எந்நாளும் தீரா காதலாக் — 29

💝💝29

நீயே வாழ்க்கை என்பேன்!!

இனி வாழும் நாட்கள் எல்லாம்

நீயே போதும் என்பேன்.

உயிரே என் உலகமே

நீயே காதல் என்பேன்

இனி ஜீவன் வாழும் உன்னால்

நீயே வேண்டும் என்பேன்

உயிரே என் உலகமே

சிரிக்கிறாள் ஓ.. கொஞ்சம் சிதைகிறேன்..

நடக்கிறாள் ஓ.. பின்னால் அலைகிறேன்..

தெரிந்துமே ஓ… ஹையோ தொலைகிறேன்

காதலின் கையில் விழுகிறேன்..        

அர்ஜுன் நட்ட நடுயிரவில் பதிவிட்டு இருந்த இன்ஸ்டாக்ராம் ஸ்டோரியை சிவாத்மிகா மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். பொட்டிக்கிற்குச் சென்று அவள் வேலை செய்ய நினைத்தாலும், அந்த பாடலின் வரிகளும், இதயத்தின் மீது கையை வைத்துக் கொண்டு நிற்கும் அவனது புகைப்படத்தையும் பார்த்தவளுக்கு மனதில் இருந்த நெருடல் அதிகமாகியது.

சில நாட்களாகவே அதிகாலையில், நடுயிரவில் என்று அர்ஜுன் அதிகமாக ஆன்லைனில் இருப்பது அவன் பதிவிடும் ஸ்டோரிகளிலும், அவனது லைக்களிலும் அறிந்துக் கொண்டவள், அவனிடம் என்னவென்று கேட்க,

“ஒண்ணும் இல்ல சிட்டு.. தூக்கம் கலஞ்சு எழுந்தேன்.. அப்பறம் தூக்கம் வரல அது தான்..” என்ற பதில் மட்டுமே அவனிடம் இருந்து வர, சிவாத்மிகா குழம்பிப் போனாள்.

அர்ஜுனைப் பற்றித் தெரிந்த இந்த ஒருவருடத்தில் அவனது உறங்கும் வழக்கம் சிவாத்மிகாவிற்கு அத்துப்படி.. தாமதமாகத் தூங்கினாலும், உறங்கிவிட்டால் நடுவில் எழும் வழக்கம் அவனுக்கு கிடையாது.. அப்படி இருக்க, நடுயிரவில் உறக்கம் விழிக்கும் அளவிற்கு என்ன ஆயிற்று என்று அவளது மனது கேள்விக் கேட்க, அந்தக் கேள்விகள் அவளுக்கு மனதை அரிக்கத் துவங்கி இருந்தது.

திருமண வேலைகளை கவனிப்பதற்காக, பதினைந்து நாள் அர்ஜுனுடன் இருந்த வினய், மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஹைதராபாத்தில் இருந்து வந்து சேர்ந்தான். வந்தவன் மீண்டும் ஒரு வாரத்தில் திரும்பச் செல்ல வேண்டும் என்று சொல்லவும், நிர்மலா, சிவாத்மிகா இருவருமே அவனைக் கேள்வியாகப் பார்த்தனர்.

“ஒண்ணும் இல்ல.. அவனுக்கு கொஞ்சம் பேக் டு பேக் சூட்டிங்னால அங்க நான் கூட இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னான்.. அது தான்..” என்ற வினய், வேலைகளை பார்வையிட்டு, அவன் செய்ய வேண்டிய வேலைகளை விரைவாக செய்து முடிக்கத் துவங்கினான்.   

வினய் திரும்பி வந்ததில் இருந்தே அர்ஜுன் பேசும்பொழுதும் அவனது கவனம், அவளது பேச்சில் இல்லாமல் சில சமயம், “ஹான்.. என்னம்மா கேட்ட? திரும்பச் சொல்லு..” என்று திருப்பியும் கேட்கத் துவங்கி இருந்தான்.

அதுவும் அவனது வழக்கம் இல்லை.. எப்பொழுதும் சிவாத்மிகா சிணுங்கும் சிறு விஷயங்கள் கூட காதில் விழுந்து, அவளை கலாய்த்து, பதில் சொல்பவன் அர்ஜுன். அப்படி இருக்க, அவனது கவனம் அவளது பேச்சில் இல்லாதது வேறு அவளது மனதைக் கலக்கியது.

