எந்நாளும் தீரா காதலாக -26

th (3)-1db64345

 

💝💝26                      

பெங்களூரில் நடக்கும் ஃபேஷன் ஷோவிற்கு சிவாத்மிகாவும், வினயும் தயாராகிக் கொண்டிருந்தனர்.. முதல் நாளே சென்றவர்கள், ஒருமுறை ரிஹர்சல் செய்து சரி பார்த்த பிறகு, இருவரையும் அழைத்துக் கொண்டு பெங்களூரைச் சுற்றிப் பார்க்க வினய் சென்றான். அங்கிருந்த கடைகளை ராதா சந்தோஷமாகவும், சிறு குழந்தை குதூகலத்துடன் அந்த நிமிடங்களை ரசிக்க, வினய் அவளை ரசித்துக் கொண்டே வர, சிவாத்மிகா இருவரையும் நிறைந்த மனதுடன் பார்த்துக் கொண்டே வந்தாலும், அவளது மனது அர்ஜுனையும் தேடத் துவங்கியது.

‘என்னை என்ன இப்படி பண்ணி வச்சிருக்கீங்க அஜ்ஜு? எங்கப் போனாலும்.. என்ன செஞ்சாலும் உங்க நினைவு தான் வருது.. ஐ மிஸ் யூ அஜ்ஜூ.. ஐ மிஸ் யூ பேட்லி.. இன்னும் உங்களை விட்டு ஒரு மாசத்துக்கும் மேல நான் எப்படி இருக்கப் போறேன்? நீங்க கேட்கும்போது பேசாம நான் உங்க கூட வரேன்னு சொல்லி இருக்கணும்..’ மனதினில் நினைத்துக் கொண்டே வந்தவள், பாதையில் கவனமில்லாமல் ஒருவர் மீது மோதுவது போலச் செல்ல, வினய் அவளைப் பிடித்து நிறுத்தினான்.

“என்ன கவனம் எங்க இருக்கு? எங்கயாவது விழுந்தன்னா ஒருத்தன் என்னை தோளை உரிச்சுத் தொங்க விட்டுடுவான்.. உனக்கு அது தான் ஆசையா? சொல்லும்மா சொல்லு..” என்று கேலி செய்ய,      

“அந்த மனுஷன நினைச்சுத் தான் விழப் போனேன்னு சொல்லுங்க.. ரொம்ப சந்தோஷப்படுவார்..” என்று முணுமுணுத்தபடி, ராதாவுடன் ஒரு கடைக்குள் நுழைய, அவள் சொன்னதைக் கேட்ட வினய் அவளைப் பார்த்து சிரித்தான்.

“ஓ… அந்த ஆளு வேலை தானா?” என்று கேட்டுக் கொண்டே கடைக்குள் நுழைந்தவன், அவர்கள் பார்க்கும் பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவர்கள் நெடுநேரம் எதையோ வாங்கிக் கொண்டிருக்க, “என்ன இன்னைக்கு நைட் பூரா இங்கயே இருக்கப் போறீங்களா? அவ நல்லா தூங்கி ஃபிரெஷ்ஷா இருந்தா தான் நாளைக்கு முகம் நல்லா இருக்கும்..” என்றவனைப் பார்த்து இருவரும் சிரித்து,

“என்னிக்காவது தானே நாங்களே வரோம்.. இன்னும் கொஞ்ச நேரம் இருங்க.. உங்களுக்கு போர் அடிக்குதுன்னு சொல்லுங்க..” என்றவர்களை பார்த்து முறைத்தவன்,

“இதெல்லாம் ஆவறதுக்கு இல்ல.. ஏதாவது வாங்கினாலும் பரவால்ல.. சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு நிக்கறீங்க.. உங்களை..” என்றவன், சிவாத்மிகா கைகளில் வைத்திருந்த பொருட்களை அவள் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல, அப்படியே பில் போட்டுக் கொண்டு, அவர்களை இழுத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருந்த அறைக்குச் சென்றான்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்.. நான் டிசைன் நல்லா இருக்கேன்னு பார்த்துட்டு இருந்தேன்.. அதை அப்படியே நானே பண்ணிடுவேன்.. அதைப் போய் காசு கொடுத்து வாங்கிட்டு.. சொல்லச் சொல்லக் கேட்காம இப்படியா செய்வீங்க?” சிவாத்மிகா அங்கலாய்க்க,

