எங்கே எனது கவிதை – 28

th (6)-b3ac7f7c

எங்கே எனது கவிதை – 28

28                

காவல் நிலையத்தில் இருந்த சிறையில் ஆதவன் சோர்ந்து போய் படுத்திருந்தான்.. கையை அவன் மீது வைக்காமலேயே அவனைக் கேள்வி கேட்டே சித்தார்த்தும், மதியும் அவனை டார்ச்சர் செய்து, அவனை சோர்வுறச் செய்திருந்தனர்..

அவனை அர்ரெஸ்ட் செய்து நான்கு நாட்கள் ஆகி இருந்தது.. அந்த நான்கு நாட்களிலும் அவனைக் கேள்வியாலேயே துளைத்து எடுத்த இருவரும், அவனை சரியாகத் தூங்க விடாமலும், வெறும் இட்லிகளையும், கொஞ்சமே கொஞ்சம் உப்பில்லாத தயிர் சாதத்தை மட்டுமே கொடுக்க, அது அவனுக்கு மேலும் சோர்வைக் கொடுத்தது.. உண்ண சரியான உணவுமின்றி, சரியான உறக்கமுமின்றி, அவர்கள் கேட்கும் சரமாரி கேள்விகளில் சோர்ந்து போனவன், கண்களை சொருகும் நேரம், மதி உள்ளே நுழைந்தான்..

“ஹலோ ஆதவன்.. நல்லா தூங்கினீங்களா?” என்று கேட்டுக் கொண்டே மதி அவன் அருகே செல்ல,

“ஹான்..” என்று மயங்கும் நிலைக்கு வந்த ஆதவன்,

“எங்க தூங்கறது?” என்று இடக்காகக் கேட்க,

“ஓ.. தூங்க முடியலையா? சரி.. அப்போ தூங்கு.. நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன்..” மதி ஒருமாதிரி சொல்லிக் கொண்டே, அங்கிருந்து நகர்ந்து செல்ல, ஆதவன்,

“பத்து நிமிஷமா?” என்று கேட்க,

“ஏன் ஒரு மணிநேரம் வேணுமா?” மதி இடக்காகக் கேட்க,

“இல்ல.. வேண்டாம்..” என்ற ஆதவன்,  

‘சரி.. பத்து நிமிஷம் தரேன்னு சொல்லி இருக்காரே.. நாம அதுக்குள்ள நல்லா தூங்கிடலாம்.’ தனக்குள் சொல்லிக் கொண்டவன், கண்களை மூட, அந்த நேரம் சித்தார்த், ‘ஆதவன்..’ என்று அழைத்தான்..

கண்கள் இருட்டிக் கொண்டு வர, திறக்க முடியாமல் கண்களைத் திறந்து பார்த்த ஆதவன், தனது அருகில் சித்தார்த் அமர்ந்திருக்கவும், ‘இனிமே எங்க தூங்கறது?’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், மெல்ல எழுந்து அமர, அவனது கையை மெல்ல பிடித்துக் கொண்டவன்,

“சொல்லு.. உனக்கு ஒரு நம்பர்ல இருந்து அடிக்கடி ஒரு கால் வந்திருக்கே.. அவன் யாரு? அவன் எதுக்கு உனக்கு அடிக்கடி கால் பண்ணி இருக்கான்? அவனுக்கும் இந்த கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்? உண்மையை சொல்லிட்டா உயிரோட தப்பிப்ப.. இல்லையா கோர்ட்லயே ஆளை வச்சு உன்னைத் தூக்கிட்டு.. உன்னை சாட்சி சொல்லக் கூடாதுன்னு யாரோ கொன்னுட்டாங்கன்னு கேஸ் முடிச்சிடுவேன்.. என்ன சொல்ற?” கேட்டுக் கொண்டே ஒவ்வொரு விரலாக பிடித்து நெட்டி முறிப்பது போல இருந்தாலும், உடல் சோர்வில் அந்த வலி ஆதவனின் உச்சந்தலை வரை சென்று தாக்கியது..

“ஆ.. வலிக்குது..” அவன் முனக,

“ஆதிராவை அடிச்ச பொழுதும் அவளுக்கு அப்படித் தான் வலிச்சு இருக்கும்.. அதை விட உன்னை நம்பி உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டு வந்தாலே ஒருத்தி.. உன்னோட இந்த நாலு வருஷம் வாழ்ந்து இருக்காளே.. ஒரு துளி கூட உனக்கு அவ இறந்தது கஷ்டமா இல்ல தானே.. மனைவியா வேண்டாம்.. ஆனா.. சக மனுஷியா ஒரு துக்கம் இருக்கலாமே.. அந்த வருத்தம் கூட இல்லாம இருக்க இல்ல.. அந்த பொண்ணு குழந்தையை விட்டுட்டு அந்த முடிவை எடுக்க, எவ்வளவு வலியோடு இருந்து இருக்கணும்? கொடுமைடா.. ” என்றவன், அவனது கட்டை விரலை பலம் கொண்ட மட்டும் இழுக்க, ஆதவன் அலறத் துவங்கினான்..

“வலிக்குது.. என்னை விட்டுடுங்க.. வலிக்குது…” அவன் அலற, அவனது வாயிலேயே ஒரு குத்து குத்தியவன்,

“இப்போ நீ உண்மையைச் சொல்லலைன்னு வை.. உன்னோட விரலை அப்படியே பின் பக்கமா மடக்கி உடைச்சு நாய் கிட்ட போட்டுடுவேன்.. அதோட மனைவியேயானாலும் நீ விசித்திராவை ரேப் செஞ்ச கேஸ் கூட உன் மேல போடுவேன்.. மிருகமாடா நீ? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அவ்வளவு கேவலமா இருக்கு..” சித்தார்த் மிரட்டிக் கொண்டிருக்க, அவன் அருகில் மதி வந்து நின்றான்..

ஆதவனின் முடியைக் கொத்தாக பிடித்துக் கொண்டவன், “உண்மையை சொன்னா அடுத்து தலை தப்பிக்கும்.. ஏன்னா நீ துப்பாக்கி வச்சு மிரட்டினத பார்த்த சாட்சி நிறைய இருக்கு.. உன்னை தடுத்துப் பிடிக்கும் போது, நீ துள்ளினதுல தலையில அடி பட்டிருச்சுன்னு நான் சொல்வேன்..” என்றவன், ஒரு சுத்தியலை கையில் வைத்துக் கொண்டு அவனது முகத்திற்கு நேராக ஓங்கிக் கொண்டு நிற்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் ஆதவன் வாய் திறந்தான்..

“சொல்றேன்.. சொல்றேன்.. சொல்லிடறேன்..” என்றவன், இந்திரனைப் பற்றிய விவரங்களைச் சொல்லத் துவங்கினான்..

