எந்நாளும் தீரா காதலாக – 1

💝 1

என் கவிதைகளுக்கான

சொந்தக்காரி போல

தூரமாய் அவளிருந்தாலும்

ஓர் அருகாமையில்

அவளின் நிழலையாவது தீண்டி பார்த்திடத் தோன்றும்

இந்த ஏக்கத்தில்

திடீரென விழித்திருக்க

முதல் காதல் இங்கு அர்த்தப்படுகிறது!!

அந்தக் காலைப் பொழுதில் கையில் காபிக் கோப்பையை ஏந்தியப்படி, தனது போர்ட்டிகோவில் இருந்த ஊஞ்சலில், கண்களை மூடிய ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் அந்த மாது.. அவள் அமர்ந்திருந்த நிலையை புதியவர் யாரேனும் பார்த்தால் அது                                  உயிருள்ள பெண்ணா அல்லது சிலையா என்னும் அளவிற்கு ஆடாமல் அசையாமல் தனது உலகத்தில் லயித்து அமர்ந்திருந்தாள்.  

சிவாத்மிகா.. வளர்ந்து வரும் ஆடை வடிவமைப்பாளர்.. ‘எலகன்ஸ் வித் ஸ்டைல்’ என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருபவள்.. அவளது தனிமையை இனிமையாக மாற்றுவது அவள் வரையும் ஆடைகளின் டிசைன்கள் தான்.

மனதிலேயே ஆடை வடிவமைப்பது எப்படி என்று அவளிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.. தனது ஸ்டூடியோவிற்கு காரில் செல்லும்பொழுது எதிர்ப்படும் மனிதர்களுக்கு, மனதிலேயே ஆடை வடிவமைத்து கற்பனை செய்துப் பார்த்துக் கொண்டே செல்வது தான் அவளது வழக்கம்.. அவளது உயிர் மூச்சு ஆடை வடிவமைப்பது மட்டுமே.. இரவும் பகலுமாக அவளது மொத்த நினைவுகளும் ஆடை வடிவமைப்பதில் மட்டுமே இருக்கும்.. அவளது தனிமையில் இருந்து தப்பிப்பதற்கான வழியோ?

மெல்லிசை ஒலியோடு, இரவில் அந்த அமைதியான ஏகாந்த நேரத்தில், தனது மனதை ஒரு நிலைப்படுத்தி, அன்றைய நாளில் மனதில் தோன்றியவற்றை வரைந்து வைப்பது அவளது வழக்கம்.. இதுவரை சிறுவர் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும், சில ஹீரோயின்களுக்கும் ஆடை வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டவள்..

ஆண்கள்.. அவளைப் பொறுத்தவரை அவள் இருக்கும் இந்த உலகத்தில் அவர்களும் இருக்கிறார்கள்.. அவ்வளவே.. அதைத் தவிர அவர்களைப் பற்றிய எந்த நினைவும் இன்றி இருப்பவள். ஆண்களுக்கான ஆடைகளை புத்தகத்தில் பதிவிடுவதோடு முடிந்துவிடும்.. அவர்களுக்காக மனதில் தோன்றும் கற்பனையில் நிறைய மாடல் வரைந்து வைத்திருக்கிறாள்.. ஆனால் அவர்களை நெருங்கி பேசி, தனது வடிவமைப்பை விளம்பரம் செய்யக் கூட மிகுந்தத் தயக்கம்.. அதற்காக அவள் ஆண்களுடன் பேசாமலேயே இருப்பவளும் அல்ல.. தானாக அவர்களை நெருங்க மாட்டாள்.

அதற்கான காரணம், அவளது தந்தை அவளுக்குத் தந்த காயம்.. அவளது தாய் ஏற்படுத்திய ஆறாத வடு.. இருவருமே இருந்தும் இல்லாத நிலையில் இருக்கும் அவளுக்குத் தனிமை ஒன்றே துணை.. இப்பொழுது இரண்டு வருடங்களாக அவளுக்குத் துணையாக, வீட்டில் வேலை செய்துக் கொண்டே அவளுக்கு துணை இருக்கும் ராதாவின் அன்பு அவளுக்கு ஒரு ஆறுதல்.

