எந்நாளும் தீரா காதலாக — எபிலாக்

86348a3a1103c8c7746de84c304428a1-b6e17217

ஏழு வருடங்களுக்குப் பிறகு….

அந்த சவுத் இந்தியன் பிலிம் பெஸ்டிவலின் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது.. தனது ஆறு வயது மகளிடம் பேசிக் கொண்டு அர்ஜுன் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அடுத்து அமர்ந்திருந்த சிவாத்மிகா, இருவரையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்..

என் ராட்சசி சிரிக்கிறா
என் காதலை ரசிக்கிறா
என் கண்ணில இருக்கிறா
என் கூடவே  

அவளது பார்வை தன் மீதே இருக்கவும், அர்ஜுன் மெல்ல அவள் பக்கம் சாய்ந்து பாடி, அவளது தோளை யாரும் அறியாமல் இடிக்க, அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு நாணம் ஒட்டிக் கொண்டது..  

“சும்மா இருங்க அஜ்ஜு.. எப்போப் பாரு என்னைப் பாடிக் கிண்டல் செய்யறதே வேலையா போச்சு..” என்று அவள் சிணுங்க, கன்னம் குழியச் சிரித்தவன், அவளது முறைப்பில் தனது இதழ்க் கடையில் சிரிப்பை அடக்க, அவனது கண்களில் தெரிந்த குறும்பில் அவளோ கன்னங்கள் சூடேற தலையைக் குனிந்துக் கொண்டாள்.

“உங்களுக்கு எப்போப் பாரு இதே வேலையா போச்சு. அங்க ஸ்டேஜ்ல உயிரைக் கொடுத்து டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க.. நீங்க அங்க பார்க்காம இங்க என்னை வம்பு பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” அவனிடம் சாய்ந்து அவள் கேட்க,

“நீயும் அங்க டான்ஸ் பார்க்காம என்னை என்ன பார்த்துட்டு இருக்க? உன் புருஷனை ரசிக்கரியா? வேணா நாம காருக்கு போய் ஒருத்தரை ஒருத்தர் ரசிக்கலாமா?” அவளை வம்பு வளர்த்தான்..

“நான் என் பொண்ணை பார்த்தேன்.. அவளுக்கு குடிக்க தண்ணி வேணுமா என்னன்னு கேட்கலாம்ன்னு பார்த்தேன்.. ரொம்ப தான் உங்களுக்கு ஆசை.. இதுல கார்ல வேற போய் ரசிக்கணுமோ?” அவளது பதிலில்,

“நீ சொல்ற கதைய உன்னோட செல்லப் பையனும், உன் மருமகப் பொண்ணுங்களும் நம்புங்க.. என்கிட்டே கதை சொல்லாதே.. அப்பறம் நான் வேற கதை சொல்லுவேன்.. ஒத்துக்கோ.. நீ என்னைத் தான் சைட் அடிச்சிட்டு இருந்தேன்னு.. இல்ல நான் என்னோட ஸ்டைல்ல உன்னை இன்னைக்கு நைட் ஒத்துக்க வைப்பேன்..” அவளது காதில் முணுமுணுப்பாக விடாமல் கேட்க,

“தெரியுது இல்ல.. அப்பறம் என்ன கேட்டுக்கிட்டு.. நான் என்னோட புருஷன தான் பார்த்துட்டு இருக்கேன்.. உங்களுக்கு என்ன வந்தது?” சளைக்காமல் அவள் உதட்டைச் சுழித்து கேட்கவும், அவளது உதட்டின் மீது பார்வை பதித்து, அர்ஜுன் தனது இதழ்களை ஈரப்படுத்தவும்,

“ஹையோ.. ரோமியோ ஸ்டார்ட் பண்ணிட்டார்டா.. இனிமே ரொம்ப ரொமாண்டிக் டயலாக்சா இருக்கும்.. என்னால முடியாதுடா சாமி. நான் டான்ஸ் பார்க்கறேன்..” என்றவள் பார்வையைத் திருப்பிக் கொள்ளவும், மெல்ல தனது கையை நகர்த்தி, அவளது கையை அழுத்தினான்.  

