எந்நாளும் தீரா காதலாக – 5

5 💝💝  

“அம்மா சூடா பொங்கல் கொடுத்து விட்டு இருக்காங்க.. நீ சாப்பிட்டு இரு.. இதோ வந்துடறேன்..” என்ற ராதா அவசரமாக வெளியில் ஓட, குழப்பமாக பார்த்துக் கொண்டே தனது தட்டை வைத்து, சிவாத்மிகா உண்ணத் துவங்க, கேட்டைத் திறந்து, மூச்சிரைக்க, “சார்..” என்று வினயை அழைத்து நிறுத்தினாள்.

தன்னை யார் அழைப்பது என்று திரும்பிப் பார்த்த வினய், தன் முன்பு மூச்சிரைக்க நின்றுக் கொண்டிருந்த ராதாவைக் கேள்வியாகப் பார்த்தான்.

“என்னாச்சு?” அவன் கேட்க,

“சார். நான் ஒண்ணு சொல்றேன்.. இல்ல இல்ல.. கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. தப்பா நினைச்சுக்காதீங்க..” திக்கித் திணறி அவள் சொல்லி முடிக்க, வினய் கேலியாக அவளைப் பார்த்து,

“அப்படி என்ன சொல்லப் போறீங்க? நான் வேணா அர்ஜுனை துணைக்கு கூப்பிட்டுக்கவா? உங்களைப் பார்த்தா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு..” பயப்படுவது போல போலியாக கேட்க, ராதா புரியாமல் பார்த்தாள்.

“எ.. எதுக்கு நீங்க அவரைக் கூப்பிடனும்?” குழம்பியபடி அவள் கேட்க,

“இல்ல.. நீங்க நான் தப்பா நினைச்சுக்கற அளவுக்கு ஏதோ சொல்லப் போறீங்க போல? ஒருவேளை என் அழகுல மயங்கி…” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவளது கண்களில் கக்கிய அனலைப் பார்த்த வினய்யின் வார்த்தை அவனது தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்டது.

“ஓ.. அப்போ அது இல்லையா? நான் தான் ரொம்ப கற்பனை பண்ணிட்டேன் போல..” அவன் வம்பு வளர்க்க, ராதா தலையில் அடித்துக் கொள்ள,

“சரி.. நீங்க சொல்லுங்க.. நான் அமைதியா கேட்கறேன்..” வினய், அவளது முகத்தைப் பார்த்து, வெளியேறத் துடித்த சிரிப்பை அடக்கியப்படி கேட்க,

கண்களை மூடி தன்னை நிதானித்தபடி, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போயிடறேன்.. நீங்க பாசமலர்.. பாசமலர்ன்னு சொல்லி சிவாவைக் கூப்பிடறது கேட்க நல்லா இருக்கு.. உண்மையா மனசாற கூப்பிடறீங்கன்னும் எனக்குப் புரியுது.. ஆனா.. எதுக்கும் நான் தீர விசாரிக்க கேட்டுக்கறேன்.. நீங்க சும்மா பேச்சுக்கு அப்படி கூப்பிடலையே..” அவள் கேட்கவும், மறுப்பாக அவன் தலை அசைக்க,  

“இப்போ நீங்க வீட்ல வந்து பேசினது எல்லாம் சும்மா சினிமா வசனம் இல்லையே.. நீங்க சினிமாக்காரங்க.. நடிக்கிறது எல்லாம் உங்களுக்கு புதுசு இல்ல.. அது தான்..” என்று கூறியவள், வினய் அவளை முறைக்கும் பொழுதே, அதைக் கண்டுக் கொள்ளாமல்,

“சிவா உறவுகள், அதோட பாசங்கள் எல்லாம் அனுபவிச்சது இல்ல.. நான் என்னால முடிஞ்ச அளவு அவளுக்கு பாசத்தை தரேன் தான்.. ஆனா.. அவ பாவம்.. அன்புக்கு ஏங்கிப் போயிருக்கா.. இப்போ நீங்க கூப்பிட்ட ‘சிவாம்மா’ அவ உள்ளுக்குள்ள எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்.. அந்த வார்த்தை இன்னைக்கு முழுக்க அவ காதுல கேட்டுக்கிட்டே தான் இருக்கும்..

