்தைத் துடைக்க,
“இங்க கொஞ்சம் துணி வச்சிருக்கியா?” சாதாசிவம் ஆச்சரியமாகக் கேட்க,
“ஹ்ம்ம்.. அமைதியா கேஸ்க்கு படிக்க இங்க தானே வருவேன்.. அதுனால கொஞ்சம் துணி இங்க வச்சிருக்கேன்..” என்று கூற, அப்பொழுது சரவணன் சதாசிவத்தின் கையை சுரண்டினான்.. அவனது போனை திறந்து பார்த்து, அதில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்த சரவணன், தனது தந்தைக்கும் காட்ட, அவரது முகத்தில் மெல்லிய புன்னகை..
“அழகா இருக்காடா.. உனக்கு கொஞ்சம் அதிகம் தான்..” என்று வம்பு செய்ய,
“ஆமா.. ஆமா.. அவ நிஜமா ரொம்ப சாஃப்ட்பா.. இவன் கிட்ட எப்படி மாட்டினான்னே தெரியல.. இவனோ ஒரு அராத்து.. அதுவோ ஒரு பூனை.. ஆனா.. இப்போ இதெல்லாம் பார்த்தா அவ சரியான அழுத்தக்காரியா தோணுது.. என்கிட்டே எதுவுமே சொல்லல தெரியுமா? எல்லாம் இவன் ட்ரைனிங்கா தான் இருக்கும்..” சரவணன் வம்பு வளர்க்க, கார்த்திக் அவனைப் பார்த்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தான்..
“அந்தப் பொண்ணு உங்க அண்ணி.. அவளை அண்ணின்னு சொல்ல வேண்டாமா? என்னவோ அவ இவன்னு ரொம்ப தெரிஞ்சது போல சொல்லிட்டு இருக்க? மரியாதையா பேசணும் சரவணா..” சதாசிவம் கண்டிக்க, ‘அண்ணியா?’ என்று சரவணன் இழுக்கவும், அவனது தலையை மெல்லத் தட்டியவர்,
“அண்ணனோட பொண்டாட்டியை அப்படி தானே சொல்லணும்?” என்று புரியாமல் கேட்க, கார்த்திக் அவர்கள் அருகில் வந்தான்..
“அது தானேப்பா.. நானும் சொல்றேன் அண்ணின்னு சொல்லுன்னு மாட்டேங்கிறான்..” கார்த்திக்கும் சொல்லிக் கொண்டே வந்தவன், சரவணன் அவனை முறைக்கும் பொழுதே,
“அப்பா.. ஆதிராவை எனக்கு முன்னால அவனுக்குத் தான் தெரியும்.. அவனோட கூட வேலை செய்யறா.. அவனோட ஃபிரெண்ட்..” என்ற கார்த்திக்கையும், சரவணனையும் அதிசயமாகப் பார்த்தவர்,
“அப்போ இவனோட லவ் உனக்கு முன்னாலேயே தெரியுமா?” என்று கேட்க,
“சார் அவகிட்ட கவுந்த அன்னிக்கே தெரியும்.. ஆனா. அவ இவன் கிட்ட விழுவான்னு தான் நான் கொஞ்சம் கூட நினைக்கல.. பேசியே அவளை கவுத்துட்டான் வக்கீலு.. அதுவும் ஸ்ட்ராங்கா..” என்ற சரவணனிடம்..
“என்ன இருந்தாலும் அண்ணின்னு தான் சொல்லணும் சரவணா.. உறவு முறை எல்லாம் விட்டுடக் கூடாது.. நாளைக்கு எங்களுக்கு அப்பறம் உனக்கு அவன் தான் அவனுக்கு நீ தான்.. அப்படித் தான் இருக்கணும்..” என்று கண்டித்தவர்,
“இப்போ நீ வந்து சாப்பிடு.. நான் வீட்டுக்குப் போறேன்.. உங்க அம்மாவுக்கு சீரியல் எல்லாம் முடிச்சு தூங்கப் போயிடுவா.. அப்பறம் கதவைத் திறக்க மாட்டா.. அதுக்குள்ள நான் உள்ள போயிடறேன்..” என்றவர், கார்த்திக்கை, வற்புறுத்தி சிறிது உண்ண வைத்துவிட்டு, விடைப்பெற்றுக் கிளம்ப, சரவணன் கார்த்திக்கிற்குத் துணையாக அங்கேயே தங்கிக் கொண்டான்..
படுக்கையில் சரிந்த கார்த்திக்கிற்கு ஆதிராவின் நினைவுகள் சூழ்ந்துக் கொண்டன..