எங்கே எனது கவிதை – 15

th-f95fc7d6

15                        

காரில் ஏறியதும், “இப்போ எங்கப் போகப் போறீங்க?” சஸ்பென்ஸ் தாங்காமல் ஆதிரா கேட்க,

“யாரோ என்கிட்டே கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ‘எங்க கூட்டிட்டு போனாலும் கண்ணை மூடிக்கிட்டு வரேன்னு சொன்னாங்க?” கிண்டலாக கார்த்திக் கேட்கவும், ஆதிரா முகத்தை சுளித்தாள்.

“சொன்னேன் தான்.. அதுக்காக சொல்லாமையே கூட்டிட்டு போவீங்களா என்ன?” சிணுங்கலாக ஆதிரா கேட்க,

“சரி.. சரி.. சொல்றேன்.. நாம இப்போ ஏற்காடு போகப் போறோம்..” கார்த்திக் சொல்லவும், அவசரமாக அவன் பக்கம் திரும்பியவள்,

“கார்த்திக்.. ஏற்காடு சேலம் கிட்ட இருக்கு.. அங்க இருந்து எங்க வீட்டுக்கு நாலு மணி நேரம் தான்.. போயிடலாம்..” அவ்வளவு அருகில் செல்கிறோம் என்றதும் அவளுக்கு பரபரப்பு தோன்ற, கார்த்திக் அவளைத் திரும்பிப் பார்த்தான்..

“மலைல இருந்து உங்க வீட்டுக்கு போக நாலு மணி நேரம் தான் ஆகுமா? நைட் ஏற்காடுல ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு காலைல சுத்திப் பார்த்துட்டு, அங்க எனக்கு ஒரு க்ளையன்ட் பார்க்கணும்.. பார்த்துட்டு சாயந்திரம் போல கிள்ம்பினா நாம நைட் இங்க வந்துடலாம்ன்னு பிளான் பண்ணினேன்.. நான் க்ளையன்ட் பார்க்கப் போற ப்ளான் இருந்தது.. சரி.. நீ ரொம்ப ஃபீல் பன்றியேன்னு தான் உன்னையும் ஒரு சேஞ்க்கு கூட்டிட்டு போறேன்..” கார்த்திக் பெரிதாக விளக்கம் சொல்லவும், அவளது முகம் வாடிப் போக,

“பரவால்ல சேலம் வரை போறீங்க இல்ல.. என்னை அங்க பஸ் ஏத்தி விடுங்க.. நான் ராத்திரி வீட்டுக்கு போயிடுவேன்.. நான் ஏற்காடு எல்லாம் வரல..” என்று அவள் சொல்லவும்,

“சரி.. சேலம்ல உன்னை பஸ் ஏத்தி விடறேன்..” என்றவன், சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கவும், அதில் கவனம் பதித்தான்.. தொடர்ந்து அவனுக்கு ஒரு சில கால்களும் வர, அதைப் பேசிக் கொண்டே வந்தவனின் இதழ்களில் ரகசிய புன்னகை உதயமானது..

சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவள், அவன் சட்ட புத்தகத்தை கரைத்துக் குடித்ததை யாருக்கோ ஒப்பித்துக் கொண்டே வரவும், “ஹையோ தெரியாம இந்த லா யுனிவெர்சிட்டி கிட்ட மாட்டிக்கிட்டேனே.. இங்க ஒரு நடமாடும் கோர்ட் நடந்துக்கிட்டு இருக்கே.. இதைக் கேட்க யாரும் இல்லையா? இபிகோ 302.. கொலை.. கொல்லைன்னு..” என்றவள், கார்த்திக்கை முறைத்துவிட்டு, காதில் ஹெட்போன்ஸ் மாட்டிக் கொண்டு, பாடலைக் கேட்கத் துவங்க, கார்த்திக் தனக்குள் சிரித்துக் கொண்டான்..

போனை வைத்தவன், அவளது கையைச் சுரண்ட, அவனது முகத்தைப் பார்த்தவள், “கார்த்திக்.. எனக்கு ஒரு சீரியஸ் டவுட்.. கேட்கவா? கோவிச்சுக்க மாட்டீங்களே..” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

“ஏதோ வில்லங்கமா கேட்கப் போறன்னு தெரியுது.. கேளு.. கேட்டு விடு..” அவன் வசனம் பேசவும்,

“உலகமே டாக்டர்.. எஞ்சினியர்ன்னு ஓடும் போது.. நீங்க மட்டும் எப்படி அபவுட் டர்ன் எடுத்து லா படிச்சீங்க? உங்களுக்கு எப்படி இது படிக்கணும்ன்னு தோணிச்சு?” நாடியில் விரலை வைத்துத் தட்டிக் கொண்டே கேட்க,

அந்த அழகை ரசித்தவன், “உன் கேள்விலயே பதில் இருக்கே யுவர் ஹானர்..” கார்த்திக் வம்பு வளர்க்க,

“என் கேள்வியிலையா? நான் என்ன கேட்டேன்?”

“அது தான் எல்லாரும் ஒரு பக்கம் ஓடும் போது நீங்க ஏன் இந்த பக்கம் போனீங்கன்னு அதுக்குத் தான்.. ஸ்கூல்ல நான் ஏதாவது பேசும்போது எல்லாருமே நீ லாயர் ஆக வேண்டியவன்டான்னு டீச்சர்ஸ் எல்லாரும் சொல்லுவாங்க.. எனக்கும் இந்த க்ரைம்.. த்ரில்லர் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.. அது தான் ட்வெல்த் முடிச்ச உடனே அதுக்கு சேர்ந்துட்டேன்.. அப்படியே மாஸ்டர்ஸ் படிச்சுக்கிட்டே பார்ட் டைம்ல அதியமான் சார்கிட்ட ஜூனியரா சேர்ந்தேன். இப்போ தனியா கேஸ் எடுத்து பண்ணிட்டு இருக்கேன்.. அதியமான் சாரும் சில கேசஸ் எல்லாம் எனக்கு சொல்லி அனுப்புவார். ஓரளவு வயித்துக்கு நல்லா டீயும் பன்னும் சாப்பிடற அளவுக்கு சம்பாதிக்கிறேன்..” என்று சொல்ல, ‘ஹான்..’ என்று ஆதிரா முழிக்க, தனது சிரிப்பை அடக்கிக் கொண்டவனுக்கு மீண்டும் ஒரு போன் வரவும், அவளைப் பார்த்துக் கொண்டே போனை எடுத்தான்..

