என் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி – 24 Final

62c410ade8f106495b141ff338124a15-72041d5a

என் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி – 24 Final

நம் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி

அரவிந்தன் இடது கையில் மகளைத் தூக்கிக்கொண்டு வலது கரத்தில் கீர்த்தியின் கரங்களைப் பிடித்திருப்பதைக் கண்ட மேகலாவின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. இருவரின் முகத்தில் தெரிந்த பூரண சந்தோசம் அவரையும் தொற்றிக் கொண்டது.

“என்ன கண்ணா உன் மனைவியிடம் உண்மையை சொல்லிட்ட போல தெரியுதே” என வம்பிற்கு இழுக்க உதட்டில் அரும்பிய சிரிப்புடன் தலையசைத்தான்.

“நான் சொன்னது மாதிரியே நடந்துச்சா கீர்த்தி” என கேட்டவுடன் கணவனைப் பார்த்துவிட்டு,

“ஆமாம்மா. என்னை எனக்காக நேசிக்க ஒருத்தர் வருவாருன்னு நீங்க சொன்னது உண்மைதான். இவரோட இடத்தில் வேற யாரு இருந்திருந்தாலும் நடப்பதே வேறுதான்” என்றாள்

இருவரும் பேசுவதைக் கவனித்த உதயா, “நீங்க எல்லாம் என்ன பேசறீங்க என்றே புரியல” என்று சொல்ல மற்றவர்களின் முகத்தில் புன்னகை அரும்பியது.

உதயாவைத் தூக்கி முத்தமிட்ட மேகலா, “என் செல்லத்தோட பிறந்தநாள் தினத்தை இருவரும் மறந்துட்டாங்க. அதுதான் பாட்டி அவங்களைத் திட்டிட்டு இருந்தேன்” என்று கூறவே நம்பாமல் தாயையும், தந்தையும் பார்த்தாள்.

பிறகு, “அப்போ அவங்க ஏன் சிரிக்கிறாங்க. நீங்கதான் பொய் சொல்றீங்க” என்று சொல்லும்போதே கையில் கேக் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் உடன் வீட்டிற்குள் நுழைந்தனர் நிர்மலாவும், விக்னேஷும்!

அவர்களின் முகத்தில் சந்தோசத்தைக் கண்டவன், “என்னடா மௌனிக்கு குழந்தை பிறந்துவிட்டதா?” காரணத்தை யூகித்து விசாரிக்க,

“ஆமா ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்றான் விக்னேஷ் மகிழ்ச்சியுடன்.

அங்கே சந்தோசம் இரட்டிப்பாக மாறியது.  தன் பேரனை பார்க்க போவதாக சொல்ல, “நம்ம எல்லோரும் போலாம் அம்மா” என்ற கீர்த்தனா தன் மகளைத் தயார் செய்தாள்.

தன் தாய் – தந்தை, மேகலா மற்றும் நிர்மலா, விக்னேஷ் அவர்களின் புடைசூழ கேக்கை வெட்டிய உதயா தன் பிஞ்சி கரத்தினால் தந்தைக்கு ஊட்டிவிட, “எனக்கு கேக் இல்லையா?” கையில் மீதியிருந்த கேக்கை தாய்க்கும் ஊட்டிவிட்டாள்.

அரவிந்தனும், கீர்த்தனாவும் புன்னகையோடு உதயாவின் இரு கன்னங்களிலும் முத்தம் பதிக்க விக்னேஷ் அதை தன் செல்லில் புகைப்படம் எடுத்தான். அவளுக்கு கேக் வெட்டி கொண்டாடிவிட்டு மௌனியைப் பார்க்க அனைவரும் காரில் பொள்ளாச்சி சென்றனர்.

அங்கே ஹாஸ்பிட்டல் சென்று மகனை கையில் ஏந்திய விக்னேஷ், “ஹே பையன் அப்படியே உன்னை மாதிரியே இருக்கான்” என்று கூற மௌனிகாவின் மனம் மகிழ்ச்சியடைந்தது.

“இனிமேல் உனக்கு பொறுப்பு ஜாஸ்தி டா..” என்ற அரவிந்தனை கேள்வியாக நோக்கினான்.

