எங்கே எனது கவிதை – 17

th (2)-040b2149

17      

“கார்த்திக்… அப்பு.. கார்த்திக்.. நான் இங்க தான் இருக்கேன்.. இதோ இங்க தான் இருக்கேன்.. எனக்கு உங்க குரல் கேட்குது கார்த்திக். இதோ நாங்க இங்க தான் இருக்கேன்.. நான் இங்க இருக்கறது உங்களுக்குத் தெரியுதா? கார்த்திக்.. கார்த்திக்.. என்னை விட்டுட்டு போகாதீங்க.. என்னைக் கூட்டிட்டு போங்க..” கண்கள் கட்டப்பட்டிருக்க, மயக்கம் சற்றே கலைந்த நிலையில், அவள் இருந்த அறையில், காலை உதைத்து, ஆதிரா கார்த்திக்கிற்கு தனது இருப்பை உணர்த்த முயன்றாள்..

சத்தமாக கத்துவதாக அவள் நினைத்திருக்க, முன்தினம் இருந்து மயக்க மருந்தின் பிடியில் இருந்தவளின் குரல் வெறும் காற்றாகத் தான் வெளி வந்தது..

“கா..ர்த்..திக்.. உங்க குரல் எனக்குக் கேட்குது.. என்கிட்டே வாங்க.. நான் இங்கத்தான் இருக்கேன்.. அப்பு..” மீண்டும் அவள் குரல் கொடுக்க, விசித்ரா (ஆதிராவின் குடியிருப்பில் இருந்த அந்தக் குழந்தையின் தாய்.. ஆதவனின் மனைவி) அவளைப் பார்த்துக் கொண்டு நின்றாள்..  

“கார்த்திக்.. நான் இங்க தான் இருக்கேன்.. என்னை விட்டுட்டு போயிடாதீங்க.. இங்க ஒரே இருட்டா இருக்கு.. எனக்கு பயமா இருக்கு.. என்னை உங்க கூடவே கூட்டிக்கிட்டு போங்க.. இவங்க என்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க கார்த்திக்.. நம்ம ஃப்ளாட்ல இருக்காங்கன்னு நம்பி வண்டியில ஏறினேன்.. கடைசியில என்னை கடத்த ப்ளான் பண்ணி தான் அப்போ வந்திருக்காங்க.. என்னால தப்பிக்க முடியல கார்த்திக்.. என்னைக் காப்பாத்துங்க.. எனக்கு நீங்க வேணும்..” ஆதிரா கார்த்திக் அங்கு இருப்பதாக நினைத்து மயக்கத்தில் பேசிக் கொண்டிருக்க, விசித்ரா ஆதவனைத் திரும்பிப் பார்த்தாள்..

“இவளோட ஆளு எப்படி டக்குன்னு மேல ஓடி வந்தான் பார்த்தியா? அவனுக்கு எப்படி அங்க வரணும்ன்னு தோணிச்சுன்னு புரியலையே.. கரெக்ட்டா அங்க வந்து தேடறான் மாங்கா மடையன்.. அவ்வளவு மயக்கத்துல இருந்தவ அவனோட குரலைக் கேட்டதும் மயக்கம் தெளிஞ்சு பேச ஸ்டார்ட் பண்ணிட்டா..

அப்போல இருந்து கார்த்திக்.. கார்த்திக்ன்னு அவன் பேரையே பிணாத்திக்கிட்டு இருக்கா. நானும் பார்க்கறேன் அந்த கார்த்திக் என்ன சாதிக்கிறான்னு.. அந்த மயக்க மருந்து கொடுத்ததுனால அவ சத்தமா கூப்பிடறதா நினைச்சு முனகிக்கிட்டு கிடந்தா.. கொஞ்சம் சத்தமா மட்டும் பேசி இருந்தா.. நாம கூண்டோட காலி.. அப்போவே மாட்டி இருப்போம்.. இவளை அரை மயக்கத்துல தான் வச்சி இருக்கணும்..” ஆதவன் விசித்திராவைப் பார்த்து பல்லைக் கடிக்க, விசித்திரா அவனைப் பதட்டத்துடன் பார்த்தாள்..