“அடப் போய்யா. இதுக்கு பேசாம நீங்க ஹை கோர்ட் வாசல்ல போய் உட்கார்ந்துக்கலாம்.. சும்மா நொச்சு நொச்சுன்னு போன் வருது..” என்று சலித்துக் கொண்டவள், மீண்டும் ஹெட்போன்சை மாட்டிக் கொண்டு, சீட்டில் சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டவள், அப்படியே உறங்கியும் போனாள்.

போன் பேசி முடித்தவன், அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் நன்கு உறங்கவும், அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தவன், “இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்குடா கண்ணம்மா.. இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் பெருத்து கிளம்பி இருந்தா உன் கூட பேசிட்டு வந்திருப்பேன்.. இப்போ நான் சொல்லச் சொல்ல இன்னொருத்தர் வேலை செஞ்சிட்டு இருக்காங்க.. எனக்கு செவ்வாய் கிழமை கோர்ட் கேஸ்க்கு இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் ரொம்ப முக்கியம்.. உனக்காக இப்போ கிளம்பி வந்துட்டேன்.. வீட்டுக்கு போயும் கொஞ்ச நேரம் வேலை இருக்கு..” என்றவன், உறங்கும் அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, வண்டியைச் செலுத்தினான்..

நடுவில் ஒரு இடத்தில் மதிய உணர்விற்காக வண்டியை நிறுத்த, “எனக்கு பசிக்கல கார்த்திக்.. நீங்க வேணா போய் ஏதாவது சாப்பிட்டு வாங்க.” என்று அவள் சொல்லவும்,

“ரெண்டு பேரும் டீ குடிச்சிட்டு வரலாம் வா.. எனக்கும் கொஞ்சம் பிரேக் வேணும்.. உனக்கு வாஷ் ரூம் போகணுமா?” என்று கேட்க, அவள் தலையசைக்கவும், அவன் அந்தக் கடையில் விசாரித்துவிட்டு வந்து அவளுக்கு கார்க் கதவைத் திறந்தான்..  

காரில் இருந்து இறங்கியவள், கார்த்திக் காட்டிய திசைக்குச் செல்ல, சிறிது இடைவெளி விட்டு, கார்த்திக் அவள் பின்னோடு துணையாகச் சென்றான்.. அவனது அந்த சிறிய செயலே அவளுக்கு இதத்தைத் தர, சிறிய புன்னகையுடன் உள்ளே சென்றுவிட்டு வந்தவள், கார்த்திக் அங்கு நின்றுக் கொண்டு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்க, அவன் அருகில் வந்தவள்,

“டீ குடிக்கப் போகலாமா?” என்று கேட்க,

“போகலாமே..” என்றபடி கையில் இருந்த செய்தித்தாளை மடித்து வைத்தவன், அங்கிருந்த பாலகதிற்கு அழைத்துச் செல்ல, தூக்கக்கலக்கத்தில் இருந்தவள்,

“இப்போ எங்கப் பாரு இது போல கும்பகோணம் காபி ஸ்டால்ன்னு ஓபன் பண்ணிட்டு நாம எங்க இருக்கோம்ன்னே தெரிய மாட்டேங்கிது..” என்று சலித்துக் கொண்டு,

“எனக்கு சூடா பால் வேணும்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும் போல இருக்கு.. குடிச்சிட்டு தூங்கறேன்.. சேலம் பஸ் ஸ்டான்ட் வந்தா சொல்லுங்க..” என்றவள், அவன் வாங்கித் தந்த சூடான பாலை உறிஞ்சியப்படி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்..

அவளது அருகில் நின்றுக் கொண்டு, ஒரு கையில் டீயையும், ஒரு கையில் பேப்பரையும் மடித்து வைத்துக் கொண்டு, அவன் படித்துக் கொண்டிருக்க, மெல்ல அவன் கையில் இருந்த பேப்பரை எட்டிப் பார்த்தவள்,

“கார்த்திக்.. கார்த்திக்..” அவனது கையைச் சுரண்ட, கார்த்திக் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்..

“இதுல ஏதாவது கேள்வி கேட்டு எக்ஸாம் எழுதப் போறீங்களா? இவ்வளவு சின்சியரா படிச்சிட்டு இருக்கீங்க?” முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டவளைப் பார்த்தவன்,

“இந்த கேஸ் இண்டரஸ்ட்டா இருந்தது.. அது தான் படிச்சிட்டு இருந்தேன்.. நான் என்ன உங்களை மாதிரியா கூகிள்ல கேள்வி கேட்டு பதில் வாங்கி வேலை செய்ய.. எங்களுக்கு எல்லாம் இது தான் மூல தனம்..” என்று தலையைத் தட்டிக் காட்ட,

“ஆமா.. நாங்க எல்லாம் மூளையை கழட்டி வச்சிட்டு வேலை செய்யறோம்..” என்று பழிப்புக் காட்டியவள்,

“இன்னைக்கு வக்கீலு ஒரு மாதிரியாத் தான் இருக்கீரு.. இருங்க கொஞ்சிக்கிட்டு வரும்போது வச்சிக்கறேன்..” என்று அவள் மிரட்டவும்,

“ஹையோ கார்த்திக்.. நீ ரொம்ப கொடுத்து வச்சவன்.. அப்போ நான் உன்னை பஸ்ல ஏத்தி விட வேண்டாமா? நாம ரெண்டு பேரும் ஒண்ணா ஏற்காடுல தங்கப் போறோமா? அது ஒரு ஹனிமூன் ஸ்பாட் தெரியுமா?” மகிழ்ச்சியுடன் அவன் கேட்க, அவனது கையில் அடித்தவள்,

“வர வர உங்களுக்கு ரொம்ப கொழுப்பா போச்சு.. என்னை மரியாதையா பஸ் ஏத்தி விடறீங்க.. ஆமா.. சொல்லிட்டேன்.. ஹனிமூன் போகணுமாம் இல்ல.. ஹனிமூன்..” என்றவள், காருக்குச் சென்று அமர, சிரித்துக் கொண்டே கார்த்திக் காரை எடுத்தான்..

