எந்நாளும் தீரா காதலாக – 16

💝16        

வீட்டிற்கு வந்தும், இருவரும் ஜன்னலில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருக்க, இருவரையும் ராதாவும், வினயும் தொல்லை செய்யாமல், தனித்து விட்டனர்.

“பாலைக் குடிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோ..” அர்ஜுன் சொல்லவும், அவனைப் பார்த்துக் கொண்டே போட்டுக் கொண்டவள்,

“போட்டுக்கிட்டேன்..” என்றபடி, மீண்டும் அவனிடம் பேசத் துவங்கினாள்.       

ஸ்வீட் நத்திங்க்ஸ் என்பது போல, இருவருக்கும் பிடித்த திரைப்படப் பாடல்களில் இருந்து, காட்சிகள், இடம் என்று தொடங்கிய பேச்சு, எங்கெங்கோ சென்றுக் கொண்டிருக்க, இருவரின் சிரிப்பும் அந்த வீட்டில் அழகாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.

மாத்திரை உண்டதன் விளைவாக அவளது கண்களில் உறக்கம் தழுவவும், “எனக்கு தூக்கம் வருது அஜ்ஜூ..” என்று குழந்தை போல அவனிடம் சிணுங்கி,

“குட் நைட் அர்ஜுன்.. என்னால உட்கார முடியல… நீங்களும் போய் தூங்குங்க..” கண்கள் சொருக அவள் சொல்லவும்,

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்

உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்

என்னுயிரில் நீ பாதியென்று

உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்

எத்தனை பெண்களை கடந்திருப்பேன்

இப்படி என் மனம் துடித்ததில்லை

இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு

உறங்க சொல்வதில் நியாயமில்லை       

அர்ஜுன் பாடத் துவங்க, சிவாத்மிகா சிரிக்கத் துவங்கினாள்.

“உங்களுக்கே இது ரொம்ப ஓவரா இல்லையா? தூக்கம் வருது அஜ்ஜு.. ரொம்ப டயர்ட்டா இருக்குங்க.. நான் சாதாரணமா இருந்தா விடிய விடிய கூட பேசலாம்.. இப்போ முடியல.. ப்ளீஸ்.. நான் தூங்கப் போகவா?” கிண்டலில் துவங்கியவளின் குரல், இறுதியில் கெஞ்சலில் முடிய, அதில் அவன் உருகியே போனான்.

“சாரி.. சாரி சிட்டு.. நான் சும்மா வம்பு பண்ணினேன்.. நீ தூங்குடா. காலையில பேசலாம்.. கனவிலும் நானே வந்து தொல்லை செய்வேன்.. அதுக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என்றபடி அவன் போனை வைக்க, சிவாத்மிகா நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவனது முகத்தில் கேலி தெரிய, தனது உதட்டைக் குவித்து காற்றில் ஒரு முத்தத்ததை பறக்க விட்டவன், “போய் படுத்துக்கோ.. தூங்கும்மா..” எனவும், மனமே இல்லாமல், ஜன்னல் கதவை மூட, அவளது முகத்தைப் பார்த்தவன், மீண்டும் அவளை அழைத்தான்.

“சிட்டு.. நான் வேணா நீ தூங்கற வரைக்கும் அங்க இருக்கவா..” என்று கேட்க,  

“என்ன விளையாடறீங்களா? நீங்க போய் படுங்க.. மணி பத்தாகுது..” என்று சொல்லிவிட்டு போனை வைக்கப் போக, ‘ஹுக்’ என்று அவனது குரல் கேட்கவும்,

“என்ன? என்ன ஆச்சு?” அவள் பதற,  

அதற்கு பதில் சொல்லாமல், “கதவைத் திற.. நான் பால்கனில இருக்கேன்..” என்று சொல்லவும், கண்கள் விரிய, அவசரமாக சென்று கதவைத் திறந்தவள், அர்ஜுன் நிற்பதைப் பார்த்து, அந்த உறக்கத்திலும் அவளது முகம் சந்தோஷத்தில் விகசித்தது..