“இருந்தாலும் நேத்துல இருந்து அவளை இவ்வளவு மயக்கம் கொடுத்து வைக்கிறது நல்லது இல்ல.. போன தடவ ஒரு பொண்ணை கடத்தின பொழுது டாக்டர் சொன்னது நியாபகம் இருக்கா இல்லையா? ரொம்ப மயக்க மருந்து கொடுத்தா அவங்க கோமால போய் செத்துப் போயிடுவாங்கன்னு சொன்னாங்க.. நியாபகம் இருக்கா? இப்போ ரெண்டு நாளா இவளுக்கு எப்போப் பாரு நீங்க கொடுத்துட்டு இருக்கீங்க.. அவ ஏற்கனவே ஒல்லியா இருக்கா.. நேத்து இருந்து எதுவுமே சாப்பிடவும் இல்ல.. இதுல ரொம்ப கொடுத்து அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா பெரிய பிரச்சனையா போயிடும். அவளைப் பத்தி தெரியாம இப்படி போய் கையை வச்சு இருக்கோமே.. எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.. நம்ம பையனை நினைச்சா தான் இன்னும் பயமா இருக்கு.. அவனோட எதிர்க்காலம்?” விசித்திரா ஆதவனை கடிந்துக் கொண்டாள்..

“அது தான் அவனோட எதிர்க்காலம்ன்னு நீ பிடுங்கி பிடுங்கி சம்பாதிச்ச பாதி பணத்தை அவன் பேருல போட்டு வச்சிருக்கேனே. அதை விட நான் என்ன செய்யணும்ன்னு சொல்லு.. இதுக்குத் தான் குழந்தை குட்டி எல்லாம் வேண்டாம்ன்னு அவ்வளவு சொன்னேன்.. அதை வேற நீ பெத்துக்கிட்டு இப்போ அதைப் பத்தி யோசின்னா நான் என்ன செய்யறது? பணம் மட்டும் தான் போட முடியும்.. இவளை கை மாத்தி விட்டுட்டு நாம வெளிநாட்டுல போய் செட்டில் ஆகிடலாம்ன்னு தானே நம்ம ப்ளான்.. அதைச் செய்யலாம்..” என்றவன், 

“இவ ஒருத்தனோட சுத்தரா.. அவன் கூட கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சுன்னு தெரியும்.. ஆனா.. அவன் ஒரு வக்கீலா இருப்பான்னு யாருக்குத் தெரியும்.. அதுவும் அவன் கூட வந்த வக்கீலோட தம்பி டி.எஸ்.பி. யாம்.. அதை நான் சுத்தமா எதிர்ப்பார்க்கவே இல்ல.. அதுவும் அந்த டி.எஸ்.பி. நேர்மையும் நியாயமுமா ரொம்ப கெட்டிக்காரன் போல.. வெளிய விசாரிச்சா பெரிய தாதாவை எல்லாம் தண்ணி குடிக்க வச்சிருக்காங்க போல.. அவனாக வீட்ல கூடவே இன்னொரு ஆபிசரும் இருக்கான் போல.. அவன் கிட்ட தான் கம்ப்ளையின்ட் கொடுத்து இருக்காங்க.. ராத்திரி அந்த இடத்துல ரெண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்க.. ஒரே போலீஸ் கும்பல்.. எப்படியாவது நாம இவளை கை மாத்தி விட்டுட்டு தப்பிச்சிறனும்.” என்று தலையை நீவிக் கொண்டவன்,

“ஆனாலும் அந்த வக்கீல் என்னை இன்னைக்கு ரொம்ப முறைச்சிட்டான்.. கூட வந்தவனும் அடிக்கிற போல வரான்.. இவனும் என் சட்டையைப் பிடிக்காத குறையா பேசிட்டான்.. அவனைச் சும்மா விடலாமா? இன்னைக்கு இவளோட போனை வச்சே எப்படி ஓட விட்டேன் பார்த்த இல்ல.. அவங்களை அங்க டைவர்ட் பண்ணிட்டு இவளை இங்கத் தூக்கிட்டேன்.. இப்போ என்னை எப்படி கண்டுப்பிடிக்கிறானுங்கன்னு பார்க்கறேன்..  என்னை முறைக்கிறவன நான் கதற விடல.. நான் ஆதவன் இல்ல.. அடுத்த அடி அவனுக்கு மரண அடி தான்..” என்று சூளுரைத்தவன்,

“அவளுக்கு இதை வாயில ஊத்து. இந்தா ஒரு ஃபனல்ல ஸ்ட்ராவ சொருகி எடுத்துட்டு வந்தேன்.. இத அவளுக்கு ஊத்தி விடு.. அப்போ தான் அவ கை மாறும் போது நமக்கு லாபம்..” என்று அவளது கையில் ஒரு பானத்தைக் கொடுத்தவன், அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, விசித்திரா அவள் அருகில் சென்றாள்..   

கையைக் கட்டியபடி கீழே கிடந்த ஆதிரா, “கார்த்திக்.. ரொம்ப தாகமா இருக்கு.. எனக்கு தண்ணி வேணும்..” என்று புலம்பிக் கொண்டிருக்க, அவளது வாயில் அந்த ஸ்ட்ராவை வைத்தவள், அவன் கொடுத்த பானத்தை ஊற்றினாள்.

