எங்கே எனது கவிதை – 23

th-9d810f1e

23    

விசித்திராவும் ஆதவனும் சண்டைப் போட்டுக் கொண்டே சென்றதில் ஆதிரா இருந்த அறைக்கதவை தாழ் போட மறந்துவிட, அவர்களைப் பின் தொடர்ந்து வந்திருந்த குழந்தை, மெல்ல அந்த அறையை எட்டிப் பார்க்க, அங்கிருந்த ஆதிராவைப் பார்த்து, அதற்கு சந்தோசமாகிப் போனது.. 

“அக்கா..” என்று அழைத்துக் கொண்டு, குழந்தை ஆதிராவின் அருகே வர, அந்தக் குழந்தையைப் பார்த்த ஆதிராவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது..

‘இந்தக் குழந்தையை வச்சுத் தானே அந்த விசித்திரா என்கிட்டே பழகினா? இந்தக் குழந்தையை வச்சே அவங்களை பிடிக்க வைக்கிறேன்.. எப்படியாவது இந்தக் குழந்தையை வெளிய அணுப்பிடனும்..’ என்று மனதிற்குள் நினைத்தவள், சில நொடிகள் யோசித்து  

‘அவனுக்கு வெளிய போய் விளையாடணும்ன்னு ரொம்ப ஆசை இல்ல.. அடிக்கடி அவன் அதுக்குத் தானே வெளிய ஓடி வருவான்.. அப்போ தான் விசித்திரா வெளிய எல்லாம் போய் விளையாடினா போலீஸ் பிடிச்சிட்டு போயிடும்ன்னு சொல்லி பயமுறுத்துவா.. இப்போ நான் அதையே செய்ய வைக்கிறேன்.. இவன்கிட்ட எப்படியாவது பேசி, இவனை அவங்களுக்குத் தெரியாம வெளிய அணுப்பிடனும்..

கண்டிப்பா இத்தனை நேரம் கார்த்திக் இந்த குடும்பத்தோட ஜாதகத்தையே கண்டுப்பிடிச்சிருப்பார்.. போலீஸ் கிட்ட சொல்லியும் அலெர்ட் பண்ணி இருப்பார்.. இந்த குழந்தையைப் பத்தின அடையாளத்தையும் சொல்லி இருப்பார்.. கண்டிப்பா ஏதாவது நான் செய்யணும்.. இங்க உள்ள உட்கார்ந்துக்கிட்டு அழுதுட்டு இருக்கறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல.. மூளையைத் தட்டி அவனை என்ன சொல்லி வெளிய அனுப்பறதுன்னு யோசி..’ மனதினில் நினைத்துக் கொண்டவள், குழந்தையையே பார்த்துக் கொண்டிருக்க, அந்தக் குழந்தை அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அருகில் வரவும், அதன் முகத்தைப் பார்த்தவள், தனது துன்பத்தை மறந்து, அதன் கன்னத்தை மெல்ல வருடினாள்.

“அக்கா.. என்ன பண்ணுத?” அவளை அங்குப் பார்த்த ஆச்சரியத்தில் அரிசிப் பல்லைக் காட்டிக் கேட்க, சில நொடிகளில் அவளது மூளை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப, வேகமாக அதை எப்படி வெளியில் அனுப்புவது என்று யோசித்து, ஒரு வழி கண்டவள், அதன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி,

“நான் சும்மா தான் உட்கார்ந்து இருக்கேன் குட்டி.. கால் எல்லாம் ரொம்ப வலிக்குது..” என்று அவள் சொல்லவும், அவளது காலைப் பார்த்த அந்தக் குழந்தை,

“அச்சச்சோ? என்ன ஆச்சு? கீய வியிந்தியா?” அவளது முட்டியைத் தடவியப்படி குழந்தை உதட்டைக் குவித்துக் கேட்க, ஆதிரா சுவற்றில் சாய்ந்து, தனது காலை நீட்டியபடி,

“இல்லடா குட்டி.. நான் வெளியில வெய்யில்ல போய் விளையாடவே இல்லையா? அதுனால தான் இப்படி கால் வலியில என்னால நடக்கவே முடியல.. கால் எல்லாம் ரொம்ப வலிக்குது..” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொல்லவும்,

“அச்சச்சோ..” என்ற குழந்தை, அவளது முட்டியைத் தடவ,

“நான் உனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்கறியா? நிறைய ஓடி ஓடி விளையாடணும்.. அதுவும் சன்லைட்ல விளையாடினா தான், கால் எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும்.. எங்க அம்மா வெயில்ல போய் விளையாட சொன்னதை நான் கேட்கவே இல்ல.. அதனால தான் எனக்கு இப்படி வலிக்குது..