போனை வைத்துவிட்டு வேகமாக கதவைத் திறந்தவள், அவனது கன்னத்தில் கை வைத்து, “என்ன அஜ்ஜு..” என்று கேட்க, அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அவளது பெட்டின் அருகே சென்றவன், அதில் அமர்ந்துக் கொண்டு,

“படு..” எனவும், இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவள் முறைக்க,

“ஹய்யே.. இந்தப் பொண்ணு தப்புத் தப்பா நினைக்குதுப்பா.. நான் ரொம்ப நல்லப் பையன்.. வா.. மடியில படுத்துக்கோ.. நீ தூங்கற வரை பேசிட்டு இருக்கலாம்.. நான் அப்படியே சமத்தா என் ரூமுக்கு போயிடுவேனாம்..” என்றவன், அவளைப் பிடித்து இழுக்க, அவள் பட்டென்று பெட்டில் அமரவும், அவளது தலையை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டு, மெல்ல வருடிக் கொடுக்கத் துவங்கினான்.

“இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா அர்ஜுன்.. அங்க அம்மாவும், வினய் அண்ணாவும் உங்களைத் தேடப் போறாங்க..” அவனது மடியில் வாகாக தலை வைத்துக் கொண்டே அவள் கேட்க, அவளது கன்னத்தில் மெல்ல வருடியவன்,

“அவன் தேடினா வினய்க்கு மெசேஜ் அனுப்பிடலாம்.. இப்போ நீ தூங்கு..” என்றவன், விட்ட இடத்தில் இருந்து கதை பேசத் துவங்கினான்.

“சரி.. உனக்கு பிடிச்ச கதை எது சொல்லு.. நான் ஒன்ஸ் படிச்சிட்டு, அந்தப் படத்துக்கு சைன் பண்ணிடறேன்..” அவன் சொல்லவும்,

அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவள், “அன்னிக்கு சொன்னேனே. அதுவும்.. அப்பறம் இன்னொரு கதை..” என்று கதையின் பெயரைச் சொன்னவள்,

“ஆனா.. உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு பார்த்துக்கோங்க.. அதுல நான் ஃபர்ஸ்ட் சொன்ன கதை கொஞ்சம் ரொமா..ன்ஸ்..” அவள் இழுக்க, அவளது கன்னத்தைக் கிள்ளியவன், சத்தமாக சிரிக்கத் துவங்கினான்.

“சிட்டு.. சிட்டு.. என்னோட செல்லமே.. நீயும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்க தானே. அங்க எப்படி ஷூட்டிங் போகும்ன்னு தெரியாதா?” என்று அவளைக் கொஞ்சியவன், அவள் பழிப்புக் காட்டவும், அவளது தலையை ஆசையுடன் வருடி, 

“சரி.. நான் அதெல்லாம் ஒன்ஸ் ஃபாஸ்ட்டா படிச்சு பார்த்துட்டு சைன் பண்ணிடறேன்.. இப்போ கண்ணை மூடிக்கோ..” என்று சொன்னவன், அவளது தலையில் மெல்லத் தட்டிக் கொடுக்க, சில நிமிடங்களிலேயே அவளது கண்கள் உறக்கத்தில் சொருகியது.

அவள் நன்றாக உறங்கத் துவங்கவும், மெல்ல அவளது தலையை எடுத்து தலையணையில் வைத்தவன், அவளது நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றி, அவளது கன்னத்திலும் அழுந்த இதழ் பதித்து,

“குட் நைட்டா என் தங்கமே.. உன்னை என்னைக்கும் என் உயிரா பார்த்துக்கறேன்.. நிம்மதியாத் தூங்கு..” என்றவன், மீண்டும் அவளது நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு, அவளது போர்வையை போர்த்திவிட்டு, கதவின் சத்தம் வராத அளவு, எந்த வித ஓசையும் எழுப்பாமல், மெல்ல கதவை அடைக்க விழைய, ராதா அங்கு நிற்கவும், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“என்னக்கா நீங்க இன்னும் தூங்கப் போகலையா?” சைகையில் அவன் கேட்க, ‘இல்லை’ என்று மறுப்பாகத் தலையசைத்தவள், 

“நீங்களும் மெல்ல போய் படுத்துக்கோங்க தம்பி..” மெல்லிய குரலில் சொன்னவள், கலங்கிய தனது கண்களைத் துடைத்துக் கொண்டு,