மயக்கம் சற்றுத் தெளியவும், தொண்டை வறண்டு, மயக்க மருந்தின் கைங்கரியத்தில்,  தொண்டையில் வேறு கரகரப்பு என்று ஆதிராவிற்கு உபாதைகள் தொடங்கியது.. விசித்திரா வாயில் ஸ்ட்ராவை வைக்கவும், அது என்னவென்று உணர்ந்து, வாயில் இருந்து உமிழ முயல,

“ஏய்.. தாகம் எடுக்குதுன்னு சொன்ன இல்ல.. ஒழுங்கா குடி.. உன்னை மெல்ல கூட்டிட்டு போய் வாஷ்ரூம்ல விடறேன்.. ரெண்டு நிமிஷம் தரேன்.. ஆனா.. கண்ணு கட்டை எடுக்க மாட்டேன்.. எங்கயாவது தப்பிக்கலாம்ன்னு பார்த்தன்னா நீ இங்க இருந்து உயிரோட வெளிய போக மாட்ட..” அவளது கன்னத்தில் ஒரு அடி வைத்து அவள் சொல்லவும்,

“என்னை ஏன் இப்படி செய்யறீங்க? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செஞ்சேன்? உங்களை நம்பிப் பழகி, உங்க கூட கார்ல வந்ததுக்கு இப்படியா நம்பிக்கைத் துரோகம் செய்வீங்க? நீங்க எல்லாம் மனுஷங்களா?” கண்ணீருடன் ஆதிரா கேட்க,

“என்ன செய்யறது? எங்க பொழப்பு அப்படி.. இப்போ நீ இதைக் குடி.. இல்லன்னா பட்டினி தான் நீ கிடக்கணும்.. சும்மா கார்த்திக்.. கார்த்திக்ன்னு புலம்பினா தொண்டைத் தண்ணி வத்தி தான் போகும்.. உன்னோட எனர்ஜி தான் போகும்.. ஒழுங்கா பேசாம கொடுக்கறதை சாப்பிட்டு விழுந்துக் கிட..” என்றவள், அவளது வாயில் திணித்து, அந்த பானத்தை அவளது வாயில் ஊற்ற, அது ஆதிராவின் தொண்டையில் நேரடியாக இறங்க, வேறு வழியின்றி அவள் விழுங்கத் துவங்கினாள்..

அது வாயில் ஊற்றிய பானத்தின் ருசிப் பார்த்தவள், அது க்ளுகோஸ் போல இருக்கவும், அதை துப்பாமல் குடிக்கத் துவங்கினாள்.. ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அங்கிருந்து தப்பிக்க அவளுக்கு சக்தி வேண்டும்.. அதற்கான சக்தியை மெல்ல திரட்டிக் கொள்ள வேண்டும் என்று மனதினில் நினைத்துக் கொண்டவள், அதை விழுங்கி விட்டு, விசித்திரா அவளைப் பிடித்து எழுப்பவும், அவளுடன் வாஷ்ரூமிற்குச் சென்றாள்..

உள்ளே சென்றவளின் கையை விசித்திரா எடுத்து விட, “கண்ணு கட்டை அவிழ்த்து விடுங்க.. எனக்கு பாத்ரூமை லாக் பண்ணனும்.. முகத்தை கழுவணும்.. தலை எல்லாம் சுத்தர மாதிரி இருக்கு.. மயக்கம் வரா மாதிரி இருக்கு.. ப்ளீஸ்.. பாத்ரூம்ல எல்லாம் எனக்கு கண்ணு கட்டி இருக்க முடியாது.. ஒருவேளை நீங்க கதவை தாழ் போடலைன்னா நான் செத்துப் போயிருவேன்.. நான் தப்பிச்சு போக மாட்டேன்.. ப்ளீஸ்.. இந்த விஷயத்துல எனக்கு ப்ரைவசியைக் கொடுங்க..” கெஞ்சுவது போல ஆதிரா கேட்க, மெல்ல அவள் அருகில் சென்ற விசித்திரா,

“கண்ணை எல்லாம் கழட்ட முடியாது.. நான் வெளிய கதவைத் தாழ் போட்டுக்கறேன்.. உனக்கு சத்தம் கேட்கும்.. முகத்தை அப்படியே துணிக்கு மேலேயே கழுவிக்கிட்டு வா.. நான் வேற மாத்தி விடறேன்..” என்றவள், அவளை இழுத்துக் கொண்டு டாய்லட்டின் அருகில் கொண்டு நிறுத்த, ஆதிராவின் கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது.

