எந்நாளும் தீரா காதலாக – 24

th (4)-8085ee5c

💝💝24

யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க

நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க

நடந்து பழகும் விழுந்து அழுகும்

குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா.. ஆமா..

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்

தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா

 

பாடலைப் பாடிக் கொண்டே சிவாத்மிகா, பேஷன் ஷோவிற்கு ஒரு திருமண உடைக்கான டிசைனை வரைந்துக் கொண்டிருந்தாள். அவளது எதிரில் அமர்ந்து வேறொரு டிசைனை வரைந்துக் கொண்டிருந்த வினய், அதைக் கேட்டு, அந்த பாடலின் பொருள் புரிய, மனதில் எதுவோ பிசையத் துவங்கியது..

‘என்னாச்சு இவளுக்கு? இது வரைய ஆரம்பிக்கும்போது கூட சந்தோஷமா தானே ஆரம்பிச்சா?’ என்று நினைத்துக் கொண்டே, அவளது முகத்தை நிமிர்ந்துப் பார்க்க, அவனது எண்ணத்திற்கு நேர்மாறாக, அவளது முகமோ, கனிந்து மிருதுவாக இருந்தது.. கை தான் வரைந்துக் கொண்டிருந்ததே தவிர, அவளது எண்ணங்கள் முழுவதும் வேறெங்கோ இருப்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.. கண்களில் தான் அத்தனைக் கனவு..

Sometimes I Need Your Love

Sometimes I Need Your Hug

What Would I do Now

What Would I do Now

Sometimes I Need You

Sometimes I Feel You

What Would I do Now

What Would I do Now

இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை

அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

அவளது இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, கண்களில் கனவு மிதக்க அவள் பாடிக் கொண்டிருக்க, அமைதியாக வினய் அவளைப் படம் பிடித்து, அர்ஜுனுக்கு அனுப்பி வைத்தான்.

எக்கி அவள் வரைந்துக் கொண்டிருந்த டிசைனைப் பார்த்தவன், தனக்குள் சிரித்துக் கொண்டே, “சிவா.. இந்த டிசைன் நல்லா இருக்கா பாரேன்.. இது உனக்குப் பிடிச்சிருக்கா?” வினய் கேட்க,  அதைப் பார்த்தவள், கண்கள் விரிய, 

“வாவ்.. செமையா இருக்கு அண்ணா.. இதுல ஸ்டோன் வர்க் எல்லாம் செஞ்சா.. ரொம்ப ஃபென்டாஸ்ட்டிக்கா இருக்கும்..” அவள் ஆலோசனைச் சொல்லவும்,

“அதே தான்.. இந்த கலருக்கு உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்.. இது தான் உங்க சங்கீத் டிரஸ்.. இத நாம ஃபேஷன் ஷோக்கு ரெடி பண்ணினாலும் அது போடப் போற முதல் ஆள் நீ தான்.. ஃபேஷன் ஷோலையும் தான் சொல்றேன்.. ஏன்னா இதை உனக்கே உனக்காக தான் நான் டிசைன் பண்றேன்.. உன்னை மட்டுமே மைண்ட்ல வச்சிக்கிட்டு டிசைன் பண்ணி இருக்கற டிரஸ் இது..” வினய் சொல்லவும், சிவாத்மிகா திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

“இல்ல.. புரியல.. என்ன சொல்றீங்க?” குழப்பமாக அவள் கேட்க,

“இந்த ட்ரெஸ்சைப் போட்டுட்டு ராம்ப்ல வரப் போற ஆள் நீ தான்னு சொல்றேன்..” வினய் தீர்மானமாகச் சொல்ல, 

“என்ன விளையாடறீங்களா? நானா? மாடலாவா? அட போங்கண்ணா.. நான் சாதாரணமா நடந்தாலே விழுந்து வாருவேன்.. இதுல ராம்ப்ல வேறயா? என்னை வச்சு காமடி கீமடி பண்ணலையே..” என்றவள், முகத்தை சுருக்கி அவனை மிரட்ட,

“இல்ல.. நிஜமா சொல்றேன்.. நான் இதை உன்னை மனசுல வச்சுத் தான் வரையறேன்.. இதை நீ தான் போடற.. டாட்.. அதே போல.. உங்க கல்யாணத்துக்கு மெஹந்தி ஃபங்க்ஷன்ல நீ போட போற டிரஸ்சும் இது தான். உன் முஹுர்த்தப் புடவை எல்லாம் நான் ஒரு மாதிரி மைன்ட்ல ஸ்கெட்ச் பண்ணி வச்சிருக்கேன்.. நல்ல சிவப்பு கலர் புடவையில க்ரீன் வரது போல.. இது ஓரளவு முடிச்சிட்டு நாம அதை டிசைட் பண்ணலாம்..” வினய் சொல்லவும், அவனை இன்னமும் அவள் நம்பாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளது கன்னத்தைத் தட்டியவன்,

