எங்கே எனது கவிதை – 8

maxresdefault-7fb9ca80

8

கார்த்திக் அவளைத் திகைப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக்கின் திகைப்பையும், ஆதிராவின் உபச்சாரத்தையும்  அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், அவளது முகத்தைப் பார்த்து, “அம்மா சொன்னது போல முகத்தைக் கழுவிக்கிட்டு, விளக்கு ஏத்திட்டு வா..” என்று சொல்லவும், கார்த்திக்கைப் பார்க்கதவள்,

“நீங்க சாப்பிடுங்க.. நான் இதோ வரேன்..” என்று சொல்ல, அவன் ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்தவும், கண்களை மூடித் திறந்து அவனுக்கு தைரியம் தந்தவள், உள்ளே நகர்ந்துச் சென்றாள்..

அவள் உள்ளே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவர், “இத்தனை வருஷமா இப்படி இருக்கற குடும்பம், எப்படி உங்க கல்யாணம் ஆனதும் சரியாகும்ன்னு சொல்றீங்க? அவ எங்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு பிறந்தவ.. எங்களோட ஜீவனே அவ தான்.. அவ கஷ்டப்படுவான்னு தெரிஞ்சே எப்படி நாங்க கல்யாணம் செய்து தர முடியும்?” பாலகிருஷ்ணன் கேட்க,

“நான் எப்போ அவளை விரும்பத் தொடங்கினேனோ அப்போவே ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன் சார்.. அது ரெடி ஆகிட்டு இருக்கு. இன்டீரியர் இந்த வாரத்துல தொடங்கிருவாங்க.. அப்பறம் பெயிண்ட்டிங், நம்ம எக்ஸ்ட்ரா செய்யற வேலை எல்லாம் இருக்கு. இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசத்துல முடிஞ்சிடும்.. எங்க கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் நாங்க அங்க தான் தனியா இருக்கப் போறோம்..” தீர்மானமாக அவன் சொல்ல, அவனது தெளிவான திட்டமிடலில், சுதா திகைப்பாக தனது கணவரைப் பார்க்க,

“அப்போ கல்யாணம் பண்ணி வந்த உடனே குடும்பத்தைப் பிரிச்சிட்டான்னு எங்க பொண்ணுக்கு பேர் வராதா? இது நல்லா இருக்கே..” சுதா கேட்டார்..

“அதெல்லாம் வராதுங்க.. நான் இது வரை கல்யாணம் பண்ணிக்கவே கூடாதுன்னு தானிருந்தேன்.. ஆனா.. அவளைப் பார்த்ததுல இருந்து அவளோட சந்தோஷமா வாழ ஆசைப்படறேன்.. அவளையும் கண் கலங்காம பார்த்துப்பேன்..” என்று கூறியவன்,

“எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் செய்து தருவீங்களா? நான் அவளை நல்லா பார்த்துக்கறேன்..” என்று மீண்டும் கேட்க, அவசரமாக முகம் கழுவி பொட்டிட்டு விளக்கேற்றிவிட்டு வந்தவள், தனது தந்தையை ஆவலுடன் பார்த்தாள்..  

அவளது ஆவல் கலந்த அந்த முகத்தைப் பார்த்த பாலகிருஷ்ணன், “எங்க ரெண்டு பேருக்கும் ஆதிரா தான் உயிரு.. அவளுக்கு ஒண்ணுன்னா எங்களால தாங்க முடியாது.. எங்க உலகமே அவளைச் சுற்றித் தான் இருக்கு..” என்று சொல்லவும்,

“என்னோட உலகமும் அவ தான் சார்..” என்ற கார்த்திக், ஆதிராவை காதலுடன் பார்த்தான்..

முகத்தை ஒழுங்காகத் துடைக்காமல், அவசரமாக பொட்டிட்டு தனக்காக வந்திருக்கிறாள் என்று புரிய, அவனது மனது உள்ளுக்குள் சிலிர்த்துப் போனது..

