எங்கே எனது கவிதை – 21

th (3)-a6afed1c

21        

மயக்கத்தில் கிடந்த ஆதிராவின் கைகள் கொலுசையே பிடித்திருக்க, அதை அவள் இருந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் வழியாக பார்த்துக் கொண்டிருந்த ஆதவனிற்கு ஒரு எண்ணம் தோன்றியது.

அதற்கு உடனே ஏற்பாடு செய்தவன், விசித்திரா நன்றாக உறங்கிக் கொண்டிருக்கவும், மெல்ல கதவை அடைத்துவிட்டு, ஆதிரா இருந்த அறைக்குள் நுழைந்தான்.. அவனது கண்கள் அவள் மயங்கிக் கிடக்கும் அழகை ரசிக்கத் துவங்கியது.

“என்ன அழகுடி நீ.. உன் கண்ணு இருக்கே கண்ணு.. அது உன்னை க்ராஸ் பண்ணும்போது எல்லாம் என் மனசை அப்படியே ஈட்டி போல க்ராஸ் பண்ணும் தெரியுமா? என்ன கண்ணு அது? விசித்திரா கண்ணு எல்லாம் எப்போ பாரு தண்ணி அடிச்சா போலவே இருக்கும்..” என்றவனின் பார்வை, அவளது தலை முதல் கால் வரை நிறுத்தி நிதானமாக வருடியது..

“ஆமா.. உன் ஆளும் நல்லா தான் இருக்கான். பார்க்க ஹீரோ மாதிரி தான் இருக்கான்.. உன் மேல அவனுக்கு அவ்வளவு லவ்வா? ஒருவேளை நீ கிடைக்கலைன்னா தேவதாசா மாறிடுவானா என்ன? இல்ல உயிரையே விட்டிருவானா? என்னை அடிக்க கை ஓங்கறான்.. என்னை முறைக்கிறான். பெரிய இவனா அவன்? என்ன தெனாவட்டு இருக்கணும்? அவனை நான் எப்படி துடிக்க வைக்கிறேன் பாரு.. அதை உனக்கு வீடியோ எடுத்துக்காட்டறேன்.. நீயும் நானும் அதைப் பார்த்து என்ஜாய் பண்ணலாமா?” என்று கேட்டவன், அவளைத் தொடப் போகும் நேரம்,

“என்னப் பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே விசித்திரா அங்கு வந்தாள்..

அவளைத் திரும்பிப் பார்த்தவன், ‘உஷ்..’ என்று வாயில் விரல் வைத்து அடக்கிவிட்டு, அவள் அருகில் சென்றவன்,

“நாங்க ஒரு பிளான் பண்ணி இருக்கோம்.. அதுக்கு அவக்கிட்ட இருக்க ஒரு அடையாளம் வேணும்.. அதுக்குத் தான் வந்தேன்..” என்றவன் தனது திட்டத்தைக் கூறி,

“அவளோட டிரஸ்சை மாத்தச் சொல்லி வாங்கு..” எனவும், அதைக் கேட்ட விசித்திரா தலையில் அடித்துக் கொண்டாள்..

“உனக்கு ஏதாவது அறிவு இருக்கா? நீயே அந்த அய்யா சொல்றபடி, ஒரு பிணத்தைப் போட்டு எரிக்கப் போறேன்னு சொல்ற? அதுக்கு இதோட டிரஸ் போட்டா.. அந்த டிரஸ் அதோட சேர்ந்து எரியாதா? வேணா அவ கைல இருக்கற வளையலோ, இல்ல கால்ல இருக்கற கொலுசையோ போடுங்க.. சில சமயம் அது ஒழுங்கா எரியாது.. அவ தான்னு அவங்களை நம்ப வைக்கும்..” விசித்திராவின் யோசனையில், அவளது இதழ்களில் இதழ் பதித்தவன்,

“நீயும் செமையா ட்யூன் ஆகிட்ட என் பொண்டாட்டி.. ரொம்ப சரியா யோசிக்கற.. உன்னை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கிட்டதுக்கு இது ஒரு யூஸ்..” என்று கொஞ்சிவிட்டு, ஆதிராவின் காலை மெல்ல பிடித்து, கொலுசை கழட்டத் துவங்கினான்..

