என் முன்னாள் காதலி 15
சுவாதி, மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்தாள். இந்த மூன்று நாட்களும் இங்கே அவளுக்கு ராஜ வைத்தியம் தான். தனியறை, இரவும் பகலும் துணையாக ஒரு செவிலி என நல்ல கவனிப்பு அவளுக்கு. அத்தனை பெரிய அளவிற்கும் அவளுக்கு காயம் பட்டிருக்கவில்லை. முன் நெற்றியிலும் பின் தலையிலும் இடிப்பட்டதால் அடியும் நல்ல வீக்கமுமாகி இருந்தது. கை கால் முட்டிகளில் அடி, முழங்கை, முதுகு பகுதிகளில் ஆங்காங்கே சிராய்ப்பு. படிகளில் உருண்டு விழுந்த அதிர்ச்சியில் மயக்கம் ஏற்பட்டிருந்தது.
சாதாரண கிளீனிக்கில் சேர்த்திருந்தால் கூட, ஒரு ஊசியை குத்தி, மாத்திரை மருந்து தந்து உடனே வீட்டுக்கு அனுப்பி இருப்பார்கள். ஆனால் இங்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், பிளட் டெஸ்ட் அது இதென்று அவளை ஒரு பாடுபடுத்தி விட்டிருந்தனர்.
‘இதுக்கெல்லாம் அந்த வீணா போனவன் தான் காரணம்’ என்ற கடுப்பில் அவள் ஆட்டோவிற்காக சாலையில் நிற்க, அவளை உரசிக் கொண்டு நின்றது, அவனின் ஹோன்டாய் சேன்டிரோ (Hyundai Santro) கார்.
அவன் காரை கண்டதும் முதலில் பதறி சுற்றும் முற்றும் தான் பார்த்தாள் அவள். அந்த பாதையில் கணிசமான மக்கள் நடமாட்டம் இருந்தது. பவன்யாஷை யாராவது அடையாளம் கண்டு கொண்டாலும் அங்கே கூட்டம் சேர்ந்துவிடும் என்றுணர்ந்தவளுக்கு பதற்றம் கூடியது.
“சீக்கிரம் கார்ல ஏறு” பவன்யாஷின் உத்தரவில், அவள் மேலும் தாமதிக்காமல் வேகமாக காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“நீ எதுக்கு இங்க வந்த? உன்ன யாராவது பார்த்து இருந்தா?” அவள் படபடக்க,
“நான் என்ன குற்றவாளியா இல்ல தீவிரவாதியா? யாராவது என்ன பார்த்துடுவாங்களோன்னு பயப்படுறத்துக்கு. நடிகன் மா.” அவன் தோரணையாக சொல்லி காரை இயக்கினான்.
அவளுக்கு வாய்க்குள் நன்றாக வண்ண வண்ணமாக வந்தது. பழைய சுவாதியாக இருந்தால், அவனை வசைபாடியே காதில் இரத்தம் வரவழைத்திருப்பாள். இப்போதோ அவளால் மனதிற்குள் மட்டுமே அவனை கரித்துக் கொட்ட முடிந்தது.
“இப்ப எப்படி இருக்க சுவாதி? இன்னும் வலி இருக்கா?” சாலையில் கண்பதித்தபடி தன்னிடம் நலம் விசாரித்தவனை எரிக்கும் பார்வை பார்த்தவள்,
“உயிரோட தான் இருக்கேன். இன்னும் சாகல.” காட்டமாக உரைத்தாள்.
அவள் பதிலில் அவன் இதழ்கள் சின்னதாய் வளைந்தன. “ஒரேயொரு முறை வர சாவை பத்தி, நாம வாழ்க்கை முழுக்க ஓராயிரம் முறை பேசிட்டே இருக்கோம் இல்ல. வாட் எ பிட்டி.”
“நீ வண்டியை ஓரமா நிறுத்து. நான் ஹாஸ்ட்ல போகணும்” என்றாள்.
