5
கார்த்திக்கிடம் இருந்து போன் வரும் என்று வித்யாவும், பாலகிருஷ்ணனும் காத்திருந்தனர்.. அவனிடம் இருந்து போன் வராமல் போகவும், பொறுக்க முடியாமல் கார்த்திக்கிற்கு அழைத்தாள். அவனது போன் அப்பொழுதும் எடுக்கப்படாமல் போகவும், வேறு வழியின்றி, வித்யா சரவணனுக்கு அழைக்க, அவனது எண்ணைப் பார்த்தவனுக்கு நெஞ்சில் வலி எழுந்தது. அவளிடம் எப்படிச் சொல்வது என்று புரியாமல் சரவணன் தடுமாறினான்..
அவனது செல்போன் ஒருமுறை அடித்து ஓய்ந்த பின், மீண்டும் அவனது செல்போன் அடிக்கவும், அவளது பதட்டம் புரிந்தவன் போல போனை எடுத்தவன்,
“வித்யா.. நான் இப்போ கோயம்புத்தூர்க்கு போயிட்டு இருக்கேன்.. எங்க அண்ணா, ஆதிராவோட அப்பா அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துட சொன்னான்..” என்று சொல்லவும், குழம்பிப் போனவள்,
“என்ன சொல்றீங்க? ப்ளீஸ் சொல்றத க்ளியரா சொல்லுங்க.. ஆதிரா எங்க? இப்போ எதுக்கு கோயம்பத்தூர் போயிட்டு இருக்கீங்க?” வித்யா கேட்கவும்,
“ஆதிரா ஆபீஸ்ல இல்ல வித்யா.. காலைல வாட்ச்மேன் போகும்போது நைட் ஷிப்ட் முடிச்சு எல்லாருமே போயிட்டாங்க.. வேலை இருக்கறவங்க தவிர யாருமே உள்ள இல்லைன்னு சொன்னாங்க போல.. குறிப்பா லேடீஸ் யாருமே இல்லன்னு சொல்லிட்டு போயிருக்கார்.. இவரும் பார்த்து இருக்கார்.. நானும் உள்ள போய் பார்த்தேன்.. அவ அங்க இல்ல..” என்று சொல்லவும், வித்யா விசும்பலுடன்,
“ஆதிரா ஆபீஸ்ல இல்லையா? அவளைக் காணுமா? எங்க தான் போயிருப்பா?” பதட்டத்துடன் கேட்க,
“ஹ்ம்ம்.. ஆமா.. இப்போ தான் நாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போனோம்.. அண்ணாவோட சீனியர்க்கு தெரிஞ்ச டிஸ்பி ரெண்டு பேர் இருக்காங்களாம்.. அவங்க டிவிஷன்ல தான் எங்க ஆபீஸ் இருக்கற இடம் வருது.. அவர் சொல்லி கம்ப்ளையின்ட் கொடுக்கப் போனோம்..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“அவங்க சீக்கிரம் அவளைக் கண்டுப்பிடிச்சுக் கொடுக்கறேன்னு சொல்லி இருக்காங்களா?” அவசரமாகக் கேட்கவும்,
“ஆமா.. ஆனா.. முதல் கட்ட விசாரணையா அண்ணா மேல சந்தேகப்பட்டு அங்கேயே உட்கார்த்தி வச்சிட்டாங்க.. அவனும் அமைதியா போய் உட்கார்ந்துக்கிட்டுத் தான் என்னை அனுப்பினான்..” சரவணன் வருத்தமாகச் சொல்லவும், வித்யா அதிர்ந்துப் போனாள்.
