எந்நாளும் தீரா காதலாக – 28

  💝💝28    

சீன் வாரியாக கதாநாயகியின் உடைகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சிவாத்மிகாவின் காதுகளில், ‘சிவாக்காவை பார்க்கணும்’ என்ற சொற்கள் விழ, சிவாத்மிகா நிமிர்ந்துப் பார்த்தாள்.

“நம்மளை யாருடா சிவாக்கான்னு கூப்பிடறது?” தனக்குள் பேசியபடி நிமிர்ந்துப் பார்த்தவள், அங்கு நின்றிருந்த இருவரையும் பார்த்து அதிர்ந்து போனாள்.

“ஹையோ இவங்க எதுக்கு வந்திருக்காங்க?” என்று கேட்டவள், அவசரமாக தனது இருக்கையில் அமர்ந்து, தனது கையால் முகத்தை மறைத்துக் கொள்ள, ப்ரியாவிடம் கேட்டுக் கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்த கேசவனின் மகன் ஹரியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

தனது தமக்கையின் கையை சுரண்டியவன், புருவத்தை உயர்த்தி சிவாத்மிகாவை காட்ட, அவளும் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

“அப்பா சொன்னது போல அக்காவுக்கு நம்மளை பார்த்த உடனே அடையாளம் தெரிஞ்சிடுச்சு.. ச்சே.. நம்ம போட்டோவை எல்லாம் பார்த்து ரொம்ப ஃபீல் பண்ணி இருப்பாங்க இல்ல..” என்றவள், ப்ரியாவிடம் திரும்பி,  

“எனக்கு அவங்களை பார்த்தே ஆகணும்.. ப்ளீஸ்.. அவங்களைப் பார்க்கவே நாங்க பெங்களூர்ல இருந்து வந்திருக்கோம்..” அந்தப் பெண் கெஞ்சுவது போலக் கேட்க,

“ஒரே நிமிஷம்.. நான் அவங்க கிட்ட கேட்டுட்டு வந்துடறேன்..” என்று ப்ரியா நகரவும், ஒரு பெருமூச்சுடன், தனது முகத்தில் இருந்த கையை எடுத்துவிட்டு, அவர்களை நிமிர்ந்துப் பார்த்தவள், எந்த பிகுவும் செய்யாமல், அவர்களை உள்ளே அனுப்புமாறு சைகைக் காட்டவும், ப்ரியா அவர்களை உள்ளே அனுப்பினாள்.

“ஹாய் அக்கா.. நான் ஹரிவம்சி கேசவன்..” என்றபடி கேசவனின் மகன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளே வர, சிவாத்மிகா எந்த பதிலையும் சொல்லாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹாய் அக்கா.. நான் சிவானி கேசவன்..” கேசவனின் மகளும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, இருவரையும் எந்த பதிலும் சொல்லாமல்,

“நான் சிவாத்மிகா.. இங்க ஆத்மிகா..” தனது பெயரை மட்டும் சொல்லி அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், இருவரும் அவளது அந்த பதிலில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  

“ஹலோ சிவாக்கா..” மீண்டும் ஹரி அழைக்கவும், தலையை உலுக்கிக் கொண்டவள்,

“ஹாய்.. நான் ஆத்மிகா.. சொல்லுங்க உங்களுக்கு  என்ன ஹெல்ப் பண்ணணும்?” என்று அவள் கேட்கவும்,

“ஹெல்பா..” என்று சிவானி திகைத்துக் கேட்க, அவளது முகத்தைப் பார்த்த சிவாத்மிகா, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

ஒருவேகத்தில் சிவாத்மிகாவை பார்க்க இருவரும் காரை எடுத்துக் கொண்டு, அவர்களது தாய் மறுத்து, தடை விதித்த பொழுதும் கிளம்பி வந்தாலும், சிவாத்மிகாவிடம் என்ன பேசுவதென்று யோசிக்காமல் போயினர்.

காரில் வந்த பயண நேரம் முழுவதும், இருவருக்குமே தங்களது வீட்டில் இத்தனை வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த உண்மை தெரிந்த அதிர்ச்சியில் இருந்தனர். அதை விட, பாசமே உருவான தனது அன்னை, சிவாத்மிகாவிற்கு இழைத்த அநீதியும், அதைத் தனது தந்தை தடுக்காதது மட்டுமின்றி, அவளை அப்படியே அநாதையாக விட்டதும் அல்லாமல், அவள் திருப்பித் தந்தப் பணத்தைக் கூட வாங்கிக் கொண்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதைப் பற்றியே பேசி அங்கலாய்த்துக் கொண்டு வந்தவர்கள், அவளிடம் என்ன பேச வேண்டும் என்பதை யோசிக்கத் தவறினர்.      

சிவாத்மிகா கேள்வி கேட்டதும், இருவரும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தனர். இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க, “என்ன? சும்மா என்னை பார்க்க வந்து இருக்கீங்களா? என்ன வேணும்ன்னு கேட்டா இப்படி முழிக்கறீங்க?” ஏனோ அவர்கள் இருவரையும் பார்த்து சிவாத்மிகாவிற்கு வம்பு வளர்க்கத் தோண, அவள் பேச்சை வளர்த்தினாள்.

