எந்நாளும் தீரா காதலாக – 19

337ae47d21df999d4c4d05447fafb59c-ddb9a80a

💝💝19  

“என்னடா சிவாம்மா.. தலையை இப்படி சிக்கு பண்ணி வச்சிருக்க? காலையில ஒழுங்கா தலை சீவலையா?” அவளது முடியை சிக்கெடுத்துக் கொண்டே நிர்மலா கேட்க,

“இல்லம்மா.. எனக்கு சீக்கிரம் சிக்கு ஆகிடும்..” என்றவள்,

“நானும் சிக்காகாம இருக்க, தலைக்கு குளிச்சிட்டு ஹேர் ஸ்ட்ரெய்ட்டென் பண்ணிக்கறேன்.. அப்போ கொஞ்சம் இதுவா இருக்கும்.. ஆனா.. திரும்ப பழைய கதை தான்…” என்றவளின் தலையை திருப்பி, பின்னலிடத் துவங்கினார்.

“உங்க கை தான் வலிக்கப் போகுது…” அவரிடம் கேலி செய்தவள், விவரம் தெரிந்த நாட்களில் இருந்து தனது தாயிடம் கிடைக்காத இந்த அனுபவத்தை, ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.        

“சும்மா ஹேர் கிளிப் போட்டு முடியை விரிச்சு விட்டா இப்படி தான் இருக்கும்.. பின்னல் போடணும்..” நிர்மலா சொல்லிக் கொண்டே பின்னலிட்டு, அடியில் பேன்ட் போட்டு விட,

“நீங்க வேறம்மா.. அவளுக்குத் தான் பின்னிக்கத் தெரியாதே.. அவளா பின்னிக்கிட்டா கோணிக்கிட்டு நிக்கும்.. அது தான் இப்படி போட்டுட்டு போறா.. நான் தான் அடம் பண்ணி அப்போ அப்போ பின்னி விடுவேன்..” என்று ராதா சொல்லவும், ‘அக்கா..’ என்று சிவாத்மிகா சிணுங்க, நிர்மலா சிரிக்கத் துவங்கினார்.

“சிரிக்காதீங்கம்மா.. ஹாஸ்டல்ல நானே தானே போட்டுப்பேன்.. முன்ன எல்லாம் ஹாஸ்டல் வார்டன், எனக்கு சிக்கெடுத்து பின்னல் போட கஷ்டமா இருக்குன்னு கட் பண்ணி விட்ருவாங்க.. அப்பறமும் ஸ்கூல் முடிக்கிற வரை ஈசியா இருக்குன்னு கட் பண்ணி விட்ருவேன்.. இப்போ தான் கொஞ்சம் வளர்க்கறேன்..” என்று அவள் விளக்கம் சொல்ல, அவளது தலையில் பூவைச் சூட்டியவர்,

“இனிமே கட் பண்ணிக்காதே.. நான் பின்னி விடறேன்..” என்ற நிர்மலா அவளது முகத்தைத் திருப்பி, நெட்டி முறித்து,

“அழகா இருக்கடா ராஜாத்தி..” என்று கொஞ்ச, அதைப் பார்த்துக் கொண்டே படிகளில் இறங்கி வந்த அர்ஜுன், நிர்மலாவின் அருகில் அமர்ந்தான். அவனைப் பார்த்துவிட்டு வந்த மாணிக்கம்,

“தம்பி.. காபி குடிக்கறீங்களா?” என்று கேட்க, சிவாத்மிகா பட்டென்று திரும்பிப் பார்க்க, அர்ஜுன் அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான். அவளது விழிகள் அவனது முகத்தை ஆராய,

“காபி கொண்டு வா மாணிக்கம்.. எல்லாரும் குடிச்சிட்டாங்களா?” என்று சிவாத்மிகாவைப் பார்த்தப்படியே கேட்க, அவளது தலை தானாக அசைந்தது.

அவனது முகம் சாதாரணமாக இருப்பது போல இருந்தாலும், அவனது கண்களில் இருந்த சிரிப்பைப் பார்த்தவள், அவன் பக்கம் நன்றாகத் திரும்பிக் கொண்டு, “என் மேல கோபம் இல்லை தானே.. இப்போ நீங்க மனசுக்குள்ள சிரிச்சிட்டு தானே இருக்கீங்க? உண்மையைச் சொல்லுங்க.. சிரிச்சிட்டு தானே இருக்கீங்க? கோபம் போச்சு தானே..” விரல் நீட்டி சிறு குழந்தை போலக் கேட்க, அவளது கண்களும் கலங்கி இருந்தது..

