எந்நாளும் தீரா காதலாக!! – 9

💝9

மருத்துவமனைக்குச் சென்ற மாணிக்கத்தை, சிவாத்மிகா பயந்தது போல அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட, அவன் போன் செய்து அர்ஜுனிடம் தெரிவித்தான். அர்ஜுனிற்கும் வினய்க்கும் நிர்மலாவின் ரிசல்ட் அப்பொழுதே தெரிந்து போனது..

அவர்கள் நினைத்தது போலவே நிர்மலாவிற்கும் டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ்வாக வரவும், சிவாத்மிகா நிர்மலாவுடன் தன்னை அர்ஜுனின் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டாள்.

முதல் ஒருவாரத்திற்கு ஜூரமும், தலைவலியும் நிர்மலாவைப் படுத்த, சிவாத்மிகா அவரை மிகவும் கவனமுடன் பார்த்துக் கொண்டாள். அவரைக் கட்டாயப்படுத்தி உண்ண வைத்து, கஷாயம் கொடுத்து, நேரத்திற்கு மாத்திரை கொடுத்து கண்ணும் கருத்துமாக அவள் கவனித்துக் கொண்டதில், ஒரு வாரத்தில் ஜுரம் குறைய நிர்மலா சிறிது தேறி எழுந்தார்.    

ஒருநாள் நிர்மலாவிற்கு மதிய உணவைக் கொடுத்தவள், தானும் உண்டு விட்டு, தனது வேலையை   கவனிக்க அனைத்தையும் எடுத்து வைத்தாள்.  

“என்னடாம்மா.. வேலை இருக்கா? கொஞ்ச நேரம் தூங்கலாம்ல..” பரிவுடன் நிர்மலா கேட்க,

“ஆமாம்மா.. ஒரு கால் இருக்கு.. பேசிட்டு தூங்கறேன்..” என்றவள்,  தனது க்ளையன்ட்டுடன் தனது டிசைனை விளக்கிக் கொண்டிருக்க, நிர்மலா அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.. அவள் பொறுமையாக அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி அவருக்கு புரிய வைப்பதைப் பார்த்தவருக்கு, அவளை நினைத்து பெருமையாகவே இருந்தது..

இந்த ஒரு வாரமாக அந்த வீட்டின் வேலைகளை அவள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததோடு அல்லாமல், அவளது வேலைகளையும் திட்டமிட்டு செய்தது நினைவு வரவும், அவரது மனம் மேலும் கனிந்து போனது..

அவளது தலையை கோதி, கன்னத்தை வருடிக் கொடுப்பதற்கு அவரது கை பரபரக்க, தனது ஆசையை அடக்கிக் கொண்டவர், அவளுக்கும் தொற்ற வைக்க வேண்டாம் என்று நினைத்து, பார்வையால் அவளை வருடினார்.

பேசி முடித்துவிட்டு, அப்படியே கண்களை மூடித் திறந்தவள், ஒருபெருமூச்சுடன் நிர்மலாவைப் பார்க்க, அவர் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கவும்,

“அம்மா.. என்னம்மா.. ஏதாவது வேணுமா? உங்களை கவனிக்காம நான் கால்ல இருந்துட்டேன்.. சாரி.. பசிக்குதா? சூடா டீ போட்டுத் தரவா?” என்று அவள் அன்பாகக் கேட்க, நிர்மலா புன்னகையுடன் தலையசைத்தார்.

“ஒண்ணும் இல்லடா ராஜாத்தி.. சும்மா உன்னைப் பார்த்தேன்..” என்றவர்,

“சரிம்மா.. நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்.. நீயும் படுத்துக்கோ..” என்று படுக்க, சிவாத்மிகா அவருக்கு படுக்க உதவி செய்து விட்டு, மெல்ல சோபாவில் அமர, அவளது உடல் ஓய்வுக்கு கெஞ்ச, அப்படியே சோபாவில் சாய்ந்து படுத்துக்கொண்டு, நன்கு உறங்கியும் போனாள்.