“இங்கிருந்து உன் ஹாஸ்ட்ல் போக குறைஞ்சது முக்கால் மணிநேரம் ஆகும். நான் டிராப் பண்ணிட்டே போறேன்.” பவன் பதில் தந்தான்.
“என்ன திடீர்னு என்மேல கரிசனம் வந்திருக்கு உனக்கு?” சுவாதி சந்தேகமாக வினவ, அவன் பதில் தரவில்லை.
அவள் மனம் ஆறவில்லை. “இப்ப கூட ஒரு சாரி கேக்கணும்னு தோணல இல்ல உனக்கு?” ஆதங்கமாக கேட்க,
காரின் வேகத்தை குறைத்து அவளிடம் திரும்பியவன், “நான் ஏன் சாரி கேக்கணும்? நானா உன்ன படியில உருண்டு விழச் சொன்னேன்?” என்றவனை அவள் ஆத்திரமாக பார்க்க,
“நான் உனக்கு முத்தம் தந்துக்காக சாரி கேக்கணும்னா… கண்டிப்பா அதுக்கு மன்னிப்பு கேக்க மாட்டேன்.” என்று அழுத்தமாக சொன்னவனை, சுவாதி விக்கித்துப் பார்த்தாள்.
“என் விருப்பமில்லாம பண்ணா அது தப்பு தான்.” என்றாள் சங்கடமாக.
“சரி, இனிமே உன்கிட்ட பர்மிஷன் கேட்டே கிஸ் பண்றேன் ஓகேவா?” ஒருமாதிரி குரலில் அவன் சொல்ல,
“மறுபடி பக்கத்துல வந்தா கொன்னுடுவேன் உன்ன. வாய் கூசாம ஒரு நைட்டுக்கு கேட்டல்ல… செத்துட்டேன் தெரியுமா…” என்றவளுக்கு நெஞ்சடைத்தது. “என்னை அவ்வளோ கீழ்தரமா நெனச்சிட்ட இல்ல…” வேதனையாக கேட்டாள்.
“உன்கிட்ட மட்டும் தான அப்படி கேட்டேன், என் ஆசைய உன்ன தவிர வேற யார்கிட்ட சொல்ல சொல்ற?” அவன் பதில்கேள்வியும் இறுக்கமாக வந்தது.
அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். “பேசறதெல்லாம் பேசிட்டு வியாக்கியானம் வேற” அவள் முணுமுணுப்பு அவனுக்கும் கேட்டது. பவன் ஏதும் பேசவில்லை. காரின் வேகத்தைக் கூட்டி சாலையில் பறந்தான்.
நிமிடங்கள் கடந்தும், அங்கே அமைதி கலையாமல் கனத்திருந்தது.
பவன்யாஷ் திரும்பி அருகில் அமர்ந்திருந்த சுவாதியை பார்த்தான். ஜன்னல் கண்ணாடியில் தலைசரித்து கண்மூடி இருந்தாள். காரின் வேகத்தில் அவளின் தலை ஜன்னலில் இடிபடுவதைக் கவனித்தவனின் கைகளில் காரின் வேகம் குறைந்தது. இடக்கரத்தை அவள் புறம் நீட்டி, அவள் தலையைத் தன் தோள்மீது சாய்த்துக்கொண்டு காரின் வேகத்தைக் கூட்டினான்.
அரை தூக்கத்தில் அவனது அக்கறையை உணர்ந்தவளுக்கு, மூடிய இமை தாண்டி கண்ணீர் கசிந்து அவன் சட்டையை நனைத்து, அவன் தோளில் சில்லிட்டது.
அதற்கு மேலும் அவனுக்கு பொறுமை இல்லை. காரை ஓரம் பார்த்து நிறுத்தியவன், ஆழ மூச்சிழுத்து தன் தோள்மீது கிடந்தவளை நிமிர்த்தி, தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
“இப்ப எதுக்குடி அழற? காயம் வலிக்கிதா?” பரிவாய் கேட்டவனுக்கு ஆமென்று தலையசைத்தாள். நிஜமாகவே நெற்றி வின்வின்னென்று வலித்தது அவளுக்கு.