“இந்த காலத்தில் பெண் பிள்ளைகளைவிட ஆண் பிள்ளைகளுக்கு தான் அதிகம் புத்திமதி சொல்லி வளர்க்க வேண்டியிருக்கு அதை சொன்னேன்” என்றவுடன் கீர்த்தி அர்த்தம் பொதிந்த பார்வையை கணவனை நோக்கி வீசினாள்.

அவளின் காதருகே குனிந்த அரவிந்தன், “இந்த முறையும் உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்” என்று முணுமுணுக்க நறுக்கென்று அவனின் கையைக் கிள்ளினாள்.

அது தந்த வலியைப் பொறுத்துக்கொண்டு, “வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் இரகசியம் பேசிட வெக்கத்துடன் சிரித்தவள் தலைக் குனிந்தாள் கீர்த்தனா.

அந்த காட்சியைக் கண்ட விக்னேஷ் – மௌனிகா இருவரும், “கடைசிவரை இவங்க இருவருக்குள் என்ன நடந்தது என்றே கண்டுபிடிக்க முடியல. நீங்க சந்தோசமாக இருப்பதைப் பார்க்க மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றனர்.

அடுத்த இரண்டு நாளில் டிஸ்சார்ச் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார் தேவகி. அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் விஷயமறிந்த மீரா தன் கணவனோடு வந்தாள்.

அங்கே அனைவருடன் பேசி சிரித்த அரவிந்தனை கண்டவுடன், “ஹே மச்சி எப்படிடா இருக்கிற? உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்குடா” என்று தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

வெகுநாட்களுக்கு பிறகு நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில், “நீ எப்படி இருக்கிற” என்று விசாரிக்க மீராவைக் கண்ணால் காட்டி, “ஆயுளுக்கும் சிறை தண்டனை அனுபவி என்று என்னை இவளோட தலையில் கட்டி வச்சுட்டாங்கடா” என சோகமாக புலம்பிட தன்னை மறந்து வாய்விட்டு சிரித்தான்.

அவன் சிரிப்பதை இமைக்க மறந்து பார்த்த அனைவரிடமும், “இந்த அரவிந்தனை நாங்க எல்லோரும் ரொம்ப மிஸ் பண்ணோம்” என்றான்.

அங்கே அமைதியாக நின்றிருந்த கீர்த்தியிடம் மனமார நன்றியுரைக்க, “அவர் மாறியதுக்கு காரணம் நானில்லை” என்றவள் மௌனியின் குழந்தையின் அருகே அமர்ந்திருந்த உதயாவைக் கைகாட்டி, “எங்க மகள்தான் இதுக்கெல்லாம் காரணம்” என்றாள்.

“மீரா ஆயுள் கைதியை பத்திரமாக பார்த்துக்கோம்மா” என்றான் அரவிந்தன் குறும்புடன்.

“சரிங்க அண்ணா” என்றவள் பணிவுடன் சொல்வதைக் கண்ட மகேஷ் முகம் மாறியதை கண்டு அங்கே  சிரிப்பலை அடங்க நேரமானது.

அவர்களோடு ரோஹித் மற்றும் ஜெயராமும் இணைந்திட அந்த இடத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிலையானது. மறுநாள் வீடு திரும்பிய அரவிந்தன் சில வேலைகள் இருப்பதாக சொல்லிவிட்டு வெளியே அலைந்தான். தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வருபவனிடம் காரணம் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.

விடுமுறை நாளில் அனைவரையும் வீட்டிற்கு அழைத்தவன், “உதயாவின் பெயரில் கவுன்சிலிங் சென்டர் ஒன்னு ஸ்டார்ட் பண்ணிருக்கேன். அங்கே சில மனதத்துவ டாக்டர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு பண்ணிருக்கேன்” என்று கூற அனைவரும் திகைப்புடன் அவனை ஏறிட்டனர்.

நேராக மேகலாவின் அருகே வந்தவன், “இந்த கவுன்சிலிங் சென்டரை நீங்கதான் அம்மா நிர்வாகம் செய்யணும். உங்களுக்கு நம்பிக்கையான நபரை வேலையில் வச்சிட்டு மேல்பார்வை மட்டும் பாருங்க போதும்” என்று அவரின் கையில் பொறுப்பை ஒப்படைத்தான்.