“என் கார்த்திக் உங்களை எல்லாம் சும்மா விட மாட்டார்.. நீங்க கண்டிப்பா மாட்டுவீங்க.. கையில ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு நீங்க செய்யறது எல்லாம் நியாயமே இல்ல.. அந்த குழந்தையை நீங்க தான் பெத்தீங்களா? நீங்க போலீஸ்ல மாட்டிக்கிட்டா அந்தக் குழந்தையோட நிலைமை என்னன்னு யோசிச்சீங்களா? நீங்க எல்லாம் ஜெயில்லுக்கு போன அப்பறம் இந்த உலகத்துல அந்த குழந்தையை எல்லாரும் நடத்தற முறையை யோசிச்சீங்களா இல்லையா? பிழைக்க இது தான் தொழிலா.. உங்களுக்கே கேவலமா இல்ல.. நீங்களும் ஒரு பொண்ணு தானே..” ஆதிரா உள்ளே சென்ற பானகதில் சிறிது தெம்பு பெற்றவளாய் கத்தத் துவங்கினாள்..

அவள் கேள்விகளைக் கேட்கக் கேட்க அவள் அருகில் வந்த விசித்திரா, அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்து, “வாய மூடிக்கிட்டு வேலையை முடிச்சிட்டு வா.. இல்ல உன்னை வேற மாதிரி கண்டமாக்கிடுவோம்.. நியாபகம் வச்சிக்கோ..” என்று மிரட்டிவிட்டுச் செல்ல, ஆதிரா அதிர்ந்துப் போனாள்.  

“ச்சை.. நீ எல்லாம் ஒரு பொண்ணா?” என்று கேட்டவளுக்கு கதவு தாழ் போடும் சத்தம் கேட்கவும், மெல்ல தனது கண்களின் மேல் இருந்த கட்டைத் தூக்கி, தனது வேலையை முடித்துக் கொண்டவள், அந்த இடத்தை நோட்டம் விட்டுப் பார்த்தாள். அங்கு ஒரு சிறிய ஜன்னல் இருக்கவும், அவளது மனதில் ஒரு சிறிய வெளிச்சம் தோன்றியது..      

ஜன்னலில் மெல்ல எம்பி எட்டிப் பார்த்தவளை, அந்த நடுயிரவின் நிசப்தமே வரவேற்றது.. அந்தச் சாலையே வெறிச்சோடி இருக்க, அது எந்த இடம் என்று அடையாளம் காண முயலத் துவங்கினாள்.  அவள் இருப்பது ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம் என்று அவளுக்குப் புரிய, அந்த இடத்தைச் சுற்றி ஆங்காங்கு பெரிய வீடுகளும், இடையிடையே காலி மனைகளும், சில ஃப்ளாட்களும் கண்ணுக்குத் தெரிய, ‘எங்கடா என்னைக் கொண்டு வந்து இருக்கீங்க? கை மாத்தி விடறதுன்னு சொல்றாங்களே.. அப்படின்னா என்ன?’ மனதினில் கேள்விகள் எழ, நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை வந்தது..

கார்த்திக்கின் அருகாமையை அவளது மனது தேட, ‘அப்பு.. என்னை இங்க இருந்து எப்படியாவது கூட்டிக்கிட்டு போயிடுங்க அப்பு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இவங்க என்ன என்னவோ சொல்றாங்க.. நான் நேத்து அவங்க கார்ல ஏறியே இருக்கக் கூடாது.. நீங்க முன்னவே சொன்னது போல உங்களை ரீச் பண்ண முடியலைன்னா, ஏதாவது எமர்ஜென்சின்னா நான் எஸ்.பி.க்கு கால் பண்ணி கூப்பிட்டு இருக்கணும்.. அவனும் அப்போ கொஞ்சம் முன்னாலா தானே ஆபீஸ் விட்டுக் கிளம்பினான்.. கூட இருன்னா வெயிட் பண்ணி இருப்பான் தானே.. எனக்கு அது அப்போ தோணவே இல்லையே.. இப்போ தோணி என்ன ப்ரயோஜனம்?’ மனதினில் வெதும்பியவள், வாயை மூடிக் கொண்டு கதறத் துவங்கினாள்..

மனதில் தான் பத்திரமாக அங்கிருந்து வெளியில் செல்ல வேண்டும் அல்லது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவளுக்கு, பாலகிருஷ்ணனும் சுதாவும் மனதில் தோன்றினர்..

தன்னைக் காணாமல் அவர்கள் என்ன பாடுபடுகிறார்கள், எப்படி இதைத் தாங்கிக் கொள்வார்கள் என்று நினைத்தவளுக்கு, நெஞ்சு வெடிப்பது போல மேலும் அழுகை வெடிக்க, சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டாள்..                  