தயவு செய்து சும்மா அவளுக்கு பாசம் காட்டி இது பண்ணிறாதீங்க.. திரும்பச் சொல்றேன்.. நீங்க மனசால தான் கூப்பிட்டீங்கன்னு எனக்கு தெரியுது.. இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்கு சொல்றேன்.. அவளுக்குள்ள இருக்கறது ஒரு உடஞ்ச பொண்ணு.. அன்புக்கு ஏங்கி ஏங்கி தனியா தவிச்ச ஒரு சின்னப் பொண்ணு..                                

ரெண்டு வருஷத்துக்கு முன்ன புருஷன் ஏமாத்திட்டான்னு தற்கொலை பண்ணிக்கப் போன என்னை கூட்டிட்டு வந்து, அவளோட அக்காவா.. அவளுக்கு ஒரு தோழியா அத்தனை பாசத்தை கொட்டி என்னைப் பார்த்துக்கற பொண்ணுங்க அது.. கள்ளம் கபடம் இல்லாத பொண்ணுங்க.. அவளுக்கு ஏதாவதுன்னா நான் தாங்க மாட்டேன்.. ஒரு வேலைக்காரிக்கிட்ட நீ உனக்கு என்னத் தோணுதோ அதை சமைச்சுக்கொடு.. ரொம்ப இழுத்துப் போட்டு செய்யாதே.. ரெஸ்ட் எடுன்னு சொல்ற முதலாளியைப் பார்த்து இருக்கீங்களா? என்னை அவ இந்த வீட்டுல வேலை செய்யறவளா ஒரு நாளும் நடத்தினது இல்ல..” அவள் சொல்லச் சொல்ல, அவளைப் பற்றிய செய்தி அதிர்ச்சியாக இருந்த வினய்யின் முகத்தில், இறுதியில் புன்னகை அரும்பியது..

“வி ஆர் இன் தி சேம் போட்.” அவன் சொல்லவும், ராதா புரியாமல் பார்க்க,

“நானும் இங்க அப்படித் தான்.. இந்த வீட்ல என்னை ஒரு வேலைக்காரியோட மகனா இவங்க யாரும் பார்த்ததே இல்ல..” அவன் சொல்லவும், ராதா திகைப்புடன் பார்க்க,

மெல்ல ஆமோதிப்பாக தலையசைத்தவன், “அம்மாவும் அப்பாவும் என்னையும் அர்ஜுனையும் வேற வேறயா பார்த்தது இல்ல.. அதை விட நான் தான் அர்ஜுன் கூட வெளிய போனா அவனுக்கு மரியாதை கொடுக்கணும்ன்னு ‘சார், வாங்கப் போங்க’ன்னு சொல்வேனே தவிர, அவன் அதை எதிர்ப்பார்த்தது கூட இல்ல.. என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல யாராவது மரியாதை குறைவா நடத்தினா அவன் அமைதியாவே வச்சு செஞ்சிட்டு தான் மறுவேலைப் பார்ப்பான்.” அவள் சிவாத்மிகாவைப் பெருமையாகச் சொல்லவும், தனது மனம் திறந்து தன்னைப் பற்றிச் சொன்னவன்,

“இதை எதுக்குச் சொன்னேன்னா.. நானும் யாரும் இல்லாம இருக்கறவன் தான்.. கழுத வயசுலயே அம்மாவோட இழப்ப தாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. அந்த சின்னஞ்சிறு வயசுல ஹாஸ்டல்ல உட்கார்ந்துக்கிட்டு அந்த பொண்ணு என்ன பாடுபட்டு இருக்கும்ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.. எனக்கு இவங்க எல்லாம் இருந்தாங்க.. நான் அப்பறம் அம்மாவைப் பத்தி ரொம்ப நினைக்கிறது இல்ல..

அந்த எண்ணம் வரது போல தெரிஞ்சாலே எப்படியோ அதைத் தெரிஞ்சிக்கிட்டு, அர்ஜுன் அதை வர விடமாட்டான்.. அவனுக்கு அது எப்படித் தெரியுமோ, ஆனா.. சரியா என்னை ஏதாவது செஞ்சு டைவர்ட் பண்ணிடுவான்..” என்று சொன்னவன், ஆறுதலாக அவளைப் பார்த்து புன்னகைக்க, ராதா அவன் சொல்வதைக் கேட்டு திகைத்து நின்றுக் கொண்டிருந்தாள்.  

