என் முன்னாள் காதலி 16

என் முன்னாள் காதலி 16

பவன்யாஷ் நடிப்பில் வெளியான படம், படுதோல்வி என நாலாப்பக்கமும் செய்திகள் ஓயாமல் நமநமத்தன.

பவன்யாஷ் உட்பட படக்குழு மொத்தமும் உற்சாகம் இழந்து சோர்ந்து போயிருந்தனர். போட்ட முதலை பத்து மடங்காக அள்ளலாம் என்று பணத்தை வாரி இறைத்திருந்த தயாரிப்பாளர், தலையில் துண்டு போடாத குறையாக நொடிந்து போய் முடங்கி இருந்தார்.

“ஒரே நேர்கோட்டுல ஸ்டெயிட்டா மேல போயிட்டிருந்த பவனுக்கு இந்த படம் மிகப்பெரிய சரிவுன்னு தான் சொல்லணும்.” 

“பாஸ்க்கு என்ன தான் ஆச்சு? ஏன் இந்த படத்துல இப்படி சொதப்பி இருக்காருன்னு தெரியில. டோட்டலி டிசபாயின்மெண்ட்.”

“நாலு படம் ஹிட் கொடுத்ததும் அடுத்த சூப்பர் ஸ்டார் லெவலுக்கு ஏத்திவிட்டாங்க பாரு. இப்ப இந்த படத்துல மொத்தமா ஊத்திகிச்சா” என்பன போன்ற எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் புகைந்து கருகின.

“பவன்யாஷ் ரொம்ப திறமையான நடிகர். கொஞ்ச வருஷத்துல நடிப்புத்துறைல தனக்கான ஓர் இடத்தை தக்கவச்சிக்கிட்டவர். அவர்கிட்ட இருந்து இப்படியொரு படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க…” என்ற முதலுரையோடு, படத்தின் தோல்விக்கான காரணங்கள் வெவ்வேறு வகையில் அலசி துவைத்து கிழிக்கப்பட்டன.

“இந்த புகழ் என்ற ஒரு விசயம் இருக்கு பாருங்க, அதுவொரு பெரிய போதை. பவன்யாஷும் அந்த போதையில மந்தமாயிட்டாருன்னு தான் நான் சொல்லுவேன். முக்கியமா இத்தனை படங்கள்ல கதைகளை ரொம்ப கேர்ஃபுல்லா தேர்ந்தெடுத்தவரு, இந்த படத்துல அங்க தான் சறுக்கி இருக்காருனு தோணுது.” என்பன போன்ற விமர்சகர்களின் கண்ணோட்டங்கள் படத்தை விட அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தது.  

“இந்த படத்துலயும் உன்னோட நடிப்பு எப்பவும் போல நல்லாதான் இருக்கு. குறை சொல்லவும் முடியாது தான். ஆனா, ஸ்கிரீன் ப்ளேல தான் படம் அடிவாங்கி இருக்கு. அங்கங்க தேவயில்லாத வசனங்கள், காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.” எனவும்,

“உன்ன எல்லாரும் பாராட்டி புகழ்ந்து தள்ளினதால, இனிமே நீ எந்த படத்துல நடிச்சாலும் கண்ண மூடிட்டு பாராட்டுவாங்கன்னு நினச்சிட்ட போல” என்றும் முகத்துக்கு நேராக தாக்கி பேசிய திரைத்துறை நண்பர்களை எதிர்கொள்ள, பவன்யாஷ் முதல்முறை சங்கடப்பட்டுப் போனான்.

வெற்றியையும் வாழ்த்தையும் எதிர்பார்த்து இருந்தவனுக்கு, இவ்வித ஏச்சுக்களும் குத்தல்களும் அவனை சுழன்றடித்தது. இதில் காரணமே இல்லாமல், பவன்யாஷை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுபவர்களைப் பார்த்து, அவனுக்கே திகைப்பாக இருந்தது. இத்தனை பேருக்கு தன்மீது வன்மம் இருக்கும் என்பதே பவனுக்கு இப்போது தான் புரிவது போல இருந்தது. அவனைச் சுற்றிலும் எதிர்மறை தாக்கங்கள் அனல் வீச, அவனுக்குள்ளும் வெறுமையான நிலையை உணர்ந்து தளர்ந்து போனான்.