“என்ன வினய் இது? நான் உன்னை என்ன கலர் ஸ்க்ரீன் போடச் சொன்னேன்? நீ என்ன கலர் போட்டு வச்சிருக்க? நான் சொன்ன ஷேட்ல ஒரு இம்மியளவும் குறையக் கூடாது.. கூப்பிடு அந்த இன்டீரியர் டெகரேட்டர.. காச வாங்கிட்டு மாத்தி போட்டு வச்சிருக்காங்க..” காலை எட்டு மணிக்கு, தனது உதவியாளரை கத்திக் கொண்டிருந்தான், அவன் அர்ஜுன் ஏகாம்பரம்.. வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவன்.. அவனது தந்தை திரைத்துறையில் எடிட்டராக இருந்தவர்… சிறுவயதில் இருந்தே சினிமா சமந்தப்பட்டவற்றை பார்த்து வளர்ந்தவனுக்கு சினிமாவின் மீது தீராத காதல்..

ஆறடி உயரமும், சிரித்தால் கூடச் சேர்ந்து சிரிக்கும் கண்களும்.. கன்னத்தில் குழி விழும் அழகும்,  அழகான குறும்புக் கண்களும், அலையலைனா கேசமுமாக இருப்பவனுக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.. பார்க்கும்பொழுதே அனைவரின் மனதிலும் ஒட்டிக் கொள்ளும் அவனோ அவர்களை பார்த்து புன்னகைப்பதுடன் நகர்ந்து விடுவான்..  

அவனது நடை, உடை, பாவனைகள் என்று அனைத்துமே அவ்வளவு இயல்பாக, கம்பீரமாக இருக்கும். அந்த கம்பீரத்திலும் ஒரு பணிவு இருக்கும்.. தான் நடித்து சம்பாதித்த பணத்தில் ஒரு பங்களாவை வாங்கிக் கொண்டு, அதை தனது ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து, முந்தின இரவு, தான் குடி இருந்த வீட்டில் இருந்து இரவோடு இரவாக குடி வந்திருக்கும் அவன் தான் இப்பொழுது அவனது உதவியாளரை கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வினய்.. அர்ஜுனின் உயிர் நண்பன்.. பொது இடங்களில் அர்ஜுனிடம் மிகவும் மரியாதையுடன் பழகும் வினய், வீட்டில் இருக்கும்பொழுது ஒரு நண்பனாக மாறிவிடுவான்.. அந்த வீட்டில் அவனும் ஒரு பிள்ளைப் போலத் தான்..  

அர்ஜுன் கத்திக் கொண்டிருக்க, “மாணிக் தம்பி.. இன்னும் எனக்கு காபி வரல..” என்று சமையல் செய்யும் பையனை வினய் கூலாக கேட்டுக் கொண்டிருக்க, அர்ஜுன் அவனை முறைத்தான்.

அதைப் பார்த்தவன், “டேய்.. அர்ஜுன்.. உன் முறைப்பை எல்லாம் நீ என்கிட்டே வச்சிக்கக் கூடாது.. நீ கலர் செலெக்ட் பண்ணி அனுப்பினது இது தான்.. நீ பார்த்தது மொபைல்ல.. நேர்ல இந்தக் கலர் தான் வரும்.. அது தான் போட்டோல பார்க்கறதுக்கும் நேர்ல பார்க்கறதுக்கும் வித்தியாசம் வரும்ன்னு சொல்லித் தானே போடறாங்க.. நீ போட்ட கலர் இது தான்.. இதுவும் நல்லா தானே இருக்கு..” வினய் அவனிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்க, அவனது அன்னை நிர்மலா அவன் அருகில் வந்தார்.

“இந்தக் கலர் நல்லா தான் இருக்கு.. இதை இதுக்கும் மேல மாத்தின எனக்கு கெட்டக் கோபம் வரும்.. போய் வேலையைப் பாருடா..” என்று அவர் சத்தமிட, இருவரும் அமைதியாக டைனிங் டேபிளில் இருந்த சேரில் சென்று அமர்ந்தனர்.

சமையல் செய்யும் மாணிக்கம் அவர்களுக்கு காபியை கொண்டு வந்து கொடுக்க, தனது கப்பை எடுத்துக் கொண்டவன், மெல்ல தனது அறைக்குச் சென்றான்..

அவனது தந்தை எடிட்டராக இருந்த பொழுது இந்த அளவுக்கு பேரும், புகழும், வசதி வாய்ப்புகளும் இருந்தது இல்லை.. இந்த பங்களா, தான் உழைத்து சம்பாதித்து வாங்கிய வீடு.. கனவு மாளிகை.. காபிக் கப்பை கையில் வைத்துக் கொண்டு மெல்ல ரசித்து அனுபவித்து மீண்டும் சுற்றி வந்தவன், இறுதியாக தனது அறைக்கு வந்தான்.

