எந்நாளும் தீரா காதலாக – 22

941aabdc9334fbaff98585c9b7c99734-f523685f

💝💝22    

சிவாத்மிகா, மற்றும் அர்ஜுன் வந்து அமர்ந்ததும், நிர்மலாவின் முடிவிற்காக அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க, “நைட் ரெண்டு பேரும் டின்னர் சாப்பிட்டுத் தான் போகணும்.. மாணிக்கம் ரெடி செய்யறான்..” நிர்மலா சொல்லவும்,

“இல்லம்மா.. அதெல்லாம் வேண்டாம்.. நேரத்தோட போனா தான் ஏதாவது ஹோட்டல்ல ரெஸ்ட் எடுத்துட்டு, காலைல முதல் ஃப்ளைட்டுக்கே போகலாம்..” கேசவன் தயங்க,

“அப்படியே பேசிக்கிட்டே சாப்பிட்டு போகலாம் சார்.. அர்ஜுன் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போகலாமா? அதோட உங்க பொண்ணு வீடு அவ்வளவு பெருசா இருக்கும் போது எதுக்கு ஹோட்டல்ல தங்கணும்? நீங்க வந்தா உங்க பொண்ணு வேண்டாம்ன்னா சொல்லப் போறா?” நிர்மலா சாதாரணமாகச் சொல்லவும், சிவாத்மிகா அதிர்ந்து அவரைப் பார்க்க, நிர்மலாவைப் பார்த்து அர்ஜுன் இதமாகப் புன்னகைத்தான்.

“அம்மா என்ன சொல்றீங்க? நான் எப்படி அவர் கூட ஒரே வீட்ல?” நிர்மலாவிடம் அவள் முணுமுணுக்க, அவளது கேள்வி புரிந்தது போல, இதமாக அவளது கையை அழுத்தியவன், அவளது கையை எடுத்து தனது கைக்குள் பொத்திக் கொண்டான். அதில் அமைதியானவள், தலையை குனிந்துக் கொண்டு கேசவனைப் பார்க்காமல் பார்வையைத் தவிர்த்தாள்.  

அர்ஜுனின் புறம் திரும்பியவர், “சொல்லு அர்ஜுன்.. சொல்லு சிவா.. எப்போ உங்க கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாம்? உன்னோட ஷூட்டிங் கால்ஷீட்ஸ் எப்படி இருக்கு? எப்போ நீ ஃப்ரீ ஆவ? அதே போல உனக்கு ஏதாவது கமிட்மன்ட் இருக்காம்மா.. எனக்கு குறைஞ்சது ஒரு இருபது நாளாவது ரெண்டு பேரும் ரிலாக்ஸ்டா ஃப்ரீயா இருக்கணும்.. அது போல டைம் இருந்தா சொல்லுங்க..” என்று இருவரிடமும் கேட்டவர்,

“அதே போல வினய்.. உனக்கும்.. உன் ஃப்ரீ டைம் சொல்லு” என்று கேட்கவும், அந்த வீட்டில் இருந்த மூவரைத் தவிர மற்ற அனைவருமே குழப்பத்துடன் பார்க்க, புருவம் சுருங்க நிர்மலாவைப் பார்த்த ஜார்ஜ்ஜின் இதழ்கள், மெல்ல புன்னகையில் விரிந்தது..

“எனக்கு என்னம்மா? அர்ஜுன் ஃப்ரீன்னா நான் ஃப்ரீ தான். அதே போல சிவா ஃப்ரீ ஆனா.. ராதாவும் ஃப்ரீ ஆகிடுவா..” என்று கேலியாகச் சொல்லவும், ராதா அவனை முறைக்க, நிர்மலா அவனைப் பார்த்து தலையசைத்து, அர்ஜுனைப் பார்க்க, அர்ஜுன் சிவாவைப் பார்த்துவிட்டு, 