வெளியே இருந்த அழுத்தத்தைக் காட்டிலும் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பவன்யாஷுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டது.

“திறமையான பையன், ராசியான பையன் இதுவரைக்கும் நடிச்ச எந்த படத்திலயும் புரோடியூசர் தலையில துண்டு போட்டதில்ல. அவனை வச்சு எடுத்தா லாபந்தான்னு உன்ன பத்தி சொன்னதெல்லாம் நம்பி, உன்ன வச்சு படமெடுத்த கொல்லைக்கு, இப்ப நான்தான் மொத்தமா தொலைச்சிட்டு நிக்கிறேன்.” நஷ்டப்பட்ட கோபத்தில் தயாரிப்பாளர் வாய்க்கு வந்ததையெல்லாம் கத்திக் கொண்டிருந்தார்.

அவர் எதிரில் இறுகிய முகத்துடன் அமரந்திருந்தான் பவன்யாஷ். 

அவரின் பேச்சும் தன் பாஸின் அமைதியும் திருவை பொறுமையிழக்கச் செய்ய, “சார், நீங்க பொறுமையா பேசறது நல்லது. யாருகிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு பார்த்து பேசுங்க…” என்று சீறினான்.

“நம்பி போட்ட பணம் போனது எனக்கு தானே, உங்களுக்கு என்ன கவலை. படம் ஹிட்டடிச்சா மட்டும் உங்க புகழ் கூடும், உங்க சம்ளத்தொகை ஏறும். நஷ்டம் வந்தா மட்டும் நாங்க தான வயித்துல துணிய கட்டிட்டு அலறணும். லாபத்துல கொள்ள லாபம் பார்க்கற ஒரு நடிகனாவது, நஷ்டத்துல பங்கெடுத்துப்பீங்களா? அதெல்லாம் மாட்டீங்களே.” தயாரிப்பாளர் தன் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் ஒன்றாக கொட்டினார்.

“சார் நீங்க பேசறது நியாயமே இல்ல. இதுவொரு பிஸ்னஸ் சார். நீங்க முதல் போட்டு ஒரு படம் தயாரிக்கறீங்க. அந்த படத்துல நடிக்கற வேலையை செஞ்சுட்டு அதுக்கான கூலிய வாங்கிட்டு போறது மட்டும் தான் எங்க வேலை. படத்துல லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு.” திருவும் அவருக்கிணையாக வாதம் செய்தான்.

“முன்ன வெறும் லட்சத்துல சம்பளம் வாங்கினவன், இப்ப கோடியில சம்பளம் வாங்கிற அளவுக்கு வளர்ந்து நிக்கிற இல்ல. அந்த வளர்ச்சி எப்படி வந்தது, நாங்க கொடுத்த சான்ஸ் தான் அது. புதுமுகமா வரும்போது எல்லார் கால்லையும் விழாத குறையா சான்ஸ் கேக்கறது. கொஞ்சம் வளர்ந்த உடனே,‌ எங்க தலையிலயே நின்னுட்டு ஆடுறது…” அவர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.

“நீங்க வரம்பு மீறி பேசறீங்க சார்…” திரு கோபமாக குரலுயர்த்தவும்,

“திரு போதும்.” என்று அவனை நிறுத்திய பவன்யாஷ், அவர் முன்னால் எழுந்து நின்றவன், “இப்ப என்ன சார், உங்க நஷ்டத்துல நானும்‌ பங்கெடுத்துக்கனும் அவ்வளோ தானே ஓகே. இதுவரைக்கும் இன்ஷியல் அமௌன்ட் மட்டும் தானே எனக்கு பே பண்ணி இருக்கீங்க. மீதிய நீங்க கொடுக்க வேணாம். நஷ்ட கணக்குல கழிச்சிக்கங்க.” என வெறுத்துப்போய் பவன்யாஷ் சொல்லிவிட்டான்.