“ஹ்ம்ம்.. ஆமா..” என்ற இருவரும் கூறிய பிறகு, உடனே மறுப்பாக தலையசைக்க, சிவாத்மிகா புருவத்தை ஏற்றி கேள்வியாகப் பார்த்தாள்.

“உங்களைப் பார்க்கத் தான் வந்தோம்..” என்ற சிவானியை அதிசயமாகப் பார்க்க,

“நான் என்ன அவ்வளவு பெரிய வி.ஐ.பி.யா? பெங்களூர்ல இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கீங்க? ஐம் சப்ரைஸ்ட்..” எனவும்,

“அக்கா.. நாங்க யாருன்னு உங்களுக்கு நல்லா தெரியும்.. அப்படித் தெரிஞ்சும் நீங்க தெரியாத மாதிரியே ஏன் இருக்கீங்க? எங்களுக்கு உங்களைப் பத்தி எல்லாம் தெரியும்.. நேத்து அப்பா எல்லாமே சொல்லிட்டார்..” ஹரி சொல்லவும்,

“அதுக்கு இப்போ என்ன? எனக்கு அவரைப் பத்தியோ.. இல்ல வேற எது பத்தியோ பேச இஷ்டம் இல்ல..” முகம் இறுக அவள் சொல்லவும், சிவானி கவலையாக ஹரியைப் பார்த்தாள்.   

“சாரி அக்கா.. ரொம்ப சாரி.. நிஜமா இப்படி ஒரு விஷயம், எங்க வீட்டுல ரகசியமா இருக்கும்ன்னே எங்களுக்குத் தெரியாம போச்சு.. கனவுல கூட இப்படி ஒரு ரகசியம் இருக்கும்னு தோணவே இல்ல.. முன்னயே தெரிஞ்சு இருந்தா நாங்க உங்களை அப்போவே பார்க்க வந்திருப்போம்.. உங்களை இப்படி விட்டு இருக்க மாட்டோம் அக்கா..” ஹரி டக்கென்று சொல்லவும், சிவாத்மிகா முகம் கடுமையை பூசிக் கொள்ளத் துவங்கியது..

“இதைப் பத்தி பேச வேண்டாம்ன்னு சொன்னேன்..” அவள் சொல்லவும்,  

“அக்கா.. ப்ளீஸ்.. நாங்க சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க அக்கா.. அவங்க செஞ்ச தப்புக்கு நாங்க என்ன செய்யறது? எங்க கூட பேசுங்க.. உங்களைப் பார்க்க தானே நாங்க பெங்களூர்ல இருந்து வந்திருக்கோம்..” சிவானி கேட்க, சிவாத்மிகா தலைகுனிந்து அமர்ந்தாள்.

மீண்டும் அதற்கு மேல் அங்கு என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதி.. அந்த அமைதியைக் கலைத்து, “நாங்க நேத்து சாப்பிடும்போது உங்களைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.. அப்பாவுக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்து சந்தோஷத்துல கண்ணு கலங்கிருச்சு.. நாங்க என்ன ஏதுன்னு கேட்கவும் தான் அவருக்கே அடக்க முடியாம எல்லா விஷயத்தையும் சொல்லிட்டார்.. உடனே உங்களை பார்க்க வந்தே ஆகணும்னு கிளம்பி வந்துட்டோம்.. என்ன பேசறது என்னன்னு எல்லாம் எங்களுக்கு தெரியல.. எங்களுக்கு உங்களைப் பார்க்கணும்.. அவ்வளவு தான் தோணிச்சு.. கிளம்பி வந்துட்டோம்..” என்றவனைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தவள்,                              

“எமோஷனல் மைன்ட் செட்ல கிளம்பி வந்துட்டீங்க? அப்படித் தானே.. சரி.. தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்..” சிவாத்மிகா அதோடு அந்த பேச்சை முடிக்க நினைக்க,

“இத்தனை நாளா எப்படியோ போகட்டும் அக்கா.. அது தெரிஞ்சு இருந்தா நாங்க உங்களை எங்க கூட கூட்டிட்டு போயிருப்போம்.. இப்போ மட்டும் என்ன.. நாங்க அடிக்கடி வரோம்.. நீங்களும் வாங்க.. அடிக்கடி நாம பேசலாம்.. இனிமே எல்லாம் எங்க அக்காவை நாங்க தனியா விட மாட்டோம்..” தம்பியின் பொறுப்போடு ஹரி சொல்ல, சிவாத்மிகா அவனைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள்.    