“என்ன? என்ன சொல்றீங்க? கார்த்திக்கை எதுக்கு சந்தேகப்படறாங்க? அவரு லாயர் தானே ஒண்ணும் பேசலையா? அவரு ஆதிராவை ரொம்ப அதட்டக் கொடா மாட்டார்.. இதுல அவரு தான் அவளைக் கடத்தப் போறார் பாருங்க.. லூசு டிஎஸ்பிங்க” படபடப்பாக அவள் கேட்க,
“இல்ல.. அவன் எதுவுமே பேசாம அங்க இருந்த பெஞ்ச்ல உட்கார்ந்துட்டான்.. ஆதிரா கடைசியா அவனுக்கு நிறைய வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கா.. அத அவன் அட்டென்ட் பண்ணல.. அதோட இது நார்மல் தானாம்.. முதல்ல நெருங்கினவங்களை தான் விசாரிப்பாங்களாம்.. அவனே சொல்றான்.. என்னால ஒண்ணும் செய்ய முடியல..” சரவணன் விளக்க,
“சரி.. அப்போ நீங்க இங்க இல்லாம எதுக்கு கோயம்பத்தூர் போறீங்க? உண்மையைச் சொல்லுங்க..” வித்யா படபடக்க,
“இல்ல நிஜமாவே எதுவும் இல்ல.. இப்போதைக்கு அண்ணா இங்க பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கான்.. அவனோட சீனியருக்கு போன் பண்ணி சொல்லிட்டோம்.. கூட அவரு இருப்பாரு.. அண்ணாவுக்கு ஆதிராவோட அப்பா அம்மாவை அங்க தனியா தவிக்க விட மனசு இல்ல.. இங்க இருந்தா ஆதிரா வந்த உடனே பார்த்துடலாம்ன்னு அவனுக்கு எண்ணம்.. அது தான் என்னைப் போய் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கான்.. இதோ நான் ஏர்போர்ட் வந்துட்டேன்..” சரவணன் சொல்லவும்,
“நல்ல போலீஸ்ல தானே கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கீங்க? ஆதிரா கிடைச்சிடுவா தானே.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு..” கண்ணீர் குரலில் வித்யா மீண்டும் கேட்க,
“டிஎஸ்.பி சித்தார்த் கிட்ட தான் கொடுத்திருக்கோம்.. நல்ல நேர்மையான, திறமைசாலி தான்னு அண்ணா சொல்றான்.. அவனும் லாயர் தானே.. அவனுக்கு தெரியுமே.. கண்டிப்பா நம்ம ஆதிரா கிடைச்சிடுவா..” அவளுக்கு தைரியம் சொன்னவன்,
“சரி.. நான் போய் ஏதாவது ஃப்ளைட் இருக்கான்னு பார்த்துட்டு கிளம்பறேன்.. நீங்க தைரியமா இருங்க.. அவளோட அப்பாவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. என்னால பேச முடியாது.. அந்த தைரியம் எனக்கு இல்ல.. ப்ளீஸ் எனக்காக ஒண்ணு சொல்லுங்க.. ‘நான் வந்துட்டு இருக்கேன்.. தேவையானதை எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு ரெடியா இருக்க மட்டும் சொல்லுங்க.. ஆதிராவை பார்க்க..” என்று சேர்த்துச் சொன்னவன்,
“கோயம்பத்தூர்க்கு அடுத்த ஃப்ளைட் எப்போ? ஒரு டிக்கெட் இருக்குமா?” என்ற அவனது குரலைக் கேட்டுக் கொண்டே போனை அமர்த்திய வித்யா, கடவுளிடம் மன்றாடத் துவங்கினாள்..
வித்யா, பாலகிருஷ்ணனுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவர் பதட்டத்துடன், “அவளுக்கு யாருமே விரோதி இருக்கற மாதிரி அவ சொல்லலையேம்மா.. அவளுக்கு யாரும்மா அப்படி கெடுதல் செஞ்சு இருப்பாங்க?” அந்தப் பக்கம் அவர் கதற,
“தெரியலையேப்பா.. கார்த்திக்கை வேற போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்த்தி வச்சு இருக்காங்களாம்..” என்றவள், சரவணன் அவளிடம் சொன்ன விஷயத்தைச் சொல்ல, அவர் மேலும் பதறிப் போனார்..