நீயும் அப்படி இருக்காதே.. குட்டி கண்ணா ஸ்ட்ராங்கா ஆகணும் இல்ல.. அப்போ வெளிய போய் சன் லைட்ல விளையாடினா தான் உனக்கு ஸ்ட்ரெந்த் வரும்..” ஆதிரா மெல்ல அந்தக் குழந்தையை வெளியில் அனுப்பும் சாக்கில் விசித்திராவை வெளியில் அனுப்பி காட்டிக் கொடுக்க நினைத்து, அதற்கு உருவேற்றத் துவங்கினாள்..

அவளது மனதில் ஏதோ ஒரு உள்ளுணர்வு.. எப்பொழுது கார்த்திக் இந்த ஏரியாவில் சுற்றிக் கொண்டிருகிறானோ, கண்டிப்பாக அவன் காவல் துறையில் விசித்திராவின் அடையாளங்களைச் சொல்லி அலெர்ட் செய்திருப்பான் என்ற அவன் மீதான நம்பிக்கை.. இப்பொழுது விசித்திராவை வெளியில் அனுப்பினால் அவள் மாட்டிக் கொண்டு, தான் இருக்கும் இடம் வெளிப்பட்டு, எப்படியாவது இங்கிருந்து வெளியில் சென்று விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது..

விசித்திரா சொல்வதை வைத்துப் பார்த்தால், கார்த்திக்கும் இந்த எரியாவில் சுற்றிக் கொண்டிருப்பது புரிந்தது.. அந்தக் குழந்தையை அந்தக் கட்டிடத்தின் வெளியே அனுப்பி, விசித்திராவை கார்த்திக்கின் கண்களில் படுமாறு செய்துவிட முடிவெடுத்தவள், அந்தக் குழந்தைக்கு உருவேற்றத் துவங்கினாள்..

என்ன தான் மனதில் தைரியம் இருந்தாலும், அவளது கண்கள் கண்ணீரை வடிக்க, “யொம்ப வலிக்குதா?” குழந்தைக் கேட்க, அதனை இறுக கட்டிக் கொண்டவள்,

“ஆமாடா கண்ணா.. ரொம்ப வலிக்குது.. உன்னை வச்சு என்னை விளையாட வைக்கிறாங்களே.. அவங்களைப் பிடிச்ச அப்பறம் உன்னோட கதி என்ன?” ஆதிரா கவலையாகப் பேச, குழந்தையோ எந்த கவலையுமின்றி அவளது கன்னத்தில் முத்தமிட்டது..

அதன் அன்பில் ஓரிரு நொடிகள் தடுமாறியவள், தன்னை சுதாரித்துக் கொண்டு, தான் இங்கிருந்து நல்லபடியாக தப்பிப்பது மட்டுமே முதன்மையாகப் பட, “சரி.. நாளைக்கு காலையிலேயே சீக்கிரம் எழுந்து சன்லைட் வந்த உடனே ஓடிப் போய் விளையாடு.. அப்போ தான் உன் காலுக்கு ஸ்ட்ரென்த் இருக்கும். அம்மாவுக்கு சப்ரைஸ்சா பண்ணு.. அப்போ தான் குட்டி கண்ணா ஸ்ட்ரென்த் பார்த்து அம்மா சப்ரைஸ் ஆவாங்க..” என்றவள், கண்களைத் துடைத்துக் கொண்டு, தலை ஒரு மாதிரிச் சுற்றவும், அப்படியே தரையில் சரிய,

“நீ தூங்கு..” என்றபடி, குழந்தை மெல்ல தனது பந்தை எடுத்துக் கொண்டு விளையாடச் சென்றது..

அந்த ஏரியாவைச் சுற்றி, ஆங்காங்கே காவலர்கள் மாறுவேடத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர்.. அந்த ஏரியாவின் நுழைவாயில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டவர்கள், இரவு கவிழவும், அந்தக் கடத்தல் கும்பலுக்கு சந்தேகம் வராதவாறு ஆங்காங்கே சில வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கினர். அந்த ஏரியாவின் நுழை வாயிலில் காவல்துறை அதிகாரிகள் சிலர் சோதனையில் இருக்க, அப்பொழுது அங்கு வந்த ஒரு உணவு டெலிவரி ஆளைப் பிடித்த ஒரு காவல்துறை அதிகாரி, “நீங்க எந்த வீட்டுக்கு போறீங்க? யார் பேர்ல ஆர்டர் புக் ஆகி இருக்கு?” என்று கேட்க, அந்த டெலிவெரி செய்பவர் ஒரு விலாசத்தைச் சொல்லி,

