எந்நாளும் தீரா காதலாக – 14

💝💝14  

நாட்கள் விரைந்தோட, நிர்மலாவிற்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வரவும், வினய், வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.. ராதாவிற்கு துணையாக அர்ஜுன் அங்கேயே இருக்க, நிர்மலாவைப் பார்த்துக் கொள்ள வினய் வீட்டிற்கு இங்கு வந்திருந்தான். நிர்மலாவின் அறையை மிகுந்த கவனத்துடன் சுத்தம் செய்த பின் தான் அவரையே அந்த அறைக்குள் செல்ல அனுமதித்தனர், அர்ஜுனும், வினயும். மாணிக்கமும் குணமடைந்து வீட்டிற்கு வர, அவனுக்கும் ஓய்வு கொடுத்து, பதினைந்து நாட்கள் விடுமுறை அளித்து, அர்ஜுன் அனுப்பி வைத்தான்.

வீடு சுத்தம் செய்து தயாரானதும், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலை வர, அர்ஜுனும் வினயும் ராதாவை தனியே விட்டுச் செல்லத் தயங்கினர். அவர்களது துணியை மடித்து வைத்த ராதா, அவர்கள் தங்கி இருந்த அறையில் கொண்டு வைக்க, வினயும் அர்ஜுனும் யோசனையுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வினய்க்கு ராதாவை அந்த வீட்டில் தனிமையில் விட்டு வர மிகுந்தத் தயக்கம்.. வார்த்தைக்கு வார்த்தை சண்டைப் போட்டாலும், அனைவரின் மீதும் எதிர்ப்பார்ப்பின்றி அவள் காட்டிய அன்பு அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் காட்டும் அக்கறை பிடித்திருந்தது.. அவளது மென்மையான குணம் பிடித்திருந்தது..

“ராதாவை எப்படி தனியா இங்க விடறது?” என்று அவன் தயங்க, அர்ஜுன் அவனைப் பார்த்து நக்கலாகப் புன்னகைக்க, வினய் அவனை முறைத்தான்.

அவனது முறைப்பில், அர்ஜுன் அமைதியாக வாயின் மேல் கையை வைத்து அமர, “சிவா வர வரை நான் இங்க இருக்கேன்.. நீ அங்க வேணா போ..” என்று சொல்ல, அர்ஜுன் மறுப்பாக தலையசைத்தான்.    

லாக்டவுனின் காரணத்தினால் அர்ஜுனுக்கு ஷூட்டிங் நிறுத்துப்பட்டு, படத்தின் மற்ற வேலைகள் மட்டும் நடந்துக் கொண்டிருந்தது. அர்ஜுனின் முடிந்த படத்திற்கு டப்பிங் வேலைகள் வேறு இருப்பதின் காரணத்தினால், “இல்ல.. நீ இங்கயே இரு.. நான் அங்க அம்மா கூட இருக்கேன்..” என்று சொல்லவும், அர்ஜுன் அவசரமாகத் தலையசைத்தான்.

“டாய்.. கள்ளா.. இதை என் வாயால சொல்லணும்ன்னு தானே நீ நினைச்ச?” வினய் அவனது தோளில் அடிக்க,

“இல்லடா.. நான் அங்க வந்துட்டா ரூம் பக்கத்துல அவளைப் பார்க்க போக முடியாது.. அவ ரொம்ப தனியா ஃபீல் பண்ணுவா.. எனக்கு இப்போ அவளோட மனநலம் முக்கியம்.. அதை விட அவளுக்கு நான் இருக்கேன்னு அவளுக்கு நான் எல்லா விதத்துலயும் உணர்த்தணும்.. மொதல்ல அவளுக்கு என் மேல நம்பிக்கை வரணும்.. அவளோட இன்செக்யூர்ட் ஃபீல்லை எனக்கு போக்கணும்.. அப்போ தான் எங்க லைஃப் சந்தோஷமா இருக்கும்.. அது என் கடமையும் கூட..” என்று அவன் சொல்ல, வினய், அர்ஜுனின் தோளை அழுத்தினான்.

“அவளை பத்திரமா பார்த்துக்கோ.. அவளை இவ்வளவு நீ புரிஞ்சி வச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு.. ரெண்டு பேருமே சந்தோஷமா இருக்கணும்..” என்ற வினயும், அவன் வார்த்தையால் வெளியிட்டதை கண்களால் ராதா வெளிப்படுத்த, அவளைப் பார்த்துவிட்டு வினய் தனது துணிகளை பையில் அடுக்கத் துவங்கினான்.        