அவளை எழுப்பியது அர்ஜுனிடம் இருந்து வந்த அழைப்பு.. தூக்க கலக்கத்தில் போனை எடுத்தவள், “ஹலோ..” எனவும், அவளது குரல் ஒருமாதிரி இருக்க, அர்ஜுன் பதறிப் போனான்.

“சிட்டு.. சிட்டு.. உனக்கு என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு..” அவன் பதட்டப்பட,

“ஓ.. நீங்களா? நான் தூங்கிட்டு இருக்கேன்.. அப்பறம் பேசுங்க.. இப்படியா நடுராத்திரில போன் பண்ணுவீங்க.. காலைல பேசலாம்.. ரொம்ப டயர்டா இருக்கு..” என்று போனை வைத்தவள், அருகில் இருந்த போர்வையை எடுத்து இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிவிட,

“என்னது? நடுராத்திரியா? காலைல பேசலாமா? இவளுக்கு என்ன ஆச்சு?” என்று அர்ஜுன் குழம்ப,

“என்ன அர்ஜுன் ஆச்சு?” அவனைப் பார்த்துக் கேட்ட வினயிடம், அர்ஜுன் சிவாத்மிகா சொன்னதைச் சொல்லவும், வினய் சிரிக்கத் துவங்கினான்.

“அது ஒண்ணும் இல்ல.. அவ நல்லா தூங்கிட்டு இருக்கா.. அது தான்.. சில சமயம் மதியம் அசந்து தூங்கினா அப்படி தோணும்.. அதுவும் அவ எல்லாம் மதியம் தூங்கியே பழக்கம் இருக்காது..” என்று வினய் விளக்கம் சொல்லவும்,      

குழப்பத்துடன் அவனைப் பார்த்த அர்ஜுன், “இல்ல வினய் அவ குரல் சரி இல்ல.. அதுவும் தவிர இப்படி அசந்து மதியத்துல தூங்கறான்னா ஒண்ணு அவளுக்கும் உடம்பு சரி இல்ல.. இல்ல வீட்ல ரொம்ப வேலை செய்யறா.. ரெண்டுல ஒண்ணு நடக்குது.. அதோட அவ குரல்ல ஸ்ட்ரைன் தெரியுது..” என்ற அர்ஜுன் உடனே ராதாவிற்கு அழைத்தான்.

“அக்கா.. சிவாவுக்கு உடம்பு ஏதாவது முடியலையா?” அர்ஜுன் ஹலோ கூட சொல்லாமல் எடுத்ததும் கேட்கவும்,

“இல்லயே.. நான் கொஞ்ச நேரம் முன்னால கூட சாப்பிட்டாளான்னு போன் பண்ணி பேசினேனே.. ஏதோ கால் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா.. ஒருவேளை உங்க போன் எடுக்காம அவ அந்த கால் பேசிட்டு இருக்காளோ என்னவோ?” ராதா சொல்லவும்,

“ஹ்ம்ம்.. ஓ.. அப்படியா? இல்ல அவ தூங்கிட்டு இருக்கா.. அவ குரலே சரி இல்ல.. எதுக்கும் பார்த்துக்கோங்க.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்..” என்று போனை வைத்த அர்ஜுன் ஷூட்டிங்கை கவனித்தான்.

அவனது மனம் முழுவதும், இன்னும் ஒரே நாளில் ஷூட்டிங் முடிந்து, ஊருக்கு திருப்புவதிலும், அங்கு இருப்பவர்களின் உடல் நிலையிலுமே சுற்றிக் கொண்டிருந்தது..

மதியம் உறங்கி மாலையே சிவாத்மிகா எழுந்துக் கொள்ள, அவளது உடல், வலியால் எழ முடியாமல் மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டாள். தலை வேறு வின்வின்னென்று தெறிக்க, மீண்டும் படுத்துக் கொண்டவள், மெல்ல ராதாவிற்கு அழைத்தாள்.