“உங்க உலகத்தை அழகா, அமைதியா, சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உங்க பொறுப்பு.. என்ன செய்வீங்களா?” காபியை குடித்துக் கொண்டே, முறுக்கை கடித்துக் கொண்டிருந்தவனிடம் பாலகிருஷ்ணன் கேட்க, அவர் அப்படி சட்டென்று கேட்கவும், அவனுக்கு புரை ஏற, இரும்பத் துவங்கினான்..

“அப்பா..” அவர் சொன்னதைக் கேட்டு சந்தோஷமாகக் கூவியவள், அவன் இரும்பவும், அவனது தலையைத் தட்ட,

“ஆதிரா.. உங்க அப்பா.. அப்பா என்ன சொல்றாங்க?” புரை ஏறிய தொண்டையைச் செருமிக் கொண்டே, அவன் கேட்க, அப்பொழுது தான் அவனது தலையில் தனது கை இருப்பதை உணர்ந்தவள்,

“அப்பாக்கிட்டையே கேட்டுக்கோங்க..” என்று நாணத்துடன் சொல்லிவிட்டு, சுதாவின் பின்னால் சென்று நின்றுக் கொள்ள, சுதா தனது கணவரை அதிர்ச்சியுடன் பார்த்தார்..

“என்னங்க.. என்ன சொல்றீங்க? நல்லா யோசிச்சு தான் பேசறீங்களா?” சுதா கேட்க, கண்களை மூடி ஆமோதிப்பாக தலையசைத்தவர், கார்த்திக்கைப் பார்த்து,

“என்ன இவ்வளவு நேரம் கோர்ட்ல வாதாடற மாதிரி பேசிக்கிட்டே இருந்தீங்க? இப்போ பதிலையேக் காணும்?” நக்கலாகக் கேட்க,

“ஹையோ சார்.. நீங்க நிஜமா.. நிஜமா தான் சொல்றீங்களா? நீங்க டக்குன்னு சொல்லவும் எனக்கு கொஞ்சம் ஷாக் ஆகிடுச்சு.. நான் இன்னும் என்ன எல்லாம் வாதாடனும்ன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்..” சந்தோஷத்தில் அவரது கையைப் பிடித்துக் கொண்டு கூறியவன்,

“என் உலகத்தை நல்லா பார்த்துக்க வேண்டியது என் கடமை.. கண்டிப்பா செய்வேன் சார்.. என்னோட உயிரா செய்வேன்..” என்று கூறியவன், ஆதிராவைப் பார்த்து புருவத்தை உயர்த்த, முகம் சிவந்து சுதாவின் தோளிலேயே முகம் புதைத்தவள், உள்ளே ஓடிச் சென்றாள்.

கார்த்திக்கிற்கும் அவளுடனே ஓடிச்சென்று அவளை இழுத்து அணைக்க வேண்டும் என்று உள்ளம் பரபரக்க, அவளது பெற்றவர்கள் முன்னிலையில் தன்னை அடக்கிக்கொண்டு, போகும் அவளையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..

“நான் இதுவரை ஆதிரா எது கேட்டாலும் இல்லைன்னு சொன்னது இல்ல.. அதே போல அவளுக்கு உங்களை எவ்வளவு பிடிச்சிருக்குன்னு சொல்லாம அவ செயல்ல காட்டிட்டா.. அவளுக்கு ஒருத்தங்க செட் ஆகலைன்னா அவ ஒதுங்கிடுவா.. ஒதுங்காம உங்ககிட்ட இவ்வளவு தூரம் பழகறாங்கன்னா.. அதுவும் வீட்டு அட்ராஸ் கொடுத்து வந்து பாருங்கன்னு சொல்லி இருக்கான்னா.. நீங்க அந்த அளவுக்கு அவ மனசுல நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கீங்கன்னும் அவ உங்களை எவ்வளவு விரும்பறான்னும் புரியுது.. இதுவரை அவ ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாருமே வீட்டுக்கு வந்தது இல்ல.. நீங்க தான் முதல்முறை.. அதுலயே அவ மனசு எனக்கு புரிஞ்சிடுச்சு.. அவ விருப்பம் தான் எங்க விருப்பமும்.. அதனால எனக்கு சம்மதம்..” என்று சொல்லவும், கார்த்திக் சுதாவைப் பார்க்க, 