“என்ன?” சிவாத்மிகா கேட்க,

“ஐ லவ் யூ சிட்டு..” அவன் வாயை மட்டும் அசைத்துச் சொல்லவும்,

“மீ டூ..” என்றவள், கேமராவின் கண்கள் தங்கள் பக்கம் திரும்புவது தெரிந்ததும், விழாவைப் பார்ப்பது போலத் திரும்பிக் கொண்டாள்.  விழாவையும் அவளையும் அவன் ரசித்துக் கொண்டிருக்க, அந்த நேரம், ‘சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரமாக இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர், நம்ம எல்லாரோட ஃபேவரட் க்யூட்டி பை ‘ஆத்விகா’’ என்று அந்த அறிவிப்பாளர் அழைக்க, அர்ஜுன் எழுந்து, தனது மகளை அந்த நாற்காலியில் இருந்து பத்திரமாக இறக்கி,

“மேல ஸ்டெப்ஸ்ல பத்திரமா ஏறுடா குட்டி.. டிரஸ்சை அம்மா சொன்னது போல தூக்கிப் பிடிச்சுக்கோ..” என்று மகளுக்குச் சொல்லி அனுப்ப, அவனது கன்னத்தில் முத்தமிட்டவள்,

“சரிப்பா..” என்றபடி அங்கு அவளை அழைத்துக் கொண்டு மேடையேற காத்துக்கொண்டிருந்த பெண்ணுடன் அவள் நடக்க, அர்ஜுன் அவள் படியேறுவதை ரசித்துக் பார்த்துக் கொண்டிருக்க, சிவாத்மிகா தனது மகளை வீடியோ எடுக்கத் துவங்கினாள்..

அர்ஜுன்—சிவாத்மிகா தம்பதியரின் காதலில் கனிந்து உயிரானவள் தான் ஆத்விகா. இருவரின் மூத்த மகள்.. ஆறு வயதாகும் அவள், தாயின் பொறுப்பும், தந்தையின் குறும்பும் சரிவிகிதத்தில் கலந்த சின்னஞ்சிறிய மொட்டு.. சிவாத்மிகா வடிவமைத்த வெள்ளை நிற நெட் துணியில் கோல்டன் கலர் பூக்கள் ஆங்காங்கே கொடி போல படர்ந்திருக்க, குட்டித் தேவதையென ப்ராக்கை, தனது சின்னஞ்சிறு கைகளால் இருபக்கமும் பிடித்துக் கொண்டு, மெல்ல அடியெடுத்து வைத்து படியேறும் மகளை இருவருமே ரசித்தனர்..

அர்ஜுனின் முகத்தினில் என் மகள் என்ற பெருமிதம் பொங்க, சிவத்மிகா படம் பிடித்துக் கொண்டே, மகளை ரசிக்கும் அர்ஜுனை தனது விழிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

ஆத்விகா அர்ஜுனின் உயிர்.. சிவாத்மிகாவை உயிராய் பார்த்துக் கொண்டவன், தங்களது காதலில் கலந்து உருவான கருவைச் சுமக்கிறாள் என்று தெரிந்ததுமே அவளை மேலும் தாங்கத் துவங்கினான். ஒவ்வொரு நாளும் அவளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்ள, பேரு காலத்தின் எந்த வித கஷ்டமும் தெரியாமல், அவனது அன்பால் அந்த சங்கடங்களை குறைக்க, தனது மகளைப் பெற்றெடுத்தாள் சிவாத்மிகா. சின்னஞ்சிறு ரோஜா மொட்டாக தனது கையில் தவழ்ந்த தனது மகளை கண்கள் இமைக்காமல் ரசித்தவன், கண்ணீருடன் சிவாத்மிகாவை நெருங்கி அவளது நெற்றியில் இதழ் பதித்து,

“நம்ம குட்டி தேவதை சிட்டு.. உன்னை மாதிரியே ஸ்வீட்டா இருக்கா.. எனக்கு இப்போ ரெண்டு தேவதைங்க..” என்று பெருமை பொங்கச் சொல்ல, சிவாத்மிகா அவனது கன்னத்தை வருட, நிர்மலா மகிழ்ச்சியுடன் இருவரின் தலையைக் கோதிக் கொடுத்தார்.          

“ஹாய் ஆத்விகா.. ஹவ் ஆர் யூ?” தொகுப்பாளர் கேட்க, தனது மகள் பிறந்த நிகழ்வில் இருந்து மீண்டு நிகழ்விற்கு வந்தவன், மேடையில் நின்றிருந்த மகளைப் பார்க்க, அவனது விரல்கள் தானாக சிவாத்மிகாவின் விரல்களைப் பிணைத்துக் கொண்டது..  