“அதே போல.. சிவாவுக்கும் ஒரு அன்பான பையன் கிடைப்பான்.. அவளை உயிரா பார்த்துக்கறவனுக்கு நான் ஒரு அண்ணனா அவளைக் கல்யாணம் பண்ணித் தருவேன்.. நீங்க பயப்படாதீங்க.. நான் சும்மா பேச்சுக்கு சொல்லல.. நேத்து அவ நைட் உங்ககிட்ட பேசிட்டு இருந்ததைக் கேட்டு எங்க ரெண்டு பேருக்குமே மனசு கேட்கல.. எனக்கு அதே யோசனையா நைட் தூக்கம் கூட வரல.. நிஜமா சில பொண்ணுங்க எல்லாம் தப்பான வழிக்கு போறது போல இல்லாம சிவா தலைநிமிர்ந்து படிச்சு ஒரு வேலை பார்க்கறது எனக்கு அவ்வளவு சந்தோசம் தெரியுமா.. ரொம்ப பெருமையா கூட இருக்கு..” என்று மனதாரச் சொன்னவன், 

“பிரிவோட வலி தெரிஞ்சவன் நான்.. அதனால கவலைப்படாதீங்க.. நான் இது எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேன்.. சிவா எனக்கு இனிமே ஒரு தங்கை போல தான்.. அவளை நான் பத்திரமா பார்த்துக்கறேன்.. அவளை புரிஞ்ச ஒரு நல்ல பையனா.. அழகா.. அம்சமா ஒருத்தன் வருவான்.. இப்போ டைம் ஆச்சு.. அர்ஜுன்க்கு ஷூட்க்கு ரெடி பண்ணனும்.. நான் கிளம்பவா?” என்றவன், சில அடிகள் எடுத்து வைக்க, அவன் சொன்னதை மனதினில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள்,

“நாங்க கேட்டோம்ன்னா? வேற யாரு கேட்டா?” என்று அவள் கேட்க,

“அர்ஜுன்..” என்று புன்னகையுடன் சொல்லி விட்டு, மீண்டும் சில அடிகள் எடுத்து வைத்தவன்,

“என்னைக்குமே நம்ம மதிப்பு தெரியாதவங்களுக்காக எல்லாம் நம்ம விலை மதிக்க முடியாத உயிரைத் தரக் கூடாது.. அவங்க அதுக்கு தகுதியே இல்ல.. அவங்க முன்னால வாழ்ந்துக் காட்டணும்..” என்றவன், ராதா திகைத்துப் பார்க்கும்பொழுதே, படிகளில் தாவி ஏற, மீண்டும் அவன் பேசியது அனைத்தும் அவளது மனதினில் ஓடத் துவங்கியது..

‘அவரு திரும்பத் திரும்ப நல்ல பைனா தான் வருவான்னு எப்படி அவ்..வ்..வளவு உறுதியா சொல்றாங்க? எனக்கு அதுல என்னவோ இருக்கறது போல இருக்கே.. என்னவோ இருக்கு அதுல.. கண்டுப்பிடிக்கறேன்..’ என்று யோசித்துக் கொண்டே வந்தவள், அங்கு சிவாத்மிகா பொங்கலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கவும், அவள் அருகில் ஓடினாள்.

“என்ன பாப்பா இப்படி அதையே முறைச்சிட்டு இருக்க? ஏன் பொங்கல்ல உப்பு கம்மியா போச்சா?” என்று அப்பாவியாகக் கேட்கவும்,

“என்னது? பொங்கல்ல உப்பா?” என்று சிவாத்மிகா திகைப்புடன் கேட்க, உதட்டைப் பிதுக்கியவள்,

“டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கும் போது பொங்கல்ல இருக்கறது தப்பா பாப்பா..” என்றவள், அவளது தட்டில் காலை உணவை எடுத்து வைத்து, அவள் அருகில் அமர்ந்துக் கொள்ள, சிவாத்மிகா ராதாவைப் பாவமாகப் பார்க்க,

“இப்போ நீ இதை ஒழுங்கா சாப்பிடலைன்னா நான் இன்னைக்கு முழுசா சாப்பிட மாட்டேன்..” என்று விடாப்பிடியாக சொல்லவும், ஒரு பெருமூச்சுடன் அவள் உண்ணத் துவங்கினாள்.

இப்பொழுது சிவாவின் மனது முழுவதும், வினயின் ‘சிவாம்மா’ என்ற அழைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவள், அவளை மிரட்டி உண்ண வைத்தாள்.