“அவங்க அம்மாவுக்கு உங்க கூட பழகின அப்பறம் தான் முழு திருப்தி வரும்.. கிளிப்பிள்ளை போல ஒரே பொண்ண ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் பெத்து வளர்த்திருக்கோம்.. அவளை நல்ல இடமா.. எங்களுக்கு அப்பறம் நல்லா பார்த்துக்கறவனுக்கு கல்யாணம் பண்ணித் தரணும்ன்னு நினைக்கிறதுல தப்பில்லை தானே.. உங்க கூட பழகின அப்பறம், அவ மனசும் எந்த வித சந்தேகமும் இல்லாம தெளிவா ஆனதுக்கு அப்பறம் உங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்.. நீங்களும் உங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க.. மத்தது எல்லாம் முறைப்படி செய்யலாம்..” என்றவர், கார்த்திக்கைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தார்..

பாலகிருஷ்ணன் சொல்லியது போலவே சுதாவின் நம்பிக்கையை அவனது நடவடிக்கையில், சிறிது நாட்களில் வென்று, மாப்பிள்ளை என்று அவனுக்கு அழைத்து பேசும் அளவிற்கு கார்த்திக் செய்தும் இருந்தான்.. அந்த வீட்டில் அவன் அவர்களுக்கு மகனாகவும் மாறிப் போனான்.. அந்த மூத்த தம்பதியரின் மனதை நிறைத்தான்..

அந்த நாள் நினைவுகளில் மூழ்கி இருந்தான் கார்த்திக்.. நெடுநேரமாக அந்த அறையில் எந்த பொருட்களையும் உருட்டும் சத்தம் கேட்காமல் போகவும், அதியமானும் வித்யாவும் பதட்டத்துடன் உள்ளே எட்டிப் பார்க்க, அங்கு அவன் நின்ற கோலம், இருவருக்கும் ஒருமாதிரி இருந்தாலும், அதியமானின் இதழ்களில் புன்னகையை வரவழைத்தது..

“என்ன கார்த்திக்.. அப்படியே ட்ரீம் லேன்ட்க்கு போயிட்ட? ஆதிராவோட நைட்டி தானே அது.. ஆதிரா இல்லையே.. இப்படி அவ ட்ரெஸ்க்கே நீ ஃப்ரீஸ் ஆகிட்டா.. அவளைப் பார்த்தா எப்படி இருப்ப?  நாம இன்னும் வேற இடம் எல்லாம் விசாரிக்க வேண்டி இருக்கு.. சீக்கிரம் ட்ரீம்லேண்ட்ல இருந்து கீழ தரை இறங்கு..” என்று அவனை இவ்வுலகிற்கு அழைத்து வரவும், அவசரமாக அந்த நைட்டியை பத்திரமாக அங்கிருந்த கோடியில் போட்டுவிட்டு, அந்த அறையை விட்டு வெளியில் வர, அதைப் பார்த்துக் கொண்டிருந்த வித்யாவிற்கும் அழுகையை மீறிய புன்னகை அரும்பியது.

