என் முன்னாள் காதலி 14

என் முன்னாள் காதலி 14

 

மழைக்காலமாதலால் மழையும் விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. மழையில் நனைந்ததில் இருவருக்குமே காய்ச்சல் கண்டிருந்தது. 

 

விடுமுறை நாட்களும், புளியங்காட்டு பறவைகளும், கல்மண்டபமும் காதலர்கள் வரவின்றி சற்று வெறிச்சோடி கிடந்தன.  

 

தனசேகரன், உடல் தேறி இயல்பு நிலைக்கு திரும்பவே ஒருவாரம் ஆகியிருந்தது. மறுவாரத்தின் விடுமுறையில் தனா காட்டுக்கு வந்திருந்தான். அவனை அதிகம் காக்க வைக்காமல் சுவாதியும் வந்திருந்தாள்.

 

இடைப்பட்ட இரு வாரத்தில், முகம் கறுத்து, உடல் மெலிந்து, நடையிலும் சோர்வு தெரிய வந்தவளைப் பார்த்தவனுக்கு, மனம் பதறியது.

 

“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க ஸ்ரீ?” தனா பதறி கேட்டதற்கு மெலிதாய் புன்னகைக்க முயன்றவள், “அன்னிக்கு மழைல நனஞ்சோம் இல்ல. அதான் காய்ச்சல், இருமல், ஜலதோசம்.” என்று சிறுகுரலில் பதில் இருத்தாள்.

 

அவள் நெற்றியில் புறங்கை வைத்து சோதித்துப் பார்த்தவன், “இப்பவும் உடம்பு கதகதனு தான் இருக்கு. இந்த நிலைமையில இங்க ஏன் வந்த ஸ்ரீ?” கவலையும் கண்டிப்புமாக தனா கேட்க,

 

“நல்லா சொல்லு தம்பி, நான் சொல்லியும் கேக்கல. இங்க வந்தே ஆகணும்னு அடம்பிடிச்சு என்னய இழுத்துட்டு வந்துடுச்சு.” என்றபடி மருது தாத்தா அவள் பின்னோடு வந்து நின்றார்.

 

அவர் சொன்னதைக் கேட்டு சுவாதியை முறைத்தவன், “பெரியவங்க சொன்னா கேக்கமாட்டியா ஸ்ரீ? எப்ப பார்த்தாலும் உன் விருப்பம் உன் முடிவுன்னு பிடிவாதம் பிடிக்கறது நல்லதில்ல. உன் நல்லதுக்காக தான சொல்றாரு.” தனா அவளை கடிந்துகொள்ள, 

 

முகம் சுருங்கி போனவள், “உன்ன பார்க்க ஆசையா வந்தா, என்னை திட்ற இல்ல. போடா.‌ உன் பேச்சு கா. நான் போறேன்.” ரோஷமாக சொல்லிவிட்டு, “வா தாத்தா, நாம போலாம்.” என்று முன்னே நடந்தாள்.

 

அவளை அழைத்து சமாதானம் செய்ய அவன் மனது விழைந்தாலும், அதன்பிறகு அவளின் பிடிவாதம் அதிகமாகும் என்பதால் தனா அமைதியாகவே நின்றிருந்தான். அதில் அவள் இன்னும் முறுக்கிக் கொண்டு சென்றாள்.

 

அடுத்தடுத்த வாரங்கள் சுவாதி சந்திக்க வராது போகவே, முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவனின் மனது, போக போக அதிகமாக அவளைத் தேடலானது. 

 

அவளின் மாதிரி தேர்வு முடியும் நாள் வரை பொறுத்திருந்தவன், அதற்கு பிறகும் அவள் வாராமல் போகவே, மனம் வாடிப்போனான். மருது வாத்தியாரிடம் அவ்வப்போது சுவாதியின் நலம் விசாரித்துக் கொண்டவனுக்கு, பிரிவின் வேதனை வெகுவாக வாட்ட ஆரம்பித்தது. 

 

அவளை பார்க்காமல் இனி முடியாது என்ற நிலையில் துணிந்து, அவள் பள்ளி முடித்து வரும் நேரம் குறுக்கு பாதையில் அவளுக்காக காத்து நின்றான். 

 

வெகு சில மாணவ, மாணவியரே மிதிவண்டியிலும் நடந்தும் அந்த பாதையில் கடந்து செல்ல, தாமதமாகத்தான் சுவாதி வந்தாள்.

 

மெதுவாக மிதிவண்டியை மிதித்து வந்தவள், வழியில் தனசேகரன் நிற்பதைப் பார்த்ததுமே நின்று இறங்கிக் கொண்டாள். 

 

சுற்றும்‌ முற்றும் பார்வையைச் சுழற்றி அலசியபடியே சைக்கிளை தள்ளிக்கொண்டு தன்னை நோக்கி வருபவளை பார்த்தவனுக்கு, அவளது மருண்ட பார்வை ரசனை கூட்டியது.

 

அவனிடம் வந்தவள், “நீ ஏன்‌ இங்க வந்த தனா? யாராவது நாம பேசறதை பார்த்துட்டா!” பதற்றத்துடன் மறுபடி பார்வையைச் சுழற்றினாள்.