“அவளை பத்திரமா பார்த்துக்கோங்க.. அவளை இப்படி சந்தோஷமா பார்த்தே ரொம்ப நாளாச்சு.. உங்க கூட பீச்சுக்கு போயிட்டு வந்ததுல இருந்து அவ முகத்துல அப்படி ஒரு சந்தோசம்..” என்றவள், மனம் நிறைந்து,

“ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்..” என்று சொல்ல, அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“அதே தான் உங்களுக்கும்.. உங்க மனசுக்கு நீங்களும் நல்லா இருக்கணும்..” என்றவன், மீண்டும் பால்கனி வழியே ஏறி குதிக்க, அதைப் பார்த்து சிரித்த ராதா,

“பேசாம… இங்க இருந்து அங்க போக ஒரு தடம் மாதிரி போட்டுடுங்க தம்பி.. வசதியா இருக்கும்.. இப்படி எகிறி குதிக்க வேண்டாம் இல்ல..” எனவும்,

“நல்ல ஐடியா அக்கா.. செஞ்சிட்டா போச்சு..” என்றவன், தனது அறைக்குச் சென்று, பால்கனியின் கண்ணாடிக் கதவைத் திறக்க முயல, அது தானாக மூடிக் கொண்டிருக்க, கதவைத் திறக்க முடியாமல் அர்ஜுன் தலையில் தட்டிக் கொண்டான்.. அந்தக் கதவை உள்ளிருந்து மட்டுமே திறக்க முடியும்.. சிவாத்மிகாவின் முகம் வாடவும், அவசரமாகச் சென்றவன், மறந்து கதவை நன்றாக மூடி விட, இப்பொழுது உள்ளே எப்படி செல்வது என்று யோசித்தவன், வினயை அழைத்தான்.

“டேய்.. என் ரூமைத் திறந்து, பால்கனி க்ளாஸ் டோர திறந்து விடேன்..” என்று கேட்க, நிர்மலாவுடன் பேசிக் கொண்டிருந்த வினய்,

“என்ன? எதுக்கு இப்போ பால்கனில போய் உட்கார்ந்த?” என்று கேட்டுக் கொண்டே அவன் மாடிப் படிகளை ஏற, வினயைத் திரும்பிப் பார்த்த நிர்மலா, 

“அவன் ஏறி குதிச்சு சிவாவைப் பார்க்க போயிருப்பான்.. அங்க போற அவசரத்துல கதவை வழக்கம் போல அடிச்சு மூடி இருப்பான்..” அர்ஜுனைக் கலாய்க்க,

“அப்படியா? அம்மா சொல்றது காதுல விழுந்ததா?” என்று கேட்டு வினய் சிரிக்க, அந்தப் பக்கம் அர்ஜுனின் முகத்தில் சிறிது நாணம் படர்ந்தது..

“வாயேன்டா..” வெட்கச் சிரிப்புடன் சொன்னவன், வினய் கதவைத் திறக்கவும், தலையைக் கோதிக் கொண்டே சிரித்துக் கொண்டு நிற்க, 

“என்ன அம்மா சொன்னது தான் நடந்ததா?” வினய் கேலி செய்ய, வேகமாக அறைக்குள் வந்து, கீழே படிகளில் இறங்கியவன், குழந்தை போல நிர்மலாவின் மடியில் தலை சாய்த்து,

“அம்மா.. என்னை ரொம்ப ஓட்டறான்ம்மா..” என்று கோல் மூட்ட,

“என்ன அப்படி தானே நடந்தது?” நிர்மலாவும் கேலி செய்யவும், ‘போங்கம்மா..’ என்றபடி கண்களை மூடிக் கொண்டான்.

நிர்மலா அவனது தலையை கோதிக் கொடுக்க, “பேசிட்டே இருக்கும் போது அவளுக்கு தூக்கம் வந்துடுச்சும்மா.. தூங்க போகணும்னு சொன்னாளே தவிர, அவளுக்கு முகம் வாடிப் போச்சு.. சரின்னு அவ தூங்கற வரை பேசிட்டு வந்தேன்..” என்று அவன் சொல்லவும், அவனது கன்னத்தை வாஞ்சையாகத் தட்டினார்.  