“அக்கா.. என்னால எழவே முடியல.. ரொம்ப உடம்பும் தலையும் வலிக்குது..” தொண்டையடைக்கச் சொல்லவும், ராதா பதறிப் போனாள். 

“என்ன பாப்பா என்ன இப்படி சொல்ற? ஒண்ணும் இருக்காது.. சாதாரண டயர்டா இருக்கும்.. நீ மாத்திரை போட்டுட்டு படு..” என்று ராதா சொல்லவும்,

“இல்லக்கா.. கொஞ்சம் ஜுரம் இருக்கு.. கண்ணு எல்லாம் எரியுது..” பரிதாபமாக அவள் சொல்ல,  

“பார்த்தியா.. அப்போவே அர்ஜுன் தம்பி கண்டுபிடிச்சு கேட்டார்.. அவ குரலே சரி இல்ல.. பார்த்துக்கோங்க பார்த்துக்கோங்கன்னு போன் பண்ணி சொன்னார்..” ராதா சொல்லவும், சிவாத்மிகாவின் உள்ளுக்குள் ஏதோ செய்தது.. 

“என்னக்கா கேட்டார்?” தான் ஏதாவது கனவு காண்கிறோமா என்று எதுவும் புரியாமல் சிவா மீண்டும் கேட்க,

“சிவாவுக்கு உடம்புக்கு ஏதாவது சரி இல்லயா? குரலே சரி இல்லன்னு கேட்டார்… அது போலவே உனக்கும் உடம்பு சரி இல்லாம போயிடுச்சு பாரு… இப்போ என்ன பாப்பா செய்யறது? டாக்டர் வரச் சொல்றியா? அவர்கிட்ட கேட்டு மாத்திரை சாப்பிடலாம்.. இப்போ நீ எப்படி அம்மாவை தனியா பார்த்துப்ப? வேணா அம்மாவை இங்க கூட்டிக் கிட்டு வந்திடு நான் பார்த்துக்கறேன்..”  ராதா கவலையுடன் கேட்கவும், சிவாத்மிகாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“நீங்களும் வர வேண்டாம் அக்கா.. நான் மாத்திரை போட்டு எப்படியாவது சமாளிச்சுக்கறேன்க்கா.. ராத்திரிக்கு மட்டும் ஏதாவது செஞ்சு படில வச்சிடுங்க.. நான் டாக்டர்கிட்ட கேட்டு மாத்திரை சாப்பிடறேன்..” என்றவள், அதே போலவே டாக்டருக்கு அழைத்து, அவர் சொன்ன மாத்திரைகளையும், அருகில் இருந்த லேபில் இருந்து வரச் சொல்லி, டெஸ்டிற்கும் கொடுத்தவள், தலையில் கை வைத்து அமர, ராதா அர்ஜுனுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.

“பார்த்தீங்களா.. எனக்குத் தோணினது சரியா போச்சு.. அவ குரலே சரி இல்ல.. அக்கா அவளுக்கு ரொம்ப முடியலையா? கஷ்டப்படறாளா?” அர்ஜுனுக்கு அதைக் கேட்கும்போதே அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவனது முகத்தைப் பார்த்த வினய் பதட்டத்துடன் அவன் அருகில் வர,

“நான் சொன்னேன்ல.. பாரு.. சிட்டுக்கு உடம்பு சரி இல்ல.. எனக்கு மனசுல தோணிச்சு..” அர்ஜுன் வினயிடம் ஆதங்கமாகச் சொல்ல, அவனது முகத்தைப் பார்த்த வினய்க்கு, ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், அவனது மனதில் சிவாத்மிகாவின் இடம் விளங்கியது..

‘அவளிடம் சொற்பமான வார்த்தைகள் பேசி இருப்பானா? அதற்கே அவளது குரலின் வேறுபாட்டை அவன் இவ்வளவு துல்லியமாக கண்டு பிடிக்கிறானே.. அப்போ அவன் மனசுல எந்த அளவு அவளோட வார்த்தை கவனிச்சு, பதிஞ்சு வச்சிருக்கான்..” என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்.. 