அவள் முகத்தை நிமிர்த்தியவன், நெற்றி வீக்கத்தில் மிக மென்மையாக இதழொற்ற, அவள் அவனை கலங்கிய விழிகளோடு ஏறிட்டாள்.
காதலித்த நாட்களில், அவர்கள் பரிமாறிக் கொண்ட முத்தங்கள் இருவருக்கும் நினைவில் வந்து பாரமேற்றியது.
பவன் அவள் கண்களைக் கூர்ந்தான். “நமக்குள்ள இருந்த எவ்வளவு அழகான காதலை நீ சிதைச்சிட்டு போனேன்னு இப்பவாவது புரியுதா ஸ்ரீ உனக்கு?” அவன் ஆற்றாமையாக வினவ, அவளிடம் பதிலில்லை. அவனிடமிருந்து விலகி அமர்ந்து கொண்டாள்.
‘அந்த அழகான காதல் காலத்தை நான் தான் முட்டாள்தனமா அழிச்சிக்கிட்டேன்! இத்தனை வருஷம் தாண்டியும் முறிந்து போன காதலோட மிச்சங்கள் உனக்குள்ள இத்தனை உயிர்ப்போட இருக்கும்னு நான் எதிர்பார்க்கல தனா. அப்ப தொலச்ச அந்த காதலை மீட்கும் மந்திரக்கோல் இப்ப உன்கிட்ட இருக்கு… ஆனா நீ அதை செய்யமாட்டன்னு எனக்கு தெரியும் தனா…’ அவள் இதயம் கனத்தது.
‘மாட்டேன்டீ… மறுபடி என் காதலை உன்கிட்ட… சான்ஸே இல்ல. நான் மறுபடி உன்கிட்ட முட்டாளாக மாட்டேன். என்னை கைக்கழுவி விட்டதுக்காக கடைசிவரைக்கும் உன்ன கதற விடறேன். நான் அத்தனை சுலபமில்லன்னு உனக்கு தெரிய வெக்கிறேன்… நீ எப்பவுமே என்னோட எக்ஸ் தான்.’ அவன் நெஞ்சுக்குள் ஏமாற்றத்தின் நெருப்பு இன்னும் கனன்று கொண்டிருந்தது.
அதே வேகத்தில் காரை இயக்கி வந்தவன், அவள் தங்கும் விடுதி தெருவின் முன் நிறுத்தினான். இடையில் அவளிடம் ஏதும் பேசவில்லை. சுவாதி இறங்காமல் அவன் முகத்தை ஏறிட்டாள். அவன் பார்வை சாலையை வெறித்திருந்தது.
“பவன்…” அவள் மெதுவாக அழைத்தும் அவன் திரும்பவில்லை.
“அன்னிக்கு உன்ன விட, என் குடும்பம், என் அம்மா, அப்பா, எங்க கௌரவம், என்னோட சுயநலம் தான் எனக்கு பெருசா தோணுச்சு… அப்படி உன்ன இழந்து நான் தக்க வச்சிக்கிட்ட எதுவுமே இப்ப என்கிட்ட இல்ல… நான் உன்ன விட்டுப் போனது உனக்கு எவ்வளோ வலிச்சிருக்கும்னு எனக்கு தெரியும்… ஆனா இத்தனை வருசம் கழிச்சும் நீ அதெல்லாம் நினப்பு வச்சிருப்பன்னு நான் நினக்கல.”
“…”
“முடிஞ்சா என்னை மன்னிச்சிடு பவன்… மன்னிக்க முடியலனா கூட பரவால்ல. என்னை மறந்திடு. இப்படி என்னையும் கஷ்டப்படுத்தி உன்னையும் கஷ்டப்படுத்திக்க வேணாமே ப்ளீஸ்…” அவள் தளர்ந்த குரலில் வேண்டினாள்.