அதே யோசனையுடன் அவனது ஸ்டோரியை சிவாத்மிகா பார்த்துக் கொண்டிருக்க, அன்று வந்த ஆர்டர்கள் சம்பந்தமாக பேசுவதற்காக வினய் வந்திருந்தான். அவள் அவனது ஸ்டோரியையே பார்த்துக் கொண்டிருக்கவும்,

“என்னம்மா.. அவனே பாடறா மாதிரி இருக்கா? திரும்பத் திரும்ப பார்த்துட்டு இருக்க?” என்று கேலி செய்ய,

“இல்லண்ணா.. எனக்கு ரெண்டு மூணு நாளாவே மனசுல ஏதோ நெருடிக்கிட்டே இருக்கு.. நீங்க உண்மையைச் சொல்லுங்க அண்ணா. அர்ஜுனுக்கு ஏதாவது பிரச்சனையா? எனக்குத் தெரிஞ்சு, அம்மா சொன்னது படி, அவரு இப்படி தூங்காம தவிச்சது எல்லாம் அந்த முதல் பட பிரச்சனை அப்போ தானே.. இப்போவும் அவரு சரியா தூங்கறது இல்ல அண்ணா.. எப்போப் பாரு நைட்ல ஆன்லைன்ல இருக்கார்.. அவர டேக் பண்ணி இருக்கற ஸ்டோரி எல்லாம் பார்க்கறதா அவங்க ஃபேன்ஸ் போடறாங்க.. அப்போ தூங்கறது இல்லைன்னு தானே அர்த்தம்?” கவலையுடன் சிவாத்மிகா கேட்க, வினய் வேலையில் கவனம் போல சில நொடிகள் அமைதியாக அமர்ந்தான்.

“என்னண்ணா? ரொம்ப சைலென்ட்டா இருக்கீங்க.. நீங்க சொல்லுங்க.. எதா இருந்தாலும் நாம பார்த்துக்கலாம்..” சிவாத்மிகா படபடப்பாகக் கேட்க,

“ஒண்ணும் இல்லம்மா.. நீ ஏன் அப்படி சொல்றன்னு யோசிட்டு இருந்தேன்..” என்றவன், அவள் குழப்பமாகப் பார்க்கவும்,

“அவன் நார்மலா தான் இருக்கான் சிவாம்மா.. ஷூட்டிங்ல கொஞ்சம் ப்ரெஷர் இருக்கும்மா.. ராவா பகலா போகுது.. அதுல கொஞ்சம் டயர்ட்டா இருக்கான்.. அந்த இதுல தூக்கம் இல்லையோ என்னவோ? நான் அங்க இருந்த வரைக்கும் நல்லா தானே இருந்தான்..” என்று சொன்னவன்,

“சரிம்மா.. வா.. நாம வேலையைப் பார்ப்போம்..” என்று, அவளது கவனத்தை வேலையில் திருப்பி, அன்றைய நாளை வெற்றிகரமாக கடத்தினான்.

இரவில் வீட்டிற்கு வந்தவள், வழமை போல அர்ஜுனுக்கு அழைக்க, வெகுநேரம் போன் எடுக்கப்படாமல் போய்க்கொண்டிருந்தது. அவளது இதயம் தொண்டைக் குழியில் துடிக்க, அவன் கொடுத்த டெட்டியை அணைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவனிடம் இருந்து கால் வரவும், அவசரமாக எடுத்தவள், “ஹலோ.” என்று தொண்டையடைக்க அழைக்கவும்,

“என்னம்மா? ஏன் இவ்வளவு தடவ கால் பண்ணி இருக்க? ஷூட்டிங் இருந்ததும்மா.. இப்போ தான் முடிஞ்சது.. சொல்லும்மா.. சாப்பிட்டயா?” என்று கேட்க,

“ஹலோ.. அஜ்ஜு.. அஜ்ஜு.. நீங்க ஓகேவா இருக்கீங்களா? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.. என்னவோ உங்களுக்கு எதோ பிரச்சனைன்னு தோணுது.. எதா இருந்தாலும் சொல்லுங்க.. என்னால முடிஞ்ச அளவுக்கு புரிஞ்சிக்கறேன்.. நான் ப்ராமிஸ் பண்றேன் அஜ்ஜு.. டென்ஷன் ஆகாம புரிஞ்சிக்க ட்ரை பண்றேன்.. உங்க மனசுல எது இருந்தாலும் சொல்லுங்க..” குரலில் தவிப்புடன் கேட்க, அர்ஜுன் அந்தப் பக்கம் தலையை நீவிக் கொண்டான்.