 

வழக்கமாக இவன் தான் இப்படி பதறி எச்சரிக்கையாக இருப்பான். சுவாதிக்கு எப்போதுமே அந்த எச்சரிக்கை உணர்வெல்லாம் இருந்ததில்லை. இன்றென்ன புதிதாக என்று அவளைப் பார்த்த தனா, “அங்க யாரும் நம்மள பார்க்கல. முதல்ல நீ என்னை பார்த்து பேசு” என்று அவள் முகத்தை தனக்கு நேராக திருப்பிச் சொன்னான்.

 

அவள் விழிகள் மிரட்சியுடன் படபடத்து அவன் முகத்தில் பதிந்தன. “ஏன் இவ்வளோ நாளா என்னை பார்க்க வரல ஸ்ரீ?” அவன் அவளை நேர்நோக்கி வினவ,

 

“ஏன் எப்பவும் நான் தான் உன்ன தேடி வரணுமா என்ன?” அவள் உர்ரென்று கேட்டாள்.

 

“அதான் இப்ப நான் உன்ன தேடி வந்துட்டேனே.” அவன் கைகளை விரித்து குறும்பாகச் சொல்லவும், அவள் பார்வையில் இன்னும் முறைப்பு அதிகமானது.

 

“இத்தனை நாள் நீ என்னை தேட விட்டதே இல்ல ஸ்ரீ… நான் உன்ன நினைக்கும்போதே என் முன்னாடி வந்து நிப்ப. அது கொஞ்ச நேரமா இருந்தாலும், உன்ன பார்த்தாலே என் மனசு நிறைஞ்சு போயிடும். இப்ப மாச கணக்கா நீ வராம, உன்ன பார்க்காம… முடியலடீ என்னால. உன்ன தவிர வேற எதுலயுமே நினப்பு போகல. படிக்க கூட முடியல. என்னை இப்படி தவிக்க விடாதடி…” தனா உள்ளார்ந்து சொல்ல, 

 

அவளின் வீம்பெல்லாம் காணாமல் கரைந்து போக, தான் பிடித்திருந்த சைக்கிளை அப்படியே விட்டவள் அவன் நெஞ்சோடு முகம் பதித்து கட்டிக் கொண்டாள். பிடிப்பாரின்றி சாய்ந்த சைக்கிளை எட்டிப்பிடித்து நிறுத்த வேண்டியதாக இருந்தது அவனுக்கு.

 

“என்னால முடியல தனா… ரொம்ப பயமா இருக்கு…” என தன்னோடு ஒன்றியவளை, மறு கையால் அணைத்துக் கொண்டவன், “எனக்கும் இப்ப பயமா தான் இருக்கு… இப்படி நாம கட்டிப்பிடிச்சு நிக்கிறதை யாராவது பார்த்தா… செத்தோம்” சிரித்தபடி அவன் சொல்லவும்,‌ சுவாதி பதறி விலகிக் கொண்டாள்.

 

அவள் பதற்றத்தில் அவன் சிரிப்பு இன்னும் விரிந்தது. அவள் முகம் சுருங்கியது. “நீ முதல்ல கிளம்பு நாம அப்புறம் பேசலாம்.” ஒற்றை வாக்கியத்தில் பேச்சை முடித்துக் கொண்டவள், சற்று பயத்துடன் தன் சைக்கிளை தள்ளிக்கொண்டு நகர்ந்தாள்.

 

“என்ன புதுசா உனக்கு இவ்வளோ பயம்? வீட்ல ஏதாவது பிரச்சனையா?” தனா கேட்டபடி அவளுடனே நடந்தான்.

 

“அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. நீ என் பின்னாடி வராத போ” அவனை விரட்டியபடி அவள் சைக்கிளில் ஏறி மிதித்து வேகம் பிடித்து விலகிப் போனாள். 

 

விலகிச் செல்பவளை பார்த்து நின்ற தனாவும், ஓரம் நிறுத்தியிருந்த தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் வேகத்திற்கு ஈடாக வந்து இணைந்து கொண்டான். 

 

“சும்மா நின்ன பையனை கட்டிப்புடிச்சிட்டு‌ எதுவும் சொல்லாம போனா என்னடி அர்த்தம்?” அவன் வம்பாய் கேட்டு உடன்வர,

 

அவனை முறைத்தவள், “எனக்கு பைத்தியம்னு அர்த்தம்‌… என் கூட வராம போடா” என்று கடுகடுத்தாள்.

 

“நீ எப்ப என்னை பார்க்க வருவேன்னு சொல்லு நான் போறேன்” வழக்கத்திற்கு மாறாக பிடிவாதம் பிடிப்பவன் தலையில் எதையாவது எடுத்து போடத் தோன்றியது அவளுக்கு.

 

சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றவள், “எனக்கு நாளையில இருந்து பிராக்டிகல் எக்ஸாம் இருக்கு. அப்புறம் ஸ்டெடி ஹாலிடேஸ் வருது. ரிவிஷன் ஒர்க் வேற நிறைய நிறைய இருக்கு. சோ ஃபைனல் எக்ஸாம் முடிஞ்ச பிறகு தான் மத்ததை பத்தி யோசிக்க முடியும் என்னால” படபடவென ஒரே மூச்சில் சொன்னாள். 

