எந்நாளும் தீரா காதலாக – 1 5

15 💝                       

அமைதியான கார்ப் பயணத்தில், காரில் ஓடிய பாடலைத் தவிர இரு இதயங்கள் துடிக்கும் ஓசை மட்டுமே அந்த காரில் கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவரின் அருகாமையை ஒருவர் ரசித்துக் கொண்டிருக்க, சிவாத்மிகாவின் கண்கள் அவனை அடிக்கடித் தழுவி மீண்டது.

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு

கண்ணுக்கு மையழகு.. கவிதைக்கு பொய்யழகு

அவரைக்கு பூ அழகு அவருக்கு நானழகு

பாடல் அவளது காரில் ஒலிக்க, அவளது பார்வையைக் கண்டவன்,

கண்ணுக்கு மையழகு.. கவிதைக்கு பொய்யழகு

கன்னத்தில் குழி அழகு கார்போன்ற பெண்ணழகு.

அவளைப் பார்த்து பாட, அவளது கண்கள் நாணத்தில் தழைந்தது. மெல்ல அவளது கன்னத்தை ஒரு விரல் கொண்டு வருடியவன், மீண்டும் தனது பார்வையை வண்டி ஓட்டுவதில் திருப்பினான்.  

“காரை நல்லா மைண்டைன் பண்ற..” நெடுநாட்களாக எடுக்கப்படாமல் இருந்த அவளது காரை அவன் இயல்பாய், உரிமையாய் இன்று வெளியில் எடுத்துச் செல்லலாம் என்று கேட்க, சிவத்மிகா எந்த மறுப்போ, தயக்கமோ காட்டாமல், தனது கார்ச் சாவியை எடுத்து அவனது கையில் கொடுத்தாள்.    

அவள் இருந்த அந்த மனநிலையில், அர்ஜுனின் அருகாமையை அவள் ரசித்துக் கொண்டிருக்க, கார் செல்லும் பாதையை கவனிக்காமல் அவள் அமர்ந்திருந்தாள். அர்ஜுன் அவளது கடைக்கு தான் முதலில் அவளை அழைத்துச் சென்றான்.   

அவளது கவனம் இங்கு இல்லை என்பதை உணர்ந்தவன், அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, அவளது கடைக்கு முன்பு வண்டியை நிறுத்தியவன், “ஆத்மிகா மேடம்.. இடம் வந்தாச்சு.. நாம இறங்கலாமா?” எனவும்,

அந்த இடத்தைப் பார்த்தவள், ஆச்சரியத்தில் கண்களை விரித்து அவனைப் பார்க்க, “ஆத்மிகா மேடம்.. உங்க கடையில உங்களுக்கு ஒரு அரை மணி நேரம் டைம் தரேன்.. கொஞ்சம் அப்படியே என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு பார்த்துட்டு வாங்க.. நான் வெயிட் பண்றேன்..” என்று சொல்லவும், முகம் நிறைந்த புன்னகையுடன், அவனது கையைப் பிடித்துக் கொண்டு,

“அஜ்ஜு.. சூப்பர்.. இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல.. நான் கூட உங்ககிட்ட கடைக்கு கூட்டிட்டு போறீங்களா? என்ன நடக்குதுன்னு ஏது நடக்குதுன்னு பார்த்துட்டு சீக்கிரம் வந்துடறேன்னு கேட்கலாம்ன்னு நினைச்சேன்.. அப்பறம் சரி வேண்டாம் நாளைக்கு போயிக்கலாம்னு விட்டுட்டேன்.. இப்போ நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க.. எப்படி?” மகிழ்ச்சியுடன் கண்களை விரிக்க,

“அது எப்படியோ தெரியுது. ஒருவேளை உன் ஹார்ட்ல நான் இருக்கறதுனால எனக்கு உன் மனசுல இருக்கறது தெரியுதோ?” குறும்பாக அவன் யோசிக்க, அவனது புஜத்தில் அடித்தவள், காரை விட்டு துள்ளிக் கொண்டு இறங்கி, இரண்டடி எடுத்து வைத்தவள்,

“ஹீரோ சார்.. இந்த சின்ன கடைக்கு உள்ள வந்து சிறப்பிக்கனும்.. உள்ள வந்தே உட்காரலாமே.. இங்க ஏன் கார்ல உட்கார்ந்து இருக்கணும்? என்ன? சைட் அடிக்க பிளானா?” விளையாட்டாகவே அவள் அழைத்து விட்டு மிரட்ட, எந்த கெத்தும் காட்டாமல், மாஸ்க்கை சரி செய்துக் கொண்டே கீழே இறங்கியவன், காரை லாக் செய்யவும், சிவாத்மிகா அவனை திகைப்புடன் பார்த்தாள்.