“ஐம் ஃபைன்.. தேங்க்யூ..” மெல்லிய கூச்சம் படற அவள் சொல்ல, அர்ஜுனும் தனது மகளை புன்னகையுடன் வீடியோ எடுக்கத் துவங்கினான்.

“சொல்லுங்க.. ஹவ் டூ யூ ஃபீல்.. அப்பாவும் நீங்களும் போட்டி போட்டு நடிச்சு இருந்தீங்க.. அப்பா கூட அந்த படத்துல நடிச்சது எப்படி இருந்தது?” என்று கேட்க, மைக்கை திருகிக் கொண்டே,

“ஹாப்பியா இருந்தது..” புன்னகையுடன் குழந்தை சொல்லவும், அர்ஜுனின் முகத்தினில் மகிழ்ச்சி..

“உங்க அம்மா என்ன சொன்னாங்க? அப்பாவோட ஆக்டிங் பிடிச்சதா? இல்ல உங்க ஆக்டிங் பிடிச்சதா? கேட்டீங்களா?” என்று கேட்க,  

“ஹ்ம்ம்… ஷி ஆல்வேஸ் சே இட்ஸ் அப்பா.. ஷி இஸ் அப்பாஸ் கேர்ள்..” குழந்தையின் பதிலில், அங்கிருந்தவர்கள் சிவாத்மிகாவைப் பார்த்துச் சிரிக்க, அர்ஜுன் அவளைக் கேலியாகப் பார்த்தான்.  

“மானத்தை வாங்கறா உங்க பொண்ணு..” என்றபடி சிவாத்மிகா முகத்தை மறைத்துக் கொள்ள, அர்ஜுன் அவளைப் பார்த்து சிரித்தான்..

“உண்மையைத் தானே சொல்றா.. நீ தானே அப்படிச் சொல்லுவ.. அவ அதைத் திருப்பிச் சொல்றா..” அர்ஜுன் அவளை வம்பு வளர்க்க,

“பொண்ண விட்டுக் கொடுக்க மாட்டீங்களே..” என்று அவள் நொடித்துக் கொள்ளும் நேரம்,    

“உங்க டாடிய இப்போ ஸ்டேஜ்க்கு கூப்பிடலாமா?” தொகுப்பாளர் கேட்கவும், அவர்களது கவனம் அங்குத் திரும்பியது.

“அப்பா.. வாங்க..” ஆத்விகாவே உடனே அர்ஜுனை அழைக்க, குழந்தை அழைத்ததும் அர்ஜுன் மேடைக்கு ஏறிச் சென்றான்..

“ஹாய் அர்ஜுன்.. எப்படி இருக்கீங்க? இங்க உங்க க்யூட் பொண்ணு நிக்கறாங்க.. உங்களுக்கு எப்படி ஃபீல் ஆகுது?” தொகுப்பாளரின் கேள்விக்கு,

“ஒரு அப்பாவா எப்படிங்க இருக்கும்? ரொம்ப ரொம்ப பெருமைப்படறேன்.. இந்த ஸ்டேஜ்க்கு வர எனக்கு ரொம்ப வருஷம் பிடிச்சது.. அதை அவங்க இந்த வயசுலேயே ஏறினதுல, ஐ ஃபீல் ப்ரவுட்..” பெருமை பொங்க அர்ஜுன் சொல்ல, சிவாத்மிகா இருவரையும் மனம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.    

“கண்டிப்பா அர்ஜுன் சார். ரெண்டு பேருமே அந்த கேரக்டரா வாழ்ந்து இருந்தீங்க.. அவங்க ரோல் அவங்க ரொம்ப அழகா பண்ணி இருந்தாங்க.. சொல்லுங்க.. உங்க பொண்ணோட நடிச்ச உங்களோட எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது? அவங்களுக்கு அதை புரிய வைக்கறது ஈஸியா இருந்ததா?” தொகுப்பாளரின் கேள்விக்கு,

“ஒண்ணும் டிஃபரன்ஸ் இல்லைங்க.. வீட்ல எப்படி இருப்போமோ அப்படி தான் ஷூட்லையும் இருந்தோம்.. ஆனா.. சீன்ஸ் எல்லாம் அவங்க சரியா ஈசியா புரிஞ்சிக்கிட்டு, அவங்க எமோட் பண்ணின பொழுது ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. அவங்க அதை அவ்வளவு அழகா செஞ்சு இருந்தாங்க..