“என்னம்மா இது? மாப்பிள்ளை என்ன தப்பு செய்தார்ன்னு அவரைப் பிடிச்சு வச்சிருக்காங்க? அவர் ரொம்ப நல்லவர்ம்மா.. ஆதிரா மேல உயிரையே வச்சிருக்கார்..” அவர் சொல்லவும், வித்யா ‘ஹ்ம்ம்’ என்று பதில் சொல்லிவிட்டு,
“நீங்க ரெண்டு பேரும் ரெடியா இருங்க.. சரவணன் வந்துட்டு இருக்கார்.. ஆதிரா கிடைச்ச உடனே நீங்க அவளைப் பார்க்கணுமாம்.. கார்த்திக் சொன்னாராம்.” என்று சொல்லவும்,
“நாங்க இதோ ரெடி ஆகறோம்.. ஆதிரா கிடைச்சிடுவா இல்ல..” என்று கேட்கவும்,
“கண்டிப்பா கிடைச்சிடுவா.. அவ யாருக்குமே தீங்கு நினைச்சது இல்ல.. நீங்க வாங்க..” என்று வித்யா சொல்லவும், பாலகிருஷ்ணன், சுதாவைக் கிளப்பி, அருகில் இருந்த வீட்டில் சென்னை செல்வதாகச் சொல்லிவிட்டு, தயாராக இருந்தனர்..
காவல் நிலையத்திற்கு வந்த அதியமான், “என்ன கார்த்திக்? ஏன் இங்க உட்கார்ந்து இருக்க? உன்னை எதுக்கு அந்த சித்தார்த் இங்க உட்கார்த்தி வச்சிருக்கான்..” என்று கேட்டுக் கொண்டே வர,
“அது எப்பவும் நடக்கறது தானே சார்.. நம்ம நடவடிக்கை எல்லாம் செக் பண்ணுவாங்க தானே.. அது தான் செய்யறாங்க.. எனக்கு என் ஆதிரா கிடைச்சா போதும்.. எவ்வளவு நேரம் வேணாலும் நான் இங்க உட்கார்ந்து இருக்கேன்..” அவன் சொல்ல, அதியமான் தலையில் அடித்துக் கொள்ள, அந்த நேரம் சித்தார்த் வந்து சேர்ந்தான்..
சித்தார்த்தை பார்த்த அதியமான் முறைக்க, “சகல.. இதெல்லாம் வழக்கமான ப்ரோசிஜர் தானே.. உங்களுக்கு தெரியாத சட்டம் எதுவும் இல்ல வழக்கறிஞரே..” என்று சொல்லிக் கொண்டே அவர்களை உள்ளே வருமாறு கைக் காட்டிக் கொண்டே சித்தார்த் தனது அறைக்குச் செல்ல,
“வா கார்த்திக்..” என்று அதியமான் கார்த்திக்கை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
“உங்களுக்கு தெரிஞ்சு ஆதிராவுக்கு யாராவது எதிரி இருக்காங்களா? உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று சித்தார்த் கேட்க,
“இல்ல.. எனக்குத் தெரிஞ்சு அவளுக்கு யாரும் அப்படி இல்ல.. அவ யார்கிட்டையும் வம்பு தும்புக்கு போக மாட்டா.. எனக்கே அவளுக்குப் போய் யாரு இப்படி செய்யப் போறாங்கன்னு ரொம்ப யோசனையா இருக்கு.. நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்கறேன்.. எனக்கு தெரியல..” என்றவன்,
“அவ கடைசியா அவங்க அப்பாகிட்ட பேசும்போது, ‘யாரோ தெரிஞ்சவங்க வந்துட்டாங்க.. அவங்க கூட கார்ல வீட்டுக்குப் போறேன்’னு சொன்னாளாம்.. அது யாருன்னு தெரிஞ்சிட்டா அவங்களை விசாரிக்கலாம்.. நீங்க எதுக்கும் அவ ஆபீஸ்ல, அந்த ஏரியால இருக்கற சிசிடிவியை செக் பண்ணினா தெரியும்.. அப்படி அவளுக்கு யாரு லிஃப்ட் கொடுக்கற அளவுக்கு தெரிஞ்சவங்கன்னு..” தலையைப் பிடித்துக் கொண்டு கார்த்திக் சொல்ல,
“என்ன சந்தேகமா?” சித்தார்த் அவனைக் கூர்ப் பார்வை பார்த்தான்..