“ரொம்ப நல்ல பொண்ணுடா.. இங்க இருந்த பொழுது.. எனக்கும் எல்லாம் செஞ்சிக்கிட்டு.. வீட்டையும் க்ளீன் பண்ணி அவ்வளவு பொறுப்பா  பார்த்துக்கிட்டா.. கூடவே இங்க இருந்தே வேலையும் பார்த்தா தெரியுமா.. காலையில நான் எழுந்துக்கறதுக்குள்ள கடகடன்னு வீடு கிளீன் பண்ணி, குளிச்சு சாமி விளக்கு எல்லாம் ஏத்தி, அவ உட்கார்ந்து வேலை பார்த்துட்டு இருப்பா.. நான் எழுந்த உடனே எனக்கு எல்லாம் எடுத்துத் தந்து, சாப்பாடு பாத்திரம் எல்லாம் சுத்தம் செஞ்சிட்டு, மறுபடியும் வேலைக்கு உட்கார்ந்துடுவா.. ரொம்ப சுறுசுறுப்பு.. என் கண்ணே பட்டு இருக்கும் போல.. இப்படி அடிச்சுப் போட்டா போல முகமே சோர்ந்து போச்சு..” அவர் இந்த வார்த்தைகளை பலமுறை சொல்லி பெருமைப்பட்டு அங்கலாய்த்து இருக்கிறார்.. அதை இப்பொழுதும் செய்ய,   

“ஹ்ம்ம்.. ரொம்ப டயர்ட் ஆகிட்டா.. இன்னைக்கு பீச்சுல அலைச்சல் வேற இல்ல..” என்றவன், அவசரமாக எழுந்து அமர்ந்து,

“டேய்.. வினய்.. இன்னைக்கு அவ கடையில அந்த ஹீரோயினோட டிரஸ் பார்த்து, இது அளவு சரி இல்ல.. செக் பண்ணுன்னு சொன்னாடா.. ஜஸ்ட் கண்ணால பார்த்தே..” என்று அர்ஜுன் வியக்க, வினய் அவனது தோளைத் தட்டினான்.

“ஹ்ம்ம்.. அவளுக்கு அது மூச்சு போலடா.. அவளோட எண்ணம் முழுசுமே அது தான்.. அதை விட சில பேருக்கு அது ஒரு கலையாவே வரும்.. டேப் இல்லாமையே மெஷர்மென்ட் கரெக்ட்டா சொல்லிடுவாங்க.. அதுல என் தங்கச்சி கில்லி..” என்றவன்,

“இன்னைக்கு நீ இன்ஸ்டா பக்கம் போனியா?” கேலியாகக் கேட்க,

“இல்லையே.. ஏன்?” அர்ஜுன் அவனைக் கேள்வியாகப் பார்க்க,

“இல்ல.. இப்போ உங்க ரெண்டு பேர் போட்டோ தான் டாக் ஆஃப் தி உடனடி கிராமம்.. யார் அந்த பொண்ணு.. அர்ஜுன் பக்கத்துல இவ்வளவு க்ளோசா நிக்கறாங்க.. சோசியல் டிஸ்டன்ஸ்ல நிக்கற அர்ஜுன் எங்க காணும்? அப்படின்னு ஒரே இது போயிட்டு இருக்கு.. உன்னோட ஃபேன் பேஜெஸ் போட்ட அந்த போட்டோ கீழ கமென்ட் செக்ஷன் பாரு.. ட்விட்டர்லையும் அவளைப் பத்தி ஆராய்ச்சி நடக்குது..” என்று சிரிக்க, அர்ஜுன் எழுந்து அமர்ந்தான்.

வினயின் செல்லைப் பிடுங்கி, அதில் அவன் சொன்னதைப் பார்க்க, “ஏண்டா ஏதாவது மூடி மறைச்சு அவ கூட சுத்தப் போறியா என்ன?” சந்தேகமாக நிர்மலா கேட்க,