“கனகான்னு பேர் இருக்கு சார்..” எனவும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்,  

“சரி.. நீ சாப்பாடு கொடுக்கப் போற வீட்டுல இந்த போட்டோல இருக்கற பொண்ணோ இல்ல இந்த ஆளோ யாராவது இருக்காங்களான்னு பாருங்க.. இருந்தா இங்க வந்து சொல்லணும்.. ஒருவேளை அப்படியே அவங்க அங்க இருந்தா அங்க முகத்துல எதுவும் காட்டிக்காம வந்து எங்கக்கிட்ட சொல்லணும்.. என்ன புரியுதா?” என்று கேட்க,

“சரிங்க சார்..” என்றவன், உணவை எடுத்துக் கொண்டு அவன் கூறிய முகவரிக்குச் சென்றான்.. அவனை அந்த விலாசத்தின் அருகில் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கண்காணித்தனர்.. அந்த டெலிவரி ஆள் சென்று அந்த பிளாட்டின் கதவைத் தட்டவும்,

“அப்படியே வெளியவே வச்சிட்டுப் போங்க.. இங்க என் வீட்டுக்காரருக்கு கொரோனா..” ஒரு பெண்ணின் குரல் கேட்க,

“சரிங்க மேடம். அப்படியே எனக்கு ரேட்டிங் போட்டுடுங்க..” என்றவன், அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.. அங்கு அவனுக்காக காத்திருந்த காவல்துறை அதிகாரிகளிடம்,

“அங்க அந்த லேடியோட வீட்டுக்காரர்க்கு கொரோனாவாம் சார்.. வெளிய வைக்கச் சொல்லிட்டாங்க..” என்று சொல்லவும், அதை மதிக்கு அழைத்து அவர் சொல்ல,

“சரி.. போகச் சொல்லுங்க.. நாம பார்த்துக்கலாம்.. கொஞ்சம் அலெர்ட்டாவே இருங்க.. எதா இருந்தாலும் உடனே கால் பண்ணுங்க..” என்று மதி ஆணையிட்டு, அன்றும் வாகன சோதனைகள் செய்ய உத்தரவிட்டான்..

அன்றைய இரவில் வித்யா அனைவருக்கும் உணவை சமைக்க, “மாமா.. சாப்பிட்டு நல்லா தூங்குங்க.. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்..” என்று அவன் சொல்லிவிட்டுக் கிளம்ப,

“நானும் உங்க கூட வரேனே..” பாலகிருஷ்ணன் கேட்டார்..

“இல்ல மாமா.. நீங்க வேண்டாம்.. வெளிய மழை வரா போல இருக்கு.. நான் அந்த ஏரியால ஒரு சுத்து சுத்திட்டு வரேன்.. என்னவோ வீட்ல இருக்கவே முடியல.. அன்னைக்கு நான் பேசாம போன் எடுத்திருந்தா இப்படி சுத்திட்டு இருந்திருக்க வேண்டாம்.. எல்லாம் என் நேரம்..” கார்த்திக் நொந்துக் கொள்ள,

“இரு நானும் வரேன்.. ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்.. நீ மட்டும் போக வேண்டாம்..” என்ற சரவணன், கார்த்திக்குடன் புறப்பட,

“மாத்திரை போட்டு தூங்குங்க மாமா.. ஆதிரா கிடைச்ச உடனே நாம நிறைய கோவிலுக்கு போகணும்.. அதனால இப்போ ரெஸ்ட் எடுங்க.. நான் வரேன்..” என்ற கார்த்திக், சரவணனுடன் கிளம்பிச் செல்ல, சதாசிவம் அவனைப் பார்த்து புன்னகைத்தார்..

“என்ன சம்பந்தி?” அவரது புன்னகையைப் பார்த்துக் கேட்க,

“கார்த்திக் கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னதை நினைச்சுத் தான் சிரிச்சேன்.. அவனுக்கு கோவில் சாமி எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்ல.. என் மருமக வேலையா தான் இருக்கணும்.. இல்ல இவனாவது கோவில் போகணும்னு சொல்றதாவது..” என்று கேலி செய்ய,

“இவரு சொல்றதைப் பார்த்தா.. அப்போ நாம கோவில் கோவிலா போகணும் போல இருக்கே..” சதாசிவத்துக்கு ஒத்து ஊதியவர், அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தார்..