“சார்.. அவ என்னோட காரைத் தவிர யாரோட கார்லையும் ஏற மாட்டா.. அவளோட லொகேஷன்..” என்றவன், அவசரமாக நினைவு வந்தவன் போல,
“சார்.. என்னோட போனைத் தாங்களேன்.. நாங்க எங்க இருக்கோம்ன்னு பார்க்க எங்க லொகேஷன ரெண்டு பேருமே ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கோம்.. அதுல அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிடுமே.. அவங்க அதை ஆஃப் பண்ணவே மாட்டா.. மாட்டாங்க.. ராத்திரி தூங்கும்போது கூட.. அதே போல தான் நானும்..” என்றவனிடம் சித்தார்த் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே போனை நீட்டவும், கார்த்திக் எந்த விதத் தயக்கமும் இல்லாமல், தனது லாக் நம்பரைப் சொல்ல, சித்தார்த் அதியமானைப் பார்த்தான்..
“போலீஸ் சார்.. நீங்க தேவை இல்லாம ஒரு லாயரை சந்தேகப்படறீங்க..” அதியமான் கண்டிக்க,
“சகல.. நீங்க உங்க ஃபிரெண்ட்டை டிஃபெண்ட் பண்றீங்கன்னா.. என்னோட வேலை சந்தேகப்படறது.. அதை நான் செய்து தானே ஆகணும்?” என்றவன், மேப்பைத் திறந்து, ஏதோ ஒரு நம்பிக்கையில் ஆதிராவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க விழைய, சித்தார்த்திற்கு ஏற்மாற்றமே மிஞ்சியது.
அவனது முகத்தைப் பார்த்த கார்த்திக், “என்ன ஆச்சு?” என்று கேட்க,
“ம்ப்ச்.. அவங்களோட லாஸ்ட் லொகேஷன் ஆபிஸ் கிட்டத் தான் காட்டுது..” ஒரு பெருமூச்சுடன் சித்தார்த் சொல்லிக் கொண்டிருக்க, கார்த்திக் தலையைப் பிடித்துக் கொண்டு யோசிக்கத் துவங்கினான்..
“அவ அப்படி யாரோட கார்லையும் ஏற மாட்டாளே.. கேப்ல வரும்போது கூட அந்த டிரைவர் நம்பர எனக்கு ஷேர் பண்ணிடுவாங்க.. நேத்து நான் பப்க்கு போகாம இருந்திருக்கலாம்.. இல்ல அவனுங்களைக் கண்டுக்காம போனை எடுத்து பேசி இருக்கலாம்.. நான் அங்க தான் இருக்கேன்னு தெரிஞ்சும் எப்போவும் கால் பண்ணாதவ இத்தனை தடவ செய்யறாளேன்னு யோசிச்சு இருக்கணும்.. இது போல எல்லாம் வரும்ன்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கல.. என்னோட பொசசிவ்ல நான் இப்படி பண்ணிட்டேன்..” என்று அவன் கண்கள் கலங்க புலம்பிக் கொண்டிருந்தான்..
