எங்கே எனது கவிதை – 29

th (1)-c74e935b

29  

காவல் நிலையத்தில் இருந்த சிறையில் உள்ளே இருந்த இந்திரனை, மதியும் சித்தார்த்தும் விசாரிக்கத் தயாராகினர். அவனது செல்போன் ஹிஸ்டரியை எடுத்துக் கொண்டு அவன் முன்பு அமர்ந்த மதியும், சித்தார்த்தும், அதில் அதிகமாக பதிவாகி இருந்த நம்பரின் முகவரியை ட்ராக் செய்ததில், அதில் கிடைத்த முடிவில், சித்தார்த் திகைத்துப் போனான்..

“மதி.. இந்த நம்பர் இருக்கற லொகேஷன்ல பெரிய ஆளுன்னு சொன்னா.. அது அந்த பகவான் தான்.. இந்த போனுக்கு இன்னைக்கு காலையில கோர்ட்ல இருந்து தான் கால் வந்திருக்கு..” சித்தார்த் சொல்ல,

“அதே கொரோனா மெசேஜ் இவனுக்கும் தான் நாம போட்டோமே.. கண்டிப்பா அவன் சுதாரிக்கிறதுக்குள்ள நாம அவனை சுத்தி வலைச்சிடலாம்..” மதி தைரியம் சொல்லவும்,

“டேய்.. இல்லடா.. இவனை நாம ரொம்ப ஸ்ட்ராங் ஆதாரத்தோட பிடிச்சே தீரணும்.. எந்த லூப் ஹோல்லையும் அவனுக்குத் தரக் கூடாது.. இவனைத் தான் இன்னைக்கு கோர்ட்ல கார்த்திக் கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டான்.. அனேகமா அவனுக்கு தண்டனை கிடைச்சிடும். இந்த பகவான் இன்னைக்கு என்ன பண்ணினான் தெரியுமா?” சித்தார்த் டென்ஷனுடன் சொல்லிக் கொண்டிருக்க, மதி அவனைக் கேள்வியாகப் பார்த்தான்.

“காலையில கார்த்திக்கை கோர்ட்ல பார்த்த உடனே ரொம்ப ஷாக்கா ‘நீ எப்படி வந்த?’ன்னு கேட்டான்.. அப்பறம் அவனோட பார்வை எல்லாம் சரியே இல்ல.. கார்த்திக்கைப் பார்த்துக் கிட்டே ஏதோ யோசனையில இருந்தான்.. என்னவோ அந்த பார்வை ரொம்ப உறுத்தலா இருந்தது.. அது தான் அவனை பத்திரமா நேரா வீட்டுக்கு போன்னு சொன்னேன்.. அனேகமா அவன் கல்யாண ஷாப்பிங்க்கு கூட போகலைன்னு நினைக்கிறேன்… அந்த பகவானோட பார்வையே சரி இல்ல மதி.. கண்டிப்பா அவனை ரொம்ப நேரம் வெளிய விட்டு வைக்கிறது கார்த்திக்குக்கு ஆபத்து.. இப்போ அவனோட கல்யாண நேரத்துல எந்த டென்ஷனும் வேண்டாம்.. பாவம்..” என்று சித்தார்த் சொல்ல, அதை இந்திரன் வாயில் இருந்து வாக்குமூலமாக வாங்க வேண்டி இருவரும் தயாராகினர்..

“ஹ்ம்ம்.. எப்படியாவது அந்த இந்திரனை வாயைத் திறந்து சொல்ல வைக்கணும் சித்தார்த்..” மதி சொல்லிக் கொண்டே, இந்திரன் இருக்கும் அறைக்குச் சென்றான்..

அவன் இருவரையும் ஒருமாதிரிப் பார்க்க, மதியின் அருகில் அமர்ந்த சித்தார்த், கையைக் கட்டிக் கொண்டு மதியைப் பார்க்க, “ஆமா.. இன்னைக்கு காலைல அந்த பகவான் கேஸ் என்ன ஆச்சு? கார்த்திக் ஏதாவது சொன்னானா?” மதி சித்தார்த்திடம் கேட்கவும், இந்திரன் அதிர்ச்சியுடன் மதியைப் பார்த்துவிட்டு, சித்தார்த்தைப் பார்த்தான்..