தனது அறையில் இளம் ஊதா நிறத்தில் இருந்த பெய்ண்டில், சுவற்றின் நடுநாயகமாக இருந்த வானவில்லும் அந்த வானவில்லில் இருந்து ஆங்காங்கு தெறித்திருந்த இதயங்கள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறத்தில் இருந்த சுவற்றில், மரம் பூ கொடிகள் என்று இயற்கையை பரைச் சாற்றி, சுவற்றிலேயே பொருத்தப்பட்ட பெரிய கடிகாரமுமாக, காதலும், இயற்கையும் கலந்து அந்த அறையை அவன் அழகு படுத்தி இருக்க, அதை ரசித்தவன், தனது ஜன்னலின் அருகில் நின்றான்.

திரையை விலக்கி, ஜன்னலில் வழியே அருகில் இருந்த வீட்டைப் பார்க்க, அந்த வீட்டின் ஜன்னலின் வழியாகத் தெரிந்த அந்த அறையில், இருந்த ஒரு பெய்ண்டிங் அவனது கவனத்தை ஈர்த்தது. ஒரு அழகான சின்னப் பெண் குழந்தை, கன்னத்தில் கைவைத்துக் கொண்டு, தனது நாய்க் குட்டியுடன் தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போல இருந்த அந்த பெய்ண்டிங்கை அவன் தன்னை மறந்து சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்..

சில நொடிகள் அந்த பைண்டிங்கைப் பார்த்தவன், தலையை உலுக்கிக் கொண்டு, தனது அறையை ஒட்டி இருந்து போர்டிகோவிற்குச் சென்றவன், அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்து, தான் அமைத்திருந்த பச்சை நிறப் புல்வெளியையும், அதில் அழகாக படர்ந்திருந்த பனித்துளிகளையும் பார்த்தவன், இதழில் தோன்றிய நிறைவான புன்னகையுடன், தனது தோட்டத்தை ரசிக்கத் துவங்கினான்.     

“என்னடா.. சைடிங்க்சா?” அவனைத் தேடி வந்த வினய் கேட்க,

“ஆமாடா.. நாம போட்ட அந்த க்ராஸ்ல அந்த பனி படர்ந்து இருக்கு பாரு.. அது ரொம்ப அழகா இருக்கு.. அங்கங்க இருக்கற ரோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு.. காபி குடிச்சிட்டு அதை போட்டோ எடுக்கணும்..” என்றவன், தனது கையில் இருந்த காபியை குடித்து முடித்து, தனது அறைக்குச் சென்று, கேமராவை எடுத்துக் கொண்டு வந்து, ஜூம் செய்து படம் பிடிக்கத் துவங்கினான்.

“ஆரம்பிச்சிட்டான்டா..” என்று வினய் சலித்துக் கொள்ள,

“அதுக்கு எல்லாம் ரசனை வேணும்.. உனக்கு அது சுட்டு போட்டாலும் வராது.. எப்படி தான் நீயும் நானும் ஃபிரெண்ட் ஆனோமோ? ஒரே வீட்ல வேற குப்பைக் கொட்டறோம்..” வேண்டுமென்றே அவன் வினயை வம்பிழுக்க,   

“அது தான் விதின்னு சொல்றது..” அவன் சொல்லிக் கொண்டே இருக்க, அர்ஜுனின் கவனம் தனது குவியத்தின் வழியே தெரிந்த காட்சியில் பதிந்தது..

ஒரு கிளி பறந்து சென்று, அருகில் இருந்த வீட்டில் இருந்த மரத்தின் மீது அமரவும், அந்த தொடர்ந்து சென்று அந்த மரத்தைப் பார்த்தவன், “வாவ் வினய் அந்த மரத்துல பூ ரொம்ப நல்லா இருக்கு பாரு.. அந்தப் பழம் ரொம்ப புதுசா இருக்கு.. இந்த மரத்துக்கு என்ன பேர்? நான் இதைப் பார்த்ததே இல்லையே..” என்றவன், தனது கேமராவை எடுத்து, அந்த மரத்தை படம் பிடிக்கத் துவங்கினான்.