“நீ நம்பலைன்னா.. இந்த டிரஸ் ரெடி ஆனதும் நீ போட்டுப் பாரு.. அப்படியே நீ அதுல செமையா செட் ஆவ.. வேணா அர்ஜுனைக் கேட்கலாம். அவனும் நான் சொல்றதை தான் சொல்லுவான்..” என்ற வினய், மீண்டும் வரைவதில் கவனம் பதிக்க,

“எனக்கு மாடலிங்க் எல்லாம் தெரியாது..” அவள் அதிலேயே நிற்க,

“அதை நான் பார்த்துக்கறேன்.. அதைப் பத்தி இப்போவே போட்டு உலப்பிக்காதே.. நீ அந்த டிசைன் முடி.. நாம ஒன்ஸ் ட்ரையல் பார்க்கலாம்..” என்றவன், மீண்டும் தனது வேலையில் கவனமாக, அர்ஜுனுக்கு அழைத்து பஞ்சாயத்தைக் கூட்டுவதற்காக அவள் மொபைலை எடுக்க, அவளது செல்லில் இருந்த நோட்டிபிகேஷனைப் பார்த்தவள்,

“இவரு என்ன ஷூட்டிங் பிரேக்ல இருக்காரா?” என்றபடி, ஆவலாகத் திறக்க, அவளது கை மீது கை வைத்தபடி இருவரின் நிச்சய மோதிரமும் தெரியும்படியாக, அவளது பிறந்தநாள் கேக் தெரியும்படியாக எடுத்து இருந்த புகைப்படத்தில்,

கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க

மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க                 

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்

ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா  

நடந்து பழகும் விழுந்து அழுகும்

குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா….

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்

தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…

அவள் பாடிய பாட்டின் வரிகளையே அர்ஜுன் பதித்து இருக்கவும், வினயை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“அண்ணா.. நீங்க அவருக்கு போன் பண்ணி இருந்தீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்கவும்,

“நான் உன் முன்னால தானேம்மா இருந்தேன்.. நான் போன் பேசி நீ பார்த்தியா?” என்று அப்பாவியாகக் கேட்டவன்,

“ஏன் என்னாச்சு?” என்று ஒன்றும் தெரியாதது போலக் கேட்கவும்,

“ஒண்ணும் இல்ல.. அவரு ஸ்டோரி போட்டு இருக்காரு.. நான் பாடின பாட்டையே போட்டு இருக்கார்.. அது தான்..” என்றவள், ராதா கொண்டு வந்த டீயை எடுத்துக் கொண்டு, தான் வரைந்த டிசைனை அமைதியாக பார்த்துக் கொண்டு அமர்ந்தாள்.

தனக்குள் சிரித்துக் கொண்டவன், “எங்க நீ வரைஞ்ச டிசைனைக் காட்டு..” என்று கேட்கவும், சிவாத்மிகா தனது நோட்டைத் திருப்பிக் காட்டி,

“அண்ணா இந்த இடத்துல வேற ஏதாவது செஞ்சா நல்லா இருக்கும்.. பவழம் போல வைக்கலாமா? இந்தக் கலர்ல ரொம்ப நல்லா இருக்கும்..” அவள் கேட்கவும், அந்தக் கலரை வரைந்துப் பார்த்து,

“ரொம்ப அழகா இருக்கும் சிவா.. நீ பண்ணு.. நாம பார்த்துக்கலாம்..” என்றவன், அவனது டிசைனை அவளுக்குக் காட்டி, இருவருமாக டிஸ்கஸ் செய்துக் கொண்டிருக்க, அவர்கள் அருகில் அமர்ந்து கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராதா,

“ஏன் கல்யாண டிரஸ்ன்னா எப்போப் பாரு இது போல லெஹங்கா தான் போடணுமா? ஏன் சாரீ எல்லாம் செய்ய மாட்டேங்கிறீங்க.. அது ஏதாவது செய்ங்களேன்.. எவ்வளவோ அழகா செய்யலாமே..” என்று கேட்கவும்,

“ஹ்ம்ம்..” என்று ஒருவரின் முகத்தை ஒருவர் யோசனையுடன் பார்த்து, மீண்டும் ஒரே போலவே தலையை குனிந்துக் கொள்ள,

“என்னோட ஐடியா பிடிக்கலைன்னா சாரி.. நீங்க எல்லாம் அதையே பாடமா எடுத்து படிச்சவங்க.. நான் ஏதோ கிறுக்குத்தனமா சொல்றேன்..” வருத்தமாகச் சொல்லிக் கொண்டே, அவள் எழப் போகவும், அவளது கையைப் பிடித்து இழுத்த வினய்,

“ரொம்ப நல்லா இருக்கு ராதா.. நாங்க ட்ரை செய்யறோம்.. சும்மா உன்னை வம்பு பண்ணினோம்.. அதுக்குள்ள கோச்சிக்கிட்ட என் மகாராணி..” என்று சிரிக்க, கூடவே சேர்ந்துச் சிரித்த சிவாத்மிகா,

“செம ஐடியா அக்கா. சும்மா உங்களை வம்பு வளர்க்கறோம்.. கொஞ்சம் போர் அடிச்சது.. பொழுது போகணும் இல்ல.. அது தான்..” என்றவளை முறைத்த ராதா, இருவரையும் அடிக்கவும், சிரித்துக் கொண்டே அவளைத் தடுத்து விளையாடிய சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஃபேஷன் ஷோவிற்கான உடையை வரைந்து தயார் செய்யத் துவங்கினர்.