“பட்டர்பிளை எக்ஸ்போர்ட்ஸ்ன்னு ஒரு லெதர் எக்ஸ்போர்ட் கம்பனியோட ஓனர் தான் இந்திரன்.. அவர் தான் எங்களுக்கு எல்லாம் பொண்ணுங்களைக் கடத்தி வெளிநாட்டுக்குல விக்க ஹெல்ப் பண்ற ஆளு.. அவரு அங்க நிறைய ஆளுங்களை வச்சிருக்கார்.. அவரு போட்டோவை அனுப்புவார்.. நாங்க அந்த பொண்ணை எப்படியாவது ஸ்கெட்ச் போட்டு கடத்தி, வெளிநாட்டுக்கு கொண்டு போய் வித்துருவோம்.. அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க அப்படிங்கறதுனால.. நான் தான் எல்லாமே செய்வேன்.. அவங்க எனக்கு போன்ல இன்ஸ்ட்ரக்ஷன் தரதோட சரி..” என்று சொல்ல,

அவனது முடியைப் பிடித்த மதி, “அப்போ இந்த ரெண்டு மாசமா சென்னைல காணாம போன பொண்ணுங்களை எல்லாம் கடத்தினது நீங்க தானா?” என்று கேட்டவன், ஒவ்வொரு பெண்ணின் பெயராக சொல்லிக் கொண்டே வர, ஆதவன் தலையசைத்து ஆமோதித்தான்..

“அதுல ஒரு பொண்ணை அய்யாவுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு சொன்னதுனால நான் அவர் வீட்டுல கொண்டு போய் விட்டேன்.. அப்பறம் கொஞ்ச நாள் அப்பறம் என்னை வந்து கூட்டிட்டு போகச் சொன்னார். நான் கொண்டு போய் அவளை வெளிநாட்டுல விட்டு வந்தேன்..” ஆதவன் சொல்லி முடிக்க, அதைக் கேட்ட மதி,  

அவனது தொடையில் தனது பூட்ஸ் அணிந்த காலால் ஒரு மிதி மிதித்தவன், “ஆதிராவை எங்க கடத்த ப்ளான் பண்ணினீங்க..” என்று கேட்க,

“ஆதிராவை நான் தான் கடத்த திட்டம் போட்டேன்.. எனக்கு அவ மேல ஒரு இஷ்டம்.. அதுக்கு தான் இந்திரனை யூஸ் பண்ணி, அவனோட இருந்த ஒரு லேடிய வச்சு கார்ல கடத்தினோம்.. அதே போல அவளை வெளிநாட்டுக்கு கடத்தி அங்கேயே அவளை அடைச்சு வச்சு, அவ கூட செட்டில் ஆகிடலாம்ன்னு பிளான் பண்ணினேன்..” எனவும், இப்பொழுது சித்தார்த் அவனது மற்றொரு காலை மிதித்தான்..

“அப்போ உன்னை நம்பி கல்யாணம் செஞ்ச பொண்ணுக்கு என்ன கதி? உன்னை நம்பி அவளோட குடும்பத்தை விட்டுட்டு வந்த பாவத்துக்கு அவ கடைசியில உயிரையே விட்டுட்டா.. உங்களை நம்பி ஒரு குழந்தை இருக்கு.. அது கூட உனக்கு தெரியல?” என்று கேட்க,

“அந்த குழந்தையை பெத்துக்க வேண்டாம்னு அவகிட்ட எவ்வளவோ சொன்னேன்.. அவ தான் கேட்கல..” ஆதவன் கோபமாகச் சொல்ல, அவனது முகத்தில் ஒரு குத்து விழுந்தது..

“உன்னோட திமிருக்கு அவ கஷ்டப்படணுமா?” என்று கேட்டவன்,

“சரி சொல்லு.. அந்த இந்திரனுக்கு மேல வேற யாராவது இருக்காங்களா? இல்ல அவன் மட்டும் தான் இதுல கூட்டா?” சித்தார்த் மேலும் கேட்க,

“இல்ல.. ஆனா.. சில சமயம் அய்யா வந்து இருபது வயசுக்குள்ள இருக்கற பொண்ணுங்களை பார்த்து தூக்கச் சொல்லுவார்.. பதினஞ்சு போல இருந்தா கூட ரொம்ப நல்லதுன்னு சொன்னாரு.. வேற யாரோ கேட்டாங்கன்னு சொன்னாரு. அதுக்கும் மேல தெரியல சார்..” வலியுடன் முனகியவன், கீழே சுருண்டு விழ, மதியும் சித்தார்த்தும் அங்கிருந்து வெளியில் வந்தனர்..

சித்தார்த் உடனே கமிஷனருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு, அர்ரெஸ்ட் வாரன்ட்டை வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய, அதை எடுத்துக் கொண்டு, ஆதவன் கூறிய அந்த பெண்மணியைக் கைது செய்தவர்கள், ஒரு படையுடன் இந்திரனை அர்ரெஸ்ட் செய்யச் சென்றனர்..

விஷயத்தை மீடியா வரை எடுத்துச் செல்லாமல், இந்திரனின் கைதை ரகசியமாக செய்ய முடிவெடுத்தனர்.. அதன்படி, இந்திரனின் வீட்டிற்கு அதிகாலையில் அனைவரும் சாதாரண உடையில் எந்த ஓசையையும் எழுப்பாமல் சென்றனர்.. போலீஸ் ஜீப் அல்லாது சொந்த வண்டியில் சென்றவர்கள், இந்திரன் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு காத்திருக்க, அந்த வீட்டின் வேலை செய்பவர் வந்து கதவைத் திறந்தான்..

“உங்க அய்யா இந்திரனை கொஞ்சம் அவசரமா பார்க்கணும்..” மதி சொல்லிவிட்டு நிற்க, அந்தக் காலைப் பொழுதில் அப்படி வந்து கேட்கவும், அவசரமாக உள்ளே ஓடிச் சென்றவன், இந்திரனின் அறைக்கதவைத் தட்டி விஷயத்தைச் சொல்ல, வேகமாக சட்டையை மாட்டிக் கொண்டு வந்த இந்திரன்,   

“யாரு சார் நீங்க? என்னை பார்க்கணும்ன்னு சொன்னீங்களாம்? என்ன விஷயம்? அதுவும் இந்த காலையில வந்திருக்கீங்க?” என்று கேட்க,

“உங்களை பொண்ணுங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விக்கற கேஸ்ல அர்ரெஸ்ட் பண்றோம்.. எங்க கூட சத்தம் போடாம வந்துட்டா நல்லது.. இல்ல.. நியூஸ் வெளிய எல்லாம் போச்சுன்னா ரொம்ப பெரிய தலைவலியா போயிடும்.. எங்களுக்கு இல்ல உங்களுக்கு.. இப்போ பேசாம வந்தா விசாரணை முடிச்சு விட்டுடுவோம்.. இல்ல.. எங்க ட்ரீட்மெண்ட்டே வேற மாதிரி இருக்கும்..” என்று மதி மிரட்டவும்,

“நான் என்னோட வக்கீல் கிட்ட பேசணும்..” இந்திரன் கேட்க,

“அதெல்லாம் மெல்ல பேசிக்கலாம் இந்திரன்.. நீங்க கொஞ்சம் எங்க கூட வாங்க.. சும்மா ஜஸ்ட் விசாரணை தானே..” என்றவன், அவரது கையைப் பிடிக்க,

“உங்க மரியாதையை காப்பாத்த போலீஸ் ஜீப் எல்லாம் எடுத்துட்டு வராம.. எங்க சொந்தக் காருக்கு பெட்ரோல் போட்டுட்டு எடுத்துட்டு வந்திருகோம்.. அந்த பெட்ரோல் காசுக்காகவாவது கொஞ்சம் பேசாம வரீங்களா? இல்ல வேலைக்காரங்களுக்குத் தெரிஞ்சு அசிங்கம் ஆகணுமா?” சித்தார்த் கேட்க, இந்திரன் இருவரையும் பதட்டத்துடன் பார்த்தான்..

