எந்நாளும் தீரா காதலாக – 20

05c263aa3cac693eb375dff699483a27-94872cd0

 💝 💝20   

ஷூட்டிங் ஸ்பாட்டில் மதிய இடைவேளை விட்டதும், அர்ஜுன், டைரக்டரிடம் சொல்லிவிட்டு, சிவாத்மிகாவிற்காக காத்திருக்க, “நானும் கூட வரவா அர்ஜுன்.. ஏதாவது பிரச்சனை பண்ணினா என்ன செய்யறது?” வினய் கேட்க,

“பெரிய பிரச்சனையா இருக்காதுன்னு நினைக்கிறேன் வினய்.. எனக்கு ஒரு கெஸ் இருக்கு பார்க்கலாம்..” அர்ஜுன் சொல்லவும், வினய் கேள்வியாகப் பார்த்தான்.

“என்னடா சொல்ற?” வினய் கேட்கவும்,

“என்னைப் பத்தியா கூட இருக்கலாம்.. ஏன்னா இப்போ ஹாட் டாப்பிக் எங்களைப் பத்தி தான் எங்க பார்த்தாலும் போகுதுல்ல.. ஆனா.. அதைப் பத்திப் பேச முதல்ல அவருக்கு அவளைப் பத்தி தெரிஞ்சு இருக்கணும்.. அவளை யாருன்னே தெரியாத பொழுது அவருக்கு அதைப் பத்தின அக்கறை இருக்குமா என்ன? ஒருவேளை வீட்டைப் பத்தின்னா.. நான் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடறேன்..” தனது முடிவை சொல்லவும், வினய் அவனது தோளைத் தட்டினான்.

“நீ எதுவும் அவசரப்பட்டு பேசாதே அர்ஜுன்.. அவளைப் பேச விடு.. என்ன தான் நடக்குதுன்னு பாரு.. ஒருவேளை அவளுக்கு பதில் சொல்ல முடியலன்னா.. இல்ல.. நிலைமை கை மீறிப் போனா நீ டிசைட் பண்ணு.. நாம பார்த்துக்கலாம்.. அந்த வீட்டை காலி பண்ணச் சொல்லி சொன்னா கூட.. நீ சொல்றது போல அவளைக் கூட்டிட்டு வந்திடு.. நம்ம வீட்ல அவங்க இருக்கட்டும்.. அதுக்கும் மேல அம்மாவை விட்டு அவகிட்ட பேசி, மேல நடக்க வேண்டியத நாம பார்த்துக்கலாம்..” வினய், அர்ஜுனுக்கு யோசனை சொல்ல, அதே நேரம் சிவாத்மிகா வந்து சேர்ந்தாள்.

அவளது முகம் கவலையைக் காட்டவும், “என்னடா சிட்டு. சாப்பிட்டியா?” அவளது முகத்தைப் பார்த்து அர்ஜுன் இதமாகக் கேட்கவும்,

“ஹ்ம்ம். கொஞ்சமா சாப்பிட்டேன்.. நீங்க?” என்று கேட்க,

“சாப்பிட்டேன்டா.. நீ இந்தப் பக்கம் வா.. நான் காரை எடுக்கறேன்.. நீ ஓட்ட வேண்டாம்..” அர்ஜுன் அவள் பக்கம் செல்லவும், சிவாத்மிகா கீழே இறங்க, அங்கு ஷூட்டிங்கில் இருந்த பலரது பார்வை அவர்கள் மீது விழுந்தது..

“சிவா.. அர்ஜுனும் கூட வரான் இல்ல.. அவன் பார்த்துப்பான்.. நீ எதுவும் கவலைப்படாதே.. எதா இருந்தாலும் தைரியமா பேசு.. உன்னால முடியலைன்னா அவன் பேசுவான்..” வினய் அவளுக்குத் தேறுதல் சொல்ல,

“சரிண்ணா.. பார்க்கறேன்.. இப்போ என்ன குண்டோன்னு கடுப்பா இருக்கு.. நான் பாட்டுக்கு நிம்மதியா என் வேலையைத் தானே பார்க்கறேன்..” என்றவளின் தொண்டை கரகரக்க, அவளது கையை அழுத்தியவன்,

“எதா இருந்தாலும் சமாளிச்சுக்கலாம் வா.. ஒருவேளை அந்த வீட்டை காலி பண்ணுன்னு சொன்னாலும் நாம பார்த்துக்கலாம் வா.. நம்ம வீட்டுக்கு வந்திடு.. நான் இருக்கேன் உனக்கு..” என்றவன், காரில் ஏறி அமர,

“எதா இருந்தாலும் பொறுமையா பேசு.. அர்ஜுன் இருக்கான் கவலைப்படாதே..” என்ற வினய், அவளுக்குத் தைரியம் சொல்ல, அவனிடம் தலையசைத்தவள், காரில் ஏறிக் கொள்ள, அர்ஜுன் காரை எடுத்தான்.

சிவாத்மிகாவும் அர்ஜுனும், வக்கீலின் அலுவலகத்திற்குச் சென்றனர். காரை அவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்திய அர்ஜுன், சிவாத்மிகாவின் பக்கம் திரும்பினான். தனது துப்பட்டாவை, அவள் விரலில் சுற்றிப் பிரித்துக் கொண்டிருக்க, அவளது கன்னத்தைப் பிடித்து தன் பக்கம் திருப்பியவன், “சிட்டு.. திரும்பவும் சொல்றேன்.. எதுக்கும் பயப்படாதே என்ன? நான் கூட இருக்கேன்.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்..” என்று தைரியம் சொல்ல, அவனை சட்டென்று இறுக அணைத்து கொண்டவள்,

“நீங்க தான் என் தைரியமே.. நீங்க கூட இருக்கீங்க இல்ல.. என்னைத் தனியா விட்டுடாதீங்க..” என்றவளை இறுக அணைத்துக் கொண்டவன்,

“உன்னை விட்டுட்டு நான் எங்கடி போவேன்.. நீ மட்டும் தைரியமா இரு.. நிலைமை மிஞ்சினா நான் கையில எடுத்துக்கறேன்.. என்ன?” என்றவன், அவளது கன்னத்தைக் கைகளில் தாங்கி அவளது கண்ணோடு கண் கலக்க,     

“ஹ்ம்ம்.. வாங்க பார்த்துக்கலாம்.. மிஞ்சி என்ன அந்த வீட்டைத் திருப்பி கேட்பாரா இருக்கும்.. வச்சிக்கோன்னு கொடுத்துடுவேன்..” என்று காரை விட்டு கீழே இறங்க, அர்ஜுன் அவளுடன் இறங்கிச் சென்றான்.