“அதுவா.. இன்னைக்கு ஆல்மோஸ்ட் மாட்டிக்கிட்டான்.. கண்டிப்பா இன்னைக்கு கார்த்திக்கோட வாதம் சும்மா ஃபையரா இருந்தது.  தீர்ப்பு கண்டிப்பா அவனுக்கு தண்டனை தரதா தான் இருக்கும்.. ஆனா.. என்ன தண்டனை? எத்தனை வருஷம் உள்ள போவான்னு தான் மேட்டரே.. அதோட அந்த பகவானுக்கு நிறைய தப்பான தொழில் இருக்கறத கார்த்திக் கண்டுப்பிடிச்சு இருக்கான். அதை ஆதாரத்தோட அவன் பிடிக்கவும் பிடிச்சிட்டான் மதி.. இன்னும் அந்த கேஸ் எல்லாம் கோர்ட்டுக்கு வந்தா அவன் உயிரோட ஜெயிலை விட்டு வெளிய வருவானான்னே தெரியாது.. சரியான ஆதாரத்தோட மாட்டி இருக்கான்.. அந்தக் கோழி சரியா சிக்கி இருக்கு..” என்று அவன் சொல்லவும், மதி கையைத் தட்டி,

“செமடா சித்தார்த்.. அந்த மாதிரி ஆளுங்க எல்லாம் வெளியவே இருக்கக் கூடாது.. ஜெயிலுக்குள்ள வரட்டும்.. அவனை நாம ஸ்பெஷலா கவனிக்கலாம்..” மதியின் பதிலில், இந்திரன் அவனைக் கலவரத்துடன் பார்த்தான்..

“இப்போ இவனை என்ன செய்யறது? ஏதாவது செய்யலாமா? இல்ல அவன் கூட ஜோக் வீடியோஸ் பார்த்து சந்தோஷமா இருக்கலாமா?” மதி கேட்கவும், அவர்களது அடிதடியை எதிர்பார்த்து காத்திருந்த இந்திரன், மதி அவ்வாறு சொல்லவும், குழம்பிய படி, இருவரையும் பார்க்க, மதி தனது மொபைலை எடுத்து அங்கு நடுவில் இருந்த டேபிளில் வைத்தான்..

ஒரு மணி நேரம் செல்லவும், “செம காமடி இல்லடா..” என்று கேட்டுக் கொண்டே, மதி, பவர் பேங்கரை எடுத்து மொபைலை சார்ஜ் செய்துக் கொண்டே கேட்க, இந்திரன் குழப்பத்தின் உச்சியில் இருந்தான்.

அவன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, இந்திரனைப் பார்த்தவன், “உங்க வக்கீல் ஏதோ அவசர வேலையா வெளியூர் போயிருக்காராம் இந்திரன்.. எங்க அண்ணன் கூட பெரிய வக்கீல் தான்.. அவனை உனக்கு இன்னைக்கு ஜாமீன் வாங்க கோர்ட்டுக்கு அனுப்பி இருக்கேன்.. கண்டிப்பா உங்களுக்கு ஜாமீன் கிடைக்கும்..” என்று சீரியசாக சொல்ல,

“ஹஹா.. டேய் மச்சி.. சகலையவா ஜாமீன் வாங்க அனுப்பி இருக்க? அவரு ஜாமீன் எந்தக் கடையில கிடைக்கும்ன்னு இல்ல கேட்பாரு?” சித்தார்த் கேள்வி கேட்க, இந்திரன் குழப்பத்துடன் பார்த்தான்..

“எனக்கு என்னோட மொபைலைத் தரீங்களா? நான் எதுக்கும் என்னோட வக்கீல் கிட்ட பேசிட்டு சொல்றேன்..” தயக்கத்துடன் இந்திரன் கேட்க, மதி தனது மொபைலை எடுத்து நீட்டினான்..

“இந்தாங்க.. இந்த மொபைல்ல இருந்து உங்க வக்கீல்க்கு கால் பண்ணிப் பாருங்க. நான் நம்பர் சொல்றேன்.. தயாளன் தானே..” என்று கேட்க, இந்திரன் ‘ஆம்’ என்று யோசனையுடன் தலையசைக்கவும், அந்த நம்பரை அவனிடம் சொல்லவும், இந்திரன் வேகமாக அந்த வக்கீலின் நம்பருக்கு கால் செய்யத் துவங்கி, அந்த கால் எடுக்கப்படாமல் போய்க் கொண்டிருக்கவும், ஏமாற்றத்துடன் சித்தார்த்தைப் பார்த்தான்..