“உங்களைப் பத்தி ஆதவன் தான் சொன்னான்.. போகலாமா?” சித்தார்த் மெல்ல அவரது கையைப் பிடித்து இழுக்க, அவனுடன் நகர்ந்துக் கொண்டே,

“அவனுக்கு கொரோனான்னு இல்ல சொன்னான்?” என்று திகைப்புடன் முணுமுணுக்க,

அவனைப் பார்த்து சிரித்த சித்தார்த், “ஆமா.. கொரோனால ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்கான்.. அப்போ போன பொழுது சொன்னது தான்.. நீங்களும் வந்து அவனைப் பார்த்துட்டு போவீங்களாம்.. வாங்களேன்.. நீங்க இல்லாம அவன் ரொம்ப தவிக்கிறான்..” என்று கூறியபடி, அவனை காரில் ஏற்றிக் கொண்டு, ஜெயிலுக்கு சென்று, ஆதவன் இருந்த சிறையின் உள்ளே தள்ள, ஆதவன் சோர்ந்து படுத்திருப்பதைப் பார்த்த இந்திரன்,

“ஹையோ இவனுக்கு கொரோனா.. என்னை ஏன் இவன் கூட போடறீங்க?” என்றபடி உள்ளே செல்ல மறுக்க, அவனைப் பிடித்து உள்ளே தள்ளியவன்,

“நீயும் உள்ளப் போ.. அவனுக்கு எப்படி கொரோனா வந்ததுன்னு தெரியும்..” என்ற மதி,

“அது நான் உன்னை ஏமாத்த அனுப்பின மெசேஜ்.. அதுனால தானே நீ எங்கயும் ஓடிப் போகாம மாட்டி இருக்க? இல்லன்னா இத்தனை நேரம் எவிடன்ஸ் எல்லாம் இருக்குமா என்ன?” என்ற சித்தார்த், அவனை உள்ளே தள்ளி விட்டு, கதவை அடைக்க, அங்கிருந்த ஆதவனை எட்டி மிதித்தவன்,

“டேய் துரோகி.. நீ மாட்டிக்கிட்ட உடனே என்னையும் போட்டுக் கொடுத்துட்ட இல்ல.. உனக்கு எத்தனை தடவ நீ மாட்டினாலும் எங்களை மாட்டி விடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்.. அதுக்கும் சேர்த்து எவ்வளவு காசு வாங்கின? நீ எல்லாம்.. எதுக்குடா என் பேரை இவங்க கிட்ட சொன்ன? நீ மாட்டிக்கிற மாதிரி இருந்தா எனக்கு போன் செஞ்சு சொல்லி இருக்கணும் இல்ல.. உன்னை நம்பித் தானே நானும் அந்த ஃப்ளாட் கிட்ட ஆளுங்களைப் போடாம இருந்தேன்.. இப்படி என்னை நம்பிக் கவுத்திட்ட?” உள்ளே சென்றவுடன் இந்திரன் துவங்க, அங்கிருந்த பி.சி.யின் காதில், அவர்களது சம்பாஷணைகளை அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யுமாறு கூறிவிட்டு, சித்தார்த்தும், மதியும் அங்கேயே உறங்கத் துவங்கினர்..

“யோவ் பேசாம இருய்யா.. எவன்யா நீயு.. மனுஷன் இங்க நிம்மதியா கண்ணை மூடக் கூட விடலையா? பேசாம நீயும் ஒத்துக்கோ.. இல்ல.. உன்னை இதை விட டார்ச்சர் செய்வாங்க.. சாப்பாடு கிடைக்கும்.. ஆனா.. அது சரியா இருக்காது.. தூங்க விடுவாங்க ஆனா தூங்க முடியாது.. மொத்தத்துல சித்திரவதை..” ஆதவன் படபடவென்று சொல்ல,

“என்னது டார்ச்சர் செய்யறாங்களா? பொய் சொல்லாதே.. உன்னைப் பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலையே.. முகத்துல ஒரு அடி கூட இல்ல..” அவனை மேலும் கீழும் பார்த்தவன்,

“நல்லா தானே இருக்க.. இதுல பொய் வேற.. இப்போ எதுக்கு என் பேரை இழுத்து விட்ட.. காலையில யோசிக்கிறதுக்குள்ள என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க..” என்று ஆதவனின் தலையில் அடித்தவன்,

“ஆமா.. அந்தப் பொண்ணை என்ன பண்ணின? உன் பொண்டாட்டி அவளை பத்திரமா வச்சிருக்கா இல்ல.. எங்கன்னு சொல்லு.. விடிஞ்சதும் என் வக்கீல் வருவான்.. அவன்கிட்ட சொல்லி அவளை நாடு கடத்த ஏற்பாடு செய்யலாம்..” ரகசியம் போல அவன் கேட்க, அந்தப் பிசி தனது தலையில் அடித்துக் கொண்டு, அவற்றை படம் பிடித்தார்..

“அந்தப் பொண்ணு தானே.. ரொம்ப பத்திரமா இருக்கா.. அவ புருஷனோட.. இப்போ என்னை ஆளை விடு.. நான் தூங்கனும்.. அவங்க தூங்கற கேப்ல நானும் தூங்கிக்கறேன்.. நான் தூங்கி நாலு நாளைக்கு மேல ஆச்சு..” என்று சொல்லிவிட்டு, ஆதவன் அமைதியாக படுத்துக் கொள்ள, இந்திரன் அவனை எட்டி உதைத்துவிட்டு, கம்பிகளுக்கு அருகில் வந்து நின்றான்..

“எனக்கு என் வக்கீலைப் பார்க்கணும்..” இந்திரன் கேட்க, மதியின் குறட்டைச் சத்தம் அந்த இடத்தை நிறைக்க, இந்திரன் செய்வதறியாது கூண்டுப் புலி போல சிறையின் உள்ளே நடந்தான்.

காலையில் சித்தார்த் ஒரு வழக்கிற்காக கிளம்பிக் கொண்டிருக்க, “நான் கொஞ்சம் வீட்டுக்கு போயிட்டு வந்திடறேன்.. இப்போ இவரோட வக்கீல் அப்படின்னு சொல்லிக்கிட்டு யாராவது வந்தா ப்ரெஸ்க்கு போன் செஞ்சு சொல்லிடுங்க.. அவங்க வரட்டும்.. நாம இவனை மீடியா முன்னால நிறுத்திடலாம்..” மதி இந்திரனின் காதில் விழுமாறு சொல்லிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பிச் செல்ல,

“நானே இப்போ கோர்ட்டுக்கு தான் போறேன்.. மதியம் நானே உங்க வக்கீல கையோட கூட்டிட்டு வந்துடறேன்.. இப்போ வரை உங்க மேல எஃப். ஐ. ஆர்.. போடல.. அதுனால நீங்க இப்போ கோர்ட்டுக்கு எல்லாம் போக முடியாது.. சோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு, சித்தார்த்தும் கிளம்பிச் சென்றான்..