“நீ ஆக்டர் ஆனதுக்கு பேசாம கேமராமேன் ஆகி இருக்கலாம்..” வினய் சலித்துக் கொண்டிருக்க, குவியத்தை சரி செய்துக் கொண்டே கேமராவைத் திருப்பியவனின் கண்களில் அழகிய ஓவியமாக அவள் கண்களில் விழுந்தாள்.

கேமராவைக் கண்களில் இருந்து விலக்கியவன், அவளை நேராகப் பார்க்க, ஏதோ ஒன்றோ அவளிடம் அவனுக்கு ஈர்த்தது.. சிவாத்மிகா பேரழகி என்று சொல்வதற்கு இல்லை தான்.. ஆனால் பார்க்க லட்சணமாக, பளீரென்ற தோற்றத்துடன் பார்ப்பவரை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு கொண்டவள் தான்..

கேமராவை உயர்த்தி அவள் அமர்ந்திருந்த நிலையை தன்னை அறியாமல் படம் பிடித்தவனுக்கு அவள் ஒரு அழகிய ஓவியமாக தோன்றினாள். 

தினம்தோறும் அவன் பல பெண்களை சந்திப்பவன் தான்.. முகத்தில் மேகப், லிப்ஸ்டிக் என்று எப்பொழுதும் வளம் வரும் பெண்களின் நடுவில், அவளிடம் எதுவோ ஒன்று வித்தியாசமாகத் தோன்றியது. அவனைக் கவரவும் செய்தது.. அவனது பார்வை அவள் மீதிருக்க, வினய் அவனது தோளைச் சுரண்டினான்.

அர்ஜுன் அவனைத் திரும்பிப் பார்க்க, “என்ன சார் அந்தப் பொண்ணை ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கீங்களே.. உங்க ஹீரோயின்ஸ் விட அப்படி ஒண்ணும் சூப்பர் சொல்றது போல இல்லையே..” வினய் உதட்டைப் பிதுக்க, அவனைப் பார்த்து தோளைக் குலுக்கியவன், வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

வினய், மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்க்க, அர்ஜுன் மெல்ல எழுந்து வீட்டின் உள்ளேச் செல்ல நகர, ‘ஒருவேளை கேமரால பார்த்தா பக்கத்துல தெரியுமே?’ என்று யோசித்தவன், அவனது கையில் இருந்த கேமராவை வாங்கிக் கொண்டு, குவியம் வழியாக அவளைப் பார்க்க, அவனது தலையைத் தட்டியவன்,   

“அங்க என்ன வேடிக்கை? சூட்க்கு டைம் ஆச்சு.. நான் போய் ரெடி ஆகறேன்..” என்றவன், அவனது கையில் இருந்த கேமராவை வாங்கிக் கொண்டே அறைக்குச் சென்றான்.

அவனது வழக்கம் போல தனது ம்யூசிக் சிஸ்டமை இயக்கிவிட்டுத் தயாராகத் துவங்க, வினய் அவனுக்கு ஷூட்டிற்குத் தேவையான உடைகளை எடுத்து வைக்கத் துவங்கினான். தனது சீப்பை எடுத்து தலையை படிய வைக்கத் துவங்கியவனுக்கு,

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்

தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

ஏனோ அந்த பாடல் வரிகளைக் கேட்ட உடன், அவனது மனதினில் அவளது முகம் வந்து செல்ல, கண்களை மூடி தலையை குலுக்கிக் கொண்டவன், தயாராகி வெளியில் வந்தான்.

வினய் அவனுக்காகக் காத்திருக்க, “அம்மா.. நான் கிளம்பறேன்.” என்று அர்ஜுன் குரல் கொடுக்க, அதே சமயம்,

“ராதாக்கா.. நான் கிளம்பிட்டேன்.. நேரத்துக்கு சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்ன? அப்படியே பொங்கல்ல கொஞ்சம் உப்பு கம்மியா இருந்தது.. நீங்க சாப்பிடும் போது அதைப் போட்டு சாப்பிடுங்க.. மதியம் லஞ்ச்சுக்கு உங்களுக்கு என்ன செய்யறீங்களோ அதே போதும்.. எனக்குன்னு எதுவும் தனியா செய்ய வேண்டாம்.. நான் கடையில இருக்க மாட்டேன்..” ஒரு பெண்ணின் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து,

“இங்க நீ முதலாளியா? இல்ல நானான்னு தெரியல.. வேலை செய்யறவளுக்கு சமைக்கிறது போதும்ன்னு சொல்ற முதலாளியை நான் என்னன்னு சொல்ல? வெளிய யாராவது கேட்டா சிரிப்பாங்க..” இன்னொரு பெண்ணின் குரல் கேட்க, அர்ஜுனின் காதுகள் தானாக கூர்மைப் பெற்றது.