“என்ன லாயரே.. எதுக்கு இப்போ காலங்கார்த்தால எனக்கு இத்தனை தடவ கால் பண்ணி இருக்கீங்க? வீட்ல கேட்டா அவன் அவசரமா சித்தார்த் கிட்ட பேசிக்கிட்டே ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போனான்னு சொன்னாங்க.. என்ன விஷயம்? இங்க ஏதோ சீரியஸா டிஸ்கஷன் போயிட்டு இருக்கு.. அப்படி என்ன என்னை விட்டு சீரியஸ் டிஸ்கஷன்? இருங்க நானும் வரேன்.. சேர்ந்து பண்ணலாம்.. என்னை விட்டுட்டு பேசறது எல்லாம் அநியாயம்..” கேலியாக கேட்டுக் கொண்டே மதிநிலவன் வந்து சேர்ந்தான்..
கார்த்திக் மதிநிலவனை ஒரு பொறுப்புள்ள சீரியசான காவல்துறை அதிகாரியாக பார்த்திருக்கிறான் தான்.. ஆனால் இப்படி கேலியும் கிண்டலுமாக அவன் வரவும், கார்த்திக் அவனை அதிசயமாகப் பார்க்க, “யார் இவரு? இவ்வளவு சீரியஸா உட்கார்ந்து இருக்காரு?” என்று கேட்கவும்,
“என்னோட ஃப்ரென்ட்.. என்னோட ஜூனியரும் கூட..” அதியமான் சொல்லி முடிக்க, மதி ஏதோ கேலி செய்ய வாயெடுக்க,
“அவனோட ஃபியான்சியை நேத்து நைட்ல இருந்துக் காணும் மதி.. அது தான் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த இடத்துல அவனை விசாரிச்சிட்டு இருக்கான் என்னோட சகல.. அவன் தான் அவள ஏதாவது செஞ்சிருப்பான்னு சந்தேகப்பட்டுக்கிட்டு இருக்கான்.. நீங்க ரெண்டு பேரும் எப்படியோ எனக்கு அவனும் அப்படித் தான்.. அவனைப் போய்..” அதியமான் மனத்தாங்களாக சொல்ல,
“அது வழக்கம் தானே அண்ணா.. முதல்ல நெருங்கினவங்க கிட்ட தானே விசாரிக்கணும்? இந்த மாதிரி கேஸ்ல முக்கால்வாசி நெருங்கின சொந்தமோ, ரொம்ப தெரிஞ்சவங்களோ தானே எல்லா வேலையும் செய்யறாங்க.. அதை தானே அவன் விசாரிக்கிறான்.. இதுக்குப் போய் இவ்வளவு எமோஷனலா பேசிட்டு இருக்கீங்க? இது தான் ப்ரோசீஜர்ன்னு அவருக்குமே தெரியுமே..” என்ற மதிநிலவனின் முகம் இப்பொழுது விளையாட்டைக் கை விட்டு, மிகவும் சீரியசாக மாறியது..
“நிஜமா உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையா? உங்களுக்கு யாராவது எதிரி இருக்காங்களா?” அவனது கேள்விக்கு,
“இல்ல சார்.. நான் செஞ்ச ஒரே தப்பு நேத்து அவங்க அவ்வளவு தடவ கால் பண்ணி, மெசேஜ் பண்ணும்போதும் போனை எடுக்காம போனது தான்.. அதுக்கு வேணா என்னை அர்ரெஸ்ட் பண்ணுங்க.. மத்தப்படி அவங்களுக்கு நான் எப்படி கெடுதல் செய்வேன்?” கார்த்திக்கின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.