“ஏன் சம்மந்தி படுக்கலையா?” தனது வீட்டிற்கு கிளம்பிக் கொண்டே சதாசிவம் கேட்க,

“தூக்கம் எல்லாம் வராது சம்மந்தி.. அப்படியே மாப்பிள்ளை வர வரைக்கும் இங்க உட்கார்ந்து இருக்கேன்..” என்றவர், தனது மொபைலை எடுத்து பக்கம் வைத்துக் கொள்ள,

“சரி.. எந்த நேரம் ஆனாலும் எனக்கு கால் பண்ணுங்க சம்மந்தி.. நான் உடனே வரேன்..” என்றபடி சதாசிவம் விடைப்பெற்றுக் கிளம்ப, சோபாவில் சாய்ந்தபடி, அவர் கடவுளிடம் மன்றாடத் துவங்கினார்..

அவரது அருகில் சுதா அமர்ந்துக் கொள்ள, வித்யா ஒரு அறையில் படுத்துக் கொண்டாள்.. அனைவரும் கார்த்திக்கின் வரவுக்காக காத்திருக்க, அந்த ஏரியாவில் சுற்றிவிட்டு, அந்த இடமே அமைதியாக இருக்கவும், என்ன செய்வதென்று புரியாமல் கார்த்திக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..

வீட்டிற்கு வந்தவனை பாலகிருஷ்ணன் ஆவலாகப் பார்க்க, “போலீஸ் அந்த ஏரியாவ கண்காணிச்சுட்டு இருக்காங்க மாமா.. ஏரியாவே ரொம்ப அமைதியா இருக்கு.. வேற என்ன செய்யறதுன்னு தெரியல..” தலையைப் பிடித்துக் கொண்டு அவன் சொல்லி விட்டு, டைனிங் டேபிளில் தனது லேப்டாப்புடன் அமர, சரவணன் அவன் அருகே சென்று “என்னாச்சுடா?” என்று கேள்வியாகப் பார்த்தான்..

“கொஞ்சம் வேலை இருக்கு..” என்றவன், அதில் சில செய்திகளை தேடத் துவங்கினான்..            

“அப்படி என்ன பார்க்கற?” என்று கேட்டுக் கொண்டே சரவணன் அவன் அருகில் அமர,

“ஹ்ம்ம். ஒண்ணும் இல்ல.. சும்மா நியூஸ் பார்த்துட்டு இருக்கேன்..” என்றவன், சில ஆன்லைன் பேப்பர்களை எடுத்து படிக்கத் துவங்கினான்..

மெல்ல ஒவ்வொரு பேப்பராக படித்து, அதை குறித்துக் கொண்டிருக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சரவணன், அப்படியே சேரில் உறங்கியும் போனான்..

அவனைத் திரும்பிப் பார்த்த கார்த்திக், ஒரு தலையணையை எடுத்து, அவன் சேரில் இருந்து விழாதவாறு அவனது முதுகிற்கு கொடுத்து, மற்றொரு தலையணையை எடுத்து அவனது தலை தழையாதவாறு ஒரு பக்கம் முட்டுக் கொடுத்துவிட்டு, தனது வேலையை கவனிக்கத் துவங்கினான்..

அவன் சில நியூஸ்களை எடுத்து குறித்துக் கொண்டு, அதை மீண்டும் படித்துப் பார்க்க, அவனது புருவங்கள் முடிச்சிடத் துவங்கின. அனைத்துமே பெண்கள் காணாமல் போனதைப் பற்றிய செய்திகள் தான்.. இந்த இரண்டு மாதங்களில் ஐந்து பெண்கள் காணாமல் போயிருந்தனர்..

சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் காணாமல் போயிருந்த பெண்கள் அனைவருக்குமே ஒரு ஒற்றுமை.. அனைவருமே ஆதிராவின் வயதை ஒத்து இருந்தனர்.. அனைவருமே ஓரளவு நன்கு படித்தப் பெண்கள்.. அந்த ஐந்து பெண்களுமே இதுவரை கிடைக்காமல் அந்த கேஸ்கள் நிலுவையில் இருந்தது.. பேப்பர்களில் ஏதோ ஒரு மூலையில் வெளிவந்திருந்த அந்த செய்தியைப் பார்த்த கார்த்திக்கிற்கு, ஏதோ உறுத்தத் துவங்கியது..  