“அதெல்லாம் அப்படித் தான்.. உனக்கு என்னம்மா.. நீ எவ்வளவு வேணா வேடிக்கைப் பார்ப்ப? ஆனா.. எனக்கு அப்படியா? நீ சொன்னியே அந்த மனுஷன்.. அவன் எத்தனை தடவ ரூமுக்கு போயாச்சான்னு எனக்கு மெசேஜ்ஜும், காலும் பண்ணினான் தெரியுமா? அவன் தொல்லை எனக்குத் தாங்கல.. நீ ரெஸ்ட் எடுக்கணுமாம்.. நீ ப்ரெஷ்ஷா இருக்கணுமாம்.. உன்னோட ஃபர்ஸ்ட் பெரிய ரேம்ப் வாக்காம். இதைச் சொல்லியே என் காதுல ரத்தம் வர அளவுக்கு என்னைப் படுத்தி எடுத்துட்டான்.. இதுல ரூமுக்கு வந்த உடனே அவள தூங்கப் போகச் சொல்லுன்னு வேற.. விட்டா என்னை தாலாட்டு பாடி தூங்க வச்சிட்டு போகச் சொல்லுவான் போல..” வினய் போலியாகச் சலித்துக் கொள்ள,             

“ஹையோ.. இந்த இதுக்கு அவரு வந்தே இருக்கலாம்..” என்று புலம்பியவள்,

“சரிண்ணா.. நான் அவர் கிட்ட பேசும் போது நீங்க எங்களை வெளிய விடவே இல்லன்னு சொல்லிடறேன்.. அப்படியே சீக்கிரம் போய் படுக்கறேன்.. ஓகே வா..” என்று சிரித்துக் கொண்டே சொன்னவள், வினய் அவளது தலையைத் தட்டிவிட்டு, ராதாவைப் பார்த்துக் கொண்டே கதவை நோக்கிச் செல்லவும்,

“நான் பால்கனில போய் பேசறேன்.. எனக்கு ப்ரைவசி வேணும்பா..” என்றவள், பால்கனிக்குச் செல்ல, ராதா அவளைப் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

சிவாத்மிகா செல்லவும், சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன், “அவ நமக்கு ப்ரைவசி தந்துட்டு போறாளாம்.. பையன் நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருக்கான்.. நான் உன்னை எதுக்கு பார்க்கறேன்னு எல்லாம் என் தங்கச்சிக்கு தெரியுது..” என்று கேலி செய்தவன்,

“சரி.. அவ எதுக்கு நம்மளை விட்டு போனா தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே அவளது கன்னத்தில் இதழ் பதிக்க,

“சீ.. நல்லா அண்ணனும் தங்கையும் பிளான் பண்றீங்க.. அவ அங்க தான் இருக்காங்கங்க..” என்றவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டவன், அவளது கழுத்து வளைவில் முகம் பதித்துக் கொண்டே,

“என் மச்சான் ட்ரைனிங்ல என் பார்வையிலேயே என் தங்கை புரிஞ்சிக்கிட்டா.. நீ என்னடான்னா எங்களைத் திட்டிட்டு இருக்க? சரி.. அதை விடு.. உனக்கு ஊரெல்லாம் பிடிச்சு இருக்கா? சந்தோஷமா இருக்கியா? வேணும்ன்னா ரெண்டு நாள் ஷோ முடிஞ்சதும் இருந்துட்டு போகலாமா?” அவளது முகத்தைக் கைகளில் தாங்கிக் கேட்க, ராதா அவனது கையில் தனது கையை அழுத்திக் கொண்டு,

“ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னோட வாழ்க்கையிலேயே சிவா கூட வந்த அப்பறம் தான் நான் நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கேன்..” என்றவள், கண்களில் கண்ணீருடன்,

“இப்போ உங்களால ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க..” என்றவள், அவனது மார்பில் சாய்ந்துக் கொள்ள, அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அர்ஜுனை அழைத்தாள்.

அவன் போனை எடுக்கவும், “ஹலோ கண்ணா.. எப்படி இருக்கீங்க?” என்று கேட்க, அவளது மனது புரிந்தவன் போல,

“ஐ மிஸ் யூ டா தங்கம்.. பேசாம நானும் உன் கூட வந்திருக்கலாம் போல இருக்கு..” எடுத்ததும் அவன் சொல்லவும்,

“ஐ மிஸ் யூ டூ.. இங்க ஒரு சின்னப் பொண்ண வச்சிட்டு ரெண்டும் ரொமான்ஸ் பண்ணுதுங்க.. நான் பாவம் இல்ல.. இந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்?” என்று கேலி செய்து சிரிக்க, கூடச் சேர்ந்து சிரித்தவன்,

“நான் வேணா இப்போவே ஃப்ளைட் பிடிச்சு வரவா? என்ன குலு மணாலி ஹனிமூன பெங்களூர்க்கு ஷிப்ட் பண்ணிக்கலாம்.. ஓகே வா.. சொல்லு இன்னும் ரெண்டு மணி நேரத்துல நான் அங்க இருப்பேன்..” என்று வம்பு வளர்க்கத் துவங்கவும்,

“ச்சே.. நான் சும்மா கலாட்டா பண்ணினா.. உடனே ஹனிமூன்க்கு போயிடுங்க.. உங்களை..” என்று அவள் திட்டத் துவங்க, அர்ஜுன் சிரிக்கத் துவங்கினான்.            