“ஒண்ணுமே இல்லம்மா.. ரொம்ப டயர்ட்டா இருக்கு.. தலை ரொம்ப வலிக்குது.. நான் தூங்கப் போகவா?” அர்ஜுன் கேட்கவும்,

“ம்ப்ச்.. நீங்க ஏதோ என்கிட்டே மறைக்கறீங்க அர்ஜுன். என்கிட்ட சொல்ல முடியாத படி அப்படி என்ன தான் ஆச்சு? நீங்க சரி இல்ல.. எனக்கு நீங்க ஏதோ மறைக்கறீங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.. சரி.. ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு சொல்லுங்க..” என்றவள்,

“குட் நைட்.. டைட் ஹக்ஸ்..” என்று போனை வைத்துவிட, அர்ஜுன் பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.

தலையை பிடித்துக் கொண்டவன், “உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல.. ஆனா.. நம்ம கல்யாணம் நெருங்கி வர சமயத்துல இப்படி ஒரு டென்ஷன் உனக்கு வேண்டாம்டா.. இதோ ஆச்சு.. இன்னும் ரெண்டே வாரம்.. இந்த ஷூட்டிங் முடிச்சிட்டு வந்துடறேன்..” என்று அவளிடம் மனதில் சொன்னவன், தலையணையை எடுத்து தனது தலை மீது போட்டுக் கொண்டான். 

ஷூட்டிங் தொடங்கும் அன்று தான் படத்தின் பூஜையும் நடந்தது. எப்பொழுதும் படத்தின் பூஜை அன்று அவனது தயக்கம் புரிந்து வினயும் அவனுடனேயே இருப்பான். இது தான் வினய் அருகில் இல்லாமல் அவன் கலந்துக் கொள்ளும், படத்தின் முதல் பூஜை. எப்பொழுதுமே அர்ஜுனுக்கு உடன் பணி புரியும் ஹீரோயின்களிடம் பேச மிகுந்தத் தயக்கம்..

வினய் அருகில் இருக்கும் பொழுது, அவனுடன் அதிக நேரம் செலவிடுவது போலவே, அவர்களிடம் பேசியது போலவும், பேசாதது போலவும் அவன் அந்த ஷூட்டிங்களை முடித்து விடுவது வழக்கம். 

இந்த முறையோ, எவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பனியிடம் திருமண வேலைகளைக் கொடுத்திருந்தாலும், அது சிறப்பாக நடக்கிறதா என்ற மேற்ப்பார்வை பார்க்கும் வேலையும், இன்விடேஷன் தேர்வு செய்யும் வேலையும் வினயை அழைக்க, வினய் இங்கு திரும்பி வர வேண்டி இருந்தது.

திருமணத்திற்குள் இந்த படத்தையும் முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று அர்ஜுனும் மொத்தமாக கால்சீட் கொடுத்திருக்க, வினய் அவனுடன் எப்பொழுதும் போல இருக்க முடியாமல் போனது தான் விதியின் விளையாட்டா?

படத்தின் பூஜையின் அன்று அவன் அருகில் வந்து நின்ற ஹீரோயின் அவனைப் பார்த்து புன்னகைக்க, நாகரீகம் கருதி முறைமைக்கு புன்னகைத்தவன், மீண்டும் பூஜை செய்வதை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.

அந்தப் படக் குழுவினர் அனைவருக்கும் மாலைகளை அணிவித்து, புகைப்படங்கள் எடுக்கத் துவங்கினர். படத்தின் ஹீரோ ஹீரோயின் என்ற முறையில் அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுக்க, அந்த ஹீரோயின் தனது செல்லிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டவள், அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு, ‘வெரி ஈகர் டு வர்க் வித் அவர் ஹாண்ட்சம் அர்ஜுன்..’ என்று பதிவிட்டு, அவனையும் டேக் செய்திருக்க, அதைப் பார்த்த அர்ஜுன், அவள் ஏதோ ஆர்வத்தில் செய்துவிட்டதாக அதை கண்டுக் கொள்ளாமல் விட்டான்.