 

தனாவின் முகம் சுருங்கியது. “அப்ப மாச கணக்காகுமே… நடுவுல ஒரேயொரு முறை எனக்காக வரமாட்டியா?” அவன் ஏக்கமாக கேட்க,

 

“உனக்கும் இன்னும் பத்து நாள்ல எக்ஸாம் இருக்கில்ல. போய் ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கடைசியா நாம பேசலாம். பை.” உத்தரவு போல சொல்லிப் போனவளைப் பார்த்து நின்றவன் தலையைக் கோதிவிட்டு கொண்டான்.

 

முன்பு அவள் தன்னை தேடி வரும்போது விரட்டியவனுக்கு, இப்போது விழுந்த இடைவெளி மிகப்பெரியதாக வருத்தியது.

 

அடுத்த இரண்டு மாதங்களும், படிப்பு பரீட்சை என அவனை சுழற்றிக் கொள்ள, மற்றதை எல்லாம்‌ ஒதுக்கி வைத்திருந்தான். எப்போதும் போல வெற்றிகரமாக கல்லூரி இறுதி தேர்வை முடித்தவன், இடைப்பட்ட நாட்களை வீணாக்காமல் அடுத்துவரும்‌ அரசாங்க தகுதி தேர்விற்காகவும் படிக்க ஆரம்பித்திருந்தான். 

 

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்திருந்தது. இன்னும் ஸ்ரீ தன்னை பார்க்க வராததில், அவனுக்குள் ஏதோ துணுக்குற்றுக் கொண்டே இருந்தது. அவளை எதிர்பார்த்து தினமும் கல்மண்டபத்தில் காத்திருக்க ஆரம்பித்திருந்தான் தனசேகரன். 

 

இன்னும் சில நாட்கள் காத்திருப்பில் கழிய, சுவாதிஸ்ரீ அன்று தனியே வந்திருந்தாள்.

 

அவள் வந்ததைக் கூட உணராமல், கோயிலை சுற்றிலும் படர்ந்திருந்த செடி கொடிகளை வெட்டி எடுத்து சுத்தப்படுத்தி கொண்டிருந்தான் தனசேகரன்.

 

அவன் கைவேலையில் கவனமாக இருக்க, ஸ்ரீ அவனை பார்த்தபடி வந்து அமைதியாக நின்றாள்.

 

நெற்றியில் பூத்த வியர்வையை புறங்கையால் துடைத்துவிட்டபடி நிமிர்ந்தவன், அங்கே சுவாதியைப் பார்த்ததும் பரவசமாக முகம் மலர்ந்தான்.

 

“ஸ்ரீ, எப்ப வந்த? இப்ப தான் என்னை பார்க்க வரணும்னு தோணுச்சா உனக்கு?” முகம் பூத்த புன்னகையோடு அவளிடம் வந்து நிற்க,

 

“நீ ஏன் இந்த வேலையெல்லாம் செய்ற?” ஸ்ரீ அவனிடம் கேட்டு வைத்தாள்.

 

“அது, வாரம் வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பெரியவரும் பாட்டியும் வந்து இந்த சூலத்துக்கு பூஜை பண்ணிட்டு, இந்த இடத்தையும் சுத்தப்படுத்திட்டு போவாங்க. கொஞ்ச நாளா அந்த தாத்தாக்கு உடம்பு சரியில்லயாம், பாட்டி மட்டும் வந்து பூஜை பண்ணிட்டு போறாங்க. அவங்களால தனியா இங்க சுத்தம் பண்ண முடியலன்னு வருத்தப்பட்டாங்க. அதான் நான் உதவி செய்யலாம்னு.” என்று விளக்கம் தந்தான்.

 

“ரொம்ப தான் பெரிய மனசு உனக்கு.” என்று நொடிந்தவள், அங்கே பாதி மண்ணில் புதைந்திருந்த தூண் மீது உட்கார்ந்து கொண்டாள். 

 

“இன்னும் கொஞ்ச வேலை தான் இருக்கு. உன்கூட பேசிட்டே செஞ்சு முடிச்சிடுவேன்.” என்றவன் விட்ட இடத்திலிருந்து களைகளை வெட்ட ஆரம்பித்தான்.

 

எப்போதும் ஏதாவது வளவளத்து அவனிடம் வம்பளப்பவள், இப்போது ஏதோ குழப்பத்துடன் யோசித்தபடி அமைதியாகவே இருந்தாள்.

 

அவள் மௌனத்தில் திரும்பி அவளைப் பார்த்தவன், “ஏதோ‌ பெரிய யோசனையில இருக்க போல ஸ்ரீ.” கேலியாக கேட்க,

 

“ம்ம் ஆமா,‌ ரொம்ப பெரிய யோசனை தான்” என்றாள்.

 

“எக்ஸாம் எப்படி‌ இருந்தது?” அவள் நன்றாக எழுதி இருப்பாள்‌ என்றறிந்தும் அதை அவள் சொல்ல வேண்டும் எனக் கேட்டான்.

 

“சூப்பரா எழுதி இருக்கேன். இவ்வளோ ஈஸியா வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.” என்றவள், “ஆமா, நீ எப்படி எக்ஸாம் பண்ண?” அவனிடமும் வினவினாள்.