“என்னடா பண்றது? உன்னை அவ்வளவு மிஸ் பண்றேன்..” என்றவன், அவளுக்கு போனிலேயே முத்தங்களை வழங்க, சிவாத்மிகா நெகிழ்ந்து நின்றாள்.   

“சரிடா லட்டு.. நீ படுத்துக்கோ.. நாளைக்கு ரேம்ப்ல ஃபிரெஷா இருக்கணும்.. ஐம் வெயிட்டிங் டு வாட்ச் தி ஷோ..” என்றவன், அவளுக்கு மீண்டும் முத்தங்களைப் பதிக்கத் துவங்க,

“ஐ டூ மிஸ் யூ.. நாளைக்கு உங்களுக்கு ஷூட்டிங் இல்லை தானே.. இங்க  வரலாம்ல.. எனக்கு நீங்க என் கூட இருந்தா நல்லா இருக்கும்.. எப்படி இருந்தவள இப்படி மாத்தி வச்சிருக்கீங்க அஜ்ஜு..” அவள் கெஞ்சலாகக் கேட்க,

“நான் தான் சொன்னேனே லட்டு.. இங்க ஒரு டைரக்டர் கதை சொல்ல வரேன்னு சொல்லி இருக்கார். அது எப்போ முடியும்ன்னு தெரியாதே.. நான் எந்த டைம்ன்னு கணக்கு வச்சு ஃப்ளைட் புக் பண்றது சொல்லு..‘’ பொறுமையாக அவன் கேட்க,

“ஹ்ம்ம்.. சரி.. நீங்க பாருங்க.. குட் நைட்.. நான் தூங்க போறேன்.. கொஞ்சம் டயர்ட்டா இருக்கு..” என்றவளின் குரலில் சுருதி இறங்கியது.

“ஓய்.. சிட்டு.. என்ன குரல் உள்ள போகுது? முடிஞ்சா நான் ஓடி வரமாட்டேனா? நம்ம லைஃப் நல்லா இருக்கத் தானேடா.. உங்களை எல்லாம் நான் சந்தோஷமா எந்தக் குறையும் இல்லாம வச்சுக்கணும்.. நம்ம பசங்களை நல்லபடியா வளர்க்கணும்.. இப்போ வாய்ப்பு வரும்போதே நாம பயன்படுத்திக்கிட்டா தானேடா சிட்டு உண்டு..” என்று அவன் குழைந்தக் குரலில் கேட்க, அதில் மேலும் உருகியவள்,  

“சரிடா கண்ணா.. ப்ளீஸ்.. நீங்க வருத்தப்படாதீங்க.. நான் இனிமே கேட்கல.. சாரி.. நீங்க கூட இருந்தா நல்லா இருக்கணும்ன்னு தோணிச்சு அவ்வளவு தான்.. அது தான் மனசுல இருக்கீங்களே..” என்றவளை, கேலி செய்துவிட்டு போனை வைத்தவன், அடுத்த நாள் கிளம்பத் தயாராகத் துவங்கினான்.               

மறுநாள் காலை யாருக்கும் நிற்காமல் விடிய, சிவாத்மிகாவும் வினயும் சிறிது டென்ஷனுடன் தயாராகத் துவங்கினர். ஷோ நடக்கும் அரங்கத்தில் அனைவரும் குழுமத் துவங்க, பரபரப்பாக அனைவரும் போட்டிக்குத் தயாராகத் துவங்கினர். பெண் மாடல்களை சிவாத்மிகா பார்வையிட்டு விட்டு வந்து, வினய்யைப் பரிதாபமாகப் பார்க்க,

“என்ன பார்க்கற? நல்லா ப்ராக்டிஸ் பண்ணியாச்சு. டிரஸ்சும் உனக்கு சூப்பரா இருக்கு.. ரொம்ப நல்லா நடக்கற.. அர்ஜுன் என்ன சொன்னான்?” என்று கேட்க, அவள் உதட்டைப் பிதுக்க,

“பதில் வராதே.. அர்ஜுனும் ரொம்ப சூப்பரா இருக்குன்னு தானே சொன்னான்.. அப்பறம் என்ன?” என்று அவளை சமாதானப்படுத்த,

“இது வரை காலேஜ் தவிர எங்கயும் ரேம்ப்ல வர்க் பண்ணினது இல்லை.. அது தான் கொஞ்சம் நெர்வசா இருக்கு..” என்று சொன்னவள், ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு,

“நாம செய்யறோம் அண்ணா. நாம வின் பண்றோம்..” என்றபடித் தயாராகத் துவங்கினாள்.