அர்ஜுனுக்கு வீடு சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் பொழுதே, வீட்டிற்கு சென்று விட்டால் சிவாத்மிகாவிடம் பேசும் நேரம் குறையும் என்ற கவலை எழுந்தது. இப்பொழுது தூரத்தில் இருந்தாலும், அவளுடன் ஜன்னலில் அமர்ந்து கதை அளந்துக் கொண்டோ, உணவு உண்ணும் நேரத்தில் அவளுடன் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டே தனது இருப்பை உணர்த்தி, அவள் தனியாக இல்லாதது போல பார்த்துக் கொண்டதும் போய் விடுமே என்று நினைக்க, வினய்யின் இந்த பேச்சு அர்ஜுனின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.      

“அதுவும் சரி தான்.. அப்போ அப்போ நான் அம்மாவை வந்து பார்த்துட்டு அங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு, இங்க அக்கா கூட துணைக்கு இருக்கேன்..” என்று சொல்ல, வினய் அவனது தோளைத் தட்டிவிட்டு,

“நான் அம்மாவைப் பார்த்துக்கறேன்.. நீ என் தங்கையை கவனிச்சிக்கோ..” என்று சொல்லிவிட்டே அவன் இங்கு வந்தான்.

காலையில் எழுந்து உடற்பயிற்சியை முடித்து, சிவாத்மிகா எழுந்துக்கொள்ளும் வரையும் அன்றைய காலை வேலைகளை முடிப்பதற்கு ராதாவிற்கு உதவி செய்துக் கொண்டே சிவா எழுவதற்கு காத்திருப்பான்.. சிவா எழுந்த உடன் அவனுக்கு மெசேஜ் அனுப்புவது வழக்கமாக இருந்தது.

அவளது மெசேஜ் வந்த உடனே அவளுக்கு காபியும், காலை உணவையும் கொண்டு கொடுத்துவிட்டு, அந்த ஊஞ்சலில் அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருப்பான். அவள் உணவை உண்ணும் வரை உடன் இருப்பவன், மீண்டும் வந்து ஜன்னலில் அமர்ந்து, அவளுடன் ஏதாவது கதை அளந்துக் கொண்டிருப்பான்..

அவன் பேசத் துவங்கி, அவளையும் நிறைய பேச வைத்து, அவளது சின்னச் சின்னச் ஆசைகளையும் சொல்ல வைத்து கேட்டுக் கொள்வான். அந்த சில நாட்களிலேயே தன்னிடம் அவளை எந்த தயக்கமும் இன்றி பேசவும் வைத்தான். அவனது ஷூட்டிங் அனுபவங்களையும் அவளுடன் பகிர்ந்து கொண்டு சிரிக்க வைத்தான்.. இருவரிடமும் நல்லதொரு புரிதல் ஏற்பட்டு இருக்க, இடையில் ரோமியோவாக மாறி, அந்த மூன்று வார்த்தையை நேரிடையாகக் கூறாமல், மற்ற எல்லா வழியிலும், தனது காதலை உரைப்பதையும் தவறாமல் செய்தான்..  

இப்படியாக நாட்கள் செல்ல, சிவாத்மிகாவின் உடல் நலம் சற்று குணமடைந்து, அவளது டெஸ்ட்டும் நெகட்டிவ் என்று வர, மெல்ல இரு வீடுகளிலும், அனைத்தும் இயல்புக்கு திரும்பியது.. அவனது படுக்கை விரிப்புகள், தலையணை உரைகள் அனைத்தையும் வாஷிங் மெஷினில் போட்டுத் துவைக்கத் துவங்கினாள்.

காலையிலே வினய், அந்த அறையை சுத்தம் செய்ய ஆட்களை வரவழைத்து இருக்க, தனது அறைக்குச் சென்று தனது பெட்டியை வைத்துவிட்டு வந்த அர்ஜுன், நிர்மலாவுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்த சிவாத்மிகாவைப் பார்த்து,

“இப்போ ரொம்ப அவசரமா அதை எல்லாம் போட்டு துவைக்கணுமா? அதை அப்படியே எடுத்துப் போட்டா வேலை செய்யறவங்க வந்த அப்பறம் அதை எல்லாம் துவச்சுக்கலாம்ல.. கொஞ்ச நாளைக்கு உடம்பை ஸ்ட்ரைன் பண்ணாம இரும்மா..” என்றவன், அவள் அருகில் இருந்த சோபாவில் அமர, நிர்மலா அவர்களுக்கு காபியைக் கொண்டு வந்து கொடுத்தார்.