ஐந்து பெண்களில் இரண்டு பெண்கள், தங்களைத் தேட வேண்டாம் என்றும், தாங்கள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை தேடிச் செல்வதாக, அவர்களது பெற்றவர்களுக்கு மெசேஜ் செய்திருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்க, கார்த்திக் தலையை நீவிக் கொண்டான்..

“எப்படி இது? இவங்க எல்லாம் எங்க போனாங்க? இது ஏன் இந்த நியூஸ் எல்லாம் பெருசாகவே இல்ல.. அதுவும் ரெண்டு மாசத்துல அஞ்சு பொண்ணுங்க காணாம போயிருக்காங்க.. அது ஏன் பெருசாகவே இல்ல..” என்று யோசித்தவன், அந்த கேஸ்களைப் பற்றிய குறிப்பை மதிக்கு வாட்சப் அனுப்பினான்..

அதைப் பார்த்த மதி உடனே கார்த்திக்கிற்கு அழைக்க, மெல்ல தனது போனை எடுத்துக் கொண்டு, பால்கனிக்குள் நுழைந்தவன், “ஹலோ மதி..” எனவும்,

“என்ன கார்த்திக்? கொஞ்சம் கூட தூங்கலையா?” மதி கேட்க,

“இல்ல மதி. தூக்கம் வரல. இதைப் பார்த்தீங்களா? எனக்கு இது எல்லாமே ஒரே கும்பல் தான் செஞ்சிருக்கும்ன்னு தோணுது.. அந்த பொண்ணுங்களோட வயசு எல்லாம் ஆதிராவை ஒத்து இருக்கு.. அவங்க யாரையுமே கண்டுப்பிடிக்க முடியல.” கார்த்திக்கின் குரலில் கவலை ஒலித்தது..

“காலையில அந்த ஸ்டேஷன் எல்லாம் கேட்போம் கார்த்திக்.. எனக்கும் சித்தார்த்துக்கும் முந்தா நேத்தே இதுல ஒரு பெரிய ஆள் சம்பந்தப்பட்டு இருப்பாங்களோ. ஒரு நெட்வர்க் போல.. இல்ல ஏதோ வகையில யாரோ நல்ல மனுஷன் போர்வையில இதை எல்லாம் செஞ்சிட்டு இருக்கற மாதிரி ஒரு ஃபீல் வந்தது.. காலையில கன்ஃபார்ம் பண்ணிடலாம்.. அதை விட சீக்கிரம் நாம ஆதிராவைக் கண்டுப்பிடிச்சிடலாம்.. கொஞ்சம் கவலைப்படாம இரேன் மச்சான்.. இப்படி ராக்கோழி போல என்ன பண்ணிட்டு இருக்க? சிஸ்டர் வந்தா வாங்க வேண்டிய அடி பாக்கி இருக்கு இல்ல..” மதி அவனை சமாதானம் செய்ய,  

“அவ கை வலிக்க வலிக்க அடிக்கட்டும் எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. சுகமா வாங்கறேன்.. அவ கையைப் பிடிச்சு விட்டு, மருந்து போட்டு கூட அவகிட்ட அடி வாங்கறேன்.. எனக்கு அவ கிடைக்கணும்.. அது மட்டும் தான் வேணும்..” என்றவனின் தொண்டை அடைத்தது..

“நான் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் கஷ்டமா தான் இருக்கும் கார்த்திக்.. நம்மால முடிஞ்ச அத்தனையும் செஞ்சிட்டு இருக்கோம்.. சீக்கிரம் அவனை லாக் பண்ணிடலாம்..” மதி சொல்ல, 

“சரி மதி.. எதுக்கும் அந்த ஏரியால எல்லாரையுமே அலெர்ட்டா இருக்கச் சொல்லுங்க.. ரொம்ப அமைதியா இருக்கறது போல இருக்குன்னு அவங்க லூஸ்ல விட்டுடப் போறாங்க.. நான் வைக்கிறேன் மதி..” கார்த்திக் தனது தொண்டையைச் சரி செய்துக் கொண்டான்..

“சொல்லி இருக்கேன் கார்த்திக்.. நீங்க பயப்படாதீங்க..” அதற்கு மேல் மதிக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி காக்க, 

“சாரி மதி.. இந்த நேரத்துல உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. நீங்க பாருங்க..” என்றவன், போனை வைத்துவிட்டு, அந்த பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்தவன், தனது தலையைப் பிடித்துக் கொண்டான்..