அதற்குள் கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும், கண்களின் கட்டுக்களை சரி செய்துக் கொண்டவள், மெல்ல நடந்து, வேண்டுமென்றே அங்கிருந்த பக்கெட்டை காலில் உதைத்து சத்தம் செய்துவிட்டு, நன்றாக முகத்தைக் கழுவிக் கொண்டவள், கதவின் அருகே சென்று கதவைத் தட்டினாள்.  

“என்ன முடிஞ்சதா?” விசித்திரா கேட்க,

“ஹான்..” ஆதிரா அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொல்ல, அவள் கதவைத் திறக்கவும், அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்றவள், ஒரு இடத்தில் நிறுத்தி,

“இங்க உட்காரு..” என்று கட்டளையாகக் கூறிவிட்டு, அவளது கண்களில் இருந்த கட்டை அவிழ்த்துவிட,

“இதெல்லாம் கடவுளுக்கே அடுக்காது.. என்னை விட்டுருங்க.. நான் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யவே இல்லையே.. ப்ளீஸ் அக்கா.. எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே வயசானவங்க.. என்னைக் காணாம அவங்க தாங்க மாட்டாங்க.. துடிச்சிப்போயிடுவாங்க.. ப்ளீஸ் அக்கா.. கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. என்னை விட்டுடுவாங்க..” கையெடுத்துக் கும்பிட்டு ஆதிரா கெஞ்ச, அவளது கையை அப்படியேக் கட்டியவள்,

“உன்னை விடறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணித் தூக்கி இருக்கோம்.. உங்க அப்பா அம்மா வயசானவங்க தானே.. பரவால்ல.. உன்னைக் காணாம போய்ச் சேர்ந்தாலும் யாருக்கும் எந்த இதுவும் இல்ல.. மக்கள் தொகை குறையும்..” இலக்கமே இல்லாமல் பதில் சொல்லியவள்,  அவளது கால்களையும் இழுத்து,  கட்டிவிட, அப்படியே சரிந்து ஆதிரா கதறத் துவங்கினாள்.

“நீ எல்லாம் உயிரோட இருக்கும்போது எந்த தப்பும் செய்யாம, மத்தவங்களுக்கு அன்பு மட்டுமே கொடுக்கற அவங்க ஏன் சாகனும்?” அழுகையின் நடுவே ஆதிரா கத்தினாள்..

“என்ன சொன்ன? என்ன சொன்ன? நான் சாகணுமா? இன்னும் கொஞ்ச நாள்ல நீ என்ன கதி ஆகப் போறன்னு பாரு..” என்றவள், ஆதிராவைக் கன்னம் கன்னமாக அரையத் துவங்கினாள்.

ஆதிரா முகத்தைத் திருப்பவும், அவளை இழுத்து அமர வைத்தவள், அவளது கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொண்டே, “நீ ஃபாரினுக்கு போயிருக்கியா? கொஞ்ச நாள்ல போவ.. அங்கப் போய் நீ இருக்கப் போற இருப்புக்கு.. இந்த பேச்சு ஆகாதுடி..” என்றவளைப் பார்த்து ரத்தம் வழியும் உதட்டை ஏளனமாக பிடித்து,

“அது வரை நீங்க எல்லாம் இருந்தாப் பார்க்கலாம்..” என்று சொல்லவும், அவளது கழுத்தை விசித்திரா மேலும் நெரிக்க, ஆதிராவின் கால்களை உதற, விழிகள் மேலே சென்று ஒட்டிக் கொள்ள, அவளது கழுத்தில் இருந்து கையை எடுத்த விசித்திரா, அவளை எட்டி உதைத்துவிட்டுச் சென்றாள்.

அவள் கழுத்தை நெரித்ததில், அவளது தொண்டை வரண்டு இரும்பத் துவங்க, அவளது அருகே ஒரு பாட்டிலை வீசியவள், “முடிஞ்சா அதை எடுத்துக் குடி.. இல்ல இப்படியே செத்துப் போ..” நக்கலாக கூறிவிட்டு, கதவை அடைத்துக் கொண்டு செல்ல, இரும்பிக் கொண்டே ஆதிரா அந்த பாட்டிலைப் பார்த்தாள்..

தொண்டையின் வரட்சி வேறு அவளை பாடாய்ப்படுத்த, மெல்ல எழுந்து அமர்ந்தவள், தனது காலை நீட்டி, இரு பாதத்திற்கும் நடுவில் அந்த பாட்டிலை பிடித்து, மெல்ல தனது காலை மடக்கி தனது அருகில் இழுத்தவள், தனது கை விரல்களால் அந்த மூடியை திறந்தாள்.