இருவரும் உள்ளே சென்று அந்த அலுவலகத்தின் காத்திருக்கும் இடத்தில் அமர, அங்கு ஏற்கனவே ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். அர்ஜுனும் சிவாத்மிகாவும் அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

அவர்கள் இருவரையும் நிமிர்ந்துப் பார்த்து விட்டு, மீண்டும் அவர் தனது கையில் இருந்த லாப்டாப்பில் ஆழ்ந்து போக, சிவாத்மிகா அர்ஜுனைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள்.

“அவரு யாருன்னு தெரியுதா?” அவள் கேலியாகக் கேட்க,

“என் மாமனாரா?” அர்ஜுன் கேலி செய்ய, மீண்டும் நக்கலாக உதட்டைப் பிதுக்கியவள்,

“நீங்க தான் சொல்லிக்கணும்.. பெத்த பொண்ணு கண்ணு முன்னால உட்கார்ந்து இருக்கேன்.. அவருக்கு அடையாளம் கூடத் தெரியல..” அவள் நக்கலாகச் சொல்ல, அர்ஜுன் அவளது கையை அழுத்தினான்.

“அவருக்கு நீ மாஸ்க்..” என்று அவன் தொடங்கவும்,

“உங்களுக்கு ரத்த உறவே இல்லாத உங்க ஃபேன்சே.. நீங்க மாஸ்க் போட்டு இருக்கறதையும் மீறி தான் உங்களைக் கண்டுப் பிடிக்கிறாங்க.. அது உங்க மேல அவங்க வச்சிருக்கற பாசம்.. இங்க ஒண்ணுமே இல்ல.. பெத்த பொண்ணு கண்ணு முன்னால உட்கார்ந்து இருக்கேன்.. அது கூடத் தெரியாம உட்கார்ந்து இருக்காங்க.. பேசிக்கா அன்பு வேணும்..” அவளது பதிலில் அர்ஜுன் பதில் பேச முடியாமல் மௌனித்தான்.

அவனும் வேறு என்ன தான் சொல்வான்.. நிமிர்ந்துப் பார்த்த அந்த மனிதர், சிறிது கூட அவளை அடையாமல் காணாமல், ஏன் தெரிந்தது போல கூடக் காட்டிக் கொள்ளாமல், குனிந்துக் கொண்டது அவனுக்கும் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது.. ‘என்ன தந்தை இவர்?’ என்ற எண்ணம் எழவே செய்தது.. என்னத் தடுத்தும் பள்ளியில் இருந்து வெளியில் வரும் தன்னை  தூரத்திலேயே அடையாளம் கண்டு கையசைக்கும் அவனது தந்தை நினைவில் வரவே செய்தார். 

இருவரும் வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்கவும், நிமிர்ந்துப் பார்த்த பெரியவர், “டைவர்ஸ்க்கா வந்திருக்கீங்க?” என்று கேட்க,

“இல்ல.. கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கோம்..” சிவாத்மிகாவின் நக்கலான பதிலில் அர்ஜுன் சிவாத்மிகாவைப் பார்க்க, அவள் வேண்டுமென்றே, அவனது கையைச் சுற்றி கட்டிக் கொண்டவள், அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

தோளைக் குலுக்கிவிட்டு, மீண்டும் அவர் தனது வேலையில் மூழ்க, “உனக்கு கொழுப்பு இருக்குப் பாரு..” என்ற அர்ஜுன், சிவாத்மிகாவின் கையைக் கிள்ளிவிட்டு,

“இப்போ நான் என்ன பண்றேன் பாரு..” என்றவன், தனது மாஸ்க்கை முகத்தில் இருந்து அகற்றிவிட, சிவாத்மிகா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“நீங்க எனக்கு மேல இருக்கீங்க..” என்றவள், தனது தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.

தனது லாப்டாப்பில் இருந்து விழிகளை உயர்த்தியவரின் பார்வை, இப்பொழுது அர்ஜுனை கூர்மையுடன் அளவிட்டது.. அவரது பார்வையைக் கண்டுக் கொண்ட சிவாத்மிகா, “உங்களை கண்டுப்பிடிச்சிட்டார் போல உங்க மாமனார்.. பெரிய ஆளு தான் கண்ணா நீங்க.. மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் செம வேவ்லென்த்..” என்று கேலி செய்ய,

“நீ சும்மா இரு.. ரொம்ப வேவ்லென்த் தான்..” என்று அவளை அடக்கியவன்,

“வினய் அதுக்குள்ள என்னாச்சுன்னு கேட்டு மெசேஜ் அனுப்பிட்டான்..” என்றபடி தனது மொபைலைப் பார்க்க, சிவாத்மிகா அவன் வினய்க்கு அனுப்பும் பதிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரின் நெருக்கத்தையும் பார்த்த அவளது தந்தை, தனது லாப்டாப்பை மூடி, தனது பையில் வைத்துவிட்டு, இருவரையும் பார்க்க, தனது மாஸ்கையும் அகற்றிய சிவாத்மிகா, அவரை ஏளனமாகப் பார்த்தாள்.