அவனது விரல் பட்டதும், பட்டென்று கண் விழித்தவள், தனது காலைக் குறுக்கிக் கொண்டு, “என்ன செய்றீங்க?” என்று பதற,

“உன்னோட கொலுச கழட்டறேன்..” என்ற ஆதவன், அவளது காலை இழுத்து, அவளது இரண்டு கொலுசுகளையும் கழட்ட, அதுவரைத் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா,

“என் கொலுசை கழட்டாதீங்க.. அதைத் தொடாதீங்க..” என்று தடுக்கப் பார்க்க, அவளது கன்னத்தில் பட்டென்று ஒரு அரை விட்டவன்,

“இதை வச்சு விளையாடப் போறேன்..” என்றவன், அவளது கொலுசை கழட்டி எடுத்து, அதைத் தூக்கிப் பிடித்து அவளைப் பார்க்க, கண்களில் கண்ணீருடன்,             

“என்னோட கொலுச எங்க எடுத்துட்டு போறீங்க? எனக்கு அதைக் கொடுங்க.. அது எனக்கு அவரு ஆசையா கொடுத்தது.. ப்ளீஸ்.. அதை என்கிட்டே கொடுத்திருங்க.. அது என் உயிரு..” என்றவள் கையெடுத்து கும்பிட, ஆதவன் இலக்கமின்றி அவளைப் பார்த்து குரூரச் சிரிப்பு சிரித்து,

“அந்த வக்கீல் கதறலை வீடியோ எடுத்துட்டு வரேன்.. நீயும் நானும் பார்த்து என்ஜாய் பண்ணலாம்..” என்றவன், அங்கிருந்து விலகிச் செல்ல, ஆதிரா கதறத் துவங்கினாள்..

“அவரு ரொம்ப பாவம்.. அவரை ஏன் இப்படி டார்ச்சர் செய்யறீங்க? அந்தக் கொலுசு எனக்கு அவரு ஆசையா தந்தது. என்கிட்டே அந்த கொலுசைத் தந்திருங்க.. கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. எனக்கு அந்த கொலுசு வேணும்..” என்றவள், கண்ணீருடன் அப்படியே தரையில் சரிந்து கதறத் துவங்கினாள்..

அவளைப் பார்த்துவிட்டு விசித்திரா அவனுடன் செல்ல, “நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா அவரு கிட்ட மாட்டுவீங்க? அப்போ இருக்கு உங்களுக்கு..” என்றவளின் மனம் முழுவதும், கார்த்திக்கும், தனது பெற்றவர்களும், அந்த சதியில் சிக்கி என்ன பாடுபடப் போகிறார்கள் என்ற கவலை எழ, அதுவும் சேர்த்து அவளது அழுகையை அதிகப்படுத்தியது..

அவள் அழுது கரைந்துக் கொண்டிருக்க, சில மணி நேரத்திற்குப் பிறகு, அங்கு வந்த விசித்திரா, “உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தரேன்.. பாத்ரூம்க்கு போயிட்டு வா..” என்று சொல்லவும், ஆதிரா அதிர்ந்து அவளைப் பார்த்தாள்..

“ஏன் இப்படி செய்யறீங்க? நான் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன்க்கா.. நீங்க அப்பப்போ ஆசையா சாப்பாடு கொடுத்தது எல்லாம் இதுக்குத் தானா? இப்போ எனக்கு அந்த சோறு எல்லாம் விஷமா இருக்கே..” ஆதிரா கண்ணீருடன் கேட்க, அவளது கால்களிலும், கைகளிலும் இருந்த கட்டுகளை எடுத்து விட்ட விசித்திராவைப் பார்த்து ஆதிரா கேட்டுக் கொண்டே எழுந்து நின்றாள்..

“ஆமா.. உனக்கு அந்த ஆளு மேல அவ்வளவு லவ்வா?” விசித்திரா கேட்க,

“உங்களுக்கு உங்க புருஷனை பிடிக்குமா?” ஆதிரா பதிலுக்கு நக்கலாகக் கேட்டாள்..

“எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் அவரை ஒரு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன்.. அவருக்காக வீட்ல அவ்வளவு சண்டைப் போட்டு வீட்டை விட்டு வெளிய வந்தேன் தெரியுமா?” விசித்திரா பெருமையாகச் சொல்ல, அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்து, அவளது அருகே வந்த ஆதிரா,

“நானும் அவரும் ஆறு மாசமா தான் லவ் பண்றோம்.. அவரைப் பார்த்ததும் எங்க வீட்லையும் ஒத்துக்கிட்டாங்க.. அவரு என்னை லவ் பண்றதைக் கூட என் பெத்தவங்க மூலமா தான் சொன்னாரு.. எங்க பெத்தவங்களுக்கு அவரை மறுக்க எந்த காரணமும் இல்ல.. ஏன்னா அவரு குணம் அப்படி.. எங்க அப்பாம்மாவுக்கு ஒரு பையனா அவரு கவனிக்கிறாரு.. அப்போ எப்படி எங்க அப்பா அம்மா வேண்டாம்ன்னு சொல்லுவாங்க..” என்று நக்கலாகச் சொன்னவள், விசித்திரா வாயடைத்துப் போய் நிற்கையிலேயே, 

“அவரு என் மேல அவ்வளவு அன்பு வச்சிருக்கார்.. அந்த அன்பு தான் நான் இருக்கற இடத்துக்கு அவரை இழுத்துட்டு வந்துச்சு.. இத்தனைக்கும் அவருக்கு அந்த ஃப்ளாட்ல இருக்கற ரூம் கூடத் தெரியாது.. எப்படி அவரு வந்தார் பார்த்த இல்ல. அது தான் லவ்.. நானும் லவ் பண்றேன்.. வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்றது பெருமை இல்ல.. உங்க அப்பா அம்மா வேண்டாம்ன்னு சொன்னா அதுல அர்த்தம் இருக்கும்ன்னு நீ யோசிக்கலயே..” என்று ஏளனமாகக் கேட்க,

“அப்போ உங்க அப்பா அம்மா அந்த வக்கீலை வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா நீ பேசாம இருந்திருப்பியோ?” விசித்திரா நக்கலாகக் கேட்டாள்..

“எங்க அப்பா வேண்டாம்ன்னு சொல்றது போல இருக்கற ஆள் கூட பழகற அளவுக்கு நான் புத்தி இல்லாதவ இல்ல.. நான் அவரோட குணத்துலயும், அவர் என்னை நடத்தற விதத்துலையும் தான் என் மனசை கொடுத்தேன்னு அவருக்குத் புரியும். நான் கண்டவங்களையும் வீடு வரை கூட்டிட்டு வந்து நிக்க மாட்டேன்னு அவங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கை.. என்னை விட அவரை அவங்களுக்குப் பிடிச்ச காரணம் அவரோட நடத்தையும் குணமும் தான்.. அப்படியே எங்க அப்பா அம்மா வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா.. அவங்களுக்கு அவரு நல்லவருன்னு ப்ரூவ் பண்ணி, அவங்க சம்மதம் வாங்கற வரை வெயிட் பண்ணி இருப்பேன்.. அவரும் அப்படித் தான் இருப்பாரு.. ஏன்னா என்னை ஒரு துரும்பும் அண்டாம வளர்த்த என் பெத்தவங்களுக்கு அது நான் செய்யற கடமை.. உன்னைப் பெத்தவங்களுக்கு நீ என்ன செஞ்ச??” என்று உதட்டைப் பிதுக்கியவள்,           

“உன் புருஷன்கிட்டப் போய் உனக்கு பிடிச்சது எல்லாம் கேட்டுப்பாரு.. அவரு சொல்றாரான்னு.. அதே போய் என் கார்த்திக் கிட்ட கேட்டுப்பாரு.. ஒண்ணு விடாம சொல்லுவார்.. என்னோட ஒவ்வொரு அசைவுக்கும் அவரு காரணம் சொல்லுவார்..” கர்வமாகச் சொன்னவள்,

“புருஷன் தப்பான வழிக்கு போனா அதை தடுத்துத் திருத்தணும்.. இப்படி கூடச் சேர்ந்து அக்கிரமம் பண்ணக் கூடாது.. இது நீ உன்னைப் பெத்து வளர்த்தவங்களுக்கு செய்யற துரோகம்.. அவங்க பேரைக் கெடுக்கற..” என்றவள்,

“உங்களை எல்லாம் அவர் கண்டுப்பிடிக்கிற அன்னைக்கு உங்களுக்கு இருக்கு.. நீங்க அவரோட ராங் நெர்வ்ஸ்ல கையை வச்சு இருக்கீங்க.. உன்னைக் கூட பொண்ணுன்னு பார்த்து அவர் ஸ்பேர் பண்ண மாட்டார்.. இதுல உன் புருஷன..” என்று ஏளனமாக புன்னகைத்தவள், விசித்திரா அவளை முறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, நடந்துச் சென்று, பாத்ரூமினுள் புகுந்துக் கொண்டாள்..