“இந்த அக்கறை அவங்க கால் பண்ணும்போது இருந்திருக்கணும்..” சித்தார்த் கடுப்பாக சொல்ல, அவனைத் தடுத்த மதி,
“உங்களுக்கு எதிரின்னு..” என்று இழுக்க,
“நான் ஒரு க்ரிமினல் லாயர். எதிரின்னு யாரையும் குறிப்பிட்டு எனக்கு சொல்லத் தெரியல.. ஆனா.. என் ஆபீஸ் சர்கிள்ல அதியமான் சாரைத் தவிர வேற யாருக்கும் ஆதிராவைத் தெரியாது.. யார்கிட்டயும் நான் அவங்களைப் பத்தி சொன்னது இல்ல.. என் தம்பிக்கு அவங்களைத் தெரியும்.. அவனும் அவளும் ஒரே ஆபீஸ்ல தான் வர்க் பண்றாங்க.. ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்..” கார்த்திக் நீண்ட விளக்கம் சொல்ல,
“உங்க கூட வந்தது உங்கத் தம்பியா? இப்போ அவரு எங்க? அவரும் தெய்வா கூட வர்க் பண்றாங்களா?” சித்தார்த் கேட்கவும்,
“ஆதிராவோட அப்பா அம்மாவை இங்க கூட்டிட்டு வரதுக்கு அவன கோயம்புத்தூர்க்கு அனுப்பி இருக்கேன்.. பாவம் அவங்க ரெண்டு பேரும் வயசானவங்க.. அவளைக் காணாம, இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம அங்க தனியா தவிச்சுக்கிட்டு இருப்பாங்க.. அவளைக் காணாத அதிர்ச்சியில ஏதாவது உடம்புக்கு வந்ததுன்னா கஷ்டம்.. அது தான்.” அவன் சொல்லவும், மதி அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்..
“தெய்வாவை உங்களுக்குத் தெரியுமா?” மதியின் கேள்விக்கு,
“தெரியும்.. ஆதிராவும், என் தம்பியும் நிறைய அவங்களைப் பத்தி சொல்லி இருக்காங்க.. நேர்ல பார்த்தது இல்ல..” கார்த்திக் சொல்லவும்,
தலையை மேலும் கீழும் அசைத்த மதி, “நீங்க அவங்களை எப்பவுமே முழு பேரைச் சொல்லி தான் கூப்பிடுவீங்களா?” நட்பாக கேட்க, சித்தார்த்தின் கண்கள் மதியை சந்தித்தது..
“ஆதிரான்னா நிலான்னு அர்த்தம்.. அவளும் அப்படித் தான்.. என்னோட நிலா.. எனக்கு அமைதியைத் தர என்னோட நிலா.. அந்தப் பேரை நான் சுருக்கி என்னைக்குமே கூப்பிட மாட்டேன்.. மத்தப்படி அப்போப்போ செல்லப் பேர்ல கூப்பிடுவேன்..” என்றவன், அங்கு அமைதி நிலவவும், புரியாமல் நிமிர்ந்துப் பார்க்க, அங்கிருந்த அதியமானும், சித்தார்த்தும் கேலியாக மதியைப் பார்த்துக் கொண்டிருக்க, மதியின் இதழ்களில் புன்னகை..
கார்த்திக் புரியாமல் அவர்களைப் பார்க்க, முதலில் சுதாரித்த அதியமான், “ஹையோ கார்த்திக்.. ஒண்ணும் இல்ல.. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒருத்தன் இதே டைலாக்கை சொல்லிட்டு இருந்தான்.. அந்த நாள் நியாபகம் வந்துடுச்சு.. அது தான் நாங்க எல்லாம் சைலென்ட் ஆகிட்டோம்..” என்றவன், மதியைப் பார்க்க, கார்த்திக் ஒரு மெல்லிய புன்னகையை சிந்தினான்.