காலையில் கார்த்திக், கோர்ட்டிற்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க,  அப்பொழுது அவனது அறைக்கு வந்த சதாசிவம், “நாங்க எல்லாம் நீ கோர்ட்ல இருந்து கிளம்பின உடனே புடவை எடுக்க கடைக்கு கிளம்பி வந்துடறோம்டா.. நீ நேரா அங்க வந்திரு.. கேஸ்ல இருக்கற கவனத்துல அதை மறந்துடாதே. ஏன்னா இன்னைக்கு நாளும் நல்லா இருக்கு.. அங்க போய் ஏற்பாடு செய்ய நேரமும் போதாது.. எல்லாமே இன்னைக்கே எடுத்துக்கிட்டு வந்தா.. நாங்க எல்லாம் இன்னைக்கு நைட் ஊருக்கு போயிட்டு மத்த ஏற்பாடு செய்ய வசதியா இருக்கும்.. ஆதிராவுக்கு துணையா சரவணன் வீட்டுல இருக்கேன்னு சொல்லி இருக்கான்.. வேற ஏதாவது ப்ளான் இருக்கா?” தங்களது திட்டத்தைச் சொல்லிக் கேட்க,

“சரிப்பா.. மறக்காம வரேன்.. வேற ஒண்ணும் இல்லப்பா.. ஆதிராவோட புடவைக்கு நாம அதியமான் சார் சொன்ன கடையில இருந்து எடுத்துட்டு வந்து அவளுக்கு புடவைய செலெக்ட் பண்ணிட்டு, மீதியை ரிட்டர்ன் செய்துக்கலாம்.. இப்போ இருக்கற நிலையில அவளை வெளிய கூட்டிட்டு போக முடியாது.. ஆனாலும் அவளோட கல்யாண புடவையை அவளுக்கு எடுக்கணும்ன்னு ஆசை இருக்கும் இல்லப்பா.. இந்த சிச்சுவேஷனால கூட அது அவளுக்கு கிடைக்காம போகக் கூடாது..” என்றவனை சதாசிவம் ஆதூரத்துடன் பார்க்க,   

“கோயம்பத்தூர் போக ஃப்ளைட்ல தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்.. அது தான் சேஃப்டி.. உங்க கூட சரவணன் அங்க வந்துட்டு உங்க கூட ஹெல்புக்கு இருப்பான்.” என்றவன், ஏதோ யோசனையிலேயே கிளம்பிக் கொண்டிருக்க, ஆதிரா அவனுக்கு தட்டில் தோசையைப் போட்டு அவனது அறைக்கே கொண்டு வந்து கொடுக்க, அவளைப் பார்த்தவர்,

“கொடும்மா.. இல்லைன்னா இப்படியே சாப்பிடாம போயிடுவான்..” என்று கூறி, அவளது தலையை வருடி விட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அவளது புன்னகை முகத்தைப் பார்த்தவன், “குட் மார்னிங்டா குட்டி..” என்று வாழ்த்தியவன், அவளது கையில் இருந்த தோசையைப் பார்த்து,

“என்னடா பண்ற?” என்று கேட்க,   

“காலையில இருந்து நீங்க காபி குடிக்க கூட வெளிய வரல.. அது தான் உங்களுக்கு இங்கயே சாப்பிட கொண்டு வந்துட்டேன்.. இதை சாப்பிட்டு காபி குடிச்சிட்டு கிளம்புங்க.. வெறும் வயித்தோட வெளிய போகக் கூடாது..” என்றபடி அங்கிருந்த சைட் டேபிளின் மேல் வைக்கப் போக,

“நான் விடிய காலையிலேயே காபி குடிச்சிட்டேன்டா பட்டு.. இப்போ தோசை வேண்டாமா.. எனக்கு எதுவுமே சாப்பிடற மூட்ல இல்ல..” என்றவன் ஏதோ யோசனையுடன் அலமாரியைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்த ஆதிரா,    

“ரெண்டே ரெண்டு தோசை தான் கொண்டு வந்திருக்கேன்.. வாயைத் திறங்க.. நீங்க யோசனை செஞ்சிக்கிட்டே சாப்பிடுவீங்களாம்.. வெறும் வயித்தோட போக கூடாது..” என்றவளைப் பார்த்தவன், வாயைத் திறந்துக் கொண்டே,

“அவங்க எல்லாம் கிளம்பின அப்பறம், வீட்ல ஜாக்கிரதையா இரு.. யாருக்கும் கதவைத் திறக்கவே திறக்காதே.. உன்னோட புது மொபைல்ல மதியோட நம்பர் எல்லாம் எமர்ஜென்சில போட்டு வச்சிருக்கேன்.. எதாவது உனக்கு வெளிய சத்தம் போல இருந்தா நீ உடனே மதிக்கு கால் பன்னிரு.. சித்தார்த்துக்கு ஏதோ வேலை இருக்குன்னு நேத்து சொல்லிட்டு இருந்தான்..” என்று கூறிக் கொண்டே, அவன் தனது கையில் இருந்த ஃபைல்களை சரி பார்த்துக் கொண்டிருக்க,

“சரி கார்த்திக்.. இப்போ வாயைத் திறங்க.. ரெண்டு வாய் கூட ஒழுங்கா சாப்பிடல..” என்றவள், அவன் யோசனையோடு வாயைத் திறந்து காட்டவும், தோசையைப் பிட்டு வாயில் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டே, தான் எடுத்திருந்த பாயிண்ட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான்..    

“என்ன கேஸ் அப்பு? அன்னைக்கு ரொம்ப அப்செட் ஆச்சுன்னு சொன்னீங்களே.. அந்த கேஸ்சா?” அவள் கேட்க,

“ஆமாடா கண்ணம்மா.. அவன் உடம்பு முடியல அது இதுன்னு கேஸ் வாய்தா வாங்கிட்டே இருந்தான்.. போன தடவ ஜட்ஜ் ரொம்ப கண்டனம் தெரிவிச்சுட்டாங்க.. அதனால இன்னைக்கு கேஸ் நடக்கும்.. நடந்தே தீரனும்.. அவனை விடக் கூடாது கண்ணம்மா.. அவன் வீட்ல வேலை செய்யற ஒரு சின்னப் பொண்னை அவ்வளவு கொடுமை படுத்தி இருக்கான்.. அந்தப் பொண்ணு கூட இருந்த ஒருத்தங்க சாட்சி சொன்னது கேட்டே எனக்கு மனசு தாங்கல.. அந்தப் பொண்ணு இப்போ ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கா.. அவளுக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கணும்.. நான் வாங்கித் தருவேன்.. அவன் சும்மா இந்த உலகத்துல மரியாதையோட சுத்தக் கூடாது..” என்றவன், தனது கோபத்தை அவளிடம் காட்டாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்..