“என்னம்மா? ரொம்ப வேலை எல்லாம் இழுத்து விட்டுக்காம இருங்களேன்மா.. என்னைக் கூப்பிட்டா நான் வந்து செய்ய மாட்டேனா? இன்னும் உங்களுக்கு ரெஸ்ட் வேணும்.. கொஞ்சம் சமத்தா இருங்க சரியா? சமையல் எல்லாம் நானும் வினயும் பார்த்துக்கறோம்..” அர்ஜுன் சொல்லவும், சிறு குழந்தை போல நிர்மலா முகத்தை வைத்துக் கொள்ள, அவன் பெரியவனாய் மாறி கண்டித்ததை சிவாத்மிகா சிரிப்புடன் பார்த்தாள்.

அவளது பார்வை தன் மேல் திரும்பவும், காபியை உறிஞ்சிக் கொண்டே, மெல்ல அவனது அருகில் இருந்த அவளது கையின் மேல் இயல்பாக கையை வைத்து அழுத்தியவன், “நீயும் தான்.. இந்த வாரம் ஃபுல்லா ரெஸ்ட் எடு.. ஷாப்ல ஏதாவது போய் பார்க்கனுமா? ஏதோ டிசைன் எல்லாம் தரணும்ன்னு சொன்ன இல்ல.. கொடு.. வேற என்ன செய்யணுமோ சொல்லு.. நான் போய் பார்த்துட்டு வரேன் என்ன? இன்னமும் உனக்கு டயர்ட் போகலை.. இந்த வீக் நீ கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும்.. அதை விட்டு வேலைக்கு போறேன்னு நின்ன.. பிச்சுடுவேன் பிச்சு.. இல்ல அந்த டைம் கேப்ல நான் தான் உன்னை கொண்டு விட்டு கூட்டிட்டு வருவேன்.. என்ன?” என்றபடி அவளது கையை மெல்ல வருடிய அர்ஜுன், சிவாத்மிகாவின் கன்னங்கள் செம்மையுரவும், ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டே, அவளது விரல்களுடன் விரல் கோர்த்துக் கொண்டான். அவளது விரல்களும் அவனது விரல்களை அழுத்த, அர்ஜுன் அவளைக் காதலுடன் பார்த்தான்.  

“உன்னோட டேபிள் மேல இருந்த உன்னோட டிசைன் பைலைப் பார்த்தேன்.. எனக்கு அதுல இருக்கற எல்லா டிசைனும் ரொம்ப பிடிச்சது.. எனக்கு அது எல்லாம் எப்போ டிசைன் பண்ணித் தரப் போற? நானே உனக்கு மாடலா இருந்து போட்டோ ஷூட் கூட பண்ணித் தரேன்.. அதுல நான் ரொம்ப ஹான்ட்சமா இருப்பேன்ல.. எனக்கும் கொஞ்சம் சான்ஸ் கிடைக்கும்..

அதனால அப்போ அப்போ நான் சொல்றேன்.. எனக்கு ரெடி பண்ணிக் கொடு.. அதுவும் எனக்கு அதுல இருந்த ஒரு டிரஸ் அடுத்த மாசம் நடக்க இருக்கற அவார்ட் ஃபங்க்ஷன்க்கு வேணும்..” என்று சொல்லவும், சிவாத்மிகா அவனை விழிகள் விரியப் பார்த்தாள்.     

“என்ன? விளையாடறீங்களா? திடீர்னு இப்படி கேட்கறீங்க! வினய் அண்ணா நம்ம ரெண்டு பேரையும் நல்லா போட்டு உதைக்கப் போறாங்க.. ஏன்னங்கடா ஜோடி சேர்ந்துக்கிட்டு என் பிழைப்புல லாரி மண்ணைக் கொட்டறீங்கன்னு நல்ல கேள்வி கேட்க போறார்..” சிவாத்மிகா சிரிக்க,

“அதெல்லாம் மாட்டான்.. அவனுக்கும் அந்த டிரஸ் ரொம்ப பிடிச்சது.. செமையா யோசிச்சு இருக்கேன்னு சொன்னான்.. நான் அதுல மான்லியா இருப்பேன்னு வேற சொன்னான். எனக்கு அந்த டிசைன் ரொம்ப பிடிச்சது.. எனக்கு அந்த டிரஸ் அரேஞ் பண்ணு.. கண்டிப்பா எனக்கு வேணும்..” அவன் அடமாக கேட்க, சிவாத்மிகா அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

“அப்படி நீங்க அடம் பிடிக்கிற அளவுக்கு என்ன டிசைன் அதுல இருக்கு?” யோசனையுடன் அவள் கேட்க,  

“அந்த கிரீம் கலர் டர்டல் நெக் டிஷர்ட்.. அதுக்கும் மேல சாக்லேட் ஓவர் கோட் போல ஒரு டிரஸ் டிசைன் இருந்தது இல்ல.. அது தான்..” என்று அவன் சொல்லவும், விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.  