அவன் ஆதிராவைப் பார்த்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “என்ன ரொம்ப சிரிக்கறீங்க? என்ன விஷயம்?” சந்தேகமாக அவனைப் பார்த்துக் கொண்டே கேட்கவும்,

“ஒண்ணும் இல்லடா ஆதிரா குட்டி.. எனக்கு உன்னைப் பார்த்தா சிரிப்பா வருது.. நான் என்ன செய்யட்டும்? நீ இவ்வளவு அப்பாவியா இருக்கியே!! இப்போ தான் கொஞ்சம் வேலைக்கு ப்ரேக் விட்டு இருக்கேன்.. அது தான் அடுத்த வேலையா உன்னை ரசிச்சிட்டு இருக்கேன்.. ஆனாலும் உன்னைப் பார்த்தா சிரிப்பா வருது..” கார்த்திக்கின் கேலியில், அவனது கையை அடித்தவள்,

“என்னவோ இன்னைக்கு ஒரு மார்கமா இருக்கீங்க நீங்க.. என்ன நடக்குது? என்னன்னு சொல்லுங்க” அவன் பக்கம் திரும்பி அமர்ந்துக் கொண்டு கேட்க,

“சும்மா தான்டா என் செல்லப்பட்டு..” அவளது கன்னத்தைப் பிடித்து அவன் கொஞ்ச,

“உங்கக் கூட இப்படி ரொம்ப தூரம் போறது ரொம்ப நல்லா இருக்கு.. ஆனா.. இந்த போன் வந்து எல்லாம் கெடுத்திருச்சு..” என்று சிணுங்கியவள், உடனே சீரியசாக மாறி,

“நிஜமா உங்களுக்கு நிறைய வேலை இருக்கா அப்பு? நான் டல்லா இருக்கேன்னு என்னைக் கூட்டிட்டு போறீங்களா? நீங்க எப்பவுமே என்கூட இருக்கும்போது ரொம்ப போன் பேசவே மாட்டீங்களே..” என்று கேட்க, கார்த்திக் அவளது கன்னத்தை மெல்ல வருடினான்..

“செவ்வாய் கிழமை ஒரு முக்கியமான கேஸ் ஹியரிங்க்கு வருது.. முதல்லையே கொஞ்சம் பாயிண்ட்ஸ் ஸ்ட்ராங்கா எடுத்து வசிட்டா.. நம்ம சைட் ஜெயிக்க சான்ஸ் இருக்கு. கண்டிப்பா இந்த கேஸ் ஜெயிச்சே ஆகணும். நியாயம் கண்டிப்பா கிடைச்சே ஆகணும்..” அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்தவனின் முகம் இறுக சொல்லவும், கியரில் இருந்த அவனது கை மீது தனது கையை வைத்து அழுத்திக் கொடுத்தாள்.

“ரொம்ப சீரியஸான கேசா?” அவள் கேட்க, தலையை மேலும் கீழும் ஆட்டி,

“சரி.. நீ தூக்கம் வருதுன்னு சொன்னியே.. கொஞ்ச நேரம் தூங்கு.. நான் சேலம் வந்ததும் சொல்றேன்.. இன்னும் எப்படியும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்..” என்றவன், மீண்டும் அதியமானுக்கு கால் செய்து, கேஸ் பற்றிய குறிப்புகளை அவன் பேசிக் கொண்டே வர, அவனைப் பார்த்தவளுக்கு கண்கள் சொருக, மீண்டும் அவன் தோளிலேயே சாய்ந்து உறங்கத் துவங்கினாள்..

அவளது உச்சியில் இதழ் ஒற்றியவன், அதியமானுடன் பேசி முடித்துவிட்டு, “இன்னும் கொஞ்ச தூரம் தான்.. அப்பறம் உன்னைக் கையிலேயே பிடிக்க முடியாது.. என்னை நியாபகமும் இருக்காது..” என்று கேலியாக அவளிடம் முணுமுணுத்தவன், காரை விரட்டி, அவளது வீட்டு வாசலில் சென்று நின்றான்..

அங்கு அப்பொழுது தான் பாலகிருஷ்ணனும், சுதாவும் எங்கோ செல்வதற்கு கதவைப் பூட்டிக் கொண்டிருந்தனர்.. வாசலில் கார் வந்து நிற்கவும், யார் என்று பார்த்தவர்கள், கார்த்திக்கின் தோளில் சாய்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஆதிராவைப் பார்த்து, ஆச்சரியத்தில் விழிகளை விரித்தனர்..

அவர்களைப் பார்த்து கார்த்திக் கையசைக்க, மெல்ல அந்தப் பக்கம் வந்து கதவைத் திறக்க முயற்சித்த பாலகிருஷ்ணனைப் பார்த்துவிட்டு, கார்த்திக் கார்க் கதவைத் திறந்து விட, கார் நின்றதை உணர்ந்து கண்களை மெல்ல மலர்த்தியவள், “என்ன கார்த்திக்? சேலம் வந்திருச்சா?” என்று கேட்கவும், பாலகிருஷ்ணன் கார்த்திக்கை கேள்வியாகப் பார்க்க, வாய் மீது விரல் வைத்து அவரை அமைதியாக இருக்கும் படி சைகைக் காட்டியவன்,

“ஹான்.. வந்திருச்சு ஆதிரா.. நீ கண்ணைத் துடைச்சிக்கிட்டு கீழ இறங்கு.. சீக்கிரம்.. சீக்கிரம்.. ஒரு பஸ் கிளம்பிக்கிட்டு இருக்கு.. அதைப் பிடிச்சன்னா சீக்கிரம் நீ வீட்டுக்குப் போயிடலாம்..” என்று அவசரப்படுத்தவும், முகத்தைத் துடைத்துக் கொண்டவள், அவனை முறைத்துக் கொண்டே, அவசரமாக பின் சீட்டில் இருந்த தனது பையைத் எடுக்கத் திரும்ப, அப்பொழுது தான் பின் ஜன்னல் கண்ணாடி வழியாக எதிரில் இருந்த வீட்டைப் பார்த்தவள், பட்டென்று கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தாள்..

“கார்த்திக்..” என்று கூவ,

“யுவர் ஹானர்.. மாமா ரொம்ப நேரமா உங்களைப் பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. உங்க எதிர் வீட்டைச் சுத்தி பார்த்தது போதும்..” என்றபடி காரில் இருந்து இறங்கியவனை,

“வாங்க மாப்பிள்ளை..” என்று பாலகிருஷ்ணன் வரவேற்க, அவசரமாக வீட்டின் கதவைத் திறந்த சுதா,

“வாங்க மாப்பிள்ளை.. உள்ள வாங்க.. என்ன ரெண்டு பேரும் திடீர்ன்னு வந்திருக்கீங்க? நீங்க காலையில பேசும்போது கூட வரதா சொல்லலையே..” என்றபடி கார்த்திக்கை வரவேற்கவும், பெற்றவர்கள் இருவரையும் பார்த்த ஆதிரா,

‘பெத்த பொண்ணு இங்க உட்கார்ந்து இருக்கேன்.. மாப்பிள்ளைக்கு ரொம்ப உபச்சாரம் நடக்குது.. அந்த மனுஷனும் என்னைத் திரும்பிப் பார்க்கறாரான்னு பாரு..” என்று முணுமுணுத்துக் கொண்டு,  காரிலேயே அமர்ந்துக் கொண்டாள்.