ஆதிரா அவனை பயத்துடன் பார்க்க, “இதுக்குத் தான் நான் அன்னைக்கு உன்கிட்ட சொல்லல..” என்றவன்,  

“நீ பத்திரமா உள்ள இரு.. நான் மதியம் கடைக்கு போயிட்டு வீடியோ கால் பண்றேன்.. எனக்கு டிரஸ் செலெக்ட் பண்ணு.. அதே போல அதியமான் சார் சொன்ன இடத்துல இருந்து எனக்கு பிடிச்ச புடவைகளை செலக்ட் பண்ணி வாங்கிட்டு வரேன்.. அதுல இருந்து உனக்கு பிடிச்சதை நீ நேர்ல பார்த்து செலெக்ட் பண்ணு.. சரியா. அதே போல ஏர்போர்ட் வரை மதி வரேன்னு சொல்லி இருக்கான்.. இன்னைக்கு லாஸ்ட் ப்ளைட்ல போயிடுங்க.. அது தான் சேஃப்டியும் கூட.. அங்க இருந்து மதியோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வந்து உங்களை ஊரு வரைக்கும் கூட்டிட்டு போவாங்க.. நான் கல்யாணத்துக்கு முந்தின நாள் வரேன்டா கண்ணம்மா.. நீ உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கோ.. ஹாப்பியா நம்ம கல்யாணத்துக்கு ரெடி ஆகு.. கைல இவ்வளவு தூரத்துக்கு மருதாணி போடு.. அழகா ரெடி ஆகு என்ன? நான் இங்க பார்த்துக்கறேன்..” கார்த்திக் சொல்லிக் கொண்டே அவளது கன்னத்தில் முத்தமிட்டு,

“நான் வரவா..” என்று கேட்க,

“சரிங்க வக்கீல் சார்.. நீங்க கோர்ட்டுக்கு போயிட்டு வாங்க..” என்று கேலி செய்ய, அவளது கன்னத்தில் தட்டியவன்,

அவளது கேலி புரிந்து, “என்னோட பாதி மைன்ட் இப்போ அங்க இருக்குடா செல்லப் பட்டு.. அதுனால கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண முடியல.. ஆனா.. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் வச்சுக்கறேன்..” என்றவன், அவளது கன்னத்தைப் பிடித்து, உதட்டில் உரசி விட்டு,

“ஜாக்கிரதை பட்டு.. உன்னை விட்டுட்டு போகவே மனசு வரல.. ஆனா.. எனக்கு இன்னைக்கு போயே தீரனும்..” அவனது நிலைக் கொள்ளாத் தன்மையைப் பார்த்து, தட்டை கீழே வைத்து விட்டு, அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.. அந்த அணைப்பு அவனுக்குத் தேவையாக இருக்க, அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அவளது கழுத்தினில் முகம் புதைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான்..

“ஆல் வில் பி பைஃன் அப்பு.. இன்னைக்கு நல்லது தான் நடக்கும்..” என்று அவள் சொல்லவும், அவளது கழுத்தில் இதழ் பதித்துவிட்டு,

“சரிடா.. நான் போயிட்டு வரேன்.. மொபைல் உன் கையிலேயே இருக்கட்டும்.. எதுவா இருந்தாலும் மதிக்கு கால் பண்ணிடு சரியா?” என்று மீண்டும் நினைவு படுத்தி, அவளது கன்னத்தில் மீண்டும் இதழ் பதித்துவிட்டு கிளம்பிச் செல்ல, அவனது பின்னோடு சென்று வாயில் கதவு வரை வழியனுப்பி விட்டு, மீண்டும் அந்தத் தட்டை எடுத்து, பொறுப்பாக தேய்த்து போட்டுவிட்டு வரவும், சதாசிவம் மனம் நிறைந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்..

கோர்ட்டிற்கு சென்ற கார்த்திக், அங்கு நின்றுக் கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்து கையசைக்க, “என்னடா கல்யாணம் வருது போல.. எங்களை எல்லாம் கூப்பிடுவியா?” என்று கேலி செய்ய,

“உங்களை எல்லாம் கூப்பிடாம என்ன செய்யப் போறேன்? எல்லாரும் கோயம்பத்தூர்க்கு இந்த சாக்கை வச்சு வாங்க.. நல்லா இருக்கும் க்ளைமேட்.. அப்படியே உங்க வைஃப் குழந்தைங்களை எல்லாம் கூட்டிட்டு ஊட்டிக்கு போயிட்டு வாங்க..” என்று சொல்லவும், சித்தார்த் அவனைத் தட்டிச் சிரித்தான்..

“நாம எல்லாம் சேர்ந்தே ஹனிமூன் போகலாம்டா.. நானும் ,மதியும் ஹனிமூன் போகவே இல்ல. ஒரு கேஸ்ல இங்க இருக்க வேண்டியதா போச்சு..” சித்தார்த் சோகமாகச் சொல்ல,

“ஹுக்கும்.. எனக்குமே ஹனிமூன் போக முடியுமான்னு தெரியல.. இன்னைக்கும் இந்த பகவான் ஏதாவது சாக்கு சொல்லி வாய்தா வாங்கிட்டா, என்னைக்கு கேஸ் இருக்கோ அன்னிக்கு வந்தே ஆகணும்.. நல்லவேளை கல்யாணம் சண்டேல வந்திருக்கு.. என்னால இந்த கேஸ்ல வாய்தா எல்லாம் வாங்க முடியாது. கூடவும் கூடாது..” என்று சொன்னவனை கேள்வியாகப் பார்த்து,

“என்ன கேஸ்?” என்று கேட்க, கார்த்திக் அவனிடம் அதைப் பற்றிய விவரத்தைக் கூற, அதைக் கேட்ட சித்தார்த் திகைத்தான்..

“என்ன சொல்ற கார்த்திக்.. இப்படி ஒரு இவனா? எப்படி அவன் வாய்தா வாங்கறான்? அந்தக் கேசுக்கு எல்லாம் எப்படி வாய்தா தராங்க?” சித்தார்த் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே விலை உயர்ந்த கார் ஒன்று அவர்களைத் தாண்டிச் சென்று சடன் பிரேக் அடித்து நிற்க, இருவரின் கவனமும் அங்குத் திரும்பியது..

அதில் இருந்து இறங்கிய பகவான், அங்கு நின்றுக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து திகைத்தவன், “நீ.. நீ எப்படி இன்னைக்கு வந்திருக்க? எப்படி?” என்று வாய் விட்டேக் கேட்க,

“ஏன்?” ஒற்றை வார்த்தையில் கார்த்திக் கேட்கவும்,

“இல்ல.. நீ எப்படி? அதுவும் இன்னைக்கு? உடனே..” என்று கேட்டவன், கார்த்திக் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அங்கிருந்து யாருக்கோ போனில் அழைத்துக் கொண்டு செல்ல, அவனது முகத்தில் ஒரு மாதிரி பதட்டம் தெரிந்தது..

“இவன் ஏன் என்னைப் பார்த்து இப்படி கேட்கறான்? கோர்ட்டுக்கு நான் வரதுல இவனுக்கு என்ன புதுசா இருக்கு? நான் தானே இன்னைக்கு இவன் வந்துட்டான்னு ஆச்சரியப்படணும்.. இவன் முகத்துல ஏன் டென்ஷன்?” என்று யோசனையுடன் கேட்க,    

“டேய் கார்த்திக்.. நீ அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. உன்னைச் சுத்தி இருக்கற ஆளுங்க மேல ஒரு கண்ணு வச்சிக்கோ.. அவன் இன்னிக்கு நீ எப்படி வந்திருக்கன்னு கேட்கறது எனக்கு என்னவோ டவுட்டா இருக்கு.. அவன் முகத்துல இருக்கற பதட்டம் சரியா இல்ல.. எனக்கு ஏதோ உறுத்தலா இருக்கு..” என்ற சித்தார்த்திடம்,

“ஹ்ம்ம்..” என்று யோசனையுடன் தலையசைத்த கார்த்திக்,

“எனக்கு கேஸ்க்கு டைம் ஆச்சு சித்தார்த்.. நான் வரேன்.. உனக்கு எந்த இடத்துல இன்னைக்கு கேஸ்?” என்று கார்த்திக் கேட்க, சித்தார்த் சொன்ன இடத்தைக் கேட்டவன்,

“அடுத்த ரூம் தான் எனக்கு.. வா.. சேர்ந்தே போகலாம்.. உன்னோட கேஸ் வரதுக்கு இன்னும் டைம் இருக்கு தானே..” என்ற கார்த்திக், சித்தார்த்துடன் அந்த அறைக்குச் சென்றான்.. கார்த்திக் தனது கோட்டை மாட்டிக் கொண்டு தயாராக, அந்த வழக்குத் துவங்கியது..