“நீங்க முதல்முதலா அவ கிட்ட கூட உங்க லவ்வ சொல்லாம, அவங்க வீட்ல நேரா பொண்ணு கேட்ட போது போட்டு இருந்த டிரஸ் தான இது? அவளும் இது போடும்போது எல்லாம் அதைச் சொல்லிக்கிட்டே போடுவா.. நேத்தும் இது தான் போட்டு இருந்தா..” வித்யா கண்ணீருடன் சொல்லிவிட்டு,

“அவளை எப்படியாவது கண்டுப்பிடிச்சுடலாம் இல்ல.. அவளுக்கு எதுவும் ஆகிடாது இல்ல..” என்று கேட்கவும்,

“அவ யாருக்கும் எந்த தீங்கும் கனவுல கூட நினைச்சது இல்ல.. அவளுக்கு எந்த கெடுதலும் வராது.. சரி.. நேரமாகுது.. நாங்க வேற ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு அவங்க ஆபீஸ்கிட்டையே பார்க்கறோம்..” என்றவன், வித்யாவிற்கு தைரியம் சொல்லிவிட்டு வெளியில் செல்ல, ஒரு குழந்தை அவர்களது வீட்டு வாசலைத் தாண்டி ஓடி வந்தது..

அதன் பின்னோடு அந்தக் குழந்தையின் தாய் ஓடி வரவும், அருகில் இருந்த படியை திரும்பிப் பார்த்தவன், அந்தக் குழந்தையை பிடித்து நிறுத்தி,

“அங்க படி இருக்கு.. விழுந்தா காலுல உவ்வா பட்டுடும் தானே.. குட்டிப் பையனுக்கு வலிக்கும் தானே.. அதனால ஓடிக் கூடாது என்ன?” என்று கொஞ்சியபடி அதன் கன்னத்தில் தட்டி, அவனைத் தூக்கி அவனது தாயிடம் கொடுக்க,

“தேங்க்ஸ் சார்.. ரொம்ப வாலு சார் இவன்..” என்றபடி அந்த பெண்மணி குழந்தையை வாங்கிக் கொள்ள, புன்னகையுடன் தலையசைத்தவன், அதியமானுடன் அங்கிருந்து கிளம்பி வண்டியை இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்..

வண்டியின் அருகே சென்றவன், வண்டியின் ஸ்டாண்டை எடுத்துக் கொண்டே மீண்டும் வீட்டை அண்ணாந்துப் பார்த்தவனுக்கு, என்ன தோன்றியதோ, எடுத்த வேகத்திலேயே வண்டியின் ஸ்டாண்ட்டை போட்டுவிட்டு, தடதடவென்று படிகளில் ஓடிச் சென்றான்..

அவன் அவ்வாறு ஓடவும், அதியமானும் அவனைப் பின்தொடர்ந்து ஓட, அங்கு அந்த ப்ளாட்டின் வாயிலில் அமர்ந்து காரைத் துடைத்துக் கொண்டிருந்த இளைஞனும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினான்.

மொட்டை மாடியை எட்டியவுடன் அங்கு நின்றவன், அங்கிருந்த சிறிய அறையைப் பார்த்துவிட்டு, அதியமானை திரும்பிப் பார்த்தான்.. அதியமான் வேகமாக அவன் அருகில் வந்தவன், “இங்க என்ன ஒரு ரூம் இப்படி இருக்கு?” என்று கேட்க, கார்த்திக் உதட்டைப் பிதுக்கினான்..  

அந்த அறையின் கதவில், பூட்டை பூட்டி வைக்காமல், வெறும் பூட்டு தொங்க விடப்பட்டிருக்க, அதை தொட்டுப் பார்த்தவன், அதியமானைப் பார்த்துக்கொண்டே, அதைத் திறக்கவும் செய்தான்..

“என்னாச்சு கார்த்திக்? ஏன் இப்படி இங்க ஓடி வந்த? உனக்கு இங்க இருந்து ஆதிராவோட குரல் கேட்டுச்சா?” அதியமான் அவனைத் தொடர்ந்துக் கொண்டே கேட்க,

“இல்ல.. என்னவோ ஒரு உள்ளுணர்வு என்னை இங்க இழுத்துட்டு வந்துச்சு சார்.. இங்க ஒரு ரூம் இருக்குப் பாருங்க.. இந்த ரூம் இங்க இருக்கறது எனக்கு இப்போத் தான் தெரியும்… நான் இதுவரை இங்க வந்ததே இல்ல..” படபடப்புடன் சொல்லிக்கொண்டே, அந்தப் பூட்டைத் திறந்து அந்த அறையின் உள்ளே சென்றான்.