“ரெண்டு பேரும் எங்கயோ வெளிய கிளம்பிட்டு இருக்கீங்க போல இருக்கே? நீங்க வேணா போயிட்டு வாங்க.. கிளம்பினவங்க ஏன் நிக்கறீங்க?” கார்த்திக் இருவரைப் பார்த்துக் கேட்கவும்,

“இல்ல தம்பி.. இவருக்கு சுகருக்கு டாக்டர்க்கிட்ட காட்டிட்டு வரலாம்ன்னு தான் கிளம்பிட்டு இருக்கோம்.. நீங்க வாங்க. நாங்க இன்னொரு நாள் கூட பார்த்துக்கறோம். அவசரம் இல்ல.. அவருக்கு இன்னும் ரெண்டு நாளுக்கு மாத்திரை இருக்கு..” என்று சுதா சொல்லவும்,

“அதெல்லாம் வேண்டாம் அத்தை.. நீங்க ஆதிரா கூட பேசிட்டு இருங்க.. நான் மாமா கூட போயிட்டு வரேன்.. ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா?” என்று கேட்டவன், சுதாவின் கையில் இருந்த ஃபைலை வாங்கிக்கொண்டு, ஆதிராவைத் தனது அருகில் தேட, அவளோ காரிலேயே கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது தான் மற்ற இருவரின் பார்வையும் அவள் மீது படிய, “என்னடி அங்கேயே உட்கார்ந்துட்டு இருக்க? மகாராணியை வெத்தல பாக்கு வச்சு அழைக்கணுமோ? இறங்கி கீழ வாடி. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைய உள்ள கூப்பிடாம கார்லயே உட்கார்ந்து இருக்க?” என்று சுதா கேட்க,

“என்னடா ஆதிராம்மா. ஏன் அங்கேயே உட்கார்ந்து இருக்க?” மென்மையாக பாலகிருஷ்ணன் கேட்கவும், ஆதிரா காரில் இருந்து இறங்கினாள்..

“ரெண்டு பேருக்கும் இப்போவாவது என்னைக் கண்ணுக்குத் தெரிஞ்சதே.. ரொம்ப சந்தோசம்.. ஒருத்தி அங்க இருந்து உங்களைப் பார்க்க ஓடி வந்திருக்கேன்.. ‘மாப்பிள்ளை.. மாப்பிள்ளை’ன்னு என்னை சேலம்ல பஸ் ஏத்தி விடறேன்னு சொன்னவர கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க..” என்று இருவரிடமும் கேட்டவள், தங்குதங்கென்று கதவைத் தள்ளிக் கொண்டே வீட்டின் உள்ளேச் செல்ல, கார்த்திக் அவளைப் பார்த்து புன்னகைத்தான்..

“ஏய்.. எதுக்குடி இப்போ கோவிச்சுக்கிட்டு போற? வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்கார்.. அவரை கவனிக்காம இந்த வீட்டு பொண்ணு உன்னை கவனிக்கணுமா?” என்று கேட்டுக் கொண்டே சுதா அவள் பின்னோடு செல்ல,

“அம்மாவும் பொண்ணும் ஆரம்பிச்சிட்டாங்க..” தனது மகளை ரசித்துச் சொன்னவரைப் பார்த்த கார்த்திக், புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான்..

“உங்களைப் பார்க்கணும் போல இருக்குன்னு காலையில ரொம்ப டவுன் ஆகிட்டா.. அது தான் கூட்டிக்கிட்டு வந்தேன்..” கார்த்திக் ஆதிராவைப் பார்த்துக் கொண்டே சொல்ல,

“நீங்க உள்ள வாங்க மாப்பிள்ளை… இன்னும் அவ சின்னப் பிள்ளையாவே இருக்கா..” அவளது செயலுக்கு பாலகிருஷ்ணன் மன்னிப்பு வேண்டும் குரலில் சொல்லவும்,

“அதெல்லாம் பரவால்ல மாமா.. நீங்க வாங்க.. நாம டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடலாம்.. எனக்கு எப்படி போகணும்ன்னு சொல்லுங்க.. கொஞ்ச நேரம் அம்மாவும் பொண்ணும் கொஞ்சிக்கிட்டு இருக்கட்டும்.. இல்ல சண்டைப் போட்டு முடிக்கட்டும்.. அப்பறம் நாம உள்ள போகலாம்.. இப்போ உள்ள போனா நம்மளை பஞ்சாயத்துக்கு கூப்பிடுவாங்க.. அது ரொம்ப கஷ்டம்..” என்ற கார்த்திக்கைப் பார்த்து சிரிக்க,

“இப்படியே சிரிச்சிட்டு நிற்க வேண்டாம்.. வாங்க.. வாங்க..” என்றபடி விடாப்பிடியாக பாலகிருஷ்ணனை அழைத்துக் கொண்டே சென்றான்..

“ஆதிரா.. நான் மாமாவை கூட்டிக்கிட்டு போயிட்டு வரேன்.” கார்த்திக் குரல் கொடுத்துவிட்டு காரை எடுக்க,

“சுதா.. ஆதிரா.. நான் மாப்பிள்ளையோட போயிட்டு வரேன்..” கார்த்திக்கைத் தொடர்ந்து பாலகிருஷ்ணனின் குரலும் ஒலிக்க, கார் கிளம்பும் சத்தம் கேட்டு சுதா வெளியில் எட்டிப் பார்த்தார்..

அதை கவனிக்காமல் நேராக பாத்ரூமில் புகுந்துக் கொண்ட ஆதிரா, முகத்தை கழுவிக் கொண்டு வந்து, கார்த்திக்கைத் தேடிய படி, “அவரு எங்கம்மா?” என்று கேட்க,  

“அவரு அப்போவே கிளம்பிப் போயிட்டாரே..” சுதா சொல்லவும், பட்டென்று அவளது முகம் வாட,

“என்னது? கிளம்பிட்டாரா? என்கிட்டே சொல்லவே இல்லையே.. ஏன் என்கிட்டே சொல்லாம போனார்? நான் இப்படி உள்ள வந்ததுல கோவிச்சிக்கிட்டாரா?” கண்களில் கண்ணீர் அதோ இதோவென்று எட்டிப் பார்க்க, சுதா அவளைப் பார்த்து முறைத்து, அவளது கையில் ஒரு கப்பைத் திணித்தார்..

“அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை.. அவரு வீட்டுக்கு வந்திருக்கும்போது அவரைத் தான் நாங்க மரியாதையா வரவேற்கணும்.. அதை விட்டுட்டு உன்னை கொஞ்ச சொல்றியா? உனக்கு என்ன அவ்வளவு கோபம்? நம்ம வீட்டுக்கு வந்திருக்கறவரை வான்னு கூப்பிடாமா நீ பாட்டுக்கு என்னவோ தங்குதங்குன்னு போற? இது தான் நான் உன்னை வளர்த்த அழகா?” சுதா அவளைக் கடிந்துக் கொண்டே, ப்ரிட்ஜைத் திறந்து, இரவு உணவிற்குத் தேவையான காய்கறிகளைப் பார்க்க, காபியைக் கீழே வைத்துவிட்டு, ஆதிரா ஓடிச்சென்று கார்த்திக்கிற்கு அழைத்தாள்..

கார்த்திக் போனை எடுக்கவும், “அப்பு.. எங்கப் போனீங்க? ஏன் வீட்டுக்குள்ள கூட வராம அப்படியே போயிட்டீங்க” தொண்டையடைக்கக் கேட்கவும்,

“நீ தான் என்னைக் கண்டுக்கவே இல்லையே.. நான் வேற என்ன செய்யறது?” சோகமாக கார்த்திக் கேட்க, அவனது விளையாட்டு புரிந்து பாலகிருஷ்ணன் சிரித்துக் கொண்டார்..

“அப்பு சாரி அப்பு.. நான் அவங்களைப் பார்க்க ஓடி வந்தா.. அவங்க என்னைக் கண்டுக்காம இருக்கவும், எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி ஆச்சு.. அது தான்.. ப்ளீஸ் திரும்பி வீட்டுக்கு வாங்க.. எனக்கு உங்களைப் பார்க்கணும்.. நீங்க இப்படி போனது எனக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு..” அவளது தொண்டை அடைக்கவும், அதற்கு மேல் அவளை சோதிக்காமல்,

“பட்டு.. நான் மாமா கூட டாக்டர்கிட்ட வந்தேன்.. இன்னும் ரெண்டு பேஷண்ட்ஸ் இருக்காங்க.. முடிஞ்சதும் வீட்டுக்குத் தான் வரேன்.. உன்னைக் கூட்டிக்கிட்டு தான் நான் ஊருக்கு திரும்பப் போறேன்.. என்ன?” அவன் சமாதானப்படுத்தவும்,

“அ…ப்..பு.. போங்க.. எங்க நீங்க கோவிச்சிக்கிட்டு கிளம்பிட்டீங்களோன்னு நான் ரொம்ப பயந்தே போயிட்டேன்.. எங்க அம்மா என்னை திட்டி தீர்த்துட்டாங்க..” சுதாவைப் பார்த்துக் கொண்டே குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“அம்மா தானே.. ஒரு உம்மா கொடுத்து சமாதானப்படுத்திடு.. ஆதிரா.. டாக்டர் கூப்பிடறாங்க.. நாங்க பார்த்துட்டு வீட்டுக்கு வரோம்.. இப்போ போனை வச்சிடறேன்.. ஓகே வா..” என்றவன், தனது மொபைலை அமர்த்த, அந்தப் பக்கம் ஆதிரா பரபரப்பாக வேலை செய்யத் துவங்கினாள்.

“அம்மா.. அவரு மதியமும் சாப்பிடவே இல்ல.. நல்ல டிபனா செஞ்சிக் கொடு.. பூரி அவருக்கு ரொம்ப பிடிக்கும்.. சீக்கிரம் ரெடி பண்ணுங்க..” என்றவள், சுதா கொடுத்தக் காபியை ஒரே மடக்காக குடித்து முடித்துவிட்டு, சுதாவிடம் கேட்டு அவருக்கு உதவத் துவங்கினாள்.

மருத்துவரிடம் இருந்து வந்தவனுக்கு, சுதா காபியைக் கலந்துக் கொடுக்க, “அந்த ரூமை உங்களுக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன்.. நீங்க போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. ரொம்ப டயர்டா இருக்கீங்க.. எவ்வளவு தூரம் வண்டியை ஓட்டிட்டு வந்திருக்கீங்க.. முதல்ல காபியை சூடா குடிங்க.. மதியமும் ஒண்ணும் சாப்பிடலை..” அக்கறையாக அவள் சொல்லவும், அவளது கன்னத்தை வருடத் தூண்டியது அவனது மனது..

மற்ற இருவரும் அங்கே நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, அதை ஓரக்கண்ணால் பார்த்தவன், தன்னை அடக்கிக் கொண்டு, சமத்து பிள்ளையாக அவளது கையில் இருந்து காபியை வாங்கிக் கொண்டு, அவள் காட்டிய அறைக்குச் சென்றான்.. 

காபியைக் குடித்துமுடித்து, குளித்து வந்தவனை சுதா இரவு உணவிற்கு அழைக்க, பிகு செய்யாமல் அவருடன் சென்றவன், பாலகிருஷ்ணனுடன் உண்ண அமர்ந்தான்.. ஆதிராவும், சுதாவும் இருவருக்கும் பரிமாற, பாலகிருஷ்ணனும், சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. அவர்களது பார்வையின் பரிமாற்றம் என்னவோ?

“தம்பி.. உங்க வீட்ல ஆதிராவைப் பத்தி சொல்லிட்டீங்களா? உங்க கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்? நீங்க சொன்னீங்கன்னா முறைப்படி ரெண்டு வீட்டுலையும் பேசி முதல்ல உங்க நிச்சயத்தை முடிச்சிடலாம்ல..” சுதா சுற்றி வளைக்காமல் பேச்சைத் துவங்க, அவனது வீட்டைப் பற்றிய பேச்சில் அவன் எங்காவது சரியாக சாப்பிடாமல் எழுந்து விடுவானோ என்று பயந்த ஆதிரா, ‘அம்மா.’ என்று அவரை அடக்க, பாலகிருஷ்ணன் கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தார்.