“அவ்வளோ சுலபமா உன்ன விட்டுட மாட்டேன் மிஸ் சுவாதிஸ்ரீ. நீ தான் எல்லாம்னு நான் உன்கிட்ட விழுந்து கிடக்கறப்போ… நீ என்னை தூக்கி எறிஞ்சிட்டு போனல்ல. அதேமாதிரி, நானும் உன்னை திரும்பி கூட பார்க்காம போயிடுவேன்!”
அவன் எஃகு குரலில் சொல்ல, அவளுக்கு நெஞ்சுக்கூடு சில்லிட்ட உணர்வு. அவன் சொன்னதைக் கேட்கவே அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது. நிஜமாகவே அப்படி நடந்தால் தாங்குவாளா? என்பதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
காரிலிருந்து இறங்கியவள் விடுதியை நோக்கி நடக்க, அவள் விடுதிக்குள் போகும் வரை காத்திருந்து, பின் காரை எடுத்து நகர்ந்தான். இதுவரை மௌனமாகவேனும் தன் பக்கத்தில் இருந்தவள் இப்போது உடனில்லாமல் ஏதோ வெறுமையான உணர்வு அவனைச் சூழ்ந்தது. திரும்பிச் சென்று அவளை இழுத்து வந்து, பக்கத்து இருக்கையில் அமர்த்திக் கொண்டு, போக வேண்டும் போல, விசித்திர வேடிக்கை எழுந்தது அவனுக்குள்.
தன் அறைக்குள் சென்றவள், உடைமாற்றிக் கொண்டு கட்டிலில் சுருண்டு படுத்து விட்டாள். மனது ரணமாக வலித்தது.
அன்று அவளின் தனாவை, அவள் தொலைக்காமல் இருந்திருந்தால், இன்று அவள் அவளாக இருந்திருப்பாள். உடன் இல்லாமல் போயிருந்தாலும் அவள் அம்மா உயிருடனாவது இருந்திருப்பார். அவள் அப்பா இப்படி செய்யாத கொலைக்கு பழியேற்று அவமானப்பட்டு சிறைக்குள் அடைந்திருக்க மாட்டார். அவளொருத்தியின் சுயநலத்தால், அவசரபுத்தியால் அவள் குடும்பமே சீரழிந்து போயிருக்காது என்று தன்னையே நொந்து நைந்து போனாள்.
அப்போது அவள் மொபைல் கீச்சிட்டது. எடுத்துப் பார்த்தாள். அவள் சோர்ந்த கண்கள் விரிந்தன. பவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது அவளுக்காக.
‘சாப்பிட்டியா?’ என்று கேட்டிருந்தான்.
அவள் எழுந்தமர்ந்து அந்த ஒற்றை வார்த்தையை திரும்ப திரும்ப வாசித்தாள். அவன் புதிதாக தனக்கு மெசேஜ் செய்திருப்பது வியப்பாக இருந்தது. ஒருவிதத்தில் ஆறுதலாகவும் தோன்றியது.
மணியைப் பார்க்க, மதியம் இரண்டு எனக் காட்டியது. அவளுக்கு பசியும் எடுத்தது. எழுந்து முகம் கழுவி, கீழே கேண்டீன் சென்று சாப்பிட்டு வந்தாள்.
மறுபடி அவள் மொபைல் கீச்சிட, எடுத்து பார்த்தாள். பவன் தான் அடுத்த குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
‘டேப்லெட் எடுத்துக்கிட்டியா?’ என்று.
இதற்கும் அவள் பதில் தரவில்லை. மாத்திரையை எடுத்து விழுங்கியவள் படுத்துக் கொண்டாள். தலைவலியும் உடல்வலியும் இன்னும் மிச்சமிருந்தது. நன்றாக உறங்கி எழுந்தால் மட்டுமே அவளால் வேறு வேலை பார்க்கமுடியும் என்று எண்ணியபடி கண் அயர்ந்தாள்.
மாத்திரை உபயத்தால் நல்ல தூக்கம். மாலையில் எழுந்து ஒரு குளியல் முடித்து, காஃபி வாங்கி பருகியபோது அவளுக்குள்ளும் இதம் பரவிய உணர்வு.
