எந்நாளும் தீரா காதலாக – 6

 

💝6  

“என்ன அண்ணா எதுக்கு வரச் சொன்னீங்க?” என்று சிவா குழப்பமாக கேட்க,

“அடுத்த டிரஸ் அவனுது சரியா இருக்கான்னு கொஞ்சம் பார்த்துட்டு போவியாம்.. ஹீரோ சார் கேட்கறார்..” வினய் சொல்லவும், சிவாத்மிகா பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“அண்ணா என்ன விளையாடறீங்களா? நீங்க எல்லாம் என்னை விட எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்.. என்கிட்ட போய் இப்படி கேட்கறீங்க? சும்மா ஏதோ கிண்டல் அடிக்காதீங்க.. நான் கத்துக்குட்டி..” பதட்டத்துடன் அவள் மறுக்க, வினய் மறுப்பாக தலையசைத்தான்.

“ஒழுங்கா பார்த்து சொல்லிடும்மா.. இல்ல என் வேலையே போயிடும்.. உன் அண்ணனுக்காக இதை செய்யலாம்ல..” வினய் கேலி செய்யவும், கண்கள் கலங்க அவனது முகத்தைப் பார்த்தவள்,

“என்னை வச்சு விளையாடறீங்களா?” என்று கேட்டவளின் முகம் வாடிவிடவும், தன்னையே நொந்துக் கொண்டவன், தனது தலையில் தட்டிக் கொண்டான்.

“ச்சே.. ச்சே.. இல்ல சிவாம்மா.. பாரு உடனே கண்ணு கலங்கற நீ? மொதல்ல கண்ணைத் தொட..” என்றவன், அவள் கண்களைத் துடைக்கவும்,

“நிஜமாவே அவன் உன்னோட ஒபினியன் கேட்க சொன்னான்ம்மா.. அது தான் கூப்பிட்டேன்.. அவனுக்கு என்னவோ நீ பார்த்து சொல்லிட்டா நிம்மதியா இருக்கும் போல.. உன் அண்ணன் பாவம்ல.. லாஸ்ட் மினிட்ல நீ ஏதாவது சொல்லிடறியா… உடனே அவன் என்னை விரட்டறானா.. அது தான் இப்போவே கேட்டுக்கலாம்ன்னு.. அதுவும் அவன் தான் சொன்னான்.. இப்போவே கேட்டுக்கோ இல்ல லாஸ்ட் மினிட்ல ஓட விடுவேன்னு.. அது தான்..” வினய் அவளை சமாதானப்படுத்தவும், சிவாத்மிகா அவனை பரிதாபமாகப் பார்த்தாள்.    

“என்னால உங்களுக்குத் தொல்லையா? நான் ரொம்ப குறை கண்டு பிடிக்கறேனா? உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா?” பாவமாக அவள் கேட்க,

“இல்ல.. அது அப்படி இல்ல சிவா.. அவனுக்கு உன்னோட டேஸ்ட் பிடிச்சிருக்கு.. அவனுக்கு நீ சொல்லிட்டா மனசுக்கு திருப்தியா இருக்கும். அது தான் அவன் என்னைக் கேட்க சொல்றான். இல்லைன்னா அவன் இப்படி சொல்ற ஆள் இல்ல..” வினய் அவளை சமாதானப்படுத்த,

“அப்போ உங்களை ஓட விடறார்ன்னு சொன்னீங்களே..” அவள் பரிதாபமாகக் கேட்கவும்,

“அவன் கிடக்கறான் விடும்மா.. நீ டிரஸ் பார்த்து சொல்லு வா..” என்று அவன் அழைத்து கேரவனுக்குள் ஏறவும், அவள் தயங்கி நிற்க, வினய் அவளைத் திரும்பிப் பார்த்தான். 