கார்த்திக் ஆதிராவைப் பார்க்கவும், ஆதிராவின் முகத்திலும் ஆவல் தெரிய, “நாங்க நல்லபடியா நடமாடிக்கிட்டு இருக்கும்போது அவளுக்கு நல்லது எல்லாம் செஞ்சுப் பார்க்கணும்ன்னு நாங்க ஆசைப்படறோம் மாப்பிள்ளை.. அது தான்.. வேற ஒண்ணும் இல்ல.. எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு.. அவளோட கல்யாணத்தை சீரும் சிறப்புமா செய்யணும்ன்னு ஆசைப்படறோம்.. ஒரு நாள் பார்த்து குறிச்சிட்டா.. நாங்க மெல்ல அவளுக்கு நகைநட்டு வாங்கறதை எல்லாம் செய்யத் தொடங்கிடுவோம்..” பாலகிருஷ்ணன் விளக்கம் சொல்ல, கார்த்திக் அவரைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தான்..

“எங்க வீட்ல ஆதிராவைப் பத்தி சொல்லிட்டேன் மாமா. அங்க ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆனா.. கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டுமே.. வீடு இன்னும் ரெடி ஆகல மாமா. இப்போ தான் இன்டீரியர் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.. அது முடிஞ்ச உடனே பெயின்டிங் செய்யணும்.. பொருட்கள் எல்லாம் வாங்கணும்.. அது முடிஞ்ச உடனே நாம டேட் பிக்ஸ் பண்ணிக்கலாம்..” கார்த்திக் சொல்லவும், சுதாவும் பாலகிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

“அதுக்கு முன்ன அவங்கக்கிட்ட ஒரு வார்த்தை பேசறது தானே முறை..” சுதா இழுக்க,

“பேசலாம் அத்தை.. அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. இப்போ பேசினா மட்டும் என்ன செய்யப் போறாங்க? உடனே கல்யாணத்துக்கு பரபரன்னு வேலை செய்துடப் போறாங்களா? அதுக்கும் நானும் என் தம்பியும் தான் செய்யணும்.. ஏதோ அப்பா வருவாங்க..” கார்த்திக்கின் வெறுப்பான பதிலில் சுதா அவனுக்கு முன்பு அமர்ந்தார்..

“மாப்பிள்ளை.. நான் கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க அம்மா இப்படி இருக்காங்கன்னா ஏதாவது காரணம் இருக்கும்ல.. அது கேட்டு தீர்த்து வச்சா எல்லாம் சரியா போகும்ல.. ஒருவேளை அவங்க உங்க அன்பை எல்லாம் எதிர்ப்பார்க்கலாம்ல..” ஒரு பெண்ணாய் அவர் யூகித்துக் கேட்கவும்,

“நாங்க அதுக்கு எல்லாம் முயற்சி செய்யாமலா இருப்போம் அத்தை.. எல்லாம் செஞ்சு வெறுத்துப் போய் விட்டாச்சு.. என்ன செய்தாலும் அவங்க அப்படித் தான். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே எங்களுக்கு எல்லாம் ஒருவேளை சாப்பாடை ஒழுங்கா போட்டது இல்ல.. சலிச்சு போச்சு..” எனவும்,

“ஏன்? ஏன் அப்படி இருக்காங்க? நான் போய் அத்தைகிட்ட பேசிப் பார்க்கவா?” ஆதிரா கேட்கவும், கார்த்திக் இகழ்ச்சியாக புன்னகைத்துக் கொண்டே சொல்லத் துவங்கினான்..

“எங்க அம்மா வந்து கொஞ்சம் கிராமத்து ஏழ குடும்பத்துல இருந்து வந்தவங்க.. சரியான சாப்பாடு எதுவும் இல்லாம வாழ்ந்தவங்க..  எங்க அப்பாவுக்கு எங்கயுமே சரியா வரன் அமையாம, ஒருத்தங்க மூலமா எங்க அம்மா சம்பந்தம் வந்திருக்கு.. அப்பாவுக்கும் பிடிக்கவும் கல்யாணம் செய்துட்டாங்க.. 

எங்க அப்பத்தா, ‘பிறந்த வீட்டுல தான் கஷ்டப்பட்டா.. இங்க அவ சுகமா வாழணும்’ன்னு அவங்களை ராணி மாதிரி பார்த்துக்கறேன்னு சொல்லி கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தாங்க.. அவங்க இஷ்டத்துக்கு நடந்துக்க விட்டுட்டாங்க.. அப்போ அவங்க இருந்த குவாட்டர்ஸ்ல க்ளப் எல்லாம் இருந்து இருக்கு..    சரி.. வெளிய எல்லாரும் கூடவும் பழகினா, அப்பாவுக்கு ஏத்த பொண்ணா அம்மா மாறுவாங்கன்னு அவங்களுக்கு எண்ணம்.. நல்ல வகையில பொழுது போகும்.. அவங்களும் நாலு பேரோட பழகனும்ன்னு க்ளப்க்கு எல்லாம் எங்க அப்பத்தா அவங்களை அனுப்பி வச்சிருக்காங்க.. அது தான் ரொம்ப தப்பா போச்சு..” அவன் சொல்லி நிறுத்த,

“என்னாச்சு?” ஆதிரா படபடப்பாகக் கேட்க,

“க்ளப்ல லேடீஸ் எல்லாம் சீட்டுக்கட்டு, கேரம் போர்ட் எல்லாம் விளையாடுவாங்க.. அதுல சீட்டு விளையாடத் தொடங்கி, அடுத்து அவங்க கூட எல்லாம் சினிமா.. டூர்ன்னு சுத்தப் போய்.. வீடு அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா ஜெயில் போல ஆகிப் போயிருச்சு..

அப்பத்தா வீட்ல இருன்னு சொன்னாலும் சண்டைப் போடத் தொடங்கிட்டாங்க.. ‘என்னை அடக்கப் பார்க்கறீங்களா? சீர் சனத்தி எதுவும் கொண்டு வராததுனால என்னை இப்படி அடிமையா நடத்தறீங்களா?’ன்னு ரோடுல நின்னு கத்தி, அப்பத்தாவுக்கே அது எதிர்வினையா போச்சு.. அவங்களால எதுவுமே செய்ய முடியல.. நான் பிறந்தாளாவது குழந்தையை பார்த்துக்கன்னு அவங்க இருப்பாங்கன்னு எங்க அப்பத்தா ஆசையிலையும் மண்ணு விழுந்தது தான் மிச்சம்.. ரெண்டு மாசத்துல மறுபடியும் அதே கதை தான்..