“என்ன? என்ன? நிஜமா உள்ள வரீங்களா?” கண்களை விரித்து அவள் ஆச்சரியமாகக் கேட்க,

அவளது கன்னத்தை கார் கீ கொண்டு தட்டி, “ஆமா.. நீ தானே கூப்பிட்ட? அப்போ நிஜமா என்னைக் கூப்பிடலையா? சும்மா தான் கூப்பிட்டியா? நான் வேற நிஜம்ன்னு நினைச்சு இறங்கிட்டேனே. அதோட நான் கூட ஒரு டிரஸ் கேட்டேன்..” அவன் சோகமாக முகத்தை மாற்ற,

“ஹையோ.. இல்ல.. இல்ல.. வாங்க.. நீங்க உடனே வரேன்னு சொல்லவும், ஷாக் ஆகிட்டேன்.. நிஜமா தான் கூப்பிட்டேன் வாங்க..” என்றவள்,

“அந்த ட்ரெசை விடறதா இல்ல?” என்று இழுக்க, அவன் மறுப்பாக தலையசைத்துக் கொண்டே,

“எனக்கு அது வேணும்.. டாட்..” அவன் அடமாக சொல்ல, தலையை இடம் வலமாக அசைத்தவள்,  தன்னுடைய மாஸ்க்கையும் சரி செய்துக் கொண்டு, கடையின் உள்ளே அவனையும் அழைத்துச் சென்றாள்.  

அவள் உள்ளே நுழையவும், அவளைப் பார்த்த அவளது உதவியாளர் ப்ரியா, “மேடம்.. வாங்க.. வாங்க.. எப்படி இருக்கீங்க? உடம்பு பரவால்லையா? திடீர்னு  வந்திருக்கீங்க?” ஆவலே வடிவாக அவளை அழைத்தவளின் கண்கள் அருகில் நின்றுக் கொண்டிருந்தவனிடம் சென்று மீண்டுக் கொண்டிருக்க, அந்த கடையில் இருந்த மற்ற அனைவருமே இருவரையும் திகைப்பாகப் பார்த்தனர்.

சிவாத்மிகா புன்னகையுடன், “நானே நாளைக்கு தான் வரலாம்ன்னு இருந்தேன்.. இவரு தான் சப்ரைஸ்சா கூட்டிட்டு வந்துட்டார்.. சரி.. ஆர்டர்ஸ் எல்லாம் எப்படி போகுது? அந்த ரியா மேடம் டிரஸ் எல்லாம் ரெடியா இருக்கா? அந்த டிரஸ் எடுத்துட்டு வாங்க..” என்று கூறிவிட்டு, அர்ஜுனைப் பார்த்தவள், அவன் கடையைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும்,

“இது கிட்ஸ் செக்ஷன்.. அது எல்லாம் லேடீஸ் செக்ஷன்.. இங்க தான் டைலரிங் செக்ஷன் இருக்காங்க..” என்றவள், அவனுக்கு கடையை சுற்றிக் கட்டினாள்.

“வாவ்.. நீட் அண்ட் க்யூட்..” என்று சொல்லிக் கொண்டே வந்தவனை தனது அறைக்கு அவள் அழைத்துச் செல்ல,

“ஆத்மிகா மேடம் ரூமை எல்லாம் நீட்டா வச்சு இருக்காங்களே.. அழகா இருக்கு சிட்டு..” அங்கு தொங்க விடப்பட்டிருந்த ட்ரெஸ்களை பார்த்துக் கொண்டே ஒரு இருக்கையில் அமர,