அந்த அறையில் தேவை இல்லாத தட்டுமுட்டுச் சாமான்களும்.. பல அட்டைப் பெட்டிகளும், மரப்பெட்டிகளும் கிடந்தது.. மெல்ல உள்ளே தனது பார்வையை ஓட்டிக்கொண்டே உள்ளே நகர்ந்தான் கார்த்திக்..

“என்னடா இப்படி போட்டு வச்சிருக்காங்க? இது யார் வீட்டுச் சாமானா இருக்கும்?” அதியமான் கேட்க,

“தெரியல சார்.. இப்படி ஒரு ரூம் இருக்குன்னு ஆதிரா என்கிட்டே சொன்னது இல்ல.. மே பி அவளுக்குத் தெரியாம கூட இருக்கலாம். இந்த ரூமைப் பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கே..” கார்த்திக் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு ஏதோ சலசலக்கும் சத்தம் கேட்க, கார்த்திக்கின் காது கூர்மைப் பெற, அந்த நேரம்,      

“சார்.. என்னாச்சு சார்? ஏன் அப்படி வேகமா ஓடி வந்தீங்க?” மூச்சிரைக்க அவன் பின்னால் ஓடி வந்த அந்த கார்த் துடைத்துக் கொண்டிருந்த இளைஞன் கேட்க, அவன் பின்னால் அந்த குழந்தையின் தாயும் மூச்சிரைக்க குழந்தையுடன் நின்றுக் கொண்டிருந்தாள்..

இருவரையும் பார்த்த கார்த்திக், “ஒண்ணும் இல்ல.. சும்மா தான் வந்தோம்.. இந்த ஃப்ளாட்ல இருக்கற ஆதிராவோட ஃபியான்சி நான்.. அவங்களை நேத்து இருந்து காணும்.. உங்களுக்கு அவங்களைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என்று கேட்க,

“ஹையோ ஆதிராவைக் காணுமா?” அந்த குழந்தையின் தாய் கேட்க, கார்த்திக் மண்டையை ஆட்ட,

“என்ன சார் சொல்றீங்க? காணுமா? என்னாச்சு அவங்களுக்கு? உங்கக்கிட்ட சொல்லாம எங்கயாவது ஊரை விட்டுப் போயிட்டாங்களா? இல்ல வேற விஷயமா?” அந்த இளைஞன் கேட்க, அவனது குரலில் நக்கல் வழிந்ததோ.. கார்த்திக் அவனை முறைத்தான்..

“அனாவசியமா பேசாதீங்க சார்.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க.. அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க..” அதியமான் இடைப்புக, அதியமானைப் பார்த்தவன்,  

“ஓ..” என்று இழுத்து,

“அவங்களை எனக்கு ரொம்பத் தெரியாது சார்.. நான் அவங்களை ஒரு ரெண்டு மூணு தடவை ஆபீஸ் போகும்போது பார்த்து இருக்கேன்.. அவ்வளவு தான்.. ரொம்ப அழகான நல்ல பொண்ணு இல்ல சார்..” என்று கேட்க, கார்த்திக்கின் கை முஷ்டி இறுகியது..

கார்த்திக் அவனை கடுமையாக முறைக்க, “ஆமா சார்.. அவங்களைக் காணும்ன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டீங்களா? இல்ல எனக்கு தெரிஞ்ச போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்கார்.. நான் அவருக்கு சொல்றேன்.. நீங்க போய் பார்த்துட்டு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வாங்க.. ரொம்ப நல்ல ஆபிசர்.. சீக்கிரமே அவளை..”