அவளது முகத்தைப் பார்த்தவன், அவளது கன்னத்தில் கை வைத்து, “உன் மேல அப்போவும் கோபம் எல்லாம் இல்ல.. வருத்தம் தான் சிட்டு.. அப்போவே கோபம் இல்லாத பொழுது இப்போ கோபம் எங்க இருக்கும்?” என்று கேட்கவும், இயல்பாக அவனிடம் கேட்டுக் கொண்டே, அவனது தொடை மீது கை வைத்திருந்தவள், அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே கில்ல, அர்ஜுன் சிரித்துக் கொண்டே அலறினான்.   

“போங்க.. என்னைப் பார்த்து சிரிக்கலன்ன உடனே எனக்கு ஒரு மாதிரி ஆச்சு.. அழுகையா வந்துச்சு..” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிய, அதைத் துடைத்தவன்,

“இப்போ எதுக்கு அழறம்மா.. எனக்கு நிஜமா அப்போ மனசுக்கு கஷ்டமா இருந்தது.. அதை நான் உன்கிட்ட காட்டாம மறச்சு, சாதாரணம் போல நடிச்சு இருந்தா தான் தப்பு.. என்னோட சந்தோசம், கோபம், வருத்தம் எல்லாம் உன்கிட்ட எனக்கு மறைக்கணும்ன்னு அவசியம் இல்லை தானே.. சொல்லு.. இல்லை மறைக்கணுமா?” என்று கேட்கவும், அவள் மண்டையை உருட்ட, 

“நான் உன்கிட்ட அதை எல்லாம் ஷேர் பண்ணாம வேற யார்க்கிட்ட செய்வேன்? அம்மாகிட்டயோ, வினய் கிட்டயோ நான் மறைக்க மாட்டேன்.. அதே போல என்னோட சரிபாதியா வாழப் போற உன்கிட்ட நான் அதைத் தானே செய்வேன்?” என்று கேட்க, சிவாத்மிகா ‘ஆம்’ என்று தலையசைக்கவும்,  

“நான் உன் கூட ஒளிஞ்சு மறைஞ்சு பழகலை சிவாம்மா.. அதை மட்டும் மனசுல வச்சிக்கோ.. இனிமே இப்படி எல்லாம் யாராவது வந்தா ஓடி ஒளியாதே.. கூட நில்லு.. என்ன போட்டோ எடுத்து சோசியல் மீடியால போகும்.. அவ்வளவு தானே.. இப்போ மட்டும் போகாம இருக்கா என்ன? சரி அப்படியே வந்தா தான் என்ன? அதோட நான் எதையும் மறைக்கவும் விரும்பல.. நீயும் நானும் தானே கல்யாணம் பண்ணிக்கப் போறோம்?” என்றவனின், மடியில் தலை சாய்த்தவள்,

“ஆமா.. உங்களை படுத்தி எடுக்க தான் நான் ஜென்மம் எடுத்து வந்திருக்கேன்..” என்றவள், அவன் சிரிக்கவும்,

“எவ்வளவு கோபம் வந்தாலும் சிவான்னு மட்டும் கூப்பிடாதீங்க அர்ஜுன்.. என்னை ரொம்ப தள்ளி நிறுத்தின மாதிரி இருந்தது.. ஒரு நிமிஷம் நான் யாருமே இல்லாம தனியா நின்னது போல தோணிடுச்சு…” என்று தேம்ப,

“இல்லம்மா.. இனிமே கூப்பிட மாட்டேன்..” என்றவன், அவளது தலையை ஆறுதலாக வருட, நிர்மலா இருவரையும் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, ராதா வினயைப் பார்க்க, வினய் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாணிக்கம் அங்கு வர தயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த வினய், சுற்றம் மறந்து இருந்த இருவரையும் பார்த்து விட்டு, ராதாவைப் பார்த்து புருவத்தை உயர்த்த, ராதா புன்னகையுடன் தலையசைத்தாள்.  

“ராதா.. இன்னொரு காபி குடிக்கலாமா? அர்ஜுன் நீ இன்னும் முதல் காபியே குடிக்கல இல்ல.. நான் உனக்கு கம்பனி கொடுக்கறேன்..” என்று குரல் எழுப்ப, அவனது மடியில் படித்திருப்பதை உணர்ந்த சிவாத்மிகா, முகம் சிவந்து, அர்ஜுனை விட்டு நகர,

நிலைமையை சகஜமாக்க, “என்னது? இன்னொரு காபியா? இதோட இன்னைக்கு நீங்க குடிச்ச காபி.. ஹான்..” என்று விரல் விட்டு எண்ணி ராதா,

“மதியத்துல இருந்து நாலு.. இப்போ ஒண்ணு குடிச்சா அஞ்சு.. இப்படி தண்ணிக்கு பதிலா காபிக் குடிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகறது?” என்று கண்டிக்க,

“நான் எங்க அஞ்சு காபி குடிச்சேன்.. இல்லையே..” வினய் யோசிக்க,

“என்னது? இல்லையா? அங்க ஆபீஸ்ல மூணு.. இப்போ ஒண்ணு.. இப்போ தம்பி கூட குடிச்சீங்கன்னா அஞ்சு ஆகிடும்.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்..” ராதா மிரட்ட, அர்ஜுன் வினயை கேலியாகப் பார்க்க, வினய் தோளைக் குலுக்கிக்கொண்டு, கையைக் கட்டி, வாய் பொத்தி அமர்ந்தான்.     