“உங்க ஆபிஸ் ரூமை விடவா?” அவள் கேலியாகக் கேட்கவும், 

“அது வினய் தான் பார்த்துப்பான்.. நான் டைரெக்டர்ஸ் மீட் பண்ண அந்த ரூமுக்குப் போறதோட சரி.. மத்தபடி வினய்யோட ஆபீஸ் அது.. அவனோட ஷாப்க்கு போயிட்டு வந்து முக்கால் வாசி டிசைன் தின்க் பண்ணிட்டு அங்க தான் இருப்பான்..” என்றவன், அவளுக்கு முன்பிருந்த டிசைன் ஃபைலை பார்த்து,

“எனக்கு எப்போ நான் கேட்ட டிசைன் பண்ணப் போற?” விடாப்பிடியாகக் கேட்க, அப்பொழுது அவளது உதவியாளர் அவள் கேட்ட ட்ரெஸ்சை எடுத்துக் கொண்டு உள்ளே வர, அதை அங்கிருந்த டேபிளில் வைத்தவள்,

“இங்க பார்த்தீங்க இல்ல.. நாங்க ஜென்ட்ஸ்க்கு பண்றது இல்லையே.. அப்படி இருக்கும்போது உங்களுக்கு எப்படி நான் பண்றது?” என்று கேலியாக அவனைப் பார்க்க, அர்ஜுன் அவளைப் பார்த்து முறைத்தான்.  

டேபிளில் அந்த உடையைப் போட்டவள், அதன் தையல்களை சரி பார்த்துக் கொண்டிருக்க, அந்த உதவியாளர் ப்ரியா அர்ஜுனைத் திரும்பித் திரும்பி யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இது அளவு சரியா இருக்கான்னு பாருங்க.. ரியா மேடமோட பிட்டிங்க்கு பெர்ஃபெக்ட்டா இல்லயே..” சிவாத்மிகா யோசனையுடன் சொல்ல, அவளது உதவியாளரோ அவனையே ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க,

“ப்ரியா.. இங்க இதோட அளவு சரியா இருக்காப் பாருங்க..” அழுத்தமாக குரல் கொடுத்து அவள் நகர்ந்து நிற்க, அவளது ஆராய்ச்சியை விடுத்து அங்கிருந்த டேப்பை எடுத்து அவள் அளக்க, அர்ஜுன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“எப்படி சிவா? மெஷர் பண்ணாம பிட்டிங் சரி இல்ல சொல்ற?” அவன் ஆச்சரியத்துடன் கேட்க, அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள்,

“அதெல்லாம் தொழில் ரகசியம்..” எனவும், அர்ஜுன் சிரிக்க, பட்டென்று அவளது உதவியாளர் அர்ஜுனைத் திரும்பிப் பார்த்து,

“சார்.. நீங்க அ.. அ.. அர்ஜுன் தானே..” திகைப்பில் அவள் இழுக்க, அர்ஜுன் திகைப்புடன் அவளைப் பார்த்தான்.

“மேடம்.. அர்ஜுன் சாரா?” அவள் சிவாத்மிகாவிடம் கேட்க, சிவா அர்ஜுனைப் பார்த்து,

“ஹ்ம்ம்.. அர்ஜுன் ஏகாம்பரம் தான்.. ஹீ..ரோ.. சார்..” அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே சிவாத்மிகா சொல்லவும், அந்த பெண்ணின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது..

“மேடம்.. எ…ப்…படி? அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” அவள் ஆச்சரியத்துடன் பார்க்க, அர்ஜுன் புன்னகையுடன் சிவாத்மிகாவின் பதிலை எதிர்ப்பார்த்து புருவத்தை ஏற்றி, அவளைப் பார்க்க,  

“அவரு.. அவரு..” அர்ஜுனை கேலியாகப் பார்த்தபடி இழுக்க, அர்ஜுனின் கண்கள் ஆவலில் மின்ன, ப்ரியா இருவரையும் பார்த்து விழி விரித்து நின்றாள்.