“இத்தனை நாளா நான் தனியா தானே இருந்தேன்.. எனக்கு இதுவே பழகிப் போச்சு.. அதோட என்னோட லைஃப்ல பார்க்கவே வேண்டாம்ன்னு இருந்த ரெண்டு பேரையும் பார்த்ததே எனக்கு இன்னும் கடுப்பா இருக்கு.. இதுல என்ன காமடின்னா ரெண்டு பேருக்குமே என்னை அடையாளம் தெரியல.. என்னை இப்படியே தனியா விட்டா போதும்ன்னு இருக்கும்.. எனக்கு இந்த உறவுகள் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. உங்க அப்பா சொன்னதை வச்சு நீங்க என் மேல இருந்த பரிதாபத்துல இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்ப நன்றி.. அந்த அளவுக்கு உங்களுக்குள்ள மனிதம் இருக்குங்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..” என்றவள், நேராக நிமிர்ந்து அமர்ந்து இருவரையும் பார்த்தாள்.

“அப்படிச் சொல்லாதீங்க அக்கா.. நேத்திக்கு எங்க அம்மா உங்களுக்கு இப்படி ஒரு அநியாயம் செஞ்சிட்டாங்கன்ன உடனேவே நான் அவங்களை சத்தம் போட்டுட்டேன்.. அதோட நேத்து இருந்து அவங்க கிட்ட பேசவே இல்ல.. அப்பாவையும் நல்லா கேள்வி கேட்டுட்டேன்.. நேத்து ரூமுக்குள்ள போன அப்பா தான்.. நைட் சாப்பிட கூட வரல..” ஹரியின் பதிலில், சிவாத்மிகா மறுப்பாக தலையசைத்தாள்.

“உங்க காயம் எங்களுக்கு புரியுது அக்கா.. சத்தியமா எங்களுக்கு முன்னாலயே உங்களைப் பத்தி தெரிஞ்சிருந்தா நாங்க உங்களை எங்க கூட சண்டைப் போட்டாவது கூட்டிட்டு போயிருப்போம்.. இப்போவும் அப்படித் தான் எங்களால உங்களை விட முடியாது.. எனக்கு எங்க அக்கா வேணும்.. அவ்வளவு தான்.. அதுக்காக எங்க அம்மா கூட சண்டைப் போடறதுனாலும் சரி.. அதைச் செய்வேன்..” ஹரி உறுதியாகக் கூறவும், சிவாத்மிகா ஆயாசமாக அவனைப் பார்த்தாள்.

“உங்களுக்கு தம்பி நான் இருக்கேன் அக்கா.. இனிமே உங்களை எல்லாம் அப்படி விட மாட்டேன் அக்கா.. அடிக்கடி இங்க வருவேன்.. ஏன் அடுத்த வருஷம் படிப்பை முடிச்சு நான் இங்கயே கூட வேலை வாங்கிட்டு வந்துடுவேன்.. இனிமே எல்லாம் உங்களை தனியா விடற ஐடியா எல்லாம் இல்ல. இத்தனை நாள் தெரியாம போச்சு.. இப்போ அப்படி இல்ல.. எங்க அம்மா என்ன சொன்னாலும் பரவால்ல.. எங்கள அவங்க கோபம் ஒண்ணும் செய்ய முடியாது..” ஹரி திடமாக சொல்ல, சிவாத்மிகாவின் கண்கள் கலங்கியது.   

ஆனாலும் அவள் அமைதியாக இருக்கவும், “அக்கா அப்போ எங்க கூட எல்லாம் உங்களுக்கு பேசணும்னு இல்லையா? உங்களைப் பார்க்க எவ்வளவு ஆசையா ஓடி வந்திருகோம் தெரியுமா?” சிவானி பரிதாபமாகக் கேட்க,

“தெரியல.. எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. எனக்கு எல்லாமே புதுசா இருக்கு. ஏத்துக்க பயமா இருக்கு.. திடீர்ன்னு சொந்தம்ன்னா நான் என்ன பண்ணுவேன்.. அன்னைக்கு அவர் வந்து நேர்ல நின்னதுவே இன்னும் எனக்கு நம்ப முடியல.. இப்போ அவர் சொல்லி நீங்க எல்லாம் வந்தீங்கன்னு தெரிஞ்சதுல.. எனக்கு பேச வார்த்தை இல்ல..” தனது நிலையை மெதுவாக எடுத்துச் சொன்னவள், ப்ரியாவைப் பார்க்க, ப்ரியா இருவருக்குமான ஜூஸ்களை கொண்டு வந்துக் கொடுத்தாள்.

“தேங்க்ஸ் அக்கா.. காலையிலேயே ஒண்ணும் சாப்பிடல..” என்ற சிவானி, அந்த ஜூசை ஒரே மடக்கில் குடித்து முடித்து,

“மை டியர் அக்கா.. உங்க டிசைன் எல்லாமே செமயா இருக்கு.. உங்க ரசனை சும்மா அப்படி இருக்கு.. இப்போ பெங்களூர்ல நடந்த பேஷன் ஷோல உங்க டிரஸ் பக்கா.. நான் உங்க போட்டோவை எத்தனை தடவ பார்த்தேன்னு கணக்கே கிடையாது.. ரொம்ப ரொம்ப சூப்பர்.. உங்க கல்யாண டிரஸ் பார்க்க நிஜமா நான் ரொம்ப ஆவலா இருக்கேன்..” சிவானி படபடவென்று பேச, அந்த நாள் நிகழ்வில் சிவாத்மிகாவின் முகம் அழகாக மலர்ந்தது..  