“அது உங்களுக்கு பிடிச்சிருக்கா?” ஆச்சரியமாக அவள் கேட்க,

“பிடிச்சிருக்காவா? எனக்கு அந்த காம்ப்போ ரொம்ப பிடிச்சது? வினய்க்கும் தான்..” என்று அவன் சொல்ல,

“என்னது வினய் அண்ணா பார்த்தாங்களா?” அவள் வாயைப் பிளக்க, அவளது தலையை மெல்லமாகத் தட்டியவன்,

“இங்க இத்தனை நேரம் என்ன சொல்லிட்டு இருக்கேன்..” என்று கேட்க, அந்த நேரம் அவர்களைப் பார்த்த வினய்,   

“டேய்.. நீங்க ரெண்டு பேரும் இப்போ என்னைப் பத்தி பேசிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு நியாபகப்படுத்தறேன்..” என்று குரல் கொடுக்க, இருவரும் அவனைப் பார்த்துச் சிரித்தனர்.

“மச்சான்.. இது எல்லாம் நியாயம் இல்ல.. அவ கூட சேர்ந்து உன் தோஸ்தை இப்படி கலாய்க்க கூடாது.. சரி.. எதுக்கு என்னைப் பத்தி இங்க பேசிட்டு இருக்கீங்க?” என்று அவன் கேட்கவும், அவர்கள் பேசியதை அர்ஜுன் சொல்ல,

“ஹே.. ஆமா சிவாம்மா.. டிசைன் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது.. நீ நிஜமா அது எல்லாமே டிசைன் பண்ணிக் கொடுத்தா செமையா போகும்.. நம்ம அர்ஜுன் தான் மாடல்.. ஓகே வா..” மனம் நிறைந்து அவன் பாராட்ட, சிவாத்மிகா கேலியாக புன்னகைத்தாள்.

“அண்ணா.. நான் உங்க காம்படிட்டர்.. உங்க க்ளையன்ட்டே ஆளை மாத்தி என்கிட்டே கேட்கறார்.. இதுல நீங்களும் சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க?” வினயை அவள் கேலி செய்ய, அவளது காதைப் பிடித்து திருகியவன்,

“வாலு.. என்னையே கலாய்க்கிறையா? என் தங்கச்சியோட வர்க் பார்த்து தான் பாராட்டினேன்.. நான் ஒண்ணும் உன் காம்படிட்டர் கிடையாது.. கூடிய சீக்கிரம் கொலாப்ரேஷன் பண்ணிடலாம்..” அவன் மிரட்ட, அவள் வலிப்பது போல போலியாக அலற,

“பாவம்டா அவளுக்கு வலிக்கும்..” உடனே அர்ஜுன் வினயின் கையை எடுத்து விட்டு, அவளது காதை தடவி விட, நிர்மலா புன்னகையுடன் இருவரையும் மனம் நிறைந்துப் பார்த்தார்.

“சரிடாம்மா.. இந்தா இந்த ஜூஸ் குடி.. ரொம்ப நேரம் உட்கார வேண்டாம்.. கொஞ்ச நேரம் போய் தூங்கு.. நான் மதியம் சாப்பிட எழுப்பறேன்.. இப்படியே இவனுங்க கூட உட்கார்ந்து பேசிட்டே இருந்தா.. நல்லா பேசிட்டு இருப்பாங்க.. உனக்கு இப்போ ரெஸ்ட் தேவை..” அவர் மிரட்ட,

“அம்மா.. இத்தனை நாளா தூங்கிட்டே தானே இருந்தேன்..” என்று சிணுங்கி,

“நான் அங்க வீட்டுக்கு போறேன்ம்மா.. அக்கா தனியா இருப்பாங்க..” அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே இழுக்க,