 

“எப்பவும் போல செமயா பண்ணியிருக்கேன்.” தனா உற்சாகமாக பதில் தந்தபடி வேலையை தொடர்ந்தான். 

 

மீண்டும் அங்கே அமைதி நிலவியது. அவள் அருகிருக்கும்போது இவ்வித அமைதியை அவன்‌ இதுவரை உணர்ந்ததில்லை. இன்று என்ன ஆனது இவளுக்கு என்ற யோசனையோடு அவன் அவளைப் பார்க்க, அவளோ நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

 

அவளிடம் வந்தவன், அவள் கரத்தில் பட்டென்று ஓரடி வைத்து, “என்ன பழக்கம் இது ஸ்ரீ?” என்று கடிய,

 

வெடுக்கென எழுந்தவள், “என்ன நீ நான் என்ன செஞ்சாலும் குத்தம் சொல்லிட்டே இருக்க? என் வீட்ல கூட என்னை யாரும் இதுவரைக்கும் ஒரு வார்த்தை சொன்னதில்ல தெரியுமா?” என்று சீறினாள்.

 

“ஏன் நான் உன்ன ஒன்னும் சொல்லக்கூடாதா? எதுக்கு இவ்வளோ கோபம் உனக்கு?” தனா வினவ, அவளிடம் பதிலில்லை. மௌனமாக தலையசைத்து விட்டு அமைதியானாள்.

 

நெற்றி சுருங்க அவளை பார்த்திருந்தவன், திரும்பி தன் வேலையில் கவனமானான்.  

 

நிமிடங்கள் கடந்தன. அவர்களிடையே நிலவி இருந்த மௌனம் இருவருக்குமே புதுவித சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அந்த அமைதி பொறுக்காமல் ஸ்ரீயே அதை கலைத்தாள்.

 

“நான் தப்பு பண்ணிட்டேன் தனா…” அவள் சொல்ல,

 

“அப்படியா? பெரிய தப்பா? சின்ன தப்பா?” தனா விளையாட்டாகவே கேட்டான்.

 

அவளுக்கு சுர்ரென்று கோபமேற, “தப்புல என்ன பெரிசு சின்னது?” கடுப்பாக கேட்டவள், சற்று தன்னை நிதானம் படுத்திக்கொண்டு, “சின்ன தப்பு தான் அதை வளரவிட்டா பெரிய தப்பாயிடும்” என்றாள்.

 

“தப்பு கூட வளருமா என்ன? புதுசா இருக்கே!” அவனுக்கு அவளிடம் வம்பளத்து வார்த்தை வளர்க்கத் தான் தோன்றியது.

 

ஆனால் அதை ரசிக்கும் நிலையில் தான் அவள் இல்லை போல. பதில் பேசாமல் அமைதியாகி விட்டாள்.

 

தனா அவளை மறுபடி திரும்பி பார்க்க, எங்கோ அவள் பார்வை வெறித்திருந்தது. அவள் முகமும்‌ தீவிர யோசனையைக் காட்டியது. அவள் ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தவன், அவளே தெளிந்து பேசட்டும் என பொறுமை காத்தான்.

 

சில நிமிட அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது அவள் குரல்.

 

“உன்னோட எனக்கு ஒத்துவராதுனு தோணுது. இனிமே நான் உன்ன பார்க்க வரமாட்டேன். நீயும் என்னை தேடி வராத.” அவள் தீவிரமான குரலில் சொல்ல, களைகளை வெட்டி வீழ்த்திய அவன் கரம் அப்படியே நிற்க, அதிர்ச்சியாக அவளை திரும்பி பார்த்தான்.

 

அவள் குரலில் இருந்த தீவிர பாவம், அவள் முகத்திலும் தெரிந்தது.

 

“என்ன திடீர்னு… இத்தனை நாள் தோணலயா நான் உனக்கு ஒத்துவரமாட்டேன்னு…” சாதாரணமாக கேட்க நினைத்தும், அவன் குரல் இறுகியே ஒலித்தது, அவன் மனதைப் போலவே.

 

“அப்ப உன்ன பிடிச்சிருக்குன்னு ஆசப்பட்ட எனக்கு, உனக்கும் எனக்கும் ஒத்துவருமான்னு யோசிக்க தோணல. அங்க தான் நான் தப்பு பண்ணிட்டேன். முன்னையே யோசிச்சிருந்தேன்னா…” அவள் வேகமாக சொல்லி மூச்சு வாங்க நிறுத்தினாள்.

 

“சொல்லு, நீ முன்னயே யோசிச்சிருந்தேனா?” அவள் நிறுத்திய இடத்திலிருந்து அவன் கேள்வி தொடுத்தான். அந்த பேச்சை, அந்த நொடியை கடப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. தன் பலவீனத்தை அவள்முன் காட்டாமல், தன் முழு உயரத்திற்கு நின்று மார்பின் குறுக்கே கைகளை கட்டி அவளை நேர் பார்வையாக பார்த்து நின்றான்.