மறுபடி கீச்சு சத்தம். பவன் தான் என்று வேகமாக எடுத்துப் பார்த்தாள்.
இல்லை. யதுநந்தனிடமிருந்து செய்தி வந்திருந்தது. அக்காவை நலம் விசாரித்து இருந்தான்.
‘நல்லா இருக்கேன் யது. ஹாஸ்டல் வந்துட்டேன்.’ அவள் பதில் அனுப்ப, இரவு பேசுவதாக பதில் அனுப்பி இருந்தான்.
சுவாதி புன்னகைத்துக் கொண்டாள். யதுநந்தன் இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கிறான். முன்பு படிப்பில் மக்காகத் தான் இருந்தான். இப்போது தங்கள் சூழ்நிலை புரிந்து நன்றாகவே படிக்கிறான். முன் போல அம்மாவை நினைத்து அழுவதும், அப்பாவை கேட்டு அடம்பிடிப்பதும் இல்லை. தன் தம்பி வளர்ந்துவிட்டான் என்ற நினைவே அவளுக்கு நம்பிக்கை தந்தது.
இனி எதுவும் தவறாக நடக்காது, நடக்கவும் கூடாது என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள். அப்பா மட்டும் சிறையிலிருந்து வெளி வந்தால் போதும். மற்றதை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு, இன்னும் இரண்டு வருடங்களுக்கு அவள் போராட்டத்தை நீட்டித்துக் கொண்டாள். இன்னும் இரண்டு வருடங்களில் அவர் தண்டனை முடிந்து விடுதலையாகி விடுவார் என்ற எதிர்பார்ப்போடு.
இந்த ஐந்து வருடங்களாக அவள் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறாள். தன்னை மறைத்து, தன் அடையாளத்தை மறைத்து. பவன் அவளை ஒரு பார்வையில் அடையாளம் கண்டு கொண்டதில் அவளுக்கு ஆச்சரியம் தான். அவள் அப்பாவே வந்தாலும் இப்போதிருக்கும் இவளை சுவாதி என்று அத்தனை சீக்கிரம் ஒத்துக்கொள்ள இயலாது. அத்தனை தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்தாள்.
பவன்யாஷை பொறுத்தவரை அவள் மட்டும்தான் அவனது ஒரே பிரச்சனை. ஆனால் சுவாதிக்கு, பவனோடு சேர்த்து, அவள் குடும்பம், சமுதாயம், எதிரிகள், துரோகிகள் என அவளைச் சுற்றிலுமே பிரச்சனை. இத்தனைக்கும் நடுவேதான் அவள் ஓடிக்கொண்டிருக்கிறாள். இந்த ஓயாத ஓட்டத்தில், பவனிடம் இளைப்பாற துடிக்கும் தன் மனதை அடக்குவது தான் அவளுக்கு பெரும்பாடாக இருக்கிறது இப்போதெல்லாம்.
அவள் நிலையை இன்னும் சிக்கலாக்கும்படி, அவனும் வில்லத்தனங்கள் செய்து அவள் வேதனையைக் கூட்டுகிறான்.
அவன் நினைவோடு கூடவே, அவள் மொபைலின் கீச்சு சத்தமும் ஒலித்தது.
‘சாப்பிட்டியா?’ மதியம் கேட்டதைத் தான் இப்போதும் கேட்டிருந்தான்.
‘இவனுக்கு இன்னிக்கு வேற வேலை இல்லையா?’ என்று எண்ணிக் கொண்டவள், தவறாமல் சென்று சாப்பிட்டு மாத்திரையை விழுங்கினாள்.
மதியம் உறங்கி விட்டதால், இப்போது உறக்கம் வருவதாக இல்லை. வராண்டாவில் நடை பயின்றாள். அவளைப் போலவே அந்த வராண்டாவில் பல பெண்கள் இருந்தனர். சிலர் புத்தகம் கையுமாக. பலர் செல்போனும் கையுமாக.