“ரொம்ப தான் என்னை மிரட்டறீங்க அக்கா..” என்று ராதாவின் கன்னத்தைத் கிள்ளிக் கொஞ்சியவள்,

“நான் போய் டிரஸ் மாத்திட்டு கிளம்பறேன்..” என்றவளின் கையைப் பிடித்துத் தடுத்து,

“இப்படியே போயேன்..” என்றவளை, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தாள்.

“எனக்கு அங்க எல்லாம் போய் புடவையில வேலை செய்ய முடியாது.. ஷூட்டிங் ஸ்பாட்க்கு வேற போகணும்.. நீங்க சொன்னதுக்காக நான் கட்டிக்கிட்டேன்.. இப்போ வேலைக்கு எல்லாம் புடவையில முடியாது… அங்க இங்கன்னு இழுத்து விட்டுக்கிட்டே நிக்கணும்.. என்னால முடியாது.. போங்க..” என்றவள், வேகமாகச் சென்று உடையை மாற்றிக் கொண்டு படிகளில் இறங்கி வர, அவளைப் பார்த்த ராதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது..

“சரி நான் கிளம்பறேன்.. பை..” என்று விடைப்பெற்றவளை வாசலுக்கு சென்று வழியனுப்ப, தனது அறையில் கிளம்பிக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு அவளது ‘பை’ என்ற குரல் கேட்கவும்,

“அதுக்குள்ள கிளம்பிட்டாளாட்ட இருக்கு.. ஷூட்டிங்க்கு டைம் இருக்கே..” என்று அவன் கடிகாரத்தைப் பார்க்க, அவனுக்கு அன்றைய ஷூட்டிங்கிற்கான உடையை எடுத்து வைத்துக் கொண்டிருந்த வினய்,

“அந்த ஹீரோயின் ப்ரான்க்ன்னு ஏதாவது நேத்து போல பண்ணப் போறான்னு சீக்கிரம் கிளம்பிட்டா போல.. நானா இருந்தா நேத்து அவங்க அப்படி சொன்னதுக்கு டிரஸ்சை தூக்கிக் கொடுத்துட்டு உன் சங்காத்தமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்திருப்பேன்..” என்று காட்டமாகச் சொல்ல, அர்ஜுன் தலையை அசைத்தான்.

“சிலர் எல்லாம் அப்படித் தான் இருக்காங்க.. இன்னைக்கு அப்படி பண்ணினா நானே கண்டிப்பா நல்லா கேட்டு விட்டுடுவேன்.. இன்னும் எனக்கு நேத்து அந்த ஒரு சில செகண்ட்ஸ் அவ முகம் அடிப்பட்ட குழந்தையா மாறினது பார்த்து மனசே ஆறல.. அந்த ஹிரோயின நல்லா நாலு கேள்வி கேட்கணும் போல இருந்தது.. ச்சே.. முடியல..” என்ற அர்ஜுன், தனது முடியை கண்ணாடியில் சரிப்பார்த்து கோதிக் கொண்டே, ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்,

“இன்னைக்காவது என் டிரஸ் சரியா இருக்கும்ல.. இல்ல அவ வந்து கை வைக்கிற மாதிரி இருக்குமா?” வினயை நக்கலாகக் கேட்க,

அதே நக்கலோடு அவனைப் பார்த்தவன், “உனக்கு எப்படி வேணும்? அவ கை வைக்கிற மாதிரியா? இல்ல..” என்று இழுக்க, ஒரு அழகிய சிறிய நாணப் புன்னகையுடன், அவனைத் தள்ளிக் கொண்டு கீழேச் சென்றவன், தனது அன்னையிடம் விடைப்பெற்று கிளம்பிச் சென்றான்.

“உனக்குத் தெரியுமா அர்ஜுன்.. இன்னைக்கோட காஸ்ட்யூமை டைரெக்டர் எனக்கு இன்னைக்கு சொன்ன போது, அவர் ஹீரோயின்து போட்டோ காட்டினார் பாரு. அது அப்படியே நிஜமா ரோஸ் போலவே இருந்தது.. அந்த ப்ரில்ஸ் எல்லாம் ரோஸ் போலவே போட்டோ சரியா வந்தா, உன்னோட சூட்க்கு அது செமையா இருக்கும்.. நிஜமாவே நான் இன்னைக்கு ஹீரோயின் டிரஸ் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்..” என்றவன், அவளது வீட்டில் தான் அழைத்ததும், அவள் ஓடி வந்து நின்ற விதத்தைச் சொல்ல, அர்ஜுன் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“நிஜமாவே ரொம்ப பாவம் தாண்டா.. ஆனா.. அவளோட தன்னம்பிக்கையை நான் பாராட்டறேன்.. அடிபட்டாலும் எழுந்து நிக்கறா பாரு.. ஐ அட்மையர் ஹேர்..” என்றவன், நேரெதிராக பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனது எண்ணம் முழுவதும், அந்த பாடலில் அந்த வரிகள் பாடிய பொழுது, அவளது விழிகள் தன்னிச்சையாக தன் மீது படிந்த விதத்தை ஓட்டிப் பார்க்க, அவனது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சுகம்.. அவளது நினைவுகளுடனே ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்றவனுக்கு, தனது காரில் இருந்து இறங்கியவளைப் பார்த்து, மூச்சுத் தப்பிப் போனது..