“இப்போ என்ன திடீர்னு அவன் வெளியூருக்கு போயிருக்கான்? என்கிட்டே சொல்லவே இல்லையே..” என்று கேட்டவன்,

“அவரோட ஜூனியர் நம்பர்.. அவன் பேரு ஆல்பர்ட்.. அந்த நம்பரும் என் மொபைல்ல இருக்கு..” சித்தார்த்திடம் இருந்த மொபைலைப் பார்த்துக் கொண்டே சொல்ல

“ஆனா.. அந்த ஆல்பர்ட்டுக்கு கால் பண்ண முடியாது இந்திரன்.. அவரும் பேமிலி டூர் போயிட்டாராம்..” சித்தார்த் சொல்லவும், அவசரமாக அந்த நம்பரை வாங்கி சித்தார்த்தின் மொபைலில் போட்டுப் பார்த்த இந்திரன், அந்த நம்பரும் செயலற்று இருக்கவும், குழப்பத்துடன் பார்த்தான்..  

“அது தான் என் சகல ஒரு சந்தைக்கு உங்களுக்கு ஜாமீன் வாங்க போயிருக்காரே..” என்று சொன்ன சித்தார்த், அப்பொழுது மதியிடம் ஒரு காவல்துறை அதிகாரி அவனுக்காக காத்திருக்க, மதி அவனுடன் பேச எழுந்துச் சென்றான்..

அவன் கொடுத்த ஒரு பென்ட்ரைவ்வை வாங்கி, தனது சிஸ்டமில் போட்டுப் பார்த்த மதி கொதித்துப் போனான்..

“சித்தார்த்..” என்ற மதியின் குரலில், அவனிடம் சென்ற சித்தார்த், அதைப் பார்த்ததும்,

“இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது..” என்று தனது முஷ்டியை மடக்கியவன், இந்திரனின் முன்பு சென்று அமர்ந்தான்.. மதியும் அவனை முறைத்துக் கொண்டே வந்து அமர,

“ஆமா.. இது போல சின்னப் பொண்ணுங்களோட அப்யூஸ் வீடியோ வச்சிக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியுமா தெரியாதா? சட்டப்படி அது பார்க்கறதே தப்புன்னு கவர்மென்ட் ரூல்ஸ் போட்டு இருக்கும் போது.. நீங்க தப்பு பண்ணினது இல்லாம வீடியோவே ரெகார்ட் பண்ணி இருக்கீங்க.. அதை டெலீட் செஞ்சாலும்.. அதை ரிக்கவர் செய்யலாம்ன்னு உனக்குத் தெரியுமா தெரியாதா? ஆமா.. அந்த வீடியோங்கள்ள இருக்கறது யாரு? நீ இருக்க.. இன்னொரு நபர்?” சித்தார்த்தின் குரல் உயர, இந்திரன் விதிர் விதிர்த்துப் போனான்..

“அது.. அது..” அவன் இழுக்க,

“ப..க..வா..ன்..” அவன் முடித்து வைக்க, மதி இந்திரனின் கன்னத்தைப் பதம் பார்த்தான்..

“குழந்தைங்கள வச்சு என்னடா பண்றீங்க? அதை வீடியோ எடுத்து வச்சு.. அதை ஒருத்தருக்கு ஒருத்தர் அனுப்பிக்கிட்டு.. கேவலமா இல்ல.. ஏண்டா அந்த குழந்தைங்க எல்லாம் கத்தறது கூட காதுல விழல.. அதுங்க எல்லாம் அந்தக் கதறு கதறுதுங்களே.. அப்படி என்னடா உனக்கு? நீ எல்லாம் மனுஷனாடா?” என்று கேட்டவன், வெறி கொண்டவன் போல இந்திரனை கன்னம் கன்னமாக அறையத் துவங்கினான்..

“இப்போ நீ உண்மையை ஒத்துக்கல நான் இதை வச்சே உன்னை அசிங்கப்படுத்திடுவேன்.. இது எல்லாம் ஒரிஜினல் வீடியோ தான்னு நாங்க எல்லாம் ஃபாரன்சிக்ல சர்டிபிகேட் வாங்கியாச்சு. இதை வெளிய விட்டேன்னு வைய்யேன் உன்னை எல்லாம் மக்களே கொன்னு போட்டுடுவாங்க.. ஒழுங்கா உண்மையச் சொல்லுடா.. உனக்கு அந்த பகவனானுக்கும் என்ன சம்பந்தம்? ஆதிராவைக் கடத்தினதுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? சொல்லு.. உண்மையைச் சொல்லு..” என்று அவனைப் பிடித்து உலுக்கிக் கொண்டே கேட்கவும், இந்திரன் உண்மையைக் கொட்டத் துவங்கினான்..