வினய் பேசுவதற்குள், “தம்பி நீங்க கவலைப்படாதீங்க.. அவளுக்கு ரொம்ப பெருசா எல்லாம் எதுவும் இல்ல.. சரி ஆகிடும்.. அவ சமாளிச்சுக்குவா?” ராதா தைரியம் சொல்ல,    

“அக்கா.. அக்கா.. ப்ளீஸ்.. இன்னும் ஒரே ஒரு நாள் சமாளிச்சுக்கோங்க.. நான் நாளைக்கு சாயந்திரம் கிளம்பி வந்துடறேன்..” என்றவன், வினயை உடனே கிளப்பி ஊருக்கு அனுப்பிவிட்டு, சொன்னபடியே அடுத்த நாள் இரவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..

வாசலில் இருந்தே சிவாத்மிகாவை பார்த்துவிட்டு வந்த ராதா, சிவாத்மிகாவிற்கு பழங்களை வெட்டிக் கொண்டிருக்க, வீட்டின் கதவு தட்டப்படவும், எழுந்து சென்று கதவைத் திறந்தவள், வினய் நிற்பதைப் பார்த்து திகைத்துப் போனாள்.

“தம்பி நாளைக்கு தானே வரேன்னு சொன்னாங்க.. நீங்க இப்போவே வந்து இருக்கீங்களே..” குழப்பத்துடன் வினயை கேட்டுக் கொண்டே அருகில் அர்ஜுனை அவள் தேட,

“நீங்க வேற.. அவன் சிவாவுக்கு உடம்பு சரி இல்லன்ன உடனே என்னை கிளப்பி அனுப்பிட்டு தான் மறுவேலை பார்த்தான். நான் அவனுக்கு நாளைக்கு போட வேண்டியது எல்லாம் எடுத்து வச்சிட்டு வந்தேன்.. எல்லாம் ரெடியா பேக் பண்ணிட்டு எடுத்துட்டு வந்துட்டேன்..” என்ற வினய், ராதா கேலியாக அவனைப் பார்க்கவும், 

“அப்படி அவன் துரத்தி இங்க வந்தா.. என் தங்கச்சி என்னை வீட்டு உள்ள விட மாட்டேங்கிறா.. கதவைக் கூட ஒழுங்கா தொறக்கல.. அப்படியே இங்க போயிடுன்னு விரட்டறா.. இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் கடந்து அல்லாடறேன்.. ஹயய்யையோ” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொல்லவும், ராதா சிரிக்கத் துவங்கினாள்.

“உங்களுக்கு என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கா?” வினய் நொடித்துக் கொள்ள,

“என்ன? தம்பி, அவரோட சிட்டுக்கு உடம்பு முடியலைன்ன உடனே உங்களை இங்க துரத்திட்டாரா? இங்க இவ என்னையுமே அந்த பக்கமே வர விட மாட்டேங்கிறா.. அதும் பாத்திரம் கூட டிஸ்போஸ் செய்யற போல டப்பா தான் யூஸ் பண்றோம்.. மேடமோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பாத்திரத்தையே உள்ள விடல.. உங்களை எப்படி விடுவா?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி ராதா கேட்கவும், வினயின் கண்கள் அவளது முகத்தில் நிலைத்தது.

அவன் அவளது முகத்தை வெறிக்க, “ஹையோ வெளியவே நிக்க வச்சு பேசிட்டு இருக்கேனே.. உள்ள வாங்க..” என்று ராதா அழைக்கவும், சுதாரித்தவன்,

“நல்லவேளை நீங்களாவது உள்ள வான்னு சொன்னீங்க.. எங்க நீங்களும் வெளிய நிக்க வச்சு இப்படியே அனுப்பிடுவீங்களோன்னு நினைச்சிட்டேன்.. நான் குழந்தை வேற எங்க போய் தங்குவேன்னு கொஞ்ச நேரம் பதறிட்டேன்..” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட வினய்,