அவளது முகத்தை புன்னகையுடன் ஹரி பார்த்துக் கொண்டிருக்க, “எனக்கு உங்க டிசைன்ஸ் எல்லாமே ரொம்ப பிடிச்சு இருக்கு.. எனக்கு ஒரு டிரஸ் டிசைன் பண்ணிக் கொடுங்க.. ப்ராக் டைப்.. எனக்கு பர்த்டே வருது.. நான் என் ப்ரெண்ட்ஸ் கிட்ட கெத்தா, எங்க அக்கா செஞ்சதுன்னு காட்டணும்.. ஏற்கனவே நானும் என் ப்ரெண்ட்சும் உங்க சைட்ல அலசி ஆராஞ்சு நிறைய டிசைன் எடுத்து வச்சிருந்தோம்.. ஆனா.. எனக்கு அதுல இல்லாதது போல புதுசா வேணும் அக்கா.. ப்ளீஸ்…”  என்ற சிவானி, தனது மொபைலில் இருந்த அவளது உடை மாடல்களை எடுத்துக் காட்ட,  அதில் இருந்த அவர்களது புகைப்படங்களைப் பார்த்தவளின் முகத்தில் புன்னகை..  

“இப்போ உடனே வேணும்ன்னா என் கைல எதுவுமே இல்லையே.. அது ஸ்டிட்ச் பண்ணித் தான் தரணும்.. நீங்க வேணா மாடல் பாருங்க.. நான் உங்களுக்கு ரெடி பண்ணி கொரியர் பண்ணிடறேன்.. இன்னும் உங்க பர்த்டேக்கு இருபது நாள் இருக்கே..” என்று சொல்லி அவர்களை அனுப்ப வழியைப் பார்க்க,

“அக்கா.. என்னோட பர்த்டே உங்களுக்குத் தெரியுமா? எப்படி?” சிவானி ஆச்சரியமாகக் கேட்க,

“தெரியும்..” என்ற சிவாத்மிகாவின் குரலில் தான் அவ்வளவு வலி..

அதை உணர்ந்த ஹரி.. “அக்கா.. அதை மறந்துடுங்கன்னு சொல்ல முடியாது.. மறக்கற மாதிரி அப்பாவும் அம்மாவும் செய்யல.. ஆனா. இனிமே நாம அதை பேச வேண்டாம்.. நாம அவங்களை சேர்த்துக்க வேண்டாம்.. நாம எல்லாம் ஜாலியா இருப்போம்..” என்றவன்,

“சீக்கிரம் அக்காகிட்ட டிசைன் எல்லாம் காட்டு.. உனக்கு தேவையானது எல்லாம் பாரு..” சிவானியிடம் சொன்னவன்,  

“நீங்க அவளுக்கு டிசைன் காட்டுங்க.. ஸ்டிட்ச் பண்ண எவ்வளவு நாள் ஆகும் சொல்லுங்க.. நாங்க இருந்தே வாங்கிட்டு போறோம்.. இங்க எங்க அக்கா வீடு இருக்கு.. அதனால பிரச்சனை இல்ல..” என்று ஹரி சொல்லவும், சிவாத்மிகா மலைத்தே போனாள்.

அவள் இருவரையும் விழி விரித்துப் பார்க்க, “ஹான்.. ஒரு வாரம் ஆனாலும் பரவால்ல.. எங்க அக்கா வீட்ல தங்கி இருந்து வாங்கிட்டு போறோம்.. ப்ராப்ளம் இல்ல.. எங்க அக்கா எங்களை உள்ள விட மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க.. அப்படியே சொன்னாலும் எங்க மாமா வீட்டுக்கு போயிடுவோம்.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க..” சிவானி ஒத்து ஊதவும், இருவரையும் சிவாத்மிகா பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

இருவரும் சண்டையிட்டால் சண்டைப் போடலாம்.. இப்படி அன்பாக தேடி வரும்பொழுது அவளால் முகத்தில் அடித்தது போல பேச முடியாமல் போனது. அதுவும் ஹரி அவர்களது அன்னையிடம் சண்டையிட்டுக் கொண்டு, தன்னை பார்க்க வந்திருப்பதும், அவன் சண்டையிட்டாவது மீண்டும் மீண்டும் வருவான் என்றும் தோன்ற,

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவள் அமர்ந்திருக்க, “அக்கா.. அவளுக்கு டிசைன் காட்டுங்க.. கார்ல வரும்பொழுது, ஒரு அஞ்சு டிரஸ்சாவது அக்காகிட்ட இருந்து ஸ்டைல் பண்ணி வாங்கிட்டு வரணும்ன்னு சொல்லிட்டே வந்தா.. ஒரு வாரம் என்ன? ஒரு மாசம் கூட நீங்க எடுத்துக்கோங்க.. பாவம் சின்னப் பொண்ணு.. இல்ல.. அழுது ஊரையே கூட்டிடுவா.. அப்பறம் அவளை சமாளிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவீங்க..” ஹரி சிரித்துக் கொண்டே சொல்லவும், இருவரையும் சிவாத்மிகா புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“டிசைன் காட்டுங்க அக்கா.. டிசைன்..” என்று சிவானி கேட்கவும், தனது அருகில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் அவளிடம் நகர்த்தி வைக்கவும், சுடிதார் டிசைன் இருந்த பைல்களை அவள் பார்த்துக் கொண்டிருக்க,