“ஆமா.. இப்போ என்ன திடீர்ன்னு முதலாளின்னு எல்லாம் வார்த்தை வருது.. கிள்ளிடுவேன் கிள்ளி.. அப்பறம் நீங்க கொடுக்கறதை சாப்பிட மாட்டேன்..” என்றவளின் குரல் குழைந்து வந்தது..

“என்னோட செல்ல அக்கா இல்ல.. நீங்க வெறும் ரசம் வச்சாலும் டேஸ்டியா வைக்கறீங்க.. தினமும் பிரியாணியா சாப்பிடனும்ன்னு அவசியம் இல்ல.. அந்த ஒரு வாய் ரசத்தை டேஸ்டியா சாப்பிட்டா போதும்.. அந்த ரசம் கூட ஒழுங்கா கிடைக்காம நான் எல்லாம் எவ்வளவு நாள் அலஞ்சு இருக்கேன் தெரியுமா?” கேலி போலச் சொல்லியவள்,

“சரி ராதாக்கா நான் கிளம்பறேன்.. மதியம் எனக்கு சந்திரா கிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டு, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு படுத்து தூங்குங்க..  அப்பறம் இன்னைக்கு நான் சீக்கிரம் வந்தேன்னா.. சாயந்திரம் நாம பாட்மிட்டன் விளையாடலாம்..” என்றவள், “பை..” என்றபடி காரைக் கிளப்பும் சத்தமும்,

“நல்ல பொண்ணு.. ஒழுங்கா நான் செஞ்சுத் தர சிக்கனும் ரசம் சாதத்தை சாப்பிட்டு முடிச்சிடு.. முட்டையும் வைக்கிறேன்” என்ற குரலைத் தொடர்ந்து, ‘வெவ்வெவ்வேவ்வே’ என்ற குரலும், பாடல் சத்தமும் கேட்டது..

விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய்

தினம் தினம் துவண்டேன் தளிரே

நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன்

கடைசியில் கலந்தேன் கடலே

கார் வரையில் வந்த அர்ஜுன் அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டு நின்றான்.. அது சாதாரண உரையாடலாக இருக்கலாம்.. ஏனோ அந்த உரையாடல், அர்ஜுனின் மனதை ஈர்த்தது. அவன் அப்படியே நிற்க, இறுதியில் பாடலும் தேய்ந்து மறைய, வினய் மீண்டும் அவனது தோளைத் தட்டினான்.  

“இண்டரெஸ்டிங்..” என்று முணுமுணுத்துக் கொண்டு, காரில் ஏறியவன், கார் சிறிது தூரம் சென்றதும்,

“ஆமா வினய்.. அந்த பக்கத்துக்கு வீட்ல கார் கிளம்பும் போது ஒரு பாட்டு ஓடிச்சே.. அந்த பாட்டை எங்கயோ கேட்டா போல இருக்கு இல்ல..” என்று கேட்க, தலையில் அடித்துக் கொண்டவன், 

“இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? ரொம்ப அப்பப்போ ஸ்ட்ரக் ஆகர.. கூகிள்ல பார்த்தா தெரியுது.. என்ன லைன்ஸ் சொல்லு..” என்று கேட்டவன், அவன் நினைவாகச் சொல்லவும், அதைத் தேடி எடுத்து அவனுக்குக் காட்டினான்.

“ஹ்ம்ம்..” என்றவன், அதற்கு மேல் அன்று அவன் செய்ய இருந்த ம்யூசிக் வீடியோ ஷூட்டிங்கிற்கு பயிற்சி செய்த நடன ஸ்டெப்களை மனதினில் ஓட்டிப் பார்த்துக் கொண்டே சென்றான்.

ஷூட்டிங்கிற்குச் சென்றவன், தயாராகி, வெகுநேரமாக தான் அழைக்கப்படாமல் போகவும், தனது கேரவனில் இருந்து வெளியில் எட்டிப் பார்த்தான். ஷூட்டிங் துவங்க நேரமாகிக் கொண்டே இருக்க, அர்ஜுன் வினயை “ஏன்னாச்சு? ரொம்ப லேட் ஆகுது?” என்று கேள்வியாக பார்த்தான்.