“ஆதிராவை கடத்த ஐடியா சொன்னது இந்த ஆதவன் தான்.. அவளோட போட்டோவை அனுப்பி கடத்தலாம்ன்னு சொன்னதும் அவன் தான். ஆனா.. கடத்தினத்துக்கு அப்பறம் தான் அவ கார்த்திக்கோட பொண்டாட்டின்னு பகவானுக்கு தெரிஞ்சது.. தெரிஞ்ச உடனே பகவான் அவளை வெளிநாட்டுக்கு உடனே கடத்த ஏற்பாடு செய்யச் சொல்லி ரொம்ப ப்ரெஷர் பண்ணத் தொடங்கிட்டார்.. அந்த டெட்பாடிக்கு எல்லாம் ஏற்பாடு செஞ்சது அவர் தான்.. ஆனா.. இந்த ஆதவன் இப்படி மாட்டிக்கிட்டான்..” என்று சொல்லவும், சித்தார்த் அவனைப் பிடித்து உலுக்கி,

“ஏன்? ஏன் அப்படி சொன்னான்?” என்று கேட்க,

“அது.. அது வந்து.. அந்த கார்த்திக் ஒரு கேஸ்ல அவருக்கு எதிரா வாதாடராராம்.. ஒருவேளை ஆதிராவை காணும்னா அவன் வரமாட்டான்.. அந்த இதுல கேஸ்ல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்ன்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தார்.. ஏன்னா கார்த்திக் அவருக்கு எதிரா ரொம்ப ஸ்ட்ராங்கா வாதாடிட்டு இருந்தான்.. கண்டிப்பா தண்டனை வாங்கித் தந்திடுவான். எப்படியாவது அவன் கோர்ட்டுக்கு வரக் கூடாதுன்னு சொல்லி, கார்த்திக்கைப் பழி வாங்க தான் அவனை சுத்தல்ல விட்டலாம்ன்னு சொன்னாரு..” இந்திரனின் பதிலை அவனுக்குத் தெரியாமல் ஒரு அதிகாரி வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்தார்.

“இது போல எத்தனை குழந்தைகளைடா நாசம் பண்ணி இருக்கீங்க?” சித்தார்த் அவனைப் பிடித்து உலுக்க,

“இது வரை பத்து..” என்று சொல்லி முடிப்பதற்குள் மதி அந்த சேரை எட்டி உதைத்தான்..

“எத்தனை பொண்ணுங்க.. எங்க எங்க இருக்காங்க? உண்மையைச் சொன்னா நல்லா இருக்கும்.. இல்ல மகனே உன்னை என்ன செய்வேன்னே தெரியாது..” மதியின் உறுமலில்,

“இந்த ரெண்டு மாசத்துல அஞ்சு பேர்.. அவங்க எல்லாம்..” என்றவன், அவரவர் இருக்கும் இடங்களைச் சொல்ல, இந்திரனின் காலில் எட்டி உதைத்தான்.

“நீ எல்லாம் மனுஷனே இல்லத் தெரியுமா?” என்றவன், அந்த வீடியோ எடுத்துக் கொண்டிருந்த காவலரைப் பார்த்து கண் காட்டி விட்டு, அவர் நகர்ந்துச் சென்றதும், இந்திரனைப் போட்டு மிதிக்கத் துவங்கினான்..

“உங்களை எல்லாம் சும்மா விடக் கூடாதுடா நாய்ங்களா.. சை..” அவனது உச்சபட்ச கோபத்தில் மதி கத்த, அவனைப் பிடித்துத் தடுத்த சித்தார்த்,

“உன்கிட்ட பாகவனைப் பத்தின வேற ஏதாவது ஆதாரம் இருந்தா தந்திடு.. இல்ல உன்னை நிஜமா இது போல தப்பு பண்ணி இருக்கான்னு வீடியோ ரிலீஸ் பண்ணி. உங்களை பப்ளிக்ல ஓட விட்டா மக்களே உங்களை அடிச்சு துரத்துறது போல செஞ்சிடுவோம். அவங்க கையில எல்லாம் நீ சிக்கின உயிரோட இருக்க மாட்ட..” என்று மிரட்ட,