ஆதிராவின் உள்ளத்தில் கோபம் பொங்கியது.. ‘கார்த்திக்.. அவன் என்னோட கொலுசை பிடுங்கிட்டு போயிட்டான்.. அவனை சும்மா விடாதீங்க..’ என்று மனதினில் சொன்னவள், மீண்டும் ஓசை எழுப்பாமல், அந்த பாத்ரூம்மில் இருந்த ஜன்னலின் வழியாக வெளியில் பார்க்க, அந்த வழியாக போலீஸ் வாகனம் செல்வது அவளது கண்ணில் பட்டது.. தனது கையை மெல்ல அசைத்து தனது இருப்பைக் காட்ட அவள் முயல, ஒருபக்கம் அவளுக்கு பயமும் தொற்றிக் கொண்டது.. எங்கேயாவது ஆதவனின் கண்ணில் பட்டு மீண்டும் அடித்து விடுவானோ என்று அஞ்சியவள், மெல்ல தனது காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு, முகத்தைக் கழுவிக் கொண்டு நின்றாள்..

அவளது உள் மனதில் ஏதோ ஒரு எண்ணம்.. கார்த்திக்கும் அங்கு தான் இருப்பான் என்று தோன்ற, மெல்ல மீண்டும் எட்டிப் பார்க்க, அவளுக்கு எதுவும் தென்படாமல் போனது. அதற்குள் வெளியில் கதவு தட்டப்பட்டு, “அஞ்சு நிமிஷம் ஆகிருச்சு..” என்ற விசித்திராவின் குரல் கேட்க,

“இதோ வரேன்..” என்றவள், களைப்பு போக மீண்டும் ஒருமுறை நன்றாக முகத்தை கழுவிக் கொண்டு கதவைத் திறக்க, விசித்திரா அங்கு நின்றுக் கொண்டிருந்தாள்..

“என்ன உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருந்தியா?” நக்கலாக விசித்திரா கேட்க,

“ஹ்ம்ம்.. என் விதியை நினைச்சு அழத் தானே முடியும்..” என்ற ஆதிரா, மெல்ல சென்று தனது இடத்தில் அமர்ந்து, கால்களில் முகத்தை புதைத்துக் கொள்ள, விசித்திராவின் செல்போன் இசைக்கத் துவங்கியது..

“போ.. போய் போனை எடு. யார் குடியைக் கெடுக்கலாம்ன்னு உன் புருஷன் சொல்லுவான்.. கூட போய் கெடுத்துட்டு வா..” ஆதிராவின் நக்கலில், அவளது முடியைப் பிடித்து இழுத்த விசித்திரா,

“ஹலோ..” என்று சொல்லவும்,

“இவ்வளவு நேரம் போனை எடுக்காம என்ன வெட்டி வேலைப் பார்த்துட்டு இருந்த? அறிவில்லாதவளே.. அவசரம் புரியாம தத்தி மாதிரி இருக்க? உன்னை எல்லாம் கல்யாணம் செஞ்சதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்..” என்று சத்தமிட, ஆதிராவைப் பார்த்துவிட்டு, அவள் அதை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் செல்ல, ஆதிரா தனது பாதத்தை வருடிப் பார்த்தாள்..

சில நிமிடங்களில் வேகமாக உள்ளே வந்த விசித்திரா, “ஏய்.. எழுந்திருடி..” என்று அவளை அதட்ட, தலையை நிமிர்த்திப் பார்த்தவளின் முகத்தைப் பார்த்தவள்,

“ஏய் உன் கண்ணுல இருந்த கட்டு எங்க?” என்று கேட்க,

“அது உன் புருஷனைக் கேளு.. அடிச்ச பொழுது கீழே விழுந்திருச்சு.. நீ திரும்பவும் கட்டவே இல்ல.. மறந்துட்ட..” என்றவள்,

“என் கையையும் நீங்க கட்டவே இல்ல..” என்று நினைவுப்படுத்த, அவளது நக்கலான பேச்சில், விசித்திரா, அவளது கையைப் பிடித்து இழுத்துத் தூக்கினாள்.