பிறகு நிர்மலாவின் எதிரே வந்து நின்றவன், “அந்த கவுன்சிலிங் சென்டரில் இருந்து வெளியே வரும் பெண்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தி கொடுக்க டைலரிங் சென்டர் ஆரம்பிச்சு கற்றுகொடுக்க சிறந்த ஆசிரியர்களை நியமித்துவிட்டேன் அம்மா. அதை நிர்வாகிக்கும் பொறுப்பை நீங்க பார்த்துகோங்க” என்று இருவரிடமும் பொறுப்புகளை ஒப்படைத்தான்.

“திடீரென்று இதெல்லாம் நீ ஏன் செய்யற கண்ணா” என்று புரியாமல் கேட்டார் மேகலா.

“பக்குவமற்ற வயதில் கீர்த்தி பிரச்சனைகளில் சிக்கியிருந்தாலும் அவளுக்கு முறையான வழிகாட்டுதலை சொல்லிகொடுத்து அவளோட வாழ்க்கையை வசந்தமாக மாற்றி இருக்கீங்க” என்றவன் சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“இந்த காலத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பேரின் வாழ்க்கை திசைமாறி போகுது. இங்கே மன அழுத்தத்தில் தற்கொலை முடிவுவைக் கூட எடுத்து குழந்தைகள் அனாதை ஆகின்றது. பணம் இருப்பவன் சைகார்டிஸ்ட்கிட்ட போய் மனநிலையை சரி பண்றான். ஆனால் பாமர மக்களுக்கு தினம் தினம் ஒரு பிரச்சனை. அந்த நிலையில் கீர்த்தி மாதிரி பாதிக்கபட்ட பெண்களுக்கு என்று ஒரு கைடன்ஸ் வேணும்னு தான் இதை செய்தேன்” என்று சொல்ல அவருக்கும் அவனின் மனநிலை புரிந்தது.

நிர்மலா மெளனமாக நிற்பதைக் கண்டு, “அம்மா…” என தொடங்க, “எனக்கு புரியுது அரவிந்தா. பாதிக்கபட்ட பெண்கள் சுயமாக முன்னேற டைலரிங் ப்ரீயாக சொல்லிதர சொல்ற” என்றவுடன் ஒப்புதலாக தலையசைத்தான்.

“விக்னேஷ் இதை நீ எனக்காக செய்யணும்” என்றதற்கு அவன் கேள்வியாக நோக்கிட, “அந்த பெண்கள் சுயமாக முன்னேற பேங்கில் லோன் அப்லே பண்ணி வாங்கி கொடு. அதை அவங்களால் கட்ட முடியாமல் போனால் ட்ரஸ் மூலமாக நம்ம இருவரும் கட்டிவிடலாம்” என்றான்.

உதயாவின் பெயரில் ட்ரஸ் ஒன்றை ஆரம்பித்து இருந்தான். ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் செய்தவனிடம், “எங்கிருந்து உனக்கு இவ்வளவு பணம் கிடச்சுது” என்று கேட்டான் விக்னேஷ்.

“அப்பா – அம்மா பெயரில் இருந்த பூர்வீக சொத்தை வித்துட்டேன். அத்தோடு இத்தனை வருடம் தேவைக்கு போக சேமித்து வைத்த பணமும், வேலை செய்த இடத்தில் இருந்து டிரஸ்ட் தொடங்குவதைப் பற்றி சொல்லி ஹெல்ப் கேட்டேன்.. அதோட விளைவுதான்” என்று விளக்கம் தந்தவன் மனைவியின் பக்கம் திரும்பினான்.

 “கீர்த்தி இதை  உன்னிடம் சொல்லாமல் செய்துட்டேன் என்று வருத்தபடுகிறாயா?” என மனையாளிடம் கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த கீர்த்தி, “எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு” என்றாள்.  மற்ற வேலைகளை ரோஹித், ஜெயராம், மகேஷ் மூவரிடம் பிரித்து கொடுத்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் அவரவர் வேலைகளை சரியாக செய்ய அரவிந்தன் தன் குடும்பத்துடன் சந்தோசமாக இருந்தான். கீர்த்தியின் வயிற்றில் குழந்தை வளர நாட்கள் இனிமையாக நகர்ந்தது. அவளின் ஏக்கம் அறிந்து ராமலிங்கம் – செல்விக்கு தகவல் சொல்ல அடுத்த பஸில் வந்து இறங்கியவர்களை கண்டு சந்தோஷத்தில் அழுத மகளை அனைத்து கொண்டார்.