அவனது மனது முழுவதும் ரணமாக வலித்தது.. ஆதிரா கிடைக்க வேண்டுமே என்ற வேண்டுதல் மட்டுமே மீண்டும் மீண்டும் மனதில் ஒலிக்க, தலை விண்விண் என்று வலிக்கத் துவங்கியது.. அப்படியே கண்களை மூடி சுவற்றில் சாய்ந்தவனுக்கு ஆதிராவின் அருகாமைத் தேவைப்பட்டது..

என்ன தான் அவன் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், அடி ஆழத்தில் ஒரு பயம் அழுத்திக் கொண்டு தான் இருந்தது.. மெல்ல கிட்சனிற்குச் சென்று தனக்கான டீயை போட்டுக் கொண்டு, பால்கனிக்குச் சென்றவன், அப்படியே காலை நீட்டியபடி அங்கிருந்த சேரில் அமர்ந்துக் கொள்ள, தன்னை அறியாமல் உறங்கியும் போனான்..

வழக்கம் போல ஆதிராவைக் காண வந்த விசித்திரா, அவள் தரையில் கிடக்கவும், “என்ன அப்படியே சரிஞ்சிட்ட.. அவரு கொடுத்த ஜூஸ்சை குடிக்கலாம்ல..” நக்கலாகக் கேட்க,

“இல்ல.. எனக்கு வேண்டாம்.. நான் இப்படியே செத்துப் போனாலும் போவேன்.. இந்த ஜூஸ் குடிக்க மாட்டேன்..” என்றவளைப் பார்த்த விசித்திரா ஏளனமாகச் சிரித்தாள்..

“என்ன உன் ஆளு இங்க இருந்து போயிட்டான் போல இருக்கு.. அவனுக்கு உன் மேல இருக்கற காதல் அவ்வளவு தானா? போனவன் போலீஸ்காரனுங்களையும் கூட்டிட்டு போயிட்டான் தெரியுமா? ஏரியாவே ரொம்ப அமைதியா இருக்கு.. நீ செத்துப் போயிட்டன்னு நம்பி, எல்லாருமே இங்க இருந்து காணாம போயிட்டாங்க.. அவ்வளவு தான் உன் ஆளோட தேடுதலும்.. முடிஞ்சுச்சு.. அடுத்து கொஞ்ச நாள் தேவதாசா சுத்துவான்.. அப்பறம் ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் செஞ்சிக்குவான்.. கூடிய சீக்கிரம் அவனோட கல்யாண போட்டோவைக் காட்டறேன் பாரேன்.. உங்களோட தெய்வீக காதல் அவ்வளவு தான் முடிஞ்சிருச்சு.. என்னவோ தெய்வீக காதல் அது இதுன்னு சொன்ன? இப்போ அது எல்லாம் எங்க? ஒரு அநாதைப் பிணத்தைப் பார்த்து நம்பற அளவுக்கு தான் இருக்கு அந்த காதல்…” ஏளனமாகக் கேட்டவளைப் பார்த்த ஆதிரா, பதில் சொல்லாமல் தலையை முட்டியில் கவிழ்ந்துக் கொண்டாள்..

“என்ன பதிலையேக் காணும்..” விசித்திரா அவளது தலையில் அடிக்க,

“எனக்கு இப்போ பேசத் தெம்பில்ல.. விட்டுடு..” என்று சொன்னவளுக்குத் தலை சுற்றத் துவங்கியது..  

“உன் கை கால் எல்லாம் ஃப்ரீயா தான் விட்டு இருக்கேன்.. உனக்கு வேணும்ன்னா பாத்ரூம் போயிட்டு வா.. என்னைத் தொல்லை செய்யாதே.. இனிமே இங்க உன்னைத் தேடி யாரும் வர மாட்டாங்க.. எனக்கு இன்னைக்கு நைட் நல்லாத் தூங்கணும்..

உன்னோட மல்லு கட்டி எனக்கு தூக்கம் போனது தான் மிச்சம்… ஏண்டி நீ பேசும்போது எப்போவாவது உன்னோட ஆளு வக்கீலு.. அவனோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் பெரிய போலீஸ் ஆபிசர்ஸ்ன்னு சொல்லி இருக்கியா? எங்களை கண்ணுல விரல் விட்டு ஆட்டறான்.. தூக்கமே வர மாட்டேங்குது..” என்று சொன்னவள், ஆதிரா அமைதியாக இருக்கவும்,

அவளது தலையைத் தட்டிவிட்டு, “பட்டினில இருக்கும் போதே இந்த திமிரு..” என்றுவிட்டுச் சென்றவள், குழந்தையைத் தட்டிக் கொடுத்துவிட்டு உறங்க, ஆதவன் அதற்கு முன்பே நன்கு உறங்கி இருந்தான்..