அவனது அந்த செயலில் பெண்கள் மூவரும் சிரித்துவிட, வினயின் அருகில் எழுந்து அமர்ந்தவன், வேண்டுமென்றே மாணிக்கம் கொண்டு வந்த காபியை வாங்கி மெதுவாக ரசித்து ருசித்துக் குடிக்க, காபிப் பிரியனான வினய், அர்ஜுனைப் பாவமாக பார்த்தான்.

“ஏங்க அண்ணாவை டெம்ப்ட் பண்றீங்க? பாவம் அவரே அக்கா மிரட்டலுக்கு பயந்து அமைதியா உட்கார்ந்து இருக்கார்.. நீங்க வேற கொடுமைப்படுத்தறீங்க?” வினய்க்கு அவள் வக்காலத்து வாங்கவும்,

“பாசமலரே.. நீயாவது கேட்டியே.. பாரும்மா.. ஒரு காபிக்கு இவ என்னை எப்படி மிரட்டறான்னு..” ராதாவை அவன் வம்பு வளர்க்கவும்,

“ஒரு காபின்னு சொல்லியே நாலு ஆச்சு.. போதும்.. உடம்புக்கு ஆகாது..” என்று கண்டிப்புடன் கூறியவளை, நிர்மலா பார்த்து இதமாக புன்னகைத்து,

“நல்லா சொல்லும்மா.. நீ சொன்னாலாவது கேட்கறானான்னு பார்ப்போம்.. நான் எல்லாம் சொன்னா அம்மா ப்ளீஸ்ன்னு கொஞ்சியே என்னை கவுத்துடுவான்.. அவன் முகத்தைப் பார்த்தா திட்டக் கூடத் தோணாது..” என்று சொல்லவும், அர்ஜுன் கேலியாக வினயைப் பார்க்க,

“நீ எல்லாம் ஒரு மச்சானாடா? மகளிர் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைக்கிறாங்க.. நீ என்னவோ இப்போ தான் சொட்டுச் சொட்டா காபியை உறிஞ்சிக்கிட்டு இருக்க? துரோகி..” வினய், அர்ஜுனையும் இழுத்து விட,

“மச்சான்.. உன் மேல பாஞ்ச அம்பு என் மேல பாய கொஞ்சம் தூரம் தான் இருக்கு.. அது தான்.. அது வரதுக்குள்ள குடிச்சுக்கறேன்..” என்ற அர்ஜுனின் பதிலில் அனைவரும் சிரிக்க, காபியை குடித்து முடித்த அர்ஜுன், கப்பை வைத்துவிட்டு,

“சரி.. டிரஸ் ட்ரையல் பார்த்துட்டு வரேன்.. வினய் நீ எடுத்துட்டு வந்த ட்ரெஸ் தா” என்று எழுந்தவன், வினய் அங்கிருந்த அலுவலக அறைக்கு சென்று, உடைகளை எடுத்துக் கொண்டு வரவும், அதை வாங்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.

ஆவலாக சிவாத்மிகாவின் பார்வை அவனைத் தொடர, “அம்மா.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம டிசைனர் மேடமோட முதல் ஜென் மாடல் நம்ம அர்ஜுன் தான்..” எனவும், ‘அண்ணா..’ என்று அவள் சிணுங்க,  

அவளைப் பார்த்து சிரித்தவர், “அவன் அடம் பண்ணிக் கேட்ட அந்த ட்ரெஸ் ரெடி ஆச்சாடா சிவாம்மா.. அன்னைக்கு அந்த வேஷ்டி கூட ரொம்ப நல்லா இருந்தது.. அப்படியே ராஜா போல இருந்தான்மா.. ரொம்ப ரசிச்சு ரசிச்சு வேலை செய்திருந்த. அதே போல இதுவும் அப்படித் தான் இருக்கும்..” என்று நிறைவாய்ச் சொல்ல,

“அப்போ என்னோட டிசைனை எல்லாம் நான் ரசிச்சு செய்யலன்னு சொல்றீங்களா? அப்போ என் டிரஸ் நல்லா இல்லையா?” போலியான வருத்தத்துடன் வினய் கேட்க,

“வாலு.. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியல அப்படித் தானே..” என்று கேட்டவர், அவன் சிரிக்கவும், அவனது தோளில் தட்டி,  

“வா ராதா.. நாம முல்லைப் பூ பறிச்சிட்டு வரலாம்.. இவன்கிட்ட பேசினா இன்னைக்கு பூரா என்னை வம்பிழுத்துக்கிட்டு இருப்பான்..” என்று அழைத்துக் கொண்டு செல்ல, வினய் அர்ஜுன் அழைப்பதற்குக் காத்திருந்தான்.