‘இங்க என்னடா நடக்குது? மேடம் ஒரு ஆள் கூட வந்ததே பெரிய விஷயம்.. அதுல அர்ஜுன் சார் கூட வந்திருக்காங்க!’ மனதில் யோசித்தாள். அவளுக்கு சிவாத்மிகா ஒரு ஆடவனுடன் வந்திருப்பதே மலையினும் மேலான ஆச்சரியம்.. அதை விட, அவளது கண்கள் அடிக்கடி அர்ஜுனிடம் சென்று மீள்வதும், அவளது கண்கள் அவனிடம் பேசுவதும் புதிதாக இருந்தது.. அதைவிட அர்ஜுனின் கண்களும் அவளிடமே இருப்பதைப் பார்த்தவள், அந்த ஆடவனின் முகம் பரிச்சையமாக இருப்பது போல இருக்க, அவனை அடையாளம் காண முயன்றாள். அவன் சிரித்ததும், அந்த சிரிப்பு நன்கு பரிச்சையமாக இருக்க, உடனே அவனை அடையாளம் கண்டுக் கொண்டவள், அவனை அங்கு எதிர்ப்பார்க்காமல் ஆச்சாரியம் கொண்டாள்.   

சிவாத்மிகாவின் பதிலுக்கு ப்ரியா ஆவலே வடிவாக பார்க்க, “என்னோட வெல்விஷர்..” என்ற அவளது பதிலில், சேரில் ஒய்யாரமாக சாய்ந்து, கையைக் கட்டிக் கொண்டு அர்ஜுன் சிவாத்மிகாவை வேடிக்கைப் பார்க்க, அவனது சிரிப்பு மாஸ்க்கையும் தாண்டி தெரிய, ப்ரியா அர்ஜுனைப் பார்த்தாள்.

“எப்படிங்க கண்டுப்பிடிச்சீங்க?” ஆச்சரியமாக அர்ஜுன் கேட்க

“அர்ஜுன் சார்.. உங்க சிரிப்பு எவ்வளவு ஃபேமஸ் தெரியுமா? உங்க சிரிப்பு மட்டுமே இன்ஸ்டால எவ்வளவு எடிட் இருக்கு! உங்கள நான் இன்ஸ்டால ஃபாலோ பண்றேன்..” அவனைக் கண்டத்தில், அதுவும் அர்ஜுன் சகஜமாக கேட்டதில் ப்ரியா படபடப்பாகச் சொல்ல, சிவாத்மிகா கையைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தாள்.  

“ஓ.. சிலது பார்த்து இருக்கேன்..” அவன் இழுக்க,

“அது தான் ஹஷ்டாக் அர்ஜுன்னு போட்டாலே நிறைய வருதே..” சிவாத்மிகா அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு சொல்ல, அவனது கண்கள் சிரிக்க,

“சிவா.. நீ என்னை இன்னும் ஃபாலோ பாக் பண்ணல.. நான் உன்னைப் ஃபாலோ பண்ணி ரொம்ப நாளாச்சு..” மிக முக்கியமாக நினைவுப்படுத்த, சிவா அவனை ‘ஹான்’ என்று பார்க்க,       

அதற்கு மேல் தனது ஆவலை கட்டுப்படுத்த முடியாமல், “சார்.. எனக்கு உங்க படம், ஆல்பம்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும் சார்.. உங்களை நான் நேர்ல மீட் பண்ணுவேன்னு நினைச்சது கூட இல்ல.. உங்க காஸ்ட்யூம் எல்லாம் செமையா இருக்கும்.. அதுவும் இன்னைக்கு காலைல போட்ட போட்டோஸ் செம..” அவள் சொல்லவும்,

“ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.. உங்களுக்கு என்னோட வர்க்ஸ் பிடிச்சதுன்னு கேட்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கு.. ஏதோ செய்யற வேலையை கராக்ட்டா செஞ்ச ஃபீல்.. வருது” அர்ஜுன் புன்னகையுடன் சொல்ல, சிவாத்மிகாவின் கண்களில் அவனைப் பார்த்து மெச்சுதல் தெரிந்தது..

“நிஜமா.. உங்க எல்லா ப்ராஜெக்ட்டும் சூப்பரா வரணும்.. இன்னைக்கு காலைல போட்ட போட்டோ கூட ரொம்ப நல்லா இருந்தது..” அவன் தன்னிடம் பேசிய சந்தோஷத்தில் அவள் மீண்டும் சொல்லவும்,

சிவாத்மிகாவைப் பார்த்தவன், “அதுல உங்க மேடம்மோட கையும் தானே இருந்தது.. டேக் பண்ணிருந்தேன்.. பார்க்கல?” என்று கேட்க, அவசரமாக தனது கையில் இருந்த மொபைலை எடுத்துப் பார்த்தவள், அதில் சிவாவை அவன் குறிப்பிட்டு டேக் செய்திருந்ததைப் பார்த்து சந்தோஷத்துடன், சிவாத்மிகாவைப் பார்த்தாள்.