கை விரல்களை மடக்கிக் கோர்த்து, மனதிற்குள் எதையோ அவள் புரட்டிக் கொண்டு நிற்க, வினய், “என்னாச்சு?” என்று கேட்கவும்,

தயக்கத்துடன் “நான் ஒண்ணு கேட்கறேன் தப்பா எடுத்துக்காதீங்க..” அவள் பீடிகை போட,

“சொல்லு.. என்ன கேட்கப் போற?” அவள் என்ன கேட்கப் போகிறாளோ?, எப்படி பதில் சொல்வது? என்று அவன் ஒரு போருக்குத் தயாராக,

“என்னை உங்களுக்கு நேத்து தானே தெரியும்.. அவரை உங்களுக்கு ரொம்ப நாளா தெரியும் இல்ல.. எனக்காக அவரை அப்படி சொல்றீங்க? அப்படி என்ன நான் ஸ்பெஷல்?” என்று அவள் கேட்கவும், தாடையைத் தட்டி யோசித்தவன்,

“அவ்வளவு தானா?” என்று பெருமூச்சு விட்டு, அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து,

“நமக்கு ஒரு குட்டி தங்கச்சி இருந்தா இப்படி இருக்கணும்ன்னு நமக்கு எல்லாம் ஒரு கற்பனை இருக்கும் இல்லையா? எனக்கு சின்ன வயசுல இருந்தே அப்படி ஒரு ஆசை இருந்துச்சு.. உன்னை நேத்து பார்த்ததுல இருந்தே எனக்கு அந்த ஃபீல் தான் வருது.. என்னோட குட்டி தங்கச்சியா? என் தங்கைக்காக நான் தான் பேச முடியும்.. வேற யார் பேசுவா? இதே வார்த்தைய நான் அவன் முன்னால சொன்னா கூட..” அவன் சொல்லிக் கொண்டிருக்க,

“அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்.. ஏன்னா அவன் என் நண்பன்.. அது தானேடா?” என்று அர்ஜுன் குரல் கொடுக்கவும், சிவாத்மிகா திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க, அவன் சொன்னதைக் கேட்ட வினயோ, நெஞ்சில் தனது கையை மடக்கிக் குத்திக் கொண்டே, நடிகர் திலகம் போல நடிக்கவும், அவனைப் பார்த்த சிவாத்மிகா சிரிக்கத் துவங்க, அர்ஜுனின் விழிகள் அவள் சிரிப்பதை ஆசையுடன் வருடியது.. அதை ஒரு குவியக்கண் படம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷூட்டிங் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்க, அவளது வேலை முடிந்ததும், தனது அசிஸ்டன்ட்டை அங்கு விட்டு, “சரி மேடம் நான் கிளம்பறேன்.. எனக்கு பொட்டிக்ல கொஞ்சம் வேலை இருக்கு.. உங்களுக்கு ஹெல்ப் பண்ண ப்ரியா இருக்காங்க” என்றவள், தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்ப, வினயைத் தேடிய அவளது கண்கள் அவனைக் காணாது, உச்சுக் கொட்டினாள்.

அர்ஜுனிடம் கேட்கலாம் என்று யோசித்து, தயங்கியபடி நின்று விட்டு, அவள் கிளம்பிச் செல்ல, ஷூட்டிங் கேப்பில் ஓய்வாக அமர்ந்திருந்த அர்ஜுன் அவளைப் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் தனது காருக்குச் செல்லவும், ‘ஏன் என்கிட்டே வந்து அவன் எங்கன்னு கேட்டா என்ன? அவன் தான் பெரிய இதுவா? என்னைப் பார்த்தா மனுஷனா தெரியலையா?’ மனதினில் நொடித்துக் கொண்டவன், மெல்ல அவளைப் பின்தொடர்ந்தான். தனது காரில் ஏறியவள், அதை இயக்க, கார் ஸ்டார்ட் ஆகாமல் சண்டித்தனம் செய்தது..

“என்னாச்சு? பெட்ரோல் இருக்கே..” அவள் குழம்பியபடி, மீண்டும் மீண்டும் இயக்க, அது ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்ய மீண்டும் மீண்டும் அவள் முயற்சித்தாள்.. அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன், அவளது அருகில் வந்தான்.

“என்னாச்சு சிவா? ஏன் கார் ஸ்டார்ட் ஆகல?” என்று கேட்கவும், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“சார்.. என்னன்னு தெரியல.. வண்டி ஸ்டார்ட் ஆகலை சார்.. பெட்ரோல் எல்லாம் இருக்கு..” அவள் பதட்டத்துடன் சொல்ல,

“சாரா?” என்று அவளைப் பார்த்தவன், அவள் விழிக்கவும்,

“அர்ஜுன்னு கூப்பிடு சிவா.. இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம்..” என்றவன், அவள் தலையசைக்கவும்,   

“சரி.. அப்படி நகர்ந்து உட்காரு நான் என்னன்னு பார்க்கறேன்..” என்றவன், அவள் பக்கம் கார் கதவைத் திறக்க,

‘ஹான்..’ என்று அவனை அவள் பார்க்க, அவளது முகத்தைப் பார்த்து அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது..