“தெரியலடா.. ஹீரோயின்னோட டிரஸ் வரல போல.. அது தான்..” என்ற வினயின் பதிலில், அர்ஜுன் வெளியில் சென்றான்.

“என்ன ஆச்சு டைரக்டர்?” அங்கு டென்ஷனுடன் நின்றுக் கொண்டிருந்த டைரக்டரிடம் அர்ஜுன் கேட்க,

“அர்ஜுன்.. அது ஒண்ணும் இல்ல.. என்னோட டிசைனர் டிரஸ் மாத்தி அனுப்பிட்டாங்க..” அவள் கூலாக பதில் சொல்ல, அர்ஜுனுக்கு கடுப்பாக இருந்தது.

“அப்படி என்ன பொறுப்பில்லாத டிசைனர்? எப்படி மாத்தி அனுப்பலாம்? இப்போ ஷூட்க்கு லேட் ஆகிட்டே இருக்கு இல்ல” என்று கேட்டவனின் பக்கம் சாய்ந்தவள்,

“அது.. அவங்க மேல தப்பில்ல.. நான் தான் தப்பா மாத்தி டிரஸ்சை எடுத்துட்டு வர சொல்லிட்டேன்.. நேத்திக்கு ரெண்டு மூணு டிரஸ் ட்ரையல் பார்த்துட்டு, ஏதோ நியாபகத்துல நாளைக்கு போடற டிரெஸ்ஸை இன்னைக்கு அனுப்பிட சொல்லி சொல்லிட்டேன்.. அந்தப் பொண்ணும் திரும்பத் திரும்ப, இன்னைக்கு போட வேண்டிய டிரெஸ்ஸை காட்டி.. ‘இந்த டிரஸ் தானே ம்யூசிக் ஆல்பம் ஃபர்ஸ்ட் டே அப்போ போடணும்ன்னு சொன்னீங்க’ன்னு கேட்டா..” அவள் கதை சொல்லிக் கொண்டிருக்க, அர்ஜுன் ஒற்றை புருவத்தை ஏற்றி,

“அவங்க சரியா தானே கேட்டு இருக்காங்க? அப்பறம் எப்படி மாத்தி அனுப்பினாங்க?” என்று புரியாமல் கேட்க,

“இல்ல.. நான் தான் அந்தப் பொண்ணைத் திட்டி, ‘எனக்குத் தெரியாதா நான் சொல்ற டிரெஸ்ஸை அனுப்பு’ன்னு சொல்லிட்டு வந்தேன்.. இப்போ சரியான டிரெஸ்ஸை எடுத்துக்கிட்டு அவ வந்துட்டு இருக்கா.. ஒரு அஞ்சு நிமிஷம் அர்ஜுன்.. வந்துடுவா..” தான் செய்தது தவறு என்று கொஞ்சம் கூட வருந்தாமல் அவள் பேசிக் கொண்டிருக்க, அர்ஜுன் வினயை கடுப்பாகப் பார்த்தான்.

வினய் உதட்டைப் பிதுக்க, அர்ஜுனுக்கு அந்த ஹீரோயினைப் பார்த்து மிகவும் எரிச்சலாக இருந்தது.. தான் செய்தது தவறு என்று கூட யோசிக்காமல், குறைந்தபட்ச மனிதத்தன்மை கூட இல்லாமல், அவள் மிகவும் கூலாக பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.. அந்த முகம் தெரியாத பெண்ணை நினைத்தவனுக்கு பரிதாபமாகவும் இருந்தது.. ‘அந்தப் பெண் இப்பொழுது எப்படி பறந்து விழுந்துக் கொண்டு வருகிறாளோ? வேகமாக வந்தால் ஏதாவது விபத்து ஆகிவிடுமோ?’ என்றெல்லாம் எண்ணியவனுக்கு மனதினில் சிறு பதட்டம் தொற்றிக் கொண்டது.