அவர்களை வேடிக்கை பார்த்தபடி நடந்தவளுக்கு அடுத்த குறுஞ்செய்தி வர, திறந்து பார்த்தாள்.
‘தூங்கிட்டியா?’ என்று கேட்டிருந்தான். சிறு புன்னகை வந்து அவளிடம் ஒட்டிக்கொள்ள, மொபைலை அணைத்து வைத்தாள்.
உடனே அடுத்த செய்தி வந்தது, ‘பதில் பேச மாட்டியா?’ என்று.
என்ன பதில் தருவது என்று அவள் தயங்கி தாமதிக்க, அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
நெஞ்சோரம் சிறு கலவரமாக எடுத்து காதில் ஒற்றினாள்.
“மெஸேஜ் வந்தா ரிப்ளே பண்ண தெரியாதா உனக்கு?” எடுத்தவுடன் மறுமுனையில் பவன் அவளிடம் காய்ந்தான்.
“நீ இப்படி திடீர்னு மெஸேஜ் பண்ணா, எனக்கு பக்குனு இருக்காதா? அதான் ரிப்ளே பண்ண யோசிச்சேன்” சுவாதி கூற,
“சரி, இனிமே ரிப்ளே பண்ணு ஓகேவா?” என்றான் சற்று சமாதானமாக.
அவள் என்ன சொல்வது என்று புரியாமல், “உம்” என்று மட்டும் சொல்லி வைத்தாள்.
“அப்புறம்…” என்றவன் மூச்சிழுத்து விடும் சத்தம் இவள் வரை கேட்டது. அவன் மூச்சிரைச்சலில் இவளுக்குத் தான் மூச்சு முட்டும் உணர்வு.
“இப்ப என்ன பண்ணிட்டு இருக்க சுவி?” பவன் அவளிடம் பேச்சை வளர்க்க முற்படுவது அவளுக்கு புரிந்தது.
“உனக்கு எந்த வேலையும் இல்லயா? வெட்டியா இருக்க மாதிரி என்கூட பேசிட்டிருக்க.” இரவு பகலாக ஷூட்டிங், ரிஹர்சல், மீட்டிங் என்று ஓடிக்கொண்டிருப்பவன், இன்று தன்னிடம் ஆர அமர பேசுவது சின்ன வியப்பை தந்தது அவளுக்கு.
“உனக்கு மண்டையில அடிப்பட்டதுல நாளைக்கு என்ன நாள்னு கூட மறந்துபோச்சா?” பவன் சின்ன முறைப்பு குரலில் கேட்க, நாளைக்கு என்ன என்று இவள் யோசித்து நின்றாள்.
“ரொம்ப யோசிக்காத. நாளைக்கு என்னோட படம் ரிலீஸ், அதைக்கூட மறந்துட்ட இல்ல…” என்றவன், “செம டென்ஷனா இருக்கு ஸ்ரீ… ஷ்ஷ்” என்று தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனின் தவிப்போடு அவன் சொல்ல,
“உன் படம் எப்பவுமே ஹிட் தானே, இந்த படமும் ஹிட் அடிக்கும். இதுக்கு போய் ஏன் இவ்வளோ டென்ஷன்.” அவள் இயல்பாக சொல்ல, அவனும் அதே நம்பிக்கையில் மனதின் பரபரப்புடன் காத்திருந்தான், நாளைய படத்தின் வெற்றி செய்திக்காக.
“உனக்கு சொன்னாலும் புரியாது ஸ்ரீ. படம் ஹிட்னு தெரியற வரைக்கும் மனசு படபடத்துட்டு தான் இருக்கும்” என்றவன் தன் நெஞ்சை தேய்த்துவிட்டு கொண்டான்.
“உனக்கு தூக்கம் வர வரைக்கும் கொஞ்ச நேரம் சும்மா பேசிட்டு இருக்கலாமா ஸ்ரீ. எனக்கு இன்னைக்கு கண்ண குத்தினாலும் தூக்கம் வராது” பவன் மேலும் கேட்க,
அவனது ஸ்ரீ என்ற அழைப்பில், அழுத்த இமைகள் மூடி திறந்தவள், “ம்ம்” என்றாள்.