“நீ ரெடி ஆகு.. நான் போய் மேல் மாடல்ஸ் எல்லாரும் ரெடியான்னு பார்க்கறேன்..” என்ற வினய், அங்கிருந்து நகர, ராதா சிவாத்மிகாவிற்கு உதவத் துவங்கினாள்.

அவள் தயாரானதும், “அக்கா நான் எப்படி இருக்கேன்?” என்று கேட்க, ராதா கண்களில் கண்ணீருடன், அவளுக்கு நெட்டி முறித்து,

“கல்யாணக்களை வந்துடுச்சு.. அவ்வளவு அம்சமா இருக்க.. உன்னை இப்படி பார்க்க எனக்கு எவ்வளவு நாள் ஆசை தெரியுமா? தம்பி மட்டும் இப்போ பார்த்தாங்கன்னா அப்படியே தூக்கிட்டு போயிடுவாங்க..” எனவும், கன்னங்கள் சிவக்க,

“போங்கக்கா..” என்று சிணுங்கியவள்,

“நிஜமா நல்லா இருக்கா?” என்று மீண்டும் கேட்கவும்,

“அழகா இருக்க பாப்பா.. எனக்கு இப்போவே உன்னை மாலையும் கழுத்துமா பார்க்கற மாதிரி இருக்கு.. இன்னும் அதுக்கு ரெண்டு மாசம் இருக்கு..” என்று பெருமூச்சு விட,

“ஹே.. அக்கா.. அது எங்க கல்யணத்துக்கா? இல்ல உங்க கல்யாணத்துக்கா? ரொமான்ஸ் எல்லாம் செமையா போகுது?” என்று கேலி செய்ய, ராதா முகம் சிவக்க,

“சீ.. போ… தம்பி உன்னை நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருக்காருன்னு அவரு வேற உங்களை கிண்டல் செய்யறார்… நீ எங்களை கிண்டல் செய்யறியா?” என்றவள், சிவாத்மிகாவின் கன்னத்தைக் கிள்ளி,

“அப்படியா?” என்று அவளை கேலி செய்ய,  

“போங்கக்கா..” என்று சிணுங்கியவள், தன்னை செல்ஃபி எடுத்து அர்ஜுனுக்கு அனுப்பி விட்டு, வினயின் வரவுக்காக காத்திருக்க, வினய், கையில் தனது கேமராவுடன் வந்து சேர்ந்தான்.

“ஹலோ.. லேடீஸ்.. என்ன ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே வந்தவன், சிவாத்மிகாவைப் பார்த்ததும்,

“வாவ்.. மை ப்ரெட்டி லிட்டில் சிஸ்டர்.. சோ.. சோ க்யூட்.. இங்க ஒருத்தன் இல்லையேன்னு நான் ரொம்ப ஃபீல் பண்றேன்..” என்றபடி, தனது கையில் இருந்த கேமராவில் அவளைப் படம் பிடிக்கத் துவங்கினான்.

அவளை விதம்விதமாக போட்டோ பிடித்தவன், “சரி. ரெடியா? அடுத்து நம்ம தான்.. நம்ம மாடல்ஸ் எல்லாரும் ரெடி. ப்ரெட்டி குட்.. எல்லாமே சூப்பரா இருக்கு.. நம்ம ட்ரையல் பார்த்ததை விட பக்கா..” என்று அவளுக்கு தைரியம் கூறியவன்,

“நீயும் எதுக்கும் ஒன்ஸ் லேடீஸ் மாடல்சைப் பார்த்துடு..” என்று சொல்லவும், சிவாத்மிகா அனைவரையும் பார்வையிட்டு, திருப்தியுடன் தங்களது நேரத்திற்காக காத்திருந்தாள்.

ஃபேஷன் ஷோவும் தொடங்கியது.. முதல்முறை ப்ரீஸ்டைல் டிரஸ் அணிந்துக்கொண்டு நடைப்பயின்ற பிறகு, அவர்களது குழு மூன்றாவது இடம் பிடித்திருக்க, சிவாத்மிகா வினயைப் பார்த்தாள்.

“என்ன பார்க்கற? இத்தனை ரவுண்ட்ல நாம தர்ட் பிளேஸ் வந்திருக்கோம்.. அதுவே பெருசு இல்ல. அடுத்த ரவுண்ட் பார்த்துக்கலாம்.. தைரியமா இரு..” என்றவன், அடுத்த சுற்றுக்குத் தயாராகத் துவங்கினான்.