அவன் கட் செய்த துணியை சிவாத்மிகா, மிஷினைக் கொண்டுத் தைக்கத் துவங்க, இருவரும் அதிலேயே கவனமாக தங்களது வேலையைச் செய்தனர்.. எப்படியாவது அவர்கள் கலந்துக் கொள்ளும் அந்த ஃபேஷன் ஷோவில் வெற்றி பெற வேண்டும் என்று இருவருமே வெகுவாக உழைத்தனர்.

அர்ஜுனுக்கும் படப்பிடிப்பு துவங்கி இருக்க, காலையில் சில மணி நேரம் அர்ஜுனுடன் ஷூட்டிங்கிற்கு செல்லும் வினய், மதியத்திற்கு மேல் தனது கடையை சிவாத்மிகாவின் கடை இருக்கும் இடத்திற்கு அருகிலேயே மாற்றியபடி, அந்த பேஷன் ஷோவிற்கு தயாராகும் பணியை செய்தான்..

இருவருமே ஒன்றாக சென்று வருவதற்காக அர்ஜுன் வினயிடம் அவனது இடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் ஐடியா சொல்லிக் கேட்க, வினயும் யோசித்து, அவனது கடையை சிவாவின் பொட்டிக்கில் இருந்து ஐந்தே நிமிட பயணம் இருக்கும்படியான ஒரு இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் தனது இடத்தையும் மாற்றிக் கொண்டான். அது இந்த ஃபேஷன் ஷோவிற்கு தயாராவதற்கும் அவர்களுக்கு அந்த இட மாற்றம் வசதியாக அமைந்தது.     

அப்படி ஒருநாள், சிவாத்மிகாவின் பொட்டிக்கில், அவர்கள் வரைந்திருந்த அந்த டிசைன்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.. சிவாத்மிகா தன் மீது ஒரு உடையை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது நுழைந்த மூன்று பெண்களைப் பார்த்த சிவாத்மிகா, சிலையென நின்றாள். அவளது கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்த வினய், அவளது முகத்தைப் பார்த்துவிட்டு திரும்பிப் பார்த்தான்.

அவளது கண்கள் போன திசையைத் திரும்பிப் பார்த்த வினய், அங்கிருந்த பெண்களைப் பார்த்துக் குழம்பி, “சிவா.. என்னாச்சு?” என்று கேட்க, அந்த இருக்கையில் பட்டென்று அமர்ந்தவள், இகழ்ச்சியாகப் புன்னகைத்தாள்.

“சிவா.. என்ன ஆச்சு? கேட்கறேன் இல்ல.. யார் இவங்க?” வினய் கேட்கவும்,  அவளது முகம் உடனே வலியைக் காட்ட, வினய் குழப்பத்துடன் வந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் ப்ரியாவிடம் எதுவோ பேசிக் கொண்டிருக்க, “யாரு சிவா அது? கேட்கறேன் இல்ல சொல்லு.. அவங்களைப் பார்த்து ஏன் இப்படி உன் முகம் மாறுது..” வினய் அவளைப் பிடித்து உலுக்கவும்,

“இத்தனை வருஷம் கழிச்சு இவங்க எல்லாம் ஏன் என் கண்ணுல படறாங்க வினய் அண்ணா? முதல்ல அவரு வந்தாரு.. இப்போ இவங்க வந்து இருக்காங்க..” படபடப்புடன் கேட்க,

“உங்க அம்மா?” வினய் சந்தேகத்துடன் இழுக்க, வெறுப்புடன் தலையை அசைத்தவளின் படபடப்பு புரிய, அவளது கையை இறுக பிடித்து தட்டிக் கொடுத்தான்.

அதற்குள் உள்ளே வந்த ப்ரியா, “மேடம்… அவங்க பொண்ணுக்கு கல்யாணமாம்.. அதுக்கு அவங்க யுனிக்கா டிரஸ் டிசைன் பண்ணனும்ன்னு கேட்கறாங்க.. உங்களைப் பார்க்கணும்ன்னு சொல்றாங்க.. உள்ள வரச் சொல்லவா?” என்று கேட்கவும், சிவாத்மிகா பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், அவளைப் பார்த்த வினய்,

“வரச் சொல்லுங்க..” என்ற வினய், அவள் அவனைப் பாவமாகப் பார்க்கவும்,  

“நீ கொஞ்ச நேரம் பேசாம இரு.. நான் பார்த்துக்கறேன்..” என்றவன், அவர்கள் உள்ளே வரவும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்றான்.