முதலில் தன்னுடைய உடையை அவன் போட்டுப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, “வினய் மேல வா..” என்று அர்ஜுன் அழைக்கவும், சிவாத்மிகாவின் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே படியேறிய வினய், அறையின் உள்ளே நுழைந்துக் கொண்டே, “அவ டிரஸ் போட்டுப் பார்க்க சாயந்திரத்துல இருந்து அவ்வளவு ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கா.. நீ எதுக்கு இப்போ அவளைக் கூப்பிடாம என்னைக் கூப்பிடற?” என்று கடிந்தவன், அவள் கொடுத்த உடையை அவன் அணிந்துக் கொண்டிருக்கவும்,   

“ஹேய்ய்..” என்று மகிழ்ச்சியுடன் கூவவும், அர்ஜுன் புன்னகையுடன், 

“சும்மா தான்.. எப்படி இருக்கு?” என்று கேட்டு கண்ணடிக்க, அவனைக் கேமரா ஆங்கிள் போல கையை வைத்துப் பார்த்தவன்,

“ரொம்ப அற்புதமா பண்ணி இருக்காடா.. அந்த ஸ்கார்ஃப் ரொம்ப மேன்லியா இருக்கு.. ரொம்ப ரசிச்சு பண்ணி இருக்கா..” என்றபடி, அவனை ரசித்தான்.     

தனது செல்லில் புகைப்படம் எடுத்து, அதைப் பார்த்துக் கொண்டே,  “ரொம்ப சூப்பரா.. பெர்ஃபெக்ட்டா இருக்கு.. இங்கப் பாரு” என்று அர்ஜுனின் காட்டியபடியே,

“நாளைக்கு போட்டோ ஷூட்டுக்கு சொல்லிடலாமா? நம்ம போட்டோக்ராஃபர வரச் சொல்லவா?” என்று கிண்டல் செய்ய,

“நாமளே செய்யலாம்.. அவளையே எடுக்கச் சொல்றேன்.. இந்த தடவ அவளோட போட்டோகிராபி டேஸ்ட்டைப் பார்க்கலாம்..” என்று கண் சிமிட்டியவன்,   

“சிட்டு..” என்று அழைக்க, வேகமாக சிவாத்மிகா படி ஏறி வந்தாள்.

அவன் முன்பு ஓடி வந்து நின்றவள், மூச்சு வாங்கியபடியே, கண்கள் விரியப் பார்த்துக் கொண்டு நிற்க, வினய் அர்ஜுனைப் பார்த்துவிட்டு, வெளியே சென்றான்..

“எப்படி இருக்கு?” என்று கேட்கவும், அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், மெல்ல அவன் அருகில் வந்து, அவனது காலரை சரி செய்துக் கொண்டே,

“உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்க, அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டவன்,

“ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றபடி அவளது நெற்றியில் இதழ் பதிக்க, சிவாத்மிகா அவனது காலரையும், அவன் அணிந்திருந்த உடையையும் மென்மையாக வருடிப் பார்க்க, அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு அவளை மேலும் தன்னுடன் இழுத்து அணைக்கத் தூண்டியது.  

“நான் எப்படி இருக்கேன் இதுல..” அவன் கேட்க, எம்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள்,

“ரொம்ப அழகா இருக்கு… பெர்ஃபெக்ட்.. உங்களுக்கு செமையா சூட் ஆகுது.. என்னோட செல்ல அழகுக் கண்ணா..” ரசனையுடன் சொல்லிக் கொண்டே, அவனை வருடிக் கொண்டிருந்தாள்.

கண்களை அவனது முகத்தினில் நிலைக்கவிட்ட படி, அவனது தோள் சாய்ந்தவள்,

“சாயந்திரத்துல இருந்து உங்களுக்கு இந்த டிரெஸ்ஸை ட்ரையல் பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. ஃபர்ஸ்ட் டைம் பண்றேன் இல்லையா. அது தான் கொஞ்சம் நெர்வஸ்சா இருந்தது..” என்றவளின் நாடியைப் பிடித்து, அவளது முகத்தை நிமிரத்தி, மெல்ல அவளது இதழில் இதழ் பதித்தவன்,

“நீ செஞ்சா அது நல்லா இல்லாம போகுமா? எதுக்கு டென்ஷன் ஆகற? நாளைக்கு நீயே போட்டோ போட்டோ எடு. ஓகே வா?” என்றவன், அவள் விழிகளை விரித்து,

“நானா” என்று கேட்கவும்,

“ஆம்..” என்று தலையசைத்தவன்,

“உன்னை கூப்பிடறதுக்கு முன்னால வினய்ய கூப்பிட்டா.. டிரஸ்சை சரி பார்த்துட்டு, அவன் பாட்டுக்கு வேலைப் பார்க்கப் போயிடுவான்.. நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டான்.. அதுக்குத் தான்.. அதுக்குள்ள முகம் வாடிப் போச்சு என்னோட ஸ்வீட்டுக்கு. அதுக்குள்ள டென்ஷன் வேற?” குறும்பாகக் கூறியவனின், முகத்தை ஏற்றிட்டவள்,   

“ஏன்?” என்று கேட்கவும், அவளது விழிகளைப் பார்த்துக் கொண்டே, அவளது கன்னங்களைத் தாங்கி, அவளது இதழ்களை மென்மையாக தனது இதழ்களுக்குள் புதைத்துக் கொண்டான்.