“ப்ளீஸ் சூடா ஒரு காபி கொடுக்கறீங்களா? ப்ளைட் பிடிக்கிறதுக்காக அவசரமா எல்லாம் ரெடி பண்ணிட்டு ஓடி வந்தேன்.. ரொம்ப டயர்ட்டா இருக்கு..” பரிதாபமாகக் கேட்க,

“வாங்க சார்.. உள்ள வாங்க.. இதோ போட்டுத் தரேன்..” என்றவள், தனது செல்போன் அடிக்கவும், எடுத்து பேசிவிட்டு, அவனுக்கு ஒரு அறையைக் காட்டி,

“உங்க பாசமலர் தான் போன் பண்ணினா.. அண்ணா ரொம்ப டயர்ட்டா வந்திருக்காங்க.. அவருக்கு ரூம் காட்டுங்கன்னு எனக்கு சொல்றாங்க..” கேலியாகக் கூறியவள், ஹீட்டரைப் போட்டு விட்டு,

“நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. நான் காபி தரேன்..” என்றவள், வேகமாக அடுக்களைக்குள் செல்ல, அவள் காட்டிய அறையில் தனது பெட்டியை வைத்தவன், வேகமாக சென்று குளித்து விட்டு, உடை மாற்றிக் கொண்டு வர, ராதா அவனுக்கு சுடச் சுட காபியுடன் அமர்ந்திருந்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க..” என்றவனிடம்,

“நீங்க குடிச்சிட்டு இருங்க.. நான் போய் அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடுத்துட்டு வரேன்..” என்றவள், தனது மாஸ்க்கை எடுத்துக் கொள்ள, அவசரமாக காபியை குடித்த வினய்,

“அதை என்கிட்ட கொடுங்க.. நான் பார்த்து கொடுத்துட்டு வரேன்.. எனக்கு அம்மாவையும் அவளையும் பார்க்கணும்.. அவன் வேற கொஞ்ச நேரத்துல அவங்களைப் பார்த்துட்டியான்னு கால் பண்ணிடுவான்..” என்ற வினய், அவளது கையில் இருந்து கவரை வாங்கிக் கொண்டு, அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.

உணவை அங்கிருந்த படியில் வைத்துவிட்டு, “சிவாம்மா.. கதவைத் திற. உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு நான் போறேன்.. அப்போ தான் எனக்கு மனசு கொஞ்சம் திருப்தியா இருக்கும்..” என்று அவன் சொல்லவும், மாஸ்க், க்ளவுஸ் என்று அணிந்துக் கொண்டு, கதவைத் திறந்தவளைப் பார்த்தவன், சிரிக்கத் துவங்கினான்.

“என்ன இப்படி கொல்லைக் கூட்டத் தலைவி போல இருக்கே..” என்று கேலி செய்ய,

“இப்படி அடம் பண்ணினா நான் என்ன தான் செய்யறது? இப்போ எனக்கும் ஜுரமா இருக்கு.. எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்? கேட்கற செய்தி எதுவுமே சரியா இல்ல..” என்று அவள் சீரியசாக சொல்ல, வினய், அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தான்.

“கரட்க்ட் தான் சிவாம்மா.. ஜாக்கிரதையா தான் இருக்கணும்.. நீ சொல்லு..  உனக்கு எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னாங்க? டெஸ்ட் கொடுத்தாச்சா? என்னடா உடம்பு ரொம்ப முடியலையா? கண்ணு எல்லாம் தண்ணியா இருக்கு..”  அவன் இதமாகக் கேட்கவும்,

“அப்படி என்னண்ணா அடம்.. உங்களுக்கும் ஜுரம் வர வேண்டாம்ன்னு தானே, நான் வர வேண்டாம்ன்னு சொன்னேன்.. அவர் உங்களை கிளப்பி அனுப்பினாரா?” என்று கேட்டுக் கொண்டிருக்க அதே போலவே மாஸ்க் அணிந்து, அவளது அருகில் வந்த நிர்மலாவைப் பார்த்த வினய்,