முதல் சுற்று முடிந்த பிறகு, அர்ஜுனுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல அவள் முயல, அவனது செல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, “ஏன் அண்ணா.. அவர் இன்னுமா கதை கேட்டு முடிக்கல.. அட்லீஸ்ட் போன்லயாவது நம்ம கூட அவரு இருப்பாருன்னு நினைச்சேன்.. இப்படியா போனை ஆஃப் பண்ணி வச்சிருப்பார்? போங்கண்ணா..” என்று சலித்துக் கொள்ள,

“இவரு கொஞ்சம் பெரிய டைரெக்டர் இல்லம்மா.. அது தான் சுவிட்ச் ஆஃப் பண்ணி இருப்பான்.. அவனும் நாளை மாத்தி வைக்கலாம்ன்னு பார்த்தான்.. கடைசியில முடியல.. என்ன செய்யறது?” என்று அவனும் அவளுடன் சேர்ந்து சலித்துக் கொள்ள,

“ஹ்ம்ம்.. நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன்.. என்னவோ போங்க..” என்றவள், தன்னை சமன்படுத்திக் கொண்டு அடுத்த சுற்றுக்குத் தயாராக நின்றாள்.        

அடுத்த சுற்றும் துவங்க, அவர்கள் குழு ராம்பில் நடக்கத் தயாராகினர். முதலில் பெண் மாடல்கள் நடக்க, அடுத்து அவர்களது ஜோடியாக இருக்கும் ஆண் மாடல்கள் பின் தொடர்ந்து, இருவரும் ஜோடியாக நின்று போஸ் செய்த பின்பு, ஜோடியாக இணைந்து நடந்தனர்.

அனைவரும் இசைக்கு ஏற்றபடி நடந்து செல்ல, இறுதியாக சிவாத்மிகா மேடையில் ஏற, அவளது பெயருடன் அவளது ‘எலிகன்ஸ் வித் ஸ்டைல்’ மற்றும் வினயின் நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் அறிவித்து, அவர்களது புது ப்ரண்ட் என்று ‘மித்திக் ப்யூஷன்’ பெயரையும் அறிவித்தனர்..     

பின்னணி இசை ஒலிக்கத் துவங்க, சிவாத்மிகா மெல்ல ராம்பில் நடந்து வர, தனது தலைப் பாகையில் இருந்து வந்த துணியில் பாதி முகத்தை மறைத்தபடி அவளது பின்னால் அவளது ஜோடி நடந்து வர, முன்னால் இருக்கையில் அமர்ந்தபடி ராதா அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள்.

அழகாக நடந்து வந்த சிவாத்மிகா, கரம் குவித்தபடி அழகாக புன்னகைக்க, அவள் பின்னோடு வந்த அவளது ஜோடி, அவள் அருகில் வந்து நின்று, அவனது முகத்தில் இருந்த துணியை விலக்கவும், அவனது அருகில் நகர்ந்து போஸ் செய்வதற்காக, தனது ஜோடியின் பக்கம் திரும்பியவளின் கண்கள் பெரிதாக விரிந்தது. அழகான புன்னகையுடன் அங்கு நின்றிருந்தவனைப் பார்த்தவளின் அகமும் முகமும் விகசிக்க, ‘அஜ்ஜு..’ என்று முணுமுணுத்தபடி அவனைப் பார்க்க, அர்ஜுன் மெல்லிதாக கண்ணடித்தான். மணமகனைப் பார்த்து மணமகளின் மகிழ்ச்சி அந்தத் தருணத்தில் அழகாக வெளிப்பட, அது அழகான கவிதை போல இருந்தது.  

அதே போலவே தனது முகத்தை மறைத்து இருந்த துணியை விலக்கிய அர்ஜுன், புன்னகையுடன் அவள் திரும்புவதற்காக காத்திருக்க, போசிற்காக அவனது அருகே வந்தவளின் முகம், அவனைப் பார்த்ததும் பிரகாசமுறவும், அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான்.

தன்னவன் என்ற கர்வமும், அவனை அங்கு எதிர்ப்பார்க்காமல் பார்த்த அந்த சந்தோஷத்தில் அவனது முகத்தைப் பார்த்தவள், அவனது கண்களில் தன்னைக் கண்டாள். அவளது இடையில் மென்மையாக பிடித்துக் கொண்டவன், அவளைப் புன்னகையுடன் பார்க்க, அவனது மார்பின் மீது கையை வைத்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து அழகாக போஸ் தரவும், வினய் அவர்களை படம் பிடித்தான்.