“பாஸ், நீங்க எதுக்காக உங்க சம்பளத்தை விட்டு தரணும். நம்மகிட்ட அக்ரீமென்ட் இருக்கு. அவரு ஏமாத்த முடியாது. முழு காசும் அவர் தந்து தான் ஆகணும்.” திரு ஆதங்கமாக சொல்ல,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் திரு. நாம கிளம்பலாம்” என்று சொல்லி பவன் நகரவும்,

“பவன்யாஷ், உங்க காச வச்சுட்டா மட்டும் எனக்கு பெருசா எதுவும் வந்துட போறதில்ல. நான் பாக்கி அமௌண்ட்ட உங்களுக்கு செட்டில் பண்றேன். பட்,‌ உடனே முடியாது. கொஞ்சம் டைம் மட்டும் தாங்க.” தயாரிப்பாளர் அழுத்தமாகச் சொல்ல, அவரை நேராய் பார்த்த பவன், சரி என்பதாக தலையசைத்து விட்டு நகர்ந்து விட்டான்.

சோர்ந்த முகத்துடன் வீட்டுக்குள் வந்து சோஃபாவில் உட்கார்ந்த மகனை பார்த்த மங்கைக்கும்,‌ மகனின் கவலை தொற்றிக் கொண்டது.

அவனுக்கு பழச்சாறு எடுத்து வந்து தந்தார். நிமிர்ந்தவன் அதை மறுத்து தலையசைத்தான். “ஏன் ராசா, சோர்ந்து போய் கிடக்க. உனக்கு புடிச்ச மாதுள ஜூஸ் தான் பா, கொஞ்சம் குடிய்யா” அம்மா பரிவாகச் சொல்ல,

“ப்ச் எனக்கு வேண்டாம் மா” என மறுத்தவன், ஆறுதல் தேடும் பிள்ளையாக அம்மாவின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.

சக்கர நாற்காலியில் அவர்கள் அருகில் வந்த குணசேகரன்,‌ மகனின் தோய்வை கண்டு கவலை கொண்டார். 

“இப்ப என்னாச்சுன்னு இப்படி உடஞ்சு போயிருக்க தனா? ஒரு படம் நல்லா ஓடல அவ்வளவு தானே.” அவர் ஆறுதலாக பேச,

“இல்லப்பா, படம் பிளாப் ஆனது கூட எனக்கு பெரிய விசயமா தெரியல பா. ஆனா, நேத்து வரைக்கும் என்னை கொண்டாடினவங்க, இப்ப என்னை உதாசீனப்படுத்தற மாதிரி இருக்கு ப்பா. அந்த புரோடீசர் என்கிட்ட எவ்வளோ குழஞ்சு வாய் நிறைய தம்பின்னு பேசுவார் தெரியுமா, ஆனா, அவர் இன்னைக்கு பேசுன பேச்சு… 

அதுவும் படம் நஷ்டத்துக்கு நான் மட்டும் தான் காரணம்ன்ற மாதிரி அவர் பேசனதை தாங்க முடியல ப்பா. அவர் மட்டுமில்ல ப்பா, இப்பல்லாம் என்கிட்ட பேசறவங்க எல்லாருமே வேற மாதிரி தான் நடந்துக்கிறாங்க. ஒன்னு என்மேல அனுதாபப்படுறாங்க. இல்ல அலட்சியப் படுத்துறாங்க.” என தன்னைமீறி புலம்பலானான் பவன்யாஷ்.

அனுபவசாலியான குணசேகரனுக்கு மகனின் மன அவஸ்தை புரிந்தது. “தனா, நல்லா யோசிச்சு பாரு. இதுக்கு முன்ன நீ நடிச்ச படம் நஷ்டமே ஆனதில்லயா என்ன? ஆகியிருக்கு தானே. ஆனா அப்பல்லாம், ஏன் இந்த படம் போகலன்னு இப்படி யாரும் அலசி ஆராய்ஞ்சு கடைப்பரப்பிட்டு இல்லையே… படம் அவ்வளவா நல்லா இல்லை ஓடலன்னு விட்டுட்டு வேற வேலைய பார்க்க போயிட்டாங்க தானே. 