“அவங்களை..” பல்லைக் கடித்துக் கொண்டே கார்த்திக் அவனது ஒருமைப் பேச்சைத் திருத்த,

“சாரி சார்.. அவங்களைக் கண்டுப்பிடிச்சிடலாம்..” அவன் திருத்திச் சொல்ல, எதுவோ கார்த்திக்கிற்கு நெருடிக் கொண்டிருந்தது.. ஏதோ சலசலப்பு அந்த இடத்தில் கேட்டுக் கொண்டிருக்க, கார்த்திக் திரும்பி அந்த அறையைப் பார்த்தான்..

“கண்டா முண்டா ரூம் சார்.. நிறைய எலிங்க இருக்கு..” எனவும், தேவையே இல்லாமல் அவன் அங்கு ஆஜர் ஆகிக் கொண்டிருக்கவும்,  

“மிஸ்டர்.. உங்க பேரு..” கார்த்திக் பல்லைக் கடித்தான்..

“என் பேர் ஆதவன் சார்.. நான் எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்.. ஏன் கேட்கறீங்க?” அவன் தனது பெயரைச் சொல்லிவிட்டுக் கேட்கவும்,

“இல்ல. நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, கொஞ்சம் தேவ இல்லாம ஆஜர் ஆகறது போல இருக்கு. அது தான் கேட்டேன்.. நாங்க ரெண்டு பேருமே லாயர்ஸ்.. இதோ இவர் இருக்காரு இல்ல.. இவரோட தம்பி டிஸ்பி மதிநிலவன்.. இவரோட சகலை டிஸ்பி சித்தார்த்.. அதனால..” முழுதாக முடிக்காத கார்த்திக், அவனை நக்கலாகப் பார்க்க,  

“நாங்க கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க.. போதும்..” என்றபடி மீண்டும் அந்த இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டே மெல்ல நகர்ந்தான்..  

“சாரி.. சாரி சார்..” என்றபடி அவனது அருகில் வந்தவன்,

“இங்க எல்லாம் இந்த ஃப்ளாட் ஓனர் ரெண்டு பேரு நிறைய தட்டுமுட்டு சாமாங்க எல்லாம் போட்டு வச்சிருக்கார் சார்.. அதே போல இங்க குடி இருக்கறவங்க, அவங்க அவங்க வீட்டுல ஏதாவது தேவை இல்லாத சாமான் போட்டு வைக்கணும்ன்னா இங்கப் போட்டு வைப்பாங்க.. அதுனால தான் ரூமைப் பூட்டல.. பாருங்க ஒரே குப்பையா இருக்கு.. இங்கப் பாருங்க எலி புழுக்கை எல்லாம் இருக்கு..” அவன் சொல்லவும், 

“ஹ்ம்ம்..” என்று கார்த்திக் தலையசைத்துக் கொண்டே, நடக்க இடம் இருக்கும் இடத்தில் மெல்ல நடந்து ஒருமுறை பார்த்துவிட்டு வந்தவன், அந்த வாலிபன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

“நாம கிளம்பலாம் சார்.. நேரா அவ ஆபீஸ் கிட்ட போகலாம்.. எவன் கடத்தினான்னு மட்டும் தெரிஞ்சது.. அவனுக்கு உயிர் மட்டும் தான் இருக்கும்.. மீதி எதுவுமே இருக்காது.” பல்லைக் கடித்துக் கொண்டே சொன்னவன், அதியமானுடன் கீழே இறங்க, அந்தப் பெண் நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“குழந்தையை வச்சிக்கிட்டு ஏன் வெயில்ல நிக்கறீங்க? கீழ போங்க..” கார்த்திக் சொல்லவும்,

“நீங்க அப்படி ஓடி வரவும், என்னவோ ஏதோனு வந்தேன் சார்.. ஆதிரா எங்க போனா? யாரு அவளைக் கடத்தினாங்க? ரொம்ப நல்ல பொண்ணு சரி..” என்று கேட்க, அவன் உதட்டைப் பிதுக்கவும்,

“அவளை சீக்கிரம் கண்டுப்பிடிச்சிருங்க..” என்றவள், குழந்தையுடன் கீழே செல்ல, கார்த்திக்கும் அதியமானும் வண்டி இருக்கும் இடத்திற்குச் சென்றனர்..