பகவான் கூண்டில் நிற்க, கார்த்திக் முழு வேகத்துடன் வலுவான வாதங்களை எடுத்து வைத்து வாதாடிக் கொண்டிருந்தான்.. அவனது வாதத்தைக் கேட்ட சித்தார்த், “பரவால்ல நம்ம மச்சான் நல்லா தான் வாதாடறான்.. நிறைய க்ரவுண்ட் வர்க் பண்ணி இருக்கான்..” என்று நினைத்துக் கொண்ட சித்தார்த்தின் பார்வை அந்த பகவானை நோக்கித் திரும்ப, அவனது பார்வை கார்த்திக்கை துளைத்துக் கொண்டும், ஆராய்ச்சி செய்துக் கொண்டும் இருந்தது..

அதை கார்த்திக்கும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.. அவனது பார்வை தன்னை ஆராய்ந்துக் கொண்டிருந்ததை கவனித்தவன், யோசனையுடன் எதிர்த் தரப்பு வாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்..

இறுதி வாதத்தின் அன்றே தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கார்த்திக் தனது தலையை நீவிக் கொண்டே யோசனையுடன் வெளியில் வர, சித்தார்த் அவனது தோளைத் தட்டினான்..

“நைஸ் பாயின்ட்ஸ் மச்சான்.. செம ஸ்ட்ராங் ஆர்கியூமென்ட்.. அவனால தப்பிக்கவே முடியாது..” என்ற சித்தார்த், கார்த்திக்கைப் பிடித்து நிறுத்தி,

“கார்த்திக்.. எனக்கு அந்த பகவானோட பார்வை சரியாவே படல.. உன்னை என்னவோ ஆராய்ச்சியாவே பார்த்துட்டு இருந்தான்.. எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு.. எதுக்கும் எனக்கு நீ இவனோட கேஸ் டீடைல்ஸ் அனுப்பி விடு.. நானும் கொஞ்சம் பார்க்கறேன்..” என்று கேட்ட சித்தார்த், கார்த்திக் நீட்டிய கேஸ் பைலை வாங்கிப் பார்த்தவன், சிலவற்றை தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்..

“எனக்கும் தான் சித்தார்த்.. என்னவோ அவன் நீ எப்படி இன்னைக்கு அதுக்குள்ள வந்தன்னு கேட்டது நெருடுது.. ஒருவேளை அவனுக்கு ஆதிரா காணம போன விஷயம் தெரிஞ்சு இருக்குமோ?” கார்த்திக் சந்தேகமாகக் கேட்க,

“இல்ல கார்த்திக்.. அது எப்படி அவனுக்கு தெரிஞ்சு இருக்கும். நாம தான் ஆதவன் அர்ரெஸ்ட் ஆன அப்போ கூட வெளிய யாருக்குமே சொல்லவே இல்லையே.. அவன காண்டாக்ட் பண்ணின அந்த இந்திரனுக்கு கூட, ‘எனக்கு கொரோனா.. அதனால இப்போ என்னால எதுவும் செய்ய முடியாது.. என்னோட வைஃப்க்கும் கொரோனா’ன்னு   நானும் மதியும் மெசேஜ் அனுப்பி விட்டோம்.. அதனால அவன் எங்கயும் ஓடிப் போகாம சுத்திட்டு இருந்தான்.. ஆதவன் வாயைத் திறந்து அவன் யாருன்னு சொல்லவும், விடிய காலையில கோழியை அமுக்கி பிடிச்சிட்டோம்.. அவன் ஒரு பெரிய கை தான்.. அடுத்து அவனை விசாரிச்சா அந்தப் பொண்ணுங்க எல்லாம் எங்கப் போனாங்கன்னு தெரியும்.. ரெண்டு பேரையும் இப்போ உள்ள விட்டு ரிவீட் அடிக்கணும்..” என்று சொல்லிக் கொண்டே வந்தவன்,

“எனக்கு இந்த பகவான் பார்வை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது..” சித்தார்த் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களைக் கடந்து அந்தக் கார் வெளியில் செல்ல, பகவானின் பார்வை கார்த்திக்கை எரித்து விட்டுச் சென்றது..

“இவனும் ஒரு சின்னப் பொண்ணை தான் கொடுமை படுத்தி இருக்கான்.. அது மட்டும் இல்லாம இதும் பொண்ணு கேஸ்.. அதுவும் பொண்ணுங்க கேஸ்.. அதுல சின்னப் பொண்ணுங்களா கடத்துங்கன்னு வேற அந்த மேல இடத்துல இருந்து சொன்னாங்கன்னு ஆதவன் சொன்னான்..” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே இழுத்த சித்தார்த், கார்த்திக் யோசனையுடன் அவனைப் பார்த்து, 

“எப்படியும் இவன் இந்த கேஸ்ல உள்ள போயிடுவான்.. அவனை நான் சும்மா விட மாட்டேன்..  ஆனா சித்தார்த்.. எதுக்கும் நீங்க இவனோட பேக்ரவுண்ட் செக் பண்றீங்களா? உங்க இதை வச்சுப் பாருங்க.. இவனுக்கு நிறைய சைட்ல தப்பான பிசினஸ் இருக்கு.. கஞ்சா கடத்தல், சிலை கடத்தல், கோல்ட் போல இருக்குன்னு சில இடத்துல விசாரிச்ச பொழுது சொன்னாங்க.. அதை ஆதாரத்தோட பிடிக்க நிறைய ஸ்பை வச்சு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன்.. ஒருத்தனைப் பிடிச்சு அவனை சாட்சி சொல்லவும் பேசிப் பேசி சரி பண்ணிட்டு இருக்கு..” என்று சொன்னவன்,  

“மதி காலையில இந்திரன் அர்ரெஸ்ட் ஆன விஷயத்தை மெசேஜ் பண்ணி இருந்தான்.. இப்போ இன்னும் கூட நாம ரொம்ப கேர்புலா இருக்கனும் சித்தார்த்.. அந்த இந்திரன் கூட தனியா இதை எல்லாம் செஞ்சி இருக்க முடியாதுன்னு எனக்குத் தோணுது.. இன்னும் அவனுக்கு மேல ஏதோ ஒரு லிங்க் இருக்கு..” கார்த்திக் சொல்லவும், சித்தார்த் சம்மதமாக தலையசைத்து கேட்டுக் கொண்டு,

“நீயும் இப்போ கல்யாண ஷாப்பிங் எல்லாம் போக வேண்டாம்.. நேரா வீட்டுக்குப் போ.. எதுக்கும் எங்க வெளிய போனாலும் கேர்புலாவே இரு..” என்று எச்சரிக்கை செய்ய, அவனிடம் இருந்து விடைப்பெற்ற கார்த்திக் தனது தந்தைக்கு அழைத்தான்..