இப்ப மட்டும் ஏன் எல்லாரும் நல்லா இல்லாத படத்த நாலு தடவ பார்த்து, உங்களுக்கே தெரியாத குறைகளை எல்லாம் பிரிச்சு மேஞ்சுட்டு இருக்காங்க… இதுக்கான காரணம் என்னனு நீ யோசிச்சு பார்த்தியா தனா?” 

தந்தையின் கேள்வி அவனை யோசிக்க வைத்தது. ஆமாம். இதற்கு முன் தோல்வி கண்ட படங்கள் இத்தனை விமர்சனத்திற்கு உண்டானதில்லை. படம் சுமார் ரகம் என்ற கருத்தோடு நின்று விட்டன. இப்போது மட்டும் ஏன் இத்தனை எதிர்மறை விமர்சனங்கள்? இந்த படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை அலசல்கள்? யோசிக்க‌ முயன்றும் அவனால் விடை காண முடியவில்லை. அப்பாவிடமே கேட்டான்.

“இந்த படத்துக்கு மட்டும் ஏன்பா இப்படி?”

“இதெல்லாம் இந்த படத்தை தாக்கி வர விமர்சனங்கள் மட்டும் இல்லடா. உன்ன நேரா தாக்கி வர விமர்சனங்கள். நேத்து வரைக்கும் நீ யாரோ, நீ நடிச்ச படம் ஜெயிச்சாலும் தோத்தாலும் அது பெரிய விசயமில்ல. ஆனா இன்னைக்கு நீ இந்த சினிமா துறையில உனக்கான தனி இடத்தை பிடிச்சிருக்க. பவன்யாஷ் என்ற ஒரு நடிகனோட அடையாளத்தோட ரிலீஸான படம் தோத்திருக்கு. அது பத்தி பேசாம யாராலையும் விடமுடியல. 

இப்ப நீ வளர்ந்து நிக்கிறடா. அதனால தான் உன்னோட ஒவ்வொரு விசயமும் இங்க ரொம்ப பெருசா பேசப்படுது. நீ சாதாரண மனுசன்லயிருந்து இப்ப எல்லாருக்கும் பெரிய ஸ்டாரா தெரியிற. யாரு முன்ன போறாங்களோ அவங்களுக்கு தான் எதிர்ப்புகள் அதிகமா இருக்கும். நீ முன்னேறி போயிட்டு இருக்கடா. இப்ப நீ இப்படி சோர்ந்து போயிட்டா, உன்ன இங்கயே இப்படியே அழுத்திடுவாங்க. எழுந்து ஓடு, அடுத்தடுத்த வெற்றிகள் உனக்காக காத்திருக்கு பாரு.” என்று அவர் மகனின் தோள்தட்டிக் கொடுத்தார்.

அப்பா சொன்ன வார்த்தைகள், தளர்ந்து இருந்தவனுக்கு பூஸ்ட் குடித்ததைப் போன்ற தெம்பை தந்தது. அந்த உத்வேகத்தில் எழுந்தவன், அப்பாவை கட்டி அணைத்துவிட்டு, அம்மா தந்த பழச்சாறையும் பருகிவிட்டு மாடியேறிச் சென்றான், கைப்பேசியில் திருவை அழைத்தபடி.

“திரு, ராகவ் அண்ணாவ உடனே சந்திக்கணும் மீட்டிங் அரேன்ஜ்‌ பண்ணு. நெக்ஸ்ட் ஃபிலிம் பத்தி பேசணும்” என்றதும், 

“ஓகே பாஸ்” திருவும் உற்சாகமாக பதில் தந்தான்.

***

அந்த உயர்ரக ஓட்டல் அறையில் மூவரும் அமர்ந்திருந்தனர்.

புதுப்படத்தின் நடிகன் பவன்யாஷ், இயக்குநர் ராகவேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கமலக்கண்ணன்.