அவனது கரங்கள் அவளது இடையில் பதிய, அவனது தோள் சாய்ந்தவள், அவனது இதழ்களுக்கு சுதந்திரம் வழங்கி அவனுடன் ஒன்றி நின்றாள். மெல்ல இதழ்களைப் பிரிந்தவன், அவளது முகமெங்கும் இதழ்களால் வளம் வர, அவனது மார்பில் சாய்ந்தவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன், அவளது கழுத்தினில் இதழ் பதித்தான்..

மெல்ல அவளது காது மடலிலும் இதழ் பதித்தவன், அவளது கன்னத்தைத் தனது மார்போடு அழுத்திக் கொண்டு, “என்னோட ஹார்ட் என்ன சொல்லுது?” என்று கேட்கவும்,

“உங்க ஹார்ட் பீட் கேட்குது..” கிசுகிசுப்பாக அவள் சொல்ல,

“உன் பேரைச் சொல்லலையா?” என்று அதே போலவே கேட்க, ‘ஹ்ம்ம்..’ என்று தலையை அசைத்தவளை, மேலும் தன்னோடு புதைத்துக் கொண்டான்.

“உன்னை ஹர்ட் பண்ணி இருந்தா சாரிடா சிட்டு.. அந்த நேரம் நான் அப்படி ஏதோ இதுல கூப்பிட்டேன்..” என்றவன், அவளது தலை மீது தனது கன்னத்தைப் பதித்துக் கொண்டே அவளிடம் மன்னிப்பு வேண்ட, அவனது இடுப்பைக் கட்டிக் கொண்டவள்,

“நான் தான் சாரி சொல்லணும் கண்ணா.. இனிமே அப்படி செய்ய மாட்டேன்..” என்றவளை, அப்படியே தன்னோடு இருக்கியப்படி தூக்கிக் கொண்டவன்,

“என் குட்டி அழகு பொட்டலமே.. உன்னை இப்படியே தூக்கிட்டு சுத்த ஆசையா இருக்கு.. சீக்கிரம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லு.. ரொம்ப நாள் என்னை வெயிட் பண்ண வைக்காதே..” கிசுகிசுப்பாகச் சொல்லவும், அந்த பார்வையிலும், அவனது குரலிலும் முகம் சிவக்க, அவனது தோளில் முகம் புதைத்து, அவனது கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள்.    

“சிட்டு.. என்ன பதில் சொல்ல மாட்டேங்கிற?” அவளது கன்னத்தில் இதழ் பதித்துக் கொண்டே அவன் கேட்க,

“சொல்றேன்.. சீக்கிரமா சொல்றேன்.. இப்போ கீழ இறக்கி விடுங்க.. ரொம்ப நேரம் ஆச்சுன்னா அம்மா தப்பா நினைக்கப் போறாங்க..” என்றவளை கீழே இறக்கி விட்டவன், அவளது நெற்றியில் மீண்டும் அழுந்த முத்தமிட்டு,  

குறும்பாகச் சிரித்து, “வா.. அம்மாகிட்ட காட்டிட்டு வரலாம்..” என்று அழைக்க, அவனது விரலுடன் விரல் கோர்த்துக் கொண்டவள், அர்ஜுனுடன் நிர்மலாவைக் காணச் சென்றாள்.              

அவனைக் கண்டவர், “ரொம்ப அழகா இருக்கு கண்ணம்மா..” என்றபடி, அர்ஜுனின் கன்னத்தைத் தட்டிவிட்டு,

“என் மருமக ரசிச்சு செஞ்சு இருக்காடா..” என்றவர், இருவரையும் மனநிறைவுடன் பார்த்தார்.

நாட்கள் அதன் ஓட்டத்தில் அழகாக சென்றுக் கொண்டிருக்க, அன்று ஹோட்டலில் சிவாத்மிகா பின்னால் அமர்ந்திருந்த படி எடுத்த அர்ஜுனின் புகைப்படம், வலைத்தளங்களில் வேகமாகப் பரவத் துவங்கி இருந்தது. அவனது ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சிலர் அதைக் குறிப்பிட்டுக் கேட்க, அதை மறுத்தும் கூறாமல், புன்னகையுடன் சமாளித்தான்.