ஆதிரா எழுந்து நிற்கவும், அவளது உடலில் கை வைத்து விசித்திரா சோதனை செய்ய, அவளது கையைத் தட்டி விட்டவள், “என்ன செய்யறீங்க? ச்சே.. என்னைத் தொடாதே..” என்றபடி அவளை விட்டு விலக,

“ஏய்.. உன்கிட்ட போன் ஏதாவது இருக்கா? இருந்தா மரியாதையா கொடுத்திரு.. அனாவசியமா அதை ஒளிச்சு வச்சிக்கிட்டு உயிரை விட்டுடாதே.” என்று எச்சரிக்கை செய்ய,

“இல்ல.. இல்ல.. இல்ல.. என்கிட்டே எதுவுமே இல்ல.. அது தான் என்கிட்டே லாக் ஓபன் பண்ணி பார்த்து வாங்கிட்டு போனீங்களே.. அது ஒண்ணு தான் என்கிட்டே இருக்கற ஒரே மொபைல்..” ஆதிரா சத்தமிட, அவளது வாயில் அடித்த விசித்திரா,

“அப்பறம் எப்படிடி உன் புருஷன் இங்க வந்து அய்யனார் போல முறைச்சுப் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கான்.. அது எப்படி இந்த ஊருல அத்தனை இடம் இருக்கும்போதும் இந்த ஏரியால வந்து உட்கார்ந்து இருக்கான்? அந்த மாடிக்கு வந்ததும் அப்படித் தானே..” கோபமாகக் கேட்க, உதிரம் வழிந்த உதடுகளில் ஆதிராவிற்கு புன்னகை மலர்ந்தது..

“என்னது? என் கார்த்திக் இங்க வந்துட்டாரா?” ஆவலுடன் கேட்க,

“ஆமா.. அவன் இங்க தான் என்னவோ தவம் பண்ற முனிவர் போல உட்கார்ந்து இருக்கான்.. சொல்லு அவனுக்கு எப்படித் தகவல் சொன்ன?” என்று கோபமாக அவளைப் பிடித்து விசித்திரா உலுக்க,

“இங்க இருந்து..” என்று தனது இதயத்தைத் தொட்டுக் காட்டியவள், மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து, தனது காலில் முகம் புதைத்துக் கொள்ள, விசித்திரா அவளைத் திகைப்பாகப் பார்த்துக் கொண்டே நின்றாள்..

“இங்கன்னு இல்ல.. நீ எங்க கொண்டு போனாலும் அவர் என்னைத் தேடி வருவார்.. அது மேலோகமா இருந்தாலும்..” என்று அவள் சொல்லிவிட்டு, விசித்திராவை கர்வமாகப் பார்க்க,

“கொஞ்ச நேரத்துல அவன் பரலோகம் போறத நீ பார்க்கத் தானே போற..” என்றவள், ஒரு ஏளனப் புன்னகையை சிந்திவிட்டுச் செல்ல, ஆதிரா நடுங்கிப் போனாள்..            

“திரும்பவும் சொல்றேன்.. அவரை ஒண்ணும் பண்ணிராதீங்க.. பண்ணி செத்துப் போகாதீங்க.. இது உங்களுக்கான எச்சரிக்கை..” என்று கத்தியவள், விசித்திரா படபடவென்று மாடிக்கு ஓடிச் செல்வது தெரிய, ஆதிராவிற்கு மனதிற்குள் கார்த்திக்கின் மேல் அன்பு பெருகியது..

“டேய் குண்டா.. என் செல்ல அப்பு.. ஐ லவ் யூ டா..” என்று அங்கிருந்தே அவனுக்கு பறக்கும் முத்தத்தைத் தந்தவள், அவளது கழுத்தில் இருந்த செயினை வருடினாள்..