திரைக்கதை,‌ முக்கிய டெக்னீஷியன்கள், நடிகர்,‌ நடிகைகள் எல்லாம் முன்னரே முடிவாகி இருக்க, படத்தின் பூஜை மற்றும் ‘ஃபர்ஸ்ட் லுக்’ (முதல் பார்வை) போஸ்டரை எப்போது வெளியிடுவது, அதன் பிறகான படப்பிடிப்பு பற்றிய விசயங்கள், அவர்களுக்கிடையே பேசு பொருளாக இருந்தது.

ராகவேந்திரன், “இன்னும் லேட் பண்றது நல்லதில்ல. நெக்ஸ்ட் வீக் நாம ஃபர்ஸ்ட் லுக் ஷூட் ரெடி பண்ணிடலாம். பூஜை எப்பனு நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க புரோடியூசர் சார்.” என்று சொல்லவும், பவன் சம்மதமாக தலையசைத்தான். ஆனால் கமலக்கண்ணன் ஏதோ யோசனையில் அமைதியாக இருந்தார்.

“என்னாச்சு சார், எனி பிராப்ளம்?” ராகவ் அவரை வினவ,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ராகவ். நெக்ஸ்ட் வீக் வேணாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே” என்றவரை, மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.

“எல்லாமே ரெடியா இருக்கு சார். ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றது மட்டும் தான் பாக்கி. காரணமே இல்லாம ஷூட்டிங் தள்ளி போட்டா எப்படி சார்?” ராகவ் கேட்டு விட,

“லிசன் ராகவ், இப்ப போயிட்டு இருக்க சிச்சுவேஷன்ல, நாம ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் பண்றது அவ்வளோ செட்டாகும்னு தோணல. இந்த சிச்சுவேஷன் கொஞ்சம் கிளியர் ஆகட்டும் கொஞ்சம் கேப் விட்டே ஸ்டார்ட் பண்ணலாம். இப்ப அவசரம் என்ன?” கமல் நிதானமாகச் சொன்னார்.

“நீங்க என்ன சிச்சுவேஷன் பத்தி சொல்லறீங்க சார்?” பவன் நெற்றி சுருக்கி வினவ, அவர் பார்வை அவனை நேர்நோக்கியது.

“பவன், நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. வளர்ந்து வர நடிகனோட படம் ஃபிளாப் ஆகிடுச்சுனா,‌ அவனோட வளரச்சி‌ தடைபடுதுன்னு அர்த்தம். 

நீங்க நடிச்ச ஒன்னுக்கு மேற்பட்ட படங்கள்‌ ஃபிளாப் ஆச்சுன்னா, உன்ன தூக்கி ஓரம் போட்டு போயிட்டே இருப்பாங்க.” கமலக்கண்ணன் மேலும் சொல்லவும்,

“அப்ப இந்த படமும் பிளாப் ஆகிடும்னு சொல்றீங்களா?” பவன்யாஷ் கேட்டு விட்டதும், தயாரிப்பாளர் முகம் தீயாய் தகிக்க தொடங்கியது.

சட்டென எழுந்து கொண்டவர், “எடுத்ததுமே இப்படி நெகட்டிவ்வா பேசறீங்க! உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கலாம், எங்களுக்கு இது விளையாட்டில்ல. எங்க இடுப்பு கோவணம் முதல் கொண்டு வித்து தான் முதல் போடுறோம். எடுத்த படம் போகலன்னா நீங்க அடுத்த படத்துக்கு போயிடுவீங்க, ஆனா, நாங்க அந்த நஷ்டத்துல இருந்து மீண்டு வர‌ இன்னொரு ஜென்மம் எடுக்கணும்…” தாடை அதிர அவர் ஆதங்கமாக படபடக்க, பவனுக்கு தான் வார்த்தை விட்டது தவறென்று தோன்றியது.

அவனும் எழுந்து கொண்டவன், “சாரி சார்… நான் ஏதோ டென்ஷன்ல தான் அப்படி கேட்டுட்டேன். மன்னிச்சிடுங்க.” தன் தவறு புரிந்து அவன் மன்னிப்பு வேண்ட, இவர் அவனை விட்டு ராகவனைப் பார்த்தார்.