“நீங்க ஆக்டர் அர்ஜுன் ஏகாம்பரம் தானே..” அவரது முதல் கேள்வி, அர்ஜுனிடம் பாய,

“எஸ் சார்.. என் பேர் அர்ஜுன் ஏகாம்பரம் தான்..” என்ற அர்ஜுன், அவருக்கு கைக் கொடுப்பதற்கு கையை நீட்ட, அதைத் தவிர்த்தவர்,

“நீ.. நீ..” என்று அவர் சிவாத்மிகாவைப் பார்க்க, அர்ஜுனின் கையைப் பிடித்துக் கொண்டவள்,

“நான் சிவாத்மிகா தான்.. அர்ஜுனோட ஃபியான்சி..” என்றவள்,

அர்ஜுனின் பக்கம் திரும்பி, “பேசிக் மேனர்ஸ் தெரியாதவங்க கிட்ட போய் நீங்க உங்க கையை நீட்டிட்டு இருக்கீங்க.. கொரோனா காலம் வேற..  நியூஸ்ல எல்லாம் கையைக் கொடுக்காதீங்கன்னு எவ்வளவு சொன்னாலும் உங்களுக்குப் புரியவே புரியாதா?” அர்ஜுனைக் கடிந்துக் கொண்டு, அவனைப் பிடித்து அமர வைக்க, அவளது தந்தை அவளை முறைத்தார்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” அவர் நேரிடையாக அவள் மீது பாய, அந்த நேரம் அங்கு வந்த வக்கீல் ஜார்ஜ், இருவரையும் பார்த்துவிட்டு,

“கொஞ்சம் நீங்க உள்ள வரீங்களா? இங்கயே பேசணுமா கேசவன்?” என்று கேட்டவர்,

“ஹலோ மிஸ்டர் அர்ஜுன்.. நான் ஜார்ஜ் மார்த்தாண்டம்.. லாயர்.. சிவாத்மிகாவோட விஷயங்கள் எல்லாம் நான் தான் பார்த்துக்கறேன்..” என்று அவர் தன்னையே அறிமுகப்படுத்திக் கொண்டு கை நீட்ட,

பதிலுக்கு சிவாத்மிகாவைப் பார்த்தபடியே அவரிடம் கையை நீட்டியவன், “நான் அர்ஜுன் ஏகாம்பரம்.. ஆக்டர்.. சிவாத்மிகாவோட ஃபியான்சி.. கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.” அர்ஜுன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, அவனது கூற்று எதற்கு என்று புரிந்தது போல அவர் புன்னகை புரிந்தார்.           

“அது எல்லாம் நடக்காது.. அவன் ஒரு நடிகன்.. நீ ஒரு நடிகனை கல்யாணம்  பண்ணிக்க நான் சம்மதிக்க மாட்டேன்.. அவங்க எல்லாம் யூஸ் பண்ணிட்டு அப்படியே விட்டுட்டு போயிடுவாங்க..” அவளது தந்தை கேசவன் சத்தமிட,

“அதைச் சொல்ல நீங்க யாரு?” சிவாத்மிகா கோபமாகக் கேட்டாள்.

“நான் உன்னைப் பெத்தவன்..” அவர் சொல்லி முடிப்பதற்குள்,

“ஹா.. பெத்தவரா? ரொம்ப காமடியா இல்ல இருக்கு.. பெத்த பொண்ணை அடையாளம் தெரியாம உட்கார்ந்து இருப்பாராம்.. இதுல பெத்தவர்ன்னு வாய் கூசாம சொல்றார்.. வெளிய போய் சொல்லிடாதீங்க.. கைக் கொட்டி சிரிப்பாங்க..” அவளது குரலில், நக்கலும், நையாண்டியும், கோபமும் வழிய, அவளது குரல் நடுங்கியது..

அர்ஜுன் மெல்ல அங்கிருந்து நகர முயல, அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு, “நீங்க இங்க இருங்க.. எங்கப் போறீங்க?” என்று அவனை அதட்டியவள்,

கேசவன் பக்கம் திரும்பி, “இல்ல.. பெத்தவரா இவர் எனக்கு என்ன செஞ்சாருன்னு, நான் இவர் பேச்சைக் கேட்கணும்? தெரியாம தான் கேட்கறேன்.. ஒரு குழந்தை இருக்குன்னு பார்க்காம இவரோட மாஜி பொண்டாட்டி இவரை விட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிப்பாங்களாம்.. கேட்டா அது அவங்க இஷ்டம் அவங்க வாழ்க்கையாம்..  

அந்த வயசுல ஒரு குழந்தையை வச்சிக்கிட்டு, கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு இருக்கறவன் கிட்ட டைவர்ஸ் வாங்கிட்டு அந்த அம்மாவுக்கு இஷ்டப்பட்டவன் கூட போக முடியற பொழுது.. எனக்கு இருபத்தி ஆறு வயசாகுது.. அதுவும் இன்னைய வரை தனிச்சு தனிமரமா தான் நான் இருந்திருக்கேன்.. ஒரு அநாதையா.. அப்போ எனக்கு என் வாழ்க்கையை தீர்மானிச்சுக்க முடியாதா என்ன? இல்ல கூடாதா? இல்ல எனக்கு அந்த உரிமை இல்லையா?” அவளது வார்த்தைகள் கூரம்புகளாக விழ, அவளிடம் இப்படி ஒரு பதிலை எதிர்ப்பார்க்காத கேசவன், திகைத்து அவளைப் பார்த்தார்.   

“இவரு… இவரு மட்டும் என்னவாம்.. நான் அப்படியே ஆசையை அடக்கி ஆளர தியாகியா இவரை இருக்கச் சொல்லல.. ஆனா.. என்னைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சு இருக்கலாமே.. என்னைக் கொண்டு போய் அஞ்சு வயசுல ஹாஸ்டல்ல விட்டுட்டு போனவர் தான்.. ரெண்டு வருஷத்துல தனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு போன் பண்ணிச் சொன்னவர் தான். அதோட ஒரு வார்த்தை பேசி இருப்பாரா?

அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அவர் தேடிக்கிட்டார்.. அப்போ இவரு இவரோட இஷ்டப்படி வாழலாம்.. அந்த அம்மா அவங்க இஷ்டப்படி போகலாம்.. ஏன் நான் அதைச் செய்யக் கூடாது? இவங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? போங்க.. என் கண்ணு முன்னாலயே வராதீங்க..” சீற்றத்துடன் கேட்டவள்,

“நான் ஒண்ணும் நடத்திட்டு இருந்த குடும்பத்தை பிச்சிக்கிட்டு போகல.. என்னோட மனசுக்கு பிடிச்சவர தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. அவரோட கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழப் போறேன்..” என்றவள், அர்ஜுனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு,  

“நான் இந்த உலகத்துக்கு வர காரணமான ரெண்டு பேருக்குமே, நான் ஒரு சுமையா, வேண்டாத பொருளா தான் இருந்திருக்கேன்.. பணத்தை மட்டும் அனுப்பிட்டா போதும்ன்னு ரெண்டு பேருமே இருந்தீங்க இல்ல.. இப்போவும் அப்படியே இருங்க.. உங்க பணம் எனக்கு வேண்டாம்.. இத்தனை நாளா நான் கெட்ட வழியில போனேனா? இல்ல உயிரோட இருக்கேனான்னு கூட கண்டுக்காம இருந்தவங்களுக்கு இப்போ என்ன வந்தது?

தயவு செஞ்சு அதே போலவே இருங்க.. இப்போ மட்டும் என்ன வந்திருக்கு என் மேல அப்படியே பாசம்.. போலியான பாசம்.. ஏன் நான் ஒரு குடும்பத்துல வாழக் கூடாதா? அதுக்கு எனக்கு தகுதி இல்லையா? இல்ல நான் இப்படியே தான் தனியா இருக்கணும்ன்னு நீங்க ஆசைப்ப்படறீங்களா?” அவளது குரல் கோபத்தில் கீரிச்சிட, அர்ஜுன் அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“வேண்டாம் சிட்டு விடு..” அர்ஜுன் அவளை ஆறுதல்படுத்த,

“கண்ணு முன்னால நான் உட்கார்ந்து இருக்கேன்.. என்னை இவருக்கு அடையாளமே தெரியல.. அர்ஜுன் மாஸ்க் எடுத்த உடனே அவரை அடையாளம் கண்டுப்பிடிச்சு.. என்னை நீங்க யாருன்னு கண்டுப்பிடிக்கறீங்க? அந்த அளவு தான் நான் உங்க மனசுல இருக்கேன்.. என் பொண்ணு எப்படி இருக்கான்னு ஜார்ஜ் அங்கிள் கிட்ட கேட்டு நீங்க ஒரு போட்டோவாவது பார்த்து இருக்கலாம்.. அது கூட செய்ய உங்களுக்கு தோணாத பொழுது இப்போ என்ன வந்திருக்கு உங்களுக்கு..

ஹா.. பெத்த பொண்ணை அடையாளம் தெரியாம.. டைவர்ஸ் கேஸ்க்கு வந்திருக்கீங்களான்னு கேட்கறீங்க பாருங்க.. உங்களுக்கு அந்த புத்தி தான் இருக்கும்.. ஏன் ஒரு புருஷனும் பொண்டாட்டியும் வக்கீல் ஆபீஸ்க்கு வந்தாலே அதுக்குத் தான் வருவாங்களா? எல்லாரையும் உங்களைப் போல நினைச்சிட்டீங்க போல.. நாம என்ன கலர் கண்ணாடி போட்டு பார்க்கறோமோ அப்படித் தான் தெரியும்..” என்று நக்கலாகக் மொழிந்தவள்,

“சிவா.. கொஞ்சம் கோபத்தைக் கண்ட்ரோல் பண்ணும்மா..” இப்பொழுது ஜார்ஜ் மெல்ல அவளை சமாதானப்படுத்த முயல,

“எப்படி அங்கிள் என்னை அமைதியா பேசச் சொல்றீங்க? என்னை அர்ஜுனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்ற உரிமையை இவருக்கு யாரு கொடுத்தா? இவங்களால நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு இவங்களுக்குத் தெரியுமா? பணம் மட்டும் தான் எல்லாமேவா? பணத்தை அனுப்பிட்டா எல்லாம் எனக்கு கிடைச்சிடுமா? 

உங்களுக்குத் தெரியுமா? இவரோட மாஜி பண்ணின காரியத்துல நானும் அதே போலவே இருப்பேன்னு என் காதுபட எத்தனை பேர் பேசி இருக்காங்க தெரியுமா? எத்தனை பேர் என்னை அதைச் சொல்லியே அவமானப்படுத்தி இருக்காங்க தெரியுமா? எத்தனை பேர் என்னை.. என்னை.. வப்..ப்..” அவள் சொல்லி முடிப்பதற்குள், அர்ஜுன் அவளை இழுத்து, அவளது முகத்தை தனது தோளில் புதைத்துக் கொள்ள,

“உங்களுக்கு தெரியாது அஜ்ஜு.. காலேஜ்ல ரெண்டு மூணு பேர் என்னை அப்படி கேட்டு இருக்காங்க.. முதல் வருஷம் லீவுக்கு கூட நான் ஹாஸ்டல்லையே இருக்கவும், அரசல் புரசலா விஷயம் தெரிஞ்சிக்கிட்டவங்க என் கிட்ட வந்து, ‘உங்க அம்மா அப்படியாமே.. நீ எப்படி’ன்னு கேட்டாங்க.. ‘எனக்கு உன்னைப் பிடிச்சு இருக்கு.. நாம சேர்ந்து இருக்கலாமா’ன்னு கேட்டு இருக்காங்க.. நான் அதுக்காக கோபப்பட்டா கூட அசிங்கமா பேசினவங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?” என்றவள், அவன் கண்ணைத் துடைத்து விடவும்,   

“நான் இவங்களுக்கு பிறந்த தப்பைத் தவிர, நான் செய்யாத தப்புக்கு இந்தப் பேச்சை எல்லாம் கேட்கணும்ன்னு எனக்கு என்ன இருக்கு சொல்லுங்க? அதை எல்லாம் கேட்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க.. என்னடா வாழ்க்கை.. செத்துப் போகலாம்ன்னு எவ்வளவு தடவ நினைச்சு இருக்கேன் தெரியுமா?” அவனது மார்பில் புதைந்து அழ, அர்ஜுன் தொண்டையடைக்க, அவளது தலையை வருடிக் கொடுக்க, ஜார்ஜ் கேசவனைக் குற்றப் பார்வை பார்க்க, கேசவன் அவள் சொன்னதைக் கேட்டு திகைத்து நின்றார்.