“ஹாய்.. ஹவ் ஆர் யூ?” என்று வினயிடம் அவர் புன்னகையுடன் கேட்டு, அவன் பதில் சொல்லவும்,  

“ஹாய் ஆத்மிகா.. ஹவ் ஆர் யூ? உங்க டிசைன் எல்லாம் உங்க சைட்ல பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு.. அது தான் நேரா வந்தோம்..” இன்முகத்துடன் சிவாத்மிகாவின் தாய் சிவரஞ்சனி பேசிக் கொண்டே போக,

“நான் ரொ..ம்..ப நல்லா இருக்கேன்..” இழுத்து அவள் சொல்லவும், அவளது நக்கலை புரிந்துக் கொள்ளாமல்,

“ஓ.. சூப்பர்.. இப்போ நான் எதுக்கு உங்களைப் பார்க்க வந்திருக்கேன்னா.. என்னோட பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு.. அவளோட ரிசப்ஷனுக்கு ஒரு சூப்பர் டிரஸ் வேணும்.. ப்ராக் டைப்ல.. உங்கக்கிட்ட ஏதாவது டிசைன் இருந்தா காட்டுங்க.. இல்லைன்னாலும் கண்டிப்பா நீங்க தான் அவளுக்கு டிரஸ் டிசைன் செய்யணும்.. எவ்வளவு செலவானாலும் பரவால்ல.. ஆனா.. பார்க்கறவங்க எல்லாம் மூக்கு மேல விரலை வைக்கணும்..” அவர் ஆவலாக கேட்க, சிவாத்மிகா அவரையே வெறித்துக் கொண்டிருக்க,

“நிறைய மாடல்ஸ் இருக்கு.. முழுசா ஃப்ராக் டைப் வேணுமா? இல்ல முட்டி வரை இருக்கற லென்த் வேணுமா?” வினய் சிவாத்மிகாவின் மனது சமன்பட இடம் அளிக்க, வினயைப் பார்த்தவள், தனது அருகில் இருந்த டிசைன் புத்தகத்தை அவர்கள் முன்பு தள்ளி வைத்துக் கொண்டே,

“இவங்க தான் உங்க மூத்த பொண்ணா?” அவருடன் வந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணைக் காட்டி ஒரு மாதிரிக் குரலில் கேட்க,  

சிவரஞ்சனி பதில் சொல்வதற்கு முன், சிவரஞ்சனியுடன் வந்திருந்த அவரது சிறிய மகள், “ஆமா.. அக்காவுக்குத் தான் கல்யாணம்..” என்றவள்,

“ஆத்மிகா.. நீங்க தானே அர்ஜுனோட ஃபியான்சி..” என்று கேட்க, சிவாத்மிகா பதில் சொல்லாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க,

“என்னடி சொல்ற? யாரு? அர்ஜுன் ஏகாம்பரமா?” கண்கள் விரிய சிவரஞ்சனிக் கேட்க,

“ஆமாம்மா.. ஆத்மிகாவைத் தான் அவர் மேரேஜ் பண்ணிக்கப் போறார்.. அன்னைக்கு போட்டோ கூட காட்டினேனே.. அர்ஜுன் கூட கேக் முகத்துல பூசினது போல.. அப்பறம் என்கேஜ்மென்ட் ரிங் போட்டு இருக்கற மாதிரி” என்று தனது தாய்க்கு நினைவுப்படுத்தியவள்,

“அர்ஜுன் ஸ்டோரில ஷேர் பண்ணி இருந்த உங்க பர்த்டே போட்டோல நான் உங்களைப் பார்த்து இருக்கேன்.. சாரி நான் டேக்ல பேர் தான் பார்த்தேன்.. உள்ள போய் டிடைல்ஸ் பார்க்கல.. யு ஆர் சோ க்யூட் கபில்ஸ்.. கங்க்ராட்ஸ்..” அவள் படபடவென்று சொல்லி விட்டு வாழ்த்த,

“தேங்க்ஸ்..” என்றவள், வேலையிலேயே கருத்தாக தனது ஆல்பத்தைத் திறந்து, அவர்களுக்குக் காட்டத் துவங்க, அந்தப் பெண்ணிற்கு அவளைப் பார்த்ததில் இருந்த சந்தோஷத்தில், அதில் கவனம் செல்லாமல்,

“உங்களுக்கு எப்போ மேரேஜ்? உங்க மேரேஜ்க்கு நீங்களே டிரஸ் டிசைன் பண்ணிப்பீங்க இல்ல.. ஏதாவது ப்ளான் பண்ணி வச்சு இருக்கீங்களா? உங்க டிரஸ் விஷயத்துல நிறைய பிளான் பண்ணி இருப்பீங்க இல்ல..” ஆர்வமாக அவள் பேச்சை வளர்த்த,

சிவாத்மிகா மறுப்பாக தலையசைத்துக் கொண்டே வினயைப் பார்க்க, “இல்ல.. என் தங்கையோட கல்யாணத்துக்கு நான் தான் டிசைன் பண்ணப் போறேன்.. எல்லாமே சூப்பரா இருக்கும் பாருங்க.. அர்ஜுனுக்கு வெட்டிங் டிரஸ் சிவா தான் டிசைன் பண்ணப் போறா.. அவனும் இவளும் தான் பண்ணப் போறாங்க..” என்ற வினய், தனது வேலையை கவனிக்க, சிவாத்மிகா புன்னகையுடன் அந்தப் பெண்ணிடம் ஆல்பத்தை நீட்டினாள்.    