“இப்போ கூட ஒரு டிரஸ் கேட்கறேன்.. உங்க மேடம் செய்ய மாட்டேங்கிறாங்க.. ரொம்ப பிகு பண்றாங்க..” அர்ஜுன் சிவாத்மிகாவை வம்பு வளர்க்க,

அவனைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியவள், “அப்போ இப்படியே திரும்பி வீட்டுக்கு திரும்பப் போறோமா?” அவள் குறிப்பாக கேலியாகக் கேட்க,

“நீங்க கடை வேலை எல்லாம் முடிச்சிட்டா. நாம போகலாம் மேடம்.. ஐம் ஆல்வேஸ் வெயிட்டிங் ஃபார் யூ” புருவத்தை உயர்த்தி அவளைப் பார்க்க,

“ஒரு அஞ்சு நிமிஷம்..” கண்களைச் சுருக்கிச் சொன்னவள்,

அவசரமாக “இது பிட்டிங் சரி இல்ல ப்ரியா.. பார்த்துக்கோங்க..” என்று அவளை அனுப்பி விட்டு, அவளது டேபிளில் இருந்த ஆர்டர்சைப் பார்த்துக் கொண்டிருக்க, வெளியில் சென்ற ப்ரியா, ஆத்மிகாவுடன் வந்திருக்கும் ஆடவனை சுவாரசியமாகவும், திகைப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்த தனது சக ஊழியர்களிடம், வந்திருப்பது யார் என்று சொல்ல, அனைவரும் மயக்கம் போடாத குறையாக, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.             

“பாருங்க.. வெளிய எல்லாரும் உங்களை அப்படி வேடிக்கைப் பார்க்கறாங்க.. எல்லாருக்கும் நீங்க சாக்லேட் பாய்..” அந்த நோட்டில் பார்வையை பதித்தபடி சிவாத்மிகா சொல்ல, அவளது குரலில் பொறாமை சிறிது எட்டிப் பார்த்ததோ?

“அவங்களுக்கு நான் சாக்லேட் பாயா இருக்கலாம்.. அவங்களால என்னை வேடிக்கை தான் பார்க்க முடியும்.. ஆனா.. நான் உன்னோட சாக்லேட்.. உனக்கு மட்டுமே சொந்தமான சாக்லேட்..” ஆழ்ந்த குரலில் அர்ஜுன் சொல்ல, சிவாத்மிகா பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவனது கண்கள் அவனது காதல் மொத்தத்தையும் பிரதிபலிக்க, மீண்டும் தலையைக் குனிந்துக் கொண்டவள், “உங்களுக்கு அந்த கிரீம் கலர் ஷர்ட்க்கு மேல இது போல லினென்ல ஸ்ட்ரைப் கோட் இருந்தா நல்லா இருக்கும்ல..” என்றவள், அவளிடம் இருந்த இரண்டு வகைத் துணிகளையும் காட்டிச் சொல்ல, அவள் பேச்சை மாற்றுவது புரிந்தவன், ஒரு புன்னகையுடன்,

“நான் தான் சொல்லிட்டேனே மேடம்.. ஐம் யுவர்ஸ்.. நீங்க என்ன ட்ரெஸ் தரீங்களோ போடறேன்.. உங்க சாக்லேட்டுக்கு நீங்க போட்டு அழகு பாருங்க..” என்றவன், அவள் பழிப்புக் காட்டவும், சிரித்துக் கொண்டே தனது மொபைலை எடுத்துப் பார்க்க, அதில் சிவாத்மிகா அவனை ஃபாலோ செய்த நோடிபிகேஷன் வரவும், தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

சிவாத்மிகா வேலை முடிக்கவும், இருவரும் அவளது அறையை விட்டு வெளியில் வர, அவளது அருகில் வந்த ப்ரியா, “மேடம்… சார் கூட ஒரு போட்டோ எடுக்கணும் மேடம்…” தயக்கத்துடன் அவள் கேட்க,