படப்பிடிப்பு இடைவேளையில் அவனிடம் அவளாகவே வந்து கதைப் பேசுவது வழக்கமாக மாறியது.. முதல் இரண்டு தினங்கள், அதை அவன் சாதாரணமாக எடுத்துக் கொண்டான். எப்பொழுதும் உடன் நடிக்கும் நடிகரிடம் ஒரு தோழமை உணர்வுடன் இருந்தால் படப்பிடிப்பும், காட்சிகளும் இயல்பாக அமையும் என்று உடன் பணிபுரிபவரிடம் பேசுவது வழக்கம் தான்.  அப்படி தான் என்று அர்ஜுன் அவளுடன் இருதினங்களாக பேசிக் கொண்டிருக்க, அடிக்கடி அவனுடன் செல்ஃபிகளும், ‘சும்மா ஒரு ரீல்ஸ் அர்ஜுன்..’ என்று கேட்டு, அவனுடன் ரீல்ஸ்கள் செய்து அதைப் பதிவிடத் துவங்க, அர்ஜுனுக்கு அது சங்கடத்தைக் கொடுத்தது.

கதாநாயகி அமிதா, சுட்டிகையாக, அந்த படத்தில் நடிக்கும் அனைவரிடமும் பேசிப் பழகினாள் தான்.. அதுவும் அவள் அந்தப் படத்தின் தயாரிப்பாளரின் பெண் வேறு.. அதற்கான மரியாதையும், அவள் சொல்வதை செய்யவுமே அங்கு அனைவரும் முயன்றனர். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் திண்டாடியது வேறு, அவர்களுக்கு நினைவு வந்து, அவளிடம் நல்ல முறையில் நடக்கவே முயன்றனர்.

அனைவருமே அப்படி நடந்துக் கொள்ள, தான் மட்டும் அவளிடம் குறை கண்டுப்பிடிப்பது போலவும் தோன்றியது. இது போல பேசிப்பழகி பழக்கம் இல்லாததினால் கூட அப்படித் தோணலாமோ என்று சந்தேகத்தின் பலனை அவளுக்கும் கொடுத்து, அவளுடன் பேசினான்.

பல சமயம் அவர்களுடன் தயாரிப்பாளரும் இருக்க, அவளை முழுவதுமாக தவிர்க்கவும் அர்ஜூனால் முடியாமல் போனது. அவன் ஒருமுறை தனியாக அமர்ந்திருந்த பொழுதோ, அந்தத் தயாரிப்பாளரே அவனிடம் வந்து, ‘என்ன அர்ஜுன் தனியா உட்கார்ந்து இருக்கீங்க? போர் அடிக்கலையா? என் பொண்ணு அங்க சும்மா தான் இருக்கா.. பேசிக்கிட்டு இருங்களேன்.. உங்களுக்கும் பொழுது போகும்.. அவளும் ஒரு இடத்துல உட்காருவா..’ என்று சொல்லவும், அதற்கு மேல் தவிர்க்க முடியாமல், அவளுடன் பேசும்படியும் ஆகியது.

தயாரிப்பாளர் நல்ல எண்ணத்தில் தான் கூறினார்.. ஆனால், அந்தப் பெண் பொழுது போகவில்லை என்றால் அர்ஜுனின் கேரவனுக்கு வர துவங்கி இருந்தாள். ஒரு ஹீரோயின் தனியாக கேரவனுக்கு வந்தால், அது நட்பாகவே இருந்தாலும் கண், காது, மூக்கு வைத்து தேவையில்லாத வதந்திகள் பரவும் என்ற பயம் அர்ஜுனுக்கு எழத் துவங்கி இருந்தது.. அதை விட அது சிவாத்மிகாவை எந்த அளவு பாதிக்கும்? அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற பயம் வேறு அவனை ஆட்டிப் படைக்க, அர்ஜுன் மெல்ல இறுக்கத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளத் துவங்கினான். அந்த இறுக்கத்தை அவன் சிவாத்மிகாவிடம் காட்டி விடாமல் இருக்கவும் முயற்சி செய்ய, அவனது குரலிலேயே அவள் கண்டுப்பிடித்துக் கேட்கத் துவங்கவும், அர்ஜுனுக்கு மூச்சு அடைப்பது போலத் தோன்றத் துவங்கி இருந்தது.

வினய் வந்துவிட்டால் அந்த கதாநாயகியைத் தவிர்க்கலாம் என்று அவன் நினைத்திருக்க, அவளோ காட்சிகளின் இடைவேளையில், அல்லது ரிஹர்சல் செய்யும்பொழுது, அவனிடம் அதிக நெருக்கம் காட்டுவது போல அர்ஜுனுக்குத் தோன்றத் துவங்கி இருந்தது.            