பட்டென்று அர்ஜுனின் தோளில் இருந்து நிமிர்ந்தவள், “இவரை வச்சுத் தானே என்னை அடையாளம் கண்டீங்க.. இப்போ சொல்றேன்.. இவர் தான் என் அடையாளம்.. இவர் தான் எனக்கு எல்லாமே.. என் குரலை வச்சே எனக்கு உடம்பு சரி இல்லைன்னு அவரால சொல்ல முடியும்.. அவருக்கு என் மேல அவ்வளவு அன்பு.. என்னோட முக சுணக்கத்தை கூட அவரால தாங்க முடியாது.. என் மேல உயிரையே வச்சிருக்கார்.. அவரைப் போய் என்னவோ மட்டமா பேசறது போல பேசறீங்க? நீங்க எல்லாம் செய்யாததை விடவா?” என்றவள்,

அர்ஜுனின் இடுப்பைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டு, “கூடிய சீக்கிரம் நாங்க கல்யாணம் பண்ணிக்கத் தான் போறோம்.. கண்டிப்பா சோஷியல் மீடியால எல்லாம் நியூஸ் வரும்.. அதைப் பார்த்து தப்பித் தவறி கூட கல்யாணத்துக்கு வந்துடாதீங்க.. நான் அவர் கூட சந்தோஷமா கடைசி வரைக்கும் வாழ ஆசைப் படறேன்.. உங்க முகத்தை எல்லாம் பார்த்தா அது உருப்படாது..” என்றவளை, அர்ஜுன் தோளோடு அணைத்துக் கொள்ள,

“உங்களுக்கு எல்லாம் என்னைப் பத்தியோ, என் வாழ்க்கையைப் பத்தியோ, நான் என்ன செய்யணும்ன்னு சொல்றதுக்கோ எதுக்குமோ உங்க ரெண்டு பேருக்குமே தகுதி இல்ல.. இத்தனை நேரம் நான் ஒரு ப்ராஸ்..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“ஹேய்..” என்று அர்ஜுன் அவளை அடக்கினான். 

“அப்படி போயிருந்தா கூட என்னை அடையாளம் தெரிஞ்சு இருக்காது அர்ஜுன் அவருக்கு.. அப்படி போயிருந்தா கூட அவர் கண்டுக்கிட்டு இருக்க மாட்டார் போல.. இப்போ நான் நல்ல வாழ்க்கை வாழப் போறேன்னு அதைத் தடுக்க வந்துட்டார்.. நான் பேசறதை எல்லாம் கேட்டுட்டு மரம் மாதிரி நிக்கறார் பாருங்க.. இவரை எல்லாம்..” என்று வெறுப்புடன் பேசியவள், அதே வெறுப்பு உமிழும் விழிகளால் அவரைப் பார்த்துவிட்டு,

“பணத்தை அனுப்பிட்டா எல்லாமே எனக்கு நடந்திரும் இல்ல.. அந்த சின்ன வயசுல.. ஏன் என்னை யாருமே கூட்டிட்டு போகலைன்னு ஏங்கி, தவிச்சு, என்னை யாருக்குமே பிடிக்கலைன்னு அழுது இருக்கேன் அர்ஜுன்.. அது எல்லாம் யாரால? இவரும்.. இவரோட மாஜி பொண்டாட்டியாலையும் தானே.. அந்த வயசுல என்னை அநாதையா நிக்க வச்சது எது? இவங்க விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைச்சுக்கிட்டதுனால தானே. இப்போ என் வாழ்க்கையை தீர்மானிக்க இவர் யாரு? போகச் சொல்லுங்க.. போய் அவரோட பொண்ணை இப்படி அடக்கி வைக்கச் சொல்லுங்க.. என்கிட்டே அதெல்லாம் வேண்டாம்..

இவருக்கு, இவரோட குடும்பமும், இவரோட பிள்ளைங்களும் தானே முக்கியம்.. அவரோட தோள்ள தொங்கிட்டு அவரோட பொண்ணு போட்டோ போடும் போது எல்லாம் எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதே போல அவரோட பையன் உரிமையா அவர் கூட விளையாடிக்கிட்டே போடற போட்டோ பார்க்கும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? அந்தக் குடும்பத்துக்காக தானே என்னை அப்படியே விட்டுட்டு போனார்.. இப்போவும் அப்படியே போகச் சொல்லுங்க.. இப்போ என்ன வந்திருக்கு அவருக்கு..” என்று அவள் கேட்கக் கேட்க, கேசவன் அதிர்ச்சியில் நின்றுக் கொண்டிருந்தார்.

தனக்கு ஒரு பெண், மற்றும் ஆண்.. இருப்பது வரை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதே அவருக்கு அதிர்ச்சியாக இருக்க, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், “உங்களுக்கும் சரி.. உங்க மாஜி பொண்டாட்டிக்கும் சரி.. என்னை இது செய்.. அது செய்யாதேன்னு சொல்ற உரிமை இல்ல.. நீங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் எனக்கு ஹெல்ப் பண்ற ஒரு வாலண்டியர்.. அவ்வளவு தான்..” என்றவள்,

“ஆமா.. என்னைத் தான் அடையாளம் தெரியலையே.. அப்பறம் எப்படி நான் தான் அர்ஜுன் கூட பேசப்படற பொண்ணுன்னு கண்டுப்பிடிச்சீங்க? எப்படி? எனக்குப் புரியலையே..” நக்கலாக அவள் கேட்க, அர்ஜுனும் அதே கேள்வியைத் தாங்கி அவரைப் பார்த்தான்.