“அர்ஜுன்.. உங்க கூட போட்டோ எடுத்துக்கணுமாம்..” என்றவள், ரிசப்ஷன் டேபிளில் சாய்ந்து நின்றுக் கொள்ள, அவளை முறைத்த அர்ஜுனும் அவள் அருகே சென்று நின்று,

“வாங்க போட்டோ எடுத்துக்கலாம்..” என்றவன், சிவாத்மிகாவின் பின்னால் இருந்த டேபிளின் மேல் கையை வைத்துக் கொண்டு நிற்க, அதை உணர்ந்தவள்,

“என்ன விளையாடறீங்களா? உங்க ஃபான்ஸ் உங்க கூட போட்டோ எடுத்துக்க ஆசைப்படறாங்க.. என்னை ஏன் கூப்பிடறீங்க?” என்று அவள் கேட்க,

“நீ வந்தா நான் போட்டோ எடுப்பேன்.. இல்ல.. நாம கிளம்பலாம்.. உன்னோட கோல்லிக்ஸ் தான்.. எனக்கு ஒண்ணும் இல்ல..” என்று சொல்லி தோளைக் குலுக்க, அவனைப் பார்த்து பல்லைக் கடித்தாள்.

“சரி வாங்க..” அவள் அழைக்க,

“அப்புடி வா..” என்றவன், ப்ரியா தயாராக இருக்கவும், அவளைப் பார்த்து தலையசைக்க, போட்டோ எடுக்கும் படலம் துவங்கியது. அர்ஜுனோ சிவாத்மிகாவை ஒட்டி நிற்க, அனைவரும் போட்டோ எடுத்துக் கொண்டனர்..

அனைவரிடமும் விடைப்பெற்று இருவரும் வெளியில் வர, அவனது கையில் அடித்தவள், “ரொம்ப அடம் பண்றீங்க… ஏன் நீங்க மட்டும் எடுத்துக்கிட்டா என்னவாம்?” என்று சிணுங்க,

“அடிப் போடி.. கூட நிக்கச் சொன்னா ஓவரா பிகு பண்ணறா.. எனக்கு ஷை ஆகும்ல” என்றவன், அவளது கையை கிள்ள, சிவா சிரித்துக் கொண்டே ஓடிச் சென்று, காரின் அருகில் நிற்கவும், அர்ஜுனும் புன்னகையுடன் அவளைத் தொடர்ந்து சென்று காரைத் திறக்கவும், அவனுடன் விளையாடிக் கொண்டே சிவாத்மிகா அந்தப் பக்கம் ஏறிக் கொள்ள, அனைவரும் அவர்களை ஆவென்று வேடிக்கைப் பார்த்தனர்.

“நீங்க என்ன இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? அவங்க பாட்டுக்கு போட்டோ போஸ்ட் பண்ணினா என்ன ஆகும்?” காரில் சென்றுக் கொண்டே அவள் கேட்க,

“பண்ணினா பண்ணட்டும்.. உனக்கு ஏதாவது ப்ராப்ளமா?” அர்ஜுன் அசால்ட்டாக கேட்க, சிவாத்மிகா விழிகள் விரியப் பார்த்தாள்.

“என்ன? என்ன சொல்றீங்க? அப்பறம் எல்லாரும் என்ன நினைப்பாங்க?” அவள் பதட்டத்துடன் கேட்க,

“கமிட்டட்ன்னு நினைப்பாங்க.. வேற என்ன? அது தானே உண்மை..” அர்ஜுன் கேட்கவும், சிவாத்மிகா அவனைப் பாவமாகப் பார்க்க,

“என்னைப் பொறுத்த வரை கமிட்டட் தான்மா.. நீ என்னவோ அது நீ தான் சொல்லணும்..” என்றவன், காரை ஓட்டுவதில் கவனம் பதித்தான்.