“ஏம்மா.. அப்படி நான் சுத்தறதா இருந்தா அவ ஷாப் உள்ள போயிருப்பேனா? இல்ல போட்டோ எடுக்க விட்டு இருப்பேனா? அதெல்லாம் இல்ல.. போட்டோ நல்லா வந்திருக்கான்னு பார்க்கவும், கமென்ட் செக்ஷன் படிக்கவும் தான் கேட்டேன்..” அவருக்கு பதில் சொல்லிவிட்டு, அதில் இருந்த கமென்ட் செக்ஷனை வினயும் அர்ஜுனும் படித்து கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“அது தானே பார்த்தேன்.. இந்த ஒளிஞ்சு மறைஞ்சு செய்யறதா இருந்தா அவளை கூட்டிட்டே போக வேண்டாம்.. இல்ல கூடிய சீக்கிரம் வர முஹுர்த்தத்துல கல்யாணம் பண்ணிடலாம்.. ஒளிஞ்சு மறைய அவ ஒண்ணும் எவளோ இல்ல.. என்னோட மருமக..” நிர்மலா கண்டிப்புடன் அர்ஜுனிடம் சொல்ல, அர்ஜுனும் வினயும் அவரைப் பார்த்தனர்.  

“என்னடா பார்க்கற?” சந்தேகமாக நிர்மலா கேட்க, உதட்டைப் பிதுக்கியவன்,  

“அம்மா.. திரும்பவும் சொல்றேன்.. நான் அவ கூட ஒளிஞ்சு மறையனும்ன்னா நான் போட்டோவே எடுத்திருக்க மாட்டேன்.. ஆனா.. இப்போ கல்யாணம் எல்லாம் முடியாதும்மா..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“ஏன்? என்ன விஷயம்?” என்று நிர்மலா பட படக்க,

“அம்மா.. இப்போ அவளோட மனசுல என் மேல இருக்கற அன்பை விட, அதிகமா பயம் இருக்கு.. அது போக்கினா தான் எங்களால சந்தோஷமா வாழ முடியும்.. இல்ல.. அவ பயமே அவளோட சந்தோஷத்தையும், எங்க கல்யாண வாழ்க்கையையும் கெடுத்துடும்.. அது எனக்கு வேண்டாம்மா.. அவ மனசுல எந்த வித பயமும் இல்லாம அவ என்னோட வாழ ஆரம்பிக்கணும்..” என்றவன், பீச்சில் அவள் அழுதுக் கொண்டே கூறிய பயத்தைச் சொல்ல, நிர்மலாவின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

“அவளை எப்படிடா நான் தப்பா நினைப்பேன்? அந்த பொண்ணு பட்ட கஷ்டத்தை ராதா சொல்லச் சொல்ல எனக்கு அவளை அப்போவே நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து பத்திரமா பார்த்துக்கணும்ன்னு தோணிச்சு.. அப்போவே அப்படின்னா.. இப்போ அவ என் மகனோட மனசுல இடம் பிடிச்சு.. அவனை ஆட்டி வச்சு.. அவனோட சந்தோஷமா வாழப் போறவன்னு தெரிஞ்ச அப்பறம் என் மனசு எப்படியிருக்கும்?” என்று கேட்டவர்,

“அந்த சின்ன வயசுல என்ன கொடுமைடா! ஒரு லீவுக்கு கூட வீட்டுக்கு போகாம, யாருமே இல்லாதவ போல அந்த குழந்தை ஹாஸ்டல்லயே இருக்கறது எவ்வளவு கொடுமை? அவங்க தாத்தா பாட்டின்னு யாருமே இல்ல போலடா.. அவங்க அம்மா அப்படி பண்ணினதுனால அவங்க சொந்தக்காரங்க யாருமே அவ பொறுப்பை ஏத்துக்கலையாம்.. அவ தனியா தான் அத்தனையும் பார்த்துட்டு இருந்திருக்கா..