“அம்மா.. எப்படி இருக்கீங்க?” என்று விசாரிக்கவும்,

“டேய்.. வினய்.. நீ எப்படிடா இருக்க? ரொம்ப டயர்டா இருக்கறது மாதிரி இருக்கு.. அஜ்ஜு எங்கடா? அவனை விட்டுட்டு நீ மட்டும் எப்படி வந்த? நீ இல்லாம அவனுக்கு ஒரு நாள் ஓடாதே” அவர் கேலியாக கேட்டாலும், அவர் சோர்ந்து இருக்கவும்,

“அது எல்லாம் இப்போ இருப்பான் அவன்.. சிவாவுக்கு உடம்பு முடியலைன்னு சொன்ன உடனே என்னைக் கிளப்பி விட்டுட்டான்மா.. என்னம்மா.. இப்படியா எங்களை எல்லாம் பயமுறுத்துவீங்க.. பாருங்க இவ கொல்லை கூட்டத் தலைவி போல இருக்கா.. நீங்க ஒடிஞ்சு விழறா போல இருக்கீங்க..” என்று கேட்கவும்,

“நான் அம்மாவை நல்லா தான் பார்த்துக்கிட்டேன்..” பரிதாபமாக அவள் சொல்ல,

“ச்சே.. உன்னைச் சொன்னா எனக்கு அடுத்த வேலை சாப்பாடு கிடைக்காது.. உன்னை குறை சொல்லல சிவா.. அம்மா ரொம்ப டல்லா இருக்காங்க இல்ல.. அதுக்கு சொன்னேன்..” என்றவனைப் பார்த்து சிரித்த சிவாத்மிகா,

“அக்கா உங்களை அப்படி மிரட்டி அனுப்பினாங்களா?” என்று கேட்க,

“அடிப்பாவி.. இப்படி வர்ட்ஸ் எல்லாம் ட்விஸ்ட் செய்யறியே.. இது சரியே இல்ல.. நாளைக்கு அவன் வரட்டும்.. சொல்றேன்..” வினய் மிரட்ட, சிவாத்மிகாவின் கண்களில் இருந்து ஜுரத்தினால் தண்ணீர் வழிய, வினய்யின் மனதினில் அர்ஜுனின் முகம் வந்து போனது.

‘அவளுக்கு ஜுரம்ன்னு சொன்னதுக்கே அவன் முகம் சரி இல்ல.. இவளைப் இப்படிப் பார்த்தான்னா தவிச்சு போயிடுவான்..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன்,

“சிவா.. நீ போய் படுத்துக்கோ.. நான் ஒரு ரெண்டு வார்த்தை அம்மா கிட்ட பேசிட்டு போய் படுக்கறேன்.. ரொம்ப டயர்டா இருக்கு..” எனவும், அவள் ஹால் சோபாவில் படுக்கச் செல்ல, அவளைத் திரும்பிப் பார்த்த நிர்மலா, 

“டேய்.. அவ எவ்வளவு சொல்லியும் கேட்காம இங்க தான் சோபால படுத்துக்கறா.. ஏதாவது சொல்லி அவளை ரூம்ல படுக்க சொல்லு..  இத்தனை நாள் என்னை பார்த்துக்கணும்ன்னு ஹால்லயே இருந்தா.. இப்போ அவளுக்கு உடம்பு வலி எல்லாம் இருக்கும் போல.. எதுவுமே காட்டிக்காம முழிச்சுக்கிட்டு படுத்தே இருக்கா.. வலி இருந்தா எப்படி சோபால வசதியா இருக்கும்? இப்போ எனக்கு உடம்பு பரவால்ல.. பிரச்சனை இல்ல.. அவளை உள்ள ஏதாவது ஒரு ரூம்ல படுக்க சொல்லு” எனவும், வினய் சற்று யோசித்து, அர்ஜுனுக்கு போனை அடித்தான்.

அவனது போனுக்காக காத்திருந்தவன், உடனே போனை எடுத்து விட, ‘அடப்பாவி’ என்று நிர்மலா கூறி, வினயைப் பார்த்து நக்கலாக புன்னகைக்க, “பார்த்தீங்களா உங்க பிள்ளையை..” என்று கேலி செய்தவன், அர்ஜுனுக்கு அம்மாவைக் காட்டினான். 