“அர்ஜுன் நீங்க நிஜமா சீரியஸா தான் இருக்கீங்களா?” அவள் நம்ப முடியாமல் கேட்க,

“என்னைப் பார்த்தா விளையாடறது போல இருக்கா என்ன? இதை விட நான் சீரியஸா எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியல..” என்று கேட்டவன், ஒரு ப்ரைவேட் பீச்சில் சென்று காரை நிறுத்த, சிவாத்மிகா அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

“நான் இப்போ நடிக்கிறேன்ல அந்த டைரெக்ட்டருக்கு தெரிஞ்சவங்களோட ப்ரைவேட் பீச் இது.. நான் அவர்கிட்ட கேட்டு உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்.. வா.. நாம எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லாம டைம் ஸ்பென்ட் பண்ணலாம்..” என்றபடி காரை விட்டு இறங்க, சிவாத்மிகாவும் கீழே இறங்கியபடி,

“அர்ஜுன்.. நீங்க என்ன கமிட்டட்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நான் அப்போ அப்போ பைத்தியம் மாதிரி அழுவேன், கத்துவேன்.. சில சமயம் ரொம்ப கோவப்படுவேன்.. சண்டை கூட போடுவேன்.. உங்களுக்கு என்னை எல்லாம் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.. அதை விட.. அதை விட.. எங்க அம்மா..” என்று அவள் நடுக்கத்துடன் சொல்லத் தயங்க, அவளைத் தனது தோளோடு அணைத்தவன், தனது செல்போனை எடுத்து க்ளிக் செய்துக் கொண்டே,

“என் பொண்டாட்டியை எப்படி சந்தோஷமா வச்சிருக்கறதுன்னு எனக்குத் தெரியும்.. அவளுக்கான அன்பை நான் கொடுக்கக் கொடுக்க, அவளோட அந்த மூட் ஸ்விங்க்ஸ் எல்லாம் சரியா போயிடும்.. நான் அவளுக்கு ஒரு நல்ல ப்ரெண்டா.. நல்ல வெல்விஷரா, எல்லாத்துக்கும் மேல நல்ல புருஷனா அவளை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன்.. நல்ல அப்பாவா எங்க குழந்தைகளையும் கடைசி வரை பார்த்துப்பேன்.. அவளும் நல்ல அம்மாவா என் குழந்தைகளுக்கு இருப்பான்னு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு..

இதுல அவளோட அம்மாவைப் பத்தி எல்லாம் எனக்கு கவலையே இல்ல.. உங்க அம்மா அப்பா ரெண்டு பேருல யார் மேல தப்புன்னு நான் ஜட்ஜ் பண்ண வரல.. தேவையும் இல்ல.. அவங்களுக்கு உள்ள என்ன நடந்ததுன்னு தெளிவா தெரியாத பொழுது நாம ஜட்ஜ் பண்ண வேண்டாம்.. அவங்களை விட்டுடலாம்.. அவங்க உன் லைஃப்ல இனிமே இல்ல..” அவன் சொல்லிக் கொண்டே அவளைத் தோளோடு அணைக்க, சிவா அவனைப் பேச்சற்றுப் பார்த்தாள்.   

“எங்க அம்மாவுக்கு அவங்களோட மருமகளை ரொம்பப் பிடிச்சிருக்காம்.. சீக்கிரமே நான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமாம்.. அதே போல.. என்னோட மாச்சானுக்கும் அவனோட தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணித் தரத்துல எந்தப் பிரச்சனையும் இல்லையாம்.. என்னோட அக்கா கூட நான் என் பொண்டாட்டிக்கு மாப்பிள்ளைன்னா ஓகே சொல்லிட்டாங்க..” என்று சொல்லச் சொல்ல, சிவாத்மிகா அவனது தோள் சாய்ந்து கதறத் துவங்கினாள்.

“நான் உங்களுக்கு ஏத்தவளா அர்ஜுன்? நாளைக்கு என்னைப் பத்தி தெரிஞ்சு உங்களை யாராவது ஏதாவது சொல்லிட்டா.. உங்களுக்கும் அது அவமானம் இல்லையா? அதை விட.. என்னோட மூட் ஸ்விங்க்ஸ்சால உங்களை நான் காயப்படுத்திட்டேன்னா.. எனக்கு பயமா இருக்கு அர்ஜுன்..” என்று அழ, அவளது கண்களைத் துடைத்தவன்,

“இங்க உட்கார்ந்துக்கலாம் வா..” என்று சொல்லி விட்டு, ஓரிடத்தில் அமர, அவனுடன் அவளும் அமர்ந்தாள். அவளது கையை எடுத்து தனது கைக்குள் பொத்திக் கொண்டு, “உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேள்வி கேட்க,