“அம்மா எங்களுக்கு ஒரு ஆறு மாசம் டைம் வேணும்.. நான் இப்போ ரெண்டு படம் சைன் பண்ணி இருக்கேன்.. அது அனேகமா ஷூட்டிங் இந்த மாசக் கடைசியில தொடங்கிடும்.. இடையிடையே மியூசிக் வீடியோ கால் ஷீட் கூட இருக்கு.. ஒருமாசம் ஹைதராபாத்க்கு ஷூட்டிங் போகணும்.. ரெண்டுமே முடிச்சு ஃப்ரீ ஆக எனக்கு அந்த ஆறு மாசம் ஆகும்.. அதே போல சிட்டுக்கும் இந்த மூணு மாசம் கொஞ்சம் பிசியா போகும்.. அவளும் ரெண்டு படத்துக்கு ஃபேஷன் டிசைனரா கமிட்ட ஆகி இருக்கா..

அதோட பெங்களூர்ல சவுத் இந்தியா பேஷன் ஈவென்ட்ல வினயும், அவளும் கலந்துக்கப் போறாங்க.. அது அவங்களோட கேரியர்ல ஒரு மைல் ஸ்டோன்.. சோ எல்லாம் முடிய அந்த ஆறு மாசம் அவளுக்கும் வேணும்.. அதனால அதுக்கு அப்பறம் நாள் பாருங்கம்மா.. நானும் சிவாவும் அடுத்து வர கால்ஷீட் அதுக்குத் தகுந்து தந்துடறோம்.. என்ன சிட்டு சொல்ற? உனக்கு ஓகே வா?” காரண காரியத்துடன் அர்ஜுன் விளக்கி, சிவாத்மிகாவைக் கேட்க, அவள் மண்டையை உருட்டி,

“எனக்கு ஓகே அஜ்ஜு.. நான் அதுக்குத் தகுந்து பார்த்துக்கறேன்..” என்று சொல்லவும், கேசவன் அர்ஜுனை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  

தனது என்று மட்டும் பார்க்காமல், அவளுக்காவும் சேர்த்து அவன் யோசித்த விதம் அவரது மனதில் நிறைவைத் தந்தது. ஜார்ஜிற்கு அதை விட, சிவாத்மிகா ஒரு நல்ல இடத்தில் வாழப் போவதை நினைத்து, முழு திருப்தியும், மனநிறைவும் எழுந்தது. அர்ஜுன் அவள் மீது காட்டும் அன்பும், அவனது காதலும் அவருக்கு மனதை நிறைத்தது.. அதே போலவே நிர்மலாவும், வினயும் அவள் மீது காட்டிய பாசத்தைப் பார்த்தவரின் பார்வை, தன்னை அறியாமையே கேசவனின் மீது படிந்து மீண்டது.         

“சிவாம்மா.. நீ போய் சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்திடு.. எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்.. நேரமாச்சு பாரு.. உனக்கும் பசிக்கும்..” சிவாத்மிகாவிடம் சொல்லவும், தலையசைத்தபடி அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே அவள் எழுந்து கொள்ள,

“அஜ்ஜூ.. நீயும் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா..” என்று அவனையும் அனுப்பவும், அர்ஜுன் அவர்களைப் பார்த்து,

“இதோ ஒரு பைவ் மினிட்ஸ்.. நான் வந்துடறேன்..” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, வேகமாக மாடிக்குச் செல்ல, நிர்மலா வினயைப் பார்த்தார்.

“சொல்லுங்கம்மா..” என்று அவன் கேட்கவும்,  

“நாளைக்கு காலையில நம்ம ஜோசியர்கிட்ட கேட்டு நாள் குறிக்கலாம் வினய்.. அப்படியே கோவிலுக்கு எல்லாருமா சேர்ந்து போயிட்டு வரலாம்.. காலையில கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்க.. அப்படியே அங்கிருந்து கூட நீங்க ஷூட்டிங்க்கு போயிக்கலாம்..” எனவும்,

“சரிம்மா.. காலையில கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு நான் கால் பண்றேன்..” வினய் ஒப்புக்கொண்டு, சமையலறை நோக்கிச் செல்ல,

“நான் நாளைக்கு நாள் பார்த்துட்டு எல்லா ஏற்பாடும் பார்த்துக்கறேன்ங்க.. மத்த ஏற்பாடு எல்லாம் பசங்க பார்த்துப்பாங்க.. அவங்க இஷ்டம் தான். கல்யாணத்தை நான் ஜாம் ஜாம்ன்னு நடத்தறேன். என் பசங்க கல்யாணம்..” கேசவனிடம் சொன்னவரின் குறிப்பு, கேசவனுக்கு புரிந்தே இருந்தது.               