“அப்பா..” என அழுத மகளிடம், “நீ தவறு செய்ய மாட்ட எனக்கு தெரியும். ஆனால் பெண் குழந்தையை விட்டுட்டு வந்ததை நினைச்சுதான் உன்னை அன்னைக்கு திட்டினேன். இந்த அப்பாவுக்கு உன்மேல் எள்ளளவும் கோபம் இல்லடா. மத்தவங்களை பற்றி கவலைப்படும் ஆள் நானுல்லைன்னு தெரிஞ்சும் நீ என்னிடம் மறைச்சது தான் கோபத்தில் பேசிட்டேன்” என்று மகளிடம் மனதார மன்னிப்பு கேட்டார்.

தன் மகள் கருவுற்ற விஷயம் அறிந்து நெற்றியில் முத்தமிட்டவர், “உனக்கு குழந்தை பிறந்ததையும், உன்னோட எதிர்கால படிப்பை யாரும் தடை விதிக்கக்கூடாதுன்னு வார்டன் போன் பண்ணி நடந்ததை சொன்னாங்க கீர்த்தி. அதுதான் அம்மா உன்னிடம் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகிட்டேன். கல்யாணம் ஆனபிறகு நீ குழந்தையைத் தள்ளிபோடுவதாக நினைச்சுதான் அன்னைக்கு அப்படி பேசினேன்” என்று நடந்ததை அவர் கூற மேகலாவை நன்றியுடன் நோக்கினாள் கீர்த்தி.

அந்த குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்ட மேகலாவிற்கு, ‘என்னோட ஆத்திரத்தில் ஒரு குடும்பம் அழிஞ்சது. இன்னைக்கு வேறொரு குடும்பத்தை வாழ வச்சிருக்கேன். எந்த வயதிலும் நிதானம் ரொம்பவே முக்கியம்’ என மனதினுள் நினைத்தார்.

அதன்பிறகு ராமலிங்கம் – செல்வி இருவரும் அன்னூர் வந்துவிட உதயா மட்டுமே அவர்களின் உலகம் ஆகிப்போனாள். கீர்த்திக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த மூன்று மாதமும் பெற்றவர்களின் கவனிப்பிலும், கணவனின் அன்பிலும் திளைத்தாள்.

மூன்று மாதம் சென்று மறைய பிரசவலியால் துடித்தவளை மருத்துவமனையில் சேர்க்க அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் கீர்த்தனா.

அரவிந்தனின் கையில் குழந்தையைக் கொடுக்க, “கீர்த்தி இந்த முறையும் நான்தான் வின் பண்ணிருக்கேன். நமக்கு இரண்டாவதும் பெண் குழந்தை தான் பிறந்திருக்கு” என பூக்குவியல் போன்ற மகளை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு மன நிறைவுடன் மனையாளின் நெற்றியில் இதழ் பதித்து நிமிர்ந்தான்.

தந்தையின் மடிதனில் அமர்ந்த உதயா, “அப்பா நான் அம்மா மாதிரி இருக்கேன்னு சொல்வீங்க இல்ல. நம்ம பாப்பா உங்களை மாதிரி இருக்கிறாப்பா” என்று கூறிய மகளின் நெற்றியிலும் பாசத்துடன் முத்தம் பதித்தான்.

“அப்பாவுக்கு நாங்க இரண்டும் பொண்ணுங்க” என்றவுடன் அரவிந்தனை இமைக்க மறந்து பார்த்தாள் கீர்த்தி.

அவளின் கண்களில் காதலை கண்டவன் “எனக்கு மொத்தமாக மூணு பொண்ணுங்க” என்றான் அரவிந்தன் குறும்புடன்.

“எப்படி” மகள் யோசனையோடு கேட்க, “உங்க அம்மாவை கணக்கில் எடுத்துக்கோ உதயா” என்றவுடன் அர்த்தம் புரிந்து க்ளுக்கென்று சிரிக்க கீர்த்தி காதலோடு கணவனை முறைத்தாள். அவன் குறும்புடன் கண்சிமிட்டினான்.