“எங்க அண்ணாவுக்கு என் மேல ரொம்ப பாசம் அதிகம்.. எங்க அப்பா அம்மா என்னை அனாதையா நட்டாத்துல விட்டுட்டு போனாலும்.. பாதியில கைக் கொடுக்க வந்த எங்க அண்ணன், என்னை எங்கயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க.. எல்லாமே செம சூப்பரா இருக்கும்.. நானே அண்ணா எனக்கு மேரேஜ்க்கு செய்யற டிசைன் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்..” சிவரஞ்சனியைப் பார்த்துக் கொண்டே வார்த்தையால் குத்தியவள், அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்க, அந்தப் பெண் சிவாத்மிகா பேசியதில் மகிழ்ச்சியுற்று, அவள் தந்த ஆல்பத்தை பார்க்கத் துவங்கினாள்.

‘அம்மா.. அப்பா நட்டாற்றில் விட்டது’ குறித்து அவள் கூறியது எதுவோ மனதை நெருட, சிவரஞ்சனி சிவாத்மிகாவின் முகத்தைப் பார்க்க,

“சிவாம்மா.. இந்த டிசைன் சரியா இருக்கான்னு பாரும்மா.. ராதா சொன்னது போல இந்த சாரீ வரஞ்சு இருக்கேன்.. நீ பார்த்துட்டு சொல்லு.. வேனும்னா நாம ஃபைன் டியூன் பண்ணிக்கலாம்..” என்றவனை திரும்பிப் பார்த்த சிவரஞ்சனி, மீண்டும் சிவாத்மிகாவை உற்றுப் பார்க்க,

அவரது பார்வையை உணர்ந்துக் கொண்டவளோ, “அண்ணா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல..” நக்கலாகச் சொல்லவும், அவளை நிமிர்ந்துப் பார்த்த சிவரஞ்சனியின் இரண்டாவது மகள்,

“ஆத்மிகா அக்கா.. உங்க அம்மா அப்பா உங்க கூட இல்லையா? விட்டுட்டு போயிட்டாங்களா?” அவளைப் பற்றி அறியும் ஆவலுடன் கேட்டு வைக்க, சிவாத்மிகா உதட்டைப் பிதுக்கினாள்.

“இல்லையே.. நான் ஒரு அநாதை.. தனியா தான் வளர்ந்தேன்..” என்றவள்,

புன்னகையுடன், “உங்க அக்கா கூட சேர்ந்து டிசைன் பாருங்க.. உங்களுக்கும் ரிசப்ஷனுக்கு சூப்பரா டிரஸ் ரெடி பண்ணிடலாம்.. அந்த கலர் கிளாத் இருந்தா உங்களுக்கு சூட் ஆகுதான்னு வச்சு ஐடியா காட்டறேன்..” என்ற சிவாத்மிகா, அவளுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக தனது கையில் இருந்த பென்சிலை உருட்டிக் கொண்டிருந்தாள்.  

அந்தப் பெண் மீண்டும் மாடல் புத்தகத்தைப் பார்க்கத் துவங்கவும், சிவரஞ்சனியின் பார்வை அடிக்கடி அவளை ஆராய்ச்சியுடன் தழுவி மீண்டது. அதைக் கண்டுக் கொண்டவளின் மனது வெறுப்பில் நிறைந்தது..

அந்த வெறுப்பில், இத்தனை நாள் அவர் மீது இருந்த கோபம் மொத்தமும் சேர, “அண்ணா நான் உங்களுக்கு ஒரு தலை சிறந்த அம்மா கதை சொல்லிட்டு இருந்தேன் இல்ல.. அந்தப் பொண்ணு அந்த பெத்தவங்களை லைஃப்ல பார்த்துடவே கூடாதுன்னு தான் நினைச்சிட்டு இருந்தா.. அந்த அளவு அவங்களை வெறுக்கறா.. அவங்க எல்லாம் அப்பா அம்மாங்கற வார்த்தைக்கு தகுதியே இல்லைங்கறது அவ நினைப்பு..” சொல்லச் சொல்ல, சிவாத்மிகாவின் குரலில் கடுப்பு ஏறத் துவங்கியது.

“அவங்களை எல்லாம் பெத்தவங்கன்னு சொல்லக் கூடாது சிவா.. அது எல்லாம் புனிதமான வார்த்தை.. நான் கொஞ்சம் வார்த்தை விடக் கூடாதுன்னு பார்க்கறேன்.. ஜிப் போட்டு என் வாயையும் மூடிக்கறேன்.” என்ற வினய்,

“மேலச் சொல்லு.. அப்பறம்?” என்று கதைக் கேட்க, சிவரஞ்சனியின் முகம் சுருங்க, அவரது முகத்தை ஒருமுறை வெறுப்புடன் பார்த்தவள்,

“அந்தப் பெண்ணை பத்து மாசம் சுமந்தவங்களுக்கு, பொண்ணையும் புருஷனையும் விட, லவ்வுன்னு வரும்போது, லவ் தான் முக்கியமா போச்சு.. மத்த ரெண்டுத்தையும் துச்சமா விட்டுட்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டாங்க..  