ஏளனம் செய்துவிட்டு விசித்திரா செல்லவும், தரையில் சரிந்த ஆதிரா, “கார்த்திக்.. அன்னைக்கு நீங்க போனை எடுத்து இருக்கலாம்ல கார்த்திக். எனக்கு இந்த நிலைமை வந்து இருக்காது இல்ல..” கண்ணீருடன் கார்த்திக் எதிரில் நிற்பது போல கேட்டு,

“உங்க கலீக்ஸ் கிட்ட நம்ம கல்யாணம் வரை, நம்ம விஷயம் எதுவும் தெரிய வேண்டாம்ன்னு நீங்க சொன்னது எல்லாம் நியாயம் தான்.. அவங்க நம்மளைப் பத்தி கேலி செய்து, பேசு பொருளா மாத்திடுவாங்கன்னு நீங்க சொல்ற எல்லா காரணமும் ஓகே.. உங்களோட அந்த பொசசிவ், எனக்கு ஷீல்ட்டா இருக்கணும்ன்னு நீங்க நினைச்சது எல்லாம் ஓகே.. ஆனா.. அவ்வளவு தடவ போன் செய்யும் போதும் ஒரே ஒரு தடவ என்னன்னு கேட்டு இருக்கலாம் இல்ல.. போங்க.. நான் உங்க மேல கோபமா இருக்கேன்.. உங்க கிட்ட பேச மாட்டேன்..” என்று நொடித்துக் கொண்டவள், அவன் தந்த செயினை வருடியபடி,      

“உங்களோட மெயின் காரணம் எனக்குத் தெரியும்.. அக்கம் பக்கம் யாராவது இருந்து என்னைப் பத்தி தெரிஞ்சு, என்னை வச்சு உங்களை ஏதாவது கேஸ்ல ஆஜர் ஆகாம பண்ணிடப் போறாங்கன்னு இருக்கற உங்களோட பயம் என்னை எங்க கொண்டு நிறுத்தி இருக்கு பார்த்தீங்களா? என்னோட சேஃப்டிக்குன்னு சொல்லிச் சொல்லி, நீங்க வெளிய போனை எடுக்காம நீங்க செஞ்ச அடத்துனால, இப்போ நான் எங்க இருக்கேன்னு பார்த்தீங்களா? எனக்கு சேஃப்டியே இல்லாத இடத்துல இருக்கேன்.. இப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க? என்னை சீக்கிரம் வந்து கூட்டிக்கிட்டு போங்க.. என்னால எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும்ன்னு எனக்குத் தெரியல.. எனக்கு நீங்க வேணும் அப்பு.. என்கிட்டே வந்திடுங்க.. என்னைத் தனியா தவிக்க விடாதீங்க..” என்றவள், மயங்கிச் சரிந்தாள்..         

மறுநாள் காலை, சூரியன் யாருக்கும் காத்திருக்காமல் உலகிற்குத் தனது இருப்பை உணர்த்தியது.. முகத்தில் சூரிய ஒளிப்படுவது கூடத் தெரியாமல், கண்களில் கண்ணீர் வழிய, கார்த்திக் வாயைப் பிளந்து, அந்த சேரிலேயே சாய்ந்து இருக்க, கண் விழித்த சரவணன், பால்கனியின் திரையை இழுத்து விட்டு, உறங்கும் அவனையேப்  பார்த்துக் கொண்டு நின்றான்.

“காலையில எழுந்ததும் காபி போட மாட்டியா? எனக்கு ரொம்ப தலை வலிக்குது.. உனக்கு அப்படி என்ன சோம்பேறித்தனம்? ச்சே.. சரியான ஒரு சோம்பேறிய தேடித் பிடிச்சு கல்யாணம் செய்திருக்கேன் பாரு.. எல்லாம் என் தலையெழுத்து..” ஆதவன் கத்திக்கொண்டிருக்க, விசித்திரா அவனையேப் பார்த்துக் கொண்டு நின்றாள்..