“அது அவரோட பொண்ணு அர்ஜுனோட ஃபேன் போல.. அவரோட பையனுக்கும் அர்ஜுனைப் பிடிக்கும் போல.. அப்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி.. அப்பறம் சோஷியல் மீடியால எல்லாம் வர விஷயங்களைப் பார்த்து, நேத்து சாப்பிடும்போது அவங்க பொண்ணு, பையன்கிட்ட சொல்லி இருக்கா..” ஜார்ஜ் விளக்கம் சொல்ல,

“என்னன்னு?” ஏளனமாக அவள் கேட்க,

“அது அர்ஜுன் வந்து ஒரு பேஷன் டிசைனர் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கார் போல.. அன்னைக்கு அந்த அவார்ட் பங்ஷன்ல அந்த ஆங்கர் டிரஸ் போலவே அழகா இருக்கு உங்க லவ்ன்னு சொன்னது.. அப்பறம் அர்ஜுனோட போட்டோக்கு ஆத்மிகா ஹார்ட் போட்டது எல்லாம் சொல்லி.. ‘ஆத்மிகா அர்ஜுன்.. பேர் நல்லா இருக்கு இல்லடா’ன்னு பையன் கிட்ட கேட்டா..

அதுக்கு அவன்.. ‘ஆமா.. ஆத்மிகா பேஷன்ஸ்ல இதுவரை அவங்க எந்த ஜென்ட்ஸ்க்கும் டிசைன் பண்ணினது இல்லையாம்.. இவருக்கு தான் பண்ணி இருக்காங்க’ன்னு சொன்னான்.. ‘அர்ஜுன்க்கு எப்பவுமே டிசைன் பண்றவர் பேர் வினய்.. இந்த டைம் தான் இவங்க புதுசா செஞ்சிருக்காங்க.. அப்போ இது அது தானே’ன்னு கேட்டான்..

அதோட ‘பொண்ணும் நல்லா இருக்காங்க.. ஜோடி அழகா இருக்குன்னு சொன்னான்..’” தயக்கத்துடன் கேசவன் பதில் சொல்ல, அர்ஜுன் அவரை விளங்காத பார்வை பார்த்துக் கொண்டிருக்க, சிவாத்மிகா அர்ஜுனை நிமிர்ந்துப் பார்த்தாள்.     

“என்னடா சிட்டு?” அர்ஜுன் அவளது பார்வை தன் மேல் விழவும், உடனே கேசவனின் மீதிருந்த பார்வையை அவளிடம் திருப்பிக் கேட்க,

“இப்போ உங்க பர்த்டே வருது இல்ல.. அன்னைக்கு நம்ம, அம்மாகிட்ட சொல்லி நாள் பார்த்து மேரேஜ் டேட் அனவுன்ஸ் பண்ணிடலாம்.. நீங்களும் ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தீங்க இல்ல.. இப்போ சொல்றேன்.. நீங்க அம்மாகிட்ட பேசி.. நாள் பார்க்கச் சொல்லுங்க.. நம்ம கல்யாணத்தை சிறப்பா நடத்தலாம்..” அவளது குரலில் உறுதி தெரிய, ஜார்ஜ் கேசவனைப் பார்க்க, கேசவன் கையாலாகத்தனத்துடன், கூனிக்குறுகி நின்றார்.          

“ரொம்ப நேரம் நீங்க இங்க இருக்க வேண்டாம்.. உங்க பொண்டாட்டி உங்களைக் கோவிச்சுக்கப் போறாங்க.. உங்க பிள்ளைங்க எல்லாம் உங்களோட மாஜிக்கு பிறந்த பொண்ணைப் பார்க்கப் போனது தெரிஞ்சா அசிங்கமா நினைக்கப் போறாங்க.. ஹயய்யோ.. என்னால உங்களுக்குக் கெட்ட பேர் வேண்டாம் சாமி.. உங்களோட சங்காத்தமே வேண்டாம்ன்னு தானே நான் அந்த வீட்டைக் கூட என் சக்திக்கு மீறி, காசு கொடுத்து வாங்கினேன்.. இப்போ எதுக்கு நீங்க என் வாழ்க்கையில வீணா வந்து கடுப்பக் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க? தயவு செஞ்சு இத்தனை நாளா எப்படி இருந்தீங்களோ அப்படியே என்னை விட்ருங்க..” என்றவள், அர்ஜுனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே, 

“என்னோட அர்ஜுனைப் பத்தி பேச உங்களுக்கு எல்லாம் எந்தத் தகுதியும் இல்ல.. அவர் ஆக்டரா இருந்தா என்ன? இல்ல என்னன்னு கேட்கறேன்? உங்களை விட அவர் என்ன இதுல குறைஞ்சிட்டார்? அவருக்கு நான் தான் உயிரு.. எனக்கு அவர் தான் உலகம்.. அவரோட கால் தூசிக்கு நீங்க எல்லாம் ஈடாக மாட்டீங்க.. வந்துட்டார் மறுப்பு சொல்ல.. எந்த மூஞ்சியை வச்சிட்டு வராங்கன்னே தெரியல..” என்றவள், அவர்கள் முன்னிலையிலேயே எம்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள், துச்சமாக கேசவனைப் பார்த்துவிட்டு, அர்ஜுனைத் தரத் தரவென்று இழுத்துக் கொண்டு காருக்குச் செல்ல, அர்ஜுன் அவர்களைப் பார்த்துக் கொண்டே, அவளது இழுப்பிற்குச் சென்றான்.