அதை விட, அங்கு குழுமி இருந்த கூட்டத்தில் அர்ஜுனைத் தெரிந்தவர்கள் கூச்சலிட, அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள்  அவர்களை ஜோடியாக படம் பிடிக்கத் துவங்கினர்.

போஸ் கொடுத்து படம் பிடித்ததும், அவளுடன் இணைந்து ராம்பில் சிறிது தூரம் திரும்பி நடந்து பாதி வரைச் சென்றவன், மீண்டும் அவளுடன் இணைந்து முன் பக்கம் நடந்து வந்தான். போஸ் செய்யும் பொழுது, சிவாத்மிகா அவனுக்கு பின் பக்கமாக நிற்க, அவளது கையைப் பிடித்து இழுத்தவன், அவளைச் சுழற்றியபடி, தனக்கு முன்னால் அவளை கொண்டு வந்து நிறுத்தவும், அவளது லெஹங்காவின் பாவாடை சுழன்ற விதத்தில், அதில் இருந்த கற்களின் வேலைப்பாடுகள் அழகாக விரிந்துத் தெரிய, அரங்கமே அதைப் பார்த்து வியந்து, ‘வாவ்’ என்று குரல் எழுப்பினர்..

சிவாத்மிகா அவனது முகத்தைப் பார்க்க, அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே, மீண்டும் ஒரு சுழற்று சுழற்றி நிறுத்தி, அவள் பயிற்சி எடுத்த பொழுது பழகிய போசை அவளுடன் இணைந்து செய்த பிறகு, அவளுடன் திரும்பி இணைந்து நடந்தான்.

மீண்டும் அவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஜோடியாக நடந்து வர, கடைசியில் நின்றவள், கிடைத்த சிறிது இடைவெளியில், அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு, “அஜ்ஜு.. என்ன இப்படி சப்ரைஸ் பண்றீங்க? ஹையோ இதை நான் எதிர்பார்க்கவே இல்ல..” கண்களில் கண்ணீர் தளும்ப, சந்தோஷத்தில் அவள் துள்ள,

அவளது  கன்னத்தைத் தட்டி, “எப்படி என் சப்ரைஸ்?” புருவத்தை உயர்த்தி அர்ஜுன் கேட்க,

“அஜ்ஜு ஐ மிஸ்ட் யூ.. மிஸ்ட் யூ சோ மச்.. உங்க கூடவே ஷூட்டிங்க்கு வந்துடலாமான்னு கூட யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றவளின் கையை இறுகப் பிடித்தவன்,

“அம்மாவும் வந்திருக்காங்கடி என் லட்டு.. ராதாக்கா பக்கத்துல உட்கார்ந்து இருக்காங்க பாரு..” என்றவன், அவர்கள் முறை வரவும்,

“வா..” என்றபடி, அவளுடன் கைக் கோர்த்துக் கொண்டு நடக்க, டிசைனர் என்ற முறையில் இருவருடனும் வினய் நடந்து வர, நிர்மலா மூவரையும் பார்த்து மனம் பூரித்து போனார். ராதாவும் அதே நிலையில் தான் இருந்தாள். அந்த அன்பான குடும்பத்தில் தானும் ஒரு அங்கமாகப் போவது அவளுக்கு மனதில் சந்தோசம் எழுந்தாலும், ஏதோ ஒரு பயம் மனதைக் கவ்விக் கொண்டிருந்தது. 

மேடையை விட்டு கீழே இறங்கி, அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு அருகில் சென்றவள், “அண்ணா.. அவர் வரது உங்களுக்குத் தெரியும் தானே.. ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல.. ரெண்டு பேரும் சேர்ந்து ஃப்ளான் பண்ணினீங்களா?” என்று கேட்க, அர்ஜுன் புன்னகையுடன் வினயைப் பார்த்துக் கொண்டிருக்க,   

“தெரியுமே.. உனக்கு ப்ராக்டிஸ் கொடுத்த அந்த பையன் தானே அவனுக்கும் கொடுத்தான்.. உனக்கு சொல்லிக் கொடுத்து, அதையே அர்ஜுனுக்கும் ப்ராக்டிஸ் தந்தான். அதனால தானே ரெண்டு பேர் ஒரே போலவே செய்ய முடிஞ்சது.. உனக்கு சப்ரைஸ்க்கு நாங்க ப்ளான் பண்ணினோம்.. எப்படி எங்க சப்ரைஸ்?” என்று கேட்டவன், அவள் புன்னகையுடன் “சூப்பர்..” என்று தலையசைக்கவும்,  