“உனக்கு லாங் டாப்ல இந்த டிசைன் நல்லா இருக்கும்.. டால் மாதிரி இருக்கும்.. நீ கொஞ்சம் ஹைட்டா வேற இருக்க இல்ல.. செமையா இருக்கும்..” என்றவள், அந்த டிசைன் இருந்த பக்கத்தை எடுத்து நீட்டவும், அதைப் பார்த்தவள்,

“வாவ் சூப்பர் அக்கா.. செமையா இருக்கு.. உங்க டேஸ்ட்டே டேஸ்ட் தான்..” என்றவள், அதற்கான துணி, கலர்களை பற்றி கேட்கத் துவங்க, சிவாத்மிகா அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஹே.. சிவா..” ஹரி அழைக்கவும், இருவருமே அவனை நிமிர்ந்துப் பார்க்க,

சிவாவைப் பார்த்ததும், அப்பொழுது தான் தனது தவறை உணர்ந்தவன், “ஹையோ சாரி அக்கா.. இந்த அப்பா ரெண்டு பொண்ணுங்க பேரையும் ஒரே போலவே வச்சிருக்காங்க.. லிட்டில் கன்ப்யூஷன்..” என்றவன், அவள் முறைக்க முயலவும், உதட்டைப் பிதுக்கிவிட்டு,

“சிவானி.. எனக்கு ரொம்ப பசிக்குது.. ரொம்ப நேரம் பண்ணாதே.. காலையில இருந்தே சாப்பிடல.. இந்த ஊரும் நமக்குத் தெரியாது.. டிரைவர் தாத்தாவும் காலையில டீ குடிச்சது தான்.. ப்ளீஸ் டி.. கொஞ்சம் கருணை காட்டு.. சாப்பிட்டு வந்து கண்டின்யு பண்ணு” என்று சொல்லவும்,

அவனைப் பார்த்த சிவா, “நான் எப்படியும் லஞ்ச்க்கு வீட்டுக்கு தான் போறேன்.. அக்காக்கிட்ட சொல்லி சாப்பாடு செய்யச் சொல்றேன்.. அங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க..” திக்கித் திணறி அவள் அழைக்க, அதற்கே ஹரி மகிழ்ந்து போனான்.

“இப்போ நீங்க கூப்பிடலைன்னா கூட நானே கேட்டு இருப்பேன்.. உங்களை சமைக்க சொல்லி கூட சாப்பிட்டு இருப்பேன்.. எனக்கு கொஞ்சம் நல்லா தூங்கனும்.. நேத்து நைட் தூக்கமே இல்ல.. ஒண்ணு வேணா செய்யலாமா? நாம வீட்ல போய் சாப்பிட்ட அப்பறம், நீங்க ரெண்டு பேரும் இங்க திரும்பி வந்து செலெக்ட் பண்ணுங்க. நான் அங்க வீட்லயே தூங்கறேன்.. எப்படி என் ஐடியா?” ஹரியின் பதிலில் சிவாத்மிகா சிரிக்கத் துவங்கினாள்.

தலையில் இடம் வலமாக ஆட்டியவள், “சரி.. போகலாம்.. அதுக்கு முன்ன நான் அக்காவ கூப்பிடறேன். திடீர்னு போனா அவங்க கொஞ்சம் டென்ஷன் ஆகிடுவாங்க.. எங்க அண்ணன் அப்பறம் ஏன் அவளை டென்ஷன் பண்ணினன்னு என்னை பிச்சிருவாங்க..” என்றவள், ராதாவிற்கு அழைத்தாள்.  

“அக்கா.. நான் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடுவேன்.. என் கூட இன்னும் ரெண்டு பேர் வராங்க.. கொஞ்சம் ஏதாவது பண்ண முடியுமா?” என்று கேட்கவும்,

“பாப்பா.. என்ன இப்படி கேட்டுட்டு இருக்க? நான் செஞ்சது இல்லாம அம்மா வேற பிரியாணி கொண்டு வந்து கொடுத்திருக்காங்க.. நான் இன்னும் கூடப் போட்டு செய்யறேன்.. நீ கூட்டிட்டு வா..” என்றவள், போனை வைக்கவும், சிவாத்மிகா சிவானியைப் பார்த்தாள்.