“கொஞ்ச நேரத்துல கார்த்திக் நம்மளை எல்லாம் கோர்ட்ல நிறுத்தப் போறார்.. ஏண்டா நான் என்னோட ஆளைக் காணும்ன்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தா.. இங்க என்னை வச்சு காமடி பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு..” மதி அந்த இடத்தை இலகுவாக்கிவிட்டு,
“கண்டிப்பா ஆதிராவுக்கு ஒண்ணும் ஆகாது. உங்களை கொஞ்சம் டென்ஷன்ல இருந்து வெளிய கொண்டு வரலாம்ன்னு தான் கேலி பண்ணிட்டு இருந்தேன்.. இப்போ கொஞ்சம் நல்லா யோசிச்சு என்னோட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்க.. சமீபத்துல உங்களுக்கு யாராவது மிரட்டல் கொடுத்தாங்களா? இல்ல அவங்களை யாராவது ஃபாலோ பண்றது போல சொல்றாங்களா?” சீரியசாக மதி கேட்கத் துவங்க,
“அப்படி எதுவும் எனக்கு அப்படி எதுவும் வரல.. அவங்களுக்கும் அப்படி இருந்தது போல தெரியல.. அப்படி இருந்தா சொல்லி இருப்பாங்க.. ஆனா.. அவங்க நேத்து ஏன் அப்படி ஃபீல் பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியல.. ஏதோ அவளோட உள் மனசுல தப்பா தோணிருக்கு போல..” என்ற கார்த்திக்கின் பதிலில், யோசனையுடன் சித்தார்த்தைப் பார்த்த மதி,
“எந்த இடத்துல காணாம போனாங்க? அவங்க போட்டோ இருக்கா?” என்று கேட்க, கார்த்திக் தனது பர்சில் இருந்த ஆதிராவின் புகைப்படத்தை எடுத்து மதிநிலவனிடம் நீட்டினான்..
“அவங்க ஆபீஸ்ல இருந்து யாரோ தெரிஞ்சவங்க கார்ல போறதா அவங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கா.. கடைசியா அது தான் சொன்னான்னு அவங்க அப்பா சொன்னாங்க.. ஆனா.. அவங்க வீட்டுக்கு போய் சேரல.. நான் நேத்து ஃப்ரெண்ட்ஸ் கூட பப்க்கு போயிட்டேன்.. அதுல கொஞ்சம் வீட்ல வந்து அசந்து தூங்கிட்டேன்.. காலையில தம்பி எழுப்பி சொன்ன பொழுது தான் எனக்கு விஷயம் தெரியும்..
பப்ல இருந்ததுனால நான் அவ போன அட்டென்ட் பண்ணல.. கூட இருக்கறவங்க எப்படி இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியுமே.. நார்மலா இருந்தாக் கூட பரவால்ல.. அவளைப் பத்தி யாருக்குமே தெரியாதுங்கற பொழுது, அந்த நேரத்துல நான் போனை அட்டென்ட் பண்ணினா.. அவங்க யாரு என்னன்னு குடைவாங்க.. தேவை இல்லாத கேலி அது இதுன்னு.. எனக்கு அவளை அப்படி எல்லாம் யாரும் சும்மா கூட பேசறது பிடிக்காது.. நான் விட மாட்டேன்..” கார்த்திக் மதிநிலவனிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான்..
ஆதிராவின் புகைப்படத்தைப் பார்த்த மதிநிலவன், “சரி… நாம அவங்க ஆபீஸ்ல இருந்தே ஸ்டார்ட் பண்ணலாம்..” என்று எழுந்துக் கொள்ள, சித்தார்த்,
“எதுக்கும் முதல்ல கார்த்திக்கோட வீட்டுல இருந்தே தொடங்கலாம் மதி..” கார்த்திக்கை முறைத்துக் கொண்டே சொல்ல, அதியமான் அவனை முறைக்க,
“நான் இந்த அட்ரஸ்ல எங்க அம்மா அப்பா கூட இருக்கேன்.. எனக்கு இன்னொரு ஃப்ளாட் இருக்கு.. நானும் ஆதிராவும் கல்யாணத்துக்கு அப்பறம் வாழறதுக்காக வாங்கி இருக்கேன்.” அவனது பதிலில்,
“அது எங்க இருக்கு?” என்று சித்தார்த் கேட்க, மதி அவனைப் பார்க்க,
“எனக்கு இன்னும் இவர் மேல சந்தேகம் போகல.. முதல்ல அவரோட ஃப்ளாட்ல பார்த்துட்டு ஆபீஸ்ல போய் பார்க்கலாம்..” என்றவன், அவர்களுடன் அந்த ஃப்ளாட்டிற்குச் சென்றான்..
Leave a Reply