அர்ஜுனின் பக்கம் திரும்பியவன், “ஆனா.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டா அர்ஜுன்.. நீயும் அவளை ரொம்ப மிஸ் பண்ணிட்ட.. அதனால ஒரு அஞ்சு நிமிஷம் டைம் தரேன்.. பேசிட்டு சீக்கிரம் வாங்க.. நான் அம்மாகிட்ட இருக்கேன்..” என்ற வினய், இருவருக்கும் தனிமையளித்து நகர்ந்து செல்ல,

“என் மச்சான் எனக்கு ப்ரைவசி தரானாம்.. சூப்பர் அண்டர்ஸ்டாண்டிங் இல்ல.. மச்சான்னா மச்சான் தான்..” என்ற அர்ஜுன், அதை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவளைத் தன்னுடன்  இறுக்கிக் கொண்டான்.

“அஜ்ஜு.. என்ன இது?” என்று அவளது வாய்க் கேட்டாலும், அவனது மார்பில் புதைந்துக் கொண்டே,

“நீங்க போனை எடுக்கலைன்ன உடனே ரொம்ப அப்சட்டா இருந்தது.. அழுகையா வந்தது. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல.” எனவும், 

“இங்க  வரணும்ன்னு நேத்து நைட்டே கதை கேட்டுட்டு, விடிய காலைல ஃபளைட்ல நானும் அம்மாவும் கிளம்பி வந்து, கொஞ்ச நேரம் தூங்கிட்டு, ரெடி ஆகி வந்தேன்டா.. அதுனால தான் ஃபோன் ஆஃப் பண்ணி வச்சிருந்தேன்..” என்றவன்,    

அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டே, “உன்னை நானும் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்..” என்றவனின் இதழ்களை நெருங்கியவள்,

“எப்படி உங்களை விட்டு அந்த ஒரு மாசம் இருக்கப் போறேன்னே தெரியல..” என்றவள், மெல்ல எம்பி, அவனது இதழ்களில் தனது இதழ்களைப் பொறுத்த, அதில் இன்பமாக அதிர்ந்தவன், அதே வேகத்துடன் அவளது பணியைத் தனதாக்கிக் கொண்டான்.

இரண்டு நாள் பிரிவை இருவரும் ஈடுகட்ட, கதவு தட்டும் ஒலியில், அவளது இதழ்களை விடுவித்தவன், அவளது முகத்தைக் கைகளில் தாங்கவும், அவள் நாணத்துடன் கண்களைத் தழைக்க, அவளது நாடியைப் பிடித்து அவளது முகத்தை நிமிர்த்தி, அவளது இதழ்களில் மீண்டும் அழுந்த முத்தமிட்டு,

“இதுக்கு தான் சொன்னேன்.. என் கூடவே வான்னு.. கேட்டாத் தானே.. சரி.. அது அப்பறம் பார்த்துக்கலாம்.. இப்போ வா.. வெளிய போகலாம்.. ரிசல்ட்ஸ் சொல்வாங்களா இருக்கும்.. அம்மாவும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..” என்றபடி அவளை அழைக்க, தன்னைக் கண்ணாடியில்  ஒருமுறைப் பார்த்தவள், அவனுடன் சென்றாள்.

“சிவா.. ரிசல்ட்ஸ் சொல்லப் போறாங்க வா.. அம்மா வேற நீங்க ரெண்டு பேரும் எங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க..” அவர்களைப் பார்த்ததும் வினய் அழைக்க,

“இதோ அண்ணா வரேன்..” என்றவள், தனது குழுவில் ஒரு பெண் அழைக்கவும்,

“ஒரு நிமிஷம் அஜ்ஜு..” என்றபடி அவளது அருகில் செல்ல, 

அர்ஜுனை நெருங்கிய வினய், “ஆனாலும் ப்ரைவசி எப்போ தரணும்ன்னு எல்லாம் நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருக்கடா.. முகத்தை துடைச்சிக்கோ.. லிப்ஸ்டிக் ஒட்டி இருக்கு..” என்று கேலி செய்ய, அர்ஜுன் அவசரமாக உதட்டைத் துடைத்துக் கொள்ளவும்,

“அடப்பாவி.. டேய்.. அநியாயம் பண்றீங்கடா.. அப்போ நிஜமாவே ட்ரைன் பண்ணிக்கிட்டு இருக்கியா?” என்றபடி வினய் வாயில் அடித்துக் கொள்ளவும்,

“மச்சான்.. அப்படியே ஒண்ணும் தெரியாதது போல பேசாதே.. நீங்க நேத்து என்ன பண்ணினீங்க?” அர்ஜுன் பதிலுக்கு அவனை கலாய்க்க,

“நான் எல்லாம் இன்னும் எல்.கே.ஜி லெவல்ல தான் இருக்கேன்.. சார்.. அப்படியே டிகிரி முடிக்கிற மாதிரி தெரியுதே..” என்று பெருமூச்சு விட்டவனைப் பார்த்து சிரித்து, அவனது தோளைத் தட்டிவிட்டு, அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.  