அவளது கேள்விகள் சாட்டையாக விழ, அதில் தொய்ந்து கேசவன் அங்கிருந்த இருக்கையில் அமர, “நீங்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்க கேசவன்.. அவ மனசுல எவ்வளவு பாதிப்பு இருந்தா இப்படி எல்லாம் பேசி இருப்பா? எப்பவும் அமைதியா வந்து போற பொண்ணு.. இன்னைக்கு இப்படி பேசறதைக் கேட்க, எனக்கே அதிர்ச்சியா தான் இருக்கு.. அந்த அளவு அவ காயப்பட்டு இருக்கா..” என்றபடி தனது இருக்கையில் அமர்ந்த ஜார்ஜ், கேசவன் தலை மீது கையை வைத்துக் கொண்டு,

“எப்படி எல்லாம் பேசறா.. வார்த்தையிலயே குத்திக் கிழிக்கிறா.. அவளோடது நக்கா இல்ல சாட்டையா?” ஆற்றாமையாக அவர் கேட்க,

“இல்ல கேசவன்.. அவ வேற என்ன பேசணும்ன்னு நீங்க நினைக்கறீங்க? அப்பான்னு பாசமா கட்டிப்பிடிச்சா? நீங்க அனுப்பின பணத்துல இருந்து படிப்புக்கு தவிர, அவ எந்த பைசாவையும் எடுத்துக்கிட்டது இல்ல.. நீங்க அனுப்பின பணத்துல இருந்து பாதியும், உங்க மாஜி மனைவி அனுப்பின பணத்துல பாதியையும் எடுத்துத் தான் அவ படிச்சா.. அது ஒரு வாலண்டியர் உதவியை ஏத்துக்கறது போலத் தான் அவ வாங்கிக்கிட்டா.. அதே போல அவளோட பேசிக் செலவுக்கான பணத்தை மட்டும் தான் எடுத்துக்கிட்டா.. உங்களோட ஒவ்வொரு ரூபாய்க்குமான கணக்கும் இதோ இதுல இருக்கு…” என்ற ஜார்ஜ், அவள் கொடுத்த கணக்கு நோட்டை எடுத்து அவர் முன்பு வைத்தார்.

சிவாத்மிகாவின் இழுப்பிற்குச் சென்ற அர்ஜுன், அவள் காரின் அருகேச் செல்லவும், அவளை இறுக ஒருமுறை அணைத்து விடுவித்தவன், அவள் பேசுவதற்கு முன்பு, “ஹையோ கார் கீ அங்கயே வச்சிட்டேன்.. இதோ வரேன்..” என்றபடி, அவளை விட்டு விட்டு உள்ளே செல்லவும், தனது கையைக் கட்டிக்கொண்டு நின்ற சிவாத்மிகா, வேகமாக போகும் அவனையேப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

உள்ளே சென்ற அர்ஜுன், கேசவனிடம் நாலு வார்த்தை நன்றாக கேட்க வேண்டும் என்று நினைத்து, அவர்கள் இருந்த அறையின் கதவில் கை வைக்கவும், ஜார்ஜ் பேசியது அவனது காதில் விழுந்தது.

அந்தக் கணக்கை கேசவன் பார்த்துக் கொண்டிருக்க, “உங்களுக்கு அவ பணத்தைத் திருப்பித் தந்தது போல, அவ அம்மா அனுப்பின பணத்தை கூட கணக்குப் பார்த்து, அந்த பணம் வந்த அக்கவுன்ட்டுக்கே அனுப்பிட்டா.. ஒரு ஹேர்பின் வாங்கின காசுல இருக்கு.. அவ சானிடரி நாப்கின் வாங்கின பைசா வரை கணக்கு இருக்கு.. சந்தேகம்னா பாருங்க..” ஜார்ஜ் சொல்லவும், அர்ஜுன் அதிர்ந்து நிற்க, கேசவன் துடித்துப் போனார்.  

அவர் தலையிலேயே அடித்துக் கொள்ள, “வருஷா வருஷம் யூனிஃபார்ம் தவிர தினத் தேவைக்கான ரெண்டு செட் ட்ரெஸ் தான் அவ வாங்கி இருக்கா.. அதோட அவ காலேஜ் படிக்கும்போது எல்லாம் அவ ஒரு டிசைனர் கிட்ட வேலை செஞ்சு சம்பாதிக்க ஆரம்பிச்சதும், உங்க பணத்தைத் தொடவே இல்ல.. எந்த அளவுக்கு அவ காயப்பட்டு இருந்தா அவ அப்படி இருப்பா?

அந்த வீட்டுக்கு உங்களுக்கு பணம் கொடுக்க, அவ லோன் எடுத்துட்டு, அவ உழைக்கிற உழைப்பு எனக்குத் தெரியும்.. இப்போ இத்தனை நாளா இல்லாம நீங்க எந்த உரிமையில அவளைப் பத்தி பேசறீங்கன்னு எனக்குப் புரியல.. அவளை மீட் பண்ணி அர்ஜுனைப் பத்தி பேசனும்ன்னு தானே என்கிட்டே அவளை வரச் சொன்னீங்க? இதே உங்க பொண்ணு ஒருத்தரை லவ் பண்றேன்னு சொன்னா.. இப்படி பேசுவீங்களா என்ன?” ஜார்ஜ் கேட்க, கேசவனிடம் தான் பதில் இல்லாமல் போனது.

“அந்த அர்ஜுன் எப்படி? நல்லவனா? ஒரு நடிகன் இப்படி பலபேரோட ரூமர்ஸ் வரது.. அப்பறம் எல்லாம் முடிஞ்சு விட்டு, பிரேக்கப்ன்னு போறதுங்கறது எல்லாம் கேள்விப்படறோமே.. அவன் யாரோ? என்னவோ? எப்படிப் பட்டவனோ?” கேசவன் தயக்கத்துடன் இழுக்க,

“நீங்களே நேர்ல பார்த்தீங்களே.. அர்ஜுன் எப்படி என்னன்னு உங்களுக்கு இன்னுமா புரியல? அர்ஜுன், அவ கூட வந்து என்னை தைரியமா நேர்ல மீட் பண்றார்ன்னா அவருக்கு சிவாவை ஏமாத்தற எண்ணம் இல்லைன்னு தானே அர்த்தம்? அதோட சிவா அவரை கூட்டிட்டு வந்திருக்கான்னா, அவர் அவளுக்கு எந்த அளவு முக்கியம்ன்னு புரியலயா? ரெண்டு பேரோட அன்பையும் பார்த்துமா நீங்க அந்தக் கேள்வி கேட்கறீங்க? 