அப்பறமும் அவங்க அப்பா இந்த வீட்டை எழுதித் தந்த பொழுது, ‘நீங்க பரிதாபத்துல எழுதிக் கொடுக்கற உங்க வீடு வேண்டாம்’ன்னு சொல்லிட்டு, அவ படிக்கிறதுல இருந்தே அவங்க காலேஜ்ஜுக்கு வந்த ஒரு டிசைனர் கிட்ட வேலை செய்ய ஆராம்பிச்சு.. படிப்பு முடிஞ்ச அப்பறமும் தொடர்ந்து வேலை செஞ்சிக்கிட்டே சைட்ல ராவா பகலா அவளும் டிசைன் பண்ணி இருக்கா. வர ஆர்டர்ஸ் எல்லாம் விடாம செஞ்சு இந்த அஞ்சு வருஷமா அவ்வளவு உழைச்சு கடனை கொடுத்துட்டு இருக்கா.. அதோட அவங்க அப்பா கொடுத்த பணத்தை எல்லாம் அவருக்கே திருப்பித் தந்துட்டா போல.. அவரு அதை வீட்டுக்குன்னு எடுத்துக்கறேன்னு அவரோட வக்கீல் கிட்ட சொல்லிட்டாராம்..” அன்று ராதா அர்ஜுனிடம் பகிர்ந்ததையும் தாண்டி, நிர்மலா அவனிடம் சொல்ல, அர்ஜுன் வினய் இருவருமே திகைத்துப் பார்த்தனர்.

“நான் அவளைப் பார்த்த இந்த நாட்கள வச்சு சொல்றேன்.. ஒரு நிமிஷம் அவ சும்மா உட்காரல.. அவ்வளவு உழைப்பு.. காலையில இருந்து ராத்திரி வரை அவ்வளவு ஃபோன்.. ஃபோன்லையே.. இங்க இருந்தே அத்தனை வேலையும் செஞ்சா.. அவளை இனிமே பத்திரமா பார்த்துக்கணும்.. நீ சொல்றதும் சரி தான்.. அவ மனசுல இருக்கற அந்த காயம் ஓரளவாவது ஆறினா தான் உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.. நான் கடவுள் கிட்ட சீக்கிரம் அவ அந்த காயங்களை எல்லாம் மறந்து சந்தோஷமா இருக்கணும்ன்னு வேண்டிக்கறேன்..” வாஞ்சையாக நிர்மலா சொல்ல, அர்ஜுன் அவரை பெருமையுடன் பார்த்தான்.

“சரி.. நேரமாகுது.. ரெண்டு பேரும் போய் படுத்துத் தூங்குங்க..” என்ற நிர்மலா, எழுந்துக் கொள்ள, அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டவன்,

“தேங்க்ஸ்ம்மா..” எனவும், அவனது கன்னத்தைத் தட்டி,

“போடா.. போய் வேலையைப் பாரு.. அவளை நான் பத்திரமா பார்த்துக்கறேன்..” எனவும், அவரது கன்னத்தில் முத்தமிட்டவன்,

“குட் நைட்ம்மா..” என்று கூறிவிட்டு எழுந்துக் கொண்டு,

“குட் நைட் வினய்.. ஹாப்பி சண்டை ட்ரீம்ஸ்..” என்றுவிட்டு படிகளில் தாவி ஏறி அறைக்குச் செல்ல, வினய் புன்னகையுடன் நிர்மலாவைப் பார்த்தான்.

“என்னடா புதுசா சண்டை ட்ரீம்ஸ்ன்னு சொல்றான்? என்ன சண்டை?” நிர்மலா கேட்க,

“அது ஒண்ணும் இல்லம்மா.. அவன் ஏதோ உளறிட்டு போகறான்.. நான் போய் என் வேலையைப் பார்க்கறேன்.. நீங்களும் தூங்குங்க..” என்று வினயும் தனது அறைக்குள் செல்ல,  

“இவனுங்க ஏதோ மறைக்கிறாங்க.. கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்.. அப்போ கவனிச்சுக்கறேன்..” என்றபடி நிர்மலாவும் தனது அறைக்குள் நுழைந்தார்.

அறைக்கு வந்தவன், கடற்கரையில் தான் எடுத்த வீடியோக்களை பார்க்கத் துவங்கினான்.. அலைகளை, வானில் இருந்த சூரியனை என்று அவளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பல வீடியோக்கள் இருந்தது.