 

அவன் தோரணையையும்‌ அவன் பார்வையையும் அவள்‌ வெகு அலட்சியமாக எதிர்கொண்டாள். “இவ்வளோ தூரம் நம்ம பழக்கத்தை வளர விட்டிருக்க மாட்டேன்” என்றாள்.

 

“வருஷ கணக்கா மனசுல ஆசைய வளர விட்டு இப்ப ஒத்து வரலன்னு சொன்னா என்னடி அர்த்தம்? உனக்கு நான் வேணுன்னா வேணும். வேணானா வேணாவா? உன்னோட கொழுப்பெடுத்த பிடிவாதத்தை நம்ம காதல்ல கூடவா காட்டுவ?” அவளை நோக்கி வந்தவன், தன்னை மீறி அவளிடம் கத்திவிட்டான்.

 

அவனது ஆவேச பேச்சில், சுவாதி சற்றே மிரண்டு ஓரடி பின்வாங்கினாள். 

 

அவளின் மிரண்ட பார்வையில் தன் நிதானத்தை இழுத்துப் பிடித்தவன், “நீ முதல்ல கிளம்பு. இன்னொரு நாள் பேசிக்கலாம்.” அந்த பேச்சை வளரவிடாமல் அப்போதே தடுத்திட முயன்றான்.

 

“இல்ல. நான் மறுபடியும் வரமாட்டேன். இப்பவே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.” அவள் நகராமல் சொல்ல,

 

“முடிச்சிக்கலாம்னா, எதைடீ முடிக்க சொல்ற? இனி என்ன இருக்கு நமக்குள்ள முடிக்கிறதுக்கு? ச்சீ போடி.” கசந்து சொன்னவன், தன் முகத்தோடு சேர்த்து தலையையும் இரு கைகளால் அழுத்திக் கோதிக் கொண்டான்.

 

“என்ன சீன்னு சொல்ற? நான் உனக்கு சீயா? நானா உன்ன தேடி வந்து கட்டிக்கலாம்னு கேட்டப்போ இனிச்சதில்ல, இப்ப ஒத்துவராதுன்னு சொன்னா கசக்குதோ?” அவன் தன்னைப் பார்த்து சீ என்றதில் அவளுக்கு சுறுசுறுவென கோபம் பொங்கியது.

 

“என்ன பொடலங்கா‌ …க்குடி என்னை தேடி வந்த? என்கிட்ட குழஞ்சு குழஞ்சு பேசி, இழஞ்சி இழஞ்சி உரசுனதெல்லாம் என்ன கணக்குடி? அப்பல்லாம் தெரியலயா நான் ஒத்துவர மாட்டேன்னு. இப்ப தான் தோணுதா உனக்கு?” அவன் பல்லை கடித்தபடி கேட்க,

 

அவன் சொல்லாமல் நிறுத்திய வார்த்தையின் அர்த்தம் தவறாகத்தான் இருக்கும் என்றுணர்ந்தவளுக்கு, கோபத்தோடு கூடவே அழுகையும் வந்தது. “என்னை தப்பா பேசாத தனா… நான் வேணான்னு சொன்ன உடன‌ உனக்கு கெட்டவளா ஆகிட்டேனா? மனசுக்கு‌ பிடிச்சு தான உன்கூட பழகனேன்…” என்று தேம்பியவள், “இப்பவும் உன்ன எனக்கு பிடிக்கும் தான். ரொம்ப பிடிக்கும்ன்றதால மட்டும் காலுக்கு சேராத செருப்ப‌ போட்டுக்க முடியுமா… ஆக்க்…” 

 

அவள் சொன்ன வார்த்தையில் தனா அவளை அறைந்திருந்தான். அவனது மண் படிந்த முரட்டு கரத்தின் பதத்தில் அவள் பளிங்கு கன்னம் செவ்வானமாக சிவந்து காந்தியது. 

 

விறுவிறுவென காந்தி எரிந்த எரிச்சல், இதுவரை அவள் அனுபவிக்காத வலியைக் கொடுக்க, அவனை நெட்டித் தள்ளியவள், “இதுவரைக்கும் என் அம்மா கூட என்னை அடிச்சதில்ல… நீ என்னை அடிச்சிட்ட இல்ல…” என்று கத்திக்கொண்டே இரு கைகளாலும் அவன் மார்பில் மாறி மாறி ஆவேசமாக தாக்கினாள்.

 

அவள் கரங்களைத் தடுத்துப் பிடித்து அவளை தூரத் தள்ளி விட்டவன், “சுவாதீ… போதும் நிறுத்து…” என்று அதட்டல் விட்டவனுக்கு மூச்சு முட்டும் உணர்வு.

 

அவன் தள்ளி விட்டதில் மண் தரையில் விழுந்தவளுக்கும் மூச்சு வாங்கியது. தரையில் நேராக அமர்ந்து கொண்டவள், “நிஜமா ரொம்ப வலிக்குது தனா…” வலித்த கன்னத்தை தேய்த்துவிட்டபடி தேம்பலோடு சொன்னவளைப் பார்த்தவனுக்கு அய்யோ என்றிருந்தது.