இந்த ரத்த பாசம்.. ரத்த பாசம்ன்னு ஒண்ணு சொல்லுவாங்களே.. அது எல்லாம் சுத்த பொய்ன்னு அந்தப் பொண்ணுக்கு வலிக்க வலிக்க சொல்லிக் கொடுத்தாங்க அவங்க.. தாய் பாசம்.. தாய் பாசம்ன்னு ஒரு வசனம் சொல்லுவாங்களே.. அப்படின்னா கிலோ என்ன விலைன்னு கேட்பாங்க போல.. அதோட அந்தப் பொண்ணு முன்னாலேயே உட்கார்ந்து இருந்தா கூட அவங்களுக்கு அடையாளம் கூடத் தெரியாதாம்.. உத்து உத்து பார்ப்பாங்களாம்.. அந்த அளவுக்கு அவங்களுக்கு அந்த பொண்ணு மேல பா..ச..ம்..” குத்தலாக சிவரஞ்சனியின் முகத்தைக் கூடப் பார்க்காது சிவாத்மிகா சொல்ல, அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சிவரஞ்சனியின் சிறிய மகள்,  

“இப்படியும் ஒரு அம்மாவா? என்ன அம்மா அவங்க.. என்னவோ சொல்லுவாங்களே.. தான் ஆடாட்டாலும் சதை ஆடும்ன்னு.. அது கூடவா இல்ல.. யாரு ஆத்மிகாக்கா அந்த பொண்ணு? அப்படியுமா இருப்பாங்க? அது எப்படி ஒருத்தர் கூட வாழும்போதே இன்னொருத்தர் மேல லவ் வரும்? அதுக்குப் பேரே வேற இல்ல?” அசூசையாக முகத்தை வைத்துக் கொண்டு இடையிட்டுக் கேட்க, சிவரஞ்சனிக்கு அவள் யார் என்று புரிந்துப் போனது. அதைவிட தனது மகளின் முகத்தைப் பார்த்தவருக்கு, தன் மீது நெருப்பை அள்ளி யாரோ கொட்டியது போல இருக்க, அந்த இடத்தில் அமர முடியாமல் தடுமாறத் துவங்கினார்.  

“என் கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணு..” அவளது பதிலைக் கேட்ட அந்தப் பெண்,

“அப்படி ஒரு அம்மாவா? சை..” எனவும், அதோடு தனது மகளே தன்னை இகழ்ச்சியாகக் கூறியது உரைக்க, சிவரஞ்சனி வேகமாக எழுந்துக் கொண்டு,

“ஏன் அவங்க பணம் கூடவா அனுப்பாம இருந்தாங்க?” என்று கோபமாகக் கேட்க, சிவாத்மிகா அவரை இகழ்ச்சியாகப் பார்க்க,

அந்தப் பெண்ணோ, “என்னம்மா பேசற? இப்போ நானே இருக்கேன்.. எனக்கு அடிக்கடி ஏதாவது கஷ்டமா இருந்தா உன்னைத் தேடத் தோணும்லம்மா.. உன்னோட மடியோ, ஹக்கோ தேவைப்படும்ல.. அந்தப் பொண்ணுக்கும் அப்படித் தானே இருக்கும்.. அப்படியே விட்டுட்டு போயிட்டு பணத்தை மட்டும் அனுப்பிட்டா என்ன அர்த்தம்?

அப்போ பணம் தான் எல்லாமேவா? அந்த மாதிரி அந்த பொண்ணு அம்மாவைத் தேடும் போது அந்த பணத்தை வச்சு என்ன செய்யறது? பணம் தலை கோதி விடுமா? இல்ல அவளுக்கு மனசுல என்ன இருக்குன்னு கேட்குமா? நல்லா இருக்கே நீங்க சொல்றது? அப்படி பணத்தை மட்டும் அனுப்பிட்டு விட்டேத்தியா இருந்தவங்களை எல்லாம் அம்மான்னு சொல்லவே கூடாது.. ஈவில்.. டெவில்..” என்றவள், சிவரஞ்சனி நெருப்பில் மேல் அமர்ந்திருப்பது போல இருக்கவும், அவரைக் கேள்வியாகப் பார்த்தவள்,  

“ஆமா.. நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க?” என்று கேள்விக் கேட்க,

“ஒண்ணும் இல்ல.. சும்மா தான்… ஏதோ நியாபகத்துல பேசிட்டேன்..” என்றவர், மீண்டும் எதுவும் சொல்ல முடியாமல் அமர்ந்தவரை ஓரக்கண்ணால் பார்த்தவளின் இதழ்கள் இகழ்ச்சியில் விரிந்தது.   