பின்பு மெல்ல இரு கை விரல்களிலும் அந்த பாட்டிலைப் பிடித்து தூக்கியவள், அதை மெல்லத் திருப்பி தனது வாயில் சரித்துக் கொண்டாள். கடகடவென்று குடித்து முடித்தவள், தனது முட்டியில் முகத்தைத் துடைத்துக் கொள்ள, அவளது கால்களில் இருந்த அவளது கொலுசுகள் அவளது கண்ணில் பட்டது.. மெல்ல விரல்களால் அதை வருடியவளின் கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது..

“கார்த்திக்.. நீங்க எப்படியும் என்னைக் காப்பாத்திடுவீங்கன்னு தான் நான் என் உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கேன்.. எனக்கு உங்க குரல் கேட்குது கார்த்திக்.. ஏன் உங்களுக்கு என் குரல் கேட்கல? அப்போ எப்படி நான் இருந்த இடத்துக்கு சரியா வந்தீங்களோ.. அப்படியே இங்கயும் வந்திருங்க கார்த்திக்.. எனக்கு ஏதாவது அசிங்கம் நடக்கறதுக்கு முன்ன நான் என் உயிரையே விட்டுடுவேன்..” கண்ணீருடன் சொன்னவள் அந்த கொலுசையே வருடிக் கொண்டு கார்த்திக்கின் நினைவிற்குச் சென்றாள்..

அன்று மாமல்லபுரத்தில் நடந்த உலக அளவிலான நாட்டிய நிகழ்ச்சிக்காக ஆதிரா அவர்களது குழுவினருடன் சென்றிருந்தாள். அன்றைய நிகழ்ச்சிக்காக அவள் அந்த ஒரு மாதமாக கடுமையாக பயிற்சி செய்திருந்தாள்.. உலக அளவில் பல கலைஞர்கள் பங்குபெறும் அந்த நிகழ்ச்சிக்கு, உலகில் இருந்து பல சிறப்பு விருந்தினர்கள் வருகைத் தந்திருந்தனர்.. அதோடு முதல்வரும் அந்த விழாவிற்கு சிறப்பு வருகைத் தருவதாக இருக்க, அன்றைய தினத்தில் அவர்களது குழுவின் கலை நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது..

அன்றைய தினத்தைப் பற்றி அவள் ஆவலாகச் சொல்ல, கார்த்திக்கிற்கு சொத்தென்று ஆகியது.. அன்று அவன் ஒரு வழக்கிற்காக வேறு ஊருக்குச் செல்வதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.. அவன் வழக்கு முடிந்து, மீண்டும் மாமல்லபுரம் வந்து சேர்வது என்பது மிகவும் கடினமான காரியம்.. ஒருநாள் தங்கக் கூட நேரிடலாம் என்பது போன்ற நிலையில் அவன் இருக்க, ஆதிரா ஆவலாக அவனிடம் சொல்லவும், கார்த்திக் அவளை வருத்தத்துடன் பார்த்தான்..

அவன் அவ்வாறு பார்க்கவும், தனது பேச்சை நிறுத்தியவள், “என்ன ஆச்சு அப்பு? ஏன் இப்படி பார்க்கறீங்க?” புரியாமல் கேட்க,

“குட்டிம்மா.. என்னால அந்த ப்ரோக்ராம் பார்க்க வார முடியுமான்னு கூட தெரியலடா.. அன்னைக்கு நான் ஊருலயே இருக்க மாட்டேன்.. ஒரு கேஸ்க்காக நான் விழுப்புரம் வரை போக வேண்டி இருக்கு.. அதியமான் சாரோட கேஸ்..” கார்த்திக் சொல்லவும், அவளுக்கு சொத்தென்று ஆகியது..

“அப்போ உங்களால வர முடியாதா?” சோகமாக அவள் கேட்க,

“ரொம்ப கஷ்டம்டா கண்ணம்மா.. இப்படி அன்னிக்குன்னு வச்சிருக்காங்களே உன்னோட ப்ரோக்ராம்ம..” அவளது காலை எடுத்துத் தனது மடியில் வைத்து, அவளது பதத்தை மிதமாக அழுத்தி, வருடிக் கொண்டே சொன்னவன்,

“நான் வேணா சரவணன வரச் சொல்லி, லைவ்வா வீடியோ கால்ல பார்க்கவா? ஒண்ணு நான் ட்ரைவிங்ல இருப்பேன்.. இல்ல.. நான் ரூமுக்கு வந்திருப்பேன்..” வருத்தமாக அவன் சொல்ல, அவனிடம் இருந்து தனது காலை உருவிக் கொண்டாள்..

“போங்க.. நான் செய்யற பெரிய ப்ரோக்ராம் இது.. உங்க பொண்டாட்டி அவ்வளவு பெரிய ஸ்டேஜ்ல.. பெரிய ஆளுங்க முன்னால ஆடும் போது பார்க்க வேண்டாமா?” குறையாகக் கேட்க, கார்த்திக் தலையை நீவிக் கொண்டான்..