அழகிய தாமரை வண்ண நிறத்தில் அனார்கலி மாடல் சுடிதார் அணிந்து, தாமரைப் பூவிற்கே போட்டியாக இறங்கியவளைப் பார்த்தவனின் கண்கள் அவளிடமே சிக்கிக் கொண்டது.. காரைப் பூட்டி விட்டு, தனது உதவியாளருடன் இறங்கியவள், அங்கு நின்றிருந்த அர்ஜுனைப் பார்த்து, புன்னகைக்கலாமா வேண்டாமா என்று யோசனையுடன் பார்க்க, அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு அர்ஜுன் வேகமாக தனது கேரவனுக்குச் சென்று விட, அவனது அந்த செயலில் அவள் அதிர்ந்து நின்றாள்.

அவனைத் தொடர்ந்து காரை நிறுத்திவிட்டு இறங்கிய வினய், அவள் அதிர்ந்து நிற்கவும், “சிவாம்மா.. என்னாச்சு?” என்று கேட்கவும், அந்தப் பெயரைக் கேட்டதும், மீண்டும் விழிகளில் நீர்த்திரையிட அவனைப் பார்க்க, அவளது அருகில் வந்தவன்,

“சரி.. போதும் எமோஷனல் ஆனது.. சும்மா சிவாம்மான்னா டேன்க் ஓபன் பண்ணுவியா? நீ தானே அண்ணான்னு கூப்பிட்ட.. அப்பறம் என்ன? உங்க அண்ணன் கூப்பிட்டா இப்படித் தானா முழிப்ப? போ.. போய் ஷூட்டிங்க்கு ரெடி பண்ணு.. நிஜமா இன்னைக்கு உன் டிரஸ் டிசைன் பார்க்க நான் ரொம்ப ஈகரா இருக்கேன்.. ஓடு.. ஓடு.. நானும் போறேன்.. இல்ல எங்க ஹீரோ சார் என்னை பங்சுவாலிட்டி இல்லைன்னு வேலையை விட்டு தூக்கிடுவார்.. அப்பறம் நான் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவேன்.. நீ தான் எனக்கு வேலை போட்டுக் கொடுக்கணும்” என்று சொன்னவன், அவள் ‘ஹான்..’ என்று அதிர்ந்து நிற்கும் பொழுதே, அவளது தலையை செல்லமாகத் தட்டிவிட்டு, கேரவனுக்குள் நுழைய, தலையைக் குலுக்கிக் கொண்டவள், தனது வேலையை கவனிக்கத் துவங்கினாள்.

ஷூட்டிங்கிற்கு அர்ஜுன் ரெடி ஆனதும், அவனது போட்டோக்ராஃபர் அவனை விதம் விதமாக படமெடுக்கத் துவங்க, அப்பொழுது அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த செட்டில், ஹீரோயினின் புகைப்படம் எடுக்கும் படலம் துவங்கியது..

“அர்ஜுன் சார்.. இதோ வந்துடறேன்..” என்ற வினய், அவசரமாக அந்த இடத்திற்குச் செல்ல, ஹீரோயினின் உடையைப் பார்த்தவனுக்கு கண்கள் சாசராக விரிந்தது. ப்ளாரல் டிசைன் உடை என்று கூறி இருந்தனர் தான்.. போட்டோவில் பார்க்கும்பொழுது நன்றாக இருந்தது தான்.. ஆனால்.. நேரில் அழகிய ரோஜாப் பூவையே உடையாக கண் முன் அவள் கொண்டு வந்திருந்தாள். அதில் நடுவில் இருந்த பெண், பூவில் இருந்து முளைத்த தேவதை போலவே இருந்தாள். அவளது அலங்காரமும் அதற்குத் தோதாக இருக்க, அந்த வேலைப்பாடுகளைப் பார்த்த வினய்க்கு அந்த உடை மிகவும் பிடித்தது..