“அப்பா.. நீங்க உங்களுக்கு எல்லாம் டிரஸ் எடுத்துட்டு வாங்க.. எனக்கு டிரஸ் நான் சரவணன விட்டு வாங்கச் சொல்றேன். அங்க கோயம்புத்தூர்ல கூட வாங்கிக்கலாம்.. இப்போ நான் கடைக்கு வரது கொஞ்சம் சரியா இருக்காது.. அதே போல நான் சொல்ற கடைக்கு போய் கால் பண்ணுங்க.. ஆதிரா புடவைய நான் சொன்னது போல எடுத்துக்கலாம்.. பிரச்சனை இல்ல..” என்று சொல்ல,

“என்ன கார்த்திக்.. ஏதாவது பிரச்சனையா?” பதட்டத்துடன் அவர் கேட்க,

“ஒண்ணும் இல்லப்பா.. ஒரு சின்ன உறுத்தல்.. அதுனால தான் ரிஸ்க் எடுக்க வேண்டாமேன்னு பார்க்கறேன்.. நீங்க எல்லாரும் உங்களுக்குத் தேவையானதை பார்த்து வாங்கிட்டு வாங்க..” என்றவனிடம்,

“வேற ஒண்ணும் இல்லையே..” மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்க,

“இல்லப்பா.. எதுக்கும் ஒரு ஜாக்கிரதைக்குத் தான்..” என்று அவரைச் சமாதானப்படுத்தியவன், ஆதிராவிற்கு அழைத்தான்..

அவள் போனை எடுத்ததும், “அப்பு.. என்ன ஆச்சு கேஸ்?” என்று ஆவலாகக் கேட்க,

“அது ஓகேடா.. கண்டிப்பா அவனுக்கு தண்டனை கிடைச்சிடும்.. ஆனா நீங்க ஜாக்கிரதையா இருக்கீங்க தானே.. எந்த இதுவும் இல்லையே.. என்ன சத்தம் கேட்டாலும் கதவைத் திறக்கவே திறக்காதீங்க.. அலர்ட்டாவே இருங்க.. நான் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்திடறேன்.. எதுக்கும் நீ என் கூட லைன்லையே இரு..” என்று கூற,

“ஏன் அப்பு? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க,

“நீ ஆபீஸ் வேலை பார்க்கறன்னா ஃபோன ஸ்பீக்கர்ல போட்டு அப்படியே வச்சிடு.. நான் ஹெட்போன்ஸ்ல கனெக்ஷன்லையே இருக்கேன்..” என்ற கார்த்திக்கின் குரலில் ஏதோ ஒரு பதட்டம்..

“சரி அப்பு.. நான் லைன்லையே இருக்கேன்..” என்ற ஆதிரா, நடுவில் போனை வைத்து விட்டு, ஹெட்போனசை மாட்டிக் கொண்டு,

“ஹெட்போன்ஸ்ல போட்டுட்டேன்..” என்று சொல்லவும், கார்த்திக் கிளம்பி நேராக வீட்டிற்கு வந்தான்..

போகும்பொழுதே அடிக்கடி அவன் “கண்ணம்மா.. லைன்ல இருக்கியா?” என்று ஆதிராவை அழைத்து விசாரிக்க,

“நான் இருக்கேன்.. ஆல் ஃபைன்..” என்று அவளது குரலைக் கேட்டபடியே நேராக வீட்டிற்கு வந்தவன், தன்னைச் சுற்றி பார்வையை பதித்தபடி லிப்டில் ஏறினான்..

“பேபி டால்.. கதவைத் திற.. நான் லிப்ட்ல வந்துட்டு இருக்கேன்..” என்று காலில் சொல்லவும், குழப்பமாக ஆதிரா சென்று கதவைத் திறக்க, அவசரமாக உள்ளே வந்தவனைப் பார்த்தவள்,

“என்ன ஆச்சு?” பதட்டமாகக் கேட்க,

“ஒண்ணும் இல்லடா.. எனக்கும் சித்தார்த்துக்கும் ஒரு டவுட்.. அது தான்.. அப்பாவையே எல்லாம் எடுத்துட்டு வரச் சொல்லிட்டு வந்தேன்..” என்ற கார்த்திக்கை சரவணன் கேள்வியாகப் பார்க்க,

“நீ கோயம்பத்தூர்க்கு போன உடனே எனக்கு வேஷ்டி சட்டை எடுத்திரு சரவணா.. ரிசெப்ஷன்க்கு நீயே கோட் பார்த்து எடு..” என்று சொல்லிவிட்டு,

“அஞ்சு நிமிஷம் குட்டி.. நான் குளிச்சிட்டு வந்துடறேன்..” என்றவன், தனது பதட்டத்தைக் காட்டாமல், வேகமாக குளியறைக்குள் புகுந்துக் கொண்டான். ஆதிரா அவனுக்கு காபியைக் கலந்துக் கொண்டு காத்திருக்க, அவன் குளித்துவிட்டு வரவும், அவன் கையில் காபியைக் கொடுக்க,

“தேங்க்ஸ் டா பட்டு.. ரொம்ப தலவலிக்குது..” என்று அதை வாங்கிக் கொண்டவன், அவர்களுடன் டைனிங் டேபிளில் அமர,

“என்ன ஆச்சு அப்பு.. ஏன் இப்படி? காலையில கூட கடைக்கு போயிட்டு வரேன்னு தானே சொன்னீங்க..” என்று கேட்க, சரவணன் கேள்வியாகப் பார்க்க, கோர்டில் நடந்ததைச் சொன்னவன்,

“அவனோட பார்வை எனக்கும் சித்தார்த்துக்கும் உறுத்திச்சு.. அது தான் கடைக்கு போகாம நேரா போன்னு சித்தார்த் சொன்னான்.. அதோட ஆதிராவை கடத்தினதுல இன்னொரு ஆளு அர்ரெஸ்ட் ஆகி இருக்கான்.. அவன் பேரு இந்திரன்.. அவனையும் காலையில சித்தார்த்தும் மதியும் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க.. எல்லாமே இன்னைக்கு சேர்ந்து இருக்கறதுனால கொஞ்சம் அலெர்ட்டா இருக்கலாம்ன்னு தான்..” என்ற கார்த்திக், தனது தந்தை அழைக்க காத்திருந்தான்..                   

அனைவருக்கும் உடையை எடுத்துக் கொண்டு, ஆதிராவை வீடியோ காலில் அழைத்து, அவளுக்கு அதில் பிடித்த புடவைகளை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு வந்து சேர்ந்த அனைவருமே அவனைக் குழப்பத்துடன் பார்த்தனர்..

“ஒண்ணும் இல்ல.. எல்லாம் ஒரு சேஃப்டிக்குத் தான்.. சீக்கிரம் கிளம்புங்க.. அங்கப் போய் ஜாக்கிரதையா இருங்க.. ஆதிரா இப்போ எங்கயும் வெளிய போக வேண்டாம்.. எல்லாமே நீங்களே செய்ங்க..” என்று கார்த்திக் சொல்லவும், மதி அங்கு வந்து சேர்ந்தான்..