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீங்க என்ன கேட்கறீங்க?” என்று அவள் பதிலுக்கு கேட்க,

“கேட்கறதுக்கு பதில் சொல்லு..” அவன் ஊக்க, “பிடிச்சிருக்கு..” என்று மெல்லிய குரலில் கூறி, அவனது தோள் சாய,

“அப்போ எதைப் பத்தியும் யோசிக்காம என்னை லவ் பண்ணு.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. உன்னை முதன்முதலா பார்த்ததுல இருந்தே என்னை ரொம்ப படுத்தறடி.. இப்போ கஷ்டப்பட்டு தனியா தள்ளிட்டு வந்தா..” என்று அவன் சொல்லவும், அவனது கையிலேயே அவள் தலையால் முட்ட, அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டவன்,

“நம்ம ஃபர்ஸ்ட் அவுட்டிங்.. ஹாப்பியா சிரி பார்ப்போம்..” என்றவன், அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டு, விதம் விதமாக படம் பிடிக்கத் துவங்க, அவளும் முகத்தைப் பல விதங்களில் வைத்து, அழகு காட்ட, அனைத்தையும் அர்ஜுன் சந்தோஷத்துடன் படம் பிடித்துக் கொண்டான்.

“என்னோட போன்ல?” அவள் கேட்க,

“நான் என்ன வேண்டாம்ன்னா சொல்றேன்? உனக்கு தான் வேண்டாம் போலன்னு நினைச்சேன்..” என்றவன், அவளுக்கு பின்னால் சற்று நகர்ந்து அமர்ந்து, அவளது தோளில் ஒருபுறம் கையை வைத்து, மெல்ல அவளது தலையை தனது தோளில் சாய்த்துக் கொண்டு, அவன் செல்ஃபி எடுக்க, அவனது தோளில் அப்படியே சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

“அர்ஜுன்..” கண்களை மூடிக் கொண்டே அவள் அழைக்க,

“ஹ்ம்ம்… சொல்லுடா கண்ணம்மா..” அவளது விரலுடன் விரல் கோர்த்துக் கொண்டே அவன் கேட்க,

“நான் கோபம் வந்தா கண்டபடி கத்துவேன்.. அழுவேன்..”

“சரி.. எல்லாரும் கோபம் வந்தா சத்தம் தானே போடுவாங்க.. நானும் வெடுவெடுன்னு பேசுவேன்..” அவளது கையை வருடிக் கொண்டே அவன் கேட்க,

“நான் ஒண்ணும் ரொம்ப அழகெல்லாம் இல்ல.. உங்க பக்கத்துல சுமாரா தான் இருப்பேன்..” அவள் சொல்லவும், அவளது முகத்தைத் தனது பக்கம் திருப்பியவன்,

“என்னைக் கண்ணைத் திறந்து பாரு..” மென்மையான குரலில் அவன் சொல்ல, அவள் கண்ணைத் திறந்து பார்க்கவும்,

“என் கண்னுக்கு நீ தான் ரொம்ப அழகா இருக்க.. இன் அண்ட் அவுட் நீ ரொம்ப அழகு.. நான் இத்தனை வருஷத்துல எவ்வளவோ பொண்ணை பார்த்து இருக்கேன்.. ஆனா.. உன்னைப் பார்த்ததும் என் மனசுல வந்த அந்த மின்னல் வேற யாருகிட்டயும் வந்தது இல்ல.. அப்போ இருந்து என் நினைவெல்லாம் நீ தானே..” என்றவன், மென்மையாக அவளது நெற்றியில் இதழ் ஒற்றி, அவளது மூக்கைப் பிடித்து ஆட்டி,

“இனிமே இப்படி எல்லாம் கேட்கக் கூடாது என்ன? உன்னைப் பார்த்து ஃப்ரீஸ் ஆனது போல எல்லாம் நான் யாருகிட்டயும் ஆனது இல்ல..” என்றவன், அவள் விழிகளை விரிக்க,

“நாம போய் கொஞ்ச நேரம் அலையில நிக்கலாமா?” என்று கேட்க, அவள் தலையசைக்கவும், அவளது கைப் பிடித்து எழுப்பியவன், அவளுடன் அலைகளில் விளையாடத் துவங்கினான்..