“அந்தப் பக்கம் நகர்ந்து உட்காரு.. நான் என்ன ஆச்சுன்னு பார்க்கறேன்னு சொன்னேன்..” நிறுத்தி நிதானமாக அர்ஜுன் சொல்லவும், மெல்ல பக்கத்து சீட்டில் நகர்ந்து அமர்ந்தவள், அர்ஜுனைப் பார்க்க, அர்ஜுன் காரில் ஏறி அமர்ந்தான்.

அவன் காரை இயக்கிப் பார்க்க, “காலைல நல்லா தானே வந்தது? பெட்ரோல் கூட இருக்கே..” என்றவன், யோசனையுடன்,  

“எப்போ சர்விஸ் பண்ணினது?” என்று கேட்க,

“அதுவா.. அது ஒரு ஆறு மாசத்துக்கு மேல ஆகுது..” தனது தாடையில் கை வைத்து யோசித்துக் கொண்டே அவள் சொல்ல, அர்ஜுனின் கண்கள் அவளது முகத்தில் ரசனையுடன் பதிந்தது.. கண்களைச் சிமிட்ட மறந்தவன், அவளது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனது பார்வையில், தன்னை அறியாமல் முகம் சிவந்து, தலையைக் குனிந்துக் கொண்டாள்.

சட்டென்ற அவளது முக மாற்றத்தில், தலையைக் குலுக்கிக் கொண்டவன், மீண்டும் முயற்சி செய்துப் பார்க்க, கார் ஒரு கட்டத்தில் ஸ்டார்ட் ஆனது..

கையைத் தட்டிக் கொண்டவன், “கலகிட்ட போ அர்ஜுனே..” தன்னையே அவன் பாராட்டிக் கொள்ள,

“எத?” என்று சிவாத்மிகா புரியாமல் கேட்க, அவளது முகத்தை சீரியசாகப் பார்த்த அர்ஜுன்,

“இதைத் தான்.. காரை ஸ்டார்ட் பண்ணிட்டேன்ல.. அதான்.. இந்த ராஜா கைய வச்சா.. அது ராங்கா போனது இல்ல..” என்றவனை அவள் புரியாமல் பார்க்க, தனது உதட்டில் இருந்து வெளிவரத் துடித்த புன்னகையை அடக்கிக் கொண்டவன்,

“இல்லையா பின்ன.. காரே ஓட்டத் தெரியாதவன் வெற்றிகரமா ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.. அது பெரிய விஷயம் தானே.. சரி இரு.. அப்படியே நான் ஒரு ரவுண்ட் ஓட்டிப் பார்க்கறேன்.. அப்போ தானே பாதி வழியில கார் நின்னு நீ கஷ்டப்பட மாட்ட.. அப்படி நின்னுச்சுன்னா உங்க அண்ணன் வேற என்னை நிக்க வச்சு கேள்வி கேட்பான்.. எனக்கும் கார் ஓட்ட ரொம்ப ஆசையா இருக்கு..” என்று அர்ஜுன் சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்ப, சிவாத்மிகா பதறிப் போனாள்.

“கார் ஓட்டத் தெரியாம எப்படி ஓட்டப் போறீங்க? ஹையோ வேண்டாம்.. சொன்னா கேளுங்க.. ப்ளீஸ்.. காருக்கு ஏதாவது ஆச்சுன்னா எனக்கு கஷ்டமா போயிடும்..” அவள் பதறிக் கொண்டிருக்கிருக்கும் பொழுதே, அர்ஜுன் காரை இயக்கி, மெயின் ரோட்டில் வண்டியைச் செலுத்த, அதுவரை பதறிக் கொண்டிருந்தவள், வண்டி சாலையை நெருங்கவும், கண்கள் விரிய அர்ஜுனைத் திரும்பிப் பார்க்க, அர்ஜுனின் இதழ்களில் புன்னகையில் துடித்துக் கொண்டிருந்தது..