அப்பத்தாகிட்ட என்னைக் கொடுத்துட்டு எப்போப் பாரு கிளப்பே கதின்னு இருக்க ஆரம்பிச்சிட்டாங்க.. தம்பி வந்த அப்பறமும் அதே நிலை தான்.. என்னையும் என் தம்பியையும் அப்பத்தா இருக்கற வரை நல்லா பார்த்துக்கிட்டாங்க. சாப்பாட்டுக்கோ, எங்களை கவனிச்சுக்கறதுலையும் எந்த பிரச்சனையும் இல்ல. பிள்ளைங்க பிறந்தாச்சு அவங்களைப் பார்த்துகணும்ன்னு சொன்னா கேட்கற நிலையிலும் அவங்க இல்ல.. தயாராவும் இல்ல..

பிள்ளைப் பாசத்தை வச்சும் அவங்களை கட்டிப் போட முடியல. அப்பா அவங்க ஆசைப்பட்டது எல்லாம் வாங்கித் தந்தும் எந்த பிரயோஜனமும் இல்ல.. நான் எட்டாவது படிக்கும் போது ஜான்டிஸ் வந்து எனக்கு ரொம்ப உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்க்கறது போல ஆகிடுச்சு.. அப்போ கூட என்னை நர்ஸ்கிட்ட பார்த்துக்கச் சொல்லிட்டு அவங்க வெளிய போயிட்டாங்க.. அப்போ சாப்பாடு எடுத்துட்டு வந்த அப்பா நான் தனியா இருக்கறதைப் பார்த்து ரொம்ப உடைஞ்சுப் போயிட்டார்.. அப்பத்தா வீட்ல சரவணனை பார்த்துட்டு இருந்தாங்க.. அப்பறம் அப்பா தான் என் கூட இருந்தாங்க.. அதைக் கேட்டதுக்கும் வீட்ல சண்டை தான்..” கார்த்திக் சொல்லச் சொல்ல, ஆதிராவிற்கு தொண்டை அடைத்தது.. அவன் பிறந்த நாள் அன்று கூறிய ‘என்னோட சந்தோஷமான முதல் பிறந்தாள்’ இப்பொழுது அவளது மனதை நன்றாக வதைத்தது..    

“அப்படியே போயிட்டு இருக்க, ஒருநாள் அப்பத்தா தூக்கத்துலையே போய் சேர்ந்துட்டாங்க.. அப்பறம் தான் பசின்னா என்னன்னே எனக்கும் சரவணனுக்கும் தெரிஞ்சது.. எனக்காவது ஓரளவு அப்போ விவரம் தெரியும்.. சரவணன் சின்னப் பையன்.. பாவம் அவன் தான் ரொம்ப கஷ்டப்பட்டான்.. ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வர எங்களுக்கு சாவி ஒரு டப்பாவுல ஷூ ரேக்ல இருக்கும்.. நாங்களே திறந்து உள்ளப் போயிக்கணும்.. ஒரு பெரிய பிளாஸ்க்ல எனக்கும் அவனுக்கும் பூஸ்ட் இருக்கும்.. கூடவே எதாவது சமோசா பஜ்ஜின்னு இருக்கும்.. இல்ல ஹோல்சேல்ல வாங்கின பிஸ்கட் பாக்கெட் நிறைய இருக்கும் வீட்டுல.. அது தான் முக்கால் வாசி எங்க நைட் சாப்பாடு.. லேட் ஆகற அன்னைக்கு அப்பா ராத்திரிக்கு ஏதாவது வாங்கிட்டு வருவார்.. சீக்கிரம் வந்தா அவரே ஏதாவது செஞ்சித் தருவார். சில நாள் அவரு வரதுக்குள்ள நாங்க பிஸ்கட் சாப்பிட்டு தூங்கிப் போயிருவோம்.. அதைப் பார்த்தா அன்னைக்கு வீடு ரணகளம் தான்..” என்றவன், ஒரு வாய் பூரியை போட்டுக் கொண்டு,

“சரி ஊரு மாறி போனா அவங்களும் மாறுவாங்கன்னு ஒரு நம்பிக்கையில, சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டார்.. இங்கயும் அவங்க க்ளப் தேடிப் போனாங்க.. ஒருதடவ அப்பா கண் மண் தெரியாத கோபத்துல, ‘இனிமே நீ க்ளப் கிப்புன்னு சுத்தினன்னா உன்னை கிராமத்துலையே கொண்டு விட்டுடுவேன்.. இப்போ நீ இருந்தும் இல்லாத மாதிரி தான்.. அதை நீ இல்லாமையே நான் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டார். ஊருக்கு போனா ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்.. இப்படி எல்லாம் எங்கயுமே சுத்த முடியாதே.. அதனால வீட்லயே இருக்க ஆரம்பிச்சாங்க..” கார்த்திக் சொல்லி முடிப்பதற்குள்,

“அப்பறம் உங்களை நல்லா பார்த்துக்கிட்டாங்களா?” ஆவலாக அவள் கேட்க,  

இகழ்ச்சியாகப் புன்னகைத்தவன், “வெளிய போக முடியலன்னா என்ன? நான் வீட்ல டிவி பார்க்கறேன்னு காலையில இருந்து ராத்திரி வரை சீரியல்.. சிடி போட்டு புது படம்ன்னு ஆரம்பிச்சிட்டாங்க.. ஏதோ பிள்ளைங்க வரும்போது வீட்ல இருந்தா சரின்னு அப்பாவும் விட்டுட்டார்.. சாயந்திரம் பசிச்சா பக்கத்து கடையில ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்க சொல்லி, என்கிட்டே மாசம் மாசம் கொஞ்சம் பணம் கொடுத்து வைப்பார்.. தம்பிக்கும் வாங்கிக் கொடுத்து நான் சாப்பிடுவேன்..   

ஒரு தடவ சரவணனோட மார்க் எல்லாம் ரொம்ப குறையவும், எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் அப்பாவைக் கூப்பிட்டு பேசினார். அப்பா சரவணனைத் திட்டவும், நான் கோபத்துல ‘எப்போப் பாரு வீட்ல சண்டைன்னா நாங்க நிம்மதியா இருக்கவா.. இல்ல வீட்டை விட்டு வெளிய போயிறவா? வீட்ல கொஞ்சமாச்சும் நிம்மதி இருக்கா?’ன்னு கேட்டுட்டேன். அதுல இருந்து எங்க மனநிலைக்காக அப்பா வீட்ல எதுவுமே பேசறது இல்ல. அவர் பாட்டுக்கு கோவில், கச்சேரின்னு போயிட்டு வருவார்.. ஏதோ ரிடையர் ஆனதுக்கு அப்பறம் ஒரு கம்பனில போயிட்டு வந்துட்டு இருக்கார்..