“அம்மா நான் அங்க இவளுக்கு சப்பாத்தி செய்யலாம்ன்னு மாவு பிசஞ்சு வச்சிருக்கேன்.. அதைப் போய் எடுத்து உள்ள வச்சிட்டு வரேன்..” என்ற ராதா, அவசரமாக சிவாவின் பின்னோடு ஓட, அவளைப் பார்த்து சிரித்தவர்,

“என்ன உன் சண்டைக்கோழி கூட சண்டைப் போட்டு முடிக்க உனக்கு ஒரு ஆறு மாசம் போதுமாடா? நான் ரெண்டு கல்யாணத்துக்கும் தான் ஏற்பாடு செய்யப் போறேன்.. உனக்கு அவ்வளவு தான் டைம்.. அவனுக்கு மூத்தவன் உனக்கு செய்யாம, எனக்கு அஜ்ஜுவுக்கு மட்டும் செய்ய இஷ்டமில்ல.. ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து வச்சிக்கலாம்..” நிர்மலா முடிவாகச் சொல்லவும், அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டவன்,

“போதும்.. போதும்.. நான் பார்த்துக்கறேன்.. ஆனாலும்.. எனக்கு இன்னும் அவ மனசு கொஞ்சம் பிடி பட மாட்டேங்குதும்மா.. அவளுக்கு கொஞ்சம் அப்பப்போ பழைய தாக்கம் வருது.. அது போகணும்.. நீங்க அதுக்காக அஜ்ஜு சிவா கல்யாணத்தை தள்ளிப் போடாதீங்க.. நான் அவ மனசை மாத்தப் பார்க்கறேன்.. உங்கள் ஆசிர்வாதம் இருந்தா நான் எதையும் சாதிப்பேன்..” என்று வசனம் பேச, அவனது தலையை செல்லமாகத் தட்டியவர்,

“போடா அருந்த வாலு.. அவங்க கல்யாணத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னயாவது உங்க கல்யாணம் நடக்கனும்.. சொல்லிட்டேன்.. அதுக்காக அவளை எப்படி சரிக்கட்டுவியோ அது உன் பாடு..” எனவும், அவர்களது பாசப்பிணைப்பை இருவருமே நெகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.      

கேசவனுக்கு, சிவாத்மிகா தன்னை ஒரு வார்த்தை கூட வீட்டிற்கு அழைக்காதது மனதிற்குள் வலித்தது. வீட்டிற்குச் சென்ற சிவாத்மிகா, ராதா பின்னோடு வரவும், தனது பையை சோபாவில் விட்டெறிந்து, “இப்போ எதுக்கு இவர் இங்க வந்து உட்கார்ந்து இருக்கார்? யாரு இவரை இங்க வந்து எனக்கு சம்பந்தம் பேசச் சொன்னது? என்னவோ திடீர்ன்னு ரொம்ப பொறுப்பான அப்பாவா ஆகிட்டாரா? இல்ல.. இவர் வந்து பேசலைன்னா அர்ஜுனை அம்மா எனக்கு கல்யாணம் செய்து தர மாட்டாங்களா?” என்று கோபமாகக் கேட்க,

“நீ கோபப்படாதே பாப்பா.. நிர்மலாம்மா நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிறது போல கேட்டுட்டாங்க.. அவருக்கு வாயே பேச முடியல.. அதுவும் உன்னைப் பெத்தவளை மன்னிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. இப்போ கூட கல்யாணத்தை நான் ஜாம் ஜாம்ன்னு நடத்தறேன்னு சொல்லிட்டாங்க..” என்று நிர்மலா பேசியதை ராதா சொல்ல, அவரது அன்பில் சிவாத்மிகாவின் கண்கள் கலங்கியது.