“ப்ரெஸ்க்கு இன்ஃபார்ம் பண்றேன்.. அப்போ தான் இவனுங்க எஸ்கேப் ஆக மாட்டாங்க..” மதி மிரட்டவும்,

“வேண்டாம்.. வேண்டாம்… என்னோட சொந்தங்களுக்கு நடுவுல என் மானமே போயிரும்.. என்னோட பொண்ணைக் கட்டிக் கொடுத்த இடம் ரொம்ப மரியாதைக்கு உள்ளான இடம்.. அவங்க அப்பறம் அவளை ஒழுங்கா நடத்த மாட்டாங்க..” இந்திரன் கதறத் துவங்க,

“உனக்கு ஒரு பொண்ணு இருக்கா? அப்போ இந்தச் சின்னப் பிள்ளைங்களை அந்தப் பாடுபடுத்தும் போது உனக்கு உன் பொண்ணு நியாபகம் வரலையா? அப்போ அந்த பெரிய மனுஷன் உனக்கு அவன் சப்போர்ட் பண்ணவும்.. மாட்டிக்க மாட்டன்னு தைரியம்.. அது தானே..” மதி கத்த, இந்திரன் பதறத் துவங்கினான்.

“கார்த்திக்கை வரச் சொல்லி கால் பண்ணுடா.. இவனை கோர்ட்டுல இன்னைக்கு ப்ரொட்யூஸ் பண்ணி ரிமாண்ட் பண்ணிடலாம்.. கார்த்திக் கிட்ட இருக்கற எவிடென்ஸ் எல்லாம் எடுத்து வரச் சொல்லு.. இன்னைக்கு அந்த பகவானுக்கும் வலை விரிச்சிடலாம்..” என்ற மதியின் தோளைத் தட்டிய சித்தார்த்,

“கார்த்திக் தனியா வர வேண்டாம்.. நான் போய் அவனைக் கூட்டிட்டு வரேன்..” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே,

“ஹலோ..” என்ற குரல் கேட்க, அங்கு திரும்பிப் பார்த்த சித்தார்த் தலையில் அடித்துக் கொண்டான்..

“இவனை வீட்ல இருன்னா சும்மா இருக்க மாட்டியா?” சித்தார்த் கேட்க,

“வீட்டுக்குள்ள தனியா உட்கார்ந்து என்னையும் சீரியல் பார்க்கச் சொல்றியா? என்னால முடியலடா.. அந்த டைலாக் எல்லாம் கேட்கக் கூட முடியல.. அது தான் ஓடி வந்துட்டேன்.. ஆமா.. நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யறீங்க? இவன் ஏதாவது வாயைத் திறந்தானா?” கேட்டுக் கொண்டே கார்த்திக் அவர்கள் முன்பு அமர, சித்தார்த் அவனைப் பார்த்து சிரித்தான்..

“அம்மா மடியில படுத்து சீரியல் பார்க்கலாம்ல..” அவனை கேலி செய்ய,

“ஏன்? இல்ல ஏங்கறேன்? நான் மட்டும் அப்படி செஞ்சேன்னு வைய்யேன்.. என் புடவை கசங்குது எழுந்திருடான்னு சொல்லுவாங்க.. இல்லையா? புடவையை வீண் பண்ணிட்ட எனக்கு இன்னும் நாலு புடவை வாங்கிக் கொடுன்னு சொல்லுவாங்க.. எதுக்கு நமக்கு வம்பு.. அது தான் நாங்க ஒரு ஆளை கூட்டிட்டு வரப் போறோமே.. அவங்க வந்தா மடியில சாஞ்சா, என்னோட எல்லா ஸ்ட்ரெசும் பறந்து போயிடும்.. அவ பாடச் சொல்லிட்டு நாள் பூரா கேட்டுட்டு இருக்கலாம்..” அவன் சொல்லிக் கொண்டிருக்க, மதி அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்..

அவனைப் பார்த்து புன்னகைத்தவன், “சரி.. சொல்லுங்க.. என்ன ஏதாவது இவன் பேசினானா?” கார்த்திக் கேட்கவும்,

“ஹ்ம்ம்..” என்ற மதி,

“எங்க கூட ரூமுக்கு வா..” என்று கூறியவன், கார்த்திக்கை அமரச் சொல்லி விட்டு, தனது சிஸ்டமைத் திருப்பி கார்த்திக் பக்கம் காட்டி, ஒரு பென்ட்ரைவை போட்டு, அதில் இருந்த பைல்களைப் போடவும், கார்த்திக் அதிர்ந்துப் போனான்..