அவனிடம் மறுபடி ஒரு மூச்சிரைப்பு. “இப்ப இருக்க லவ்வர்ஸ் எல்லாம் ரொம்ப கொடுத்த வச்சவங்கல்ல?”
பவன் கேட்பது புரியாமல், “ஏன் அப்படி?” என்று கேட்டாள்.
“எல்லார் கையிலயும் மொபைல் இருக்கு. ரெண்டு பேரும் எப்ப வேணா பேசிட்டே இருக்கலாம். நம்மள மாதிரி லொக்கு லொக்குனு அஞ்சு கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சு வந்து யாருக்கும் தெரியாம புளியங்காட்டு கல்மண்டபத்துல சந்திக்க வேண்டியதில்ல.” அவன் விளையாட்டு போலத்தான் சொன்னான். ஆனால் அவளுக்கு அதை இயல்பாக எடுத்துக்கொள்ள கடினமாக இருந்தது.
“அப்ப கூட செல்போன் எல்லாம் இருந்தது.” என்றாள் சிறுகுரலாய்.
“ம்ம். உன் அப்பாவும் என் அப்பாவும் செல்போன் வச்சிருந்தாங்க தான். ஆனா, இப்ப மாதிரி எல்லார் கையிலையும் ஸ்மார்ட் போன் இருக்கற அளவு அப்ப இல்லல.” என்றான்.
நண்பனுடன் பேச வேண்டும் என பொய் சொல்லி அப்பாவிடம் இருந்து மொபைல் வாங்கி, அவளுக்கு அழைத்து பயந்து பயந்து பேசிய நினைவுகள் அவனுக்குள் எழ,
வீட்டு தொலைபேசி ரிசீவரை காதோடு ஒற்றிக் கொண்டு, வீட்டில் இருப்பவர்கள் யாருக்காவது கேட்டு விடுமோ என்று இரண்டொரு வார்த்தைகள் கூட பேச முடியாமல், அவன் சொல்வதற்கெல்லாம் வெறும், ‘உம்’, ‘ஊஹும்’ மட்டும் கொட்டிய நினைவுகள் அவளுக்குள் எழ, இருவரின் இதழ்களும் அர்த்தமாய் மலர்ந்தன.
சில நிமிடங்கள் இருவரின் மௌனத்தில் கழிய, பவன் மீண்டும் பேச்சை தொடர்ந்தான்.
“நீ என்னோட மூவிஸ் பார்த்திருக்கியா?”
“ஒரேயொரு படம் மட்டும் பார்த்து இருக்கேன்.”
“ஆங், என்ன படம்?”
அவள், “பாஸ்” என்றதும்,
“உனக்கும் பாஸ் ரொம்ப பிடிக்குமா?” அவனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படமாதலால் கேட்டான்.
“ஐய, சுத்தமா பிடிக்கல எனக்கு” அவள் ஒருமாதிரி குரலில் சொல்ல, அவன் முகத்தில் அசடான உணர்வு வழிந்தது.
“பக்கா ஹீரோயிசம் அதுல. அதுவும் அந்த பில்டிங்ல இருந்து குதிக்கிற ஸீன் பார்த்து அவ்வளோ கடுப்பாச்சு எனக்கு. ஒரே அடியில இருபது அடியாளுங்க சுத்தி விழறதெல்லாம் செம ஓல்ட் ஸீன் பா. அதுவும் ரெண்டு ஹீரோயினும் இவர் மேல உருகி வழிவாங்கலாம்… முதலும் கடைசியுமா அந்த படத்தை பார்த்ததுக்கு அப்புறம், உன்னோட வேற எந்த படத்தையும் எனக்கு பார்க்கவே தோணல” உலகமே ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டாடி தீர்த்த படத்தை, நார்நாராக கிழித்துப் போட்டாள் அவள்.
“ம்க்கும் சரிதான்” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டான் பவன்.