அவளது கண்களைத் துடைத்தவள், “சீக்கிரம் போய் முகம் கழுவிட்டு வா.. எல்லாரும் காத்து இருப்பாங்க.. நான் போய் அவருக்கு அந்த கீழ் ரூமை ரெடி பண்றேன்.. என்ன இருந்தாலும் வயசானவர்..” என்றவள், ‘ம்ப்ச்..’ என்று சிவாத்மிகா படியேறவும், ராதா அவசரமாகச் சென்று, அந்த அறையை ஒருமுறை சரி பார்த்துவிட்டு வந்தாள்.          

உடையை மாற்றிக் கொண்டு வந்த அர்ஜுன், “வாங்க.. எல்லாரும் சாப்பிடலாம்.. நம்ம வீட்டுக்கு வந்து சாப்பிடாம போகலாமா? தயங்காம வாங்க..” என்று அனைவரையும் அழைக்க, ஜார்ஜ் மறுப்புச் சொல்லாமல் எழுந்துச் செல்ல, கேசவன் மறுக்க முடியாமல் தயக்கத்துடன் சென்று அமர்ந்தார்.

உடை மாறிக்கொண்டு சிவாத்மிகாவும் வரவும், “சிட்டு.. இங்க.” என்று தனது அருகில் இருந்த இருக்கைக்கு அர்ஜுன் அழைக்கவும், அவன் அருகே அவள் சென்று அமரவும், கேசவன் அவளை நிமிர்ந்துப் பார்த்தார்.

அமைதியாக, தலையே நிமிராமல், அவள் உண்டு முடிக்க, “என்கேஜ்மென்ட் போல ஏதாவது ப்ளான் பண்ணி இருக்கீங்களா அர்ஜுன்?” அங்கு வந்ததில் இருந்து ஜார்ஜ் முதல்முறையாக அந்தக் கேள்வியைக் கேட்க, அர்ஜுன் சிவாத்மிகாவின் முகத்தைப் பார்த்து, குறும்பாகப் புன்னகைத்தான்.  

“என்னாச்சு?” அர்ஜுனின் முகத்தைப் பார்த்து ஜார்ஜ் கேட்க,

“இல்ல.. இன்னும் இது வரை மேரேஜ் ப்ளான்ஸ்ன்னு எதுவும் பண்ணல.. ஆனா.. நாளானிக்கு சிவாவோட பர்த்டேக்கு அவளுக்கு சப்ரைஸ் ப்ளான்ஸ் நிறைய பண்ணி இருக்கேன்..” என்று அவன் சொல்லவும், சிவாத்மிகா அவனை திகைப்புடன் பார்க்க, அர்ஜுன் புன்னகையுடன் அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்..

“எப்படி? எப்படி உங்களுக்கு அது தெரியும்? எனக்கே மறந்து போன விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும் அஜ்ஜு? ஃபார்ம் பில் பண்ணறதுக்கு கூட நான் என்னோட சர்டிபிகேட்டைப் பார்த்து இருக்கேன்.. நீங்க எப்படி எங்க பார்த்தீங்க? நான் உங்ககிட்ட சொன்ன நியாபகம் எனக்கு இல்லையே..” அவளது கேள்வியில் ஒரு படபடப்பு… ஒரு வித குறுகுறுப்பு.. அதை விட, தன்னுடைய விஷயம் ஒவ்வொன்றையும் அவன் இந்த அளவு கவனித்து இருப்பதை நினைத்தவளுக்கு, அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்தது..    

அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவன், “உன்னோட பர்த்டேவை நான் எப்படிம்மா தெரிஞ்சிக்காம இருப்பேன்.. அன்னைக்கு நாம வெளிய போன போது உன்னோட பர்ஸ்ல இருந்த லைசன்ஸ்ல பார்த்தேன்..” என்ற அர்ஜுன், ஜார்சைப் பார்க்க,

“ஹையோ.. அப்போ உங்க சப்ரைச நான் உடைச்சிட்டேனா? சாரி அர்ஜுன்..” அவர் மன்னிப்பு வேண்ட,

“இல்ல இல்ல.. சப்ரைஸ் எல்லாம் இன்னும் சப்ரைசா தானே இருக்கு.. அதை மட்டும் என்ன கேட்டாலும் அன்னைக்கு அவளுக்கே அப்போ அப்போ தான் தெரியும்..” என்றவன், சிவாத்மிகாவைப் பார்க்க, சிவாத்மிகா அவனை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கண்ணா..” தொண்டையடைக்க அவனது கையை அவள் பிடித்துக் கொள்ள, அந்தக் கையில் தனது கையை வைத்து அழுத்தம் கொடுத்தவன்,  

“சிட்டு.. சாப்பிட்டு உனக்கு வேலை இருக்கு.. அதை முடிச்சிட்டு சீக்கிரம் தூங்கணும்.. நாளைக்கு வேலை எல்லாம் முடிச்சிட்டு நைட் நாம வெளிய போகப் போறோம்.. அம்மா காலையிலயே சீக்கிரம் கோவிலுக்கு போகணும்ன்னு சொல்லி இருக்காங்க.. சீக்கிரம் சாப்பிட்டு வேலையை முடி” என்றவன், அவள் கண்களை விரித்து,

“ப்ளீஸ்.. எங்கப் போகப் போறோம். அது மட்டுமாவது சொல்லுங்களேன்..” என்று கெஞ்ச,  

“ஹே.. ஹே.. நீ என்ன கண்ணைக் காட்டினாலும் சப்ரைஸ் அந்த டைம் தான் சொல்லுவேன். இப்போ சமத்தா சாப்பிடு..” என்று கொக்கி காட்ட, அவள் முகத்தைச் சுருக்கி அழகு காட்டி தலையை குனிந்துக் கொள்ள, இருவரையும் பார்த்த நிர்மலா சிரிக்கத் துவங்கினார்.

“போதும்.. ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டது.. சீக்கிரம் சாப்பிட்டு வேலையைப் பாருங்க.. நாளைக்கு எல்லாருக்கும் வேலை இருக்கு.. காலைல நான் கிளம்பும்போது நீங்களும் ரெடியா இருக்கணும் சொல்லிட்டேன்.. இல்ல உங்க வேலைக்கு போக லேட் ஆகும்..” பொய் கோபத்துடன் மிரட்டியவர், தனது உணவில் கவனமாக, சிவாத்மிகாவின் கூற்றைக் கேட்ட கேசவன் தான் நொந்தே போனார்..

அவரது மனதினில், தனது மகனும் மகளும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான உடை எடுப்பதில் இருந்து, அன்றைய தினத்தில் என்ன என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும்.. என்ன வாங்க வேண்டும் என்று திட்டமிடுவது மனக்கண்முன் விரிய, தனது தவறு இப்பொழுது கண் முன்னால் விஸ்வரூபம் எடுத்தது.

தனது உயிரில் இருந்து ஜனித்தவள்.. தானும் ஒரு ஆண்மகன் என்று  உலகிற்கு பறைச்சாற்ற வந்த சாட்சி.. தன்னை முதன்முதலாக ‘அப்பா’ என்று மழலை மொழியில் அழைத்து, தத்தித் தடுமாறி நடந்து, பொக்கை வாய்ச் சிரிப்பை உதிர்த்து, தன் மீது உரிமையாகத் தாவி ஏறி முதன்முதலில் குழந்தை முத்தத்தின் இனிமையை அறிமுகப்படுத்தியவள்..