ஒரு மாதத்தில் என்று இருந்த அந்த அவார்ட் விழாவும், தள்ளித் தள்ளி நான்கு மாதங்களுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நாளும் அழகாக விடிந்தது.. அவன் அந்த உடையை அணிந்து தயாராகவும், சிவாத்மிகா அவனை கண்களால் விழுங்க, அவளது அருகில் வந்தவன், “எப்படி இருக்கேன்?” என்று கேட்கவும்,

“ரொம்ப நல்லா இருக்கு..” என்றவள், தனது பர்சில் இருந்த மையை எடுத்து, அவனது காலில் வைத்துவிட, அர்ஜுன் அவளைத் திகைப்புடன் பார்க்க, அவளது செயல் புரிந்த நிர்மலா, அவளது தலையை வருடினார்.

அதற்கு மேல் நேரமாவதால், எதுவும் பேச முடியாமல், அர்ஜுன் விழாவிற்கு கிளம்ப, “அண்ணா.. நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்..” என்று அவள் சொல்லவும், வினய் கையை உயர்த்தி கட்டை விரலைக் காட்டி விட்டுச் சென்றான்.

மிகவும் கோலாகலமாகவும், பிரமாண்டமாகவும் விழா நடக்க, அந்த விழாவில் நடந்துக் கொண்டிருக்கும் பொழுதே, விதம்விதமாக வெளி வந்த அவனது புகைப்படம் மிகவும் பரபரப்பானது… அவனது உடையைப் பற்றியும், அவனது ஸ்டைலைப் பற்றியும் ரசிகர்கள் மிகவும் பாராட்டினர்..

அந்த விழாவில், சிறந்த அறிமுக நடிகர் பிரிவில், அவனது பெயர் அழைக்கப்பட, ஸ்டேஜைத் தொட்டு விட்டு அவன் மேடையேறவும், வினய் அவனை வீடியோ எடுக்கத் துவங்கினான்.

ஒரு பெரிய இயக்குனர் அந்த விருதை அவனுக்குத் தரவும், முகம் நிறைந்த புன்னகையுடன் அவன் அந்த விருதை வாங்கிக் கொள்ளவும், வினய் தனது மொபைலில் புகைப்படம் எடுத்து சிவாத்மிகாவிற்கு அனுப்ப, அதைப் பார்த்தவள் மகிழ்ந்து போனாள்.

மேடையில் அவார்ட் வாங்கி விட்டு, கரகோஷத்தைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் நன்றித் தெரிவித்துக் கொண்டிருந்தவனிடம், “சொல்லுங்க அர்ஜுன்.. இந்த அவார்ட் உங்களுக்கு கிடைச்சது எப்படி இருக்கு? எப்படி ஃபீல் பண்றீங்க?” அந்த விழாவின் தொகுப்பாளர் கேட்க,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என்னோட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது.. என்னோட முதல் படி.. ரொம்ப ஹாப்பியா இருக்கு.. வேற என்ன சொல்ல? எல்லாம் மக்களால தான்..” புன்னகையுடன் கூரியவனைப் பார்த்த தொகுப்பாளர்,

“சரி அர்ஜுன்.. இங்க உங்க ரசிகைங்க நிறைய பேருக்கு ஒரு முக்கியமான கேள்வி இருக்கு.. அதுக்கு பதில் சொல்றீங்களா?” குறும்புடன் கேட்க, அர்ஜுன் முகத்தைத் துடைத்துக் கொண்டே,

புன்னகையுடன் “கேளுங்க..” என்று சொல்லவும், அந்த ஆங்கர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

“என்னங்க ரொம்ப பீடிகை போடறீங்க? கொஞ்சம் பார்த்து கேள்வி கேளுங்க..” அர்ஜுன் சொல்ல,

“இருங்க இருங்க கேட்கறேன்.. நீங்க லவ் பத்தி என்ன நினைக்கறீங்க?” ஆங்கரின் கேள்விக்கு, அர்ஜுன் “ஏங்க?” என்று கேட்டபடி புன்னகையிலேயே சமாளிக்க முயல, ஆங்கர் விடாமல் அதிலேயே நின்றாள்.

“சிரிச்சே சமாளிக்காதீங்க அர்ஜுன்.. சொல்லுங்க.. எல்லாருமே ஆன்சர் எதிர்ப்பார்க்கறாங்க.. அங்க பாருங்க.” என்று கூட்டத்தை நோக்கி கைக் காட்டியவள், “அப்படித் தானே..” என்று கேட்க, அவர்கள் ‘எஸ்..’ என்று சத்தம் எழுப்பவும், அர்ஜுன் தலையை கோதிக் கொண்டே, சிறு நாணத்துடன் சிரித்துக் கொண்டு நின்றான்.