அவனது புன்னகையைக் கண்டுக் கொண்டவள், “பொய் சொன்னீங்களா? கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன்..” அவள் ஆஸ்வாசமாக மூச்சு விட, அர்ஜுன் கடகடவென்று சிரிக்கத் துவங்கினான்.

“சும்மா உன்னை கலாய்ச்சேன்.. நான் நல்லாவே கார் ஓட்டுவேன்.. அதெல்லாம் எங்க அப்பா காலேஜ் படிக்கும்போதே ட்ரைவிங் சேர்த்து விட்டுட்டார்.. கண்ண மூடிக்கிட்டு கூட வண்டி ஓட்டுவேன்.. பார்க்கறியா?” என்று கேட்டு அவளைத் திரும்பிப் பார்க்க,

“வேண்டாம்.. வேண்டாம்.. எனக்கு என் கார் முக்கியம்ப்பா..” என்று சொன்னவளைப் பார்த்து அவன் சிரிக்கவும், அவனது சிரித்த முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சிவாத்மிகா, அவன் பார்த்ததும், கண்களைத் தழைத்துக் கொண்டாள்.

அவளது அந்தப் பார்வை அர்ஜுனின் இதயத்தில் புதிதாக பூகம்பத்தை உண்டு பண்ண, ‘டெட்லி ஐஸ்..’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், தனது பார்வையை சாலையின் பக்கம் திரும்ப,  எஃப். எம். மில் விளம்பரம் முடிந்து பாடல் துவங்கவும், அந்தப் பாடலைக் கேட்ட அர்ஜுனின் கண்கள் மீண்டும் அவளது முகத்திற்கு சென்று மீண்டது..

நான் பிழை.. நீ மழலை..

எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை..

நீ இலை.. நான் பருவ மழை..

சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை.. 

ஆழியில் இருந்து அலசிய தேனே

அடைக்கலம் அமைக்கத் தகுந்தவன் தானே..                       

ஏனோ அந்தப் பாடல் இருவரின் மனதையும் ஒரே கனவு லோகத்தில் கட்டிப் போட்டிருக்க, அந்த உணர்வுகளின் தாக்கம் தாளாமல், சிவாத்மிகா தனது கையை இறுக கோர்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அர்ஜுனின் கைகளில் கார் ஒரே சீராக சென்றுக் கொண்டிருந்தது.. தங்களை அறியாமலே ஒருவரின் அருகாமையை மற்றொருவரின் மனம் ரசிக்க, அந்த உலகிலேயே தாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே இருவருக்குமே மனதினில் இருந்தது.. 

கடைக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னவளும் அதை மறந்து அமர்ந்திருக்க, ஷூட்டிங்கில் இருந்து பாதியில் வந்ததை மறந்து அர்ஜுன் அந்தக் கார் பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தான். இந்தப் பாதை இப்படியே நீளாதா? என்ற ஏக்கம் வேறு அவனது மனதினில் முளைத்திருக்க, தனது மனதின் ஏக்கத்தை தீர்க்க முடிவெடுத்தவன், காரை நிறுத்தாமல் ஓட்டினான். 

நேராக அந்தப் பக்கம் இருந்த பீச்சின் ரோட்டில் சென்று, பீச்சின் அருகே காரை நிறுத்தியவன், தனக்கு நேராக இருந்த கடலைப் பார்த்தபடி, அமைதியாக அந்த மோன நிலையிலேயே அமர்ந்திருக்க, பாடல் சத்தமும், அலைகளின் இரைச்சல் சத்தம் மட்டுமே அந்த இடத்தை நிரப்பியது..

அமைதியான பாடலும், கடலலையின் சத்தமும், அருகில் சிலையென அமர்ந்திருந்த அர்ஜுனும் அனைத்தும் இப்பொழுது அவளுக்கு புது அனுபவமாக இருக்க, நெஞ்சம் படபடக்க, தலையை கவிழ்ந்த நிலையிலயே, தனது விரல்களை பிரித்துக் கோர்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன் இங்கு வந்திருக்கிறான் என்று கேட்க நாவெழாமல்.. கிளம்பலாம் என்று சொல்லவும் மனம் வராமல், அந்த அருகாமை, அந்த அமைதி, அந்த நிமிடங்கள் அனைத்துமே புதுமையானதாக, மனதில் கொடுத்த உணர்வுகளை இழக்க மனமில்லாதவளாக, அமர்ந்திருந்தவளின் மனது, அந்த நிமிடங்களை அவசரமாக சேகரிக்கத் துவங்கியது..  