“இது நான்.. உன் கூட எப்பவுமே இருக்கறத சொல்ற ஒரு சின்ன அடையாளம்டா கண்ணம்மா.. என்னோட நினைவு உன்கிட்ட தான் இருக்கு.. நான் உன்னோட சொந்தம்.. நீ எனக்கு சொந்தம்ன்னு சொல்ற ஒரு சின்ன உறுதி..” என்றவன்,

“என்னோட முதல் சம்பளத்துல நான் வாங்கினது இது..” என்று சொல்லவும், ஆதிரா குழப்பமாகப் பார்க்கவும்,

அவளது கண்களில் இதழ்களை ஒற்றிக் கொண்டே, “என்னவோ தெரியல.. ஒரு நியாபகார்த்தமா அந்த முதல் மாச சம்பளத்தை எடுத்து வச்சிருந்தேன்.. அதோட என்னோட முதல் கேஸ்சோட ஃபீஸ்ல ஒரு பகுதியையும் நான் நியாபகமா எடுத்து வச்சிருந்தேன்.. அது தான் இப்போ உனக்கு வாங்கினேன்.. பிடிச்சிருக்கா..” என்று கேட்கவும், அவனது மார்பில் புதைந்தவள்,

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று அவனது மார்பில் இதழ் பதிக்க, கார்த்திக் அவளை இறுக அணைத்துக் கொண்டான்..

அந்த நாள் நினைவுகளில், அந்தச் செயினை மெல்ல வருடியவள், “நீங்க என் கூட தான் இருக்கீங்க கார்த்திக்.. அந்த தைரியத்துல தான் நான் இருக்கேன்.. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிட்டு போங்க.. எனக்கு உங்களைப் பார்க்கணும்.. உங்களை போன்ல கூட பார்க்க முடியாம இருக்கு.. எனக்கு உங்க ஹக் வேணும்..” என்றவள், அவசரமாக அந்த செயினில் இருந்து கையை எடுத்துக் கொண்டு,

“இந்த கையை இதுல வச்சு இருக்கறதை பார்த்தா இதையும் அந்த எரும கழட்டிட்டு போயிருவான்.. இது எனக்கு வேணும்..” என்றவள், பசியெடுக்க, விசித்திரா அவளிடம் கொடுத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த மிச்சத் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு, அப்படியே படுத்துக் கொண்டாள்.

சிறுது நேரத்தில் அங்கு வந்த ஆதவன், “ஏய்.. எழுந்து உட்காரு..” என்று அதட்ட, கண்களைத் திறந்துப் பார்த்தவள்,

“என்ன?” என்று எழுந்துக் கொண்டு கேட்க, அவளது கையில் ஒரு போனைத் திணித்தவன்,

“இதைப் பாரு.. பார்த்து ரசி.. நான் நேர்ல பார்த்து ரொம்ப ரசிச்சேன்..” என்ற ஆதவன், சிரித்துக் கொண்டே, அவள் அருகில் இருந்த ஒரு சேரில் அமர்ந்தான்..

அந்த வீடியோவைப் பார்த்த ஆதிராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்பதும், அதில் இருந்து தனது தந்தையும், சரவணனும் இறங்குவதையும், சித்தார்த்தைப் பார்த்தவள், (இவரு தெய்வா ஹஸ்பண்ட் இல்ல) என்று மனதினில் நினைத்துக் கொண்டு வீடியோவைப் பார்க்க, அவன் கார்த்திகை வலுக்கட்டாயமாக வெளியே அழைப்பதும் தெரிந்தது..

வெளியே இறங்கிய கார்த்திக், சிறு பிள்ளைப் போல எதுவோ கெஞ்சுவதும், அதியமானும், மதியும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதையும், அதற்கு முன், தனது தந்தை மயங்கிச் சரிவதையும் பார்த்தவள், கதறத் துவங்கினாள்..

“ஹையோ.. அப்பா.. நான் இங்க உயிரோட இருக்கேன்.. அப்பா.. அப்பா.. இங்க இருக்கேன்..” என்று அந்த வீடியோவில் விரலை வைத்து வருடிக் கொண்டே கதற,

“எப்படி இருக்கு இந்த படம்.. அடுத்து ஒருத்தன் அழுவான் பாரு.. இன்னும் நல்லா இருக்கும்..” என்று ஆதவன், எக்காளம்மிட, அந்த நேரம் கார்த்திக், அந்த பிணத்தின் அருகில் வந்தான்..

அதைக் கண்டவள் மேலும் துடிக்கத் துவங்கினாள்.. “கார்த்திக்.. நான் உங்களை விட்டு போயிட்டேன்னு நினைச்சிட்டீங்களா?” அவளது கண்ணீர் அதிகரிக்க, ஆதவன் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்..