ஆனால்.. தான் அவளுக்கு அறிமுகப்படுத்தியது என்ன?  வெறுமையும், தனிமையும், வெறுப்பையும், அவளது வாழ்வையே நரகமாக்கியது மட்டும் தானே.. தாங்கள் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்க, அவளை மட்டும் சாதாரண பாசத்திற்கு கூட ஏங்க விட்டு, இந்த உலகத்தில் அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே தனித்து நிறுத்தி இருக்கிறோம் என்ற உண்மை மண்டை மேல் அடித்து புரிய வைக்க, அதற்கு மேல் உணவும் தொண்டைக்குழியில் இறங்க மறுக்க, தட்டில் இருந்த இரண்டு பூரிக்களை உண்டு முடித்தவர்,

“எனக்கு போதும்..” என்று அவர் எழுந்துக் கொள்ள, சிவாத்மிகா அவரை நிமிர்ந்துக் கூடப் பார்க்காமல், உண்டு முடித்து எழுந்துக் கொண்டவள்,

“அம்மா.. நான் போய் வேலையை ஆரம்பிக்கிறேன்.. அண்ணா.. நீங்க சாப்பிட்டு வாங்க..” என்றவள், கைக் கழுவிக் கொண்டு வர, அவளது மனநிலை புரிந்த நிர்மலா புன்னகைக்கவும், அவரிடம் விடைப்பெற்று,

“நான் வரேன் அங்கிள்.. பை..” என்றபடி ஜார்ஜிடம் விடைப்பெற்றவள், அர்ஜுனைப் பார்த்துவிட்டு, வேகமாக வெளியேற, கேசவனின் பார்வை அவளைத் தொடர்ந்தது..

வேலை செய்ய தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள், தனது மொபைலில் பாடலில் ஓட விட்டுக் கொண்டு, அப்படியே டைனிங் டேபிளில் தலை சாய்த்துப் படுத்துக் கொள்ள, ராதாவும், வினயும்  கேசவனை அழைத்துக் கொண்டு வந்தனர்..

அவள் அப்படி படுத்திருப்பதைப் பார்த்த ராதாவின் கால்கள் வேகமாக அவளை நெருங்கி, “பாப்பா.. என்னாச்சு பாப்பா.. ஏன் இப்படி படுத்து இருக்க? தலை வலிக்குதா?” என்று கேட்க,

“இல்லைக்கா? சும்மா தான் படுத்திருக்கேன்..” என்றவள், அவர்கள் அருகில் கேசவன் வந்து நிற்கவும், ‘வாங்க..’ என்பது போல தலையசைக்க, அவர் அவளை கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டு நின்றார்.

“நீங்க படுத்துக்கோங்க சார்.. காலையில இருந்து அலைச்சலா இருக்கும்.. காலைல ஃப்ளைட்டுக்கு வேற போகணும்..” என்றவன்,

“ராதா.. எந்த ரூம் அவருக்கு?” என்று கேட்க, ராதா, கீழே இருந்த அறையைக் கைக் காட்டி,

“நான் ரூமை ரெடி பண்ணிட்டேங்க.. தண்ணியும் வச்சிட்டேன்..” ராதா பதில் சொல்ல, வினய், அவரை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குச் சென்றான்.

“குட் நைட் சார்..” என்றவன், வெளியில் வந்து, சிவாத்மிகாவிற்கு உதவி செய்யத் துவங்க, ராதா அவர்களை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்.

என்ன மறுத்தும், ஜார்ஜை வீட்டில் விடுவதற்காக அர்ஜுன் கிளம்ப, காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜுனைப் பார்த்தவர், “எப்படி இப்படி இருக்கீங்க?” என்ற கேள்வியை திடீரென்று ஜார்ஜ் கேட்க, அர்ஜுன் புரியாமல் பார்த்தான்.

“இல்ல.. புரியல.. என்ன? எப்படி இருக்கேன்?” குழப்பமாக அவன் கேட்க,

“கொஞ்சம் கூட ஒரு பேமஸ் நடிகன்னு கொஞ்சம் பந்தா இல்லாம பழகறீங்க.. நான் கால் டாக்சில போறேன்னு சொன்ன போது கூட நீங்க, விடாப்பிடியா நீங்க கூட்டிட்டு வரீங்க? இது எல்லாம் எல்லாருக்குமே வராது இல்ல..” என்று அவர் கேட்கவும், அர்ஜுன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“சார்.. நானும் மனுஷன் தானே சார்.. ஹீரோவா இருந்தா எனக்கு கொம்பு முளைச்சு இருக்கா என்ன? பந்தா பண்ணி என்னத்தை சார் நான் சாதிக்க போறேன்? என்னைப் பொறுத்த வரை மனுஷனா இருந்தா போதும்.. அது தான் கடைசி வரை கூட இருக்கப் போகுது..” அவனது பதிலைக் கேட்ட ஜார்ஜின் மனதில் அப்படி ஒரு நிறைவு.