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ                     

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

அவர்களது இதய ஓசைக்கு ஏற்ப பாடல்வரிகளும் ஒலிக்க, அர்ஜுனின் பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்தவளுக்கு, இதயம் ஏனோ தொண்டைக் குழியில் துடிக்க, நொடிகள் நிமிடங்களாகக் கரைந்துக் கொண்டிருந்தது..

அர்ஜுனோ அவளது கன்னத்தைத் தனது கைகளில் தாங்கி, அவளது நெற்றியில் நெற்றி முட்டி, அவளிடம் கதை பேசத் துடித்த மனதை அடக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.  

அவர்களது அந்த அமைதியை அர்ஜுனின் செல்போன் கலைக்க, தலையில் தட்டிக் கொண்டு, அவசரமாக தனது பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவன்,

“இதோ ஒரு பத்து நிமிஷத்துல வரேன்டா.. இங்க பக்கத்துல தான் இருக்கேன்..” என்றவன், போனை வைத்துவிட்டு,

“வினய் என்னைத் தேடிட்டு இருக்கான்.. சுத்தமா எனக்கு அவனை நியாபகமே இல்ல.. ஷூட்டிங்கும் மறந்து போச்சு.. அவன்கிட்ட சொல்லணும்ன்னு கூட தோணல” என்றவன், தலையில் தட்டிக் கொண்டு, மீண்டும் காரை வேகமாக இயக்கினான்.

அவனது கை விரல்கள் ஸ்டீரிங்கில் பாடலைக் கேட்டு, தாளம் போட்டுக் கொண்டே வர, அவனது நீட்ட விரல்களைப் பார்த்தவள், தனது விரல்களைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

‘அவரோட விரல்ல பாதி கூட இருக்காது என் விரல்.. அவர் கையில என் கை வச்சா அப்படியே புதஞ்சிடும் இல்ல..’ என்று நினைத்துக் கொண்டிருக்க, அவளது இதழ்களில் மெல்லிய புன்னகை..

அர்ஜுனின் பார்வை அவ்வப்பொழுது அவளைத் தீண்ட, அந்த அமைதியை கலைக்காமல், ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வெளியில் காரை நிறுத்தியவன், அங்கு டென்ஷனுடன் நின்றுக் கொண்டிருந்த வினயைப் பார்க்க, வினய் சிவாத்மிகாவின் காரில் இருந்து இறங்கும் அர்ஜுனைப் பார்த்து திகைத்து நின்றான். அதிர்ந்து நின்றான் என்று சொல்ல வேண்டுமோ?

“பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?.. மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ? உயிரே..” என்று பாடிக் கொண்டே இறங்கியவன், அப்பொழுதும் அசையாமல் அவள் அமர்ந்திருக்கவும், அவள் பக்கம் வந்து,  

“பத்திரமா போயிட்டு மெசேஜ் அனுப்பு.. உன் மெசேஜ்க்காக வெயிட் பண்றேன்” என்றபடி கேரவனுக்கு அவசரமாகச் சென்றுவிட, வினய் அதே திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவும், தலையைக் குலுக்கிக் கொண்டவள், அவசரமாக ஓட்டுனர் இருக்கைக்குத் தாவி, வேகமாக காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட, வினய் கண்களை சிமிட்டி, தன்னை சுதாரித்துக் கொண்டு, கேரவனுக்கு ஓடினான்.

அர்ஜுன் தனது முகத்தை டச்சப் செய்துக் கொண்டு, தயாராகத் துவங்க, “அர்ஜுன்.. என்னடா நடக்குது? எங்க போனீங்க ரெண்டு பேரும்? உன்னை இங்க காணும்னு நான் தேடிட்டு இருக்கேன்..” வினய் பதறிக் கேட்க, மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தவன், ஒரு புன்னகையுடன், 

“அவ கார் ஸ்டார்ட் ஆகல.. அதனால ஸ்டார்ட் பண்ணி கொஞ்ச தூரம் ஓட்டிப் பார்த்துட்டு வந்தேன்.. பாதி வழியில நிக்கக் கூடாதுல..” என்று அவன் கேட்க,

“அதுக்குன்னு ஒரு மணி நேரமாவா? பேசாம அவ பொட்டிக்லயே கொண்டு விட்டு வந்திருக்கலாம்ல?” வினய் நக்கலாகக் கேட்க, அர்ஜுன் உதட்டைப் பிதுக்கினான்.