 

நெருப்பை முயன்று விழுங்குவதைப் போல, அவள் வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள முயன்றான் அவன். அவர்கள் உறவுக்கான ஆதாரமே அவர்கள் இருவருக்கிடையே பிணைத்திருக்கும் பிடித்தம் மட்டுமே. அதில் அவள் பக்கமான பிணைப்பு விலகிக் கொண்டிருக்க இவன் புறமும் தளர்ந்து கொண்டிருந்தான்.

 

அவள் அமர்ந்திருந்த இடத்தின் பக்கவாட்டில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது அவனுக்கு தெரிய, மனம் பொறுக்காமல் அவளை கைக்கொடுத்து எழுப்பி அங்கிருந்து அழைத்து வந்தான். அவளும் மறுப்பின்றி தேம்பலோடு அவனுடன் வந்தாள்.

 

தன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, தன் முகத்தில் நீரை அடித்து கழுவியவன், உலர்ந்த தொண்டையில் நீரை நிறைத்துவிட்டு, மீதியை அவளிடம் நீட்டினான். 

 

அவனையும் அவன் தந்த தண்ணீர் பாட்டிலையும் பார்த்தவள், மறுக்காமல் வாங்கி பருகினாள். தன் முகத்தையும் மண் படிந்த கைகளையும் தண்ணீர் தொட்டு துடைத்துக் கொண்டாள்.

 

“இப்ப சொல்லு ஸ்ரீ… உனக்கு என்ன பிரச்சனை… ஏன் திடீர்னு இப்படியெல்லாம் பேசுற?” தனா இப்போது பொறுமையாக அவளிடம் வினவினான். 

 

சுவாதியும் இப்போது தெளிந்திருந்தாள். அதே தெளிவோடு அவனுக்கு பதில் தந்தாள். “அம்மாக்கு என்மேல சந்தேகம் வந்து என்கிட்ட கேட்டாங்களா, நானும் உன்ன பத்தி தைரியமா அவங்க கிட்ட சொல்லிட்டேன். ஆனா, அம்மா என்னை அடிக்கல. திட்ட கூட இல்ல… வேற ஒன்னு சொன்னாங்க.” என்று நிறுத்தினாள்.

 

“என்ன சொன்னாங்க?” எனக் கேட்டவன் குரலில் இறுக்கம் குறைந்திருந்தது. அவள் அம்மாவின் பேச்சைக் கேட்டு குழம்பி இருக்கிறாள் என்றெண்ணிக் கொண்டான்.

 

“அது… நான் உன் பின்னாடி போனா நான் எவ்வளோ கஷ்டப்படுவேன்னு ரொம்ப சொன்னாங்க. முதல்ல அவங்க சொன்னதை நான் காதுல வாங்கல. அப்புறம் யோசிக்கும்போது உண்மை தான்னு தோணுச்சு.”

“ஓ! அப்படி என்ன உண்மைய கண்டுபிடிச்ச நீ?” 

“அது, உன்ன கட்டிக்கிட்டா நான் எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டு தான் ஆகணும்… இப்ப வரைக்கும் எனக்கு நானே தலைக்கு குளிக்க கூட தெரியாது, அம்மா தான் எனக்கு செய்வாங்க. வீட்டு வேலையில இருந்து எதுவுமே நானா செஞ்சது இல்ல. இப்ப மஹாராணி போல இருக்கறவ, உன்கூட வந்தா காலம்பூரா வேலைக்காரியா தான் வாழணும். 

இதோ இப்ப காதுல போட்டிருக்கேனே, இந்த வைரத்தோடு போன பர்த்டேக்கு அப்பா எனக்கு வாங்கி கொடுத்தது. அதே பர்த்டேக்கு நீ எனக்கு வெறும் மண்வளையல் தான வாங்கி கொடுத்த…” அவள் இன்னும் அடுக்கிக் கொண்டே போக,

“இதெல்லாம் இருந்தா தான் வாழ முடியுமா உன்னால?” அவன் குறுக்கே கேட்டான்.

“இதெல்லாத்தையும் விட்டுட்டு உன்கூட வாழணும்னு என்ன அவசியம் எனக்கு?” அவள் கேள்வியும் உடனே வந்தது. 

“நான் வாழ்க்கையில எப்பவும் ஜெயிக்கனும்னு நினைக்கறவ. என்னால எதுவும் முடியும், எதிலயும் நான் ஃபர்ஸ்ட்டா இருக்கணும்னு தான் இவ்வளவோ மெனக்கெட்டு படிக்கிறேனே தவிர, இந்த படிப்பு எனக்கு எதுவும் தராது. 

ஆனா உனக்கு, இந்த படிப்பு தான் வாழ்க்கை. நீ நல்லா படிச்சு,‌ ஓரளவு நல்ல வேலை கிடைச்சா தான் உன்னால வாழவே முடியும். இல்லனா வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுவ, உன்னோடு வந்தா நானும் சேர்ந்து தான் அவதிப்படனும். உன்ன கட்டிக்கிட்டா என் வாழ்க்கையில ரொம்ப மோசமா தோத்து போயிடுவேன்.” சுவாதி ஒரே மூச்சில் படபடத்து முடித்தாள்.