“ஜூஸ் குடிச்சிட்டு வா.. நான் உன்னை வீட்ல கொண்டு விடறேன்.. நல்லா தூங்கி எழுந்திரு.. உன் டிரஸ் எல்லாம் துவச்சு போட்டு அப்படியே வெளிய வச்சிடலாம் என்ன? அதை திரும்ப யூஸ் பண்ண வேண்டாம் சரியா?” என்று கேட்க, அவள் சரியென்று தலையசைக்க,

“அப்படியே நாம ஈவெனிங் கொஞ்ச நேரம் வெளிய ஒரு டிரைவ் போயிட்டு வரலாம்.. உனக்கும் கொஞ்சம் சேஞ்ஜா இருக்கும்.. என்ன?” என்று கேட்க, ஆவலுடன் அவள் தலையசைத்து,  

“எங்க போகப் போறோம்..” ஆவலே வடிவாகக் கேட்க, கண் சிமிட்டி,

“ஜூஸ் குடி.. போகும்போது உனக்கே தெரியும்..” என்றவன், தனது போனை பார்க்கத் துவங்கினான்.

ஜூஸ் குடித்துக் கொண்டே அவனது போனைப் பார்த்தவள், அவன் தனது போட்டோக்களை பதிவிட்டு, வினய்யையும், அவளையும் டேக் செய்ய,

“இப்போ என்னை எதுக்கு டேக் பண்ணறீங்க?” என்று அவள் கேட்க, புருவத்தை உயர்த்தியவன், அவளது செல்லில் நோடிபிகேஷன் வரவும், அவனை நிமிர்ந்துப் பார்க்க,

“நீங்களும் பாதி அதுல வர்க் பண்ணி இருக்கீங்க இல்ல மேடம்.. அதுக்கு நான் க்ரெடிட் கொடுக்கணும் இல்ல..” என்றவன், அவள் முறைக்கவும், “சும்மா தான்… உன் பேரை எப்படி போடறதுன்னு யோசிச்சேன்.. போட்டேன்..” என்று சிரிக்க, நிர்மலா அவர்களைப் புரியாமல் பார்த்தார்.

அர்ஜுன் தனது மொபைலைக் காட்ட, “டேய்.. அஜ்ஜு.. ரொம்ப அழகா இருக்குடா.. அம்சமா இருக்கு..” என்றவர்,

“சிவாம்மா.. ரொம்ப அழகா இருக்கு.. உன் வேலையா?” மனம் நிறைந்து, அந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே சொல்ல,

“அம்மா.. இது பாதி வினய்.. மீதி இவ டிசைன் பண்ணினதும்மா.. அவனுக்கும் கொஞ்சம் சொல்லிடுங்க.. அப்பறம் உங்க செல்லப் பையன் கோவிச்சுக்கப் போறான்..” அர்ஜுன் கேலி செய்ய, வினய் அவனை பத்திரம் காட்டினான்.  

வினயை அவள் பார்க்க, “அது எல்லாம் இல்லம்மா.. அது சாதாரண பட்டு வேஷ்டிய இப்படி மாத்தினது அவ தான்.. அது போட்ட உடனே பையன் செமையா ஆகிட்டான்.. எனக்கே அப்படியே அவனை கடிக்கணும் போல இருந்தது.. பாருங்க.. உங்க பையனோட ரசிகைகளை.. ஒரே ஃபையர் விட்டுட்டு இருக்காங்க.. ஆப்பிள் போல இருக்கானாம்.. மாப்பிள்ளை போல இருக்கானாம்.. செம மேன்லியா இருக்கானாம்.. மறக்காம சுத்திப் போடுங்க..” அவன் கேலி செய்ய, நிர்மலா சிவாத்மிகாவைப் பார்க்க, அவளோ முகம் சுருங்க,

“நான் வீட்டுக்கு கிளம்பறேன்மா.. டயர்ட்டா இருக்கு.. போய் கொஞ்ச நேரம் தூங்கறேன்” என்றவள், தனது பொருட்களை எடுத்துக் கொள்ள, அவளது கையில் இருந்து அந்தப் பொருட்களை வாங்கிக் கொண்ட அர்ஜுன், நிர்மலாவைப் பார்த்து தலையசைத்துவிட்டு, அவளுடன் மெல்ல நடந்தான்.