“எனக்கு இந்த கலர் பிடிச்சிருக்கு கார்த்திக்.. உங்களுக்கு பிடிச்சு இருக்கா?” அவர்கள் வாங்கி வந்த புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா கேட்க, அவளது கன்னத்தைத் தட்டியவன்,

“சூப்பரா இருக்குடா செல்லம்மா.. இதை உனக்கு ரிசப்ஷன்க்கு எடுத்துக்கோடா கண்ணம்மா.. பிடிச்சிருக்கா?” என்று ஆவலுடன் கேட்க, அவனைப் பார்த்து கண்ணை சிமிட்டியவள், உதட்டைக் குவித்துக் காட்ட, கார்த்திக்கின் முகத்தில் புன்னகை அரும்பியது..  

இருவரையும் வேலை செய்வது போல பார்த்துக் கொண்டிருந்த சரவணனுக்கு மனதில் அவ்வளவு நிம்மதி.. “என்னோட பட்டுப்புடவை பிடிச்சு இருக்கா ஆதிரா..” அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, தான் எடுத்துக் கொண்டு வந்த புடவையை வருடியபடி அவளிடம் காட்டிய, வரமஹாலக்ஷ்மியைப் பார்த்த ஆதிரா,

“சூப்பரா இருக்கு அத்தை.. உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.. நீங்க ப்ளவுஸ்ல வர்க் பண்ணி தைச்சிக்கோங்க..” அவள் சொல்லவும், கார்த்திக் அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்த, வரமஹாலக்ஷ்மி அவளது கன்னத்தை வழித்து,

“எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடையில தைக்க கொடுக்கறேன்..” என்று கூறி விட்டு, அதை எடுத்து தனது ஹான்ட்பேகின் அருகில் வைத்துக் கொள்ள, சரவணனும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..  

இரவு உணவை முடித்துக் கொண்டு மதியுடன் அனைவரும் கிளம்புவதாக ஏற்பாடு செய்யப் பட, ஆதிரா கார்த்திக்கைப் பார்த்தாள்..

அவளது இருகைகளையும் பற்றி தனதருகே இழுத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்றி, “பத்திரம்டா கண்ணம்மா.. நான் முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்துடறேன்.. சரியா.. நம்ம கல்யாணத்துக்கு கிளம்பும் போது சந்தோஷமா கிளம்பணும் இல்ல..” கார்த்திக் அவளது மனதைப் புரிந்து சமாதானம் செய்ய,

“ஹ்ம்ம்.. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. ஆனா பரவால்ல.. நம்ம கல்யாணத்துக்கு முன்னால கொஞ்ச நாளுக்கு அம்மா அப்பா பொண்ணா இருந்துட்டு வரேன்.. உங்களை அதுவரைப் பார்க்காம கல்யாண சமயத்துல பார்த்தா இன்னும் கொஞ்சம் திரில்லிங்கா இருக்கும்.. அந்த படபடப்பு.. பட்டாம்பூச்சி எல்லாம் நான் ஃபீல் பண்ணனும்..” ஆதிராவின் பதிலில் சத்தமாகச் சிரித்தவன், அவளது கன்னத்தைக் கில்லி,

“சரிடா தங்கம்.. அம்மா என் கூட தான் கல்யாணத்துக்கு வராங்களாம்.. இங்க கிளீன் பண்ணி வச்சிட்டு நான் அங்க வீட்டுக்குப் போகப் போறேன்.. நானும் உன்னை என் மனைவியா கூப்பிட்டு தான் மறுபடியும் இங்க வீட்டுக்கு வரப் போறேன்.. ஏன்னா இது உனக்காக நான் வாங்கின வீடு.. நாம சேர்ந்து வாழப் போற வீடு..” என்று கண் சிமிட்ட, அவள் நாணத்துடன் தலைகவிழ்ந்துக் கொள்ள, இருவரையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மதி,

“சரி.. சரவணா.. லாப்டாப் எடுத்து ஆன் பண்ணு.. நாம அடுத்த ஃப்ளைட் எப்போன்னு பார்க்கலாம்.. இங்க ஒருத்தரைப் பார்த்தா கிளம்பறதா தெரியல..” என்று குரல் கொடுக்க, அதைக் கேட்டு ஆதிரா கார்த்திக்கின் பின்னால் ஒளிந்துக் கொள்ள, கார்த்திக் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு,

“டைம் ஆச்சுடா.. வா.. போகலாம்.. மதி வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. என்னால உங்க கூட இப்போ வர முடியாது.. தேவை இல்லாம எல்லாருக்குமே ரிஸ்க்.. அது தான்..” என்று அவளது கையைப் பிடித்து அழைக்க, அனைவரும் ஊருக்கு கிளம்பினர்..

ஏர்போர்ட் வரை அவர்களுடன் சென்ற மதி, காரிலேயே அமர்ந்துக் கொண்டு, அங்கு வரச் சொல்லி இருந்த தனது உடன் பணி புரியும் ஒரு அதிகாரிக்கு, தாங்கள் வந்துவிட்ட விஷயத்தை கால் செய்துச் சொல்ல, அவரும் அங்கு வந்து சேர்ந்தார்..   

“இவர் கூட நீங்க உள்ள போங்க.. அவர் உங்க கூட செக்யூரிட்டி செக் வரை வருவார்..” என்று சொல்லவும்,

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. கல்யாணத்துக்கு குடும்பத்தோட கண்டிப்பா வந்திருங்க..” சதாசிவமும், பாலகிருஷ்ணனும் அழைக்க,

“கண்டிப்பா.. நாங்க அங்க வந்துடறோம்.. என் மச்சான் கல்யாணத்துக்கு நான் இல்லாம எப்படி?” என்று கேட்கவும், சரவணனும் ஆதிராவும் அவனைப் பார்த்து புன்னகைக்க,

“சரி.. ரொம்ப நேரம் வெளிய நிக்க வேண்டாம்.. சரவணா.. நீங்க கோயம்புத்தூர் ரீச் ஆன உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணு.. லக்கேஜ் கலெக்ட் பண்ணற இடத்துலேயே நிக்கச் சொல்லி இருக்கேன்.. அவர் வந்து உங்களை பத்திரமா வீட்ல விடுவார்.. ஓகே வா?” என்று ஒரு நம்பரைத் தரவும், அதைப் பெற்றுக் கொண்ட சரவணன்,

“தேங்க்ஸ் சார்.. கண்டிப்பா கால் பண்ணிடறேன்..” என்ற சரவணன், அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்..

அவர்கள் கோயம்பத்தூர் சென்றதும் ஆதிரா அவனுக்கு கால் செய்து தாங்கள் சென்று சேர்ந்த விஷயத்தைச் சொல்லவுமே, கார்த்திக்கிற்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வெளியில் வந்தது.. சித்தார்த்தின் அறிவுரைப்படி பாதுகாப்பிற்காக, கார்த்திக் புதிய வீட்டிலேயே தங்கிக் கொள்ள, அவனுடன் இருந்த வரமஹாலக்ஷ்மி எப்பொழுதும் போல தனது டிவி பார்க்கும் வேலையை சந்தோஷமாக கவனித்துக் கொண்டிருந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!