“நான் சொல்றது இப்ப புரியுதா டைரக்டர் சார். இவர் இப்ப இருக்க மனநிலையில நடிச்சா, அது கண்டிப்பா சொதப்பிக்கும். ஒரு மாசம் போகட்டும், நாம இந்த புரோஜக்ட்ட கண்டினீவ் பண்ணலாம்.” முடிவாகச் சொன்ன கமலக்கண்ணன் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

பவன்யாஷ் நெற்றியைத் தெய்த்துவிட்டு சோஃபாவில் சரிந்தமர்ந்து விட்டான். ராகவன் அவன் தோளை ஆதரவாக தட்டிக் கொடுக்க, “சாரிண்ணா…” பவன் சங்கடமாக மன்னிப்பு வேண்டினான்.

“விடுடா, நான் அவர்கிட்ட பேசறேன். நீ ஓவரா டென்ஷன் ஏத்திக்காத ஓகே?” ராகவன் சொல்ல, பவன் முகம் தெளிவதாக இல்லை.

சில நொடிகள் அவனை கவனித்தவர், “நீ இவ்வளோ ஸ்டரெஸ் ஏத்திக்காத பவன். அது உனக்கும் நல்லதில்ல. உன்ன சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லதில்ல.” என்று சொல்ல,

நிமிர்ந்தவன், “இல்லண்ணா, ஏதாவது செஞ்சு இந்த ஸ்டரெஸ்ல இருந்து வெளிய‌ வரலாம்னு டிரை‌‌ பண்றேன்‌ முடியலண்ணா.” என்று பாவமாய் கூறியவனைப் பார்த்து, அவர் மெலிதாய் புன்னகைத்தார்.

“நீ இந்த படத்துல தோத்துட்ட பவன்… உன் தோல்விய எந்த பாரபட்சமும் இல்லாம ஒத்துக்கோ பவன். தோல்வின்ற பாதையை கடக்க நாம பயந்து தயங்கினா, வெற்றின்ற கோட்டை நம்மால தொடவே முடியாது.

இப்பெல்லாம் தொல்விய தொடாம ஈஸியா வெற்றிய பிடிச்சிடலாம்னு தான் எல்லாரும் நினைக்கிறாங்க. சோ, அவங்களோட முயற்சி, பயிற்சி எல்லாம் சேஃப் ஜோன்லயே வச்சிருக்காங்க. சப்போஸ் தோத்துப்போனாலும் அதிக சேதாரம் இல்லாத மாதிரி பார்த்துக்கிறாங்க.” என்று சொல்லி இடவலமாக தலையசைத்துக் கொண்டவர்,

“தோத்துப்போக நாம ஒவ்வொருத்தரும் கத்துக்கணும் டா. ஒரு விசயத்துக்காக நாம முழு முயற்சியா போராடி முடியாம போகும்போது தான் நாம தோத்து போவோம். அந்த தோல்வியோட ஆழத்தை தொட்டுட்டு மேல வந்தவனுக்கு, அடுத்த வெற்றியெல்லாம் தூசு தூசு மாதிரி தட்டிட்டு போயிட்டே இருப்பான்.” ராகவன் தீவிரமான குரலில் சொல்லவும், 

பவன்யாஷ் மெலிதாய் சிரித்து விட்டான், “என்னண்ணா, பஞ்ச் டயலாக்கா?” என்று.

“டயலாக் இல்லடா, நிஜம். நான் தோத்திருக்கேன்டா. ஒரு தடவ, ரெண்டு தடவ இல்ல பல தடவ தோத்திருக்கேன். அதிலிருந்து மீண்டு இப்ப‌ வரிசையா ஜெயிச்சிட்டு இருக்கேன்னா, அது என் தோல்வியில நான் கத்துக்கிட்ட பாடம் தான் காரணம். நீயும் இந்த நிமிஷம் பாடம் கத்துக்க.” என்றார் தீர்க்கமாய்.

அவர் சொல்வதை உள்வாங்கியபடி பவன் அமைதியாக இருந்தான். சற்று நேரம் பேசிவிட்டு ராகவனும் கிளம்பி விட்டார். பவன் தனிமையில் அமர்ந்திருந்தான். 

***