அந்த ஹீரோயினை ஒரு பார்வைப் பார்த்தவன், மனதில் சலித்துக் கொண்டு, டான்ஸ் மாஸ்டரிடம் கடைசி முறையாக ரிஹர்சல் பார்த்துக் கொண்டிருக்க, “அந்த ஹீரோயின் நல்லா இருக்காங்க இல்ல அர்ஜுன்..” வினயின் கேள்வியில் அவனை முறைத்தவன், ஸ்டெப்ஸ்களில் கவனம் பதித்தான்.

சில நொடிகளில் கதாநாயகியும் அவனுடன் இணைந்து பயிற்சி செய்யத் துவங்க, இதற்கு மேல் நேர தாமதம் ஆகாமல் முடித்துக் கொடுக்க டைரக்டர் கேட்டுக் கொள்ள, அர்ஜுன் அவரது நிலையைப் புரிந்து தலையசைத்தான்.  

அப்பொழுது ஒரு பெண் புயலென அந்த இடத்தினில் நுழைந்து, இவர்கள் ரிஹர்சல் செய்துக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் வந்து படபடப்புடன் நிற்க, அர்ஜுனின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. அங்கு வந்த பெண்ணைப் பார்த்த அர்ஜுனின் கண்கள் திகைப்பிலும், ஆச்சரியத்திலும் விரிந்தது.. அவன் அதே ஆச்சரியத்துடன் வினயை திரும்பிப் பார்க்க, வினய்க்கும் அவளை அங்கு பார்த்தது திகைப்பாக இருந்தது..   

அவனுடன் பயிற்சியில் இருந்த கதாநாயகி, அவளைப் பார்த்ததும், “ஹாய் ஆத்மிகா.. என்ன லேட் ஆகிடுச்சா? உனக்காகத் தான் இங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. ஷூட்க்கு டைம் ஆச்சு.. கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம் இல்ல..” என்று கேட்கவும், அவளைப் புரியாமல் பார்த்த சிவாத்மிகா,

மூச்சிரைக்க, “மேடம்.. நீங்க தானே நான் கொடுத்து விட்ட அந்த லாங்கவுன்  டிரஸ் தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே டான்ஸ் ஷூட் டிரஸ்ன்னு சொன்னீங்க.. அதனால தான் அந்த டிரஸ் கொடுத்து விட்டேன்.. நானும் நேத்து திரும்பத் திரும்ப லெஹங்கா தானே இன்னைக்கு டிரஸ்ன்னு கேட்டேனே மேடம்..” என்று குழப்பத்துடனும், அவசரமாக வந்ததில் வேர்த்து வடிந்துக் கொண்டு கேட்க,

“சும்மா ப்ரான்க் பண்ணினேன் ஆத்மிகா.. இட்ஸ் எ ப்ரான்க்.. பயந்து போயிட்டியா?” என்று கைக் தட்டிச் சிரிக்க, அடித்துப் பிடித்து ஓடி வந்தவளின் முகம் மாறிய அந்த நொடியிலேயே, முகத்தைச் சரி செய்துக் கொண்டவள், புன்னகையுடன்,

“ஹோ.. ஹோ.. ஓகே மேடம்.. ப்ரான்க்கா? நான் கூட நான் தான் தப்பா நோட் பண்ணிட்டேனோன்னு பயந்துட்டேன். இப்போ தான் எனக்கு மூச்சே வருது” என்று சமாளித்தவள்,

“இந்தாங்க மேடம் உங்க டிரஸ்.. சாரி ஃபார் லேட்.. நான் ஆபீஸ் போன உடனே எடுத்துட்டு வந்தேன்.. கொஞ்சம் மார்னிங் ட்ராபிக் வேற படுத்திடுச்சு.. இந்த மாதிரி சமயத்துல தான் ஒரு ஃபிளைட் இருந்தா நல்லா இருக்கும்ன்னு எனக்கு தோணும் மேடம்.. இல்ல அட்லீஸ்ட் பறவையா இருக்கலாம்.. நோ சிங்னல்.. நோ ஸ்டாப்பிங்.. நோ பேரியர்” என்றவள், தாமதிக்காமல் புன்னகை முகத்துடனே அவளது கையில் அந்த உடையைக் கொடுக்க,

“நான் ரெடி ஆகிட்டு வரேன்..” என்று அங்கிருந்தவர்களிடம் பொதுவாகக் கூறியவள்,

“ஆத்மிகா.. வா போகலாம்..” என்று அந்த ஹீரோயின் அவளை அழைத்துக் கொண்டு செல்லவும், சிவாத்மிகா அவளுடன் நடந்தாள்.