“என்ன மதி இது?” அதைப் பார்க்க முடியாமல் கார்த்திக் அதை அனைக்க, மதி மீண்டும் ஒரு வீடியோவை இயக்கவும்,

“ஹையோ என்னால பார்க்க முடியல மதி..” கார்த்திக் பதற,

“உனக்குத் தேவையான ஒண்ணும் இதுல இருக்கு..” என்றவன், கார்த்திக் கேள்வியாகப் பார்க்கவும்,

“இதை கவனி..” என்று சொல்லவும், அதில் இருந்தவனைப் பார்த்த கார்த்திக் அதிர்ந்து போனான்..

“ஹையோ.. மதி. இந்தப் பொண்ணு.. இந்தப் பொண்ணு இப்போ உயிருக்கு போராடிட்டு இருக்கா.. இப்போ நான் அந்த கேஸ்ல தான் வாதாடிட்டு இருக்கேன்.. அந்தப் பொண்ணோட அம்மா என்கிட்டே இவன் பண்ணின கொடுமை எல்லாம் சொல்லி அப்படி கதறினாங்க.. அந்த வீட்ல இருந்த வேலை செய்யறவங்களைப் பிடிச்சு தான் நான் சாட்சி சொல்ல வச்சேன்.. அதே போல செர்க்கம்ஸ்டான்சியல் எவிடன்ஸ் அவனுக்கு எதிரா நிறைய இருந்தது..

எப்படின்னா.. அடிக்கடி அவன் அந்தப் பொண்ணை கூப்பிட்டு ரூமுக்கு வரச் சொல்லி அவன் சாக்லேட் தருவான் போல.. அது போல தண்ணி எடுத்துவான்னு சின்னச் சின்ன வேலை சொல்லுவான் போல.. ஒரு கட்டத்துல அந்தப் பொண்ணு அவன் பக்கமே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கு.. அப்போ அவன் அந்தப் பொண்ணை அடிச்சிருக்கான்.. இது போல நிறைய.. அதை வச்சு தான் நான் கேஸ் மூவ் பண்ணிட்டு இருக்கேன்..” என்றவன் தலையை நீவிக் கொண்டான்..

“இன்னும் நிறைய சித்திரவதை எல்லாம் பண்ணி இருக்கான்.. அந்த பொண்ணோட டிரஸ்ல இருந்த சாம்பிள்ல இருந்தும், அந்தக் குழந்தையை ராத்திரி பூரா சித்திரவதை செஞ்சிட்டு, அதுவும் வீட்ல இருக்கற யாருக்குமே தெரியாத அளவுக்கு, வீட்டுலயே வச்சு செஞ்சிட்டு, மறுநாள் காலையில அவனோட அடியாள் விட்டு, கருப்பு  கவர்ல சுத்தி அவன் தூக்கிப்போட சொன்ன பெட்ஷீட் கிடைச்சது.

அவங்க குழந்தையைக் காணும்ன்னு அந்த ராத்திரியே அவங்க போலீஸ்ல கம்ப்ளயின்ட் தரவும், போலீஸ்னால ஈசியா ரிக்கவர் செய்ய முடிஞ்சது.. அந்தக் குழந்தைய ஒரு துணியில சுத்தி அவன் வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு புதருல போட்டு இருந்தான்.. அந்த துணியையும் அவனோடது தான்னு அந்த வீட்ல துணி துவைக்கிற அம்மா உறுதிப் படுத்தினாங்க.. அப்போ தான் அந்த வீட்ல வேலை செய்யற இன்னொரு லேடி, அந்த கவரை சந்தேகப்பட்டு எடுத்து வச்சிருக்கேன்னு எங்க கிட்டத் தந்தாங்க. அந்த பெட்ஷீட்ல அந்தப் பொண்ணோட ப்ளட் இருக்கறது ஃபாரன்சிக்ல ப்ரூவ் ஆகி இருக்கு.. இது கண்டிப்பா அவனை உள்ள தள்ளிரும்.. இதை விட என்ன ஸ்ட்ராங் எவிடன்ஸ் வேணும்?” என்று கேட்க,