வீட்டை விட்டு வெளியில் வந்ததும், “அவங்களால கமெண்ட்ல மட்டும் தான் ஃபையரோ, ஹார்ட்டோ எது வேணும்னாலும் பண்ண முடியும்.. நிஜத்துல உன் ஒருத்தியால மட்டும் தான் அதை எல்லாம் எனக்கு செய்ய முடியும்.. அந்த உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு.. இந்த அர்ஜுன் இந்த சிவாத்மிகாவோட அர்ஜுன்.. இங்க அவளைத் தவிர யாருக்கும் இடமில்ல..” என்று தனது இதயத்தைத் தொட்டுக் காட்டியவன், அவளது கையுடன் கைக் கோர்க்க, அந்த வார்த்தையில் கண்கள் கலங்க சிவாத்மிகா அவனைப் பார்த்தாள்.

அவளது கையில் அழுத்தம் கொடுத்தவன், அவளது கண்களைத் துடைத்து, அவளுடன் அமைதியாக நடந்தான். அவனது கையின் அழுத்தம் அவளுக்கு இதமாய் இருக்க, அவனது தோள் சாய்ந்துக் கொள்ள ஆவல் எழுந்தது..  

“சிவாம்மா.. வந்துட்டியா? வா.. வா..” இருவரும் உள்ளே நுழையவும், ராதா அவளை சந்தோஷமாக வரவேற்க,

“கூட நானும் வந்திருக்கேன் அக்கா..” அர்ஜுன் நினைவுப்படுத்தவும்,

“வா தம்பி.. அவளை ரொம்ப நாள் கழிச்சு இவ்வளவு பக்கத்துல பார்க்கறேனா? அது தான்” என்று அவனிடம் மன்னிப்பு வேண்டியவள்,

“சாப்பிடறியா பாப்பா?” என்று கேட்க,

“இல்லக்கா.. இப்போ தான் அம்மா ஜூஸ் கொடுத்தாங்க.. நான் கொஞ்சம் தூங்கிட்டு வரேன்.. டயர்ட்டா இருக்கு..” என்று சொல்லவும்,

“மதியத்துக்கு என்ன சமைக்கிறது? தூங்கி எழுந்து நல்லா சாப்பிடு.. உனக்கு பிடிச்சது செஞ்சு வைக்கறேன் சரியா?” ராதா கேட்கவும்,  

“அக்கா.. இன்னைக்கும் நான் தான் அவளுக்கு செய்வேன்.. அவ கேட்டு.. நான் ப்ராமிஸ் பண்ணினது ஒண்ணு பாக்கி இருக்கு..” என்றவனை சிவாத்மிகா கேள்வியாகப் பார்க்க,

“அதெல்லாம் தூங்கி எழுந்து வா.. சப்ரைஸ்.” என்றவன், அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவளது அறைக்குச் சென்றதும், தனது அறைக்குச் சென்று பார்வையை ஓட்டியவளிடம், “உன் ரூமை நான் பத்திரமா தான் வச்சிருக்கேன்.. பாரு உன் டெட்டி பியர் கூட பத்திரமா தான் இருக்கு..” என்று அவன் சொல்ல, பட்டென்று அவள் திரும்பிப் பார்க்க, அங்கு ஆளுயரத்திற்க்கு ஒன்று அவளது படுக்கையின் அருகே இருக்க, அதைப் பார்த்தவள் அர்ஜுனைப் பார்த்து கண்களை விரித்தாள்.

மெல்ல அவள் அருகில் சென்றவன், அவனது தலையை மென்மையாக வருடி, முகத்தில் படிந்திருந்த முடியை காதின் பின்னால் மென்மையாக ஒதுக்கியவன்,

“படுத்துத் தூங்கு.. மதியம் எழுந்து சாப்பிட்டு நாம கிளம்பலாம்..” என்றவன், மெல்ல அவளை நெருங்கி, அவளது நெற்றியில் இதழ்களை ஒற்றிவிட்டு, அவள் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

“ஸ்வீட் ட்ரீம்ஸ்.. அதுல நான் தான் வருவேன்..” என்றவன், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு வெளியில் செல்ல, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அறைக்கதவை மெல்ல மூடிவிட்டு, படுக்கையில் விழுந்தாள்.

அவனது இதழ்களின் கதகதப்பும், அவனது வீரல் தீண்டலின் குறுகுறுப்பும் மிச்சமிருக்கவும், விரல்களால் நெற்றியை வருடிக் கொண்டே, அந்த டெட்டியை எடுத்து அணைத்தபடி மெல்ல கண்களை மூடினாள்.