அதோடு ரீல்ஸ் செய்கிறேன் என்று வினயையும் அவள் விட்டு வைக்காமல், உடன் இணைத்துக் கொண்டு அவள் விதம் விதமாக ரீல்ஸ் செய்ய, அர்ஜுன் செயலற்று நின்றான். ரீல்ஸ் எடுப்பதோடு மட்டும் அல்லாமல் அனைத்துமே பதிவேற்றம் ஆனதும் அர்ஜுனின் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. 

அதோடு மட்டும் அல்லாமல், வினயின் கையிலேயே போனைக் கொடுத்து, அர்ஜுனுடன் பேசுவதையும், ஏதாவது பாட்டிற்கு ஸ்டெப் போடுவதையும் படம் பிடிக்க சொல்லவும், இருவருமே அதை தவிர்க்க முடியாமல் போனது. அவனது கண் முன் அவனது முதல் படம் முடிந்து நடந்த அனைத்து சம்பவங்களும் நினைவிற்கு வர, எந்த வித மறுப்போ, பிரச்சனையோ வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவனுக்கு முக்கியமாக இருந்தது.

திருமணம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் ஏதாவது பிரச்சனையை இழுத்து விட்டு, தனது எதிர்காலத்திற்கே கேள்விக் குறியை போடவும் அர்ஜுன் தயங்க, முள்ளின் மீது நிற்பது போல அவனது நாட்கள் நகர்ந்தது.     

ஒரு படப்பிடிப்பில் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுடன் ரீல்ஸ் செய்வதும், போஸ்ட் போடுவதும் மிகவும் சகஜம் தான்.. ஆனால் தன்னுடைய பெயரை யாருடனும் இணைத்துப் பேசுவதை விரும்பாத அர்ஜுனுக்கு அவளது நெருக்கம் அதிகப்படியாகவும், மூச்சு முட்டுவது போலவும் இருந்தது..

அதே போல, ஷூட்டிங் முடிந்து, அறைக்குத் திரும்பும் வழியில், அர்ஜுன் அறையைத் திறக்கும் பொழுது வேகமாக அவன் அருகில் சென்று சிலது நிமிடங்கள் எதையாவது பேசிவிட்டு செல்வதையும் அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். வினய் அருகிலேயே நின்றிருந்தாலும், அவள் அவ்வாறு செய்ய, அனைத்தும் கோர்த்து, அந்த ஷூட்டிங் தளத்தில் அரசல் புரசலாக இருவரையும் இணைத்து பேச்சுக்கள் துவங்கி இருந்தது..

இப்படியாக அந்த ஒருவாரமும் கழிய, வினய் அவசரமாக ஷூட்டிங்கிற்கு கிளம்பிச் சென்று விட, சிவாத்மிகா உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். அர்ஜுன் முன்தினம் பேசியது தான்.. அதற்குப் பிறகு அவனிடம் இருந்து அழைப்பு இல்லாமல் போனது. அவள் எப்பொழுது அழைத்தாலும் வினய் தான் போனையும் எடுத்தான்.

ஒருமுறை அவள் அழைத்த பொழுது வினய் போனை இயக்கவும், “நீங்க அங்க போய் என்கிட்ட பேசறதுக்கு பேசாம இங்கேயே பேசிட்டு இருக்கலாம்.. எதுக்கு தேவையில்லாம கால் காசை வேஸ்ட் பண்ணிக்கிட்டு..” என்று கோபமாகச் சொல்லி, போனை வைத்துவிட, வினய் அர்ஜுனைப் பார்த்தான்.

“அவகிட்ட மெல்ல சொல்லிப் பார்க்கறயா? அவளா தெரிஞ்சிக்கிட்டா பிரச்சனை வேற மாதிரி ஆகப் போகுது.. எனக்கு சந்தோஷமா கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கற டைம்ல ஏன் இந்தப் பிரச்னைன்னு இருக்கு..” தலையைப் பிடித்துக் கொண்ட வினய்யை அர்ஜுன் நொந்தபடி பார்த்தான்.

“அவகிட்ட சொல்லி கஷ்டப்படுத்தணுமா?” அர்ஜுன் கேட்க,

“என்னன்னே தெரியாம.. நீ பேசாம இருக்கறது அவளுக்கு அதை விட கஷ்டம் இல்ல..” என்றவனை குழப்பமாகப் பார்த்தவன், தனது செல்லை எடுத்து நிர்மலாவிற்கு அழைத்தான்.