“ஏதாவது தெறிச்சா?” என்று சிவாத்மிகா கேட்க,

“அக்கா.. நான் சைட்ல பார்த்ததை விட இதுல நிறைய நல்லா இருக்கு.. எதை எடுக்கறது? எது வைக்கிறதுன்னே தெரியல.. இது ஓகே வா பாருங்க.” என்று அவள் கேட்கவும்,  

“சரி.. நாம வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு வேலையைப் பார்க்கலாம்.. டிசைன் ஃபைல் கையில எடுத்துக்கோ.. அங்கேயே பார்த்துட்டு சொல்லு.. நாளைக்கு உங்க ட்ரெஸ் ரெடி பண்றது போல சொல்றேன்..” என்றவளை ஹரி பார்க்க, தனது கார் சாவியை எடுத்துக் கொண்டவள், ப்ரியாவிடம் சொல்லிவிட்டு, அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

“அக்கா.. நாங்க உங்க கூட கார்ல வரோம்..” என்ற ஹரி,

“தாத்தா.. நீங்க அக்கா காரை ஃபாலோ பண்ணி வாங்க..” ஹரி சொல்லிவிட்டு, சிவாத்மிகா அன்லாக் செய்ததும், காரின் முன் பக்கம் ஏறிக் கொள்ள, சிவானி அவனைத் தொடர்ந்து பின் பக்கம் ஏறிக் கொள்ளவும்,

“டேய்.. நீ என்கிட்டே உதை வாங்கப் போற.. ரொம்ப படுத்தற..” என்றவள், காரை இயக்க, அவள் அழைத்த விதத்தில் சிரித்தவன், தனது போனை எடுத்து, மெசேஜ்களை பார்த்துக் கொண்டு வந்தான்.

அர்ச்சுனரே அர்ச்சுனரே

ஆசையுள்ள அர்ச்சுனரே

அழகான வில் வளைத்து

அம்பு விடுவது எக்காலம்   

அர்ஜுனின் அழைப்பு வரவும், பழக்க தோஷத்தில் அவள் போனை காருடன் இணைத்திருக்க, அந்தப் பாட்டைக் கேட்ட ஹரியும் சிவானியும், சிவாத்மிகாவைப் பார்த்து சிரிக்க, அவசரமாக செல்லை இயக்கவும்,

“ஓய் சிட்டு.. என் லட்டு.. என் ஸ்வீட்ட்டே… நான் ஷூட் முடிச்சிட்டு கேரவனுக்கு வந்துட்டேன்.. நீ சாப்பிட கிளம்பிட்டியா? வீட்டுக்குத் தானே போற?” எடுத்ததும் அவன் கேட்க,  

“அஜ்ஜு… நான் கிளம்பிட்டேன்.. நீங்க சாப்பிட்டீங்களா? இங்க என் கூட பெங்களூர்ல இருந்து வந்த பசங்க ரெண்டு பேரும் இருக்காங்க..” அவசரமாக அவள் சொல்லவும், அர்ஜுன் ‘ஹான்.’ என்று கேட்டான்..

“என்ன ஹான்? இவன் என்னை ரொம்ப படுத்தறான்..” அவள் சிறு குழந்தை போல சொல்லவும், அவளது குரலைக் கேட்ட அர்ஜுன் சிரித்து,  

“யாரு சிட்டு.. ஹரியும் சிவானியும்மா.. யூ மீன் உன் தம்பி அண்ட் தங்கை..” என்று கேட்க,

“ஹ்ம்ம்.. ஆமா அர்ஜுன்.. நேத்து அவரு வீட்ல சொல்லிட்டாராம்..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“உடனே உன்னைப் பார்க்க வந்துட்டாங்களா?” என்று கேட்டவன்,

“ஹாய் ஹரி.. ஹாய் ஷிவானி.. வெல்கம் டு சென்னை..” அர்ஜுன் சொல்லவும், ஹாரி அதிர்ச்சியும் ஆச்சரியத்துடனும் சிவாத்மிகாவைத் திரும்பிப் பார்த்தான்.

“ஹலோ.” அர்ஜுன் மீண்டும் அழைக்கவும்,

“இருங்க அவன் ஷாக்ல போனையே பார்த்துட்டு இருக்கான்.. தெளிஞ்சு பேசுவான்..” சிவாத்மிகா கிண்டல் செய்யவும், போட்டோவில் பார்த்தே இருவரையும் ரசித்துக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது இருவரையும் நேரில் பார்த்து மகிழ்ந்து போயினர்.. அர்ஜுன் எந்த பந்தாவும் செய்யாமல் இயல்பாக பேசவும், இருவருமே விழிதட்டி இமைக்காமல் போனையே பார்த்துக் கொண்டிருந்தனர்..   

“என்னாச்சு ஹரி..” சிவாத்மிகா கேட்கவும்,

ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன், “ஹ.. ஹலோ.. மாமா. தேங்க்ஸ் மாமா.. நாங்க முதல் தடவ சென்னை வந்திருக்கோம்.. அதுவும் எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கோம்.. அவங்க உள்ள விடலைன்னா உங்க வீட்டுக்கு வந்து போராட்டம் பண்ணலாம்ன்னு பிளான் பண்ணிட்டு இருந்தோம்..