“சொல்லுங்க அர்ஜுன்.. சொல்லுங்க..” என்று மீண்டும் கேட்கவும்,         

“ஹ்ம்ம்.. லவ்.. அது பத்தி என்ன சொல்றது? அது ஒரு அழகான ஃபீல்ங்க.. மனசு குளுகுளுன்னு இருக்கும்.. அதை எல்லாம் டிஸ்க்ரைப் பண்ண முடியாது.. அனுபவிச்சா தான் புரியும்..” அவன் ரசித்துச் சொல்ல, ‘ஓ…’ ஆங்கர் இழுத்து கேலி செய்ய, அர்ஜுன் நாக்கைக் கடித்துக் கொண்டு நின்றான்.   

“உங்க டிரஸ் போலவே ரொம்ப அழகா உங்க லவ் பத்தியும் சொல்லிட்டீங்க..” என்று குறிப்பாக அவர் சொல்லவும், அர்ஜுனின் இதழ்களில் வெட்கம் கலந்தப் புன்னகை.        

“உங்களுக்கு எப்போ கல்யாணம்ன்னு கூட கேட்கறாங்க… அப்படித் தானே..” அந்தப் பெண் மீண்டும் பார்வையாளர்களிடம் தாவ,

“ஹாஹஹா..” என்று சிரிப்பிலேயே மழுப்பிக் கொண்டு நின்றான்.

“சிரிச்சே சமாளிக்கறீங்க..” அந்த ஆங்கர் விடாமல் நிற்க,

“அப்படி இல்லைங்க.. சமாளிக்க எல்லாம் இல்ல.. சீக்கிரம் சொல்றேன்..” என்றவனின் முகம் லேசாகச் சிவந்தது. அவனது ஒவ்வொரு அசைவும் கேமராவின் கண்கள் பதித்துக் கொள்ள, அந்த விழா நடத்துபவரின் சைட்டில் உடனுக்குடன் அது பதிவேற்றமும் ஆனது.

அதை நிர்மலாவுடன் அமர்ந்து சிவாத்மிகா பார்த்துக் கொண்டிருக்க, நிர்மலா சிவாத்மிகாவை கேலியாகப் பார்த்தார்.

அங்கு மேடையிலோ, “சரி.. சீக்கிரம் உங்க மனம் கவர் கள்ளியை எங்களுக்கு எல்லாம் வெளிய காட்டுங்க.. நாங்களும் அவங்களைப் பார்க்க வெயிட் பண்றோம்..” என்றவளைப் பார்த்து தலைக்கோதி சிரித்தவன், அதே புன்னகையுடனே நிற்க,

“சரி.. உங்க அவங்களை நினைச்சு ஒரு பாட்டு பாடுங்க..” எனவும்,

“ஹயயையோ.. நானா.. பாடறதா? ஏங்க இந்த கொலைவெறி?” அர்ஜுன் தயங்க,

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. பாருங்க உங்க ஃபான்ஸ் எல்லாம் பாடச் சொல்றாங்க.. அவங்களுக்காக ஒரு பாட்டு.. ஜஸ்ட் கிவ் எ டிரை.” அந்த ஆங்கர் விடாமல் கேட்கவும், மைக்கை கெட்டியாகப் பிடித்தவன், கண்களை மூடிக் கொண்டு,   

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்…

தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்…

கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்…

சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்…

பார்த்த முதல் நாளே…

உன்னைப் பார்த்த முதல் நாளே…

காட்சிப்பிழை போலே உணர்ந்தேன்…

காட்சிப்பிழை போலே…

என்று அவன் பாடி முடிக்க, கரகோஷம் அந்த இடத்தையே அதிரச் செய்தது..

அவன் நெஞ்சில் கை வைத்து அனைவருக்கும் நன்றித் தெரிவிக்க, “வாவ்.. சூப்பரா பாடிட்டீங்க அர்ஜுன் சார்.. இவ்வளவு சூப்பரா பாடறீங்க? ம்யூசிக் டிரெக்டர் எல்லாம் அடுத்து வரிசையா நிக்கப் போறாங்க..” எனவும்,

“ஏங்க.. ஹயயோ? பாவம் அவங்க எல்லாம்..” அவன் சிரிக்க, 

“தேங்க் யூ சோ மச் அர்ஜுன்.. நீங்க இதே போல மேன்மேலும் பல விருதுகளை வாங்க நாங்க வாழ்த்தறோம்..” என்று சொல்லவும், நன்றி தெரிவித்துவிட்டு அவன் மேடையை விட்டு இறங்க, அதே பாடல் பின்னால் ஒலிக்கவும், அர்ஜுன் தலையை கோதிக் கொண்டே, வந்து தனது இருக்கையில் அமர, அதை படம் பிடித்துக் கொண்டிருந்த வினய், அர்ஜுனைப் பார்த்து சிரிக்கத் துவங்கினான்.