முதன் முதலில் அவனுக்குள் இயலாமை உணர்வு அசுரத்தனமாக எழுந்து அவனை அமிழ்த்திக் கொன்றது. அவள் இப்போது வாழும் வாழ்வை அவனால் நிச்சயமாக கொடுக்க முடியாது என்பது முன்னரே தெரிந்த போதிலும், இப்போது அவள் சொல்லக் கேட்கும்போது, தன்னால் செய்து காட்டவியலாது என்ற இயலாமை அவனை மண்ணுக்குள் புதைந்து போகச் செய்தது. அவமான உணர்வில் குறுகிப்போய் முதல் முறை அவள்முன் தலைகவிழ்ந்து போனான்.

“நான் உனக்கு அவசியம் இல்லாதப்போ, நீயும் எனக்கு அவசியம் இல்ல. போயிடு…” என்றான் தளர்ந்த குரலில்.

அவனைத் தாண்டி சென்றவள், தலை கவிழ்ந்து உடல் தளர்ந்து அவன் உடைந்து நிற்கும் தோற்றம் ஏதோ செய்ய, நின்று திரும்பினாள். “என்னை மன்னிச்சிடு தனா… உன்ன பார்க்க கூடாதுன்னு முதல்ல நினச்சப்போ எனக்கும் கஷ்டமா தான் இருந்தது. அப்புறம் சரியாகிடுச்சு. நீயும் சீக்கிரம் சரியாடுவ.” என்று சொல்லி சென்று விட்டாள்.

சுவாதிஸ்ரீ சென்று வெகுநேரம் ஆன பின்னரும் கூட, தனசேகரன் தலை நிமிரவே இல்லை. பொழுது அமிழ்ந்து அவனைச் சுற்றிலும் இருள் பரவிய பின்னரே, அந்த சூழ்நிலையை உணர்ந்தவன் அங்கிருந்து வெளியேறினான். அதன்பிறகு அவனுக்கு பிடித்தமான அந்த இடத்திற்கு மறுபடி போகவேண்டும் என்று நினைக்கவே இல்லை.

அவளுக்காக அவளுக்காக என்று மாறிப்போன அவன் உலகை தனக்காக மட்டும் என்று மாற்றிக்கொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டியதாக இருந்தது அவனுக்கு. தன் வெறுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கவும் அதிகம் முயற்சித்தான்.

சுவாதி சொன்னபடியே உயர்நிலைப் பள்ளி தேர்வில் மாநிலத்தில் முதல் இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள். அன்று செய்தித்தாளில், தொலைக்காட்சியில் தான் அவள் முகத்தை அவன் கடைசியாக பார்த்தது. 

அதற்குமேல் அந்த ஊரில் அவன் தாமதிக்கவில்லை. கல்லூரி தேர்வு முடிவு வந்த கையோடு, முதுநிலை படிப்பை சென்னையில் தொடர வேண்டும் என்று அப்பாவிடம் அனுமதி பெற்று கிளம்பிவிட்டான்.

சென்னையில், புது கல்லூரி, விடுதி வாழ்க்கை என்று தனா தன் இயல்புக்கு மீண்டிருந்தான். வருடங்கள் கடக்க, ஸ்ரீயும் அவன் நினைவுகளில் மழுங்கிப் போயிருந்தாள்.

அவளில்லாமல் கழிந்த மூன்று வருடங்களுக்கு பிறகு, அவளின் பெயர் அவன் காதுகளில் மறுபடி ஒலித்தது. அன்று மருது வாத்தியார் அவன் எண்ணுக்கு அழைத்துப் பேசினார்.

“ஹலோ…”

“தம்பி, நான் மருது வாத்தியார் பேசுறேன்பா”

“வாத்தியாரய்யா… சொல்லுங்க எப்படி இருக்கீங்க?”

“தம்பி, இங்க நடக்கக் கூடாத விபரீதமெல்லாம் நடந்துடுச்சுபா, நம்ம சுவாதி பாப்பாக்கு பரிசம் போட ஏற்பாடாகி இருந்துச்சு… அதுல பிரச்சனை ஆகி வெட்டு குத்து அளவுக்கு போயிடுச்சு…” 

“யாரு…?”

“நம்ம சுவாதி பாப்பா தம்பி. நடந்து கலவரத்துல ஐயாவோட சம்சாரத்தை கொன்னுப்புட்டாங்கபா, அந்த கோபத்துல ஈஸ்வரய்யாவும் அவசரப்பட்டு கத்திய வீசிட்டாரு. இப்ப ஜெயில்ல இருக்காரு” அவர் கலங்கிய குரலில் சொல்ல, ஸ்ரீயின் அம்மா இறந்து, அப்பா சிறையில் என்ற செய்தி அவனை திடுக்கிட வைத்தது.

“ஸ்ரீ எப்படி இருக்கா ஐயா?” தன்னை மீறியும் கேட்டுவிட்டிருந்தான்.

“பாப்பா நிலைமையும் மோசந்தான் தம்பி. ஐயா கைவச்ச பையன் பெரிய இடம்.‌ அவனுங்க புள்ளைங்க ரெண்டு பேர்த்தையும் உசுரோட விடமாட்டோம்னு கொலைவெறியோட திரியிறானுங்க. புள்ளங்க ரெண்டு பேர்த்தையும் காப்பாத்தி சென்னைக்கு பஸ் ஏத்தி விட்டிருக்கேன்யா. 