“அம்மா.. எப்படி இருக்கீங்க? நான் நாளைக்கு இத்தனை நேரம் வந்துடறேன் சரியா? நல்லா சாப்பிடுங்க.. இப்போ சிவாவுக்கு உடம்பு சரி இல்லன்னு ராதா அக்கா சொன்னாங்க..” அர்ஜுன் சுற்றி வளைக்காமல் நேரிடையாக விஷயத்திற்கு வர, நிர்மலா அவனிடம் சிவாத்மிகா கூறியவற்றை சொல்ல,

“சிட்டு..” அர்ஜுன் குரல் கொடுக்கவும்,

அவனது அழைப்பில் புருவத்தை உயர்த்தியவர், “சிவா.. அர்ஜுன் கூப்பிடறான் பாரு..” என்று சொல்லவும்,

“சிவாத்மிகா சோபாவில் இருந்து எழுந்து வர, நிர்மலா அவளைத் திரும்பிப் பார்த்தார்.

“என்னாச்சு அர்ஜுன்?” அவள் கேட்கவும்,

“சிட்டு.. என்னம்மா இப்படி இருக்க? ரொம்ப உடம்பு முடியலையாம்மா?” என்று பதறியவன், அவள் முடியாமல் நிற்கவும்,  

“இங்கப் பாரு.. நான் சொல்றதைக் கேட்கறியா?” என்று கேட்க, அவள் தலையசைக்கவும்,

“மேல நேரா என்னோட ரூமுக்கு போய் ஒழுங்கா படுத்து தூங்கற..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“இல்ல.. சோபாலயே..” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“இங்கப் பாரு.. நீ இங்க சோபாவுல தான் படுப்பேன்னு நீ ஏதாவது அடம் செஞ்சன்னு வையேன்.. நீ வீட்டுக்கு கிளம்பு.. வினய் அம்மாவைப் பார்த்துப்பான்.. நாளைக்கு நானும் வந்துடறேன்..” என்று கராராகச் சொல்ல, சிவாத்மிகாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. 

“வினய்யை வீட்டுக்குள்ள விட மாட்டேன்னு சொல்லி உங்க வீட்டுக்கு அனுப்பின இல்ல.. அப்போ அவன் என்ன சோபாவிலையா படுக்கறான்.. இல்ல தானே.. அது போல தான்.. மேல நேரா என் ரூமுக்கு போ.. அங்க நீ குவாரண்டைன் இரு.. என புரியுதா? அம்மாவுக்கு சரியானா கூட நீ பாட்டுக்கு மேல இருக்கலாம்..” எனவும், அவள் தயங்கி,

“இல்ல..” என்று இழுக்க,  

“டேய்.. இவ சொன்ன பேச்சு கேட்க மாட்டா டா.. நீ அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பிட்டு உள்ளே போயிடு.. அப்பறம் வர பின் விளைவுகளைப் பார்த்துக்கலாம்..” அர்ஜுனின் பேச்சில் திகைத்தவள்,

“இல்ல.. நான் அங்க போறேன்.. நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.. நாளைக்கு நீங்களும் வந்தா நேரா அங்க போயிடுங்க..” என்று சிவாத்மிகா சொல்லிவிட்டு நகர முற்பட,    

“அங்க போயிட்டு எனக்கு ஒரு செல்பி போட்டோ எடுத்து அனுப்பனும்.. கொஞ்ச நேரத்துல நான் உனக்கு கூப்பிடுவேன்… போனை எடு. எது எது எங்க இருக்குன்னு சொல்றேன்..” அர்ஜுனின் குரல் அவளைப் பின்தொடர, சிவாத்மிகா கோபமாக தங்கு தங்கென்று நடந்து அறைக்குச் செல்ல, அதைப் பார்த்த நிர்மலாவிற்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும், மறுபக்கம் அர்ஜுனின் உரிமையான அதட்டலும், சிவாத்மிகா அதை புரிந்து நடப்பதும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது..