“செய்யலாம் தான்.. ஆனா.. அவ பொட்டிக் எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது.. இனிமே தெரிஞ்சிக்கறேன்..” அவன் சொல்லிக் கொண்டிருக்க, டைரக்டர் கதவைத் தட்டி உள்ளே வர, அர்ஜுன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“என்னாச்சு அர்ஜுன்? ஏதாவது ப்ராப்ளமா?” அவர் கேட்கவும்,

“இல்ல சார்.. ஜஸ்ட் ரொம்ப தலைவலியா இருந்தது.. அது தான் கொஞ்சம் ரிப்ரெஷ் பண்ண கொஞ்ச தூரம் டிரைவ் போயிட்டு வந்தேன்.. சாரி இன்ஃபார்ம் பண்ணாம போயிட்டேன்.. இதோ ஒரு ரெண்டு நிமிஷம் நான் ரெடி..” என்று அவன் சொல்லவும்,

“ஓகே அர்ஜுன்.. இப்போ நீங்க ஓகே தானே..” மீண்டும் அவர் உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்க,

“ஐம் ஃபைன் சார்.. ஷூட்டுக்கு ரெடி பண்ணுங்க.. நான் இதோ வந்துடறேன்..” என்றவனின் தோளைத் தட்டியவர்,

“நான் ஷாட்க்கு ரெடி பண்றேன்..” என்றபடி, வேகமாக சென்று ஏற்பாடுகளை கவனிக்க, வினய், அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அர்ஜுனின் உடல் மட்டும் தான் இங்கு இருந்தது.. அவனது எண்ணம் முழுவதும் சிவாத்மிகாவின் அருகாமையில் சிக்கிக் கொண்டிருந்தது.  கைகள் தன் வேலையைச் செய்ய, இயந்திர கதியில் அவன் தயாராக, அதைப் பார்த்த வினய், அர்ஜுனைத் தன் பக்கம் திருப்பினான்.

“அர்ஜுன்.. என்னடா? எங்கடா போனீங்க?” வினய் மீண்டும் கேட்கவும்,

“நிஜமாடா.. கார் நடுவழியில நின்னுடக் கூடாதுன்னு டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்த்தேன்.. அவளை வம்பு பண்ணிக்கிட்டே காரை எடுத்தேன்.. எனக்கே தெரியல.. ஐம் லாஸ்ட்.. ஐம் லாஸ்ட் இன் ஹெர் ஐஸ்.. அவ பக்கத்துல நான் என்னையே மறந்துட்டேன்.. அப்படியே ஏதோ ஒரு இதுல பீச் பக்கம் போய் நின்னுட்டேன்டா.. நீ போன் பண்ணவும் தான் திரும்பி வந்தேன்..” என்றவன், தலையை கோதிக் கொண்டே,

“அவ பக்கத்துல நான் நானா இல்ல வினய்.. அந்த நிமிஷம் எல்லாம் எனக்கு இந்த உலகத்துல எதுவுமே நியாபகம் இல்ல.. என் நினைவுல இருந்தது எல்லாம் நானும் அவளும் மட்டும் தான்… அப்படியே அந்த நிமிஷம் ப்ரீஸ் ஆகிடாதான்னு மட்டும் தான் எனக்குத் தோணிச்சு..” என்றவன், கண்களை இறுக மூடித் திறந்து, தன்னை சமன் செய்துக் கொள்ள, வினய் அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க.. 

“சரி.. ஷூட்டிங்கைப் பார்க்கலாம் வா.. டைம் ஆச்சு” என்றவன், எதுவும் நடக்காதது போல ஷூட்டிங்கிற்குச் செல்ல, வினய் ஒரு பெருமூச்சுடன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

ஷூட்டிங் முடிந்ததும், அந்த ஆல்பம் சம்பந்தமான சில நேர்காணல்கள் அவனுக்கு அணிவகுக்க, அதற்கு மேல் அவனுக்கு நிற்க நேரமில்லாமல், போனது..