நான் உன்னோடு வாழும்…

நொடியில் ஏனோ…

மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்… 

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…

என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…  

கார்த்திக்கின் செல்போன் இசைக்கவும், மதியும், சித்தார்த்தும் அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்த, ஒரு நிமிஷம் என்று கையைக் காட்டி,

“ஹாய்டா ஆதிரா.. என்ன விஷயம்?” என்று கேட்க,

“நானும் எஸ்.பி.யும் ஒரு சூட் ஆர்டர் செஞ்சி இருக்கோம்… அது கலர் பார்க்கறீங்களா?” என்று கேட்க,

“குட்டி உனக்கு பிடிச்ச கலர் எதுவா இருந்தாலும் வாங்குடா.. நான் வந்த அப்பறம் ட்ரையல் பார்த்துக்கறேன்.. இப்போ நான் ரொம்ப முக்கியமான வேலையா ஸ்டேஷன்ல இருக்கேன்.” அவனது பதிலில்,

“ஏன் என்னாச்சு? ஸ்டேஷன்ல என்ன வேலை?” அவள் பதற,

“யுவர் ஹானர்.. நான் ஒரு வக்கீல்.. நான் ஸ்டேஷனுக்கு போகலைன்னா தான் அதிசயம்.. டென்ஷன் ஆகாதே. சும்மா மதியையும் சித்தார்த்தையும் பார்க்க வந்தேன்.. இப்போ நான் போனை வைக்கவா?” என்று கேட்க,

“ஒண்ணும் பிரச்சனை இல்லையே..” மீண்டும் அவள் கேட்கவும்,

“எதுவுமே இல்லம்மா. சும்மா தான் வந்தேன்..” என்றவன், போனை வைக்கவும், இருவரும் அவனைப் பார்க்க,

“நேத்து அவளை ஊருக்கு அனுப்பின பொழுது நாம போட்ட செக்யூரிட்டி இதுல கொஞ்சம் பயந்து இருக்கா.. அதுவும் நான் வந்து அங்க வீட்டுக்கு போறேன்னு அவகிட்ட சொல்லி இருந்தேன்.. இப்போ செக்யூரிட்டி ரீசன்க்கு இங்கயே இருக்கேன்னு சொல்லவும் அவளுக்கு பயம்.. என்னையும் ஊருக்கு வரச் சொல்லிட்டு இருக்கா..” கார்த்திக் சொல்லவும், இருவரும் ஒரு சேர மண்டையை அசைத்தனர்..

“சரி கார்த்திக்.. உன்கிட்ட அந்த பகவானுக்கு எதிரா என்ன என்ன எவிடன்ஸ் இருக்கு?” மதி கேட்கவும்,

“அவனோட பாக்டரில எடுத்த ஒரு சிசிடிவி பூட்டேஜ் இருக்கு.. அது அவனோட மசாலா கம்பனில இருந்து வெளிய போன ஒரு லாரியில இருந்து பிடிச்ச கஞ்சா பேக்கட். அந்த பேக்டரில ஒரு சீக்ரெட் ரூம் போல ஒண்ணு இருக்காம்.. அதுல பேக் பண்ற அப்போ எடுத்த ஒரு வீடியோவும் அப்பறம் போட்டோவும் இருக்கு.. அவங்க ஆளு ஒருத்தனோட வாக்கு மூலமும் இருக்கு. அவன் அப்ரூவர் ஆகி ரகசிய வாக்குமூலம் தரேன்னு சொல்லி இருக்கான்.. அவன் மூலமா தான் அந்த கஞ்சா பேக் பண்றதை எல்லாம் அவனோட கம்பனி அட்டைப் பெட்டியோட போட்டோ எடுக்கச் சொன்னேன்.. அதுல அந்த பேக்கிங் டைம்ல பகவானும் இருந்தான்.. பெரிய மீனா நமக்கு சிக்கி இருக்கு.. இன்னொன்னு தெரியுமா?

அவன் இல்லீகலா வெளிநாட்டுல இருந்து அவனோட பாக்டரிக்கு வர மசினரி கண்டெய்னர்ல கோல்ட் கடத்தல் கூட செய்யறான்.. அதுக்கான ஆதாரம் இதோ..” என்று தனது மொபைலைக் காட்டியவன், அதில் தனது பாஸ்வர்ட் போட்ட போல்டரில் இருந்த ஒரு டாகுமென்ட்டையும், ஒரு வீடியோவையும் காட்ட, மதி அதிர்ந்து போனான்..