“என்ன கார்த்திக்? உனக்கு ஏன் அங்க போகணும்னு தோணிச்சு? அங்க எதுவுமே இல்லையே..” அதியமான் புரியாமல் கேட்க,

“இல்ல சார்.. எனக்கு என்னவோ அங்க போகச் சொல்லி மனசு சொல்லிச்சு.. ஏன்னு தெரியல சார்..” குழப்பமாகக் கூறியவன்,

“சரி.. நாம அவ ஆபீஸ் பக்கம் போய் பார்க்கலாம்..” என்றபடி வண்டியை எடுத்தவனுக்கு ஏதோ யோசனையில் கைகள் நடுங்கத் துவங்கியது..  

அதைக் கண்ட அதியமான், அவனது தோளை அழுத்த, “அவ பத்திரமா இருப்பா இல்ல சார்.. அவ ரொம்ப சாஃப்ட்.. அவளை கடத்தினவங்க அவளை எதுவும் செய்ய மாட்டாங்க இல்ல சார்.. அவ பாவம்.. அவளைப் போய் யாரு சார்?” என்ற கார்த்திக், முகத்தைத் துடைத்துக் கொள்ள, அவனது கண்களில் கண்ணீரைப் பார்த்தா அதியமான், அவனை தோளில் சாய்த்துத் தட்டிக் கொடுத்தான்..  

“டேய்.. கார்த்திக்.. கார்த்திக்.. இங்கப் பாரு.. முதல்ல நீ கண்ணைத் துடைக்க போறியா இல்லையா?” என்று அவனைப் பிடித்து உலுக்க, கார்த்திக் நிமிராமல் இருக்க,

“இங்கப் பாரு.. நீயே இப்படி உடைஞ்சுப் போனா.. அங்க ஊருல இருந்து ஒண்ணுமே புரியாம வர அவங்க அப்பா அம்மாவை என்ன செய்யறது? அவங்க வயசானவங்கன்னு நீ தானே சொன்ன? அவங்களை நீ தானே பார்த்துக்கணும்.. அவங்களுக்கு நீ தைரியம் சொல்லாம இப்படி கண்ணைக் கசக்கிக்கிட்டு இருப்பியா? அவளுக்கு ஒண்ணும் ஆகாது.. நான் சொல்றேன்ல.. கண்டிப்பா அவ பத்திரமா வருவா…” என்ற அதியமான், தனது கர்சீப்பை எடுத்து அவனது முகத்தைத் துடைத்தான்..

“எனக்கு அவளைப் பார்க்கணும்.. அவ போன் பண்ணும்போது போனை எடுக்காதது வேற எனக்கு நெஞ்சை குத்திக்கிழிக்குது.. அந்த நேரம் இப்படி ஆனது வேற ரொம்ப என்னால தாங்க முடியல.. நான் அவங்க எல்லாம் இருக்காங்கன்னு எடுக்காம போனது என் தப்பு தான்.. வெளிய வந்தாவது அவகிட்ட என்னன்னு கேட்டு இருக்கணும்.. நான் மடையன்.. கையில இருந்த தங்கத்தை பாதுக்காக்கத் தெரியாம இப்போ தேடிட்டு இருக்கேன்.. அவங்க அம்மா வந்து என்னைக் கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்.. அவளை பத்திரமா பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கேனே..” தனது மனதில் அடைத்துக் கொண்டிருந்ததை கார்த்திக் கொட்டத் துவங்கினான்..

