என் உயிரே பிரியாதே

                    

காற்றின் வேகம் மிதமாக இருந்தது… அதற்க்கு ஏற்றார் போல் மரங்களும் அந்த காற்றுக்கு ஏற்றபடி அசைந்து கொண்டிருந்தது. சுற்றிலும் அமைதியின் சூழலில் தான் இருந்தது அந்த இடம். ஏன்னென்றால் அந்த இடம் கல்லறை தோட்டம், வாழ்ந்து முடித்துவர்களுக்கு அங்கு தான் இடம், வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் அங்கு தான் கடைசி இடம். தன் மனைவியின் கல்லறையின் முன் மண்டியிட்டு அமர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் சிவகுரு.

 

பிரிதலில் மிகப்பெரிய வலி மனைவியின் பிரிதல் தான். அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமே அவன் மனைவி தான். அப்படியிருக்க, சிவகுருவின் மனைவி இறந்த நாளில் இருந்து இன்று வரையிலும் அவனுக்கு மரணவலி வேறெதுவும் இல்லை. வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிப்பது அவனது காதல் மனைவியின் மீது வைத்துள்ள அதீத காதல் தான்.

 

முதல் சந்திப்பில் இருந்து காதல், கல்யாணம், மகிழ்ச்சியான வாழ்க்கை இதில் இருந்து அவன் மனம். இப்போது மனைவியின் பேச்சு இல்லாமலும், காதல் இல்லாமலும், சிரிப்பு இல்லாமலும் அவன் எப்படி வாழ்வான். இதை தெரிந்து கொண்ட விதி, அவனின் வாழ்க்கையில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது ஒரு வருடத்திற்க்கு முன்பு.

 

ஆம், சிவகுரு மனைவி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்று தான் அவன் மனைவியின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி. அஞ்சலி செலுத்த வந்தவன், மனைவியின் இறப்பை இன்று வரை ஏற்றுகொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான். அவள் இல்லாத இடத்தில் என்ன, வீட்டில் கூட அவனால் இருக்க முடியவில்லை அப்படியொரு நரக வேதனை.

 

பொழுது புலர்ந்து அவள் முகத்தில் விழிப்பவன், மாலையில் அவள் மடிசாய்ந்து உறங்குவது தான் அவனின் இயல்பு வாழ்க்கை. இப்படி வாழ்ந்தவன் இப்போ அரவணைக்க யாரும் இல்லை என்ற நிலையில் அவன் நிலமை தனிமை என்றாகிவிட்டது.

 

“நீ இல்லாம எப்படி நான் இந்த ஒரு வருஷத்தை நகர்த்தினேனு தெரியலை பிருந்தா. ஏன் டி என்னை விட்டு போன, பாதில விட்டு போகுறதுக்கு தான் என்னை உயிருக்கு உயிரா காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டயா. உன்னை ஒரு நிமிஷம் காணலைனாலும் என் மனசு துடிக்குமே. ஆனா, இப்போ முழுசா காணமா போயிட்டயே பிருந்தா.” கண்ணீரு வழிந்துகொண்டிருக்க, இறந்த மனைவியின் கல்லறையின் முன் மனதிலே பேசிகொண்டிருந்தான். அவன் பேசுவது அவளின் ஆன்மாவுக்கு கேட்டதோ என்னவோ காற்றில் மரங்கள் மெல்ல அசைத்து அவனின் தலை கோதுவது போல உணர்வு அவனுக்கு ஏற்ப்பட்டது.

 

அவன் எவ்வளவு வேதனைப்பட்டு, அழுதாலும் இறந்து போனவள் மீண்டும் வரவா போகிறாள். அப்படி அவள் இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் வேறொரு மாநிலத்திலோ, இடத்திலோ, வேறொருவரின் மகளாக இருப்பாள். உலக்கத்தில் ஒருவரை போல ஏழு பேர் இருப்பார்கள் என்பது இன்று வரையில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையா, பொய்யா என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

 

கல்லறை தோட்டத்தில் இருந்து அவன் வெளியேறி சென்றதும் அவன் மண்டியிட்டு அழுத அந்த இடத்திலே பிருந்தாவின் ஆன்மாவும் அழுதுகொண்டிருந்தது. மற்றவர் கண்ணுக்கு இறந்தவரின் ஆன்மா தெரியாது. ஆனால் மற்றவர்களை உணர வைக்கும் சக்தி அந்த ஆன்மாவிற்க்கு இருக்கிறது.