அதில் மிகவும் அடிப்பட்டவறாக சிவாத்மிகாவைப் பார்க்க, எதுவும் தெரியாதது போல, “அப்போ தான் இவ்வளவு சுயநலம் பிடிச்சவங்க கூட இருப்பாங்கன்னு எனக்கு புரிஞ்சது… நல்லவேளை இது போல மனுஷங்க கூட எல்லாம் நான் வாழலைன்னு ரொம்ப சந்தோஷப்படறேன்.. என்ன மனுஷங்கடா.. நான் ரொம்ப ப்ளஸ்ட் வினய் அண்ணா.. எனக்கு நீங்க எல்லாம் இருக்கீங்க.. எனக்கு அன்பை மட்டுமே தரவங்க.. தாங்க் காட்.. என் அஜ்ஜு எனக்கு காதலைத் தவிர எதுவும் தந்தது இல்ல.. கோழிக் குஞ்சு போல அவர் என்னை அடைக்காக்கறார்..” நெகிழ்ச்சியுடன் கூறியவள்,

“சாரி.. நான் ஏதோ கதை பேசிட்டு உங்க வெட்டிங் ஷாப்பிங்கை ஸ்பாயில் பண்றேன்.. நீங்க பாருங்க.. உங்களுக்கு இது போல டிசைன் எல்லாம் நல்லா இருக்கும்..” என்று சிலவற்றைக் காட்ட, அதைப் பார்த்துக் கொண்டிருந்த வினய், சிவாத்மிகாவைப் பார்த்துச் சிரிக்க, சிவாத்மிகாவும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“சரி சிவா.. நீ இவங்களைப் பாரு.. நான் போய் அர்ஜுனை பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு வரேன்.. அவன் வந்த உடனே நாம ட்ரையல் பார்த்துடலாம்.. ஓகேவா.. அந்தப் பொண்ணை எந்தக் கவலையும் இல்லாம பார்த்துக்கலாம்.. போனவங்களை நினைச்சு ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கனும்? தங்கத்தோட அருமை தெரியாதவங்க.. குப்பையில போட நினைச்சாங்க.. இப்போ கலசமா கோபுரத்துல இருக்கறவளை அண்ணாந்து தான் பார்ப்பாங்க.. நீ டென்ஷன் ஆகாதே.. சோ கூலா இரு மை செல்ல சிஸ்டர்.. பைடாம்மா..” என்றவன், அவளது தலையைத் தட்டிவிட்டு, எழுந்து கிளம்பிச் செல்ல, சிவரஞ்சனி சிவாத்மிகாவின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தார்..

“ஆத்மிகா மேடம் இது நல்லா இருக்கு.. எனக்கு சரியா இருக்குமா?” அவரது மூத்த மகள் கேட்க,

“சூப்பரா இருக்கும்.. இருங்க.. அது கிளாத் இருக்குன்னு நினைக்கிறேன். உங்களுக்கு வச்சுக் காட்டறேன்.. உங்களுக்கு அந்த கலர் சூட் ஆகுதான்னு பார்க்கலாம்..” என்றவள், அதற்குப் பிறகு, சிவரஞ்சனியின் முகத்தைக் கூடப் பார்க்காமல், வேலையில் மட்டுமே கவனம் பதிக்க, சிவரஞ்சனி அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சூப்பரா இருக்கு ஆத்மிகா.. அதே போல லெஹங்கா கூட வேணும்..” என்று அவள் சொல்லவும், அதையும் அவளுக்குக் காட்டி, அவர்கள் சொன்னதைக் குறித்துக் கொண்டவள்,

“உங்களுக்கு ரெடி பண்ணிட்டு கால் பண்றேன்.. நீங்க வந்து ட்ரயல் பாருங்க.. உங்க நம்பரைத் தாங்க போதும்.. உங்களுக்கு டிரஸ் முடிச்சிட்டு போட்டோ அனுப்பறேன்.. உங்களுக்கும் டிரஸ் எப்படி இருக்குன்னு பார்க்க ஆசையா இருக்கும் இல்லையா?” என்றவள், கவனமாக அந்தப் பெண்ணின் நம்பரைக் கேட்டு வாங்கிக் கொள்ள,

“உங்களை சந்திச்சது ரொம்ப ஹாப்பி ஆத்மிகா.. யு ஆர் சோ கியூட்.. சோ டவுன் டு எர்த்.. இன்ஸ்பிரேஷன்.. நீங்களே படிச்சு முடிச்சு.. யாரோட ஹெல்ப்பும் இல்லாம ஒரு தொழில் ஸ்டார்ட் பண்ணி.. இவ்வளவு பெருசா வந்திருக்கீங்களே.. எவ்வளவு பெரிய விஷயம்.” என்றவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவள்,

“என்னைப் பெத்தவங்க எனக்கு ரொ….ம்..ப ஹெல்ப் பண்ணினாங்க..” நக்கலாக அவள் சொல்ல,

“எப்படி?” சிறியவள் கேட்க,

ஏளனமாக புன்னகைத்தவள், “அவங்க முன்னால வாழ்ந்து காட்டணும்ன்னு எனக்கு வேகத்தை கொடுத்ததே அவங்க புறக்கணிப்பு தானே.. அது தான் சொன்னேன்.. மத்தபடி பணம் எல்லாம் நான் திருப்பி அப்படியே கொடுத்துட்டேன்..” என்றவள், சிவரஞ்சனியை வெட்டும் பார்வை பார்த்தபடி, அவள் சொன்ன உட்கருத்து புரிவதற்குள், 

“ஓகே.. நான் முடிச்சிட்டு போட்டோ அனுப்பறேன்.. உங்க போன் நம்பர ப்ரியா கிட்ட கொடுத்துடுங்க..” என்றவள், அவர்கள் எழுந்து கொள்ளவும், அவர்களை அனுப்பி வைக்க, தனது மகளின் முன் எதுவும் பேச முடியாமல், முகம் விழ சிவரஞ்சனி, சிவாத்மிகாவிடம் விடைப்பெற்றுச் சென்றார்.      