பையன் ரொம்ப நல்லப் பையன்.. அந்தப் பையன் மேல சிவாவைத் தவிர எந்த பொண்ணு கூடவும் இது போல பேச்சு வந்தது இல்ல.. ரொம்ப உழைப்பாளி.. ரொம்ப அமைதி.. அனாவசியமா ஷூட்டிங்ல எந்த பொண்ணு கூடவும் பேசினது இல்லையாம்.. ரொம்ப கண்ணியமான பையன்..” ஜார்ஜ் சொல்லிக் கொண்டிருக்க, வந்த சுவடே அறியாமல் அர்ஜுன் திரும்பி வெளியில் நடக்க, அவனது மனதிலோ ஆயிரம் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தது..

அவளது காயம், அவளது வருத்தம், அவளது தனிமை அனைத்தையும் இப்பொழுது முழுவதுமாக அவன் நேரிலேயே அறிந்துக் கொள்ள, அவள் மீதான தனது காதல் பலமடங்காக உயர்ந்தது போல அர்ஜுன் உணர்ந்தான்.

தூரத்திலேயே அவன் ரிமோட் கொண்டு காரைத் திறக்க, அவனது முகத்தைப் பார்த்த சிவத்மிகா காரில் ஏறிக் கொள்ளவும், ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தவன், அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்..

“ஐ லவ் யூ டி என் சிட்டு.. லவ் யூ டி என் தங்கமே.. லவ் யூ..” என்றபடி அவளது முகமெங்கும் அழுந்த முத்தமிட்டவன், அவளை மீண்டும் இறுக அணைத்துக் கொள்ள, கண்ணீருடன் அவனது கன்னங்களைத் தாங்கியவள்,

“என்னடா கண்ணா? என்னாச்சு?” என்று அவனது நெற்றியில் தனது நெற்றியை முட்டிக் கொண்டே கேட்க,

“உன்னை இப்போ ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்டி என் பட்டுக்குட்டி.. ரொம்ப ரொம்ப.. என்னை விட உன்னை ரொம்ப லவ் பண்றேன்டா என் சிட்டு..” என்றவன், தன்னுள்ளேயே புதைத்துக் கொள்பவன் போல அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“ஐ லவ் யூ சோ மச் அஜ்ஜு.. லவ் யூடா கண்ணா..” என்றபடி, அவனது நெற்றியில் இதழ் ஒற்றியவள்,     

“ஷூட்டிங்க்கு டைம் ஆச்சு.. வினய் அண்ணா வேற பதட்டமா இருப்பாங்க.. நாம போகலாம்.. நீங்க சாயந்திரம் அம்மாகிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசிடுங்க..” மீண்டும் அவனிடம் உறுதிப் படுத்தியவள், அவனது தோளில் சாய்ந்து, அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு நிமிர, அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு, அர்ஜுன் காரை எடுத்துக் கொண்டு, தனது படப்பிடிப்பு தளத்திற்கு சென்றான். அந்தக் காட்சியைக் கண்ட கேசவனும், ஜார்ஜும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அர்ஜுன், பார்க்கிங்கில் காரை ஒதுக்கி நிறுத்திவிட்டு, “கீழ இறங்கி வா..” என்று அழைக்க, சிவாத்மிகா அர்ஜுனை விழிகள் விரியப் பார்க்க,

“வாடி என் சிட்டு..” என்று அழைத்தவன், அவள் காரில் இருந்து இறங்கவும், அவர்களைப் பார்த்துவிட்ட வினய், அவர்கள் அருகில் வேகமாக ஓடி வர, அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு,

“வாடா மச்சான்.. நடந்துட்டே பேசலாம்..” என்றவன், கேரவன் அருகே செல்லும்வரை நடந்ததைச் சொல்ல, வினய் அர்ஜுனை குழப்பத்துடன் பார்த்தான்.

அர்ஜுன் உதட்டைப் பிதுக்கவும், “சிவாம்மா.. அது ஒண்ணும் நீ கோபத்துல எடுத்த முடிவு இல்லையே..” வினய் உறுதி செய்துக் கொள்ளக் கேட்க,

“இல்ல.. என் மனசார தான் சொல்றேன்.. எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்..” என்றவள், அர்ஜுனைப் பார்க்க, வினயும் அர்ஜுனைப் பார்க்க,

“ஏண்டா ரெண்டு பேரும் என்னைப் இப்படிப் பார்க்கறீங்க? நானும் மனசார தானே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்? என்னைப் பார்த்தா அப்படி இல்லையா?” என்று கேட்ட அர்ஜுன் சிரிக்க, மற்ற இருவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

அங்கிருந்த டைரக்டர், ஹீரோயின் அனைவரின் பார்வையும் ஆவலுடன் அர்ஜுனைப் பார்க்க, அனைவரின் அருகிலும் அவளை அழைத்துக் கொண்டு சென்றவன், “சிவாம்மா.. இவர் தான் டைரக்டர் சார்.. நான் சொன்னேன் இல்ல.. உனக்கு உடம்பு சரி இல்லாத பொழுது சொல்லிட்டு வந்தேன்னு..” சிவாத்மிகாவிற்கு அர்ஜுன் அந்த படத்தின் இயக்குனரை அறிமுகம் செய்ய,

“அர்ஜுன்.. இவங்க தான் அன்னைக்கு நீங்க சொன்ன உங்க வருங்காலமா?” அந்த இயக்குனர் அர்ஜுனை கேலி செய்ய,

“அவங்க தான் சார் என்னோட உலகமே.. என்னோட முக்காலமும் அவங்க தான்..” என்ற அர்ஜுனின் தோளை வினய் தட்ட, சிவாத்மிகா நெகிழ்ந்து அர்ஜுனைப் பார்க்க, அங்கிருந்தவர்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும், அர்ஜுன் சிவாத்மிகாவை அறிமுகம் செய்து வைக்க, சிவாத்மிகாவின் மனதில் அர்ஜுனின் மேல் அன்பு பல மடங்காகப் பெருகியது..