முடிவுகள் அறிவிக்கப்பட, வினயும், சிவாத்மிகாவும் முதல் இடத்தைப் பிடித்திருக்க, வினய் சிவாத்மிகாவை தோளோடு அணைத்துக் கொண்டு, “வி வான் மை சிஸ்டர்.. வி வான்..” என்று குதிக்க, அவனுடன் சேர்ந்து குதித்தவளை மறுபுறம் அர்ஜுனும் அணைத்துக் கொண்டு,

“சோ ஹாப்பி மை சிட்டு..” என்றவன், “மச்சான்” என்று அவனையும் தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள, நிர்மலா தனது இருக்கையில் அமர்ந்தபடி இருவருக்கும் கட்டை விரலைக் காட்ட, ராதா அவர்கள் அருகில் வந்து,

“ரெண்டு பேரும் போட்ட உழைப்புக்கு கரக்டான வெற்றி தான் கிடைச்சு இருக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்றவள்,

“பாப்பா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு பாப்பா..” என்றபடி அவளை அணைத்துக் கொள்ள,

“அக்கா.. நாம வின் பண்ணிட்டோம்..” என்றபடி அவளை சந்தோஷமாக சிவாத்மிகா அணைத்துக் கொண்டாள்.

வினயும், சிவாத்மிகாவும் மேடையேறி பரிசை வாங்கிய பொழுது, அர்ஜுனும், ராதாவும் இருவரையும் பார்த்து சந்தோஷத்துடன் கைத் தட்ட, தனது மகிழ்ச்சியையும், வெற்றியையும், தனது வெற்றியாகக் கொண்டாடும் அர்ஜுனைப் பார்த்தவளின் உள்ளம் நிறைந்து போனது.

சிவாத்மிகாவும், வினயும் தங்களது பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்க, ராதா அவர்களுக்கு உதவி செய்ய, நிர்மலா அவர்களுக்காக காத்திருந்தார். அப்பொழுது அர்ஜுனும் அவர்களுக்காக காத்திருந்த நேரத்தில், அவனை அங்கிருந்த சிலர் சூழ்ந்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டே சிவாத்மிகா நிர்மலாவின் அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள்.   

அவளைப் பார்த்த அர்ஜுன் முறைக்க, ‘நடத்துங்க நடந்துங்க’ என்று அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே வாயசைத்தவள், நிர்மலாவிடம் பேசத் துவங்கினாள்.

“உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது எனக்கு இப்போவே உங்களை கல்யாண கோலத்துல பார்க்கறது போல இருந்தது.. எப்போடா உங்க கல்யாண நாள் வரும்ன்னு இருக்கு.. என் நாலு பிள்ளைங்களையும் அந்த கோலத்துல பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு.. எவ்வளவு நாள் கனவு தெரியுமா?” கண்களில் கண்ணீர் துளிக்கச் சொல்லவும், அவரது தோளில் சாய்ந்தவள், அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அன்றைய விழாவில் எடுக்கப் பட்ட புகைப்படங்களை வினய், அவர்கள் இருவருமாக சேர்ந்துத் துவங்கிய மித்திக் பேஷன் ப்ரான்டின் தளத்தில் பதிவிட, சிவாத்மிகா, அர்ஜுனின் புகைப்படங்கள் மீண்டும் வைரல் ஆனது. எங்குத் திரும்பிலும் அவர்களது புகைப்படங்களே காணப்பட்டது.

அரங்கில் இருந்து வெளியில் வந்தவர்களை, அர்ஜுன் ட்ரீட்டிற்காக கூட்டிச்சென்ற பிறகு, அன்று இரவே அனைவரும் சென்னைக்குப் பயணப்பட,

“நான் நாளைக்கு மதியம் ஃபளைட்ல ஹைதராபாத் போறேன்.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. அம்மாவை பார்த்துக்கோ.. நீயும் டென்ஷன் இல்லாம ரிலாக்ஸ்டா ஸ்பாவுக்கு போயிட்டு வா.. பியூட்டி பார்லர் போ.. நல்லா தூங்கு.. அப்படியே மெதுவா நம்ம கல்யாணத்துக்கு ரெடி ஆகு..” என்றவன், அவளது நெற்றியில் மெல்ல இதழ் ஒற்றி அவளது கையை அழுத்த, சிவாத்மிகா அர்ஜுனின் தோளில் சாய்ந்து, அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.    

அடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளை அறியாமல்…