மீண்டும் அவளது பாதத்தை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டவன், “அம்மு.. நான் என்னால முடிஞ்ச வரை வரப் பார்க்கறேன்.. ஒருவேளை வர முடியலைன்னா.. அதுக்காகத் தான் நான் முன்னாலயே உன்கிட்ட சொல்லி வைக்கிறேன்..” என்றவன், மெல்ல அவளது பாதத்தைப் பிடித்து விட்டு,

“கால் எல்லாம் எப்படி சிவந்து இருக்குப் பாரு.. வீட்ல போய் நல்லா கால சுடு தண்ணியில வச்சு எடு.. அப்போ தான் வலிக்காது.. நான் வேணா வந்து உனக்கு சுடு தண்ணி எல்லாம் ரெடி செஞ்சுக் கொடுத்து ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்க, தனது காலை அவனிடம் இருந்து உருவிக் கொண்டவள்,

“முதல்ல நீங்க என் காலைப் பிடிக்கிறதே பிடிக்கல.. அத எடுத்தாலும் திரும்பத் திரும்ப எடுத்து மடியில வச்சிக்கறீங்க.. இதுல வீடு வர வந்து சுடு தண்ணி வச்சித் தரீங்களா? இதை எல்லாம் எங்க அம்மா பார்க்கணும்.. எனக்கு செமத்தியா திட்டு விழும்.. ஏன் மகாராணிக்கு அது கூட செஞ்சிக்க முடியாதான்னு என்னை போற்றி பாராட்டுவாங்க..” என்றவளைத் தனது தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“என் பொண்டாட்டிக்கு செய்யறதை யாரும் எதுவும் சொல்ல முடியாது..” எனவும், அவனது தோளிலேயே முட்டியவள்,

“எனக்கு தூக்கம் வருது அப்பு.. ரொம்ப டயர்ட்டா இருக்கு.. வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்க, ‘இதோடா..’ என்றவன், உடனே காரை எடுத்து அவளது வீட்டில் சென்று நிறுத்தினான்..

அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள், இறங்கி வீட்டின் உள்ளே செல்ல, கார்த்திக் அவளைப் பெருமையுடன் பார்த்தான்.. அவளது நடன நிகழ்ச்சிக்கான நாளும் வந்தது.. அதிகாலையிலேயே கார்த்திக் கிளம்பி விழுப்புரம் சென்றிருக்க, ஆதிரா நிகழ்ச்சிக்காக தயாரானதும் அவனுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினாள்.. அவனிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும்,

“இந்த மனுஷன் வரத் தான் இல்ல.. ஒரு போட்டோவுக்கு பதில் போட்டாத் தான் என்ன?” என்று நொடித்துக் கொண்டவள், மேடைக்குச் சென்றாள்..

நடன நிகழ்ச்சித் தொடங்க, அவள் கொடுத்ததாக கார்த்திக் கொடுத்திருந்த பாசை வைத்து, சரவணனும், அவர்களது தந்தை சதாசிவமும் அவளது நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர்.. மேடையில் ஏறியவளின் கண்கள் அங்கு கூடி இருந்த கூட்டத்தில் கார்த்திக்கைத் தேடியது.. அவளது விழிகள் அலைபாயத் துவங்கவும், அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சரவணனுக்கு கார்த்திக்கின் மேல் கோபம் வந்தது..

“இந்த வக்கீல் இன்னைக்கு கேஸ்க்கு போயே தீரணுமா? வாய்தா வாங்கிட்டு இங்க வரதுக்கு என்ன? அவ பாவம் அவனைத் தேடிட்டு இருக்கா..” தனது தந்தையிடம் சரவணன் பல்லைக் கடிக்க, அவளது முகம் சட்டென்று பிரகாசமுற, அவளது முக மாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது..

அவளது ஆடலைக் கண்ட சதாசிவம், “ரொம்ப அழகா ஆடறாடா சரவணா.. உங்க அண்ணியும் ரொம்ப அழகா இருக்கா.. இப்போ தான் தெரியுது உங்க அண்ணன் தலைக்குப்புற விழுந்த காரணம்..” என்று சொன்னவர், சரவணன் முறைக்கவும்,

“அது தான் அவ கூட நல்லபடியா வாழ வீடு வாங்கி இருக்கானே.. எல்லாம் அவன் நல்லா பார்த்துப்பான்.. சும்மா முறைக்காதே..” என்றுவிட்டு, நிகழ்ச்சியில் கவனத்தைப் பதித்தார்.