நான் வேலைக்கு போற வரை சரவணன் கூட நல்லா பேசிட்டு இருந்தோம்.. அப்பறம் நான் வேலை.. வேலைன்னு ஓடத் தொடங்கவும் பேசறதே ரொம்ப ரேர் ஆகிருச்சு.. நான் என் வேலையைப் பார்த்துட்டு போவேன்.. அப்பா அம்மாவுக்கு நடுவுல ஏதாவது சண்டை வந்தாலும், அடிச்சிக்கோங்கன்னு என் வேலையைப் பார்த்துட்டு போயிருவேன்.. இல்ல நைட் வெளிய போயிட்டு வரும்போது நான் வெளியவே சாப்பிட்டு வந்திருவேன்.. அது எல்லாம் கொஞ்சம் அவனுக்கு மனத்தாங்கல். ரெண்டு பேருமே வேலைக்கு போயிறவும்.. வீட்ல பார்த்துக்கற நேரமே குறைஞ்சுப் போச்சு.. அம்மா அப்படியே தான் இருக்காங்க.. நடுநடுவுல எங்களை திட்டிக்கிட்டு அவங்க வீட்ல இருக்கறதை உணர்த்துவாங்க.. அவங்களை நினைச்சே இத்தனை வருஷம் காதல், கல்யாணத்தைப் பத்தி எல்லாம் யோசிக்க கூட இல்ல. அது எல்லாம் எதுக்கு வாழ்க்கையிலன்னு இருந்தேன்..” என்றவன், ஆதிராவைப் பார்த்துவிட்டு,      

“அம்மாவை இதுக்கும் மேல எல்லாம் மாத்தவும் முடியாது.. அவங்களுக்கு ஆதிராவைப் பத்தி தெரியும்.. ஆனா.. இப்போதைக்கு அவளை அவங்கக்கிட்ட நான் காட்ட மாட்டேன்.. நிச்சயத்துக்கு வரும்போது பார்த்துக்கட்டும்.. உங்களுக்கு பேசணும்ன்னா அப்பாக்கிட்ட பேசுங்க.. நான் நம்பர் தரேன்..” என்ற கார்த்திக் அமைதியாக உண்ணத் துவங்கினான்.

“உங்க தம்பி எப்படி?” சுதா கேட்க,

“அவன் ரொம்ப நல்ல பையன்மா.. ஆனா.. இவங்க ரெண்டு பேர் சண்டையை நான் சமாளிக்கறதே பெரிய விஷயமா இருக்கும் போல. சும்மாவே ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க..” ஆதிரா அவசரமாகச் சொல்ல,    

சுதாவைப் பார்த்து புன்னகைத்தவன், “நானும் என் தம்பியும் அப்போப்போ சண்டை போட்டுப்போம்.. சண்டைன்னா எனக்கு அவனை வம்பு வளர்க்க ரொம்ப பிடிக்கும். அதுனால ஏதாவது அவன் சொல்றதுக்கு நேர்மாறா சொல்லி அவனை கடுப்பேத்துவேன்.. ஆதிராவை வச்சு இப்போ சண்டை போட்டுட்டு இருக்கேன்.. வேணுண்டே அவனுக்கு நேரா இவளைத் திட்டினா அவன் டென்ஷன் ஆவான்.. அதுல ஒரு சின்ன அல்ப சந்தோசம்.. அது ஆதிராவுக்கும் தெரியும்..” என்றவன், பெருமையாக,   

“அவன் ரொம்ப டேலன்ட்.. எனக்கு ஏதாவதுன்னா அவன் தான் முன்னால வந்து நிப்பான். அது எனக்கு நல்லாத் தெரியும்.. என்னைப் பத்தியும் அவனுக்கு நல்லாத் தெரியும்.. ஆதிரா விஷயம் தான் அவனால ஏத்துக்க முடியல.. அது அவன் ஆதிரா மேல வச்சிருக்கற பாசம்.. பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ல.. எங்க அம்மாகிட்ட ஆதிராவை மாட்ட விடறதுல அவனுக்கு துளி கூட இஷ்டம் இல்ல.. அதனாலேயே அவன் தான் இப்போ என் காதலுக்கு எதிரி..” என்று கார்த்திக் சொல்லவும், ஆதிரா அவனை ஆதரவாகப் பார்த்தாள்.. அவளுக்கு அப்பொழுதே அவனை அணைத்து ஆறுதல் சொல்லத் தூண்ட,

“கொஞ்சம் சாப்பாடு போட்டுக்கோங்க.. வெறும் பூரி சாப்பிட்டது தாகம் எடுக்கும்..” அவனை கவனிக்கத் துவங்க, உண்டு முடித்து எழுந்தவன்,

“உங்களுக்கு அப்பாவோட நம்பர் அனுப்பறேன்.. நீங்க அவர்கிட்ட பேசுங்க.. இந்த நேரம் அப்பா முழிச்சிட்டு இருப்பார்..” என்றவன், தனது பாக்கெட்டில் இருந்து தனது மொபைலை எடுத்து, தனது தந்தையின் நம்பரை பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியவன்,

“அப்பா நல்லா பேசுவாங்க மாமா.. பேசுங்க.. அவரும் ஆதிராவைப் பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தார்.. நான் என்கிட்டே போட்டோ எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டேன்” என்று சொன்னவன்,

“இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மாமா.. நான் போய் செய்யறேன்.. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க.. டாக்டர் சொன்னது நியாபகம் இருக்கு தானே.. அப்பறம் சொல்லணும்ன்னு நினைச்சேன்.. என்னை கார்த்திக்ன்னே கூப்பிடுங்க.. மாப்பிள்ளை எல்லாம் ரொம்ப ஃபார்மலா இருக்கு.. நானும் இந்த வீட்டு பிள்ளைப் போல தானே.. அதனால அப்படியே கூப்பிடுங்க.. என்ன?” பாலகிருஷ்ணனிடம் கேட்டவன், அவர் அவனை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே,  

“ஆதிரா.. நீயும் சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு.. குட் நைட்..” என்றபடி அவள் காட்டிய அறைக்குச் சென்றவன், தனது கணினி இயக்கிவிட்டு, அமர்ந்தான்..