அனைத்து விஷயத்தையும் கடகடவென்று சொன்னவன், “நான் இப்போ என்னம்மா பண்றது? எல்லாத்தையும் சொல்லி அவளையும் கவலைப்படுத்தவா? இல்ல. ஆச்சு இன்னும் ஒரே வாரம்.. முடிச்சு டான்ஸ் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்துடவா?” என்று கேட்க, அவனது குரலே அவனது மனநிலையைச் சொல்ல, நிர்மலா அமைதியாகிப் போனார்.

அவரது அமைதி அர்ஜுனைக் கலவரப்படுத்த, “அம்மா.. என்னம்மா பேசாம இருக்கீங்க?” என்று கேட்க,

“ஒண்ணும் இல்ல அர்ஜுன்.. இப்போ கல்யாணம் வச்சிருக்கற நிலையில இப்போ எதுக்கு தேவை இல்லாம இந்த பிரச்சனைன்னு தான் நான் யோசிக்கிறேன்.. இதுல அவளையும் இழுத்து ஏன் கவலைப்படுத்தணும் அர்ஜுன்? இன்னும் விஷயம் சோசியல் மீடியால எல்லாம் ரொம்ப வரல இல்ல..” கவலையாக அவர் கேட்க,

“மெல்ல வந்துட்டு தான் இருக்கும்மா.. எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு.. எனக்கு சிவாவை நினைச்சா ஒரு பக்கம் பயமாவும், கொஞ்சம் கவலையாவும் இருக்கும்மா.. அவ இதை எப்படி எடுத்துப்பான்னு எனக்கு யோசிக்க முடியல.. அவ புரிஞ்சிகக்றேன்னு சொல்றா தான்.. எனக்கு அதை எப்படி அவ கிட்ட சொல்றதுன்னும் தெரியல.. ரொம்ப கஷ்டமா இருக்கும்மா..” அர்ஜுன் தனது மனதில் அடைத்துக் கொண்டிருந்ததைச் சொல்ல, நிர்மலா பெருமூச்சுடன் எதிரில் இருந்த அவனது தந்தையின் படத்தை வெறித்தார்.

“வேண்டாம்டா.. அவ பாவம்.. நீ எதையாவது சொல்லி அவ கஷ்டப்படப் போறா.. எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.. நீ ஒழுங்கா ஷூட்டிங் முடிச்சிட்டு வர வழியைப் பாரு.. இல்ல நான் வேணா கூட வந்து இருக்கவா?” நிர்மலா கேட்க,

“இல்லம்மா.. வேண்டாம்.. அது தான் வினய் இருக்கானே.. நான் சமாளிச்சுக்கறேன்..” எனவும்,

“சரிடா.. இப்போ இதை எல்லாம் சிவாகிட்ட சொல்லி அவளை டென்ஷன் பண்ணாதே.. அவளை நிம்மதியா இருக்க விடு.. நீ எதையாவது சொல்லி உன் கல்யாணத்துல பிரச்சனை வரக் கூடாது.. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்.. இதுல இந்த இடைஞ்சலை எல்லாம் தூக்கிப் போடு.. போ.. போய் வேலையைப் பாரு..” என்று நிர்மலா சொல்லிவிட்டு போனை வைக்க,

அப்பொழுது தான் அர்ஜுனிடம் இருந்து போன் இல்லாமல் போகவும், நிர்மலாவிடம் கேட்கலாம் என்று மீண்டும் அவரைப் பார்க்க வந்த சிவாத்மிகா, அவர்களது உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போனாள்.

“அர்ஜுன்.. அர்ஜுன்.. அம்மாகிட்ட பேசிட்டு இருக்காங்க.. ஏன் என்கிட்ட பேசல? என்னை என்ன நிம்மதியா விடனும்? எங்க கல்யாணத்துல என்ன பிரச்சனை? அர்ஜுனுக்கு என்னாச்சு? ஹையோ கடவுளே..” என்று நொந்துக் கொண்டவள், வந்த சுவடே இல்லாமல் வீட்டிற்கு திரும்பி, தனது அறைக்குள் புகப்போக, ராதா வினயுடன் பேசும் சத்தம் கேட்கவும், அழுகை முட்டிக் கொண்டு வர, தனது அறைக்குள் புகுந்துக் கொண்டாள்..

விடையறியா கேள்விகள் சுழல, தன்னை அனைவருமே இருட்டில் விட்டது போலத் தோன்றத் துவங்கியது. அந்த உணர்வுகளில், தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்கத் துவங்கினாள்.