அவர் பதில் பேச முடியாமல் நின்றதே எதுவோ சாதித்த உணர்வைக் கொடுக்க, சிவாத்மிகா, அப்படியே டேபிளில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். அதற்குப் பிறகு, வேலை செய்யவும் முடியாமல், வீட்டிற்குச் சென்றவளை, வினயிடம் விஷயம் கேள்விப்பட்டு வந்த அர்ஜுன் எதிர்கொள்ள,

“அஜ்ஜு..” என்றவள், அவனிடம் ஓடிச் சென்று அவனை இறுக அணைத்துக் கொள்ள, அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அவளது தலையை மெல்ல வருடியப்படி,

“என்னடா கண்ணம்மா..” அவளது காதில் இதழ் பதித்துக் கொண்டே  கேட்க,

“ஒண்ணும் இல்ல.. சும்மா..” என்றவள், அவனது அணைப்பினில் அமைதியாக நின்றாள்.

“என்னம்மா? டென்ஷனா இருக்கா?” அவன் கேட்க,

“ஒண்ணும் இல்ல.. சும்மா தான்.. தேவை இல்லாதவங்களை எல்லாம் பார்த்தேன்.. மனசு கொஞ்சம் கஷ்டப்படுது..” என்றவளை, இறுக அணைத்துக் கொண்டு நின்றான்.

“நான் உனக்கு இருக்கேன்டா செல்லம்.. அவங்களை எல்லாம் விடு.. நீ டென்ஷன் ஆகாதே.. கூலா இருடா மை லட்டு..” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல, அவனுடன் கோழிக் குஞ்சு போல அண்டிக் கொண்டு வந்தவளின் மனநிலை புரிந்தவன் போல, அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“உனக்கு கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க உங்க அண்ணா இருக்கான்.. தெரியும்ல.. அவன் கல்யாணத்துக்கு ஏகப்பட்ட ப்ளான்ஸ் வச்சிருக்கான்.. அவங்களை விட சூப்பரா செய்வான்..” சிவரஞ்சனியை சந்தித்த தருணத்தை மனதில் வைத்துக் கொண்டு, அவள் ஏங்குவாள் என்று புரிந்து அவளை அமைதிப்படுத்த,

“இருக்காங்க தான்.. நான் அதுக்கு எல்லாம் கவலைப்படல அர்ஜுன்.. வினய் அண்ணா, அம்மா, நீங்க எல்லாம் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை? என்ன அந்த மனுஷன் வந்த பொழுது கோபமா மனசுல இருந்ததை எல்லாம் கேட்டுட்டேன்.. இவங்களை என்னால செய்ய முடியல அஜ்ஜு.. என்ன இருந்தாலும் ஒரு செகண்ட் கொஞ்சம் மனசுல அந்த அம்மாவை அந்த பொண்ணுக்கு நேரா கிழிச்சு தொங்க விடணும்னு தோணிருச்சு..

அதுவும் அந்தப் பொண்ணுக்கு கல்யாணத்துக்குன்னு எடுக்க வரும்போது, கொஞ்சம் கூடவா என்னைப் பத்தி நினைவு வந்திருக்காதுன்னு தோணிச்சு.. என்னவோ போங்க.. நான் சொன்ன கதையில முகம் செத்திருச்சு.. அதுல எனக்கு ஒரு திருப்தி.. குரூர திருப்தி..” என்றவள்,

அவனது முகத்தைப் பார்த்து, “சாரி.. நான் ரூடா தான் இருக்கேன்.. ஆனா.. என்னால அவாய்ட் பண்ணவே முடியல.. மனசு கொஞ்சம் வலிச்சிருச்சு.. அவரையாவது நான் சத்தமா பேசி என்னோட கோபத்தைக் கொட்டிட்டேன்.. ஆனா.. அந்த பொண்ணுங்க முன்னால எனக்கு அவங்களை நேரா தாக்கவும் முடியல.. அது உள்ளேயே இப்படி ஒரு கோபத்தைக் கொடுத்திடுச்சு போல..” என்றவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன்,

“புரியுதுடா.. அதை விடு.. அவங்களை விட்டுத்தள்ளு.. அதை விட உனக்கு அன்புக் காட்ட நாங்க இருக்கோம்.. உனக்கு அம்மா இருக்காங்க.. இப்போ நாம வேலையைப் பார்க்கலாம்..” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு, அவர்கள் அன்று வடிவமைத்த டிசைனை அவளை அணியச் சொல்லிப் பார்க்க, அவளின் கவனமும் அதில் திரும்பியது..