“என்ன இதுக்கே இப்படி ஷாக் ஆகி நிக்கறீங்கம்மா.. உங்க பையன் நாளைக்கு வருவான்.. பாருங்க.. ஷாக் எல்லாம் கொஞ்சம் மிச்சம் வச்சிக்கோங்க.. அப்படியே தலைகீழா மாறி இருக்கான்.. அப்படி தானே அர்ஜுன்?” வினய் அவனை கேலி செய்ய,

“ஆமா.. அப்படித் தான்..” என்றவன்,

“டேய்.. ரொம்ப சத்தம் போட்டுட்டேனா? பயந்துட்டாளா?” அர்ஜுன் பாவமாகக் கேட்க,

“இல்லடா.. சின்ன பொண்ணு கோவிச்சிக்கிட்டு போறா மாதிரி போறா.. நீ திரும்ப அவளைக் கூப்பிட்டு பேசு.. சரி ஆகிடும்.. ஆமா.. இப்போ சொல்லுங்கடா என்ன விஷயம்? என்ன விசேஷம்..” என்று நிர்மலா கேலி செய்ய,

“ஒண்ணும் இல்லம்மா.. சும்மா தான்… என்னோட சிட்டு எங்க ரூமுக்கு போய் ஒழுங்கா செட்டில் ஆகிட்டளான்னு நான் வீடியோ கால் பண்ணி கேட்கறேன்.. நீங்க உடம்பை பார்த்துகோங்கம்மா.. வினய் வந்துட்டான்.. எதுனாலும் அவனைக் கூப்பிடுங்க.. நான் நாளைக்கு வந்துடறேன்..” என்ற அர்ஜுனை மனம் கனியப் பார்த்தவர்,

“ஒழுங்கா என் மருமகளை பத்திரமா பார்த்துக்கோ.. இப்போ அவகிட்ட கோபப்பட்டத்துக்கு போய் வீடியோ கால்லயே கெஞ்சிக் கூத்தாடு.. வைடா போனை..” என்றவர், அவன் வைக்கவும், மனம் நிறைந்து வினயைப் பார்த்தார்.

“மனசுல உள்ளதை அவகிட்ட சொல்லிட்டானாடா?” ஆவலே வடிவாக நிர்மலா கேட்க,

“அதைத் தவிர எல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்கான்மா.. நாளைக்கு வந்து நேர்ல சொல்றானா பார்ப்போம்.” என்ற வினயைப் பார்த்து புன்னகைத்தவர்,

“சரிடா.. நீயும் ரொம்ப டயர்டா இருக்க.. போய் தூங்கு காலையில பேசிக்கலாம்..” என்று நிர்மலா சொல்லவும், தனது கையில் இருந்த கவரை கீழே வைத்தவன்,

“அவளை கூப்பிட்டு சாப்பிட்டு, மாத்திரை போட்டுட்டு படுங்க.. இதுல ராதா பழம் எல்லாம் வச்சிருக்காங்க.. சாப்பிடுங்க.” என்ற வினய் மனமே இல்லாமல், திரும்பிச் செல்ல, நிர்மலா கதவடைத்துக் கொண்டு, வீட்டின் உள்ளே சென்றார்.

சிவாத்மிகாவை அழைத்து, வற்புறுத்தி இரண்டு இட்லிக்களை உண்ண வைத்தவர், ராதா வெட்டி வைத்த பழத்தை தானும் எடுத்துக் கொண்டு, அவளுக்கும் கொடுத்தவர்,

“மறக்காம மாத்திரை போட்டு படுத்துக்கோ. நல்ல ஸ்க்ரீன் எல்லாம் இழுத்து விட்டுக்கோ.. அஜ்ஜு ரூம்ல வெளிச்சமே வராது..” என்று சொன்னவர், அவள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்லவும், தனது அறைக்குச் சென்று மன நிறைவுடன் கண்ணுறங்கினார்.