அவள் கீழே எழுந்து வந்த பொழுது, அழகான சின்ன ஹாட்கேஸ்களில் உணவு வகைகள் இருக்க, அதைத் திறந்துப் பார்த்தவள், “அக்கா.. இதெல்லாம் யாரு பண்ணினா? அர்ஜுனா?” அவள் திகைப்பாகக் கேட்க,   

“ஆமா.. அர்ஜுன் தம்பி தான் செஞ்சு கொண்டு வந்து வச்சாங்க.. நீ ஸ்வீட் கேட்டியாம்.. அதையும் செஞ்சு வச்சிருக்காங்க.. நீ சாப்பிட்ட உடனே உனக்கு வெந்நீரை கண்டிப்பா தந்துடணுமாம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு போயிருக்காங்க.. அவங்க கரெக்டா நாலு மணிக்கு வந்துடுவாங்களாம்.. இப்போ ஏதோ ம்யூசிக் விடியோ வேலையா போயிட்டு வரேன்னு சொன்னாங்க..” என்ற ராதா, அவளுக்குத் தட்டை வைத்துப் பரிமாற, அவற்றை எல்லாம் பார்த்தவள்,

“அக்கா.. நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அமர, ராதா கடிகாரத்தைப் பார்த்தாள்.

“மணி மூணு ஆகுது.. நீ கிட்டத்தட்ட நாலு மணி நேரம் தூங்கி இருக்க..” சிரித்துக் கொண்டே அவள் சொல்லவும், நாக்கை கடித்துக் கொண்டவள், அவள் போட்ட உணவை உண்ணத் துவங்கினாள்.

ஸ்வீட்டிற்காக அவன் கேரட் ஹல்வா செய்து, சிறிய ஹாட்கேசில் சூடாக வைத்திருக்க, அதை முதலில் உண்டவள், “அக்கா.. ஸ்வீட் செமையா இருக்குல்ல..” என்று ரசித்து உண்ண,

“ஆமா.. எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு.. நல்ல கைப்பக்குவம்.. அவ்வளவு பொறுமையா நிதானமா கிளரினாங்க..” என்று ராதா அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க,

“நீங்க சாப்பிடீங்களா?” ராதாவை அவள் கேட்க, ராதா கண்களை விரித்து தலையை உருட்டினாள்.

“அவரு வந்து என்னை எங்க கூட வந்து சாப்பிடுன்னு கூட்டிட்டு போனாரு..” ராதா தொடங்க, அவளது முகம் சிவந்ததோ,

“எவரு?” குறும்பாக சிவா கேட்கவும், முகத்தை சுருக்கி அழகு காட்டியவள்,

“சொல்றதைக் கேளு.. நீயும் நல்லா தூங்கிட்டு இருந்தியா. சரின்னு அவர் கூப்பிடவும், கதவைப் பூட்டிட்டு போனேன்.. அப்போ தான் தம்பி கேரட்டை போட்டு கிளறிட்டு இருந்தாங்க.. மேல கீழ சிந்தாம அப்படி சுத்தபத்தமா செஞ்சாரு.. அவங்க அப்பா இறந்த போது அம்மாவைத் தொல்லை செய்யாம இவங்க ரெண்டு பேருமே செய்யக் கத்துக்கிட்டாங்களாம்..” என்று சொல்லவும், சிவாத்மிகா சிக்கனை எடுத்து ரசித்து உண்டபடி அவளைப் பார்த்தாள்.    

“அப்போ நானும் நல்லா சமைக்கக் கத்துக்கணுமோ?” மெல்லிய குரலில் அவள் முணுமுணுக்க, ராதா அவளது தலையை மென்மையாகத் தட்டினாள்.   

“பாப்பா.. உன் மேல தம்பி ரொம்ப ஆசை வச்சிருக்கு.. அன்னைக்கு உனக்கு உடம்பு சரி இல்லன்ன உடனே அவ்வளவு தவிச்சுப் போயிட்டாங்க.. ரொம்ப மனசு கஷ்டப்பட்டாங்க பாப்பா.. நீ எழுந்துக்க லேட் ஆச்சுன்னு நான் எழுப்ப வந்தேன்னு, என்னை போகக் கூடாது.. தூங்கறவள ஏன் எழுப்பணும்ன்னு கேள்வி கேட்டாங்க.. நீ மெசேஜ் கொடுத்ததும் உன்னைப் பார்க்க அவங்க தவிச்ச தவிப்பு இருக்கே.. அப்படி பரபரன்னு ஆகிட்டாங்க.. அவ்வளவு அவசரமா சாப்பிட்டு உடனே உன்னைப் பார்க்க அப்படி ஓடி வந்தாங்க.. அத விட.. அம்மாவுக்கு உடம்பு சரியானதும், அங்க அவரு வந்துட்டா உன்னைப் பார்க்க முடியாது.. சரியா பேச முடியாது, என்னையும் இங்க தனியா விட முடியாதுன்னு, ரெண்டு பேரும் பேசிக்கிட்டு தம்பி இங்க இருந்தாங்க.. ரொம்ப நல்ல பையன்..” அவளுக்காக அர்ஜுன் இங்கிருக்கும் பொழுது செய்ததைச் சொல்ல, சிவாத்மிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது..