அங்கு நின்று போட்டோ ஷூட்டிற்கு ஹீரோயினை தயார் செய்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று நின்று ‘வாவ்..’ என்று வியக்க, சிவாத்மிகா அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

“சிவாம்மா.. நிஜமாவே ரொம்ப அழகா இருக்கு..” என்று கூறியவன், அந்த டிசைனின் நேர்த்தியை மனதினில் குறிப்பெடுக்கத் துவங்கினான். 

“தேங்க்ஸ்ண்ணா.. நிஜமாவே நல்லா இருக்கா?” என்று அவள் புன்னகையுடன் கேட்கவும்,

“நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு சிவா.. இன்னைக்கும் டைரக்டர் அவர் டிரஸ் டல்ன்னு சொல்லிடாம இருக்கணும்.. அப்பறம் சார் என்னை கொன்னே புதைச்சிடுவார்.. ஏற்கனவே காலைல ஒரு தடவ சரியா இருக்கும்லன்னு கேட்டாச்சு.. என் வேலை போகாம இருக்கணும்” என்றவனைப் பார்த்தவள்,

“ஹையோ.. திட்டிட்டாரா என்ன? என்று கேட்க, அவன் கண் சிமிட்டவும்,

“இது தானே வேண்டாம்ன்னு சொல்றது.” என்று சிரித்தவள், போட்டோ ஷூட்டில் கவனம் பதிக்க, வினய் சிறிது நேரம் நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்தான்.

ஷூட்டிங் தொடங்க இருக்கவும், அங்கு வந்த அர்ஜுன் ஹீரோயினின் உடையை பார்த்துவிட்டு, தனது கோட் சூட்டைப் பார்க்க, அதை கவனித்த சிவாத்மிகாவின் இதழ்கள் புன்னகையை சிந்தத் துடித்தது..

அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியவன், அவளது அருகில் வந்து, “என்ன நல்லா இருக்கா? ஏதாவது உங்க பாசலமலர் பண்ணினதுல சேஞ் பண்ணனுமா? இப்போவே சொல்லிடும்மா.. ஷூட் டைம்க்கு சொன்னா அவனுக்கு மூளை வேலை செய்யாது.. பாவம்..” என்று கேட்க, அவனைப் பார்த்தவள், வினயைப் பார்த்து சிரித்து,   

“எல்லாம் ஓகே தான்.. இந்த வாட்ச் கொஞ்சம் வேற மாதிரி போட்டு இருக்கலாம்.. இது கொஞ்சம் ஓல்ட் போல இருக்கு.. இந்த வயிட் சூட்க்கு செட் ஆகல.. பட் ஓகே கண்டுக்க வேண்டாம்.. நெட்க்ஸ்ட் டைம் அதையும் கவனிச்சுக்கோங்க..” என்று கூறியவள், அவளை முறைத்துக் கொண்டிருந்த வினயைத் திரும்பிப் பார்த்து, அதற்கு மேல் அடக்க முடியாமல் சிரித்து,

“சாரி.. சாரிண்ணா..” எனவும்,

“இவ என்னைத் தலையால தண்ணி குடிக்க வைக்கிறா அர்ஜுன் சார்.. இப்போ நான் வாட்ச்க்கு எங்க போவேன்? இதுவே நல்லா தானே இருக்கு..” என்று கேட்கவும், அர்ஜுன் அவளது பதிலை சுவாரஸ்யமாக எதிர்ப்பார்க்க,

“வேற டார்க் கலர் ஸ்ட்ராப் இருந்தா போடுங்க.. இது இந்த ப்ரவுன் கொஞ்சம் டல்லா இருக்கு.. டார்க் போட்டா இன்னும் செமையா இருக்கும்..” என்று சொல்லிவிட்டு, ஹீரோயின் அழைக்கவும், அவள் அங்கு சென்றுவிட, அர்ஜுன் வினயைத் திரும்பிப் பார்த்தான்.