விவரம் தெரியாத தம்பியோட, வயசு பொண்ணு தனியாளா வராங்கபா. சென்னையில யாரும் எவரும் தெரியாதுயா. நீ போய் அவங்கள கூப்பிட்டுக்க தனா. அவங்க உசுர காப்பாத்துபா” அவர் கேட்க,

“நான்… நான் எப்படி…?” அவன் திக்கலாக கேட்டான். நிஜமாய் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. 

“உன்னால முடியலனாலும்‌ பரவாயில்லபா, உனக்கு தெரிஞ்ச பாதுகாப்பான‌ இடத்துல சேர்த்து வுட்ருபா. இங்கன பிரச்சனை அடங்கினதும் நான் கூப்புட்டுக்கிறேன்.” என்றவர், பேருந்து விவரங்களைச் சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

சுவாதியின் நிலைக்காக அவன் மனது வருந்தியது தான். அவளை நேரில் பார்த்து அரவணைத்துக்கொள்ள தன்னுள் எழுந்த உணர்வை உணர்ந்து திடுக்கிட்டான். ‘இன்னுமா அவளுக்கான தன் உணர்வுகள் உயிர்ப்போடு இருக்கின்றன! அதுவும் இப்போது, வேறொருவனுக்கு மனைவியாக போகிறவளுக்காக…’ என்ற எண்ணமே அவனுள் கசந்து வழிந்தது.

இப்போது அவளை தேடி ஓடும் நிலையிலும் அவன் இருக்கவில்லை. அவன் அப்பா விபத்தில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பின் உயிர் மீண்டிருந்த நேரம் அது.‌ அவருக்கான மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கான பண தேவைக்கு அலைந்து கொண்டிருந்தான். சொந்தங்கள் தெரிந்தவர்கள் கைவிட்ட பிறகு, வேறுவழியின்றி, அதிக வட்டிக்கு பணம் கிடைத்தாலும் போதும் என்று வந்த இடத்தில் தான், அவனுக்கு மருது தாத்தாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

அவன் நினைத்தாலுமே, சுவாதிக்கு உதவி செய்ய முடியாத நிலையில் சிக்கி இருந்தவன், தன் கல்லூரி தோழி திவ்யாவிற்கு‌ அழைத்து, விபரம் சொல்லி உதவி கேட்டான். திவ்யாவின் அம்மா சங்கரி‌ காவல் அதிகாரி என்பதால், அவன் கேட்ட உதவியும் உடனே கிடைத்தது.

மறுநாள் அவன் சுவாதி பற்றி விசாரிக்க, அவரே நேரடியாக சென்று சுவாதி, யதுநந்தனை அழைத்து வந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்து விட்டதாக அவனுக்கு விபரம் சொன்னார். சுவாதியை தங்க வைத்திருக்கும் விடுதி முகவரியையும் அவனுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதற்கு பிறகும், அவன் சுவாதியை நேரில் சென்று பார்க்கவில்லை. அவளை சந்திக்கும் வாய்ப்பும் அவனுக்கு அமையவில்லை. சுவாதி இப்போது நன்றாக இருப்பதாக மருது வாத்தியார் தகவல் தர, அவன் அவளை சந்திக்கும் முடிவை விட்டு விட்டான். 

எப்படியும் சில மாதங்களில் அவள் பிரச்சனை தீர்ந்து சுவாதி சொந்த ஊர் திரும்பிவிடுவாள், நின்ற திருமணமும் கோலாகலமாக நடந்தேறும் என்று எண்ணிக் கொண்டவன்,‌ அவள் வாழ்வில் மறுபடி நுழைய விருப்பமின்றி ஒதுங்கிவிட்டான்.

அதன்பிறகு அவன் வாழ்க்கை ஓட்டம் வேகமெடுக்க, அந்த ஓட்டத்தில், முன்னாள் காதலியானவளை மறந்தே விட்டிருந்தான் எனலாம். 

ஒரு நாள் எதிர்பாராமல் அவளை பார்த்த அந்த நொடியில், இடைப்பட்ட எட்டு ஆண்டுகளும் காற்றாக மறைந்து போன மாயம் மட்டும் இன்னும் அவனுக்கு விளங்கவில்லை.

இத்தனை வருட இடைவெளியில், அவன் கடந்து வந்த எந்த பெண்ணும் அவளை கவர்ந்திருக்கவில்லை. தன்மேல் ஆர்வமாக படியும் பார்வைகளையும், தன்னை நாடி வந்த காதல் விண்ணப்பங்களையும் எந்த பரிசீலனையும் இன்றி நிராகரித்து இருந்தான்.

காரணம், அவனுள் முதன் முதலாக மொட்டவிழ்ந்து கறுகிப்போன முதல் காதலின் தாக்கமாக கூட இருக்கலாம். அவனைப் பொறுத்தவரையில் அவன் காதல் தோற்றுப்போனது போனதுதான். 

அப்போதிருந்த தனாவும் இப்போது இல்லை. அப்போதிருந்த ஸ்ரீயும் இப்போது இல்லை. அன்று அவர்களுக்கிடையே இருந்த நேசமும் இன்று உயிர்ப்போடு இல்லை. 

***