அந்த வயசுல நான் எல்லாம் கண்டிப்பா அப்படி பண்ணி இருக்க மாட்டேன்.. என்னைத் தேடி அவங்க அழுகற சீன் எல்லாம் அவங்க செஞ்சதைப் பார்த்து நான் அசந்தே போயிட்டேன்.. முதல்ல டைரெக்டர் கேட்ட பொழுது எனக்கு அவங்க எந்த அளவுக்கு புரிஞ்சு செய்வாங்கன்னு யோசனையா இருந்தது… ஏன்னா அந்த ரோல் தான் படத்தை பெரும்பாலும் கேரி பண்ணும்.. ஆனா.. அசத்திட்டாங்க.” அவனது வார்த்தை ஒவ்வொன்றிலும் அவ்வளவு பெருமை.

என் மகள்.. அவளது வெற்றி.. என்ற பெருமிதம் அவனது ஒவ்வொரு வார்த்தையிலும், அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அவனது வலது கை குழந்தையின் தலையை மெல்ல வருடிக் கொண்டிருந்ததும் அதற்குச் சான்று..

ஆத்விகா அர்ஜுனை நிமிர்ந்துப் பார்த்துப் புன்னகைக்க, “உங்க வைஃப் எப்படி ஃபீல் பண்ணினாங்க? அவங்க என்ன சொன்னாங்க?” தொகுப்பாளர் கேட்க,

“அவங்க என்ன சொல்வாங்க.. பொண்ணைப் பார்த்து அவங்க ரொம்ப பூரிச்சு போயிட்டாங்க.. அவங்க குட்டி பொண்ணான்னு அவங்களுக்கு நம்பவே முடியல.. அவங்க ரொம்ப ஹாப்பி..” என்று அர்ஜுன் சொல்லவும்,

“என்ன நீங்க அப்படிச் சொல்றீங்க.. அப்பா இப்படிச் சொல்றார்.. நாம பேசாம அம்மாவையேக் கேட்கலாமா?” தொகுப்பாளர் கேட்கவும்,

“ஓகே..” என்றவள், “அம்மா..” என்று அழைக்கவும், சிவாத்மிகா மெல்ல எழுந்து மேடைக்கு வர, டிஜே தனது கைவண்ணத்தைக் காட்டினார்..

மேட் ஃபார் ஈச் அதர்

சூப்பர் ஜோடி தான்

ஊர் பார்த்தாலே கண்ணு படும்

ஃபேரி டேலு தான்..

யு போத் ஆர் ஹாஷ்டேக்

கபில் கோல்ஸ் தான்..  

என்று பின்னணி இசைக்க, அதைக் கேட்ட சிவாத்மிகா உதட்டைக் கடித்துக் கொண்டே அர்ஜுனைப் பார்க்க, தலையைக் கோதிக் கொண்டே, படியேறி வரும் தனது மனைவியை அர்ஜுன் ரசிக்கும் பணியத் துவங்கினான்.  

கேமராவின் கண்கள் அதை அழகாக படம் பிடித்துக் கொள்ள, அர்ஜுனின் அருகே சென்று நின்றவளைப் பார்த்த அந்த தொகுப்பாளர், “ஹாய் ஆத்மிகா மேடம்.. நீங்களே இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்க.. உங்களுக்கு யாரோட ஆக்டிங் பிடிச்சது?” என்று கேட்கவும்,

“ரெண்டு கண்ணுல எது நல்ல கண்ணுன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்? ரெண்டு பேருமே சூப்பரா பண்ணி இருந்தாங்க..” சிவாத்மிகாவின் பதிலில்,

“சேஃப்பா பதில் சொல்றீங்க? அவங்க யார் செல்லம்? அர்ஜுனுக்கு அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண டைம் இருக்குமா? உங்களுக்கு பிலிம்ல அவங்களைப் பார்க்க எப்படி இருந்தது?” தொகுப்பாளர் கேட்க, 

“அவங்க எப்பவுமே டேடிஸ் லிட்டில் ப்ரின்சஸ் தான்.. எங்க ஏஞ்சல்.. டைம் கிடைக்கும்போது எல்லாம் ரெண்டு பேரும் விளையாடிட்டு இருப்பாங்க.. வெளியூருக்கு ஷூட்டிங் போனாலும்.. காலையிலயும், நைட்டும் அர்ஜுன் பசங்க கூட எப்பவுமே அவங்க அவரை மிஸ் பண்ணாத அளவுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணுவார்..