“நீங்க சிவாவைப் பார்த்துக்கறதைப் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்தப் பொண்ணு பாவம்.. சின்ன வயசுல இருந்து அவ கஷ்டத்தை மட்டுமே பார்த்து இருக்கா.. இப்போ அவ முகத்துல சிரிப்பைப் பார்த்து எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு.. ஆமா… அவளுக்கு என்ன சப்ரைஸ் வச்சிருக்கீங்க?” என்று கேட்கவும், அர்ஜுன் அவரைப் பார்த்து கண் சிமிட்டினான்.

“அது நிறைய இருக்கு சார். தெரிய வேண்டிய சப்ரைஸ் எல்லாம் கண்டிப்பா வெளிய தெரிஞ்சிடும்.. அப்போ பார்த்துக்கோங்க..” அவள் விளையாட்டாகச் சொல்லவும்,

“அப்போ வெளிய தெரியாத சப்ரைஸ் எல்லாம் இருக்கோ?” என்று ஜார்ஜ் கண்ணடிக்க, அர்ஜுனின் இதழ்களில் புன்னகை விரிந்தது.

“இருக்கலாம்.. இல்லாமையும் போகலாம்.. அதுவும் எங்களுக்குள்ள மட்டும் தான்..” என்று அவரிடம் வம்பு வளர்க்க,

“நீங்க அவ கூட வர டாக்ஸ் எல்லாம் மறைக்கலையே.. உங்களுக்கு அது பிரச்சனை இல்லையா?” ஜார்ஜ் கேட்க,

“நான் அவளோட ஒளிஞ்சு மறைஞ்சு பழக நினைக்கலையே.. அப்பறம் ஏன் நான் எங்களைப் பத்தி வர பேச்சுக்களுக்குக் கவலைப்படணும்? அதோட.. சிவா என்னோட லைஃப். அது என்னோட பெர்சனலும் கூட..

அதுல அவங்களோட கருத்தைச் சொல்ல, எங்க அம்மாவும், வினய், சிவா தவிர யாருக்குமே உரிமையும் இல்ல.. கண்டிப்பா எங்க லைஃப்ல அவளை அம்மாவா பார்த்துக்கற ராதா அக்காவுக்கும் இடம் உண்டு.. ஏன்னா எங்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கிறவங்க அவங்க..” என்றவனது தோளில் ஜார்ஜ் நிறைவுடன் தட்டிக் கொடுக்க, அவருடன் பேசிக் கொண்டே அவரை வீட்டின் வாயிலில் விட்டுவிட்டு,

“சார்.. பார்க்கலாம்.. டேக் கேர்.. சப்ரைஸ் பார்க்க ரெடியா இருங்க..” என்ற அர்ஜுன், ஜார்ஜை விட்டுவிட்டு, வேகமாக சிவாத்மிகாவை காண வீட்டிற்கு விரைந்தான்.

சிறிது மனது சமன் படவும், அந்த டிசைனை கட் செய்து தைக்கத் துவங்கியவள், வினய் வேறொரு டிசைனை கட் பண்ணிக் கொண்டிருக்கவும், “இது அந்த ***** ஸ்கூல்க்குண்ணா.. இது ஓகே ஆகிடுச்சுன்னா.. நமக்கு நல்லா ஆர்டர்ஸ் வரும்ண்ணா… அந்த ஸ்கூல்ல நிறைய பிக் ஷாட்ஸ், செலிப்ரிட்டிஸ் பசங்க எல்லாம் படிக்கிறாங்க.. அவங்களுக்கு டிசைன் பிடிச்சதுன்னா.. இந்த ஆனிவல் டே செலப்ரேஷன்க்கே நிறைய ஆர்டர்ஸ் வரும்.. எனக்கும் ஹெல்ப் ஆகும்.. லோன் அமவுண்ட் போக, கல்யாண செலவுக்கு கொஞ்சம் பைசா எடுத்து வைக்கலாம்..” என்று அவள் சொல்ல, வினய் அவளைத் திகைப்புடன் பார்க்க, ராதா அவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.         