அதில் சூரியனை, கடலையோடு எடுத்த ஒரு வீடியோவில், ‘அந்த ஆரஞ் ஸ்கை அழகா இருக்கு இல்ல..’ என்று அவளிடம் கேட்ட அவனது குரலும்,

‘ஹான்.. ரொம்ப அழகா இருக்கு..’ என்ற அவளது ரசனை மிகுந்த குரலும் இருக்க, அதை எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“என்னை இப்படி உன் மேல பைத்தியமா சுத்த விட்டு இருக்கியேடி சிட்டு..” என்று நினைத்துக் கொண்டவன், மீண்டும் நிலா மெல்ல வானில் ஏறிய பொழுது படம் பிடித்திருந்த அந்த போட்டோவை பதிவிட்டு,

ஒ அழகே ஒ இமை அழகே

ஹே கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஒரழகே

விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே

அடி உன்னை தீண்டதானே

மேகம் தாகம் கொண்டு மழையை தூவுதோ

வந்து உன்னை தொட்ட பின்னே

தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ ஒ ஒ

ஹே.. ஹே.. பெண்ணே.. பெண்ணே.. பெண்ணே..பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..

பாடலையும் போட்டு விட்டு, ‘உன்னோட சேர்ந்து ஒரு செம போட்டோ போட எனக்கு ஆசையா தான் இருக்கு.. நம்ம கல்யாணம் டிக்லர் செய்யற அன்னிக்கு அன்னிக்கு போடுவேன்.. உன்னை என் கைக்குள்ள வச்சிக்கிட்டு, உன் கன்னத்தோட கன்னம் வச்சு.. ஒரு செம க்ளிக் போடுவேன்..” என்றவன், தன்னை நினைத்து சிரித்துக் கொண்டே, அவள் சொன்ன கதையைப் படிக்கத் துவங்கினான்.  

அவனுக்குத் தெரியும்.. அடுத்த நாள் காலை அது பெரிய செய்தியாக, வலைத்தளங்களில் அலசப்படும் என்று.. ஒரு சிலர் சிஐடி பிரிவில் கைத் தேர்ந்தவர்கள் போல அதை அலசி ஆராய்வார்கள் என்று எண்ணி, தனக்குள் சிரித்துக் கொண்டு, தனது கதைப் படிக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

நள்ளிரவில் உறக்கம் கலைந்த சிவாத்மிகாவிற்கு, அர்ஜுன் அவளது தலையை வருடித் தூங்க வைத்தது தான் முதலில் நினைவு வந்தது.

அவனது மென்மையான வருடல்களும், அவனது கதகதப்பான இதழ் ஒற்றல்களும் நினைவு வர, பிரண்டுப்படுத்துத் தனது அருகில் இருந்த ஆளுயற டெட்டியை அணைத்துக் கொண்டாள்.

“அர்ஜுனே.. உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? உங்க கூட போட்டோல இருந்தா உங்களைப் பத்தி நாளைக்கு தேவை இல்லாம நியூஸ் வரும்ன்னு தானே கூட நிக்கல.. அதுக்கு என்ன அப்படி மிரட்டறீங்க? அப்போ உங்களுக்கு அது போல எல்லாம் வந்தா ஓகே வா? எந்தப் பிரச்னையும் இல்லையா?” அந்த டெட்டியை அர்ஜுனாக பாவித்து அவள் கேட்க, அது அவனைப் போலவே அவளைப் பார்த்து புன்னகைப்பது போல இருந்தது.

தனது மொபைலை எடுத்து, அர்ஜுனின் இன்ஸ்டாக்ராம் பக்கத்திற்குச் சென்றவள், அவன் ஏதோ பதிவிட்டு இருக்கவும், அதைத் திறந்துப் பார்த்து,

“ஹையோ.. இந்த ஸ்டோரில என் குரல் கேட்குதே.. அர்ஜுனே என்ன பண்ணி இருக்கீங்க? நீங்க கவனிக்கலையா?” என்று அவசரமாக எழுந்து அமர்ந்தவள், அவனது இன்னொரு போஸ்ட்டைப் பார்க்க, அவளது இதழ்களில் புன்னகையும், நெஞ்சத்தில் படபடப்பும் எழுந்தது.

“இண்டைரக்ட்டா நீங்க என்னைப் பத்தி வெளிய சொல்றீங்களா அர்ஜுனே? உங்களுக்கு வெளிய என்ன பேசுவாங்கன்னு எல்லாம் எந்த கவலையும் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே, ஜன்னல் திரையை விலக்கி, அர்ஜுனின் அறையைப் பார்க்க, அவனது அறையில் விளக்கு எறியவும்,

“என்ன இன்னும் இவரு தூங்கவே இல்லையா? மணி மூணு ஆகுதே..” என்று யோசித்தபடி, போனை எடுத்து அவனுக்கு அழைக்க விழைந்தவள்,

“இல்ல.. ஒருவேளை லைட்டை அனைக்காம தூங்கிட்டாரோ? இப்போ கால் பண்ணினா தூங்கினவரு முழிச்சுப்பாரோ?” என்று யோசித்தப்படி இருக்க, அர்ஜுனிடம் இருந்து போன் வந்தது.