அதை என்னிக்குமே மிஸ் அவர் பண்ணினது இல்ல.. அவர் ரொம்ப கேரிங்.. பசங்களுக்கு சரியா விளையாடுவார்.. அப்படி எல்லாம் பார்த்துட்டு ரொம்ப எமோஷனல் சீன்ஸ் எல்லாம் ரெண்டு பேரும் தவிக்கிறதைப் பார்த்த போது கொஞ்சம் எனக்கே கண்ணு கலங்கிச்சு.. ரெண்டுபேருமே சூப்பரா பண்ணி இருந்தாங்க..” சிவாத்மிகாவின் பதிலில் ஆத்விகா அவளைப் பார்த்து சிரிக்க, அர்ஜுன் புருவத்தை உயர்த்தி அவளை கேலியாகப் பார்த்தான்.

“பொறாமை..” என்று கேலி செய்ய, சிவாத்மிகா உதட்டை சுழித்து அழகு காட்ட, அந்த அழகிய காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டது..

“சூப்பர்ங்க.. இன்னும் ஆத்விகா பேபி நிறைய சூப்பர் சூப்பர் படம் நடிச்சு.. இன்னும் நிறைய அவார்ட்ஸ் வாங்கணும்ன்னு விஷ் பண்ணிக்கறோம்..” என்று தொகுப்பாளர் கூறவும், அங்கு குழுமி இருந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, மேடையில் இருந்து இறங்கும் பொழுது, ஆத்விகாவை தூக்கிக் கொண்ட அர்ஜுன், ஒரு கையால் சிவாத்மிகாவின் கையைப் பிடித்துக் கொண்டு இறங்கவும், மீண்டும் அதே பாடல் ஒலிக்க, அர்ஜுன் அவளது கையை அழுத்தினான்.

அர்ஜுனுக்கும் அந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததும் அல்லாமல், அந்த விழாவிலேயே அவனது பதினைந்தாவது படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட, அது பெரிதும் வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டது.

வீட்டிற்கு வந்த மூவருக்கும், “அங்கேயே இருங்க..” என்று வாசலில் நிற்க வைத்து, ராதா திருஷ்டி சுற்றிய பிறகே உள்ளே விட,  

“அதானே பார்த்தேன்.. எங்க இதைச் செய்யலையேன்னு..” என்று சிவதாமிகா வம்பிழுத்துக் கொண்டே உள்ளே நுழைய, கேசவன் அவர்களை கண் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தார்..

“வாங்கப்பா.. எப்போ வந்தீங்க?” சிவாத்மிகா கேட்க,

“சாயந்திரம் தான் வந்தேன்டா… உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்தது உடனே வந்துட்டேன்..” அவரது பதிலில் அவள் புன்னகைத்து நின்றாள்.. இத்தனை வருடங்களில் அர்ஜுனின் முயற்சியில், அவரிடம் சில வார்த்தை மட்டுமே அவளால் பேச முடிந்தது.. ஆனால் கேசவனோ, இத்தனை வருடங்கள் காட்டாத தனது அன்பு மொத்ததையும் அவளிடம் காட்டினார்.   

“சரிடா.. போய் ப்ரெஷ் ஆகிட்டு வா.. முகம் எல்லாம் ரொம்ப டயர்ட்டா இருக்கு.. வந்து நேரத்தோட சாப்பிடு.. உனக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கேன்..” என்று வாஞ்சையாக அவளது தலையை வருட,

“பார்த்தியா.. அக்காவைப் பார்த்த உடனே எங்க ரெண்டு பேரையும் மறந்துட்டாரு..” ஹரி, கேசவனையும், சிவாத்மிகாவையும் வம்பு வளர்க்க,

“போடா வாலு..” என்று சிவாத்மிகா அவனது காதைத் திருக, அவர்களைப் பார்த்து சிவானி சிரித்துக் கொண்டிருந்தாள்..   