“இதுவும் நல்லா தானே இருக்கு? ஏன் அவ அப்படி சொல்றா?” என்று வினய் அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே யோசிக்க,

“எனக்கு இப்போ அவ சொன்னது போல வாட்ச் வேணும்.. சீக்கிரம் வா..” எனவும், வினய் அவனை முறைத்துக் கொண்டே, அவசரமாக காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஷூட்டிங் துவங்க, அது அந்த பாடலில் வரும் சிறு ரொமாண்டிக் காட்சி.. அர்ஜுன் ஹீரோயினின் கையைப் பிடிக்கவும், அவனது கையில் தெரிந்த அந்த வாட்சைப் பார்த்தவள், திகைப்புடன் வினயைப் பார்க்க,

“உடனே வாங்கி வரச் சொல்லி ஹீரோ சார் உத்தரவு.. அதுவும் நீங்க சொல்லிட்டா அவருக்கு அப்பீலே இல்ல..” கேலியாகச் சொன்னவன்,

“வா.. அப்படியே அங்க உட்கார்ந்துக்கலாம்..” என்று அவளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்து,

“நீ எந்த மாதிரி வாட்ச் சொல்ற? ஏதாவது மாடல் இருந்தா காட்டு..” என்று சொன்னவனிடம், அவள் தனது மொபைலை எடுத்து, அதில் அவள் பதிந்து வைத்திருந்த பலவகை வாட்ச் மாடல்களைக் காட்டவும், வினய் தனது மனதின் சந்தேகத்தை கேட்டான்.

“வாட்ச் கலக்ஷன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.. உன்னோட சைட்லையும் போய் பார்த்தேன்.. நீ ஏன் ஜென்ட்ஸ்க்கு டிசைன் பண்ணல? ஏதாவது கசப்பான அனுபவம் இருக்கா? யாராவது வாலாட்டினாங்களா?” கரிசனையுடன் வினய் கேட்க,

“அப்படி இல்லண்ணா.. அது என்னவோ தெரியல.. முதல்ல இருந்தே ஜென்ட்ஸ் டிசைனிங் எல்லாம் என்னோட நோட்டோட முடிஞ்சிடும்.. அதை செயல்படுத்த நான் முயற்சி பண்ணினதே இல்ல.. ஒரு தயக்கம்.. ஒரு பயம்.. அப்பறம் கம்ஃபர்டபில் கூட இல்ல.. அது தான்.. என்னோட கம்ஃபர்ட்ல நிறுத்திக்கிட்டேன்..” என்று அவள் தயங்காமல் சொல்லவும், வினய் அவளைப் பார்த்து இதமாக புன்னகைத்தான்.

“நீ ஒண்ணு ஒண்ணும் ரசனையா சொல்றதைப் பார்த்தா.. கண்டிப்பா உன்னோட டிசைன் எல்லாம் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. குட்.. நீ வரஞ்சு வச்சதைக் காட்டு..” என்றவன்,

“இனிமே உனக்கு அண்ணா நானிருக்கேன்.. எதுனாலும் தயங்காம பேசு என்ன? சும்மா வாய் வார்த்தைக்கு நான் சொல்லல.. சரியா?” என்று கேட்கவும், மறுப்பாக அவள் தலையசைத்து,

“எனக்கும் உறவுகளுக்கும் ராசி இல்லண்ணா.. வேண்டாம்.. இப்படியே நாம பேசிக்கலாம்.. ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்டா..” என்று அவள் சொல்லவும், அவளைப் பார்த்து முறைத்தவன்,

“இங்கப் பாரு.. இந்த ராசி கீசின்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காதே.. அந்த காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. இனிமே எல்லாம் நல்ல காலம் தான்.. எனக்கும் கூடப் பிறந்தவங்கன்னு யாரும் இல்ல.. எனக்கு நீ தங்கையா வேணும்.. அவ்வளவு தான்..” என்றவன், அவள் திகைப்புடன் அவனைப் பார்க்கவும்,

“ஷாக்கை கொறம்மா.. ஷாக்கைக் கொற.. பாரு வாயில ஈ போகுது..” என்று கேலி செய்யவும், முத்துப் பற்கள் தெரிய சிரித்தவளைப் பார்த்தவனின் மனம் ஏனோ அவளது அந்தச் சிரிப்பு நிலைக்க வேண்டும் என்று மனதினில் வேண்டிக் கொண்டது..