“என்னடா ஏதோ சுமாரா பாடினேனா?” என்று கேட்க, போனை நீட்டியவன்,

“அவளுக்கு வீடியோ எடுத்து அனுப்பிட்டேன்.. அவளையே கேட்டுக்கோ.. ஆனாலும் எப்படி மச்சான் கரக்ட் லைன்ஸ் பிடிச்சு பாடற?” என்றபடி போனைக் கொடுக்கவும்,

“அதெல்லாம் தானா வருது..” என்றவன், மெசேஜ் செய்து சிவாத்மிகாவிடம் பேசத் துவங்கினான்.                

“கங்க்ராட்ஸ் கண்ணா.. இது போல நிறையா அவார்ட் வாங்கணும்.. பார்க்கவே ரொம்ப ஹாப்பியா இருக்கு..” வாழ்த்தி மெசேஜ் அனுப்பி இருக்க, அதைப் பார்த்தவன் அவளுக்கு லவ் ஸ்மைலியை அனுப்ப, பதிலுக்கு அவளும் அனுப்ப, அவனது இதழில் புன்னகை.. அவன் மொபைலைப் பார்த்து, சிரித்துக்கொண்டிருந்த புகைப்படமும் வைரல் ஆனது..

அன்றைய விழா முடிந்ததும், வினய், அர்ஜுனின் புகைப்படங்களை அவனது தளத்தில் பதிவிட்டு, ‘எலகன்ஸ் வித் ஸ்டைல்’ என்று சிவாத்மிகாவையும் குறிப்பிட்டு இருக்க, அந்த பதிவிற்குக் கீழே சிவாத்மிகா தனது கமண்டை பதிவு செய்தாள்.

அவளது பிசினஸ் அக்கவுன்ட், ஆத்மிகாவின் பெயரில் இருந்து, ஹார்ட் எமொஜி போட்டு இருக்கவும், அதுவும் பேசுபொருளாக சோசியல் மீடியாவில் வேகமாக பரவத் துவங்கியது..

நாட்கள் இருவரின் அன்பையும், புரிதலிலும் அழகாக நகர, சிவாத்மிகா, அர்ஜுனின் அருகாமையில் பாதுகாப்பாக உணரத் துவங்கி இருந்தாள். வாழ்க்கையின் அழகான பக்கங்களை அர்ஜுன் அவளுக்கு ஒவ்வொரு செயலிலும் காட்டாத் துவங்கி இருந்தான்..       

அன்று பட ஷூட்டிங் நடந்துக் கொண்டிருக்க, அர்ஜுனுக்கு சிவாத்மிகாவிடம் இருந்து விடாமல் கால் வரவும், ஷூட்டிங்கின் இடைவேளையில் இருந்தவன், அதை எடுத்து காதிருக்கு கொடுத்து, “என்னம்மா? என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க,

“அர்ஜுன்.. திடீர்ன்னு வக்கீல் அங்கிள் போன் செய்து, உடனே வர சொல்லிச் சொல்றார்.. அப்பா என்னை மீட் பண்ணி பேசணும்ன்னு சொன்னாராம்.. இதுவரை அவர் இது போல எதுவும் சொன்னதே இல்ல.. திடீர்ன்னு என்னன்னு எனக்குத் தெரியல.. என் கூட உங்களால வர முடியுமா? நீங்க எப்போ ஃப்ரீ ஆவீங்க? நான் அந்த டைம் வரேன்னு சொல்லிடறேன்.. எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு..” போனில் சிவா கேட்க,

“அப்படியா.. என்னாச்சு? திடீர்ன்னு என்னவாம் அவருக்கு? நான் லஞ்ச் டைம்ல வரவா? மதியம் ஒரு ரெண்டு மணி போல வரோம்ன்னு சொல்லிடு… இடம் சொல்லு..” என்று அவளிடம் இடத்தைக் கேட்டு தெரிந்துக் கொண்டவன்,

“அப்போ இங்க எனக்கு பக்கம் தான்.. நீ இங்க வந்துடு.. நாம சேர்ந்தே போகலாம்.. நீ எதுவும் கவலைப்படாதே.. எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. என்ன? நான் இருக்கேன் உனக்கு.. தைரியமா இருடா.. சேர்ந்தே சமாளிப்போம்.. தைரியமா இருக்கியா?” அவளுக்குத் தேறுதல் சொல்லியபடி அவன் கேட்க,

“ஹ்ம்ம்.. இருக்கேன் அஜ்ஜு.. நீங்க தான் என் தைரியம்.. அதுக்கு தான் கால் பண்ணினேன்.. நான் ஒன்றை மணிக்கு வரேன்..” என்றவள், போனை வைக்க, அர்ஜுன் தலையை நீவிக் கொள்ள, வினய் கேள்வியாகப் பார்க்கவும், சிவாத்மிகா கால் செய்த விஷயத்தைச் சொல்ல, வினய்யும், திடீரென்ற அவரது அழைப்பில் குழம்பிப் போனான்.