“தாத்தா..” என்று கேசவனிடம் செல்லம் கொஞ்சியப் பிறகு, அவரிடம் இருந்து இறங்கியவள், அவர்களை பார்த்துக் கொண்டிருந்த வினயிடம் தாவ,  

“மாமா..” என்று வினய்—ராதாவின் பட்டாம்பூச்சி போன்ற இரு வாண்டுகளும், ‘அப்பா’ என்றபடி மூன்று வயது பாலகனும் ஓடி வர,

“ஹாய் மை டியர் செல்லக் குட்டிஸ்.. எனக்கு கிஸ் கொடுங்க..” என்ற அர்ஜுன், மூவரையும் அணைத்துக் கொண்டு, தனது பாக்கெட்டில் இருந்த சாக்லேட்களை எடுத்துக் கொடுக்க,

ஆத்விகாவைவின் கன்னத்தை வருடிய வினய், “என் செல்லப்பட்டு எவ்வளவு அழகா இருக்காங்க இல்ல.. எப்படி இருந்தது பங்க்ஷன்?” அவளைக் கொஞ்சிக் கொண்டே கேட்க,

“சூப்பரா இருந்தது மாமா.. ஆனா.. ஸ்டேஜ்ல பயமா இருந்தது..” அவன் மீது சலுகையாக சாய்ந்துக் கொண்டு கதை பேச,  நிர்மலா தனது மகன்கள் இருவரையும் நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..

இரவில் எப்பொழுதும் போல அர்ஜுனின் அறையில், பெட்டின் மீது ஏறிக் குதித்து, அர்ஜுனுடன், குழந்தைகள் நால்வரும் விளையாடிக் கொண்டிருக்க, குழந்தைகளுடன் குழந்தையாக அர்ஜுனும்  விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது குளியலறையில் இருந்து வந்த ஒங்கரிக்கும் சத்தத்தில், “அம்மாவுக்கு என்னடா ஆச்சு?” தனது மகனின் கையை எடுத்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டு அர்ஜுன் விளையாட்டாக இழுக்க,

“அம்மா மார்னிங் என் சாக்லேட் பிடுங்கி சாட்பிட்டாங்க.. அப்பறம் ப்ரிட்ஜ்ல நிறைய சாக்லேட் சாப்பிட்டாங்க.. மாமா கேக் தந்தாங்க.. ஜன்க் ஃபுட் சாப்பிட்டா வாமிட் வரும்..” அர்ஜுனின் மகன் அபிமன்யு அவனிடம் கோல் மூட்ட,

“ஆமா மாமா.. அத்தை, தாத்தா வாங்கிட்டு வந்த ஸ்வீட்டை வேணும்ன்னு கேட்டு நிறைய ஸ்வீட் சாப்பிட்டாங்க மாமா.. பாட்டி கூட இவ்வளவு ஸ்வீட் சாப்பிடாதேன்னு சொன்னாங்க..” வினயின் இரட்டையரில் ஒருத்தியான வாமிகாவும்,

“ஆமா மாமா.. அம்மாவும் இன்னைக்கு ஸ்வீட் ரொம்ப சாப்பிடாதேன்னு சொல்லச் சொல்ல கேட்காம சாப்பிட்டாங்க.. அம்மாகிட்ட கேசரி வேணும் செஞ்சிக்கொடுன்னு வேற கேட்டாங்க.. அது தான் ஸ்டொமக் சரி இல்லாம வாமிட் பண்றாங்க..” என்று தன் பங்கிற்கு ரியாவும் அர்ஜுனிடம் சொல்ல,

அர்ஜுன் சிரித்துக் கொண்டே, “ஆமாடா குட்டிங்களா.. கார்ல வரும்போது என்னையும் ரொம்ப படுத்தி எடுத்து சாக்லேட் கேட்டா.. வாங்கித் தரலைன்னா உங்களுக்கு வாங்கினதை சாப்பிட போறான்னு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தேன்.. நிறைய ஸ்வீட் சாக்லேட் சாப்பிட்டா இப்படித் தான் ஆகும்.. உங்களுக்கும் அது தான்.. நிறைய ஸ்வீட் சாப்பிடக் கூடாது.. பாரு நாளைக்கு சிட்டுக்கு டாக்டர் ஊசி போடப் போறாங்க..” என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்க, அங்கு அவர்களை இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்த சிவாத்மிகா,