ஷூட்டிங் இடத்தில் இருந்து கிளம்பிய சிவாத்மிகாவிற்கு, அர்ஜுனின் அருகாமை தந்த குறுகுறுப்பு அடங்கவே சிறிது நேரம் பிடித்தது.. ஏதோ மோன நிலையிலேயே காரை இயந்திர கதியில் செலுத்தியவள், தனது பொட்டிக்கிற்கு சென்று வேலைகளை முடித்துவிட்டு, அதற்கு மேல் எதிலுமே மனம் செல்லாமல், வீட்டிற்கு கிளம்பினாள்.  

‘எனக்கு என்ன தான் ஆச்சு? எனக்கு ஏன் எதுலையுமே கவனம் செலுத்த முடியல..’ என்று தன்னையே நொந்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவளை வரவேற்றது, ராதாவும், நிர்மலாவும் தான்..

தனது பொட்டிக்கிற்கு சென்று திரும்பி வந்த சிவாத்மிகா, காரில் இருந்து இறங்கவும், “பாப்பா.. நான் இங்க இருக்கேன்..” என்று ராதா குரல் கொடுக்க, சிவா அங்கிருந்து இறங்கி அவர்களை நோக்கிச் சென்றாள்.

ராதாவுடன் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிர்மலா, “வாடா சிவாம்மா.. எப்படி போச்சு இன்னைக்கு?” என்று கேட்க,

“ஹ்ம்ம்.. நல்லா போச்சும்மா..” என்றவளுக்கு, அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, அவளது கையைப் பிடித்து, தனது அருகில் அமர்த்திக் கொண்ட நிர்மலா, அவளது தலையை மென்மையாகத் தடவி,   

“ரொம்ப டயர்டா இருக்கற போல இருக்கடாம்மா.. போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. மணி இப்போவே ஒன்பது ஆகுது பாரு..” என்று வாஞ்சையாகச் சொல்லவும், அவரது முகத்தைப் பார்த்தவள்,

“நீங்க சாப்பிட்டீங்களாம்மா? இல்ல வினய் அண்ணா எல்லாம் வரணும்ன்னு வெயிட் பண்ணுவீங்களா?” அக்கறையாக அவள் கேட்கவும்,

“யாரு.. அந்த ரெண்டு தடிமாடுங்க வர வரை நான் சாப்பிடாம இருந்தா.. என் வயித்துல எலி கத்தும்.. அவங்களுக்கு எல்லாம் வெயிட் பண்றதும் இல்லம்மா.. பண்ணினா அஜ்ஜு திட்டுவான்.. அவனுக்கு நான் மட்டும் நேரத்துக்கு சாப்பிடலைன்னா ரொம்ப கோபம் வரும்.. எவ்வளவு வேலை இருந்தாலும் சாப்பிட்டீங்களான்னு போன் பண்ணி கேட்டுடுவான்..” அவர் பெருமையாகச் சொல்ல, சிவாத்மிகா அவரது முகத்தைப் பார்த்து புன்னகைத்தாள்.

“நீ இன்னைக்கு அவன் கூட தானே ஷூட்டிங்ல இருந்த?” என்று கேட்கவும்,

“நான் சாயந்திரம் வரை அங்க இருந்தேன்.. அப்பறம் பொட்டிக்குக்கு போயிட்டேன்..” என்றவள், ராதாவைப் பார்க்க, ராதா அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

“சரிம்மா.. நான் போய் முகம் கழுவிக்கிட்டு, சாப்பிட்டு படுக்கறேன்.. ரொம்ப டயர்டா இருக்கு..” என்றவள், நிர்மலாவிடம் விடைப்பெற்று எழுந்து நிற்க, ராதாவும் அவளுடன் எழுந்துக் கொண்டாள்.

“சரிடாம்மா.. நல்லா சாப்பிட்டு தூங்கு.. நாளைக்கு பார்க்கலாம்.. இன்னும் பதினஞ்சு நாளைக்கு எனக்கு போர் தான்.. அர்ஜுன் அவுட்டோர் ஷூட்டிங் போறான்.. கூட வினய்யும் போயிடுவான்..” என்ற நிர்மலா, தானும் எழுந்துக் கொண்டு, விடைப்பெற்றுச் செல்ல, ராதாவுடன் சிவாத்மிகா தங்களது வீட்டிற்குச் செல்ல, அவளது அமைதி இன்று ராதாவிற்கு விநோதமாக இருந்தது..