 

சிவகுருவின் ஒவ்வொரு செயலையும் தூரத்தில் இருந்து ஒருவர் மறைமுகமாக நோட்டமிட்டு பார்த்துகொண்டிருந்தார். அவரின் நோக்கம் என்ன? சிவகுருவை பின் தொடர்பவனா? இல்லை அவன் மனைவி இறக்க காரணமாக இருந்தவனா?

***********

மருத்துவமனையின்  முக்கிய கோப்பில் கவனம் செலுத்திகொண்டிருந்தவனை கலைத்தது முரளியின் குரல். “சிவா..  என்ன காரியம் பண்ணிருக்கனு

உனக்கு தெரியுமா?” கோவத்தில் தான் இருக்கிறேன் என அப்பட்டமாக காட்டியது அவனது குரல்.

 

“என்ன முரளி… என்ன காரியம்.. தெளிவா சொல்லு.” கோப்பில் கவனத்தை வைத்துகொண்டே சாதாரணமாக கேட்டான் சிவா.

 

“புரியாம நடிக்காத… சிவா.”

 

“புரியும் படியா நீயே சொல்லு முரளி..” இன்னும் தெரியாதது போல் அவன் நடித்தான்.

 

”சிவா.. மும்பையில நடக்குற, டாக்டர்ஸ் மீட்டிங்க் ஏன் போகமாட்டேனு சொன்ன.”

 

“பிடிக்கலை அதான், போகலைனு சொன்னேன் முரளி.” சிவா கையில் வைத்திருந்த கோப்பை பார்த்து முடித்துவிட்டு வேறொரு கோப்பை எடுக்க வந்தவனை தடுத்து நிறுத்தினான் முரளி.

 

“சிவா இது ரொம்ப முக்கியமான மீட்டிங்க்னு உனக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் அந்த மீட்டிங்க் அட்டென் பண்ண போகமாட்டேங்குற. வேர்ல்டு லெவல் இருக்குற டாக்டர்ஸ் அட்டென் பண்ணுற மீட்டிங்க் போகலைனா என்ன அர்த்தம்.”

 

“பிடிக்கலைனு அர்த்தம் முரளி..”

 

“ரொம்ப மாறிட்ட சிவா… போகுற போக்குல பார்த்தா நீ ஒரு மருத்துவன் என்பதே மறந்து போகனும்.” சிவாவிடம், போராட முடியாமல் சோர்ந்து போய் அமர்ந்தான் முரளி.

 

“மாறுனது சந்தோஷம் தானே முரளி… ஏன் பிடிக்கலையா?.”

 

“ஒரு மருத்துவனா மக்களோட நலனை கருத்தில் கொண்டவன் தான் என் சிவா. அவன் எப்பவும் மக்களுக்கு நோயில்லாத உடல் நலன் முன்னேற்றத்தை மட்டுமே யோசிச்ச சிவகுரு எங்க போனான்..” சிவாவை, சந்தேக பார்வை பார்த்துகொண்டே முரளி பேச.

 

“தொலைந்து போயிட்டான் முரளி…” ஒரே வரியில் முடித்துகொண்டு அவனின் அறையை விட்டு வெளியேறினான் சிவகுரு, டாக்டர். சிவகுரு.

 

போகும் அவனையே வைத்த கண் மாறாமல் பார்த்துகொண்டிருந்த முரளின் மனம் இன்னும் இவன் எவ்வளவு மாறுவானோ என்ற பயம் தான் அவனுக்கு இருந்தது. முரளிக்கு ஒரு யோசனை வந்தது.. அதை உடனே செயல் படுத்தினான்.

************

ஹால் சோபவில் படுத்திருந்த பிருந்தாவின் கண்கள் அலைப்பாய்ந்து கொண்டிருந்தது. அவள் எழும் நேரமா? இல்லை பலநாள் துயில் கொண்ட சோர்வா? என தெரியாமல் அவள் கருவிழிகள் மூடிய இமைக்குள் அலைந்துகொண்டிருந்தது. சட்டென்று, அவள் விழிக்க, கண்கள் கூசியதால் அவள் மீண்டு கண்களை மூடிக்கொள்ள. இம்முறை மெதுவாக அவள் விழித்தாள் அப்போது விழிக்கும் போது அவளின் எதிரில் சிரிப்புடன் சிவகுரு நின்றிருந்தான். அவனை பார்த்து, “நான் இவ்வளவு நான் எங்க இருந்தேன்..” ஒற்றை கேள்வியில் அவன் மனம் துடித்தது.