மீண்டும் சிறிது நேர பொதுவாக அவர்கள் பேசிக் கொண்டிருக்க, சிவாத்மிகாவின் போன் நம்பரைத் தவறாமல் வாங்கிக் கொண்டு, தனது நம்பரையும் அவளது மொபைலில் பதிவு செய்ய வைத்து, “இப்போ மட்டும் ஒருத்தன் பார்க்கணும்..” என்று அவன் முணுமுணுக்க, அதைக் கேட்டவள்,

“ஏண்ணா வேலை இடத்துல என்ன பேச்சுன்னு அவர் திட்டுவாரா?” கவலையுடன் அவள் கேட்க, இல்லை என்று மறுப்பாக தலையசைத்தவன்,

“சும்மா..” என்று கண் சிமிட்ட, அவனது மனதினில் அர்ஜுன் இருவரையும் பார்த்து என்ன சொல்கிறான் என்று பேச்சுக் கொடுத்து, வம்பு இழுக்கத் தோன்றியது..

‘பிரேக்..’ என்ற டைரெக்டரின் குரல் வரவும், தானாக எழுந்து, அவள் ஹீரோயினிடம் சென்றுவிட, அர்ஜுனின் அருகில் சென்ற வினயிடம்,

“என்ன உன் பாசமலர்கிட்ட ரொம்ப நேரமா ஏதோ பேசிக்கிட்டு இருந்த? போன்ல எல்லாம் ஏதோ பார்த்து பேசிக்கிட்டு இருந்தீங்க” என்று கேட்கவும்,

“என்ன பொறாமையா?” வினயின் கேலியில்,

“பொறாமை எல்லாம் இல்ல.. ஆனா.. கொஞ்சம் பொறாமை தான்.. எனக்கு அவகிட்ட என்னவோ நிறைய பேசணும்ன்னு தோணுது.. ஆனா.. தொண்டையில இருந்து வார்த்தை தான் வர மாட்டேங்குது.. எனக்கு என்ன பிரச்சனைன்னு தான் தெரியல போ.. கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணிட்டா அவகிட்ட பேசுவேன்.. பேசுவேன் பேசிட்டே இருப்பேன்.” அர்ஜுன் வினயை வம்பு வளர்க்க,

“ஆமா.. நீ தான் எந்த பொண்ணுகிட்டயும் பேச மாட்டியே.. இப்போ என்ன புதுசா அவகிட்ட பேசணும்னு சொல்ற?” என்று வினய் கேட்கவும், உதட்டைப் பிதுக்கியவன்,

“தெரியல.. என்னவோ இவளைப் பார்த்ததுல இருந்தே இப்படி எல்லாம் புதுசா தோணுது.. உள்ளுக்குள்ள ஏதோ ரியாக்ஷன் எல்லாம் நடக்கற மாதிரி இருக்கு.. நான் என்ன செய்யட்டும்?” என்று அப்பாவியாக அர்ஜுன் கேட்கவும், வினய், அவனது தோளைத் தட்டிவிட்டு,

“சீக்கிரம் என்ன ரியாக்ஷன்னு கண்டுப்பிடி.. நாங்களும் ஈகரா தான் இருக்கோம்” என்று கேலி செய்தவன்,  அர்ஜுன் டச்சப் செய்துக் கொள்ளத் துவங்கவும், அவனது அடுத்த ஷாட்டிற்கான உடையை எடுத்து வைக்க, அர்ஜுன் அவனை கேலியாகப் பார்த்தான்.

“எதுக்கும் நான் போடறதுக்கு முன்னாலயே மேடம் கிட்ட அப்ரூவல் வாங்கிடு வினய்.. போட்ட அப்பறம் அது குறை இது குறைன்னு சொல்லப் போறா.. உன் பாசமலர நிஜமாவே சாடிஸ்ஃபை செய்யறது ரொம்ப கஷ்டம்.. உனக்கு தான் அப்பறம் கஷ்டம்.. கடைசி நிமிஷ டென்ஷன்..” என்று கேலி செய்யவும், அவனை முறைத்துக் கொண்டே வினய், சிவாத்மிகாவிற்கு போனில் அழைத்தான்.

அதைப் பார்த்ததும், “ஹே.. என்ன போன்ல கூப்பிடற? அவ நம்பர் தெரியுமா?” அர்ஜுன் வியப்புடன் கேட்க,

“வாங்கிட்டோம்ல..” பெருமையாகச் சொன்னவன், அவளிடம் பேசி, அவளை ஒரு இரண்டு நிமிடம் வரச் சொல்லிவிட்டு, போனை வைக்க, அவனது கையில் இருந்து போனைப் பிடுங்கியவன், தனது செல்லில் அவளது நம்பரை பதித்துக் கொண்டான்.