அந்த நேரத்தில் அர்ஜுனின் நம்பரைப் பார்த்தவள், அவசரமாக போனை எடுத்து, “அர்ஜுன்.. என்ன இன்னும் தூங்கலையா?” எடுத்ததும் அவள் கேட்க,

“இல்லடா சிட்டு.. நீ சொன்ன கதை படிச்சிட்டு இருந்தேன்.. இனிமே தான் தூங்கனும்.. நீ இன்னும் தூங்கலையா? என்ன ஜன்னல்ல எட்டிப் பார்த்துட்டு இருக்க?” என்று கேட்கவும், விழிகளை விரித்தவள்,

“எப்படித் தெரியும்? நீங்க இங்க தான் இருக்கீங்களா?” என்று அவள் சுற்றி முற்றிப் பார்க்க, அந்தப் பக்கம் அர்ஜுன் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“சிட்டு.. கதைப் படிச்சுக்கிட்டே நிமிர்ந்த பொழுது, உன்னோட ரூமோட ஜன்னல் கண்ணாடில நைட் லைட் வெளிச்சம் தெரிஞ்சது.. அப்போ உன் ஸ்க்ரீன் நகர்ந்து இருக்கனும்.. அப்போ நீ முழிச்சு இருக்கணும்.. அப்படித் தான் கண்டுப்பிடிச்சேன்.. எப்படி என் கெஸ்?” என்றவனின் புரிதலில், சிவாத்மிகாவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.. மனதோ பெருமையில் விம்மியது.  

“அர்ஜுன்.. செம கிரேட் அர்ஜுன்.. எப்படி இப்படி எல்லாம்? நான் முழிச்சு அதைத் தான் செஞ்சேன்.. ஹையோ..” குதூகலத்துடன் கேட்டவளுக்கு, அவனது சிரிப்பே பதிலாகக் கிடைத்தது.

“ஓய்.. மணியாகுது.. தூக்கத்தை கெடுத்துக்காம போய் படுத்து தூக்கத்தை கண்டினியூ பண்ணு.. நானும் தூங்கப் போறேன்.. காலையில பார்க்கலாம்..” என்றவன், ஒரு கொட்டாவியை வெளியிட, சிவாத்மிகாவிற்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது.

“அர்ஜுன்..” மென்மையான குரலில் அவள் அழைக்க,

“ஹ்ம்ம்.. சொல்லுடா..” அவனது குரல் காதலில் குழைந்து கரைய,

“இன்னைக்கு ஃபுல்லா உங்களுக்கு ரொம்ப அலைச்சல் இல்ல அஜ்ஜு.. டயர்டா இருப்பீங்க.. சீக்கிரம் படுத்து நல்லா தூங்குங்க.. நேரமாச்சு.. ரொம்ப கண்ணு முழிக்காதீங்க.. உடம்புக்கு ஆகாது.. நீங்க பொறுமையா எழுந்து வாங்க..” அவளது குரலில் அவ்வளவு அக்கறை..

“சரி சிட்டு.. நான் படுக்கறேன்… நீ சொன்னா கேட்காம இருப்பேனா?” எனவும்,  

“காலையில பார்க்கலாம்.. இப்போ தூங்குங்க..” என்றவளிடம்,

“போனை வைக்கணுமா?” அவன் ஏக்கமாகக் கேட்க,    

“ஆமா.. அதோட நீங்க இப்போ தூங்கியே ஆகணும்.. ஆமா.. சொல்லிட்டேன்.. குட் நைட் அன்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என்றபடி போனை வைத்தவளுக்கு,

“ட்ரீம்ஸ்ல நீ வருவியா?” அவனது குரல் கேட்க, அவனது அன்பில் கரைந்து, மனதில் தோன்றிய சந்தோஷத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.