கூட்டம் அதிகமாக இருந்ததினால் நடனம் முடிந்ததும், சதாசிவமும், சரவணனும் கிளம்பி விட, தனது குழுவிடம் சொல்லிவிட்டு, ஆதிரா கார்த்திக்கிடம் ஓடினாள்..

“அப்பு.. நீங்க வந்துட்டீங்களா? எப்படி வந்தீங்க? வேலை முடிஞ்சிடுச்சா?” அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவள் கேட்க,

“ஆமாடா.. இன்னைக்கு கேஸ் முடிஞ்ச உடனே ஓடி வந்துட்டேன்.. நேரா இங்கத் தான் வரேன்.. நல்லவேளை நான் சரியான நேரத்துக்கு வந்துட்டேன்..” என்றவன், அவளை இழுத்துக் கொண்டு, மெல்ல அங்கிருந்து சைடில் இருந்த ஒரு இருக்கைக்கு அழைத்துச் சென்றான்..

அடுத்த நிகழ்ச்சி துவங்கி விட, அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளைத் தனது அருகே அமர்த்திக் கொண்டவன், “உன்னோட காலை நீட்டு..” என்று சொல்லவும்,

“ஹையோ கார்த்திக்.. இங்கயும் உட்கார்ந்து பிடிச்சு விடப் போறீங்களா? உங்க அன்புத் தொல்லை தாங்க வில்லை..” அவள் சந்தோஷ சலிப்புடன் சொல்ல, மறுப்பாக தலையசைத்தவன், கீழே குனிந்து, மெல்ல அவளது காலில் கொலுசை மாட்ட, ஆதிரா அவனைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஒரு காலை அவன் மாட்டி முடிக்கவும், அடுத்த காலை அவள் நீட்ட, “பிடிச்சிருக்கா?” கார்த்திக் கேட்க,

“ரொம்ப அழகா இருக்கு கார்த்திக்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நீங்க வந்ததே சப்ரைஸ்.. இதுல கொலுசு வேற வாங்கிட்டு வந்திருக்கீங்க..” என்றவள், இரண்டு கால்களையும் முன்னால் நீட்டி, மெல்ல கால்களை ஆட்டிக் காட்ட, கார்த்திக் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.. 

“ஏதோ இந்த அழகான காலுக்கு என்னோட சின்ன கிஃப்ட்.. எப்பவுமே நீ ஏன் கொலுசு போட மாட்டேங்கறீங்கன்னு யோசிப்பேன். இப்போ அந்தக் குறையும் தீர்ந்துடுச்சு..” என்றவனுக்கு அவளது பாதத்தைத் தொட ஆசையாக இருக்க, இருக்கும் இடத்தை உணர்ந்து தன்னை அடக்கிக் கொண்டவன்,

“உனக்கு முடிஞ்சதா? முடிஞ்சா வா.. நாம வீட்டுக்குக் கிளம்பலாம்.. மணி இப்போவே ஒன்பது ஆகுது.. இந்த சைட் ரொம்ப ட்ராபிக்கா இருக்கு.. நானே அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன்.. இப்போ கிளம்பினா தான் நாம வீட்டுக்கு போக நேரம் சரியா இருக்கும்..” என்று கேட்க, அவனது முகத்தைப் பார்த்தவள்,

“இப்போ உங்களுக்கு என் கால பிடிச்சு விடணும்.. அது தானே..” என்று கேட்க, கார்த்திக் அவளைப் பாவமாகப் பார்க்கவும்,

“இது என்ன பழக்கம்ன்னே தெரியல உங்களுக்கு.. ஆனா.. அது இப்போ முடியாது கார்த்திக்.. ப்ரோக்ராம் எல்லாம் முடியணும்.. இன்னும் ஒரு நாலு டான்ஸ் தான் இருக்கு.. நீங்க கிளம்புங்க.. நான் அவங்க கூட வந்துடறேன்..” அவள் சொல்ல, மறுப்பாக தலையசைத்தவன்,

“பரவால்ல.. வெயிட் பண்ணி உன்னைக் கூட்டிக்கிட்டே வீட்டுக்கு போறேன்..” என்றவன், அன்றைய நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்ததும், அவளைக் கையோடு அழைத்துச் சென்று, வீட்டில் விட்டு, அவளது பாதத்தையும் பிடித்து விட்ட பிறகே அவன் கிளம்பி வீட்டிற்குச் செல்ல, ஆதிரா அவனது அன்பில் நெகிழ்ந்து போனாள்..

அன்றைய நாள் நினைவுகளில் அவளது கண்களில் கண்ணீர் அதிகரிக்க, தனது முட்டியில் முகத்தைப் புதைத்துக் கொண்டவள், கண்ணீரில் கரையத் துவங்கினாள்..