ஆனா.. அதுக்கு எல்லாம் வேலை வைக்காம அக்காவே எங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. அதனால நீங்க தப்பிச்சீங்க.. இல்ல நடிகர் அர்ஜுனின் மச்சான், கொழுந்தியாள் இருவரும் போராட்டம்ன்னு தலைப்புச்செய்திகள் வந்திருக்கும்..” ஹரி சொல்வதைக் கேட்டு சிவாத்மிகா முழிக்க,

“அடப்பாவி.. டேய்.. இதெல்லாம் அடுக்காது.. நானும் வேணா உங்க கூட சேர்ந்து போராட்டம் பண்ணி இருப்பேன்..” என்று விளையாட்டாகச் சொன்னவன்,

“சரி.. ட்ராவல் பண்ணி வந்திருக்கீங்க. நீனாக் போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க..” அர்ஜுன் சொல்லவும்,

“அது தான் மாமா.. போயிட்டு நல்லா சாப்பிட்டு தூங்க போறோன்.. ரொம்ப டயர்ட்டா இருக்கு..” ஹரி சொல்லவும், சிவாத்மிகா அவனைப் பார்க்க,

“ஹஹஹா.. அதுவும் பிளானோட தான் வந்து இருக்கியா? செம ஹரி.. சாப்பிட்டு தூங்குங்க..” என்றவனிடம்,  

“மாமா நானும் இங்க இருக்கேன்.. தேங்க்யூ.. அண்ட் யூ ஆர் சோ ஸ்வீட்.. ட்விட்டரா இருந்தா.. ‘லவ் யூ பியூட்டிஃபுல் ஹுயுமன்’னு ட்வீட் போட்டு இருப்பேன்.. இங்க எங்க அக்கா என்னை அந்த ட்விட்டர் பறவை போலவே பறக்க விட்டுடுவாங்க.. சோ.. அடக்கி வாசிக்கிறேன்..” சிவானி அவசரமாகச் சொல்லவும், அவள் சொல்வதைக் கேட்டு அர்ஜுன் புரை ஏற இரும்பா, சிவாத்மிகா அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

தன்னை சரி செய்துக் கொண்டவன், “ஹாய் சிவானி.. எங்க உன் சவுண்ட் காணும்ன்னு பார்த்தேன்.. தேங்க் யூ ஃபார் யுவர் கைண்ட் வார்ட்ஸ்…” அவளுக்கு நன்றி தெரிவித்தவன்,  

“சிட்டு.. நீ வீட்டுக்கு போயிட்டு வீடியோ கால் பண்ணு.. இன்னும் ஒரு மணி நேரம் நான் ஃப்ரீ தான்.. இப்போ உங்க அண்ணன் பேசணுமாம்.. என்னைப் படுத்தறான்..” என்று வினயிடம் கொடுக்க, வினய் அந்த ப்ளோஅப் பொருத்தும் பணியைப் பற்றி கேட்டுவிட்டு போனை வைக்க, அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

“அர்ஜுன் மாமா இஸ் சோ லவ்லி.. ரொம்ப கேஷுவலா பேசறாங்க.. ஹையோ.. எனக்கு நம்பவே முடியல..” ஷிவானி சொல்ல,

“அக்கா. நிஜமா ரொம்ப டவுன் டு எர்த்தா இருக்கார்.. எங்களை எல்லாம் அவருக்கு தெரியுமா? சொல்லி இருக்கீங்களா?” ஹரி கேட்க, சிவாத்மிகா தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

“உங்களைப் பத்தியும் தெரியும். சவிதா, சந்தியா பத்தியும் தெரியும். சவிதாவுக்கு மேரேஜ்க்கு டிரஸ் டிசைன் பண்ண அவ அம்மா கூட வந்தாங்க..” ஒட்டியும் ஒட்டாத குரலில் அவள் சொல்ல, புருவம் சுருக்கி யார் அந்தப் பெண்கள் என்று யோசித்த ஹரிக்கு, அவள் சொன்னது புரிந்ததும், அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“சாரி அக்கா.. நிஜமா உங்களைப் பத்தி தெரிஞ்சி இருந்தா நான் அப்போவே வந்து இருப்பேன்.. உங்களைத் தனியா விட்டே இருக்க மாட்டேன்.” ஹரி வருத்தமாகக் கூற, ‘ம்ப்ச்..’ என்றவள், வண்டி ஓட்டுவதில் கவனம் பதித்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும், காரை நிறுத்திய சிவாத்மிகாவிற்கு, ராதா வாசல் கதவைத் திறத்து விட, அவளுடன் இறங்கிய இருவரையும் பார்த்தவள், சிவாத்மிகாவை திகைப்பாகப் பார்க்க, “அக்கா.. இவங்க..” என்று சிவாத்மிகா சொல்வதற்குள்,

“உன் தம்பியும் தங்கையும் தானே பாப்பா.. தம்பி போன் பண்ணி நீ அவங்களை கூட்டிட்டு வர விஷயத்தைச் சொல்லிட்டாங்க…” என்றவள், பின்னால் நின்று இரண்டு வீடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள்.