“ஆனா, உன்னோட எல்லா படத்துலயும் பாட்டும் டேன்ஸும் ரொம்ப பிடிச்சது. சலிக்காம எத்தனை முறை வேணா உன் டேன்ஸ் பார்க்கலாம் போல இருக்கும். ஆமா, உனக்கு சண்டை போட தெரியும்னு எனக்கு தெரியும். டான்ஸ் எப்போ கத்துக்கிட்ட? அதுவும் அவ்வளோ கஷ்டமான ஸ்டெப்ஸ் எல்லாம் அசால்ட்டா போடுற?” இத்தனை நாட்கள் அவனிடம் கேட்க நினைத்ததை எல்லாம் ஒரே மூச்சில் கேட்டாள்.
“நடிக்க ஆரம்பிச்ச உடனே டேன்ஸ் பிராக்டீஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். அதோட, பாடி மெய்ன்டன், ஒர்க் அவுட், டையட்னு இன்னும் நிறைய இருக்கு.” என்றான் இதமான இதழ் விரிப்போடு.
“அப்புறம், அந்த குதிரையில ஒரு ஃபைட் வருமே அதுகூட ரொம்ப பிடிச்சது. அந்த ஸீன்ல நீ குதிரைய ஹேன்டல் பண்ணறதெல்லாம் அவ்ளோ நேச்சுரலா இருந்துச்சு. அதுல நீ ரொம்ப அழகாவும் தெரிவ.” அவள் சொல்லிவிட்டு உதட்டை மடித்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ்” என்றான் அழகாய் கண்ணோரம் சுருங்க.
அவள் பேச்சின்றி மௌனமாக, “அப்புறம் என்னன்ன பிடிக்கும் என்கிட்ட?” அவனே முன்வந்து வினவினான்.
“அப்புறம் என்ன இருக்கு, நீங்க தான் ரொமாண்டிக் ஹீரோ ஆச்சே. லவ் ஸீன்ஸ்ல எல்லாம் யாராலும் உன்ன அடிச்சிக்கவே முடியாது. சார் பிச்சு உதறிடுவீங்க ரியல் லவ்வயே மிஞ்சற அளவுக்கு.” அவள் சொல்லிவிட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
“டேன்ஸ், ஃபைட், ஹார்ஸ் ரைடிங் எல்லாமே பிராக்டீஸ் அன்ட் ரிஹர்சல் எடுத்து பண்ணது தான். பட், லவ் ரொமான்ஸ் மட்டும்… நீ எனக்கு கத்து கொடுத்தது ஸ்ரீ.” பவன் ஆழ்ந்த குரலில் சொல்லவும், இவள் நெஞ்சடைத்துக் கொண்டது. அதற்கு மேல் அவளால் பேசமுடியாமல் போக, இணைப்பை துண்டித்து விட்டாள்.
கண்கள் கலங்கி வர இமைகளை தட்டி தட்டி கண்ணீரை அடக்க முயன்றவள், தன் அறைக்குள் வந்து கட்டிலில் கால்களை குறுக்கி தலையைக் கவிழ்ந்து அமர்ந்து உடல் குலுங்கினாள். அவள் புதைத்து வைத்த தங்களுக்கான நினைவுகளை அவன் கிளறி விட, அவை இல்லாமல் போன வலியை, தானே அதையெல்லாம் ஊதறி வந்த முட்டாள்தனத்தை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
சற்று நேரத்தில் பிறகு, அவள் மொபைல் கீச்சிட்டது. தலை நிமிர்த்தி எடுத்துப் பார்த்தாள்.
‘குட் நைட். டேக் கேர்’ என்று பவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
***
மறுநாள் காலை, முதல் காட்சியில் திரையரங்குகள் தோறும் தாரை தப்பட்டை, பட்டாசு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு ஆர்ப்பாட்டமாக படம் வெளியாகி, அடுத்தடுத்து குறைந்து மாலையில் அந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் மெல்ல மெல்ல அடங்கிப்போயின.
***