‘ஆத்மிகா.. நைஸ் நேம்..’ மனதினில் சொல்லிப் பார்த்துக் கொண்டவனுக்கு, அந்த ஹீரோயின் பிரான்க் என்று சொன்னவுடன் அடிப்பட்ட குழந்தையென மாறிய அவளது முகம் நினைவு வந்தது.

முகம் வாடிய அந்த நொடியிலேயே, முகத்தை சரி செய்துக் கொண்டு புன்னகைத்து, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவள் தொடர்ந்து புன்னகையுடன் பேசிய முகம் தோன்றி மனதினில் வதைக்க, அமைதியாக கேரவனுக்குச் சென்றவன், கண்களை மூடி அமர்ந்துக் கொண்டான்..

ஒரு தொழிலில் கோபமோ, வருத்தமோ இருந்தாலும் சட்டென்று முகத்தைக் காட்ட முடியாது தான்.. ஆனாலும், இது போன்று தான் செய்யாத தவறுக்கு, டென்ஷனையும் ஏற்றுக் கொண்டு, அவசரமாக வந்ததுமல்லாமல், அதை சிரித்துக் கொண்டு கூட குத்திக் காட்டாமல், அவள் நகர்ந்து சென்ற விதம் ஏனோ அவளுடன் பேச வேண்டும் போன்ற ஒரு எண்ணத்தை அவனுக்குத் துளிர்க்கச் செய்தது. ஒருவேளை அவள் அவசரமாக வந்த பொழுது ஏதாவது ஆகி இருந்தால்? இந்த எண்ணமே அவனுக்கு பதட்டத்தைக் கொடுத்தது..      

மனதினில் அத்தனையையும் பேசிக் கொண்டே அவன் கண் மூடி அமர்ந்திருக்க, “அர்ஜுன் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணப் போறாங்க.. ஹீரோயின் ரெடி..” என்று வினய் வந்து சொல்ல,

“ஹ்ம்ம்.. வரேன்” என்றபடி அர்ஜுன் வினய்யுடன் ஷூட் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.  

அனைவரும் தயாராக இருக்கவும், எப்பொழுதும் போல கடவுளை வேண்டிக்கொண்டு அர்ஜுன் தயாராக நிற்க, ஹீரோயின் அங்கு வந்து சேர்ந்தாள். என்றும் இல்லாத பழக்கமாக ஹீரோயினைப் பார்த்த அர்ஜுன், “வாவ்.. தி டிரஸ் லுக்ஸ் ஸ்டன்னிங்..” என்று பாராட்டவும், தன்னைத் தான் சொல்கிறான் என்று அந்த கதாநாயகி நினைத்துக் கொள்ள,

‘இது என்னடா இது.. அந்த வீட்டுக்கு போனது இருந்து இந்தப் பையன் சரியே இல்ல.. காலைல அந்தப் பொண்ண பார்த்துட்டு நிக்கறான்.. இப்போ இந்த ஹீரோயின ஸ்டன்னிங்ன்னு சொல்றான். என்னடா நடக்குது இங்க? நம்ம அர்ஜுனா இது? முதல்ல வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்ட சொல்லி, அவனுக்கு மந்திரிக்க சொல்லணும்.. அந்த வீட்ல ஏதோ மோகினி பேய் இருக்கும் போல..’ வினய் மனதினில் நினைத்துக் கொள்ள, ஷூட்டிங் துவங்கி நடக்கத் துவங்கியது.

ஷூட்டிங்கின் நடுவே அர்ஜுனின் பார்வை ஒரு ஓரமாக அமைதியாக ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு, ஷூட்டிங்கை நிமிர்ந்துக் கூட பார்க்காமல், தனது உலகத்தில் இருந்தவளைப் பார்த்தவனுக்கு, அவள் ஒரு சுவாரஸ்யமான புதிராகத் தோன்றினாள்.  

அந்த லெஹங்காவில் எடுக்க வேண்டிய சீன்கள் முடிய, மதிய உணவு இடைவேளை வரவும், அர்ஜுனுக்கு அவள் காலையில் கிளம்பும் பொழுது பேசியது நினைவு வந்தது.. அவனது பார்வை சுவாரஸ்யமாக அவளைத் தேட, அவளை எங்கும் காணாமல் மனம் சுனக்முற, ஹீரோயினிடம் பேச்சுக் கொடுக்கத் துவங்கினான்.