“என்ன அப்படி பார்க்கற? உலகத்துல பொண்ணுங்களே இல்லாதது போல உன்னைப் போய் லவ் பண்ணினேன் பாரு.. என்னைச் சொல்லனும்.. இப்போ எனக்கு அஞ்சு நிமிஷத்துல காபி வரலன்னு வை.. அப்படியே இங்க இருந்து கிளம்பிப் போயிடு.. சீக்கிரம் அவனுங்க வேற கொஞ்ச நேரத்துல வந்து நம்மளையும் அவளையும் வெளிய எங்கயோ மாத்தப் போறேன்னு சொன்னாங்க.. அதுக்கு வேற மறுபடியும் ரெடி ஆகணும்.. போய் காபியைப் போடு..” அவன் சத்தமிட, கண்களில் கண்ணீர் வழிய விசித்திரா,

“நான் வாழற இந்த நாடோடி வாழ்வுக்கு இந்த இது ஒண்ணு தான் எனக்கு தேவை.. அந்த இண்டக்ஷன் அடுப்புல பாலை காய்ச்சறதே கடுப்பா இருக்கு..” என்று புலம்பியப்படி, அவனுக்கு காபியை கலக்க சென்றாள்..

“என்ன முனகற?” ஆதவனின் சத்தத்தில்,  

“ஆமா.. நானும் தான்.. எங்க அம்மா அப்பா சொல்லச் சொல்ல உன்னை லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிட்டேன் இல்ல.. என்னைச் சொல்லணும்.. உன்னை கல்யாணம் பண்ணின பாவத்துக்கு.. எங்க அப்பா அம்மாவை எதிர்த்து உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்ட குத்தத்துக்கு உன் கூட இந்த பாவத் தொழிலை செய்யறேன் இல்ல.. எனக்கு இந்தப் பேச்சு எல்லாம் வேண்டியது தான்.. எல்லாம் என் தலையெழுத்து.. நீ இப்போ வர வர ஏதோ சரி இல்லை.. எனக்கு அது மட்டும் தெரியுது.. என்னை மட்டும் ஏமாத்தலாம்ன்னு நினைச்ச.. உன்னை என்ன செய்வேன்னே தெரியாது..” விசித்திரா கத்திவிட்டு தனது வேலையை கவனிக்க,  

“செய்வடி செய்வ.. ச்சே.. இவளும் இவ மூஞ்சியும்..” என்று கத்திய ஆதவன், தனது மொபைலை எடுத்து ஒரு நம்பருக்கு அழைத்துவிட்டு காத்திருந்தான்..

“ஹலோ..” அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வருவதற்குள்,

“இன்னும் எவ்வளவு நாளைக்கு நீ அங்கேயே இருக்கப் போற? கல்யாணத்துக்கு தானே போன.. என்னவோ கருமாதிக்கு போனா போல அங்கேயே உட்கார்ந்து இருக்க? இங்க ஒரு முக்கிய வேலை இருக்கு..” ஆதவன் சத்தமிட,   

“நாளைக்கு காலையில நான் வந்துடுவேன்.. வந்ததும் எல்லா ரிப்போர்ட்டும் சைன் பண்ணிடறேன்.. இன்னும் ரெண்டே நாளுல நீங்க கிளம்பிடலாம்..” அந்த டாக்டர் சொல்ல,

“ஆமா. இன்னும் ரெண்டு நாள் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது.. எனக்கு இன்னைக்கு மதியம் நீ ஊருக்கு வந்தே தீரனும்.. அங்க மேலிடத்துல இருந்து உடனே கிளம்பப் போறியா இல்லையான்னு காலையிலேயே அப்படி ஒரு சத்தம் போடறாங்க. ஒரு சர்டிபிகேட்ல பேர் மாத்தி போட்டு வாங்க இவ்வளவு நாள் எடுத்தா அவங்க வேற ஆளைப் பார்த்துக்கறாங்களாம்.. அப்பறம் நாம இத்தனை நாளா போட்ட முயற்சி எல்லாம் வீண்.. எவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கி இருக்கு தெரியுமா? சாக்கு சொல்லாம கிளம்பி வா.. இல்ல நம்மளை அவரு கொன்னே போட்டுடுவாரு..” என்று சத்தமிட்டவன்,   

“காசு மட்டும் சுளையா நோகாம வாங்கற இல்ல.. அதுக்கான வேலை செய்.. இங்க நிலைமை புரியாம நீ வேற அங்க கூத்தடிச்சுட்டுக் கிடக்க..” ஆதவன் கத்திக் கொண்டிருக்க, விசித்திரா கண்களில் கண்ணீருடன் சமயலறையில் காபியைக் கலக்கிக் கொண்டிருக்க, அவர்களது சத்தத்தில் கண் விழித்த சிறுவன், இருவரும் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கவும், தனது பந்தை எடுத்துக் கொண்டு, மெல்ல கதவைத் திறந்து வெளியில் செல்ல, அவரவர் வேலையில் கவனமாக இருந்த இருவருமே அதை கவனிக்கத் தவறினர்..