யாரின் வாழ்க்கையில் எந்த நிமிடம் என்ன நடக்குமென்று நம்மை படைத்த ஆண்டவனை தவிர மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுபோல அரவிந்தன் – கீர்த்தனாவின் வாழ்க்கையில் எதிர்பாராது நடந்த விபத்தும் அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்தது.

விருப்பம் இல்லாத தனிமைக்கு ஆளான அரவிந்தனும், தன் துயரத்தை பகிர முடியாத சூழலில் அவளே ஏற்படுத்திக் கொண்ட தனிமைக்க் முற்றுபுள்ளி வைத்தது உதயாவின் பிறப்பு. இருவழி பாதையில் திசைமாறி பறந்த பறவைகளை திருமணம் என்ற கூட்டிற்கு அடைக்க காரணமானாள்.

இருவரின் இருள் வாழ்விலும் வெளிச்சத்தை கொண்டு வந்து அவர்களின் தனிமைக்கு ஒரே முற்றுபுள்ளி வைத்து மகிழ்ச்சியினை தொடக்க புள்ளியாக மாற்றிவிட்டாள். இனி இறுதி வரையில் அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே வீசும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

அழகிய பூஞ்சோலையான

என் வாழ்க்கையில்..

திடீர் என வீசிய புயலில்..

தன் வேர்களை இழந்து

பாலைவனமாய் மாறியதே..

 

எட்டுத் திங்கள் தனிமையில் தவித்து

பரிதாப பார்வையிலிருந்து தப்பிக்க

வெறுமையான மனதோடு வேறு

ஊரை நோக்கி பயணித்தேன்..

 

திடீரென்று என் வாழ்வில்

வசந்தம் வந்தது போல..

என் தனிமைக்கு முற்றுப்புள்ளி

வைத்திட நீயும் மண்ணில்

வந்து பிறந்தாயே..

 

உனக்கும் எனக்குமான பந்தம்

உன்னைக் கையில் ஏந்திய

நாளில் இருந்தே தொடங்கியதே..

உன்னாலே மீண்டும் புதிதாய் பிறந்தேன்..

 

உன்னாலே மீண்டும் புன்னகைத்தேனடி..

உன்னாலே மீண்டும் கலங்கி நின்றேனடி..

என்னுள் புதையுண்ட உணர்வுகளை மீட்டெடுத்து

உயிர் தந்தாயே தளிர் மலரே..

 

தாயாய் இருந்த என்னை

சேயாய் மாற்றிய மகளே..

நீயின்றி இன்று நானும் இல்லையடி..

மீண்டும் ஒரு முறை இம்மண்ணில்

பிறப்பெடுத்தால்..

 

மகளே உன் மகனாய் நானும்

என் தாயாய் நீயும் மடிதாங்கிட..

இந்த பந்தம்  ஈரேழு ஜென்மமும்

தொடர வேண்டுமென என்னுள்ளம்

ஏங்குதடி பைங்கிளியே..

 

ஒரு தந்தையின் அழகிய கனவு

கை சேரும் வேளைதனில்..

என் உள்ளங்கையில்

நின் தளிர்கரம் இணைந்திடும்

வேளையில் விழிதனில் தேக்கும்

கண்ணீர்துளியின் சுவை மாறி

தித்திக்கிறதே என் தேன் மலரே..

 

இம்மாற்றத்திற்கு காரணமானவள் நீயடி..

முற்றுப்புள்ளியாய் மாற இருந்த வாழ்க்கையில்..

வசந்தமாய்.. வரமாய்.. வந்து..

எனக்கு சந்தோசத்தை பரிசாக தந்து..

அழகிய தொடக்கத்தை உருவாகியவள்..

 

நீயே என் வாழ்க்கையின் அர்த்தமடி..

உன் தளிர்கரம் பிடித்து

நடக்க கற்று கொள்கிறேன்..

தந்தையாய் அல்ல மழலையாய்..

உன்னை பற்றுகோலை பற்றிகொண்டு

மீண்டும் வாழ்க்கையினை ரசிக்க போகிறேன்

மகளே எல்லாம் உன்னாலே..

முற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!