“அஜ்ஜு..” என்று பல்லைக் கடிக்க, அவளைப் பார்த்து கேலியாக சிரித்தவன்,

“உண்மையை தானே சொல்றேன்.. நிறைய ஸ்வீட் சாப்பிட்டா இப்படி தான்.. ஸ்டோமக்ல ஆட்டம் போடும்..” என்று அவன் மேலும் கேலி செய்ய, சிவாத்மிகாவின் முறைப்பு அதிகமாக,

‘ஆஹா.. அஜ்ஜு.. அவ ராங் மூட்ல இருக்கா போல இருக்கே.. அடி வாங்கறதை பசங்களை வினய் கிட்ட அனுப்பி விட்டுட்டு வாங்கு.. இல்ல உன் மானம் போயிடும்..’ என்று மனதில் பேசியவன்,

“பசங்களா நீங்க கொஞ்ச நேரம் போய் வினய் கூட விளையாடுங்க.. நான் இதோ நம்ம சிட்டுக்கு மெடிசின் கொடுத்துட்டு கூப்பிடறேன்..” என்று சொல்லவும், அனைவரும் அங்கிருந்து ஓடிச் செல்ல, கதவை தாழிட்டவன்,  

சிவாத்மிகாவை பின்னால் இருந்து அணைத்து, அவளது கழுத்து வளைவினில் முகம் பதித்துக் கொண்டே, “நான் செய்த குறும்பு.. உண்டாச்சு கரும்பு..” அவளது வயிற்றில் வருடிக் கொண்டே பாடத் துவங்கவும், அவனது கையில் அடித்தவள், அவனைத் தள்ளிவிட்டு, அவனை சரமாரியாக அடிக்க, சிறிது நேரம் சிரித்துக் கொண்டே அவளிடம் அடி வாங்கியவன், அவளது கையைப் பற்றி, மடியில் அமர்த்திக் கொண்டு,

“என்னடா.. என் மேல கோபமா இருக்கியா? உனக்கு கஷ்டமா இருக்கா? நீ வாமிட் பண்றதைப் பார்த்தா கொஞ்சம் கில்டியா இருக்கு.. உன்னை ரொம்ப படுத்தறேனா? உன் ஸ்வீட் க்ரேவிங்க்ஸ் இப்படி வாமிட்ல கொண்டு விடுதேடா.. ரொம்ப வாமிட் பண்றயே? நாளைக்கு டாக்டர்கிட்ட கேட்கலாமா?” அவளது முகத்தை நிமிர்த்தி அர்ஜுன் கேட்கவும், அவனது தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டவள்,

“நீங்க எப்பவுமே என்னை தாங்குவீங்க தான் அஜ்ஜு.. ஆனா.. இந்த டைம்ல..” என்று தனது வயிற்றில் அவனது கையை எடுத்து அழுத்திக் கொண்டவள்,

“இந்த டைம்ல ஸ்பெஷலா என்னைத் தாங்கறத அனுபவிக்கவே நான் இன்னும் ஒரு பத்து பிள்ளை கூட பெத்துப்பேன்.. மை டியர் செல்ல கண்ணா.. நான் பிள்ளை தான் சுமப்பேன்.. ஆனா.. நீங்க எங்களையும் சேர்த்து சுமப்பீங்க. எனக்கு எந்த கஷ்டமும் இல்ல..” என்றவள், அவனது மூக்கோடு மூக்கை உரசி, அவனது மூக்கில் தனது இதழை பதித்தபடி,

“நம்ம காதலுக்கு கிடைச்ச மூணாவது பரிசு.. ஐ லவ் யூ சோ மச் அஜ்ஜு..” என்றபடி, அவனது நெற்றியில் இதழ் ஒற்றி, அவனது இதழ்களை நெருங்க,

அவளது அன்பில் கரைந்தவன், “ஐ லவ் யூ டூ மை ஸ்வீட்டு.. மை ட்ரெஷர்..” அவளது இதழ் மீது இதழ் பதித்தவன், நெஞ்சம் நிறைந்த காதலுடன் அவளை அணைத்துக் கொள்ள, உலகமே வசப்பட்ட மகிழ்ச்சியுடன் மங்கையவள் அவனது மார்பில் சேர்ந்தாள்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிலும், எந்நாளும் தீராத காதலுடன் அவர்கள் வாழ வாழ்த்தி விடைப்பெறுவோம்.. நன்றி.. வணக்கம்..               

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