அவளது கண்களை கண்ணீர் மறைக்க, கார்த்திக்கைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த மனது, அவனது கதறலைப் பார்க்க முடியாமல் தவித்தது..  

‘கார்த்திக்.. நான் செத்துட்டேன்னு நம்பிட்டீங்களா? அதை நீங்க எப்படித் தாங்கப் போறீங்க?’ என்று மனதினில் நினைத்தவள், அந்த போனை கீழே வைக்க,

“இப்போ கீழ வச்ச.. அவன் நாளைக்கு வெளிய போகும்போது ஒரு லாரிய வச்சு இடிச்சுத் தள்ளிடுவேன்.. இப்போ நீ அதைப் பார்க்கற..” என்று ஆதவன் மிரட்ட, ஆதிராவிற்கு நெஞ்சுக்குள் பயப்பந்து சுழலத் துவங்கியது..

“இப்போ நீ பார்க்கப் போறியா இல்லையா?” ஆதவன் மிரட்ட, பயத்துடன் ஆதிரா அந்த மொபைலை கையில் எடுத்தாள்.

அப்பொழுது கார்த்திக் அழுதுக் கொண்டே அந்த பிணத்தில் கால்களில் இருந்த கொலுசை வருடி, அதன் பாதத்தைப் பிடிக்க, அதைப் பார்த்த ஆதிராவின் அழுகை மட்டுப்பட்டது..

உடனே தன்னை சுதாரித்து, பட்டென்று அந்த மொபைலை கீழே போட்டு, தனது முட்டியில் முகத்தைப் புதைத்துக் கொண்டவளின் கண்களில் கண்ணீர்.. கார்த்திக் கால்களைத் தொடவுமே, அவன் அது தான் இல்லை என்று கண்டுப்பிடித்து விடுவான் என்று அவள் யூகிக்க, அதனால் ஏற்பட்ட சந்தோஷத்தை அவனிடம் காட்டி விடாமல் இருக்க, தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள்..

அவள் அவ்வாறு முகத்தைப் புதைத்துக் கொள்ளவும், “எப்படி? அவன் துடிக்கிறது எப்படி இருக்கு? நல்லா இருக்கு இல்ல. அங்க போலீஸ் எல்லாம் ஏதோ இதைப் பார்த்துட்டு இருக்காங்க.. அவன் என்னவோ ஓடிப் போய் புதருக்கு பின்னால நாய் மாதிரி ஒன்னுக்கு இருக்கான்.. அழறதை கூட ஒழுங்கா அவனால செய்ய முடியல.. இவனை எல்லாம் நீ எப்படி லவ் பண்ற? இவன் எல்லாம் ஒரு லாயரா?” என்று கேலியாகக் கேட்க, ஆதிரா முகத்தை நிமிராமல், மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..

“அந்த ஆளை இழுத்துட்டு வந்து ஏதோ இதுல சைன் பண்ணினாங்க.. அந்த ஆளுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு தெரியுமா? உன்னோட அப்பனையும் அது நீ இல்லன்னு இழுத்துட்டு போறான்.. அந்த போலீஸ் சைன் வாங்கிட்டு கூட கூட்டிட்டு போனாங்க.. பாவம் உன் அப்பனும் புருஷனும் அந்த அநாதை பிணத்துக்கு மாலை போட்டு, ஒப்பாரி வச்சிட்டு காரியம் செய்ய ஏற்பாடு பண்ணிட்டு இருப்பாங்க.. அப்பறம் உன் படத்துக்கு மாலையைப் போட்டுட்டு உங்க அப்பன் சோகமா வேலையைப் பார்க்கப் போயிருவான். உன் புருஷன் வேற ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்துப்பான்.. அப்பறம் எனக்கு நீ..” ஆதவன் தனது வக்கிர முகத்தைக் காட்ட, முகத்தை முட்டியில் புதைத்துக் கொண்டிருந்த ஆதிராவின் முகத்தில் புன்னகை அரும்பியது..

மெல்ல ஆதவன் நம்புவதற்காக விசும்புவது போல நடித்தவள், “என்னை சீக்கிரம் வந்து கூட்டிட்டு போங்க கார்த்திக்.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு..” மனதினில் கூறியவள், அதே நிலையில் இருக்க, அதைப் பார்த்த ஆதவன், திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..