 

“இங்க தான் இருந்த பிருந்தா.. நம்ம வீட்டுல தான் இருந்த.” அவளின் மூளைக்குள் அவள் இருக்கும் இடத்தை பதிய வைத்தான்.

 

”இல்லை… இல்ல… நான் இங்க இருக்கலை.. இதுக்கு முன்னாடி நான் வேறெங்கயோ இருந்தேன்.” அவள் மீண்டும் மூளைக்குள், அவள் தேடி பார்க்க அங்கே பழைய நினைவுகள் எல்லாம் சுத்தமாக இல்லை.

 

“இங்க தான் பிருந்தா நீ வாழ்ந்த இடம்.. இதோ நம்ம கல்யாணம் போட்டோ. இதோ, நம்ம ஹனிமூன் போட்டோ.. இதோ நம்மளோட ஒவ்வொரு காதல் தருணத்தையும் பாரு..” அவளை, பல புகைப்படங்களை மாட்டி வைத்தை இடத்தில் நிறுத்தி பார்க்க வைத்தான்.

 

எல்லாமே அவளும், சிவகுருவும் எடுத்துகொண்ட புகைப்படம் தான். அதில் எல்லாம், நெருங்கிய உணர்வுகளால் எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு போட்டோவிலும், காதல் பார்வை மிதமிஞ்சியதாக இருந்தது. அவனுடன் நெருக்கத்தில் இருந்த போட்டாவில் எல்லாம் அவள் முகபாவனைகள் சிணுங்கி கொண்டு இருந்தாள். அதையெல்லாம் பார்த்தவள் மனம், ‘இதில் இருப்பதெல்லாம், நானும், இவனுமா?’ என்ற கேள்வியில் தான் அவள் மனம் உழன்றது.

 

ஆனால் மூளைக்குள் இவையெல்லம் தேடி பார்த்தால் எந்த நினைவும் இல்லையே.. பின் எப்படி இந்த படத்தில் எல்லாம் நான் இருக்க முடியும். அவள் யோசிக்க யோசிக்க தலைவலி வலிக்க ஆரம்பித்தது. அப்படியே தலையை பிடித்துகொண்டு கீழே விழ போனவளை தாங்கி கொண்டான் சிவகுரு…

 

“என்னாச்சு பிருந்தா.. ரொம்ப யோசிக்காதா… இதில இருக்குறது நாம் தான். நீ என்னுடைய மனைவி, நான் உன்னுடைய கணவன் இதை மட்டும் நியாபகம் வச்சுக்கோ. பழையது எல்லாம் நினைவுக்கு வரலையேனு கவலைப்படாதா..” அவளை சோபாவில் அமர வைத்து பேசிகொண்டிருந்தான்.

 

“உண்மையாவே நான் உங்க மனைவியா..?”

 

“ஆமா ம்மா..”

 

’இல்லை.. இல்லை.. ஏதோ தடுமாற்றமா இருக்கு எனக்கு. கணவன் மனைவியா இருந்தா இந்த நேரம் எனக்கு எல்லாமே நினைவு வந்திருக்குமே.. ஏன் வரலை.. எல்லாமே மறந்து போனது மாதிரி தான் இருக்கு. இவன் தான் என்னோட கணவனா… இல்லை நடிக்குறானா?’ சிந்தித்தவளின் மனம் எங்கு தேடியும் பழைய நினைவுகளை கொண்டு வரமுடியாமல் தவித்தாள்.

 

”பிருந்தா..” அவன் அழைக்க

 

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தது. “அழாதா.. பிருந்தா.. நான் உன்னோட கணவன், நீ என்னோட மனைவி. இதை மட்டும் இப்போதைக்கு ஆழமா பதிய வச்சுக்கோ உன் மனசுல. வேறெதையும் நீ மனசுல போட்டு குழப்பிக்காதா இப்போ தான் உன் உடம்பு சரியாகிருக்கு.” அவளை எப்போது அவனின் கை அணைப்புக்குள் கொண்டு வந்தான் என்பது அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவனின் பேச்சில் அவள் உள்ளம் குழம்ப தொடங்கியது.

 

 

”இறந்தவள் மீண்டு வந்தாளா..?

இல்லை இவன் மீட்டெடுத்து வந்தானா..?

உணர்வுகளால் நேசிக்கப்பட்ட இதயம் இரண்டு..

உணர்ச்சிகளின் பிடியில் இவன்..

தன்னையே மறந்தவளின் உண்மை அறிவானா?”