“சிவாம்மா.. வெளியவே ஏன் நின்னுட்டு இருக்க.. உள்ள வா.” நிர்மலா அழைக்க,

“அம்மா.. நீங்க இங்க தான் இருக்கீங்களா? தூங்கலையா?” அவரிடம் சிவா ஓடிச் செல்ல,

“வாப்பா.. வாம்மா..” என்று அவரை வேடிக்கைப் பார்த்த ஹரியையும், ஷிவானியையும் அழைத்தவர்,

“ஆமாடா கண்ணம்மா.. சாப்பிட்டு தூக்கம் வரல.. அது தான் இங்க வந்தேன்.. நீ ஓகே தானே..” அவளது கன்னத்தை வழித்துக் கேட்கவும், சிவாத்மிகா செல்லமாக அவளது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“நான் ஓகே தான்மா.. இந்த அஜ்ஜு வேலையா இது? அவசரமா போனை வைக்கும் போதே நினைச்சேன்..” என்றவள், இருவரையும் நிர்மலாவிற்கு அறிமுகம் செய்து வைக்க, ஹரி அவருக்கு வணக்கம் கூற, சிவானி அவரைப் பார்த்து புன்னகைக்க,  

“சிவாம்மா.. இவ உன் ஜாடைல தான் இருக்கா.. சேர்ந்து போனீங்கன்னா ஈசியா அவ உன் தங்கைன்னு எல்லாரும் சொல்லிடுவாங்க..” என்று கிண்டல் செய்தவர்,

“உள்ள வாங்க..” என்று இருவரையும் அழைக்க, ஹரி சிவாவை புரியாமல் பார்த்தான்.

“அது தான் அர்ஜுனோட வீடு..” என்று பக்கத்து வீட்டைக் காட்டியவர்,

“உங்களை எல்லாம் பார்த்து சிவா கொஞ்சம் எமோஷனலா ஆகிடப் போறான்னு அவனுக்கு ரொம்ப கவலை. அவனுக்கு சிவாவோட குரல் ஓகே வா இருந்தாலும்.. என்னைப் பார்த்து எதுக்கும் ஒரு தடவ கன்ஃபார்ம் பண்ணிக்கச் சொன்னான்.. அது தான் உடனே கிளம்பி ஃப்ளைட் பிடிச்சு வந்துட்டேன்..” நிர்மலா கேலி செய்யவும், ‘அம்மா..’ என்று சிவாத்மிகா சிணுங்க, அவளது கன்னத்தைத் தட்டியவர், அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

ராதா அவர்களுக்கு உணவை தடபுடல் செய்திருக்க, அவர்களது அன்பில் ஹரி நெகிழ்ந்து போனான். “ஐம் ஹாப்பி அக்கா.. உங்க நல்ல மனசுக்கு உங்களைச் சுத்தி நல்ல மனுஷங்க இருக்காங்க.” நிம்மதியாகக் கூறிய ஹரி, அடுத்த இரண்டு நாட்களும் சிவாத்மிகாவுடனே சுற்றி வந்தான்.

அவர்கள் ஊருக்கு கிளம்பும் பொழுது, சிவாத்மிகா ஷிவானி கேட்ட உடையை அழகாக தைத்துக் கொடுக்க, அதைப் பார்த்தவள், சிவாத்மிகாவை கட்டிக் கொண்டு அவளது கன்னத்தில் முத்தம் பதித்து,  

“அக்கா.. சோ.. சோ லவ்லி அக்கா..” என்று அனைத்தையும் அணிந்து காட்டியவள், அதில் அவளுக்காக சிவாத்மிகா ஒரு சுடிதார் குர்தா போன்ற ஒரு உடையை புது விதத்தில் தைத்து இருக்கவும், அந்த உடையைப் பார்த்தவள் மிகவும் மகிழ்ந்து போனாள்.

“உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. காலேஜ் முடிச்சிட்டு மேல படிக்க நான் இங்க தான் வரப் போறேன்..” என்றவள் சந்தோஷத்துடன் கிளம்ப,

“அக்கா.. உங்க கல்யாணத்துக்கு இன்விடேஷன் அனுப்ப மறந்துடாதீங்க.. நான் ஒரு வாரம் முன்னாலேயே எங்க அக்காவோட கல்யாணத்துக்கு வந்துடுவேன்..” என்ற ஹரியின் கன்னத்தைத் தட்டியவள்,  

“கண்டிப்பா உனக்கு இன்பிடேஷன் அனுப்பறேன். ரெண்டு பேரும் வாங்க..” என்றவள், அவர்களை அன்புடன் அனுப்பி வைக்க,

“அக்கா.. ஒரே ஒரு தடவ..” என்ற ஹரி, அவளை தோளோடு இறுக அணைத்து,

“யூ ஆர் எ இன்ஸ்பிரேஷன் அக்கா.. தினமும் போன் பண்ணுவேன்.. க்ரூப்ல மெசேஜ் பண்றேன்..” என்று அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு, பெங்களூர் கிளம்பினான்.    

அவளைப் பெற்றவர்களிடம் காட்டும் வெறுப்பை அவர்களிடம் காட்ட முடியாது போனது.. அதை விட ஹரி, மற்றும் சிவானியின் அன்பும், சிவாத்மிகாவிற்கு மிகவும் பிடித்தமாய் இருக்க, அவர்களை ஏற்றுக் கொண்டாள்..