“என்னம்மா.. இந்த அண்ணன் இருக்கேன்மா உனக்கு.. நீ ஏன்ம்மா இவ்வளவு எல்லாம் யோசிக்கிற? உங்க கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நான் நடத்தி வைக்கிறேன்..” வினய் சிறிதும் யோசிக்காமல் பட்டென்று சொல்லவும்,

“அண்ணா.. நீங்க இருக்கீங்க தான்.. இல்லைன்னு சொல்லலை.. நீங்க தான் எனக்கு முஹுர்த்த சாரீ வாங்கித் தரப் போறீங்க.. அர்ஜுனோ அம்மாவோ கல்யாண செலவைப் பத்தி கவலைப்படப் போறதும் இல்ல.. ஆனா.. எனக்கும் அர்ஜுனுக்கு ஏதாவது வாங்கித் தரணும்ன்னு இருக்கும் இல்லண்ணா.. என்னால பெரிய அளவுல செலவு செய்ய முடியலைனாலும்.. ஏதோ என்னால முடிஞ்சதை செய்யணும்..” என்று சொல்லவும், அவளது சுயமரியாதை அதில் வெளிப்பட, வினய் தொண்டையடைக்க அவளது தலையை வருடினான். 

“செய்டா.. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். ஆனா.. இந்த அண்ணன் இருக்கேன் மறந்துடாதே..” என்றவன், மேலும் சில டிசைன்களை அவளுடன் சேர்ந்து கலந்தாலோசித்து வரையத் துவங்கி, அதையும் தயார் செய்யத் துவங்கினர்.   

அதைக் கேட்டுக் கொண்டிருந்த கேசவனின் நெஞ்சம் வலித்தது.. தான் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.. தான் நினைத்தால் அவளது திருமணத்தை ஊரே பேசும் அளவிற்கு விமரிசையாக செய்ய முடியும் என்பதும் தோன்ற, நெஞ்சம் வலிக்கத் துவங்கியது. இங்கே சிவாத்மிகாவோ, தனது திருமணத்திற்கு தானே செலவு செய்ய திட்டமிட்டு, அதற்காக தனது கூடுதல் உழைப்பைப் போடுவதைப் பற்றி யோசித்து செயல்படும் நிலையில், தானே நிறத்தி இருப்பதை நினைத்தவர், அந்த பாவத்தை எங்கு கழுவப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு, கட்டிலில் படுத்துக் கொள்ள, அவருக்கு உறக்கம் வர மறுப்பதாய்..

உறக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தவருக்கு, நெடுநேரம் வினய் மற்றும் சிவாத்மிகாவின் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தது.. எதுவோ வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அர்ஜுனின் குரலும் அவர்களுடன் இணைந்து கேட்கத் துவங்கியது. பேச்சும், சிரிப்புமாக நெடுநேரம் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது..

“ஓ மை ஸ்வீட்டு.. குட் நைட்.. மார்னிங் பார்க்கலாம்..” சிவாத்மிகாவிடம் கூறிய அர்ஜுன், அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு,

“ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என்று கூறி விடைப்பெற்று வினயைப் பார்க்க, வினய் ராதாவிடம் விடைப்பெற்றுக் கொண்டிருந்தான்..

“போய் நல்லா தூங்கு.. காலைல சீக்கிரமே எழுந்து ஒண்ணும் நீ சாதிக்க போறது இல்ல.. கோவிலுக்கு கிளம்பும் போது நேரா கிளம்பி வா.. போதும்..” என்று அவன் சொல்லவும், ராதா மண்டையை உருட்ட, அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு,

“குட் நைட் சண்டைக்கோழி..” என்ற வினய் அர்ஜுனுடன் மாடிக்கு ஏறி, அர்ஜுனின் அறை வழியாக, வீட்டின் உள்ளே செல்ல, ராதா தனது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு போகும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.