“அக்கா.. எனக்கு அவரோட அன்பு புரியுதுக்கா.. எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு.. ஆனா.. எனக்கு உள்ளுக்குள்ள ஏதோ பயமா இருக்குக்கா.. அவரோட தோள்ள சாஞ்சு அவரோட அன்புல நனையணும்… அவரோட கையக் கோர்த்துக்கிட்டு, என்னை உயிரா நேசிக்கவும் ஒருத்தர் இருக்காரு பாருங்கன்னு இந்த உலகத்துக்கு கத்திச் சொல்லணும்ன்னு ஆசையா இருக்குக்கா..

ஆனா.. எனக்குள்ள  இருக்கற பயம் அதை எல்லாம் சுருட்டிக்குது.. நான் என்ன அக்கா செய்யட்டும்? என்னால அர்ஜுனை இழக்க முடியாது..

என்னோட பயத்தால நான் அவரை காயப்படுத்திடுவேனோன்னு எனக்கு பயமா இருக்குக்கா.. அதனால அவர் என்னை வெறுத்துட்டு போயிடுட்டாருன்னா என்னால தாங்க முடியாதுக்கா.. எல்லாமே சேர்ந்து எனக்கு ரொம்ப பயமா இருக்குக்கா.. இப்படியேன்னா கடைசி வரைக்கும் ஒரு ஃப்ரெண்ட்டாவாவது  இருக்கலாமே.. அந்த அன்பாவது எனக்கு கிடைக்கும்ல..” அதைச் சொல்லச் சொல்ல, அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிய, ராதா அவளைத் தனது வயிற்றோடு அணைத்துக் கொண்டாள்.

அவளது கண்ணைத் துடைத்து விட்டு, “நான் ஒரு முட்டாள்.. சாப்பிடற பிள்ளையை இப்படி அழ வச்சிட்டேனே.. சாப்பாட்டுக்கு முன்னால கண்ணு கலங்காதே பாப்பா.. தம்பி உனக்காக ஆசையா செஞ்சிருக்காங்க.. அதுல உப்பு உறைப்பை விட, தம்பியோட அன்பு தான் இருக்கு.. அதை நிம்மதியா அள்ளிச் சாப்பிடு..” என்று அவளது கண்ணைத் துடைத்து, அவளுக்கு ஒரு வாயை எடுத்து ஊட்டியவள்,

“பாப்பா.. உனக்கு ஒண்ணு தெரியுமா.. ஒரு சொல் இருக்கு.. வாழ்க்கையில முதல் பாதி கஷ்டப்பட்டா.. அடுத்த பாதி வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்குமாம்.. இனிமே நீ சந்தோஷமா தான் இருக்கப் போற பாரு.. என் தம்பி.. உன்னை கையில தாங்கி உன்னை அன்பால குளிப்பாட்டப் போறான்.. நீ வேணா பாரு.. என் தம்பி உன் மேல காட்டற அன்புல.. நீ அவன் பின்னாலேயே சுத்தப் போற..” என்றவள்,

“இப்போ கண்டதையும் யோசிக்காம சாப்பிடு..” என்று அதட்டி, அவளுக்கு மேலும் உணவை எடுத்து வைக்க, அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த அர்ஜுன், சிவாத்மிகாவிடமும் தனது காதலின் பிரதிபலிப்பு இருப்பதும், அவளது பயத்தையும் உணர்ந்து, ஒரு பெருமூச்சுடன்,

‘உனக்கு எந்த பயமும் இல்லாம உன்னோட காதலை என்கிட்டே ஒத்துக்க வைக்கிறேன் என் ராஜாத்தி..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது, அப்பொழுது தான் வந்தது போல,  

“சிட்டு.. என்ன ரெடியா? நான் ரெடியாகி வந்துட்டேன்..” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய, அவனது குரலைக் கேட்டதும் ஆவலாக அவனைப் பார்த்தவள், அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.