“டேய்.. எல்லாம் அவ கிடைச்ச உடனே கால்ல விழுந்து சாரி கேளு.. இப்போ இப்படியே நீ நின்னு அழுதுட்டு இருந்த.. சித்தார்த் நீ தப்பிச்சு ஓடிப் போயிட்டன்னு இங்க வந்தாலும் வந்திடுவான்.. வா அங்க போய் ஏதாவது கேட்கலாம்.. உன்னோட எல்லா அழுகையும் அவ தோள்ள சாஞ்சு வச்சிக்கோ.. என் சட்டையை கரையாக்காதே.. அப்பறம் என் பொண்டாட்டி என் மேல சந்தேகப்படப் போறா..” என்று கேலியாக அவனைத் தேற்ற, கண்களைத் துடைத்துக் கொண்டவன்,

“சாரி சார்.. என்னால முடியல..” என்று சொல்லிவிட்டு,  

“நாம அங்க போகலாம்..” என்றபடி வண்டியை எடுக்க, அதற்கு முன் ஒருமுறை மீண்டும் மேலே அவனது பார்வை சென்றது..

“அங்க என்ன பார்த்துட்டு இருக்க? சீக்கிரம் வா..” என்று அதியமான் அவனிடம் இருந்து வண்டியை வாங்கிக் கொள்ள, கார்த்திக் அவன் பின்னால் ஏறிக் கொண்டான்..

மதியும், சித்தார்த்தும் அவளது அலுவலகத்தில் சென்று விசாரிக்கத் துவங்கினர்.. முன்தினம் ஆதிரா அலுவலகத்தில் இருந்து வெளியில் செல்லும் சிசிடிவி காட்சிகளை அவர்கள் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..

ஆதிரா நின்று ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிய, அங்கிருந்த அந்த காவலாளியிடம், “உங்களுக்கு இவங்களைத் தெரியுமா? இவங்க தான் கடைசியா ஆதிராவைப் பார்த்து இருக்காங்க.. இவங்க போனதுக்கு அப்பறம் தான் ஆதிரா காணாம போயிருக்காங்க..” என்று கேட்டவன், அங்கு சித்தார்த்தின் அழைப்பில் வந்திருந்த தெய்வாவைப் பார்த்தவன்,

“இவங்கள உனக்குத் தெரியுமா தெய்வா?” என்று கேட்க,

“தெரியுமே.. இவங்க எங்க பக்கத்து சீட்டுல இருக்காங்க..” என்ற தெய்வா,

“இந்தப் பொண்ணு ரொம்ப நல்லப் பொண்ணு சித்து..” என்று சொல்லவும்,

“இல்ல.. அவங்களைக் கேட்டா எதாவது க்ளூ கிடைக்குமான்னு பார்க்கத் தான்.. அவங்களை போன் செஞ்சு வரச் சொல்ல முடியுமா? நாம அவங்க வீட்டுக்குன்னு போனா நல்லா இருக்காது..” மதி தெய்வாவிடம் விளக்கவும்,

“அதும் சரி தான்.. சொல்றேன்..” என்ற தெய்வா அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, மதியின் பார்வை அந்த சிசிடிவி காட்சிகளில் பதிந்தது..

ஆதிரா தனது மொபைலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதும், பின்பு ஒரு கார் அவளது அருகில் வந்து நிற்பதும், அதன் பின்பு அவள் அதில் ஏறுவதும், அந்தக் கார் அப்படியே பின்னால் ரிவர்சில் செல்வது வரைத் தெரிய, அந்தக் காரின் நம்பரை அவர்களால் கண்டுப்பிடிக்க முடியாமல் போனது..

“அவங்க வரேன்னு சொல்லிட்டாங்க மதி..” என்றவளை, கவனிக்காமல் இருவரின் பார்வையும் குழப்பத்துடன் சந்தித்தது..