“கார்த்திக்.. என்ன இது?” என்று அவன் கேட்டு சித்தார்த்திடம் காட்ட,

“இதெல்லாம் நான் கோர்ட்ல கடைசியா அந்த பொண்ணு வழக்குல நியாயம் கிடைக்க யூஸ் பண்ணலாம்ன்னு வச்சிருக்கேன்.. அந்த கடைசி நாள் ஆர்க்யூமென்ட்க்கு இத எடுத்தா கண்டிப்பா அவனுக்கு தண்டனை கிடைக்கும் இல்ல..” என்று கேட்க,

“செமடா.. இப்போ நான் இந்திரன் வாக்கு மூலம் சொல்றேன் கேட்டுக்கோ..” என்ற மதி,

“ஆதிரா உன்னோட ஆளுன்னு தெரியவும் தான்.. அவன் உன்னை பழிவாங்க உடனே அவளை வெளிநாட்டுக்கு கடத்துன்னு ப்ரெஷர் போட்டு இருக்கான்..” எனவும், கார்த்திக்கின் முகம் கோபத்தில் சிவந்தது..

“அவனை நான் சும்மா விட மாட்டேன்.. கண்டிப்பா அந்தக் கேஸ்ல அவனை வெளியவே வர விட மாட்டேன்..” கார்த்திக் கோபமாகக் கத்த, சித்தார்த் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்..

“கண்டிப்பா இந்திரனை கோர்ட்ல மதி ரிமாண்ட் பண்றான்.. அதே நேரம் சித்தார்த் போய் வாரன்ட்டோட அந்த பகவானை அர்ரெஸ்ட் பண்ணப் போறான்.. நீ கோர்ட்ல அந்த இந்திரனுக்கு ஜாமீன் கிடைக்காம பார்த்துக்கோ.. மீதி எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.. இவனுங்களை விடக் கூடாது..” என்ற மதி,

“நான் அவனை கோர்ட்டுக்கு கிளப்பறேன்.. நீயும் ரெடியா? நேரா கோர்ட்டுக்கு வரியா?” என்று கேட்கவும்,

“ஹ்ம்ம்.. வரேன்..” என்ற கார்த்திக், நேராக கோர்ட்டிற்குச் சென்று அந்த இந்திரனை ரிமாண்டில் வைக்க, விஷயம் காட்டுத் தீயைப் போல மீடியாக்களில் பரவத்துவங்கியது..

அதே போல பகவானையும் நேராக அர்ரெஸ்ட் செய்து, சித்தார்த் கோர்டில் ரிமாண்ட் செய்து, சிறையில் அடைக்க, கார்த்திக்கிற்கு எதுவோ சாதித்த உணர்வு..

“தேங்க்ஸ் மதி. தேங்க்ஸ் சித்தார்த்..” அவனை சிறையில் அடைத்ததும், கார்த்திக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க,

“மச்சான்.. இனிமே உனக்கு தான் நிறைய வேலை..கல்யாண வேலையோட இதுவும் சேர்ந்து இருக்கு.. முதல்ல கல்யாணம் செஞ்சிக்கிட்டு, என்ஜாய் பண்ணிக்கிட்டே கேசையும் பாரு..” என்று சொல்லவும், கார்த்திக் சிரிக்க,

“ஹாப்பி மேரீட் லைஃப்டா.. போய் கனா காணத் தொடங்கு..” என்று அவனை வழியனுப்பி வைக்க, கார்த்திக் சந்தோஷமாக வீட்டிற்கு வந்தான்..    

அன்றய இரவு ஆதிராவிற்கு அழைத்து விஷயத்தைக் கூறியவன், “அம்முக்குட்டி.. அந்த இவன பிடிச்சாச்சு.. அடுத்து அவனுக்கு தண்டனை வாங்கித் தரனும்.. அவ்வளவு தான் வேலை..” என்று சொன்ன கார்த்திக், அவளுக்கு போனிலேயே முத்தத்தை வழங்க,

“ஹையோ நிஜமாவா? அப்போ சீக்கிரம் இங்க வந்திருங்க.. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்..” அவளது கொஞ்சலில்,

“பார்க்கறேன்டா.. இங்க கேஸ் எப்படி மூவ் ஆகுதுன்னு சொல்லி பார்த்துட்டு வரேன்..” என்றவன், சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு போனை வைக்க, வெகுநாட்களுக்குப் பிறகு, அவனது கண்களை நிம்மதியான உறக்கம் தழுவியது..